- முனைவர் திருமதி பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, (தன்னாட்சி), விருதுநகர் - 626001. - பதினெண் மேற்கணக்கு எனப்படும் சங்கஇலக்கியத்திற்குப் பிறகு பதினெண்கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு புறநூல் களவழிநாற்பது ஆகும். சோழமன்னனான  கோச்செங்கணானுக்கும்,  சேரமான் கணைக்காலிரும் பொறைக்கும்  இடையே  கழுமலத்தில்  இடம்பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந்நூல். இதை எழுதியவர்  பொய்கையார்  என்னும்  புலவர். இவர்  சேரமன்னனுடைய நண்பன் ஆவார். கழுகலத்தில் நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதியாகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந்நூல் எனக் கருதப்படுகின்றது. இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும்  புரிந்த வீரப்போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன. இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் பற்றிக் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் போர்களில் யானைப் படைகள் பெற்ற முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்நூல் பண்டைத்தமிழரின் அரசியலையும், ஆட்சிமுறையையும், அவற்றில் இடம்பெற்றுள்ள களப்போர் நிகழ்வுகளையும் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறது. “களவழி என்பது ஏர்க்களம் பற்றியும், போர்க்களம் பற்றியும் பாடுவதாகத் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.” (இளம்.தொல்.பொருள்.ப.115) அவற்றை ஏரோர் களவழி, தேரோர் களவழி எனக் குறிப்பிடும்; இளம்பூரணர், ஏரோர் களவழி என்பது நெற்களத்தினை இடமாகக் கொண்டு பாடுவதென்றும், தேரோர் களவழி என்பது போர்க்களத்தினை இடமாகக் கொண்டு பாடுவதாகவும் குறிப்பிடுகிறார். இதனை,

“ஓஓ உவமை உறழ்வின்றி ஒத்ததே
காவிரி நாடன் மலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ் மேலாள்
ஆவுதை காளாம்பி போன்ற புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து”    (களவழி நாற்பது. 36)


என்ற களவழி நாற்பது பாடலும் குறிப்பிடுகிறது. இதற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் “வேளாண் மக்கள் விளையுங் காலத்துச் செய்யும் செய்கைகளைத் தேரேறிவந்த கிளைப் பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றியன்றிக் களவழிச் செய்கைகளை மாறாது தேரேறிவந்த புலவர் தோற்றுவித்த வென்றி” எனக் கூறுகிறார். வெள்ளைவாரணர் உரையில், “போர்க்களத்தில் நிகழ்த்த வேண்டிய போர் முறைகளை ஆராய்ந்தறிந்த இயல்பும், ஏர்த்தொழில் புரிபவனாகிய உழவர் வினையுட் காலத்துச் செய்யும் வென்றியன்றித் தேரோராகிய பொருநர் போர்க்களத்து நிகழ்த்தும் வென்றியும் என்கிறார்.”  ( சு.தமிழ்வேலு – களவழி களமும் காலமும். ப.37 )

தொல்காப்பியமானது வெட்சித் திணையில் பசுக்களைப் போற்றும் முறையை அவற்றைப் பாதுகாக்கும் முறையாகவும் குறிப்பிட்டுள்ளது. வெட்சிப்போரில் கைப்பற்றப்பட்ட ஆக்களை மேயவிட்டு பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்த்து அன்பைப் பொழிவது பண்டைத்தமிழரின் பண்பைக் காட்டுவதாகவும் அவர்கள் பின்பற்றிய போர் அறமாகவும் அறியமுடிகிறது. இதனையே,

“வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் 
ஆதந்தோம்பல்….”     (இளம். தொல். பொருள். புறத்.60)


என்ற தொல்காப்பிய நூற்பாவும் உணர்த்துகிறது. இதைப்போன்று, களவழி நாற்பது போர்க்களத்தில் நடக்கும் கோரக் காட்சிகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் மறைமுகமாக அரசனுக்கு அறம் உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன. அவற்றுள்,

“நளிந்த கடலுள் திமில்திரை போலெங்கும்”    (களவழி நாற்பது.18:1)

என்ற பாடலானது, கடல் அலைகள் கரையில் உள்ள தோனியை இழுத்திடும் காட்சிப் போல இரத்த வெள்ளம் பிணங்களை இழுக்கிறது என்றும்,

“திண்தோள் மறவர் எறியத், திசைதோறும்
பைந்தலை பாரில் புரள்பவை”    (களவழி நாற்பது.24:1-2)


என்ற பாடலானது, வீரர்களின் தலைகள் பனங்காயினைப் போன்று சிதறிக்கிடக்கிறது என்று போர்க்களத்தின் அவலங்களைக் காட்சிப்படுத்தும் புலவர்,  இதனையறிந்து அரசனின் மனதில் சற்றேனும் கருணை ஏற்பட்டுப் போரை நிறுத்திவிடுவானோ என்று அரசனுக்கு அறத்தைக் கூறுவதாக எழுதியுள்ளார். இதனையே “வென்றவர் ஒளிவீசிக் கொண்டாடுதல், தோற்றுவர் ஒளியிழந்து நலிதல்” என்று தமிழண்ணல் குறிப்பிடுகிறார். (தொல்.பொருள்.ப.86)

களவழி நாற்பதின் 41 பாடல்களும் போர்ச்செய்தியை கூறுவதாகவே அமைந்துள்ளது. அனைத்துப் பாடல்களும் ‘களத்து’ என்ற சொல்லுடன் முடிவுறுவதாலும், போர்க்கள வருணனையைக் கூறுகின்ற காரணத்தாலும், பாடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் இந்நூல் இப்பெயர் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு பாடலும் ஒரு போர்க்கள நிகழ்வையும், அதனுடன் ஒப்புமைப்படுத்தப்பட்ட உவமையையும் விவரித்து, இறுதி அடிகளில் சோழனின் புகழ்பேசி முடிகின்றது. இந்நூலினைப் பாடியவர் பொய்கையார் என்னும் புலவராவார். இவர் களவழி நாற்பது பாடிச் சிறையிலிருந்த சேரனை விடுவித்தார் என்று கலிங்கத்துப்பரணி, மூவருலா, தமிழ் விடுதூது முதலிய பிற்கால நூல்களும் குறிப்பிடுகின்றன.

‘களவழிக் கவிதை பொய்கையுரை செய்யவுதியன்
கால்வழித் தளைய வெட்டியர சிட்டவனும்’
(கலிங்கத்துப்பரணி,இராசபாரம்பரியம்)


என்னும் தனிப்பாடலும், சோழன் செங்கணானோடு போரிட்டுத் தோற்றதால் சிறையிலடைக்கப்பட்ட சேரமான் கணைக்காலிரும்பொறையை விடுவிக்கவே பொய்கையார் களவழி நாற்பது பாடியதாகக் குறிப்பிடுகிறது.

தமிழிலக்கியத்தில் ஒரு நூலின் பாடுபொருள் என்பது அக்காலச் சூழலையொட்டியே அமைந்துள்ளது. களவழி நாற்பதின் பாடுபொருள் போர்க்கள நிகழ்வாக அமைகின்றது. தமிழிலக்கியத்தில் புறப்பொருளைப் பாடுபொருளாகக் கொண்ட காலம் சங்ககாலமாகும். இக்காலத்தினை ஒட்டியே இந்நூலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. சங்கமருவிய காலத் தொகுப்பாக இந்நூல் இணைக்கப்பட்டுள்ளதால் இந்நூலை சங்கமருவிய காலமென கூறுவது இன்றுவரை ஆய்வாளர்களும், அறிஞர்களும் முரண்படவே செய்கின்றனர். ஏனெனில், பாடுபொருளின் அடிப்படையில் சங்ககாலத்தைச் சார்ந்த நூலானது தொகுப்பின் அடிப்படையில் சங்கமருவிய காலப் படைப்பாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், சங்கஇலக்கியப் புறநானூறு 74 ஆவது பாடலானது களவழி நாற்பதின் பாட்டுடைத் தலைவனை எதிர்த்த சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்த காலத்தில் பாடப்பட்டுள்ளது.

“சங்கமருவிய காலத்தில் பாடுபொருளாக அமைந்தது அறம் வலியுறுத்தியமையே என்று கூறப்படுகின்றது. இதில் உயிர்களைக் கொல்லாமை என்பது மேம்பட்ட அறமாக வலியுறுத்தப்பட்டது. இதனை வலியுறுத்தியவர் சமணர்களும், பௌத்தர்களும் ஆவார்கள். அத்தகைய காலத்தில் போர்த்தொழிலின் கொலைக்களக்காட்சியை நிகழ்ச்சிகளாகக் காட்டும் மரபு உண்டா என்பது வினாவகிறது. ஆகையால் சமண, பௌத்தக் கருத்துக்கள் தமிழ் இலக்கியத்தில் மிகுதியாக இடம்பெறும் முன்பே இந்நூல் புனையப்பட்டிருக்க வேண்டும். இந்நூல் தொகுப்பு முயற்சியினாலேயே பதினெண்கீழ்க்கணக்கில் அமைந்திருக்க வேண்டும் எனலாம்.” (ச.வே.சுப்பிரமணியன். ‘பதினெண்கீழ்க்கணக்குநூல்கள்’ தெளிவுரை - ப.307)

களவழி நாற்பதினைப் பாடிய புலவரின் நோக்கம் போர்க்களத்தினை வருணிப்பது மட்டுமில்லாமல் கூடுதலான சமூக நிகழ்வு ஒன்றையேனும் உணர்த்த விரும்பியுள்ளார் எனலாம். ஏனெனில்,

“கார்த்திகைச் சாற்றிற் கழுவிளக்குப் போன்றனவே”    (களவழி நாற்பது.17:3)
“காலர் சோடுடற்ற கழற்கால்”    (களவழி நாற்பது.9:2)

என்ற பாடல் வரிகளானது, கார்த்திகை மாதத்தில் பெருவிழாக் கொண்டாடுவதையும், அக்காலப் போர் வீரர்கள் செருப்பு அணிந்து போர்க்களம் சென்றுள்ளனர் என்பதையும் குறிப்பிடுகிறது. மேலும், அரசனுக்கு அறம் உணர்த்தும் நோக்கத்தில் “அசோகன் தான் போரிட்டு வென்ற போர்க்களத்தினை அவனே கண்டபோது இனி வாழ்நாளில் போரிடமாட்டேன் என உறுதிப் பூண்டதைப் போன்று, சோழன் செய்த போரினால் உண்டானத் துயரக் காட்சிகளைத் தனித்தனியே காட்டினால் அவனுடைய மனம் மாறலாம் என எண்ணியிருக்க வாய்ப்புண்டு என்பர்” (சு.தமிழ்வேலு - களவழி களமும் காலமும். ப.92)

“ஏரோர் களவழி அன்றிக் களவழிக், 
தேரேர் தோற்றிய வென்றியும்”     (தொல்.பொருள்.புறத்.75) 

என்ற தொல்காப்பியப் புறத்திணையியல் நூற்பாவானது, களவழி வாகையினை இவ்வாறு கூறுகிறது. மேலும், ஒரு வீரனின் உடலில் அம்புகளும், வேல்களும் நெருக்கமாகப் பாய்ந்து உடல் முழுவதும் பரவியிருந்ததால், உயிர் பிரிந்த பிறகும் உடல் மண்ணில் விழாமல் நிற்கிறது என்பதனை மிகஉயர்ந்த வீரமாக குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியினை,

“கணையும் வேலும் துணையுறமொய்த்தலின்
சென்ற உயிரின் நின்ற யாக்கை”        (தொல்.பொருள்.புறத்.71)


என்ற தொல்காப்பிய நூற்பாவும் உணர்த்துகிறது. மேலும்,

“கண்நேர் கடுங்கணை மெய்ம்மாய்ப்ப – எவ்வாயும்
எண் அருங் குன்றில் குரிஇஇனம் போன்றவே”    (களவழி நாற்பது.8:2-3)


என்ற பாடலானது, உடல் முழுவதும் அம்புகள் தைத்து மலைகளின் மீது குருவிக்கூட்டம் அமர்ந்திருப்பதைப் போல போர்க்களத்தில் ஒரு யானையின் உடல் இறந்துக் கிடக்கிறது எனக் குறிப்பிடுகிறது. இதனை “மெய் மறைத்த அம்புகள்” என்ற தொடரால் களவழி நாற்பது குறிப்பிடுகிறது.

“உருவக் கடுந்தேர் முருக்கி, மற்று அத்தேர்ப்
பரிதி சுமந்து எழுந்த யானை....” (களவழி நாற்பது.4:1-2)


என்ற பாடலானது, யானைகள் தேரினை மோதியழித்து அதனுடைய சக்கரத்தைத் தூக்கிக் கொண்டு எழும் காட்சியை விவரிக்கின்றன. இதுபோன்று குதிரையின் போராற்றலைப் பாடும் புலவர், 

“மாஉதைப்ப, மாற்றார் குடையெல்லாம் கீழ்மேலாய்,
ஆஉதை காளாம்பி போன்ற”    (களவழி நாற்பது.36:3-4)


என்ற வரிகளில், போர்க்களத்தில் குதிரையொன்று யானையின் மத்தகத்தினை நோக்கிப் பாய்கின்றது. அடுத்துக் களத்தில் கால்களை உதைத்ததால் வெண்கொற்றக் குடைகள் தலை கீழாகக் கவிழ்ந்துக் கிடக்கின்றன எனக் குதிரைகள் போரில் ஈடுபட்டதை மேற்கண்ட களவழிப் பாடல் உணர்த்துகிறது. 

களவழி நாற்பது எழுதிய பொய்கையார் சுட்டும் போரில் நால்வகைப்படையும் இருந்துள்ளதை அறியமுடிகிறது. ஆனால், களவழி நாற்பது எழுதப்பட்ட காலகட்டத்தில் தலைசிறந்த யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற முப்படைகளே போரில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குதிரைப்படைகள் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. தேர் பற்றிய குறிப்புகள் கூட களவழி நாற்பதில் மறைமுகமாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சேரர்கள் யானைப்படையை மிகுதியாக வைத்திருந்தனர் என்றும், இந்நூலினைப் பாடிய புலவரும் அந்நாட்டவரே எனவும் கூறப்படுகிறது. 

தேர்ப்படை பற்றிக் குறிப்பிடும் பொழுது, குதிரைகள் அதிகமாக இல்லாததால் தேர்ப்படை சற்று குறைவாகத்தான் இருந்துள்ளது என அறியமுடிகிறது. ஏனெனில், குதிரை என்பது தமிழர்களின் விலங்கு இல்லை எனவும், இது அரேபிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் தமிழர்களால் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்பர். ஏனெனில் குதிரைகளுக்கு இலாடம் கட்டும் முறையினை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இதனை மார்க்கோபோலோ எனும் வெனிஸ் நகரப் பயணி கூறும் குறிப்பிலிருந்து அறியமுடிகிறது. “இந்நாட்டினர் குதிரை வளர்ப்பதில்லை. ஆகையால் ஆண்டுதோறும் குதிரைகளை இறக்குமதி செய்வதில் கணக்கில்லாத பொருள்களைச் செலவிடுகின்றனர். குதிரையை எப்படி நடத்துவது என்பதை அவர்கள் அறியார். அவர்கள் நாட்டில் இலாடம் அடிப்பார் கிடையாது. வெளிநாட்டுக் குதிரை வர்த்தகரும் தம் நாட்டு இலாடக்காரர் தென்னிந்தியாவிற்குச் செல்லாமல் பார்த்துக்கொண்டனர்.”  

(கோ.கேசவன். மண்ணும் மனித உறவுகளும். ப.40)

களவழி நாற்பது போரானது மூன்று முக்கியச் செய்திகளை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அவைகளாவன, “சோழனைக் குறித்துப் பாடுவதாக இருந்தாலும் மறைமுகமாகச் சேரநாட்டு அரசனின் படை வலிமை பற்றியும் பேசுகின்றது. எம் அரசனை நீ வென்றுவிட்டாய் என எண்ணுகிறாய். ஆனால் எம் அரசன் எளிதில் உன்னிடம் தோற்றுவிடவில்லை. இத்தகையக் கடும்போரினை நின்னுடன் நிகழ்த்தியுள்ளான் எனச் சோழனுக்கு உணர்த்தியிருக்கிறது. சேரநாட்டுப் போர்த்திறமையினைக் களிற்றுப் போரின் மூலம் தன் மானத்தைக் காத்துக் கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.”  

( சு.தமிழ்வேலு – களவழி களமும் காலமும். ப.78)

களவழி நாற்பது குறிப்பிடும் போரின் விளைவால் யானைகள் மிகுதியாக அல்லது முற்றிலும் இறந்து இரத்தவெள்ளத்தி;ல் காட்சி தந்தது என்ற செய்தியோடு, போரின் உச்சத்தினை அறியமுடிகிறது. மேலும், யானையின் துதிக்கை வெட்டப்பட்ட நிலையில் தந்தங்களுக்கு இடையில் வேல் ஒன்று பாய்ந்து நிற்கும் காட்சியையும் பதிவுசெய்துள்ளது. இதனை,

“இடைமருப்பின் விட்டு எறிந்த எஃகம் கால் மூழ்கிக்
கடைமணி காண்வரத் தோற்றி – நடைமெலிந்து
முக்கோட்ட போன்ற களிறெல்லாம் நீர்நாடன்
புக்குஅமர் அட்ட களத்து”    (களவழி நாற்பது.19)


என்ற பாடலடிகளால், முக்கொம்பினையுடைய யானையினைக் காண்பது போன்று உள்ளது என உவமையால் காட்சிப்படுத்தியுள்ளார் பொய்கையார்.

காலாட்படை என்பது நால்வகைப் படைகளுள் முக்கியமானதாகவும், மற்ற படைகளை வழிநடத்தக் கூடியமாகும். இப்படையானது தன்னிச்சையாகவே மற்ற படைகளுடன் போரிட்டக் காட்சியினை களவழி நாற்பது ஒன்பது பாடல்களில் குறிப்பிட்டுள்ளது. இருபடை வீரர்களும் தங்களுக்குள் வாள்வீசி வெட்டி மாய்வதும், கைகளை வெட்டி வீசுவதும், குருதிப் பெருகப் போரிட்டு மடிவதும், மாண்டு மண்ணில் மலைபோல் கிடப்பதுமாக காலாட்படை வீரர்களின் போர்க்களக் காட்சியினைப் பொய்கையார் பதிவிட்டுள்ளார். 

“அடார், அம்பறாத்தூணி, அம்பு, அரம், அரிவாள், ஆயுதம்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப்பலகை, காழெஃகம், கிளிகடிகருவி (தட்டை), குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை, எஃகம், சேறுகுத்தி, தறிகை துடுப்பு, நவிநயம், படைவாள், பூண்கட்டியதண்டு, மழு, வாள், வில், வேலுறை போன்று சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட படைக்கருவிகள் பெரும்பாலும் களவழிப் போரில் பயன்படுத்தப்பட்டன என்பர் உ.வே.சாமிநாதய்யர்.” (உ.வே.சா. புறநானூறு. மூலமும் உரையும் ப.83)

களவழிப் போரில் குடை, கொடி, முழவு, முரசு, எஃகம், கணை, வாள், வேல், கேடயம் போன்ற பலவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் அரசனுக்கு உடைமை என்று சொல்லப்படுவனக் குடையும், கொடியுமாகும். குடையினை மூன்று பாடல்களில் பொய்கையார் குறிப்பிடுகிறார். இரண்டு பாடல்களில் குடையினை யானைகள் முறித்து வீழ்த்துவதாகவும், காம்பு ஒடிந்த வெண்கொற்றக் குடையில் குருதி நிரம்பியுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். யானையின் மீது கட்டப்பட்டுள்ள கொடி அசையும் காட்சியானது வானத்தைத் துடைப்பதாக ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். போர் அறிவிப்பைக் கூறுவதற்காகப் பயன்படுத்தக் கூடியவை முரசும், முழவும் ஆகும். போர் முரசினை ஒரு பாடலிலும், முழவினை நான்கு பாடல்களிலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கழுகுகள் தன்னுடைய இரண்டு சிறகையும் விரித்துக் கொண்டு, பிணங்களைத் தின்ன முயலும் காட்சி முழவு வாசிப்பவனைப் போன்று உள்ளதாகக் குறிப்பிடுகிறார். மேலும், குருதியில் மிதந்துவரும் முரசுகளைக் கண்ணிழந்த யானைகள் உதைப்பதும், முறையாக வாசிக்கப்படுவதும், மேகங்கள் முழங்குவதைப் போன்று ஒலியைத் தருவதுமாகப் போர்க்களக்காட்சிகள் வர்ணித்துள்ளளார். மேலும் கிழிந்த முரசினுள் குருதியானது சென்று வெளியேறும் காட்சி மதகு வாயிலுக்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது. எஃகம், வாள், வேல், கணை முதலியவற்றை ஒவ்வொரு வீரரும் பகைவரைத் தாக்கிக் கொள்ளவும், அழித்துக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்கின்ற காட்சியினை உவமையாகவும் உருவகமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார். இருபடை வீரர்களின் கருவிகளும் தம்மைத் தாக்காமல் தடுத்துக் கொள்ள கேடயத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை,

“கேடகத்தோடு அற்ற தடக்கை கொண்டு ஓடி
இகலன்வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக்
கண்ணாடி காண்பாரின் தோன்றும்....”     (களவழி நாற்பது.28:4-5)


என்ற பாடலடியானது, களவழி நாற்பதில் பயன்படுத்தப்பட்டுள்ள படைக்கலன்கள் பற்றி குறிப்பிட்டதோடு, நடந்து முடிந்த கொடூரமானப் போரினை வருணனையால் காட்சிப்படுத்தியிருப்பது புலவரின் உற்றுநோக்கல் திறனையும், உயர்வான கற்பனைத் திறனையும் எடுத்துரைக்கின்றது. பொய்கையார் இயற்றிய களவழி நாற்பது போரினைத் தொல்காப்பிய நூற்பா வழி நின்று உணர்த்தவேண்டுமானால்,

“வினை பயன் மெய்யுரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம்”    (தொல்.பொருள்.உவமையில்.9)

என்ற நூற்பாவானது, வினை, பயன், மெய், உரு என்ற நான்கின் அடிப்படையில் அமைந்து சிறப்பதனைப் போல், இவரது பாடல்களில் சாதாரண உவமைகளும், கற்பனைக்கும் எட்டாத கலையார்வம் மிகுந்த உவமைகளும் இடம்பெற்றுள்ளது என்பதனை இதன்வழி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், மனித சமுதாயம் கட்டாயம் செய்யவேண்டுவனவற்றையும், செய்யாது தவிர்க்கவேண்டியவற்றையும் தமிழர் வரலாற்றிலிருந்து எடுத்துரைத்து இக்கால அரசியல் மற்றும் சமூகவியலாளர்களுக்கு உணர்த்துவதாக களவழி நாற்பதினைப் படைத்தளித்துள்ளார் பொய்கையார்.

பார்வை நூல்கள் :
1. இராசமாணிக்கம், இரா., (உ.ஆ) - ‘பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்’ 
(மூலமும் உரையும்) கழக வெளியீடு,  
திருநெல்வேலி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். 
சென்னை. முதற்பதிப்பு - 1947. 

2. தமிழ்வேலு,சு     - ‘களவழி களமும் காலமும்’ 
தென்பெண்ணைப் பதிப்பகம், 
தென்னார்க்காடு மாவட்டம்,  முதற்பதிப்பு – 2004.

3. கேசவன்,கோ     - ‘மண்ணும் மனித உறவுகளும்’ 
சென்னை புத்தக நிலையம், 
முதற்பதிப்பு – 1979. 

4. நச்சினார்க்கினியர்., (உஆ) (எழுத்து, சொல், பொருளதிகாரம்)
சேனாவரையார்.,   (உ.ஆ) உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், கணேசையர் பதிப்பு
பேராசிரியர்., (உ.ஆ) இரண்டாம் பதிப்பு 2007, ன்னை 13.

Email id : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.