- முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 627008 -முன்னுரை
பழந்தமிழ்  நூல்கள்  பல அறங்களை வலியுறுத்தினாலும் சூழல் சார்ந்து அது முன் வைக்கும் அறம், ‘இயற்கையோடு இணைந்த வாழ்வே இனிய வாழ்வு’ என்பதாகும்.  இவ்வுலகம் மனிதன் உயிர் வாழ மட்டும் உருவானதன்று பல்லுயிர்களும்; அவ்வவற்றின் இயல்புகளோடும் உரிமைகளோடும் வாழ்வதற்கென்று அமைந்திருப்பதே இவ்வுலகம் ஆகும். இவ்வுலகில் வாழ்ந்த, வாழ்கின்ற சான்றோர்களும் அறிஞர் பெருமக்களும் பல்லுயிர்களின் வாழ்வும் நலமும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியே வந்திருக்கிறார்கள். இயற்கையின் வளங்கள் எந்தநாளும் காக்கப்பட வேண்டியன என்பதை உணர்த்தியிருக்கிறார்கள். அவ்வகையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் கதையமைப்பிற்கும்; காப்பியப் போக்கிற்கும் மேலும் சிறப்பு ஏற்படும் வகையில் சூழல் சிந்தனைகளை முன் வைத்துச் செல்வது இங்கு ஆய்வுக்குரியதாக அமைகிறது.

சூழல் காப்பு
சுற்றுச்சூழல் என்பது உயிரினத் தொகுதிகள் வசிக்கும் இடங்களைச் சுற்றி நிலவுகின்ற  தன்மை அல்லது சூழ்நிலை ஆகும். உயிரினத் தொகுதிகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், அவை வாழ்கின்ற இடங்களைத் தூய்மையாக மாசுபடாமல் வைத்துக் கொள்ளவும் முயற்சிக்கின்ற போக்கே சூழல் பாதுகாப்பு எனப்படுகிறது. தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐந்துவகைத் திணைகளை உருவாக்கி, இயற்கைப்  பாதுகாப்பில் உலகிற்கே முன்னோடிகளாக விளங்கினர். சங்க இலக்கியங்கள் இதற்குச் சிறந்த சான்றுகளாகும். பின் வந்த இலக்கியங்களிலும் சூழல் காப்பு பேணப்பட்டது. அவ்வகையில் கம்பராமாயணத்தில் காணப்படும் சூழல் காப்புச் சிந்தனைகள்

1. நீர்ப் பாதுகாப்பு
2. காட்டுயிரிப் பாதுகாப்பு
என இரண்டாகப் பகுத்து ஆராயப்படுகின்றன.

1. நீர்ப்பாதுகாப்பு
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண் (குறள்.742  )

என்று நாட்டின் பாதுகாப்புக்கு இலக்கணம் வகுக்;கிறது திருக்குறள். மணிநீர் என்பதற்கு ‘மணிநீர் போன்ற நிறத்தினை உடைய எஞ்ஞான்றும் வற்றாத நீர்’ என்று பொருள் தருகிறார் பரிமேலழகர். இத்தகைய வற்றாத நீர்வளத்தைத் தருவது அணிநிழல் காடு. ஓயாமல் பெய்யும் மழையைப் பிடித்து வைத்துக் கொண்டு சிற்றோடையாக, கால்வாயாக, ஆறாக, பெருநதியாகக் கசிய விட்டுக் கொண்டிருப்பது காடு. அவ்வாறு பெருகி ஓடி வரும் நீர் வளத்தைத் தக்க முறையில் பாதுகாத்து ஆற்று வளத்தையும் நாட்டு வளத்தையும் தமிழர்கள் பேணிக் காத்தனர். இதற்குக் கம்பரின் பாடல் வரிகள் சான்று பகருகின்றன.

கோசல நாட்டில் பெருகி ஓடி வரும் சரயு நதியை,
சரயு என்பது தாய் முலை அன்னது இவ்
வுரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்  (பால.ஆற்.23)

சரயு என்னும் பெயருடைய அந்த ஆறு உயிரினங்கள் எல்லாவற்றிற்கும்  பாலூட்டிப் பேணும் தாயின் மார்பகம் போன்றது என்னும் பொருள் தரும் இவ்வரிகள், உயிரமுது தரும் தாய்ப்பாலுடன் ஆற்றினை ஒப்பிட்ட கம்பரின் நீர்ப்பாதுகாப்புச் சிந்தனையை முன் வைக்கின்றன எனலாம். இதே போன்றதொரு கருத்தைக் கிட்கிந்தா காண்டத்திலும் கம்பர் கூறுவதைக் காணலாம்.

வழைதுறு கானயாறு மாநிலக் கிழத்தி மக்கட்கு
உழைதுறு மலை மாக் கொங்கை சுரந்த பால் ஒழுக்கை ஒத்த(கிட்.கா. கார்.4181)

‘சுரபுன்னை (அலையாத்திக் காடுகள்) மரங்கள் அடர்;ந்த காடுகளில் பெருகிய  நதிகள், நிலமகள் தன் மக்கள் பொருட்டு தன் பெரிய மார்பகத்திலிருந்து அன்பினால் சுரந்த பால் தாரைகளைப் போன்று இருந்தன’ என்று நீரை உயிரமுதாகக் கம்பர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

பெருகி வரும் வெள்ள நீரைச் சேமிக்க மதகுகள் அமைக்கப்பட்டதையும், அணைகள் கட்டி நீர்த்தேக்கப்பட்டதையும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்த கரைகளில் பெரிய மரங்களாகிய தறிகள் அடிக்கப்பட்டிருந்த செய்தியையும் கரைகளை உழவர்கள் காத்து நின்றதையும்,  வெள்ளம் வருவதைக் கிணைப்பறை ஒலித்து தெரிவித்த செய்தியையும், கம்பர் விளக்கிச் செல்கிறார்.

கதவினை முட்டி  மள்ளர்  கை எடுத்து ஆர்ப்ப எய்தி     (பால.கா. ஆற். 27)

அணை சூழ் நீரொடு                              (பால.கா. ஆற். 77)

ததைமணி சிந்த உந்தி, தறிகிறத் தடக்கை சாய்த்து       (பால.கா. ஆற். 27)

காத்த கால் மறவர் வெள்ளக் கலிப்பறைக் கறங்க        (பால.கா. ஆற் 29)

மேலும், பெருகி வரும் ஆற்று நீரைப் பல வாய்க்கால்களாகப் பிரித்து, ஒரு கால்வாயிலிருந்து மற்றொரு கால்வாய்க்கு என அவ்வெள்ளநீர் பிரிந்து சென்ற காட்சியை, குடிகள் பல கிளைகளாய்ப் பெருகும் செய்தியோடு ஒப்பிட்டு நீர்மேலாண்மை குறித்துப் பாடிய கம்பரின் பாடல் வரிகள் வியப்பைத் தருகின்றன.

நீத்தம் ஆன்று, அலைய ஆகி, நிமிர்ந்து  பார்கிழிய நீண்டு
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே (பால.கா.ஆற்.29)

கால்வாய்கள் வழிப் பெருகி ஓடிய வெள்ளம் வீணாகக் கடலில் கலக்காமல், சோலைகளிலும் காடுகளிலும், பொய்கைளிலும், தடாகங்களிலும், தோட்டங்களிலும், வயல்களிலும்  நிறைந்து  பரவிய செய்தியைக் கம்பர் குறிப்பிடுகிறார். இது அறிவியலின் ஆக்கப்பூர்வமான சிந்தனை எனலாம். காடுகளே  நீரூற்றுகளின்  இருப்பிடமாகும். காடு எனில் பெருமரங்கள், குறுமரங்கள், தாவரங்கள், குற்றுச்செடிகள், புதர்கள், கொடிகள் கொண்ட சோலைகள், புல்வெளிகள், பல்வகைத் தாவர அடுக்குகள் ஆகும். இவை இம்மழைநீரைத் தமக்குள் தக்க வைத்துக் கொண்டு காலம்தோறும் சிறிதுசிறிதாகக் கசிய விட்டு நீர்வளத்தைப் பாதுகாத்து வருகின்றன. இத்தகைய நீர்ப்பாதுகாப்புச் சிந்தனை அன்றைய தமிழர்களிடம் இயல்பாகவே அமைந்திருந்தது. அதனால் கம்பரிடமும் இச்சிந்தனையைக்  காணமுடிகிறது.

தாதுஉகு சோலைதோறும்  சண்பகக் காடுதோறும்
போதுஅவிழ் பொய்கைதோறும் புதுமணல் தடங்கள்தோறும்
மாதவி வேலிப் பூக வனம்  தோறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்புதோறும் உயிர் என உலாயது  அன்றே       (பால.கா. ஆற். 31)

கம்பரின் பல பாடல்கள் நீர்வழித் தடங்களின் அருகே உள்ள சோலைகளையும் ஏரி, குளங்களையும் தடாகங்களையும், பொய்கைகளையும் குறிப்பிடுவதைக் காணலாம். இது போன்றதொரு சூழல் வடபெண்ணை நதியின்  அருகே  காணப்பட்டதை,

துறையும், தோகை நின்று  ஆடு சூழலும்
குறையும்  சோலையும்  குளிர்ந்த சாரல்  நீர்ச்
சிறையும் தௌ;ளு ப10ந் தடமும் தெண்பளிக்கு
அறையும் தேடினார் அறிவின் நீடினார்           (கிட்.கா. ஆறு செல்.13)

எனக் கம்பர் குறிப்பிடுகிறார்.

இயற்கையை வருணித்துக் கம்பர் பாடும் பெரும்பாலான பாடல்களில் நீர்வளத்தைக் குறிக்கும் அழகிய சொற்றொடர்களைக் கூறிச் செல்வது நோக்கத்தக்கது.

தத்தும் மடை        -  தண்ணீர் பாயும் மடை         (பால.நாட்டு.33)
மாநீர்க் குரம்பு        - மிகுந்த நீர்ப்பெருக்குடைய செய்கரையாகிய அணை.  (பால.நாட்டு.33)
துறை             -  நீர்த்துறை
மா கிடங்கு         -  அகழி                 (பால.நாட்டு.109)
நெடு;ங்குளம்         -  பெரிய குளங்கள்         (கிட்.கா. 4218)
அகல் நீர்க்கரை     -  நீர்வளமுள்ள அகன்ற கரை     (கிட்.ஆறு.4594)
குறை             -  ஆற்றின் இடையே இருந்த திட்டு (கிட்.ஆறு.4606)
நீர்ச்சிறை         -  ஏரி, குளங்கள்             (கிட்.ஆறு.4606)
அள்ளல் நீர்         -  சேற்று நீர் (சதுப்பு நிலம்)     (கிட் ஆறு. 4613)
பெரும்புனல் மருதம் -  நீர்வளம்  கொண்ட  மருதம்  (கிட்.ஆறு. 4624)

இவை போன்ற ஏராளமான சொற்றொடர்கள் கம்பரால் காப்பியமெங்கும் கையாளப்பட்டுள்ளன. இவை நீர்வளமேலாண்மை பற்றிய அன்றைய தமிழரின் சிந்தனைக்குச் சான்றாக கம்பரின் வழி வெளிப்படுகின்றன எனலாம்.

2. காட்டுயிரிப் பாதுகாப்பு
காட்டுயிர்   என்பது   வீட்டுப்   பயன்பாடு   சாராத   அனைத்து வகையான தாவரங்கள், நிலம் வாழ் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் போன்றவையாகும். இத்தகைய உயிரினத்தொகுதிகளை, அவை வாழ்கின்ற இடங்களில் பாதுகாப்பாகவும் எவ்வித இடையூறின்றியும் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போக்கு ‘சூழல் பாதுகாப்பு’ எனப்படுகிறது. தனது வாழ்வியல் சூழலில் தன்னைச் சூழ்ந்துள்ள உயிருள்ள மற்றும்  உயிரற்ற அனைத்துப்; பொருட்களைப் பற்றியும் ஒருவன் பொதுவான அறிவுடன்  விளங்குவதே  சூழலியல்  அறிவின்  முதல்படியாகும். பண்டைத் தமிழினம் இத்தகைய   சூழல் பற்றிய செறிவான அறிவைப் பெற்றிருந்தது என்பதற்குத் தொல்காப்பியம் முதலான  பழந்தமிழ்  நூல்கள் சான்றுகளாகும்.
கம்பராமாயணம் தழுவல் காப்பியமாயினும் கம்பரிடம் நிறைந்திருந்த இச்சூழல் அறிவு காப்பியமெங்கும் மிளிர்ந்து தமிழகச்சூழலைப் புலப்படுத்தி நிற்பதைக் காண முடிகிறது.

நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும்  இப்பி
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை (பால.நாட்டு.37)

இவை யாவும் பிறர் இடையீடின்றி  நிம்மதியாகத் தூங்குகின்றன. அச்சமின்றி, நிலைமாற்றமின்றித் தூங்குகின்றன. இப்பாடல் கம்பரின் கற்பனை வளம், கவித்திறமை இவற்றை வெளிப்படுத்துவதாக அமையினும் காட்டுயிர்களின் சூழல் பாதுகாப்புக்கும் சூழல் தூய்மைக்கும்  சான்றாகத் திகழ்வதைக் காணலாம்.

அயோத்தியா காண்டத்தின் வனம்புகு படலமும் சித்திரகூடப் படலமும்  காட்டுயிரி பற்றிய கம்பரின் ஆர்வத்தையும், உயிர்ச்சூழல் பாதுகாப்பு பற்றிய அவரது அறிவையும் வெளிப்படுத்தும் முழுமையான பகுதிகள் எனலாம்.
குன்றுறை வயமாவின் குருளையும் இருள்சிந்திப்
பின்றினதெனலாகும் பிடிதரு சிறுமாவும்
அன்றில பிரிவொல்லா  அண்டர்தம் மனையாவின்
கன்றோடும் உறவாடித் திரிவன பல காணாய் (அயோ. வனம் புகு.707)

சிங்கக்குட்டியும், யானைக்கன்றும் ஒன்றாகத் திரியும் வளம் நிறைந்த காட்டைக் கம்பர் கூறும் திறம் நோக்கத்தக்கது.

மேலும் காட்டுயிரிகளுக்கு அழிவை ஏற்படுத்திய சுந்தன், தாடகை ஆகியோர்   அழிக்கப்பட்ட செய்தியைக்; கம்பராமாயணம் எடுத்து மொழிவதையும் காணலாம். தான்  தவம் செய்து வந்த வனத்தின் மரங்களைப் பிடுங்கி எறிந்த சுந்தன் அகத்தியரால் அழிக்கப்பட்டதையும் அழகான வனத்தைப் பாலைவனமாக்கி, காட்டுயிரிகள் அழியக் காரணமாக இருந்த தாடகை இராமனால் அழிக்கப்பட்டதையும் (பாலகாண்டம் தாடகை வதைப்படலம்) கம்பர் காப்பியப் போக்கில் கூறிச் செல்வது இங்கு குறிப்பிடத்தக்கது.

முடிவுரை
பல்லுயிரிகளைப் பேணும் சிந்தனை பழந்தமிழர்களிடையே காணப்பட்டது.  பழந்தமிழர் எக்காலத்திலும் தனது சூழலுக்கு எதிரானவராக அமையவில்லை. மாறாகச் சூழலைப் பேணவே செய்துள்ளனர். நீர்ப்பரப்பு, நிலப்பரப்பு என்னும் இவற்றை ஆதாரமாகக் கொண்ட இயற்கை, அவற்றைச் சார்ந்து வாழ்கின்ற பல்லுயிர்கள், அவற்றின் பாதுகாப்பு என கம்பர் முன்வைக்கும் சிந்தனைகள், அறிவியல் நுட்பம் வளர்ந்துவிட்டதாகக் கருதி தாம்  சார்ந்து வாழும் சூழலையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கும் இன்றைய  மனித குலத்துக்கு அவசியமானது எனில் மிகையில்லை.

துணைநூற்பட்டியல்

1. கம்பராமாயணம்
2. திருக்குறள், பரிமேலழகர் உரை
3. இலக்கியமும் சூழலியலும்     - முனைவர் யாழ் சு. சந்திரா
4. நீரின்றி அமையாது நிலவளம்     - முனைவர் பழ. கோமதிநாயகம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் - - முனைவர் இரா. சுதமதி,  உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி -