வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் பன்னிரண்டு!

தேவகாந்தனின் 'கலிங்கு'

எழுத்தாளர் தேவகாந்தன்

ஏழு அறைகள், இரண்டு கூடங்கள், இரண்டு சமையலறைகள் கொண்ட அப்பெருவீடு அப்போது தன்னதாய் இல்லையென்ற நினைவில், பெரியம்மாவின் பூட்டிய வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார் கே.பி.எம்.முதலி. அவருக்குள் திட்டம் உருவாகிக்கொண்டு இருந்தது.

பொழுது பட்டுவர ஊர் அடைந்து வந்தது. நெடுநேரத்தின் பின் இருட்டு விழுந்து இறுகியிருந்ததை உணர்ந்தார். மனத்தில் விரிந்த எண்ணத்தைச் செயற்படுத்த இறுதியாக ஒருமுறை அந்த வீடு செல்லத் துணிந்தவராய் எழுந்து சென்றார். தோளில் கொளுவும் ஒரு பையில் இரண்டு லோங்ஸ், இரண்டு சேர்ட், ஒரு துவாயென்று எடுத்துவைத்தார். இன்னொரு பையில் தன்னிடமிருந்த பத்திரங்கள், சேர்டிபிகேற், அடையாள அட்டை, வங்கிப் புத்தகம் முதலியனவற்றை எடுத்து வைத்தார். குளித்துவிட்டு வந்து ஒரு கறுப்பு லோங்ஸ், ஒரு கறுப்புச் சட்டையை எடுத்து அணிந்தார்.

திட்டமாய்ச் சுமத்தப்பட்ட துக்கத்தினோடும் அவமானத்தினோடும் வீட்டை விட்டு வெளியேறினார்.

வெள்ளைப் பூனை அவர் காணாவண்ணம் அவரைப் பின்தொடர்ந்தது.

இருளில் இருளாக கறுப்பு உடையில் அவர் ஊர் இகந்து சென்றதை யாரும் மறுநாள் வரை அறியவில்லை. அதை எதிர்பார்த்திருந்த மங்களம்கூட.

சகுந்தலைதான் காலையின் சப்தம், சலனமறுத்திருந்த வீட்டை அவதானித்துவிட்டு தாயாரிடம் சொன்னாள். ‘சந்தடியைக் காணேல்ல, அம்மா. வெளிக்கிட்டுட்டார்போல.’

‘ம்.’

அதுமட்டுமே அவளின் எல்லாமுமான பதிலாக இருந்தது.

அங்கிங்காய் அலைந்துவிட்டு, ஒருநாள் கொழும்பு செல்ல தீர்மானித்தார் கே.பி.எம்.முதலி. சில ஏற்பாடுகளை அவருக்கு செய்யவிருந்தது அங்கே.

பிறகு தம்பலகாமம் போனார். சீவலி ஆர்வமாய் வரவேற்றாள். அவரது கோலத்துக்குக் காரணம் கேட்டாள். அவர் பெரியம்மா காலமானதைச் சொன்னார்.

துக்கங்களின் விளாசலில் ஆளே மாறித்தான் போயிருந்தார். அவரை குளிக்கச் சொல்லி அனுப்பிவிட்டு, அலுமாரியின் கீழ்த்தட்டில் வைத்திருந்த சாராயப் போத்தலை எடுத்து மேசையில் வைத்தாள். குளித்துவந்ததும் அதை அவர் கேட்பார் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அவர் குளித்து வந்ததும் அதையே கேட்டார். அவள் மேசையை காட்டிவிட்டு அளவாக எடுத்துவிட்டு ஓய்வெடு என கூறிச் சென்றாள்.

இரவு விழ எழுந்த கே.பி.எம்.முதலி ஏதோ நினைவெழுந்து அழுத்தியவர்போல் ஒருமுறை குலுங்கினார். கண்ட சீவலி ஓடிவந்து அணைத்து அவரைத் தேற்றினாள். ‘பெரியம்மாவுக்காக அழாதே இனி. அவள் சொர்க்கத்திலே அமைதியாய் உறங்கட்டும்.’
‘நான் உனக்கு மிகவும் கரைச்சல் கொடுக்கிறேன்…’

‘எனக்கு இது கஷ்ரமே இல்லை.’

‘உன் அம்மா எப்படி இருக்கிறாள்?’

‘நடமாட்டம் குறைவுதான். நினைவு நன்றாக இருக்கிறது. பழைய கதைகளெல்லாம் என்னோடு பேசுவாள். எப்போதாவது உன்னையும் கேட்பாள்.’

இரவுக்காற்று இதமான குளிரைச் செய்துகொண்டிருந்தது. அது நதிகள் பல தழுவி வந்த காற்றும்.

அப்போது அவர்களுடன் சீவலியின் அம்மா திருமதி கமலா பெர்னாந்தோபிள்ளையும் விறாந்தையிலிருந்தாள். மூவரும் மெல்ல மதுவைச் சுவைத்தபடி காலம் விழுத்திய இடைவெளியின் நினைவறாத் தாக்கத்தைப் பேசியபடி இருந்தனர். சிறிதுநேரத்தில் தனக்கு அதற்குமேல் குளிர் தாங்காது என்றுவிட்டு கமலா பெர்னாந்தோபிள்ளை உள்ளே போய்விட்டாள்.

மேலே பேச உற்சாகம் அழிந்திருந்தவரை, ‘வா, நேரமாகிவிட்டது, சாப்பிட்டுவிட்டு படுக்கலாம்’ என அழைத்துக்கொண்டு உள்ளே போனாள் சீவலி. முதல்வேலையாக தான் கொண்டுவந்திருந்த பத்திரங்கள், சேர்டிபிகேற்கள் இருந்த பையை எடுத்து சீவலியிடம் கொடுத்து, ‘இனி எப்ப இது எனக்குத் தேவைவருமோ தெரியாது. நான் திரும்ப கேட்கிறவரை நீயே வைத்திரு’ என்று சொல்லி கொடுத்தார். அதை வாங்கி அவள் பத்திரப்படுத்தி வைத்தாள்.

பின் சாப்பிட்டுவந்து படுக்கையில் இருந்து இருவரும் பல விஷயங்களையும் பேசினர்.  உறக்கத்தை அவரது கண்களில் காணாதவள், அவருக்கு அப்போது தேவையெனத் தெரிந்து சாராயம் ஊற்றிக் கொடுத்தாள். தானுமே குடித்தாள். இரவு முதிரமுதிர அவர் உற்சாகம் அடைந்தார். அளவோடு அவள் நிறுத்தியபோது, அவர் ‘குடி’ என்றார். தனக்கு மறுநாள் காலையில் வேலையிருப்பதைச் சொல்லி சீவலி தவிர்ந்தாள். பிறகு அவரில்லாத காலத்தின் வெறுமை தன்னை வதைத்தவாறெல்லாம் சொன்னாள். கே.பி.எம்.முதலி எதுவும் சொல்லாமல் கேட்டபடி இருந்தார். அவரது உற்சாகம்மட்டும் மேலும் மேலும் கிளர்ந்துகொண்டே இருந்தது.

ஒரு நதியாக படுக்கையில் சலனித்துக் கிடந்திருந்தவளை ஒரு வெறியோடு தழுவினார் அவர். எல்லாம் மறந்து… உறவுகள், அவமானங்கள், இழப்புகள் எல்லாம் மறந்து... அவளோடு இணையும் வேட்கைகொண்டார்.
அடுத்த கணம் பதறினார்.

அவரது மானம், மரியாதை எல்லாவற்றையும் வஞ்சனையில் பிடுங்கித் தின்ற சகுந்தலை, அவரது நரம்பையும் வெட்டிவிட்டிருந்தாளா? மனத்தின் வேகத்தை அவருடம்பு உறவேயில்லை.

மல்லாந்து கிடந்து கே.பி.எம்.முதலி வதைப்பட்டார். இதற்குமேல் அங்கே அவரால் தரித்திருந்துவிட முடியாது. அந்தப் பாதி இரவிலேயே பையை எடுத்துக்கொண்டு அவர் வெளிக்கிட்டார். அறை வாசலோரமிருந்த எதுவோ காலில் இடறியது. நிமிர தெரிந்தது, தவநிலையில் அமர்ந்திருந்த புத்த சொரூபம். திரும்பி கதவைத் திறந்துகொண்டு சீவலியின் வீட்டைவிட்டு இருளில் இறங்கினார். நடந்தது புரியாத சீவலி, ‘பரமா… பரமா… என்ன நடந்தது? இங்கே வா… திரும்பி வா’ என்றபடி அந்தப் போதையோடும் கேற்வரை ஓடிவந்தாள்.

இனி அவரை அவளுக்குத் தேவையிராது.

யாருக்குத் தேவையாக முடியாதோ அவர்களின் அணுக்கம் இனி அவருக்கும் வேண்டியிருக்கவில்லை
.
நரம்பறுத்த பாதகியின் முகம் திரையிலிருந்து அழியும்வரை அவர் அலைந்தார். எண்பதாம் ஆண்டு வந்தது. எண்பத்தோராம் ஆண்டும் வந்தது. முடிவுறா அலைச்சலில் அவர் அடையாளமே மாறினார். அந்த நினைவழிப்பைச் செய்யும் ஒரு மாயத்தைத் தேடி இடையறாது அலைந்தார்.

தேவை தேவையில்லாத வேலைகளையெல்லாம் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தார். தேவை, தேவையில்லாத எல்லா விஷயங்களையும் பத்திரிகையில் வாசித்தார். அதுபோல் தேவை, தேவையில்லாத எல்லா மனிதர்களின் முகங்களையும், முகவரிகளையும் அழித்தார். நினைவை ஒரு வெள்ளைக் காகிதமாக்க முயன்றார்.

பகல்களை உறங்கி, இரவுகளை விழித்திருந்து வாழப் பழகியாகிவிட்டது அவருக்கு.  அது மனிதர்களே இல்லாத ஒரு உலகத்தில் தான்மட்டும் வாழ்வதான பாவனையைக் கொள்ள அவருக்கு வெகு உதவியாகவிருந்தது. ஒருபோது வாழ்வின் தடம் புரண்டது. அவர் எல்லாவற்றையும் ஒருநாள் மறந்தார். அந்த ஸ்மரணையிழப்பு பல வருஷங்கள் தொடர்ந்தது. அவர் ஒருபோது அதைத் திரும்பப்பெற்றார். அப்போது அவர் உஷாரடைந்தார். நினைவைக் காப்பாற்றுவது முதன்மையான கரிசனையானது. பாடல்களை, செய்யுள்களை, சுலோகங்களை அவர் மனனம் செய்து தனக்கே ஒப்புவித்தார்.

மேலும், அவர் எழுதினார். செய்தி எழுதினார், புகார் எழுதினார், எதையுமே எழுதினார். பக்கம் பக்கமாய் எழுதினார். இருபது பக்கங்களுக்குக் குறைவாய் எழுதி அவர் எப்போதும் அறிந்ததில்லை. அவற்றினை பகிரங்கப்படுத்தக்கூடிய சில அதிகாரிகளுக்கும், சில அரசியல் தலைவர்களுக்கும், முக்கியமான நிருபர்களுக்கும், சில பத்திரிகை அலுவலகங்களுக்கும் அஞ்சல்களில் அவற்றைச் சேர்ப்பித்தார். செய்தி வெளியாவதோ, புகார் பதிவாவதோ அவரின் அடியடியான நோக்கமில்லை. எழுதுவதற்காகவே எழுதினார். எவருக்காவது அப்படிச் செய்யத் தோன்றுமா? தெரியாது. அவருக்கு அப்படித்தான் தோன்றியது.

இரண்டு தசாப்பதங்களை எழுதியும், அலைந்துமாய்க் கழித்தார்.

உலக உருண்டையின் ஒரு சிறு புள்ளியில் இடையறாச் சஞ்சாரம்.

தீராத பக்கங்களில் எழுத்துக்களின் இறைப்பு.

அவை சகலதையும் அவர் மறக்கும்படி செய்தன. சிலவேளைகளில் தன்னையும். அதேபோதில் அவரது நினைவை அவை தக்கவைத்தன.

அவர் சின்ன வயதில் மது, மாமிசம், புகை பிடித்தல் இல்லாதவராகத்தான் இருந்தார். வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் மது வந்தது. அவ்வப்போது புகைக்கவும் செய்தார். முற்று முழுதான தகர்வின் பின் எல்லாம் மறக்க அவருக்கு இன்னொன்று தேவைப்பட்டது. அதை புதிதாக கற்றுக்கொண்டார்.

அது அவரது எல்லா நினைவுகளையும் மறக்கச் செய்தது. அதுவே சிலருக்கு எல்லா நினைவுகளையும் நினைக்கப் பண்ணுவது. சாமி அதன்மூலம் தன் நினைவுகளை மறந்தும்,  ஸ்மரணையை நிலைநிறுத்தியும் நிம்மதிகொண்டார்.
அந்தப் பொழுதுகளில் அவர் பல அரூபமான தரிசனங்களை அடைந்தார். அவர் அதுவரை அடைந்திராத தன் கேள்விகளின் பதில்கள் அவருக்குக் கிடைத்தன. புதிது புதிதாய்க் கேள்விகளும் எழுந்தன. அவற்றுக்கும் பதில் அவரிடம் தோன்றிக்கொண்டிருந்தது.

அவர் பூடகமாயிருந்தார். அதேவேளை பல பூடகங்களின் விளக்கத்தையும் கண்டறிந்தார். எந்த ரகசியத்தையும் கட்டவிழ்க்க அவரால் முடிந்திருந்தது.

அவற்றையே அவர் எழுதியதும்.

அவற்றையே அவர் முறைப்பாடு செய்ததும்.

எல்லா அவரது தரிசனங்களும் வார்த்தையாகியிருந்தன. ஆனால் அவை வாசிக்கப்பட்டனவா என்பதை எப்படிக் கண்டறிவது? அறியப்படவே எழுதினாரெனின், அவர் செய்ய வேறு என்ன உள்ளது?

கேட்கவும் யாருமில்லாதவராய் இருக்கிறார் சாமி. அவர் யாரையும் அண்டவில்லை. யாரும் அவரை அண்டவுமில்லை. அப்போது சொல்லுவது யாருக்கு? கேட்டால் சொல்லலாம். கேட்காமலே வலிந்து போய்ச்சொல்ல அவரால் முடியாது.
சொல்லவும்கூடாது. அப்படிச் சொன்னால் அவரைச் சந்தேகிப்பார்கள். அவ்வாறு சொல்லாமலும் சிலர் அவரைப் பயித்தியமென்றே நினைத்தார்கள். ‘பாவம், ஆரை இழந்துதோ? எதைப் பறிகுடுத்துதோ?’ என்றனர் சிலர்.
செவிடருக்கு முன்னால் எந்த விஷயத்தையும் இரைந்து கதைக்கலாம். குருடருக்கு முன்னால் இலச்சையின்றி எதுவும் செய்வதில் ரகசியக் காப்பிருக்கிறது. பயித்தியத்தின் முன்னால் இரண்டின் சாத்தியங்களும் உள்ளன. பயித்தியம் பார்க்கும், பேசும். ஆனால் அவற்றை உள்வாங்க அதனால் இயலுமாயிருக்காது. அவரோ எல்லாம் பார்த்தும், எல்லாம் கேட்டும் உள்வாங்கினார். அப்போ அவர் பயித்தியமாய் நினைக்கப்படுவதில் அவர் ஏன் மனவருத்தம் கொள்ளவேண்டும்?
சிலர் அவரை சாமியென அழைத்தார்கள். அதற்கும் அவர் ஏதும் சொன்னதில்லை. தான் சாமி இல்லையென்று சொன்னபோதுகூட ஒரு சாமியின் அடக்கமாயே அது அவர்களுக்குத் தென்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு தெரிந்திருந்தது, சாமி என்பதற்கு பயித்தியமென்றும் ஒரு பொருளிருக்கிறதென்று. அதனால் சாமியாகவே இருந்தார்.

இப்போது சாமியாயிருந்தும் அவருக்கு பயித்தியம் இடைக்கிடை வந்தது. அதுபோல் பயித்தியமாக இருக்கையில் சாமிநிலை வந்தது. ஒரு புள்ளிவரை பயித்தியமாகவே போய்க்கொண்டு இருப்பவர், திடீரென சுதாரித்து சாமியாகிவிடுவார். அதபோலத்தான் சாமியாக ஆகிக்கொண்டிருக்கையில் பிரக்ஞையை அழித்துக்கொண்டு பயித்தியமாகிவிடுவதும். எதுவாயிருந்தாலும் அவருக்கு அது கவசமாகவே இருந்தது. நினைத்துப் பூணுகிற கவசமல்ல. தானாக அமைகிற கவசம்.

பிரதீபனிடம் பூவரசம் கம்படி பட்டபோது, அவர் பேச்சிலும் நடத்தையிலும் அவரைப் பயித்தியமென்று நினைத்துத்தானே ‘ஓடு’ என போகவிட்டான்? அப்போது அது கவசமாக இருந்தது.
சாமி கண்மூடிக் கிடந்திருந்தபடி உள்ளுக்குள்ளாய்ச் சிரித்தார்.

எனினும் அது உடம்பை உலுக்கியது.

ஒருமுறை கண்ணைத் திறந்து வெளியைப் பார்த்தார்.

வெளி விடிந்துகொண்டிருந்தது.

சந்தடிகள் ஆரம்பித்துக்கொண்டு இருந்தன.
இனி பஸ் வந்துவிடும்.

சாமி எழுந்து பேப்பரை மடித்து எடுத்துக்கொண்டு பையைத் தூக்கினார்.

போய் ரீ குடித்து, அன்றைய பேப்பரும் வாங்கினார்.

நேற்றைய சோகங்களினதும், பயங்கரங்களினதும் எழுத்து வடிவமாய் அது இருந்திருந்தது.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.