எகிப்தில் சில நாட்கள் 5கெய்ரோவின் மத்திய பகுதியில் இருந்து கீசா (Giza) என்ற இடத்தில் இறங்கியபோது நடுப்பகல் தாண்டி விட்டது. பாலைவன வெய்யில் கண்ணாடித் துகள்களில் பட்டு சிதறுவதுபோல் நிலத்தில் பட்டுத் தெறித்து கண்களை கூசவைத்தது. இந்தக் கடும் வெய்யிலும் பாலைவனத்தின் கொதிப்பும்தான் 5000 வருடங்களாக எகிப்தின் புராதன சின்னங்களைப் பாதுகாத்திருக்கின்றன. மழையற்ற பாலைப் பிரதேசத்தின் ஈரலிப்பற்ற சீதோஷ்ணம் கட்டிடங்களில் விரிவும் சுருக்கமும் மாறி மாறி ஏற்படாது புராதன சின்னங்களை ஒரு நிலையில் வைத்திருக்கிறது. புராதன கட்டிடங்களுக்கு மனிதர்களால் ஏற்பட்ட அழிவுகள் அதிகம். பிரமிட்டின் மம்மிகளோடு இருந்த செல்வங்களை திருடர்கள் கொள்ளையடித்தனர். பிரமிட்டின் கற்களையும் பளிங்குகளையும் பிற்காலத்தில் வந்த எகிப்திய அரசர்கள் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு அழித்தனர். மனிதர்களால் இவ்வாறு அழிவுகள் ஏற்பட்டபோது இயற்கை பல புராதன சின்னங்களை மண்ணால் மூடியும், வெப்பம் இயற்கையின் நுண்ணுயிர்களில் இருந்தும் பாதுகாத்திருக்கிறது.

எகிப்தின் வடக்கே, மத்தியதரைக்கடல் பக்கம் உள்ள நைல் நதியின் கழி முகத்தில் வெள்ளப் பெருக்கால் பல புராதன கட்டிடங்கள் புதைந்தும் சிதைந்து போனதாக வரலாற்றில் தகவல் உள்ளது.

எகிப்தின் புராதன விடயங்களை மற்றைய நாட்டைப் பார்ப்பது போன்று மேலோட்டமாக பார்த்து விட்டுச் செல்ல முடியாது. மனித சரித்திரத்தில் 3000 வருடங்கள் தொடர்ந்து இயங்கிய நாட்டின் சரித்திரம். மனித குலத்திற்கு தற்கால மொழியில் சொல்வதானால் முதலாவது ஏகாதிபத்திய அரசு என சொல்லப்படும் அரசை உருவாக்கி, நாகரிகம், கலை, இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம், கட்டிடக்கலை, பொறியியல் மற்றும் ஒருவனே தேவன் என்ற மதநம்பிக்கை முதலான பல விடயங்களை எமக்கு தந்து உதவியது.

யுத, கிறீஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் முன்னவர்களான ஏபிரகாம், மோசஸ் மட்டுமல்ல யேசுநாதர் குழந்தையில் யோசப்பாலும் மேரியாலும் எகிப்திற்கு எடுத்து செல்லப்பட்டு உயிர் தப்பியதாக மத்தியுவின் புதிய ஏற்பாடு சொல்கிறது.

வருடத்தில் 365 நாட்களை நமக்கு தந்தது எகிப்தியர்களே. மருத்துவத்தில் நாங்கள் பார்க்கும் ஸ்பெசலிட்டி எனப்படும் பகுதிகள் அக்காலத்தில் எகிப்தில் உருவாகியது. சிரிய நாட்டு மன்னன், தனது ஐம்பது வயதான சகோதரிக்கு குழந்தை பிறப்பதற்கு சிகிச்சை அளிக்க ஒரு பெண்ணியல் மருத்துவரை(Gynecologist) அனுப்பும்படி ராம்சி 2 என்ற எகிப்து மன்னனுக்கு ஓலையனுப்பினான்.

நைல் நதிக்கரைப் பாப்பரஸ், தற்போதைய புத்தகங்களின் தாத்தா அந்த புல்லில்தான் உலகத்தின் காவியங்கள் எழுதப்பட்டன.

மேற்கத்தைய நாகரிகத்தின் பிறப்பிடம் கிரேக்கம் என்பது அல்ல என அக்காலத்து அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். எகிப்திய கடவுளில் இருந்து சகலதும் அலக்சாண்டிரியா துறைமுகத்தினூடாக கப்பலேறி மத்திய தரைகடல் வழியாக சென்றவை என வரலாற்றின் தந்தையான ஹெரொடரஸ் (Herodotus ) கூறுகிறார்

எகிப்தின் முதலாவது தலைநகர் மெம்பிஸ். அதுதான் பிரமிட்டை உருவாக்கிய அரசர்கள் ஆட்சி செய்த இடம். அந்த இடத்திற்கு நைல் நதியை கடந்து கிட்டத்தட்ட அரைமணி நேரம் போக வேண்டி இருந்தது. தற்காலத்தில் கெய்ரோவின் சாலைகளில் வாகன நெருக்கடி அதிகமானதால் மெதுவாகவே செல்லமுடிந்தது.

கெய்ரோவில் இருந்து 20 கிலோமீட்டர் தெற்கேயும் நைல்நதிக்கு மேற்கேயும் உள்ளது இந்த மெம்பிஸ் நகரம். இதனை தற்பொழுது எகிப்தின் திறந்த வெளி தொல்பொருட்காட்சியகம் எனலாம்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு அரசுகளாக வடக்கிலும் தெற்கிலும் இருந்த இராச்சியத்தை ஒன்றாக இணைத்து அதன் தலைநகராக உருவாகியதுதான் மெம்பிஸ். ஒரு நாட்டை உருவாக்கி அதற்கான தலைநகரத்தை நிர்மாணித்ததோடு அந்த அரசு உருவாக்கப்பட்ட வரலாறு மிக அழகாக கல்லில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது ஜோச் வாசிங்ரன் அமரிக்காவை பிரகடனப்படுத்தியது போன்று மிகத் தெளிவாகத் தெரிகிறது. 50 நுாற்றாண்டுகள் முன்பாக நடந்த சம்பவம் என்பது நம்பமுடியாமல் உள்ளது.

வரலாறு என்பதன் வரைவிலக்கணம் மனிதர்கள் எழுதத் தெரிந்த காலத்தில் இருந்தே தொடங்குகிறது. ஆனால் வரலாற்றுக்கு முந்திய காலத்தை புரிந்து கொள்வதற்கு மானிடவியலின் தேவை நமக்கு உள்ளது.

மனிதர்கள்( (Humanoid) போன்றவர்கள் லுயிஸ் லீக்கி (Louis Leaky) படி 1.75 மிலியன் வருடத்திற்கு முன்பாக எகிப்திற்கு தெற்காக வாழ்ந்திருக்கிறார்கள். தற்பொழுது பாலைவனமாக இருக்கும் சகாரா பாலைவனப்பபிரதேசம் ஆரம்ப காலத்தில் ஈரலிப்புடன் பசுமையான நிலமாக இருந்ததால் ஆதிமனிதர்கள் எகிப்தில் 700000 வருடங்களாக வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. கல்லாயிதங்களுடன் வேட்டையாடி இவர்கள் உயிர் வாழ்ந்தவர்கள்

எகிப்தில் 5000 வருடங்களாக மட்டுமே விவசாயம் செய்த மனிதன் வாழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இக்காலத்தில் மண்பானைகளை உருவாக்குதல் அவற்றில் தானியங்களை அவித்தல் தானியங்களை சேகரித்தல் மதுபானத்தை தயாரித்தல் என்பன நடந்ததாக சொல்லப்படுகிறது. இதுவே எகிப்தின் கலாச்சாரத்தின் ஆரம்பக் கட்டம். இக்காலத்தில் சிறுதொகையாக சுமார் 2000 மக்கள் வாழ்ந்தாகவும் இறந்தவர்கள் மணலில் புதைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இறந்தவர்களை புதைப்பது என்பது மனித நாகரீகத்தின் முக்கிய புள்ளியாகும்.

எல்லா மிருகங்களாலும் அழுகிய சடலத்தை உண்ண முடியாது ஆனால் ஓநாய்களின் இரைப்பை இதற்கு ஏற்றதாக அமைந்திருப்பதால் ஆரம்பத்தில் மணலில் புதைத்தவர்களை ஓநாய்கள் கிளறி உண்டதனால், பிற்காலத்தில் பாறைகளைத் தோண்டி கிடங்காக்கி சடலங்களை புதைத்து வந்தார்கள். பின்பு இந்தப் பாரம்பரியமே படிப்படியாக பிரேதங்களை வைத்து பாதுகாப்பதற்கு பிரமிட் கட்டுதலாக வளர்ச்சியடைந்தது. இறந்தவர்கள் அதே உடலுடன் மேலுலகம் செல்கிறார்கள் என்ற நம்பிக்கையே இதற்கு மூலகாரணமான கருத்தியலாகும். இந்த சிந்தனையே எகிப்தியர் மட்டுமல்ல மற்றவர்களும் பிரமிட் கட்டுவதன் அடிப்படையாகும்.

முக்கிய விடயங்களை காலத்தில் அழிந்து போகமல் கற்களில் செதுக்குவதிலும் எகிப்தியர் ஈடுபட்டதாலே பல விடயங்களைப் பிற்காலத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. பெண்கள் வாசனைத்திரவியங்கள் பாவித்ததாகவும் அணிகலன்கள் அணிந்ததாகவும் எகிப்திய வரலாறு கூறுகிறது. எத்தியோப்பியாவில் வளர்ந்த ஒருவகை தாவரத்தில் இருந்த பிசின் போன்ற சாம்பிராணி எரிக்கப்பட்டு அதனது நறுமணத்திற்காக எகிப்திய தேவாலயங்களில் பயன்பட்டது

பசுமையாக இருந்த நிலப்பரப்பு பிற்காலத்தில் பசுமை குறைந்து பாலையாக மாறியதால் பெரும்பாலான எகிப்தியர்கள், கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீட்டர் நீளமாக நைல் நதி யின் இருபுறமும் குடியேறி வாழ்ந்திருக்கிறார்கள். எகிப்தின் வடக்கில் ஒரு இராச்சியம் தெற்கில் ஒரு இராச்சியமாக உருவாகி இருந்தது. தென் பகுதி அரசனான நாமரால் (King Namur கி மு 3150) வட பகுதி கைப்பற்றப்படடது.
நாமர் கைப்பற்றிய சம்பவம் அழகாக கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கல் பிற்காலத்தில் எகிப்தின் அஸ்வான் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கல்லில் வடபகுதியை ஆண்ட மன்னனை தலைமயிரில் பிடித்து கல்லாயிதத்தால் அடிப்பதும் அருகில் கழுகு பறப்பதும் செதுக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த பக்கத்தில் இரண்டு சிறுத்தைகள் பிண்ணிப் பிணைந்திருப்பது படிமமாக இரண்டு அரசுகள் ஒன்றாக இணைவதும் பதிவாகியிருக்கிறது. கோட்டையை தாக்கும் காளை மாடும் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு கழுகு எகிப்திய அரசனின் சின்னம் அதேபோல் காளைமாடு எகிப்தியர்களின் புனித சின்னம்.

எகிப்திய நாடு நாமரால் ஒன்றாகியதால் ஒருமுகப்பட்ட மத்திய அரசு ஏற்பட்டது. அதனால் மக்களை ஒன்றிணைத்துக் கொண்டு பொது வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நைல் நதியில் இருந்து விவசாய நிலங்களுக்கு நீர்பாச்சும் திட்டங்களை செயலப் படுத்த முடிகிறது. பிரமிட் மற்றும் பெரிய ஆலயங்கள் என்பன கட்டிமுடிந்ததுடன் சுற்றியுள்ள சிரியா பபிலோன் போன்ற நாடுகளை படை எடுத்து ஆளமுடிந்தது.

எகிப்தியர்கள் நைல்நதிக்கு மேற்கே பிரமிட்டுகளையும் கிழக்கே குடியிருப்புகளையும் உருவாக்கினார்கள். எகிப்து உருவாகி சில நூற்றாண்டுகளின் பின்பாகவே பிரமிட்டுகள் கட்டப்பட்டன.இந்த பிரமிட்டுகள் கட்டும் பொறியியல் கூட படிப்படியாகத்தான் உருவாகியது.

பிரமிட் இருந்த இடத்திற்கு நாம் சென்றபோது நண்பரின் மகனும் அவரது மனைவியாக விருக்கும் பியங்காவும் அங்கு நின்றனர். எங்களையும் அவர்களையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்து சேர்த்த அகமட்டை மெச்சாமல் இருக்க முடியவில்லை. அவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து ஒருநாள் தாமதமாக புறப்பட்டுவந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். இப்பொழுது நாங்கள் ஏழு பேர் கொண்ட குழுவாகினோம்..

அண்ணாந்து பார்கும் போது மூன்று பிரமிட்டுகள் வானுயரத்தில் தெரிந்தன. அதன் கீழ் பகுதியில் ஓட்டகங்களை வாடகைக்குவிடுபவர்களும் உல்லாசப் பிரயாணிகளுக்கு பொருட்களை விற்பவர்களும் நின்றார்கள். கால்புதைய மணலில் நடக்கும் இந்த ஒட்டகங்கள் பிரமிட் கட்டும்காலத்தில் எகிப்தில் இருந்திருக்கவில்லை பிற்காலத்திலே அரேபியாவில் இருந்து கொண்டுவரப்பட்டவை.

ஓரளவு எகிப்தியியலின் புரிதலுடன் பார்க்கும் போது பிரமிட்டுகள் மனத்தில் பிரமிப்பையும் புதிரையும் ஊட்டும் தன்மையுள்ளன. பல ஹொலிவூட் படங்கள் நாவல்கள் பல வேறு விதமாக உண்மைக்கு புறம்பாக இருந்தாலும் அவற்றில் புதைந்திருந்து மர்மங்களும் புதிர்களும் பலரது கற்பனைகளை தூண்டிவிட்டது என்பது உண்மைதான். பழைமை வாய்ந்த கீசா பெரிய பிரமிட்டே ஐபல் கோபுரம் பரிசில் உருவாக்கப்படும்வரை மனிதரால் கட்டப்பட்ட உயரமான கட்டிடமாக 3800 வருடங்கள் இருந்தது .

நாங்கள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும் பெரிய பிரமிட் குபுவால்(Khufu) வால் கட்டப்பட்டது. ஒரு பிரமிட்டைத்தவிர மற்றவைகளில் திருத்த வேலை நடந்து கொண்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் தடுக்கப்பட்டார்கள் உள்ளே செல்வதற்கு இரண்டு பாதைகள்.அதில் கிழே சென்ற பாதை பின் மேலே செல்லும். அந்தப் பாதை மூன்றடி வரையில் மட்டுமே உயரமானதால் குனிந்து கொண்டு செல்லவேண்டும். உள்ளே விசாலமான அறைகள் மம்மிகள் வைப்பதற்காக இருந்தன. ஆனால் இப்பொழுது சகல மம்மிகளும் எகிப்திய மியுசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிறிது வெளிச்சம் பரவி உள்ளதால் ஒரு காலத்தில் மம்மியை வைத்திருந்த அந்த விஸ்தீரணமான இடத்தை சுற்றிப்பார்த்தேன். அங்கு கமராவால் படம எடுக்க அனுமதியில்லை. கையில் வைத்திருந்த தொலைபேசியினால் படத்தை எடுத்தோம்.புதுமையான அனுபவம். ஆனாலும் எனது அனுபவத்தை விட மிக சுவையானது நெப்போலியனது அனுபவம்.

பல இராணுவ வீரர்களோடு ஊர்வலமாக உள்ளே சென்ற நெப்போலியன் எல்லோரிடமும் தன்னை தனியே விடும்படி கூறினான். இதனால் பிரமிட்டின் உள்ளறையில் நெப்போலியன் தனித்து விடப்பட்டான். இதேபோல் அலெக்சாண்டரும் நின்றதாக கதையுள்ளது.

அலெக்சாண்டரில் மிகவும் பற்றுக்கொண்ட நெப்போலியன் அப்படியாக ஆசைப்பட்டு இருக்கலாம். ஆனால் மீண்டும் திரும்பி நெப்போலியன் வெளியே வந்த போது பேயறைந்தது போல் முகம் வெளிறி இருந்தான். நெப்போலியனோடு வந்த மற்றவர்கள் என்ன நடந்தது? என்று ஆவலோடு வினவியபோது, நெப்போலியன் ‘நான் சொன்னால் நீங்கள் நம்பப்போவதில்லை எனவே சொல்லுவதில் பிரயோசனம் இல்லை’ என மறுத்தான். இந்த விடயத்தை நெப்போலியன் மரணப் படுக்கையில் இருந்த போதும் ஒருவர் கேட்டதாக வரலாறு உள்ளது.

அலெக்சாண்டர், நெப்போலியன் போன்ற மன்னர்கள் நின்ற இடத்தில் நாமும் நிற்க முடிகிறது. ஆனால் அவர்களைப்போல் படை நடத்திச் செல்லவேண்டியது இல்லை.
அலெக்சாண்டர் தனது ஊருக்குச் செல்ல முடியாமல் கடும் சீத பேதியால் பாபிலோனில் இறக்கிறான். அவனது உடல் நண்பன் தொலமியால் எகிப்துக்கு கொண்டு வரப்பட்டு அலக்சாண்டிரியாவில் புதைக்கப்படுகிறது. நெப்போலியன் காலத்தில் பிளேக்நோய் பல இராணுவ வீரர்களைக் கொன்றது. இதைவிட. நெப்போலியன் எகிப்தில் இருந்தபோது அவனது பாரிய கப்பலை இங்கிலாந்தினர் குண்டு வைத்து வெடிக்க வைத்ததால் தனது படைவீரர்களை கைவிட்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என தப்பி ஓடவேண்டி இருந்தது. இப்படி பிரமிட்டுள்ளே சென்றவர்கள் பல அல்லல்களை சந்தித்தாலயே பிரமிட்டுகள் புதிராகவும் மர்மமானதாகவும் கருதி பல படங்களும் நாவல்களும் உருவாக்கப்பட்டன.

இப்படி எந்த பிரச்சினைகளையும் சந்திக்காமல் அகமட் போன்றவர்களின் வழிகாட்டலில் எகிப்திற்கு சென்று பிரமிட்டுகளை பார்க்கவும் அந்த மயான அறையின் உள்ளே செல்லவும் முடிகிறது என்பது ஒருவிதத்தில் பெருமையாக இருந்தது.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் மூடுபொருளாக ஒரு விடயம் சொல்லப்படுகிறது. யூத இனத்தவர்கள் நைல் நதியின் கழிமுகப்பிரேதேசத்தில் பல கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வாழ்ந்த காலத்தில் அவர்களின் குடிப்பெருக்கம் அதிகரித்ததனால் அவர்களது சனபெருக்கத்தை கட்டுக்குள் வைக்காவிடில் எகிப்தியர்கள் சிறுபான்மை இனமாக போய்விடுவார்கள் என்ற அச்சம் எகிப்தியர்களுக்கு ஏற்பட்டது.

யூத இனத்தவர்களின் தொகையை குறைக்க எகிப்திய மன்னன் தீர்மானித்தான். அதற்காக எகிப்தில் பிள்ளை பிறப்பதற்கு உதவி செய்யும் மருத்துவச்சிகளின் மூலம் சனத்தொகையை கட்டுப்படுத்தும் காரியத்தை செய்ய நினைத்து இரண்டு செங்கட்டிகளை கூர்ந்து பார்க்கும்படி மருத்துவிச்சிகளுக்கு கட்டளை இடுகிறான். அத்துடன் ஆண்குழந்தைகளை கொல்லவேண்டும் எனவும் கட்டளை எகிப்திய மன்னனால் பிறப்பிக்கப்படுகிறது. யூதர்களின் கடவுள் மோஸஸை செடிகள் வளர்ந்த பற்றைக்குள் அழைத்து எகிப்தில் இருக்கும் யூதர்களை வெளியேற்றும்படி மோஸஸிடம் கட்டளை இடப்படுகிறது. அதை மோஸஸ் தயக்கத்துடன் ஏற்றுக் கொள்வதாக பைபிளில் சொல்லப்படுகிறது. இதில் இருந்தே மோஸஸ் வரலாறு – யூதர்களை எகிப்தை விட்டு அகற்றும் நடவடிக்கை ஆரம்பமாகிறது என பழைய ஏற்பாடு கூறுகிறது.

அது என்ன இரண்டு செங்கட்டிகள்?

அக்காலத்தில் எகிப்தில் பெண்கள் குழந்தையை பெறும் போது இரண்டு செங்கட்டிகளில் ஏறி குந்தியிருந்து இருந்து குழந்தையைப்பெற முக்குவார்கள். இதற்கு இரண்டு காரணம் பிறப்புறுப்பு கூடிய அளவில் அந்த நிலையில் விரிவடையும். அத்துடன் புவியீரப்பு விசை குழந்தைகளை வெளித்தள்ள உதவும். மருத்துவ வசதிகள் அற்ற அக்காலத்தில் குறைந்தது ஐந்து பிள்ளைகள் பெற்றால்தான் இரண்டு பிள்ளைகள் உயிர்வாழும் என்ற நிலையிருந்தது. எல்லா வீடுகளிலும் இதற்காக இரண்டு செங்கட்டிகளை வைத்திருப்பார்கள். செல்வந்தர் வீடுகளில் சித்திர வேலைப்பாடுள்ள அலங்கார செங்கட்டிகள் இருக்கும்.

அடுத்த மனிதர், சரித்திரத்தை எழுதிய கொரொடரஸ், எகிப்தின் அரச தலைநகரான மெம்பிஸ் புனிதத் தலைநகரான தீப்ஸ்கும் சென்று கிரேக்க மொழியில் எழுதியவை ஆரம்பத்தில் முக்கியமானவை.

இதன்பின்பு நெப்போலியன் 1815 பல விஞ்ஞானிகளுடன் எகிப்துக்கு வந்தது மட்டுமல்லாமல் எகிப்திய விடயங்களை வெளிக்கொணரவும் செய்தான். அதனால் அவனது பயணம் முக்கிய சம்பவம் ஆகிறது.

(hieroglyphic writing) குறியீட்டு மொழியில்; எழுதப்பட்ட எகிப்திய வரலாறு பிற்காலத்தில் அழிந்து போகிறது. இதனால் இந்த கொப்ரிக் என கூறப்படும் மொழியை தொடர்ந்து பேசியவர்கள் இருந்தாலும் வாசிப்பவர்கள் இல்லை. பிரான்சிய தளபதியாக இருந்த நெப்போலியன 1798 எகிப்தின் மீது படை எடுத்தபோது புதைபொருளாராய்ச்சியாளர்கள் பொறியிலாளர்கள், நில அளவையாளர்கள் எனப் பெரிய குழுவுடன் வந்து அதன் கண்டு பிடிப்புகளை பதிவுசெய்து வெளி உலகுக்கு எகிப்தின் விடயங்களைத் தெரியச்செய்தான்.

அப்படியாக வெளிவந்த புராதன எகிப்தை ,பார்த்து புரிந்து கொள்ள வரலாறு தேவையானது. அதேபோல் பிரமிட்டின் வரலாறு, மதம், தொழில்நுட்பம், பொறியியல், மம்மியாக்குதல், மருத்துவம் முதலான பல துறைகளைக் கொண்டது

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.