வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. நாவல் 'கலிங்'கை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com/


கலிங்கு

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்1973ஆம் ஆண்டின் மார்கழி மாதத்து ஒரு வெள்ளிக்கிழமை மாலையாக இருந்தது அது. வழக்கம்போல் நேரத்தோடு விழுந்திருந்தது இருள். வெளியை மெல்லிய கரும்புகார் திரையிட்டிருந்தது. அவன் யாழ் பேருந்து  நிலையத்தைச் சேர்ந்தவளவில்  ஏழு  மணியே ஆகியிருந்தும், அது ஓர் அசாதாரண நாளின் தன்மை  கொண்டிருப்பதை  ஆச்சரியமாக  கண்டுகொண்டே  அந்த தூர பயண பேருந்து நிறுத்தும்  இடத்தில் நின்றுகொண்டிருந்தான். அந்தச் சூழல் மேலும் மேலும் திணிந்து வருவதாய் அவனுக்குத் தோன்றியது. மின் விளக்குகள் அன்றைக்கு அதிசயமாய் மங்கலாக எரிந்து கொண்டிருந்ததாயும், பஸ் நிலையம் மட்டுப்பட்ட ஜன நடமாட்டமுள்ளதாயும்  பட ஆரம்பித்தது.  கடைகளும் அடைபடத் தொடங்கியதைக் கண்டவன் குழப்பத்தோடு  காத்திருந்தான். ஏழரை மணிக்குப் புறப்பட்டிருக்கவேண்டிய பேருந்து ஒன்பது மணியாகியும் வரவில்லை. அலுவலகத்தில் சென்று விசாரிக்கலாமென  அந்த வரிசையில் ஒருவர் சத்தமாய் எண்ணியது கேட்டது. சிறிதுநேரத்தில், இனி ஒன்பதரைக் கடைசி

பஸ்தானாமென்ற குரலொன்று எழுந்தது. ‘அதாவது வந்தால் சரி’யென யாரோ சொன்னதில், எழுந்திருந்த  சலசலப்பு  குறைந்து மறுபடி அமைதி  இறுகிவந்தது. ஏன் அந்த இறுக்கம்? ஏன் அந்த அசாதாரண நிலைமை? அவை கொண்டிருக்கும் செய்தி சாதாரணமானதில்லையோ?  அவன் மேலும் குழம்பியபடி நின்றிருந்தான். வீட்டில் தனியே தங்கியுள்ள மனைவி, பிள்ளைகளை எண்ணி அவனது மனம் குமைந்துகொண்டிருந்தது. ஒரு மாரியின் இருளும், இருளின் வெளியும் அந்த மண்ணைப் பூர்வீகமாய்க் கொண்டிராத எவரையுமே பெரும்பாலும் சஞ்சலப்பட வைத்துவிடக் கூடியது. அவனும் அவனது மனைவியும் தென்மராட்சியில் கண்டு வளர்ந்த மாரி இரவுகள் வேறுமாதிரியானவை. கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று ஓடிவர ஊரில் ஒரு குடியேனும் பக்கத்தில் குரலெட்டும் தூரத்திலே  இருந்தது.  அந்த மண்ணின்  வாழ்தகைமை  அதிகமும் அதில் இருந்ததை அவன் முன்பும் எண்ணியிருக்கிறான்.  அவர்கள் அப்போது குடியிருக்கும் அந்த பரந்தன் கால் ஏக்கர் திட்டக் குடியிருப்பு, கூப்பிடு தொலைவுக்கு வெறுமையையும்,  சூன்யத்தையுமே  இருள்வெளியில் கொண்டிருந்தது. அதில் தக அமைந்து வாழத் தொடங்குவதற்கு, அவனுகில்லாவிட்டாலும் அவளுக்கு, இன்னும் சிறிதுகாலம் எடுக்கும்.

திடீரென தூசி கிளப்பியும், கஞ்சலை உருட்டிக் கலைத்தும் காற்றெழும்பியது. மேலே நிலைகொண்டிருந்த கருமேகங்கள் அசைந்து கலைந்தன. ஆஹா… இனி மழையெடுக்காதென  பேருந்துக்கு காத்துநின்றவர்கள் மனங்களில், மழையே அவர்களது கலவர மனநிலைக்குக் காரணமில்லாவிடினும், ஒரு ஆசுவாசம் நிறைந்தது. கடைசி பேருந்து வந்து வரிசையில் நின்றது. பதினைந்து இருபது பேர்கொண்ட பயணிகள் முண்டியடிக்காமல் ஏறி இருக்கைகளில் அமர்ந்தனர். பயணச் சீட்டு கொடுப்பதற்கு முன்னால், கிளிநொச்சி வவுனியா பகுதிகளில் பெருமழையென்றும்,  கடைசிப் பேருந்தானதால்  பாதை நிலவரம் தெரியாத நிலையில் புறப்படுவதைக்கூறி,  வெள்ளத்தால் பாதை பயணத்துக்கேற்றதாய் இல்லாதிருந்தால் வாகனத்தை அங்கேயே திருப்பவேண்டி நேருமென்றும் தெரிவித்தார் நடத்துநர். அதைத் தொடர்ந்த பயணிகளின் சலசலப்பு மெல்ல அடங்க  பேருந்து  புறப்பட்டது.

அவன் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அனைத்தையும் கேட்டுக்கொண்டும், வெளியே அடித்து வீசும் காற்றினதும் இறுகி விழுந்திருக்கும் இருளினதும் கனதி கண்டபடியும் அமர்ந்திருந்தான். பேருந்து புறப்பட மழை தூறத் தொடங்கியது. கொடிகாமம் தாண்டி உசன் வயல்வெளியை ஊடறுத்து பேருந்து சென்றபோதுதான், அன்றைய இரவை எழுதிக்கொண்டிருந்த கொடுவிதியின் கரம் அவனுக்குத் தெரிந்தது. பேருந்தின் உள்ளே எரிந்த மங்கிய மஞ்சள் வெளிச்சமன்றி வேறற்றதாய் பிரபஞ்சம் பேய்க்கோலம் கொண்டிருந்தது. மழை வலுத்திருந்தது. பளை தாண்டியதும் பேருந்து வேக நிதானம் கொண்டது. எதிரே நனைந்த எருமைகள்போல் அசைந்து அசைந்து வந்த சில வாகனங்கள் தண்ணீரைத் தீற்றியபடி கடந்துசென்றன. அவ்வாறான ஒவ்வொரு இரைச்சலும் நிலைமையின் தீவிரத்தைப் பறைசாற்றின.

ஆனையிறவு நெருங்கியது. பொலிஸ் சோதனை நிறுத்தத்தில் சோதனை பெரிதாக இருக்கவில்லை. மழையும் குறைய ஆரம்பித்திருந்தது. பரந்தன் பக்கத்திலும் மழை குறைந்திருக்குமென  நம்பி அவன் ஆசுவாசப்பட முனைந்தான். இன்னும் அரை மணி நேரத்தில் வீடு வந்துவிடும். ஆனால் பேருந்து முழமளந்து நகர்ந்துகொண்டிருந்தது. தெருவெல்லாம் வெள்ளத்தில் மூடப்பட்டுள்ளதாயும், பக்கத்திலுள்ள தெருக் கானுக்குள் பேருந்து சரிந்துவிடக்கூடிய அபாயமிருப்பதையும் சொல்லி, அந்தப் பயணத்தை தொடங்காமல் இருந்திருக்கலாமென ஓட்டுநர் புறுபுறுத்தார்.

இனி அவனுக்குப் பயமில்லை. பேருந்து அந்த இடத்தில் நின்றுவிட்டால்கூட, பரந்தன் சந்திக்கு அப்பால் கால் ஏக்கர் குடியேற்றதிட்டத்திலுள்ள அவனது வீட்டிற்கு, அங்கிருந்து மூன்று மைல்களுக்கு மேலேயிருக்காது, அவனால் நடந்தே போய்விட முடியும். எனினும் பேருந்து  நிற்காமல்  முழமளக்கும் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டேயிருந்தது. யாழ் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஏறக்குறைய நான்கு மணி நேரத்தின் பின், அதிகாலை சுமார் ஒன்றரை மணியளவில், கண்டிவீதியிலுள்ள 160ம் கட்டைப் பேருந்து நிறுத்தத்தில் அவன்  கைப்பையோடு இறங்கினான்.தோணியிலிருந்து கடலுக்குள் இறங்கிய உணர்வு சில்லிட்டெழுந்தது. வா… வாவென இழுத்தணைக்க முயலும் கடலலைபோல், அவனை வலித்திழுக்க முயன்றுகொண்டிருந்தது தெருவை மேவிப் பாய்ந்த பெருவெள்ளம். கண்கொண்ட கருமையிலெங்கும் வெள்ளக் காடு பளீரிட்டது. வீட்டுக்கு எதிரேயிருந்த மதகுக்கூடாய் வெள்ளமடித்துப் பாயும் பேரோசை. தெருவின் இருமருங்குக் கான்களிலும் வெள்ளச் சளசளப்பு. அந்தளவு கருமைக்குள்ளும் இன்னும் வானம் காட்டிய கொஞ்ச வெளிர்ப்புக்குள் அவன் அடியளக்க ஆரம்பித்தான். பரிச்சயமாகிய இருளில் அவன் வீடடைந்தபோது எதிர்கொண்டது இன்னும் கருமையான இருளை. காலடி எழுப்பிய வெள்ளச் சத்தத்தில் அவன் மனைவி யாரோ வருவதை அறிந்து உஷாரானாள். அவனது குரலோசைக்குப் பின்னர்தான், ‘லாம்பு  காத்துக்க நூந்துபோச்சு. நெருப்பெட்டி நனைஞ்சுபோச்சுப்போல, பத்துதில்லை.  கவனமாய் வாருங்கோ’ என்றாள். தன் பொக்கற்றிலிருந்த தீப்பெட்டியை எடுத்து பற்றவைத்துக்கொண்டு, அவளது குரல்திசையில் நகர்ந்து மேசையிலிருந்த லாந்தரைக் கொளுத்தினான்.

திரும்ப, தெரிந்த ஒறுவாய் வீட்டின் முன்சுவர் பாறி விழுந்துவிட்டிருப்பதை மனம் துண்ணெனும்படி  தெரிவித்தது. தான் அன்று திரும்பாமல் இருந்திருந்தால் மனைவியின் நிலை  என்னவாகியிருக்கும் என்பதை எண்ணி அவன் சதிரம் சிலிர்க்க, அதையே எண்ணினாள்போல் மேசையோடு நின்றிருந்த அவளும் விசும்பி அழுதாள்.

‘வந்திட்டன்தான, இனியென்ன? பிள்ளையளெங்க? அந்தப் பக்கச் சுவருகளும் ஊறியிருக்குமோ?’ என்றபடி அவன் லாந்தரை எடுத்துக்கொண்டு  உள்ளே செல்ல, பின்னே  தொடர்ந்தபடி அவள் சொன்னாள்: ‘நல்லாப் பாத்திட்டுத்தான் படுக்கவைச்சனான்.

லாம்பு எரியிறமட்டும் அந்தப் பக்கச் சுவரொண்டும்  ஊறியிருக்கேல்லை.’அந்தளவு வெள்ளம் சுற்றிவர ஓடிக்கொண்டிருக்கிற நிலையில், அப்போதில்லாவிட்டாலென்ன, இனி அவை ஊறத் தொடங்குமென அவன் எண்ணினான். எல்லாம் யோசிக்க அவன் மனத்துள் ஆச்சரியம் விண்டெழுந்துகொண்டிருந்தது. முதல்நாள் மதியமளவில் அவன் யாழ்ப்பாணம் புறப்பட்டபோது மழை வருவதற்கான எந்த அறிகுறியும் அற்றிருந்தது வானம். ஊமை வெய்யில் எறித்துக்கொண்டிருந்தது.

வெள்ளத்தையல்ல, ஒரு மழையின் சூசகத்தைத்தானும் தெரிந்திருந்தால் அவன் தன் பயணத்தை அன்று துவங்காமலே விட்டிருப்பான். ஆனால் வெள்ளமே போட்டிருக்கிறது. எப்படி? முதல்நாள் மாலை மழை பிடித்திருந்தாலும் அந்தளவு வெள்ளக்காடாக மாறியிருந்தது அவனுக்கு விந்தை. நீர் வழிந்தோட போதுமான கால்வாய், மதகுகளிருந்தும் அப்படியொரு நிலைமையின் பிரத்தியட்சம் அவனது கற்பனையைமீறி நின்றிருந்தது. அவள் என்ன அவன் யோசிக்கிறானெனக் கேட்டதற்கு, அதை அவன் சொன்னான்.

‘அதுதான. ஒரு ராத்திரிப் பெய்ஞ்ச மழைக்கு இவ்வளவு வெள்ளம் வந்ததெண்டு நம்பேலாம இருக்கு’  என்றாள் அவளும். ‘எத்தினை மணிக்கு  மழை பிடிச்சுது?’ என்று அவன் கேட்க,

‘நேற்று ராத்திரி  துவங்கிச்சுது. அதுவும் கொஞ்சநேரம்தான். காலமை எழும்பிப் பாத்தா முத்தத்தில வெள்ளம் நிக்கிது. நல்லகாலம் வீட்டுக்குள்ள ஏறேல்லயெண்டு பாத்துக்கொண்டிருந்தன்’ என்றாள் அவள்.

ஆம், ஒரு ஆச்சரியம் நடந்திருக்கிறது. அது மழையால் மட்டுமில்லையென்பது தெரிந்திருந்தவனுக்கு  அதன் உண்மைக் காரணத்தை அனுமானிக்க  அந்த நிலவியல் பற்றிய போதுமான அனுபவம் இல்லாதிருந்தது. அந்த இரவின் ஆச்சரியத்தை நினைத்துக்கொண்டே குழந்தைகளுக்கு அக்கமும் பக்கமுமாய் அவனும் அவளும் அமர்ந்து விடியலைக் காத்திருந்தனர். பின்னர் எப்படியோ  சரிந்து தூங்கிப்போன ஒருபோதில், தெருவில் யாரோ அவள் பெயரைக் கத்தியழைத்த சத்தத்தில் இருவருக்கும் விழிப்பு  வந்தது. ‘ஆர’தென்று முனகிக்கொண்டு வெளியே வந்தவளைப்  பின்தொடர்ந்தான் அவன்.மழை துமியாக மாறியிருந்தும்,  பூமியிலிருந்து சுரந்தெழுவதுபோல் வெள்ளம் இன்னும் தெருப்பக்கமிருந்து அடித்துவந்து பின்புற கழிவு வாய்க்காலுக்குள் பாய்ந்தோடிக்கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்தவன் நிலமட்டத்திலிருந்து  மீதி மண்சுவர்கள் இரண்டடிக்கு மேல் ஊறியிருந்ததைக் கண்டான். சுவர்கள் மட்டுமில்லை, இன்னும் சிறிதுநேரத்தில் வீடே பாறி விழுந்துவிடலாம். குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு எங்கே ஓட? விசனம் முளைவிட்டது அவனில்.

வானம் இருண்டு கிடந்தது. சூரியன் புள்ளியாயும் தன்னைக் காட்டாதிருந்தது. கிளிநொச்சிச் சந்தை நாளான அன்று தர்மபுரத்திலிருந்து வரும் தட்டி வான்களினதோ, பேருந்துகளினதோ, கூட்டுறவுச் சங்க லொறிகளினதோ, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரும் பாரவண்டிகளினதோ போக்குவரத்தும் இரைச்சலுமற்று வெறித்துக் கிடந்தது முன்னால் கிடந்த கண்டி நெடுவீதி. அவன் மனைவி அவளது சின்னம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். சின்னம்மா கடவை தாண்டி அந்த வளவுக்குள் காலடி வைக்கமாட்டாளென்று அவனுக்குத் தெரியும். அந்த வளவு கடந்து தெருவழி செல்கிறபோது நின்றுபேசவும் அவள் தாமதிப்பதில்லை.  இரண்டு  வருஷங்களுக்கு  முன் அவளோடு  ஒருநாள் அவனுக்கு வார்த்தை தடிப்பேறிப் போனதன் விளைவு அது. அந்தச் சின்னம்மாதான் அப்போது அவனது மனைவியை தெருவுக்கழைத்து பேசிக்கொண்டிருக்கிறாள். அவள் அன்றைக்கு அங்கே வந்ததற்கு சொந்தம்மட்டுமே காரணமல்லவென்று  அவனுக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. அவன் பார்த்துக்கொண்டு வீடி புகைத்தபடியிருந்தான்.

சின்னம்மா இன்னும் தெருவிலேயே நிற்க, திரும்பிவந்த அவனது மனைவி, ‘என்னருங்கோ, இரணைமடுக் குளம் மீட்டிட்டுதாம். எல்லாச் சனத்தையும் பள்ளிக்குடங்களில போயிருக்கச் சொல்லியிருக்கினம்’ என அவசரமாகச் சொன்னாள். அது அவனுக்குப் பழக்கமில்லாதது. எந்தக் காலத்திலே வேறோர் இடத்தில் புகல்கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது அவனுக்கு? அந்த நிலைமை அவளுக்கும்தான்  இல்லை. ஆனால் அந்த வெள்ள அபாயத்தை  அப்போது சமாளிக்க  வேறு வழியில்லை.

சுருட்டிய பாய் தலையணைகளோடும், வயர்க் கூடையில் சாப்பாட்டுத் தட்டு தேநீர்க் கோப்பைகளோடும் அவன் மனைவி முன்னால் வந்துநின்று சொன்னாள்:

‘குமரபுரம் பள்ளிக்குடத்துக்குத்தான் நாங்கள் போகவேணும்.’

அவன் துவாயொன்றை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு வெளிக்கிட்டான். அவள் வெள்ளத்தை  பிளந்து முன்னே நடக்க, மூத்த மகளை கைப்பிடியிலும் இளையவளை தூக்கியும் கொண்டு அவன் பின்னே சென்றான். பெருவெள்ளத்தின் வியாபகத்தைக் கண்டபடி முன்னும் பின்னும் வெறிதாகியிருந்த அந்த நெடுந்தெருவில்  அவர்கள் பரந்தன் சந்தியைநோக்கி நடந்தனர். குமரபுரம் அரசினர் பாடசாலையில் கொள்ளாச் சனம்.  மனைவியையும் பிள்ளைகளையும் பெண்கள் பகுதிக்கு சின்னம்மாவுடன் செல்லவிட்டு , ஆண்கள் பகுதியில் ஊடிருந்த  ஓர்  இடத்தில் வந்துமர்ந்து   பீடி எடுத்துப் புகைத்தபடி அக்கம் பக்கத்தில் குமைந்தெழுந்த கதை பேச்சுக்களை  எதார்த்தமாய் அவதானிக்கத் துவங்கினான் அவன். மதியத்தில் தேநீர் கிடைத்தது.மாலையில் சோறு போட்டார்கள்.வெள்ள அகதிகளின் முதல்நாள்  இரவு  எப்படியோ  கழித்தது. காலை மிக அருவருப்பானதாகிவிட்டது.  வெள்ளத்துள் மனிதக் கழிவுகள் மிதந்து சென்றபடி இருந்தன. வெளியே  காலடி வைக்க முடியவில்லை.

இரண்டாம் நாளில் சுந்தரலிங்கமென்ற பெரியவரோடு அவனுக்கு அணுக்கம் சிறிது ஏற்பட்டது. பொழுதைக் கழிப்பது அவ்வளவு கடினமாக அன்றைக்கு இருக்கவில்லை. மூன்றாம் நாள் விடிந்தபோது கிழக்கே சூரியன் தெரிந்தது. நிலம் வடிந்திருந்தது. வெளியே போயிருந்த சுந்தரலிங்கம் திரும்பிவந்து சுருட்டிவைத்த பாயை எடுத்தபடி சொன்னார்,

‘கலிங்கு திறந்திட்டாங்களாம், அதுதான் வெள்ளம் வடிஞ்சிருக்கு.’ என்று.

அவனுக்கு விளங்கவில்லை. இரணைமடுவிலே கலிங்கு திறப்பதற்கும் பரந்தனிலே வெள்ளம் வடிவதற்கும் என்ன தொடர்பிருக்கிறது? அவன் அவரிடமே கேட்டான். அவர் விளங்கப்படுத்தினார்.

‘கலிங்கை என்னெண்டு நினைக்கிறிர், தம்பி? எப்பவும் பூட்டியே வைச்சிடுறதோ? கிடையாது. வெள்ளம் அணைக்கட்டை மேவிப் பாய்ஞ்சிடாம அதைத் திறக்கவும் வேணும். தானாய் மேவிப் பாய்ஞ்சா இப்பிடித்தான் வெள்ளப் பெருக்காய் வரும்.’

மக்களெல்லாம் வீடு செல்லத் துவங்க மனைவி பிள்ளைகளோடு  அவனும் கிளம்பினான். வீடு செல்லும் ஒரு குதூகலம் அவன் மனைவியிடம் இருந்ததா? அப்படித்தான் அவனுக்குத் தோன்றிற்று. அவனுக்குள்ளும் ஒரு குளுகுளுப்பு இருந்ததே!  ஆனால் வெள்ள அபாயத்திலிருந்து அப்போதைக்குத் தப்பியிருந்தாலும், அதன் பாதிப்பினால் ஏற்படக்கூடிய  பின்விளைவுகளை  எண்ணி அவனது மனம் திகிலடைந்தது. இருவரும் பிள்ளைகளோடு வீட்டை அடைந்தனர். வீடு நிமிர்ந்து நின்றிருந்தது. விழுந்த சுவரை அவன் எப்படி மீண்டும் கட்டியெழுப்பப் போகிறான்? யாருடனோ பேசிச் சிரித்தபடி வந்துகொண்டிருந்த அவன் மனைவியது முகத்திலும்,  வீடு வந்தபின்  யோசனை இறுக்கமாய்ப் படிந்தது. சுவரை மீள எழுப்புகிற  சிரமம்பற்றி அவளும்  சிந்திக்காமலிருக்க முடியாது. சுவரில்லாமல் வீடு முழுமையில்லை. வீடு முழுமையில்லாவிட்டால் வாழ்க்கை அதனுள் சீராக மய்யங்கொண்டுவிடாது. பின்விளைவுகளைச் சரிசெய்து செப்பமாய் அவர்கள் வாழத் தொடங்க இன்னும் காலம் தேவைப்படலாம். திண்ணையில் குந்தி பீடி எடுத்து புகைத்தான் அவன். பதினெண்ணாயிரம் ஏக்கர் நிலத்துக்கு பாசன நீர் வழங்கக்கூடியதாய், ஆறாயிரம் ஏக்கர் நிலத்தில் பரந்து, முப்பத்திரண்டு அடி உயரத்துக்கு நின்றிருந்த ஒரு பிரமாண்டத்தின் நீர்த் திரட்சி, அணையின் இடது பக்க பன்னிரண்டு கலிங்குக் கதவுகள் மூலம் ‘சோ’வென  சீறிப் பாயும் பேரொலி அப்போது அவனது மனத்துக்குள் எழுந்துகொண்டிருந்தது. அது பாதுகாப்பின் உணர்வாய் அவனுள் உருக்கொண்டது.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.