- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக 
மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன்.
அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம்
ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார்.
அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் இருபத்தி இரண்டு

அந்தச் சமயத்தில் வீட்டின் முன்வராந்தாவின் கூரையின் கீழ், இரட்டைக் குழல் துப்பாக்கியைக் கையிலேந்தியவாறு ஷேர்பம் வெளியே தோன்றினார். ஒரு வார்த்தை கூட பேசாது மிகவும் அமைதியுடனும், நிதானத்துடனும் அங்கே நின்றார். அடித்துப் பிடித்து அலைகடல் போன்று முன்னேறிக் கொண்டிருந்த கூட்டம் அப்படியே நின்று பின்வாங்க ஆரம்பித்தது.தேனீக்கள் போன்ற மக்கள் கூட்டம் காட்டுமிராண்டிகள் போல் ஊளையிட்டுக் கொண்டும், கோஷமிட்டுக் கொண்டும் ஷேர்பம் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்தக் காட்சி பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருந்தது. வழியில் இருந்த அனைத்து மக்களும் தங்களின் பொருட்களை எடுத்துக் கொண்டு தங்களை அந்தக் கூட்டம் மிதித்து விடும் என்ற பயத்துடன் வேகமாக நகர்ந்தார்கள். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் அந்தக் கூட்டத்தை முந்திக் கொண்டு ஓடி வேறு பக்கம் ஒளிந்து கொண்டார்கள். தெருவின் பக்கங்களில் இருந்த வீட்டுச் சன்னல்களின் வழியாக தங்களின் தலையை நீட்டியவாறு பெண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறு நீக்ரோ சிறுவர்கள் மரத்தின் மீது ஏறி அமர்ந்திருக்க, இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் வீட்டின் மதில்சுவர் பக்கமிருந்து அதன்மேல் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கட்டுக்கடங்கா கூட்டம் அவர்களின் பக்கமாக வர, அவர்களின் பிடியில் மாட்டிகொள்ளாதிருக்க பின்தள்ளி நின்று கொண்டார்கள். பெரும்பான்மையான பெண்களும், சிறுமிகளும் பீதியுடன் அழுதுகொண்டிருந்தார்கள்.

ஷேர்பம்மின் வீட்டு மதில் அருகே கூட்டமாய் குவிந்தனர். அதனுள்ளே செல்லும் இருபதடிப் பாதையில் தள்ளமுள்ளு செய்து கொண்டு அனைவரும் நுழைந்தனர். அந்தக் கூட்டம் போட்ட அளவுகடந்த கூச்சலில் நீங்கள் பேசுவது கூட உங்களுக்கே கேட்காது என்பது போல் இருந்தது. "மதிலை அடித்து நொறுக்குங்கள். மதிலை அடித்து நொறுக்குங்கள்" என்று சிலர் கத்தினர். உடனே மதிலில் உள்ள மரப்பட்டைகளை கிழித்து அடித்து துவம்சம் செய்து நொறுக்கும் ஓசை காதில் கேட்டது. இப்போது மதில் காணாமலே போய்விட்டது. மதில் போல் நின்ற மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டு தள்ளிக் கொண்டு முன்னே வர முயன்றது.

அந்தச் சமயத்தில் வீட்டின் முன்வராந்தாவின் கூரையின் கீழ், இரட்டைக் குழல் துப்பாக்கியைக் கையிலேந்தியவாறு ஷேர்பம் வெளியே தோன்றினார். ஒரு வார்த்தை கூட பேசாது மிகவும் அமைதியுடனும், நிதானத்துடனும் அங்கே நின்றார். அடித்துப் பிடித்து அலைகடல் போன்று முன்னேறிக் கொண்டிருந்த கூட்டம் அப்படியே நின்று பின்வாங்க ஆரம்பித்தது.

ஒரு வார்த்தை கூட ஷேர்பம் பேசவில்லை. அமைதியாய் அங்கே நின்றவாறு கூட்டத்தின் மீது மெதுவாக தன் கண்களை ஓட்டினார். அந்த அமைதி அச்சமூட்டுவதாகவும், தர்மசங்கடத்தை விளைவிப்பதாகவும் இருந்தது. அவரின் தீர்க்கப் பார்வையைச் சந்திக்க மக்கள் முயன்றார்கள். ஆனால் அது மிகவும் கடினமான இருந்தது. எதையோ மறைக்க முயல்பவர்கள் போல அவர்கள் தங்களின் பார்வையை கீழ் பக்கமாகத் தாழ்த்தி நின்றார்கள். அடுத்த கணத்திலேயே, ஷேர்பம் உரத்த குரலில் சிரித்தார். அது சந்தோசமான சிரிப்பாக இல்லாது ரொட்டியை சாப்பிடும்போது அதில் மணல் இருந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறு மிகவும் கடுமையாக இருந்தது.

மிகுந்த நிதானத்துடனும், இகழ்ச்சியுடனும் அவர் கூற ஆரம்பித்தார்.

"ஒருவரைத் தூக்கிலிட நீங்கள் நினைத்திருக்கும் யோசனை மிகவும் வினோதமானது. ஒரு மனிதனை அப்படித் தூக்கிலிட உங்களால் முடியும் என்ற துணிவு உங்களுக்கு இருப்பதாக நீங்கள் யோசனை செய்வது விந்தை! ஊரிலிருந்து தள்ளிவைக்கப்பட்ட ஆதரவற்ற ஏழைப் பெண்களைத் தூண்டி விட்டு இங்கே இழுத்து வந்து சும்மா கூட்டம் கூட்டிவிடுவது உங்களை வீரர்கள் என்று ஆக்கிவிடும் என்று நினைக்கிறீர்களா? அதனால் நீங்கள் ஒரு மனிதன் மேல் கைவைக்க முடியும் என்று உங்களைப் பற்றி எண்ணுகிறீர்களா? பகல் வெளிச்சம் உள்ளவரையிலும், பெண்கள் பின்னால் நீங்கள் மறைந்து கொண்டு உங்கள் வீரத்தைக் காட்டும்வரையிலும், நீங்கள் பத்தாயிரம் பேர் இருந்தாலும் ஒரு மனிதனைக்கூட ஒன்றும் செய்ய முடியாது."

"நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எனக்குத் தெரியுமா? கண்டிப்பாக எனக்குத் தெரியும். உங்களைப் பற்றி எனக்கு எல்லாமே தெரியும். நான் தெற்கில் பிறந்து வளர்ந்தேன் என்றாலும் வடக்கில் வசித்தேன். எல்லா இடத்திலும் மக்கள் எப்படி இருப்பார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். சாதாரண மனிதர்கள் கோழைகள். இங்கே வடக்கில் தன் மேல் அனைவரும் நடந்து மிதிக்குமளவு கோழையாய் இருந்துவிட்டு, வீட்டுக்குச் சென்று கடவுளிடத்தில் அதைத்தாங்க சக்தி கொடுக்குமாறு வேண்டுவார்கள்.”

தெற்கிலோ, குதிரை வண்டியில் வரும் அனைத்து வீரர்களையும் சமாளித்து, பயணிகளையும் கொள்ளையடிக்க ஒரே ஒரு மனிதன் போதும். செய்தித்தாள்கள் உங்களை வீரர்கள் என்று அழைப்பதால், நீங்கள் அனைவரும் மற்றவர்களை விட வீரர்கள் என்று இப்போது எண்ணிக் கொள்கிறீர்கள். நீங்கள் வீரர்களாக இருக்கலாம். ஆனால் வீராதி வீரர்கள் அல்ல. ஏன் தெற்கில் இருக்கும் நீதிபதிகள் கொலையாளிகளை தூக்கிலிடுவதில்லை? தெரியுமா? ஏனென்றால் அந்தக் கொலையாளிகளின் நண்பர்கள் இருட்டில் அந்த நீதிபதிகளைப் பின்புறமாக இருந்து சுட்டுப்பொசுக்கிவிடுவார்கள் என்ற கடும் அச்சத்தில்தான். கண்டிப்பாக அதைச் செய்வார்கள்தான்."

"எனவே எப்போதுமே குற்றவாளிகளைக் குற்றங்களிலிருந்து அந்த நீதிபதிகள் விடுவித்துவிடுவார்கள். பிறகு ஒரு வீரமுள்ள மனிதன் நடுநிசியில் நூறு கோழைகளை முகமூடியுடன் தன் பின்னால் கூட்டிச் சென்று அந்த அயோக்கியனை தூக்கிலிடுவான். உங்களுடன் ஒரு வீரமான மனிதனைக் கூட்டி வராதது உங்களின் முதல் தவறு. நடுநிசியில் முகத்தில் முகமூடியுடன் வராதது உங்களின் இரண்டாவது தவறு. வீரத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே உடைய பக் ஹார்க்நெஸ் இங்கே இருக்கிறான். இவன் மட்டும் இங்கே இல்லாததும் பொல்லாததும் சொல்லி அனைவரையும் தூண்டிவிடாதிருந்தால், நீங்கள் அனைவரும் வேண்டாத வெற்றுப்பேச்சுக்களை மிகைப்படுத்திப் பேசிக்கொண்டு அத்தோடு போயிருப்பீர்கள்."

"நீங்கள் இங்கே வர விரும்பவில்லை. சாதாரண மனிதனுக்கு பிரச்னைகளும் அபாயங்களும் பிடிக்காது. உங்களுக்கும் அவை பிடிக்காது. பக் ஹார்க்நெஸ் போன்று கொஞ்சம் அரை மனிதனாகவாவது நீங்கள் இருந்திருந்தால், "அவனைத் தூக்கிலிடுங்கள், அவனைத் தூக்கிலிடுங்கள்" என்று வீரத்துடன் கத்திய அனைவரும் இப்போது பின்வாங்கியிருக்கமாட்டீர்கள். நீங்கள் யாரென்று அனைவரும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற பயம் உங்களுக்கு உள்ளது. நீங்கள் கோழைகள். குழப்பத்தை உருவாக்கி, கூச்சலிட்டுக் கொண்டு அந்த அரை மனிதனின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிவீர்கள். ஆக்ரோஷத்துடன் நீங்கள் ஏதோ காரியங்கள் செய்யப்போவதாக இங்கே கூப்பாடு போட்டுக் கொண்டு வந்தீர்கள்.”

“உலகிலேயே மிகவும் பரிதாதப்படவேண்டிய விஷயம் இப்படி மூடர்களாய் கூட்டம் சேர்வதுதான். கூடவே பிறந்த கொஞ்ச நஞ்ச வீரத்துடன் கூட அவர்கள் போராட மாட்டார்கள். கூட்டம் மற்றும் அவர்களை வழிநடத்தும் தலைவர்கள் கொடுக்கும் தைரியத்தில் அவர்கள் சண்டையிட வருவார்கள். ஆனால், சரியான வீரன் இன்றி கட்டுப்பாடற்ற ஒரு கூட்டம் இங்கே பரிதாபமாக நிற்பது அதனிலும் கேவலமானது. இப்போது, உங்களின் வாலைச் சுருட்டி கால்களுக்குள் இடுக்கி வைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்லுங்கள் அல்லது ஏதேனும் பொந்துக்குள் சென்று பதுங்குங்கள்.”

“அப்படி ஏதேனும் தூக்கிலிடும் ஆசை உங்களுக்கு மிச்சமிருந்தால், தெற்கத்திப் பாணியில், இரவு முகமூடி அணிந்து வாருங்கள். அத்துடன் ஒரு வீரமான மனிதனையும் உடன் அழைத்துவாருங்கள், பார்க்கலாம்! இப்போது உங்களின் அரைமனிதனையும் உங்களுடன் அழைத்துக் கொண்டு போய்த் தொலையுங்கள்." இவ்வாறு கூறியவாறே தனது கரத்திலிருந்த இரட்டைக்குழல் துப்பாக்கியை இடது கரத்தில் சுழற்றி விசையை இழுக்க ஆரம்பித்தார்.

திடீரெனக் கூட்டம் பின்வாங்கி மெல்லமாகக் கலைய ஆரம்பித்தது. மக்கள் ஆளுக்கொரு திசையாக ஓட ஆரம்பித்தார்கள். பரிதாபகரமான தோற்றத்தில் இருந்த பக் ஹார்க்னெஸ்சும் கூட்டத்தைப் பின்தொடர்ந்து காணாமல் போனான். நானும் அங்கே தங்கியிருக்க விரும்பாமல், வேறு பக்கமாக நகர்ந்தேன்.

சர்க்கஸ் நடக்கும் இடத்திற்குச் சென்று, அதன் காவலாளி சர்க்கஸ் நடக்கும் கூடாரத்திற்குள் விரட்டும் வரை அதன் பின்பக்கம் வெட்டியாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன். என்னிடம் ஒரு இருபதுடாலர் தங்க நாணயம் மற்றும் இன்னும் கொஞ்சம் பணம் இருந்தாலும், அதைச் சேமித்து வைத்திருக்க நான் எண்ணினேன். வீட்டை விட்டு வெளியேறி நான் இருப்பதாலும், வேற்று ஆட்களுடன் வாழ்ந்து வருவதாலும், எப்போது வேண்டுமானாலும் அந்தப் பணம் எனக்குத் தேவைப்படும் என்பது எனக்கு நன்கு புரிந்திருந்தது. அந்த அளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய அவசியமில்லைதான். சர்க்கஸுக்காக பணம் செலவழிக்கக் கூடாது என்று நான் கூறவில்லை ஆயினும், பணத்தை அவ்வாறாக விரயம் செய்வதும் அவசியமில்லைதான்.

நல்லதொரு சர்க்கஸ் அது. நான் பார்த்ததிலேயே அங்கு நடந்த அணிவகுப்பு போன்றதொரு சிறப்பு மிகுந்தது வேறு எங்கும் கண்டதில்லை என்று கூறலாம். காட்சிகளில் பங்குபெற்றவர்கள் இரண்டு இரண்டாக ஆணும் பெண்ணுமாக குதிரைகளை ஓட்டிக்கொண்டு வந்தார்கள். ஆண்கள் இடுப்புப் பகுதிக்கு நீண்டதொரு உள்ளாடையும், மேலே உள்பனியனும் அணிந்து காலில் ஷூ மற்றும் குதிரையுடன் இணைக்கும் கயிறு ஆகியவைகள் இல்லாது வந்தார்கள். கரங்களை மிகுந்த வசதியுடன் லகுவாக தங்களின் தொடைகளின் மீது வைத்திருந்தார்கள். அவர்கள் மொத்தம் இருபது ஆட்கள் இருப்பார்கள்.

அவர்களில் பெண்கள் அழகான நிறத்துடன் வனப்பான தோற்றத்துடன், வைரங்கள் போன்று பளபளக்கும் கற்களை வைத்து தைத்த விலையுயர்ந்த மினுமினுக்கும் ஆடைகளை அணிந்து உண்மையான ராணிகள் போல ஜொலித்தார்கள். பார்க்க அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அது போன்றதொரு இன்பம் தரும் காட்சியை நான் இது வரை கண்டதேயில்லை. பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக நின்று பெரிய வளையத்துக்குள் மிகவும் மென்மையாகவும், வசீகரமாகவும் அலைபோன்ற பாணியில் புகுந்து வந்தார்கள். ஆண்கள் மிகவும் உயரமாகவும், சன்னமான தேகத்துடனும், அவர்கள் தலைகள் உயர்ந்து மிதந்து அந்த கூடாரத்தின் மேல் தொட்டுவிடும் அளவு காணப்பட்டார்கள் . ஒவ்வொரு பெண்ணின் ரோஜா வண்ணச்சருகு போன்ற உடை அவர்களின் இடுப்பை பட்டின் மென்மை போன்று தழுவி அசைத்து அவர்களை இனிமையான மெல்லிய ரோஜா வண்ணக் குடை போன்று காட்சி அளிக்கச் செய்தது.

அதிவேகத்துடன் அவர்கள் அனைவரும் நடனம் ஆடினார்கள். குதிரைகள் பக்கங்களில் அதிகம் சாய்ந்து கொடுக்க, முதலில் ஒரு காலை காற்றில் உயர்த்தி நிறுத்தி பின்னர் அடுத்தகால் என மாற்றி மாற்றி ஆடினார்கள். ரிங்மாஸ்டர் கையிலிருந்த சவுக்கை "ஹையா, ஹையா" என்று சத்தமிட்டபடி சொடுக்கிக் கொண்டே நடுவில் சுற்றிக்கொண்டிருக்க, அவனின் பின்புறமாக இருந்து, கோமாளி சிரிப்பு மூட்டும் வேலை செய்து கொண்டே சென்றான். இறுதியாக அனைவரும் தங்களின் கையிலிருந்த சவுக்குகளை கீழே போட்டு விட்டு ஒவ்வொரு பெண்ணும் தனது முஷ்டியை தங்கள் இடுப்பில் வைத்துக் கொள்ள, ஒவ்வொரு ஆணும் தங்கள் கரங்களை மார்போடு சேர்த்து இறுகக் கட்டிக்க கொள்ள, அவர்களின் குதிரைகள் முன்பக்கம் குனிந்தவாறு, விரைவாகக் குதித்தோடியது. ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் குதிரையிலிருந்து அந்த வளையத்திற்குத் தாவினார்கள். நான் முன்பு எப்போதுமே கண்டிராத வகையில் மிக அழகாகத் தலை வணங்கிச் சென்றார்கள். பின்னர் மிகுந்த கலைநயத்துடன் குதித்து வெளி வந்தார்கள். பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டியவாறு காட்டுத்தனமாகக் கூச்சலிட்டார்கள்.

வியக்கத்தகு விஷயங்கள் பல அந்த சர்க்கஸில் செய்து காட்டினார்கள். அந்த முழு நேரத்திலும், சர்க்கஸ் கோமாளி செய்த சிரிப்பு மூட்டும் வேலைகள் பார்வையாளர்களை கட்டுக்கடங்காமல் சிரிக்க வைத்து அவர்களின் வயிற்றைப் புண்ணாகியது. அந்த ரிங்மாஸ்டர் அந்தக் கோமாளியை நோக்கி ஏதேனும் திட்டிக் கொண்டிருப்பான். ஆனால் நீங்கள் கண்டுகொள்ளுமுன்னரே, அந்தக் கோமாளி அவனை நோக்கி கண்சிமிட்டியவாறே மிகவும் வேடிக்கையான ஏதோ சில விஷயங்களை அனைவரும் சிரிக்கும்படியாகக் கூறுவான். அவனால் எப்படி இத்தனை வேடிக்கை விஷயங்களை நினைவு வைத்து அதைத் தகுந்த சமயத்தில் தகுந்த சைகைகளுடன் சேர்த்து இவ்வளவு அற்புதமாக நடிக்க முடிகிறது என்பது மட்டும் எனக்கு விளங்கவே இல்லை. ஏன், அதற்குப் பின் வந்த ஒரு வருடம் முழுதும் அவன் சொல்லிய, செய்த வேடிக்கைச் செயல்களை என்னால் திரும்பி நினைவு கூறக் கூட இயலவில்லை.

வெகு விரைவில், ஒரு குடிகாரன் அந்த வளையத்திற்குள் புக முயற்சி செய்தான். தானும் மற்ற அனைவரையும் போலவே அந்த சவாரியில் தேர்ச்சி பெற்றவன் என்று கூறினான். அவனிடம் மற்றவர்கள் வாக்குவாதம் செய்து அவனை அந்தக் காரியம் செய்ய விடாது தடுக்க முயற்சி செய்தார்கள். அந்த சமயத்தில் மொத்த நிகழ்வுகளுமே நின்று விட்டன. பார்வையாளர்கள் கோபமடைந்து கூச்சலிட்டு அவனைக் கேவலப்படுத்தினார்கள். இன்னும் வெறித்தனமாகவும், ஆக்ரோஷமாகவும் அது அவனை மாற்றியது. அங்கிருந்த பொருட்களைக் கிழித்து, உடைக்க ஆரம்பித்தான். மக்கள் அதனால் கடும் சீற்றம் கொண்டார்கள். பார்வையாளர் பகுதியிலிருந்து நிறைய ஆண்கள் அவர்களின் இருக்கையை விட்டுக் குதித்து அவனை நோக்கி வேகத்துடன் வந்து "அவனை கீழே தள்ளுங்கள். அவனை வெளியே எறியுங்கள்" என்று கத்தினார்கள்.

. ஒன்றிரண்டு பெண்கள் பயத்துடன் அலற ஆரம்பித்தார்கள். எனவே அந்த ரிங்மாஸ்டர் அப்படிப்பட்ட ரகளை அங்கே இனி இருக்காது என்று தான் நம்புவதாக ஒரு சிறிய உரையாற்றினான். அந்தக் குடிகாரனை எவ்வளவு நேரம் அவனால் முடியுமோ அவ்வளவு நேரம் குதிரைச் சவாரி செய்ய விட்டால் ஒரு தொந்தரவும் இருக்காது என்று கூறினான்.

அனைவரும் சிரித்தபடியே அதற்குச் சம்மதித்தார்கள். அந்த குடிகாரனும் குதிரையில் ஏறினான். அடுத்த கணமே இரண்டு சர்க்கஸ் ஆட்கள் குதிரையின் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்து குதிரையை நேராக நிறுத்தியிருந்தபோதும், அந்தக் குதிரை தன் உடலை உதறிக் கொண்டு எல்லா இடங்களுக்கும் குதித்தபடியே ஓடியது. அந்தக் குடிகாரன் குதிரையின் கழுத்தைக் கட்டிக்க கொண்டு தொங்கினான். ஒவ்வொரு முறை குதிரை குதிக்கும்போதும் அவனின் குதிகால்கள் காற்றில் பறந்தன. மொத்த பார்வையாளர் கூட்டமும் கண்களில் நீர் வரும்படியாக இந்தக் காட்சியைக் கண்டு கத்திச் சிரித்தது.

கடைசியாக, அந்த சர்க்கஸ் ஆட்களின் கடும் முயற்சியையும் தாண்டி, அந்த குதிரை தன்னை விடுவித்துக் கொண்டு கழுத்தைப் பிடித்து தொங்கி விழுந்து கிடந்த குடிகாரனைச் சுமந்துகொண்டு காட்சி நடக்கும் மைதானம் முழுதும் வேகமாக ஓடி வளையவந்தது. ஒரு புறம் குதிரை ஓடும்போது ஒரு கால் தரையில் உராய்ந்து கொண்டும், இன்னொரு புறம் போகும்போது இன்னொரு கால் உராய்ந்து கொண்டிருக்க என அவன் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தான்.

கூட்டம் வெறித்தனத்துடன் வேடிக்கை பார்த்தது. எனக்கு அது வேடிக்கையாகத் தெரியவில்லை. அவன் மிகப் பெரிய அபாயத்திலிருக்கிறான் என்று நான் பயந்தேன். விரைவிலேயே அவன் இப்படியும் அப்படியுமாக அசைந்து குதிரையின் சேணத்தின் மீது அமர்ந்து கடிவாளத்தைப் பிடித்து விட்டான். பின்னர் உடனடியாகக் குதித்து மேலே ஏறி நின்று கடிவாளத்தைக் கைவிட்டு, நெருப்பு பட்டவுடன் தப்பித்து ஓடுவது போல ஓடும் குதிரையின் பின்புறமாக நின்றான். ஏதோ அவனுக்கும் இந்த உலகுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவும், இதுவரை அவன் ஒரு முறை கூட மது குடித்ததே இல்லை என்பது போலவும் மிகவும் அசிரத்தையாக அங்கே நின்றான்.

கூட்டம் வெறித்தனத்துடன் வேடிக்கை பார்த்தது. எனக்கு அது வேடிக்கையாகத் தெரியவில்லை. அவன் மிகப் பெரிய அபாயத்திலிருக்கிறான் என்று நான் பயந்தேன். விரைவிலேயே அவன் இப்படியும் அப்படியுமாக அசைந்து குதிரையின் சேணத்தின் மீது அமர்ந்து கடிவாளத்தைப் பிடித்து விட்டான். பின்னர் உடனடியாகக் குதித்து மேலே ஏறி நின்று கடிவாளத்தைக் கைவிட்டு, நெருப்பு பட்டவுடன் தப்பித்து ஓடுவது போல ஓடும் குதிரையின் பின்புறமாக நின்றான். ஏதோ அவனுக்கும் இந்த உலகுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவும், இதுவரை அவன் ஒரு முறை கூட மது குடித்ததே இல்லை என்பது போலவும் மிகவும் அசிரத்தையாக அங்கே நின்றான்.

பின்னர் தனது ஆடைகளை ஒவ்வொன்றாகக் கிழித்தெறியத் தொடங்கினான். மிகவும் வேகமாக அவற்றை கிழித்து வீசியதால் அவை காற்றில் பறப்பதை நன்கு காண முடிந்தது. தன் மீதிருந்து மொத்தமாக பதினேழு மேல்சட்டைகளை கழற்றினான். கடைசியாக அப்போது அவன் மிகவும் பகட்டாகவும் ஆடம்பரமாகவும் இருந்த ஆடைகளில் நின்றிருந்தது நீங்கள் கண்டிராத ஒன்று. அந்தக் குதிரையை சவுக்காலடித்து இன்னும் வேகமாக ஓடச் செய்தான். பின்னர் குதிரையை விட்டு கீழே குதித்து, தலை குனிந்து வணங்கி, நடனம் ஆடிக் கொண்டே ஆடை மாற்றும் அறையை நோக்கிச் சென்றான். அங்கே விசில் சத்தமும் வியப்புடன் உரக்கச் சிரித்த ஓசையும், கரகோசமும் அந்த கூடாரத்தையே இரண்டாகப் பிளந்தது என்று கூறலாம்.

தான் முட்டாளாகிவிட்டோம் என்று உணர்ந்ததும் அந்த ரிங்மாஸ்டர் மிகவும் பரிதாபமாகக் காணப்பட்டார். தன்னுடைய குழுவைச் சார்ந்த சகாக்களாலேயே தான் ஏமாற்றப்பட்ட மிகவும் பரிதாபகரமான ரிங்மாஸ்டர் உலகிலேயே அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்தக் குடிகாரனாக நடித்தவன் அவனே இந்த சிரிப்புநிகழ்வை உருவாக்கி யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறான் போலும். எதுவாக இருப்பினும் நானும் முட்டாளாக்கப் பட்டதைப் போல் உணர்ந்தேன். ஆயிரம் டாலர்கள் பணம் எனக்கு கொடுத்தாலும் அந்த ரிங்மாஸ்டரின் இடத்தில் முட்டாள் போன்று நான் இருக்க விரும்பமாட்டேன். இதை விடச் சிறந்த சர்க்கஸ் ஊருக்குள் நிறைய இருக்கலாமோ என்னவோ, எனக்குத் தெரியாது. ஆனால் நான் இது போன்ற ஒன்றைக் கண்டதேயில்லை. என்னைப் பொறுத்தவரை இது மிகவும் அருமையான ஒன்றாக இருந்தது. திரும்பவும் இந்த சர்க்கஸ் வேறு எங்காவது போட்டிருப்பார்களானால், கண்டிப்பாக என்னுடைய காசு அவர்களின் தொழிலுக்குச் சேரும் என்று மனமுவந்து உறுதி அளிக்கிறேன்.

அன்றிரவு எங்களின் நாடகத்தை அரங்கேற்றினோம். அங்கே பன்னிரண்டு பார்வையாளர்கள் மட்டுமே இருந்தனர். எங்களின் நாடகக்கொட்டகைச் செலவுகளைச் சமாளிக்க அவர்களின் காசு போதுமானதாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஒவ்வொரு காட்சியிலும் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது பிரபுவுக்கு ஆனந்தத்தை அளித்துவிட்டது. அந்த பன்னிரண்டு பேர் கொண்ட மொத்தக் கூட்டமும் காட்சி முடியுமுன்னே வெளியில் சென்று விட்டார்கள். அவர்களில் ஒரு சிறுவன் மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

ஷேக்ஸ்பியரை ரசிக்கும் அளவு இந்த ஆர்கன்சாஸ் மரமண்டைகளுக்கு ஞானம் போதாது என்று பிரபு கூறினார். அவர்கள் எந்த மாதிரி ஆட்கள் என்று தனக்குப் புரிந்து விட்டது என்றார். அவர்கள் விரும்புவது மட்டரகமான நகைச்சுவை நாடகங்கள் அல்லது அதற்கும் கேவலமான விஷயங்களையே என்றும் கூறினார். எனவே அடுத்த நாள் காலை, சில தாள்களை எடுத்து கருப்பு நிறச்சாயம் எடுத்து சில கையேடுகளை வரைய ஆரம்பித்தார். அவற்றை அந்த ஊர் முழுதும் சுவர்களில் ஒட்டவைத்தார். அந்த கையேடுகள் கூறியதாவது:

வழக்காடு மன்ற அரங்கத்தில் மூன்று இரவு மட்டுமே

உலகப் புகழ் பெற்ற சோக காவிய நடிகர்கள்

லண்டன் மற்றும் காண்டினென்டல்

நாடகக் கொட்டகையைச் சார்ந்த

இளம் டேவிட் கேரிக் மற்றும்

முதிய எட்மண்ட் கீன்

அவர்களின் சிலிர்க்க வைக்கும் சோக காவியமான

ராஜாவின் ஒட்டகம் - சிறுத்தை

அல்லது

ஒன்றுமில்லாத அரசு !!!!

அனுமதி 50 சென்ட்டுகள்

கடைசியாக பெரிய எழுத்துக்களால் கொட்டையாக இவ்வாறு காணப்பட்டது.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அனுமதி கிடையாது.

"இப்போது பார்" அவர் சொன்னார் "இந்தக் கடைசி வரி நாடகக்கொட்டகைக்குள் அவர்களைக் கொண்டு வந்து சேர்க்கவில்லையென்றால், எனக்கு ஆர்கன்சாஸ் பற்றி எதுவும் தெரியாது என்று மண்டியிட்டு ஒப்புக் கொள்கிறேன்."

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.