எம்ஜிஆரின் நடன அசைவுகள்!

Thursday, 14 November 2019 09:22 --ஊர்க்குருவி - கலை
Print

எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலும் சரி , இன்றும் சரி எம்ஜிஆரின் படங்களென்றால் அவை ஒரே மாதிரியானவை. கருத்துள்ள பாடல்களைக் கொண்டவை. காதல் பாடல்கள் இனிமையானவை. இவற்றுடன் தம் கருத்துகளை நிறுத்தி விடுவார்கள். ஆனால் எம்ஜிஆர் சண்டைக்காட்சிகளில் மட்டுமல்ல இன்னுமொரு விடயத்திலும் நன்கு சிறப்பாக செயற்படக்கூடியவர். அது அவரது நடனத்திறமை. திரைப்படங்கள் பலவற்றில் எம்ஜிஆரின் நடன அசைவுகளை அவதானித்தால் அக்காலகட்டக் கதாநாயக நடிகர்களில் அவரைப்போல் நடனமாடக் கூடிய நடிகர்கள் வேறு யாரையும் என்னால் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. நடிப்புத்திறமை மிக்க நடிகர் திலகத்தால் 'வண்டி தொந்தி'யுடன் விரைவாக, சிறப்பாக ஆட முடிவதில்லை. ஆனால் முறையான உடற் பயிற்சியினால் உடலைச் சிறப்பாகப்பேணிய எம்ஜிஆர் தனது இளமைப்பருவத்தில் மட்டுமல்ல வயது ஐம்பதைத்தாண்டிய நிலையிலும் மிகச்சிறப்பாக ஆடியுள்ளார்.

எம்ஜிஆரின் திரைப்பட நடனங்களில் என்னை மிகவும் கவர்ந்தவையாக உடனடியாக நினைவுக்கு வருபவை: குடியிருந்த கோயிலில் எல்.விஜயலட்சுமியுடன் 'ஆடலுடன் பாடல்' பாடலுக்காக ஆடும் பஞ்சாபிய நடனம். இது பற்றி நேர்காணலொன்றில் எல்.விஜயலட்சுமி இப்பாடலுக்காக எம்ஜிஆர் ஒரு மாதம் வரையில் பயிற்சி செய்தே தன்னுடன் ஆடியதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறந்த நடனத்திறமை மிக்க தன்னுடன் இணைந்து ஆடுவதற்காக என்று எம்ஜிஆரே கூறியதையும் அவர் நேர்காணலில் எடுத்துரைத்துள்ளார். 'மதுரை வீரன்' திரைப்படத்தில் 'வாங்க மச்சான் வாங்க' பாடலுக்காக அவர் இ.வி,சரோஜா குழுவினரின் கேலியைத் தொடர்ந்து ஆடும் காட்சியும் சிறப்பானது.

இது போல் நினைவுக்கு வரும் இன்னுமொரு பாடல் 'அன்பே வா' திரைப்படத்தில் அவர் சரோஜாதேவி குழுவினருரின் ஆட்டத்துக்கு எதிர்வினையாக 'நாடோடி' பாடலுக்கு ஆடும் ஆட்டத்தைக் குறிப்பிடலாம். சரோஜாதேவி குழுவினர் அவரைப்பார்த்து

"மந்திரவாதி தந்திரவாதி என்றவாதி என்ற ஜாதி
எங்களோடு போட்டி போட வா
நீ கால் மடக்கி கை மடக்கி மூச்சடிக்கி பேச்சடிக்கி
எந்களோடு ஆட்டம் ஆட வா
எ.. எந்த ஊர்
என்ன பேர்
எந்த காலேஜ்
என்ன க்ரூப்
ட்விஸ்ட் டான்ஸ் தெரியுமா
டெஸ்ட் மாட்ச் புரியுமா" என்று எம்ஜிஆரைப் போட்டிக்கு அழைப்பார்கள். அவர்களின் சவாலையேற்று எம்ஜிஆர்

"புலியைப் பார் நடையிலே!
புயலைப் பார் செயலிலே!
புரியும் பார் முடிவிலே!
மிரட்டினால் முடியுமா?
மிரட்டினால் படியுமா?" என்று பாடிக்கொண்டு வந்து

"ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்...
டெஸ்ட் மேட்ச் பாருங்கள்." என்று ஆடுவார்.

பஞ்சாபிய நடனம் மட்டுமல்ல மேனாட்டு நடனங்களிலும் எம்ஜிஆர் தன் திறமையைக் காட்டியுள்ளார். 'பெரிய இடத்துப் பெண்' திரைப்படத்தில் 'அன்று வந்தது இதே நிலா' பாடலுக்காக அவர் சரோஜாதேவியுடனான அவரது நடன அசைவுகள் முத்திரை பதித்தவை. அண்மையில் கூட இது பற்றிக் குறிப்பிட்டுள்ள நடிகை லட்சுமி இப்பாடலில் அவரது பாத அசைவுகளை விதந்துகூறியிருப்பார்.

எம்ஜிஆரின் நடனத்திறமையென்றதும் நினைவுக்கு வரும் இன்னுமொரு பாடல் 'நான் ஆணையிட்டால்' திரைப்படத்தில்வரும் 'நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்'. இதிலும் சரோஜாதேவியுடன் இணைந்து அவர் ஆடும் மேனாட்டு நடன அசைவுகள் மனத்தில் நிற்பன.

இங்கு 'குடியிருந்த கோயில்' திரைப்படத்தில் நடிகை எல்.விஜயலட்சுமியுடன் அவர் ஆடும் 'ஆடலுடன் பாடலை'க் கேட்டு இரசிப்போம்: https://www.youtube.com/watch?v=vpEOq6Cbg-8

'அன்பே வா' படத்தில் 'நாடோடி' பாடல்: https://www.youtube.com/watch?v=deqTvMWqWe4
'பெரிய இடத்துப் பெண்' திரைப்படத்தில் 'அன்று வந்ததும் இதே நிலா': https://www.youtube.com/watch?v=0NZlXpwZXCg
'மதுரை வீரன்' திரைப்படத்தில் 'வாங்க மச்சான் வாங்க': https://www.youtube.com/watch?v=UTKaNBWkARs
'நான் ஆணையிட்டால்' திரைப்படத்தில் 'நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்': https://www.youtube.com/watch?v=4P8Wi2je4CQ

Last Updated on Thursday, 14 November 2019 09:33