- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணி- குறிப்பு: ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களின் அடிமைக் கதைகூற்றுகள் (Slave Narratives) அமெரிக்காவின் சரித்திரத்தில் அடிமைகள் அனுபவித்த பல கொடுமைகளை அடிமைகளாக இருந்தவர்கள் வாயிலாகவே விளக்கும் ஒரு வகை இலக்கியம். தற்போது அடிமைத்தனம் என்பது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டாலும், தற்போதைய ஆப்ரிக்க -அமெரிக்க எழுத்தாளர்கள் மனதிலும் அவர்களின் முன்னோர்கள் மனதிலும் உடலிலும் பட்ட காயங்களின் வடுக்கள் மிச்சம் இருக்கத்தான் செய்கிறது.

இந்தச் சிறுகதையும் அடிமைத்தனத்தின் ஒரு கொடூர முகத்தை விளக்கும் விதமாக இருந்தாலும், இதன் ஆசிரியர் மார்க் ட்வைன் கறுப்பினத்தவர் அல்லர். அவர் ஒரு அமெரிக்கர் . எனினும், இக்கதையில் அவர் ஒரு பாத்திரமாகவே மாறி (மிஸ்டோ சி) தன் வீட்டின் கறுப்பின மூதாட்டிப் பணிப்பெண்ணின் கதையைக் கேட்டு தான் அதை வார்த்தைக்கு வார்த்தை விவரிப்பதாக தலைப்பிலேயே குறிப்பிடுகிறார். மேலும், கதை முழுதும் ஆசிரியர் மார்க் ட்வைன் ஆப்ரிக்க -அமெரிக்கர்கள் (கறுப்பினத்தவர்) பயன்படுத்தும் பேச்சு வழக்கு வகையை சிறப்பாக பயன்படுத்தி உள்ளது இந்தக் கதையின் தனித்தன்மை

இந்த சிறுகதை பல கல்லூரிகளில் பாடபுத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கதையை வகுப்பில் எடுக்கும்போது மட்டும் கண்டிப்பாக என் கண்களில் தூசு விழுந்து விடும். கண்ணீர் சொரியும். ஒரு ஆசிரியராக, ஒரு மனுஷியாக என்னை மிகவும் பாதித்த கதை. மொழிபெயர்த்தல் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம்
. -


அது ஒரு கோடைகால அந்திவேளை. நாங்கள் அனைவரும் மலையின் உச்சியில் அமைந்திருக்கும் எங்களின் பண்ணைவீட்டின் முகப்பு வாயிலில் அமர்ந்திருந்தோம். நாங்கள் அத்தை என அன்புடன் அழைக்கும் எங்களின் பணிப்பெண்ணான ரேச்சல் கறுப்பினத்தவர் மற்றும் பணிப்பெண் என்ற காரணத்தினால் நாங்கள் அமர்ந்திருந்த முகப்புப்படிகளில் ஒருபடி கீழ் இறங்கி மிகவும் பவ்யமாக அமர்ந்திருந்தார். மிகவும் வலிமையான உடலும் , எடுப்பான தோற்றமும் கொண்டவர் அவர். அறுபது வயதாகி இருப்பினும் அவரது கண்களில் உள்ள ஒளி சிறிதும் குன்றாமலும், மன உறுதி குறையாதவராகவும் என்றுமே காணப்படுவார். மனநிறைவோடு கூடிய உற்சாகம் ததும்பி வழியும் மனுஷியான அவருக்கு சிரிப்பு என்பது ஒரு பறவை கீதம் இசைப்பதைப்போன்றே மிகவும் இலகுவான விஷயம்.

எப்போதும் போலவே அன்றைய நாளின் முடிவில் எங்களின் வார்த்தைத் தாக்குதலுக்கு ஆளாகி அன்றும் அமர்ந்திருந்தார். அதாவது எங்களின் கொஞ்சம் கூட கருணை காட்டாத விளையாட்டுத்தனமான கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகினாலும், அதை மிகவும் இலகுவாக எடுத்துக்கொண்டு ரசித்தவாறே இருந்தார். சுவாசத்திற்க்கான காற்றைக் கூட தொடர்ந்து வெளியிட இயலாத அளவுக்கு, உரத்த சிரிப்பொலியை தொடர்ந்து அலை அலையாய் எழுப்பிய அவர், அந்த இன்ப அதிர்வலை கொடுத்த அசைவின் காரணாமாக தனது முகத்தை இரு கரங்களிலும் தாங்கியவாறே அமர்ந்திருந்தார். அவ்வாறான ஒரு தருணத்தில் என் மனதில் திடீரென உதித்தது அந்த எண்ணம். நான் கூறினேன்:

"ரேச்சல் அத்தை! அறுபது வருட கால உங்கள் வாழ்வில் எவ்வித துயரையும் நீங்கள் எதிர்கொள்ளவே இல்லையா?"

அக்கணமே சிரிப்பலையின் அதிர்வை சடாரென நிறுத்தினார். ஏனோ சிறிது தயங்கினார். அங்கே மெல்லியதாய் ஒரு மௌனம் தேவையற்று நிலவியது. தன் தோள்பட்டையின் மேலாக தனது முகத்தைத் திருப்பி, என் பக்கம் நோக்கி குரலில் சிறிதளவு சிரிப்பு கூடதென்படாமல் கூறினார்:

"மிஸ்டோ சி! (Mister C) உண்மையாகவே அது பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்கிறீர்களா?"

அவரின் கேள்வி என்னை அதிக வியப்பிலாழ்த்தியது. அது எனது பேச்சையும், செயல்பாங்கையும் கூட நிதானப்படுத்தியது.. நான் கூறினேன்:

"ஏன் --- நான் நினைத்தது --அதாவது நான் சொல்ல வந்தது ----ஏன் உங்கள் வாழ்வில் எந்தத் துயரையும் நீங்கள் எதிர்கொள்ள நேரவில்லை. என்று? நீங்கள் இதுவரை எந்த ஏக்கத்தை வெளிப்படுத்தியும் நான் ஒருபோதும் கண்டதில்லை. அத்துடன், உங்கள் கண்களில் சிரிப்பில்லாது இருந்ததையும் நான் இதுவரை பார்த்ததே இல்லை."

அத்தை ரேச்சல் ஏதோ முடிவு செய்தவர் போல, தன்னைச் சுற்றியுள்ளவர்களை மிகவும் நன்முறையில் எதிர்கொண்டு நோக்கினார். அதில் மெய்யுறுதி மேலோங்கி இருந்தது.

"நான் என் வாழ்வில் எவ்வித துயரையும் எதிர்கொள்ளாதவளா? மிஸ்டோ சி! நான் இப்போது என் கதையை உங்களிடம் கூறப் போகிறேன். பின் அதனை உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

நான் பிறக்கும் போது ஓர் கறுப்பின அடிமையாகத்தான் கறுப்பின அடிமைக் குடும்பத்தில் பிறந்து அடிமையாகவே வளர்ந்தேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என்னைச்சுற்றி நான் கண்டது எல்லாமே அடிமைத்தனம் மட்டும்தான்.. ஏனெனில் அமெரிக்காவில் அடிமைகளாய் வாழ்ந்து பாழ்பட்டுக் கிடந்த பல குடும்பங்களில் நானும் ஒருத்தி அது ஒருபுறம் இருக்கட்டும்.

எனது கிழவன் அதாவது எனது கணவன் அமெரிக்கர்களாகிய நீங்கள், எப்படி உங்களின் மனைவிகளிடம் தீராக் காதல் கொண்டுள்ளீர்களோ, அது போன்றே என்னிடம் மிகுந்த பிரியமும் அன்பும் கொண்டிருந்தான். எங்களுக்கு குழந்தைகள் ஒன்றல்ல இரண்டல்ல, ஏழு. . நீங்கள் எவ்வாறு உங்கள் குழந்தைகளின் மீது அளவற்ற பாசத்தைக் காட்டுவீர்களோ அதே போன்றுதான் நாங்கள் எங்கள் குழந்தைகளை கண்ணுக்கு கண்ணாக காத்து அன்பு காட்டினோம்.

உலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே) - ஆங்கிலத்தில்: மார்க் ட்வைன்; தமிழில்: - முனைவர் ஆர். தாரணி -  - குறிப்பு: ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களின் அடிமைக் கதைகூற்றுக்கள் (Slave Narratives) அமெரிக்காவின் சரித்திரதஎங்கள் குழந்தைகள் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கருப்புதான். கடவுளின் படைப்பில் கருப்பு சிவப்பு பேதம் இல்லை என்பதையும் விட, ஒரு தாய்க்கு அவர்களை கருப்பு என என்றும் புறந்தள்ளவே இயலாது.. இல்லை. இல்லவே இல்லை. உலகத்தின் எந்தப் பொருளுக்காகவும், லாபத்திற்காகவும் அவர்களை ஒதுக்கித்தள்ளவே முடியாது. அவர்கள் என் கண்ணின் மணிகள்

நான் பிறந்து வளர்ந்தது வர்ஜினியா மாகாணத்தில். ஆனால் என் தாய் வளர்ந்தது மேரிலாண்ட் மாகாணத்தில். ஐயோ அம்மாடி! அவர் கோபமாக பேச ஆரம்பித்தால் தோற்றமும், தொனியும் பயங்கரமாக இருக்கும்.. தவறுகள் செய்பவர் யாராக இருந்தாலும் கடுமையான சொற்களுடன் கூச்சலிடுவார். கட்டுக்கடங்காத ஆத்திரம் அவருக்கு வந்து விட்டால் அவர் ஒரு குறிப்பிட்ட வார்த்தை பிரயோகத்தை தவறாமல் பிரயோகிப்பார்.

நன்கு கம்பீரமாக நிமிர்ந்து நின்று கொண்டு, கை முஷ்டிகளை நன்கு இறுக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு கூறுவார், " நான் ஒன்றும் உங்களைப் போன்ற கேடுகெட்ட அறிவிலிகளால் உதாசீனப்படுத்தப்படுவதற்கு பிறந்தவள் அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். நான் நீல கோழியின் (மேரிலாண்டின் கிழக்கே உள்ள டெலவார் (Delaware) நகரம் நீலக்கோழி என்ற பட்டப்பெயருடன் குறிக்கப்படுவதுடன், அந்த நகரத்தில் வசிப்பவர்கள் உள்நாட்டுக் கலகத்தில் புரட்சி செய்த வீரர்கள்) வீரப்பிள்ளைகளுள் ஒருத்தி" மேரிலாண்டில் பிறந்தவர்கள் தங்களை மிகவும் பெருமையுடன் அவ்வாறு குறிப்பிட்டுக்கொள்வது வழக்கம் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அது என் தாயின் தாரக மந்திரம். பலமுறைகள் அதை அவர் கூறியதால் அதை என்றுமே என் நினைவை விட்டு அகலவே இல்லை. அகற்றவும் முடியாதபடி போனதற்கு ஒரு தகுந்த காரணமும் உண்டு. ஒரு நாள் எனது ஏழாவது குட்டிப்பையன் ஹென்றி மிக மோசமாக மணிக்கட்டை உடைத்து, தலையில், நெற்றியின் முன்புறம் அடிபட்டு இருந்தபோது சுற்றி இருந்த கறுப்பினத்தவர் உடனடியாக அவனுக்கு சிகிச்சை செய்ய முன் வராததுடன், கேள்வி கேட்ட என் தாயை ஏளனம் செய்யும் விதமாக அவர்கள் எதிர்பேச்சு பேசிய சமயத்தில், என் தாய் வெகுண்டெழுந்து, ஏய்! நன்றாக கேள். நான் குப்பைக்கு சமமான, கேடுகெட்ட அறிவிலிகளால் உதாசீனப்படுத்தப்படுவதற்கு பிறந்தவள் அல்ல என்பதை நீக்ரோ முட்டாள்களே புரிந்து கொள்ளுங்கள். நான் நீலக் கோழியின் வீரப் பிள்ளைகளுள் ஒருத்தி என்பதை நினைவில் வையுங்கள்” என்று சீறினார்.

பின் சமையலறையில் உள்ள பாண்டேஜ் துணியால் குழந்தை ஹென்றிக்கு அவரே முதல்உதவி செய்து கட்டுப் போட்டார். அன்றிலிருந்து என் அம்மாவின் அந்த பிரபலமான வார்த்தைக் கோர்வைகளை நானும் என் கோபமான சமயங்களில் பிரயோகிப்பதுண்டு. அதற்காக நான் பலரின் கேலிக்கும் ஆளாகி இருக்கிறேன்..

சரி! சரி! என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ஆங்! இப்படியே பல காலம் கழிந்த பின், நான் வேலை செய்து வந்த பழைய முதலாளியம்மா வேறு இடம் செல்வதால் அவரிடம் வேலை பார்த்து வந்த நான் உள்பட்ட பல நீக்ரோக்களை அந்த இடத்திலேயே விற்பதாக முடிவு செய்தார். எங்களை விற்பதாக அவர் முடிவு செய்தது எனக்கு தெரிய வந்தபோது, கடவுளே! நான் பட்ட கொடுந்துயர் யார்தான் அறிவார்? அது எவ்வளவு கொடுமை என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

கதையின் இந்த சமயத்தில் ரேச்சல் அத்தை, தனது வாழ்வின் கதை சூடு பிடிக்க ஆரம்பித்ததை உணர்த்தும் விதமாக படிப்படியாக எழும்பி நிற்க முற்பட்டு இப்போது இதோ எங்களின் முன் ஓங்கி உயர்ந்த கருத்த கோபுரம் போன்றே நட்சத்திரங்களின் பின்னணியில் தென்பட்டார்..

"எங்களை இரும்பிச் சங்கிலியால் பிணைத்து, இதோ இந்த முகப்பு மண்டபம் போன்றே உயர்ந்த மேடை கொண்ட - இருபது அடி உயரம் கொண்ட பொது இடத்தில் கடல் போன்ற கூட்டம் எங்களை சூழ்ந்திருக்க, மக்கள் எங்களை வேடிக்கை பார்க்கும் விதமாக நிற்க வைத்தார்கள். எங்களை வாங்க விரும்பும் பணக்கார அமெரிக்க முதலாளிகள் கூட்டத்தில் இருந்து ஒருவர் பின் ஒருவராக நெருங்கி வந்து காட்சிப்பொருள் போல் எங்களை சுற்றி வந்து பார்த்து, கைகளின் தன்மையை பரிசோதிக்க அவற்றை அழுத்திப் பார்த்து, எங்களை நடக்கச்சொல்லி பரிசோதித்து பின் "இது ரொம்ப கிழடு, இது ஒரு நொண்டி, இது ஒன்னும் வேலைக்காகாது என்றெல்லாம் விமர்சனம் செய்து விலங்குகளைப் போல் எங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த சோதனையின் முடிவில் எப்படியோ எனது கிழட்டுக் கணவன் விலை போய் விட்டான்.

அவனை என்னிடம் இருந்து பிரித்துக் கொண்டு சென்றார்கள். அடுத்து அடுத்து என்னுடைய ஒவ்வொரு குழந்தையையும் ஒவ்வொரு முதலாளி பணம் கொடுத்து வாங்கி அடிமை வேலை செய்வதற்காக என்னிடம் இருந்து பிரித்து எடுத்துக் கொண்டு சென்றார்கள். நான் உடைந்து அழுது புலம்ப ஆரம்பித்தேன். "வாயை மூடி உன் புலம்பலை நிறுத்து" என்று ஆத்திரத்தில் கத்தியபடியே அந்த முதாளிகளில் ஒருவன் தனது கையால் எனது வாயில் கடுமையான அடி கொடுத்தான்.

இப்படியே அனைவரும் என்னை விட்டு போன பிறகு, என்னிடம் மீதம் இருந்தது எனது கடைக்குட்டி ஹென்றி மட்டுமே. பயத்தில் அவனை நான் எனது மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டேன். அதே சமயம் கடும் உத்வேகத்துடன் எழுந்து நின்று, "யாரும் இவனை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது. இவன் மேல் கைவைக்கும் எவனையும் நான் பரலோகம் அனுப்புவேன்" என்று கூக்குரல் எழுப்பினேன். ஆனால் எனது அணைப்பில் இருந்த எனது குழந்தை ஹென்றி எனது காதில் மென்மையாக கிசுகிசுத்தான், "அம்மா! இவர்கள் என்னைக் கொண்டு போனாலும், இவர்களிடம் இருந்து எப்படியாவது தப்பித்து ஓடி சுதந்திரம் பெற்று கடுமையாக உழைத்து உனக்கும் சுதந்திரம் வாங்கித் தருவேன் அம்மா! கவலைப்படாதே!” என்று. ஓ! கடவுளே! என் குழந்தையை காப்பாற்று. எத்தனை நல்ல குழந்தை எனது ஹென்றி!

ஆயினும் என் குழந்தையை அவர்கள் விலைக்கு வாங்கி என்னிடம் இருந்து அவனை பிரிக்க முற்பட்டார்கள். வெறி கொண்டு சீறி எழுந்து அந்த மனிதர்களின் சட்டைகளை கிழித்து எறிந்து என்னைப்பிணைத்திருந்த இரும்புச் சங்கிலிகள் கொண்டே அவர்களின் மண்டையை சரமாரியாக தாக்க முற்பட்டேன். அவர்களும் என்னை இருமடங்கு கடுமையாக தாக்கி வீழ்த்தினார்கள். அதைக் கூட நான் பொருட்படுத்தவில்லை. கடைசியில், எனது ஹென்றியை என்னிடம் இருந்து பிரித்து எடுத்துச் சென்று விட்டார்கள்.

ம்ம்ம் ..... இப்படியாக எனது கிழவன், எனது குழந்தைகள் ஏழு குழந்தைகளும் ஒவ்வொன்றாக அடிமை வாழ்வுக்கு விலை போனார்கள். அவர்களில், ஆறு குழந்தைகளை கடந்த வருட ஈஸ்டர் நாளோடு ஆகும் 22 ஆண்டுகால என் வாழ்வில் மீண்டும் நான் சந்திக்கவே இல்லை.

என்னை விலைக்கு வாங்கிய எனது முதலாளி வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள நியூ பெர்ன் (New Bern) என்ற இடத்துக்கு வேலைக்கு அழைத்துச்சென்றார். அங்கே அடிமையாக என் பணியைத் தொடர்ந்தேன். இப்படியாக காலம் உருண்டோடியது. கறுப்பின அடிமைத்தனத்தை எதிர்த்து உள்நாட்டுப்புரட்சியும் வந்தது. அந்த சமயத்தில் எனது முதலாளி கூட்டமைப்புகளின் கர்னல் என்ற பதவியில் இருந்தார். நான் அவர்கள் வீட்டுத்தலைமைச்சமையல்காரியாக இருந்தேன்.

அப்போது நடந்த உள்நாட்டு புரட்சியில் கறுப்பின மக்களின் யூனியன் நாங்கள் இருந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட, நான் வேலை பார்த்துவந்த வீட்டின் அமெரிக்க குடும்பத்தினர் அனைவரும் பயந்து வீட்டையும், என்னைப் போன்றே அங்கே இருந்த மற்ற நீக்ரோ பணியாளர்களையும் அத்துணை பெரிய வீட்டில் அப்படியே விட்டு விட்டு தப்பித்து ஓடிவிட்டனர். எனவே காலியாக இருந்த அந்த மாளிகை போன்ற வீட்டில் புரட்சியில் வென்ற கறுப்பின யூனியன் தலைவர்கள் வந்து வசிக்க ஆரம்பித்ததுடன் என்னிடம் “நீயே எங்களுக்கு தலைமை சமையல்காரியாக இருக்கமுடியுமா” என்று கேட்டுக் கொண்டனர். "கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். அதற்குத்தானே நான் இருக்கிறேன் அதுதானே என் வேலை" மகிழ்வுடன் கூறினேன் நான்.

அவர்கள் ஒன்றும் ஏதோ முக்கியத்துவம் இல்லாத கடைநிலை அதிகாரிகள் என்று நினைத்துவிட வேண்டாம். அவர்கள் அனைவருமே ஒன்றுக்கொன்று சளைக்காத திறமை வாய்ந்த அதிகாரிகள்தான். நான் இருந்த அந்த வீட்டில் எப்போதும் யூனியன் வீரர்கள் வந்து தங்குவது, திரும்பிப் போவது என பரபரப்பாகவே இருக்கும். அந்த வீட்டின் சமையலறைப் பொறுப்பு முழுதும் என்னிடம் ஒப்படைத்த ராணுவ ஜெனரல் நானே சமையலறையின் முதலாளி எனவும், வேறு யாரும், வீரர்கள் உள்பட சமையலறையில் வந்து தலையீடு செய்தால் வெளுத்து வாங்கிவிடும்படியும், எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்று கூறி எனக்கு முழு அதிகாரம் கொடுத்தார். “நீங்கள் இப்போது எங்களது தோழர்” என்றும் உறுதி கூறினார்.

ம்ம்ம்..... எனக்கு நானே யோசித்துக் கொள்வேன். எனது குட்டிப்பையன் ஹென்றி மற்றும் எப்படியாவது தப்பித்து ஓடி அமெரிக்காவின் வடக்குப்பகுதி சென்று இருந்திருப்பானேயானால் அவனும் இப்போது இவர்களைப்போல பெரிய அதிகாரிகளில் ஒருவனாக இந்த வீட்டின் முன்னறையில் நான் தலை குனிந்து மரியாதை செலுத்தும் விதமாக இருந்திருப்பானோ, என்னவோ? இந்த எண்ணத்திலேயே நான் அந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் எனது ஹென்றி பற்றி கூறி விசாரித்தேன். அவர்களும் என்னிடம் மற்ற வெள்ளைக்கார அமெரிக்கர்களிடம் கதை கேட்பது போலவே மேலோட்டமாக கேட்டுக் கொண்டார்கள்.

நான் ஏன் இங்கு உள்ளேன் என்றால் எனது மகன் ஹென்றி என்னிடம் கூறியது போல் தப்பித்துப் போய், புரட்சி தோன்றிய வடக்கு அமெரிக்காவில் எங்கே இருந்து நீங்கள் அனைவரும் வந்துள்ளீர்களோ அந்த இடத்தில் அவனும் வந்து சேர்ந்திருக்கலாம் இல்லையா? உங்களில் யாரேனும் அவனை பார்த்திருக்கக் கூடும் அல்லவா? அப்படி அவனை நீங்கள் யாரேனும் கண்டிருந்தால், அவனைப் பற்றி எனக்கு நீங்கள் எனக்கு தகவல் தெரிவித்தால், நானும் அவனை கண்டுபிடிக்க முடியும் அல்லவா? அவன் என்னை விட்டு சென்றபோது மிகவும் சிறு குழந்தை. அவன் இடது மணிக்கட்டிலும், முன் நெற்றியிலும் ஆழமான வடுக்கள் உள்ளது. அதுவே அவனின் அடையாளம்.

நான் சொன்னதை செவி மடுத்த அவர்கள் அனைவரும் இப்படி ஒரு மனிதனைக் கண்டதில்லையே என வருத்தத்துடன் தெரிவித்தார்கள். நான் ஹென்றியை பார்த்து எத்தனை வருடங்கள் இருக்கும் என ராணுவ ஜெனரல் வினவினார். 13 வருடங்கள் என்று நான் உரைத்ததும் "ஓ. அவர் இன்னும் குழந்தையாக இருக்க மாட்டார். அவர் ஒரு மனிதன் இப்போது” என்றார்

எனக்கு ஏன் இந்த விஷயம் மனதில் தோன்றவில்லை? அவன் இன்னும் சுட்டித்தனம் செய்யும் குட்டிக்குழந்தை என்றே நான் எண்ணிக்கொண்டு இருக்கிறேனே. அவன் எனக்கு எப்போதுமே அப்படித்தானே! அவன் வளர்ந்த ஒரு ஆண்மகன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லையே. இப்போது தான் எனது மனதில் உறைக்கிறது. என்னாலும் அவனை அடையாளம் காண முடியாது. மேன்மைமிகு வீரர்கள், அதிகாரிகள் என யாருமே அவனை தங்கள் வாழ்வில் சந்திக்கவில்லை போலும். எனவே, அவர்கள் யாராலும் எனக்கு உதவி செய்ய இயலாது என்பது விளங்கியதும் என மனம் கனத்தது.

ஆனால் எனக்கு எப்படித் தெரியும் நான் அவனை தேடிக்கொண்டிருந்த காலங்களில் என் அன்பு மகனும் என்னைத் தேடி அலைந்து திரிந்திருக்கிறான் என்று? எனது ஹென்றி அவன் கூறியது போலவே வடக்கு நோக்கி ஓடி காலங்காலமாய் திரிந்து வயிற்றுப்பிழைப்புக்காக நாவிதராக பணி புரிந்து, தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டே தன் தாயை தேடி ஒரு நாள் காணவேண்டும் என்ற அடங்காத ஆவலுடன் அயராது பாடுபட்டு இருந்துள்ளான் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் தாய் பிழைத்திருக்கும் பட்சத்தில், நான் அவர்களை கண்டு பிடிப்பேன் என்ற சபதம் கொண்டு நாவிதர் வேலையை துறந்து புரட்சிக்கு ஆள் சேர்க்கும் கர்னலிடம் வேலைக்காரனாய் பணியில் அமர்ந்து கொண்டு, அதன் மூலம் கர்னல் செல்லும் அனைத்து போர்க் களத்திற்கும் அவரின் விசுவாச வேலைக்காரனாக கூடவே சென்று ஊர் ஊராக அலைந்து திரிந்து, தன் தாயைக் கண்டுபிடிக்கும் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, பலப் பல அதிகாரிகளிடம் பணிக்கு அமர்ந்து அதன் மூலம் அவர்களுடன் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று இண்டு இடுக்கு விடாமல் துருவித் துருவி என்னை அவன் தேடியது எனக்கு எப்படி தெரிந்திருக்கக் கூடும் ? எனக்கு அது பற்றி இம்மியளவு கூட அப்போது தெரியாது.

நான் என் மகனை எனக்கு தெரிந்த வரையில் விசாரித்துக் கொண்டிருக்க, என் மகனோ எனக்காக வலை வீசி தேடிக் கொண்டிருந்த அந்த அக்காலகட்டத்தில், ஒரு நாள் இரவு நான் இருந்த வீட்டில், அனைத்து படை வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் என இரவு விருந்து பிரம்மாண்டமாய் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நியூ பெர்னில் விருந்துகள், கேளிக்கைகள் என்று எப்போதும் அமர்க்களப்படும்தான்.

அவ்வாறு கேளிக்கைவிருந்து நடக்கும் சமயம் சாதாரண படைவீரர்கள், அளவில் மிகப் பெரியதாய் இருக்கும் எனது அதிகாரத்திற்குட்பட்ட சமையல் அறையில் ,அடிக்கடி நுழைந்து கூத்து அடிப்பதுண்டு. ஆனால் தெரிந்து கொள்ளுங்கள். நான் அவ்வாறான கீழ்மட்ட வீரர்களின் தேவையற்ற கேளிக்கைகளை என்றுமே அனுமதிக்காதவள். ஏனெனில் அங்கே மிகச் சிறந்த உயர் மட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வதால், அந்த இடம் ஒழுங்குடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் நான்.

அவ்வாறான சமயத்தில் என் இடமான சமையல் அறையில் இந்த அமெச்சூர் வீரர்கள் குதித்தும், பாடியும் ஆடியும் கும்மாளம் இடுவது எனக்கு கடும் எரிச்சலை உண்டாக்கும். நான் அங்கே நின்று அவர்கள் கலைத்துப் போடும் பொருட்களை, குப்பைகளை மற்ற வேலையாட்கள் கொண்டு ஒழுங்கு படுத்தி வைப்பேன். சில சமயங்களில் அவர்கள் வரம்பு மீறி பொருட்களை சிந்தி சிதறி நாசம் செய்யும் போது கடுஞ்சினம் கொண்டு அந்த வீரர்களிடமே அதிகாரம் செய்து அவர்களையே அந்த அறையை ஒழுங்கு படுத்தும்படி கட்டளை இடுவேன். தெரிந்து கொள்ளுங்கள்.. நான் என்ன ஊருக்கு இளைத்தவளா?

கதை இப்படியிருக்க, ஒரு வெள்ளிக்கிழமை இரவு, பெரிய பட்டாளமாக கறுப்பின படை வீரர்கள் அந்த வீட்டுக்கு இரவு தங்கி காலையில் பயணம் தொடர வந்து சேர்ந்தார்கள். அந்த வீடுதான் அந்த படை வீரர்களின் தலைமை செயலகம். எனக்கு மிகுந்த பரபரப்பாகவே இருந்தது. அனைவருக்கும் இரவு விருந்துக்கான உணவு தயார் செய்தலில் மிகுந்த மும்முரமாக இங்கும் அங்குமாக நிற்கக் கூட நேரம் இல்லாது அலைந்து கொண்டிருந்தேன். அந்த விருந்தில் வால்ட்ஸ் (Waltz) எனப்படும் ஆணும் பெண்ணும் இணைந்து சுழன்று சுழன்று ஆடும் நடனத்தை அந்த வீரர்கள் ஆடிக் களித்துக் கொண்டிருந்தனர்.

. உண்மையில் அது கண்ணுக்கும் மனதிற்கும் சிறந்த விருந்தாகவே இருந்தது. எனக்குதான் வெகு விரைவில் முடிக்க வேண்டிய கடமைகளால் அதிகப்படியான வேலைப்பளு இருந்த காரணத்தினால் நின்று நிதானமாக ரசிக்க இயலவில்லை. ஆயினும் நான் பார்த்த ஒரு நடனத்தில் மிக நேர்த்தியாகவும் சுத்தமாகவும் உடை அணிந்திருந்த ஒரு இளம் கறுப்பின வீரன் இளம் மஞ்சள் நிறத்தில் இருந்த ஒரு யுவதியுடன் இடுப்போடு சேர்த்து அணைத்தவாறு சுழன்று சுழன்று நடனம் ஆடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த இடத்தில் இருந்த அனைவரின் கண்களும் அவர்கள் மேல் பதியும் அளவு நடனத்தை ரசித்து ஆடிக்கொண்டிருந்தார்கள்.

அவ்வாறு அவர்கள் ஆடியபடியே நான் நின்றிருந்த இடத்தை கடக்க சரிசமான நிலையில் முதலில் ஒரு காலும் பிறகு அடுத்த கால் என ஊன்றிக்கொண்டே நகர முற்பட்டபோது அவர்கள் பார்வையில் நானும், என் தலையில் கட்டி இருந்த சிவப்பு தலைப்பாகையும் விழ, ஒரு விநோதப் பார்வையுடன் கேலி சிரிப்பும் என் மீது வீசினார்கள். அவர்களின் எளிய நகையாடுஞ்செயல் என்னுள் கடும் சினத்தை மூட்ட, "வேலையை பார்த்துக் கொண்டு செல் முட்டாள்! என்று நிந்தித்தேன். இதைக் கேட்டவுடன், கணப்பொழுதில், நடனம் ஆடிக் கொண்டிருந்த அந்த கறுப்பின இளைஞனின் முகபாவம் மாறியது. ஒரு நொடி மட்டும் தான். பின் சிரித்தபடியே சமாளித்துக்கொண்டு முன்பு இருந்தபடியே நடனத்தைத் தொடர்ந்தான்.

அதே சமயம் இன்னும் சில வீரர்கள் தங்களின் வீரப்பிரதாபங்களை பிதற்றியவாறே அந்த இடத்தில் தேவையற்ற கேலிகள் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் என்னைக் கண்டவுடன் ஏளனம் செய்ய வேண்டும் என்று தோன்றி இருக்க வேண்டும். எனது உருவத்தையும் எனது தலையில் உள்ள தலைப்பாகையும் கண்டு நகையாடினார்கள். எனது பொறுமை எல்லை மீறியது. எனது கண்கள் கோபக்கனலில் ஜொலித்தது. எனது இரு கை முஷ்டிகளையும் இறுக்கிப் பிடித்து இடுப்பில் கெட்டியாக வைத்து நேராக நின்று " ஏய்! நன்றாக கேள். நான் குப்பைக்கு சமமான, கேடுகெட்ட அறிவிலிகளால் உதாசீனப்படுத்தப்படுவதற்கு பிறந்தவள் அல்ல என்பதை நீக்ரோ முட்டாள்களே புரிந்து கொள்ளுங்கள். நான் நீலக் கோழியின் வீரப் பிள்ளைகளுள் ஒருத்தி என்பதை நினைவில் வையுங்கள்” என்று உரத்த குரலில் சீறினேன்.

அந்த சமயம் நடனமாடிக்கொண்டிருந்த கறுப்பின இளைஞன் என்னை உற்று நோக்குவதையும், எதையோ மறந்து போன விஷயம் நினைவுக்கு வராதது போன்றதொரு அவஸ்தையில் கூரையை நோக்கி வெறிப்பதையும் நான் கண்டேன். அது ஒரு புறம் இருக்க, நான் போட்ட கூக்குரலில் நீக்ரோ வீரர்கள் பேசாமல் ஒதுங்கி சென்று விட, நான் எனது வேலையை கவனிக்க திரும்பினேன். அந்த சமயம் அந்த இளைஞன் தனது நண்பனான இன்னொரு கறுப்பின இளைஞனிடம் " ஜிம்! நீ சென்று நமது கேப்டனிடம் கூறு. நாளை காலை எட்டு மணிக்குள் நான் வந்து உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன் என்று. எனது மனதில் ஏதோ ஒரு விஷயம் எனக்குத் தோன்றுகிறது, இன்று இரவு முழுதும் எனக்கு உறக்கம் வராது. என்னை இங்கே விட்டுவிட்டு நீ மட்டும் சென்று இந்தச் செய்தியை கூறிவிடு" என்று சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டேன்.

இந்த சம்பவம் நடந்தபோது அதிகாலை ஒரு மணி. அதே காலை ஏழு மணி அளவில், மீண்டும் பரபப்பாக நான் அந்த அதிகாரிகளுக்கு காலை உணவு தயாரிப்பதில் சுறுசுறுப்பாக இருந்தேன். அடுப்பை நோக்கி குனிந்து, அடுப்பு உங்கள் காலருகில் இருந்தால் எவ்வளவு வளைவீர்களோ அந்த அளவு குனிந்து, ஸ்டவ்வில் வெந்து கொண்டிருந்த சூடான பிஸ்கட்டுகள் உள்ள பெரிய தாம்பாளத்தை வலது கையால் எடுத்து மீண்டும் ஸ்டவ்வை மூடி வைத்து, கையில் உள்ள பிஸ்கட்டுகள் அடங்கிய தாம்பாளத்துடன் நிமிர முற்படும் கணத்தில் ஒரு கருப்பு முகம் என் முகத்தை நோக்கி கீழே இருந்து வருவது கண்டேன். அந்த கருப்பு முகத்தின் கண்கள் என் கண்களை இமையாமல் நோக்கின. நானும் அந்தக் கண்களைப் பார்த்த ஒரு நொடியில் எனக்கு ஏதோ சடாரென புலப்பட்டது.

ஆடாமல் அசையாமல் அப்படியே சிலை போல் ஒரு கணம் மலைத்துப்போய் நின்றேன். மீண்டும் மீண்டும் அந்த இளம் கண்களை கூர்ந்து நோக்கினேன். எனது வலதுகையில் உள்ள பிஸ்கட்டுகள் அடங்கிய தாம்பாளம் நடுங்க ஆரம்பித்தது. அந்த கணம் எனக்கு சட்டென்று எல்லாமே தெரிந்து விட்டது. கையில் இருந்த தாம்பாளம் நழுவி விழுந்து பிஸ்கட்டுகளை சிதற அடித்தது. அவனின் இடது கரத்தை பலமாக பற்றி முழுக்கை சொக்காயின் மணிகட்டுப்பகுதியை நகர்த்திய அதே வேளை எனது மற்றொரு கரம் அவனது முன் நெற்றியில் வீழ்த்திருந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி அந்த தழும்பை ஸ்பரிசித்தது.

"என் அன்பு மகனே! என் பாசத்திற்குரிய ஹென்றி நீ இல்லாவிடில், இந்த தழும்புகளுக்கு இங்கென்ன வேலை? நான் வணங்கும் என் தெய்வமே, உன்னை போற்றுகிறேன்! என்னுடையது எனக்குத் திரும்பக் கிடைத்துவிட்டது"

ஓ! இல்லை! மிஸ்டோ சி! என் வாழ்வில் நான் எவ்விதத்துயரையும் எதிர்கொள்ளவில்லை, சந்தோஷத்தையும் கூடத்தான்!"


மொழிபெயர்ப்பாளர் பற்றி...

முனைவர் ஆர்.தாரணி

- முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.