-  முனைவர் ஆர். தாரணி -சிந்தனைத்துளிகள்!
1. அவன் பக்கெட்டை உதைத்தான் (He kicked the bucket) என்று பொருள் வரும் வாக்கிய அமைப்பு ஆங்கிலத்தில் அவன் இறந்துவிட்டான் என்ற பொருள் தரும் ஒரு இடியம் (idiom).. நம்மை பொறுத்தவரை பக்கெட் (bucket) குளியலறையில் அல்லது துணி துவைக்க பயன்படுத்துவோம். ஆனால், ஆங்கிலேயர்களின் கலாச்சாரப்படி, முன்பு பன்றிகளை இறைச்சிக்காக கொல்ல வேண்டி அவற்றை மேலிருந்து கீழே வரும் மெல்லிய சுருக்கு கயிற்றில் கழுத்தைக்கட்டி அந்த பன்றிகளை ஒரு பக்கெட் மேல் நிற்கவைத்து, பின் அவற்றை பக்கெட்டை உதைக்க செய்வது என்ற செயலில் ஆரம்பித்து, பின் மனிதன் இறப்புக்கும் - அது அவன் இயல்பாக இறந்தாலுமே இவ்வாறு கூறுவது வழக்கம் ஆகி, தற்போது ஆங்கில மொழியின் வழக்கில் இருந்து வருகிறது.  படித்தவர்கள் மத்தியில் அதிகம் இல்லாவிடினும், ஆங்கிலத்தில் தற்போதும் உபயோகத்தில் இருக்கும் வழக்காகவே உள்ளது. (பக்கெட் லிஸ்ட் (The Bucket List என்ற ஹாலிவுட் படம் பார்த்த பாதிப்பு)

2. எல்லாமே வலிப்பதால், எந்த வலியுமே வலிப்பதாய் உணர முடியவில்லை!  ---ரிச்சர்ட் மான்டேல் எழுதிய ஓநாய் கூடம் புத்தகத்திலிருந்து Nothing Hurts, or Perhaps it's that everything hurts, because there is no separate pain that can be picked out. (Quoted from Wolf Hall by Richard Mantel)

3. தங்களுடைய குட் நேம் (good name) என்ன என்று கேட்பதும் இன்றைய அளவில் படித்தவர்கள் மத்தியில் கூட பரவலாக பயன்படும் ஒரு ஆங்கிலப்பிரயோகமாய் இருக்கிறது. உண்மையில் ஆங்கிலத்தில் அப்படி ஒரு பிரயோகமே இல்லை என்பதுதான்  நிதர்சனம். இந்த குட் நேம் வந்தது ஹிந்தியில் இருந்து - ஆப்கா சுப நாம் க்யா ஹெய் (Subha naam means good name)என்ற ஹிந்தி பிரயோகத்தை அப்படியே மாத்திப்போடு என்ற மொழி மாற்றமே குட் நேம் என்னும் பிரயோகம். நேம் (Name)  என்பது மட்டுமே ஆங்கிலத்தில் போதும். ஒரு ஆங்கிலேயரிடம் What is your good name? என்று கேட்டால் கொஞ்சம் திருதிருவென விழிக்கத்தான் செய்வார்.

4. எங்கேயோ பார்த்த ஞாபகம், எப்போதோ வாழ்ந்த ஞாபகம் என்று தமிழ் சினிமா பாடல் வரிகளில் வரும். அது உளவியல் ரீதியாக அனைத்து மனிதர்களின் வாழ்விலும் நேரக்கூடிய உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவத்திற்கு குறிக்க பயன்படுத்தும் சொல் தேஜா வு (Deja Vu) என்ற ஒரு பிரெஞ்சு வார்த்தை. ஆங்கிலத்தில் உளவியல் வல்லுநர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின் ஆங்கிலம் பேசும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு வகையில் நம் தமிழில் சிலர் முகத்தில் ஜொலிக்கும் தேஜஸ் என்னும் விசயத்திற்கு கொஞ்சம் நெருங்கிய சொந்தம்தான் தேஜா வு. பிரெஞ்சு மொழியில் தேஜா வு என்றால் முன்பே பார்த்தது என்று பொருள். இந்த தேஜா வு அனுபவத்தின் உச்சக்கட்டமே பின்னால் நடைபெற இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவது போன்றதொரு அபார சக்தி - சினிமா நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் வருவது போன்று ரயில் விபத்து விமான விபத்து போன்று பல விஷயங்களை முன்பே கூறுவது. இந்த தேஜா வு அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்ட ஒன்று.

5. ஸ்வீட் ட்ரீம்ஸ் என்ற விஷயமும் கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டியவைதான். கனவுகளில் நாம் காண்பவை நம் ஆழ்மனதில் தேங்கிக்கிடக்கும் நிறைவேறாத ஆசைகள் மற்றும் கடுமையான பயங்கள்.என்பதே பிராய்டு சொன்ன தத்துவம். உண்மையும் கூட. நம் கனவுகள் நாம் விரும்பி காணும் திரைப்படம் அல்ல. அவற்றில் இனிப்பாய் இருக்கும் கனவு என்பது நாம் உறங்காமல் விழித்து கற்பனையில் காணுவதுதான். எனவே, குட் நைட் மற்றும் ஸ்வீட் ட்ரீம்ஸ் ஒன்றாக சொல்லுவது கூட ஒரு முரண்தான்.

6. ஆங்கிலத்தில் மட்டுமே குட் என்ற அடைமொழியுடன் காலை, மாலை, இரவு என்று வாழ்த்தும் பிரயோகம் பொருந்தும். அதைப்பின்பற்றி நாம் தமிழில் இரவு வணக்கம், காலை வணக்கம் என்றெல்லாம் கூறுதல் ஆங்கில பிரயோகத்தை தமிழுக்கு  தேவையற்று பயன்படுத்தும் அறியாமைதான். வணக்கம் என்ற தமிழ் சொல்லில் எல்லா காலங்களும் அடங்கும்.


கவித்துளிகள்!

துளி 1
தொலைத்தது ஏதென்று அறியாமலே
தொலைந்த என்னை தொடர்ந்து தேடுகிறேன்
தொலைவில் நான் இருப்பது எனக்கு தெரியாமல் இல்லை.
தேடுதல் சுகமென்பதால் தேடிக்கொண்டேதொலைதூரம் சென்று தொலைகிறேன்.

துளி 2
அரளி வனத்தில் அமைதியுடன் நான்!
மணமற்று மலர்ந்தாலும் மாசற்ற மலரல்லவா
நீ செவ்வரளி!

துளி 3

மகனின்றியோர் அணுவும் அசையாது
இது என் மொழி

துளி 4
காதல் எனும் மாயாஜாலம்
மானுடத்தின் மகத்துவம்
மத்தாப்பு வாரி இறைத்து
வான் வரை உயர்த்தும்.
மந்திரத்தில் கட்டி வைத்து
மனம் மயக்கும்.
முடிவில் மருட்சி தரும்.
மாயை என்ற நிதர்சனம் காட்டும்.
ஊடகம் கொடுத்த காதல்
மானுடம் தோற்கும் வழி காட்டும்.
காதலின் மூலதனம்
சுயம் பற்றிய நோக்கமே என்றும்.
ஆதலினால் காதல் கவனமுடன் செய்வீர்,
இளைய சமுதாயமே!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.