ஓவியர் கெளசிகன் வரைந்த நடிகர் திலகம்.இலங்கையில் வசிக்கும் ஓவியர் கெளசிகன் நடிகர் திலகத்தின் பிறந்ததினத்தையொட்டி அனுப்பிய நினைவுக் குறிப்புகள் இவை. 1997இல் நடிகர் திலகம் இலங்கை வந்தபோது அவரைச் சந்தித்ததையும், அவருக்குத்  தான் வரைந்த ஓவியத்தைக் கொடுத்ததையும் நினைவுகூர்கின்றார். அத்துடன் அந்நிகழ்வுக்கான காணொளியினையும் பகிர்ந்துகொள்கின்றார். மேலும் அந்நிகழ்வில் நடிகர் திலத்தை வைத்துத் தான் வரைந்த இன்னுமோர் ஓவியத்தையும் காட்டி அதில் நடிகர் திலகத்தின் 'ஆட்டோகிராப்'பையும் வாங்கிக் கொள்கின்றார். அவ்வோவியத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கின்றார் கெளசிகன். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. - பதிவுகள் -


சுமார் 22 வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் அவர்களை நான் சந்தித்த நிமிடங்களை , அனுபவங்களை தொகுத்து சிவாஜி சாரின் பிறந்ததினத்தன்று தருகிறேன். இதற்கு முன் நான் இவ்வளவு பெரிதாக எதையும்  எழுதியது கிடையாது. வாசிப்பவர்களுக்கு ஒருவேளை சலிப்பை உண்டாக்கும் என்ற நினைப்பில் படங்களை மட்டுமே முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

இதோ எனது அந்த மிக இனிமையான அனுபவம், வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாத சந்தோஷமான தருணங்கள்...

1997வருடம், ஜூலை மாதம்.

என் வாழ்நாளில் மறக்கவே முடியாத வருடம். அப்போது நான் ' மெட்டல் எம்போசிங் பெயின்டிங் '(metal embossing painting) எனப்படும் ஓவியக்கலையை  பயின்றுகொண்டிருந்தேன். திடீரென பத்திரிகைகளின் ஒரு செய்தி. நடிகர் திலகம் இலங்கை வருகிறார். "நடிகர் திலகத்திற்கு மீண்டும் முதல் மரியாதை" என்றவொரு பெரிய விழா அவருக்காக ஏற்பாடாகி வருகிறது என்று.

நான் எனது விவரம் தெரிந்த வயதிலிருந்தே ( எந்த வயது என்று தெரியவில்லை. ஒருவேளை பத்து இருக்கலாம் என்று ஊகிக்கிறேன்.) நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர ரசிகன். அவரது படங்கள் 'பேப்பர்' மற்றும் 'மகசின்'களில் வரும்போது அவற்றை அப்படியே வெட்டி பத்திரப்படுத்திவிடுவேன். எனது ஒன்பது அல்லது பத்து வயதில் அவருடைய படங்களை பார்த்து வரையப் பழகினேன். எனக்குத்தெரிய நான் வரைந்த முதல் ஓவியமே சிவாஜி அவர்களின் முகம் தான். ஏனோ தெரியவில்லை. அந்த வயதிலேயே சிவாஜி அவர்கள் எனது இதயத்தில் வந்து குடிகொண்டுவிட்டார். அவ்வளவு வசீகரமான அழகு.

நூற்றுக்கணக்கான அவரது ஓவியங்களை வரைந்தாலும், எப்போது அவரை சந்திக்கமுடியும் என்றும், அருமையான ஓவியம் ஒன்றை எப்போது அவருக்கு பரிசளிக்கலாம் என்று கனவு காண ஆரம்பித்துவிட்டேன். இப்படியே இருபது , இருபத்தைந்து வருடங்கள் மோலாக ஓடிக்கொண்டிருந்த போதுதான் மேலே கூறிய செய்தியை படிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அப்போது நான் கற்றுக்கொண்டிருந்த அந்த 'மெட்டல் எம்போசிங் பெயின்டிங்' திடீரென எனது மனதில் பட்டது. அப்போதுதான் நான் அக்கலையை இரண்டாவது படமாக கற்றுக்கொண்டிருந்தேன்.

அந்த ஓவிய நுணுக்கத்தை அறிந்துகொண்டு நமது சிவாஜி அவர்களை “சத்ரபதி சிவாஜி”யாக தகதக என மின்னும் வண்ணம் ஒரு ஓவியத்தை தயாரித்துவிட்டேன். விழாவுக்கான டிக்கெட்டும் வாங்கியாகிவிட்டது. எங்கள் வீட்டிலோ பயங்கரகொண்டாட்டம். ஏனென்றால், வீட்டில் எல்லோருமே சிவாஜி அவர்களின் ரசிகர்கள். அவ்வளவு சந்தோஷம். எனக்கோ, ஒரு நீண்ட நாள் கனவு மெய்யாகப்போகிறது என்ற குதூகலம்.

அந்த நினைவுப்பரிசை அழகாக பொதி செய்துவிட்டு B.M.I.C.H. மண்டபத்தை நோக்கி சென்றடைந்துவிட்டேன். மண்டபம் நிறைந்திருந்தது. எல்லோர் கண்களும் அங்கே விரித்துவைத்திருந்த அகலமான திரையை வைத்த கண் வாங்காமல் கண்காணித்துக்கொண்டிருக்க, சிரேஷ்ட அறிவிப்பாளர் B.H. அப்துல் ஹமீது அவர்கள் ஒலிபெருக்கியில் பலமாக " இதோ, எமது நடிக மாமன்னர், சிவாஜி அவர்கள் மண்டப வாசலை அடைந்துவிட்டார்" என்றதும், சுமார் மூவாயிரம் பேர் அமர்ந்திருந்த அம்மண்டபத்தில் மகிழ்ச்சி அலைமோதியது. வழக்கமாக நாம் மிகவும் ரசித்த அதே ராஜநடையில் மேடை ஏறுகிறார். அத்தனை பேரும் இருக்கையிலிருந்து எழும்பி நின்று அவருக்கான மரியாதையை தருகிறார்கள். எல்லோருக்கும் தனது வணக்கத்தை கூறிவிட்டு பின்னர் அனைவரையும் இருக்கையில் அமரும்படி சைகை காட்டினார்.
ஓவியர் கெளசிகன் வரைந்த நடிகர் திலகம்.
ஒரு இரண்டு மணிநேரம் அவர் நடித்த முக்கியமான படங்களிலிருந்து சில காட்சிகள், 'செவாலியே' விருது வழங்கும் காட்சிகள் என பல நிகழ்வுகள் நடக்கின்றன. இப்போது, முக்கியமான நிகழ்வாக அவருக்கென விசேஷமாக தயாரிக்கப்பட்ட 1௦௦ பவுண் எடைகொண்ட அழகிய பளபளக்கும் தங்கத்திலான கிரீடம் விழா தலைவரினால் நடிகர் திலகத்தின் சிரசில் அணிவிக்கப்படுகிறது. சாட்ஷாத் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி போல் மிகவும் கம்பீரமாக காட்சியளித்தார் நமது நடிகர் திலகம். இதை கண்ணுற்றோர் மிகவும் பாக்கியசாலிகள். தனது மனைவி கமலாமாள், புத்திரர்கள் திரு. ராம்குமார் திரு பிரபு, சக நடிகர்கள், இலங்கை மந்திரிகள், இலங்கை கலைஞர்கள் புடை சூழ ஊடகத்துறையினருக்கு படங்கள் பிடிப்பதட்காக சிறிது நேரம் மேடையிலேயே நின்றுகொண்டிருந்தார்.

மேடையில் அனைத்து நிகழ்வுகள் முடிந்தபின், விழாவிற்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவராக நடிகர் திலகத்தை கைலாகு கொடுத்தும், ஒற்றை ரோஜா மலர்கள் கொடுத்தும் வாழ்த்திக்கொண்டிருந்தார்கள். மிக நீண்டநேரம் இது தொடர்ந்து கொண்டிருந்ததால், சிவாஜி அவர்களின் முகத்தில் சிறிது களைப்பு, நின்றுகொண்டே அனைவரின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டிருந்ததின் காரணமாக.

1997 ல் இலங்கையின் நிலைமை எப்படி இருந்தது என்பதை இந்த உலகமே அறியும். மண்டபத்திற்குள் இருமருங்கிலும் இயந்திர துப்பாக்கிகளுடன் நிறைய இராணுவ அதிகாரிகள் காவலில். ரசிகர்களுடன் நான் அமர்ந்திருந்த முழு மண்டபமும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன. இதுதான் சமயம் என்று என் மனதிற்குள் ஏதோ ஒருவேகம். அதோடு கூட ஒரு நடுக்கம், காரணம் யாருடைய சிபாரிசோ , எந்தவொரு ஏற்பாடோ அல்லது முன்கூட்டியே சிவாஜி அவர்களுக்கோ அல்லது விழா ஏற்பாட்டர்களுக்கோ எதுவுமே தெரிவிக்கப்படவோ அல்லது அனுமதிபெற்றோ இருக்கவில்லை. இது எனது தன்னிச்சையான நிகழ்வு, முடிவு. அதனால்தான் அந்த ஒரு நடுக்கம்.

நடிகர் திலகத்திக்காக நான் தயாரித்த அந்த பரிசை கையில் எடுத்துக்கொண்டு சப்தமின்றி பின்வரிசையிலிருந்து மேடையை நோக்கி நகருகிறேன். எந்தவொரு இராணுவ குறுக்கீடும் இருக்கக்கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டே மேடையை அடைகிறேன். மேடையில் B.H அப்துல் ஹமீது அவர்கள் விழாவை அறிவிப்புகளால் ஜமாய்த்துக்கொண்டிருந்தார். நான் படிகளில் ஏறியவுடன், கவரில் இருந்து கொஞ்சமாக சிவாஜி அவர்களில் ஓவியத்தை அவரிடம் காட்டிவிட்டு இதை சிவாஜி சார்க்கு அன்பளிப்பு பண்ண விரும்புகிறேன் என்று சைகையால் கேட்டேன். ஹமீது அவர்கள் இவ்வோவியத்தை பார்த்தவுடனேயே என்னைப்பற்றிய விவரங்களைக் கேட்டுக்கொண்டார்.

எனது இதயம் வேகமாக அடிக்கிறதை நான் நன்றாக உணரமுடிந்தது. ஆசை ஆசையாக எனது இதயத்தில் குடிகொண்டிருக்கும் அவரை எனது வாழ்நாளில் ஒருதடவையாவது நெருக்கமாக பார்க்கத்தான் முடியுமா என்று எனது சிறுவயது முதலிருந்த ஏக்கம் நிறைவேற இன்னும் சிலநொடிகள்....

எவ்வளவு பெரிய மண்டபம், எப்பேர்ப்பட்ட ரசிகர்கள் கூட்டம், இந்தியாவைச் சேர்ந்த எத்தனை பெரிய நடிக, நடிகைகள் பட்டாளம். இலங்கை பாராளுமன்ற மந்திரிகள் அத்துடன் நடிகர் திலகத்தின் குடும்பம்.... எப்படிப்பட்ட சந்தர்ப்பம். இப்படி எல்லோருக்கும் அமையுமா என்பது சந்தேகமே!

திரு. B. H. அப்துல் ஹமீது அவர்கள் "இந்த வேளை, கலை நுணுக்கத்துடன் நடிகர் திலகத்தை சிவாஜி மன்னராக வரையப்பட்ட ஓவியமொன்றை நினைவுப் பரிசாக நடிகர் திலகத்திற்கு வழங்குகிறார் இலங்கை ஓவியர் கெளசிகன் " என்று அறிவிப்பு செய்து கொண்டிருக்கும்போது, அங்கே மேடையில் ஒரு சிங்கம் போல் சிவாஜி அவர்கள் எழுந்துநிற்கிறார். அவருக்காக அர்ப்பணிப்புடண் வரையப்பட்ட அப்பரிசை அவரிடம் சென்று கையளிக்கிறேன்.

அக்கணம், எனது மகிழ்ச்சியை என்னவென்று விவரிப்பது... நூற்றுக்கணக்கான படங்களில் பார்த்த அந்த பிரமாண்டம் என் கண்முன்னே.... மிகச்சில அங்குல இடைவெளியில்..... அந்தநேரத்தில் நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை... இந்த ஓவியத்தைப் பற்றி அவரிடம் விளக்குகிறேன். சிரிப்புடனும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெற்றுக்கொண்டு, அந்த படைப்பை தன் சிரசின்மேல் தாங்கிப் பிடிக்கிறார். ஒரு குழந்தை தனக்கு மிகவும் பிரியமான ஒன்றை பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்ளுமோ அப்படியோருணர்வு அவருக்கு. மண்டபத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் சுற்றி சுற்றி காட்டுகிறார். அதன்பின், மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் காட்டுமாறு தயவுடன் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். அப்படியே தனது சிரசிலிருந்து ஓவியத்தை கீழே இறக்கி பின்னால் திரும்பி அவ்வளவு பேருக்கும் புன்னகைத்தபடியே காட்டுகிறார், . அந்த நிமிடம் அவரிடம் ஒரு குழந்தைக்குரிய குறும்பு ☺.

பரிசளிப்பு இனிதே முடிந்தவுடன் கைலாகு கொடுத்து மனமுவந்து தனது நன்றியை என்னிடம் தெரிவிக்கிறார். இறுதியாக, என்னோடு எடுத்துச்சென்ற அவருடைய இன்னுமோர் ஓவியத்தை காட்டி, சிவாஜி அவர்களின் ஆட்டோகிராப்பை கேட்டதும், மிக்க அன்புடன் போட்டுக்கொடுத்தார். நடிகர் திலகத்திடம் விடை பெற்றுக்கொண்டு மேடையை விட்டு இறங்கும்போது, நடிகர் சின்னி ஜயந்த் " அழகா பேக் பண்ணி கொடுத்திடுங்க" என்று என்னை வேண்டிக்கொண்டார். அத்துடன் இளைய திலகம் பிரபு அவர்கள்" ரொம்ப அழகாக வரைத்துள்ளீர்கள்" என்று கை குலுக்கி வாழ்த்தினர்.

என் வாழ்க்கையில் இந்த நிகழ்வு ஒரு முக்கிய இடத்தை பெற்றதை மறுக்க முடியாது. விழா முடிந்து மண்டபத்தை விட்டு வெளியே நான் வரும்போது எத்தனை வாழ்த்துக்கள், மரியாதைகள்...

இதில் 'ஹைலைட்' (Highlight)  என்னவென்றால், மருதானை என்றழைக்கப்படும் ஓரிட த்திலுள்ள போலிஸ்  ஸ்டேஷன் பொறுப்பதிகாரி  என்னை தனது ஜீப்பில் போலிஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்று தேநீர் பருகவைத்து, என்னைப்பற்றி அன்புடன் விசாரித்துவிட்டு பின் தனது ஜீப்பிலேயே என்னை வீடுவரை விட்டுச்சென்றதை நினைக்கும்போது இன்றும் பிரமிப்பாக உள்ளது.

நிகழ்வுக்கான காணொளி :  https://www.facebook.com/kouwshik.ramiah/videos/pcb.10216036622010422/10216036582449433/?type=3&theater

இவர் வரைந்த நடிகர் திலகத்தின் ஓவியங்கள் பலவற்றைப் பின்வரும் இணைப்பில் காணலாம்: https://www.facebook.com/kouwshik.ramiah/media_set?set=a.10215808553268846&type=3&hc_location=ufi

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.