உறைந்துபோன அரசியல் கொண்டவரின் உளறல்கள்

Tuesday, 26 February 2013 21:57 - யமுனா ராஜேந்திரன் - யமுனா ராஜேந்திரன் பக்கம்
Print

யமுனா ராஜேந்திரன் -“ காலம் இதழில் எஸ்.என்.நாகராசன் அவர்களின் நேர்காணல் ஓன்று வெளியாகியிருக்கிறது. அதைப் படிக்கும்போது காலம் உறைந்துவிட்டதுபோன்ற உணர்வு. அவரை மகான் ஆக்கிப்  பார்க்கவேண்டும் என நேர்காணல் செய்தவர்கள் விரும்பி இருப்பார்கள் போலும். அது அவர்களது உரிமை. புகைப்படத்தில் பார்க்கும்போது நாகராசன் ஆரோக்கியமாகத் தெரிகிறார். இத்தகைய நேர்காணல்கள் மார்க்சியத்தைக் காலம் கடந்த தத்துவம் என்று உணரச்செய்கின்றன. மார்க்சியர்கள் என்று யாரைக் குறிப்பிடுவது? மார்க்ஸ் எழுதிய நூல்களைப் படித்தவர்களையா? அல்லது அவரது தத்துவத்தை தனது அணுகுமுறையின் அடிப்படையாகக் கொண்டவர்களையா? நேர்காணல் எடுத்திருப்பவர் தமிழ்நாட்டில் நான்கு பேர்களை மார்க்சியர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெளிநாட்டில் வசிக்கிற காரணத்தால் தனது பெயரை அந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது. அந்தப் பட்டியலில் பேராசிரியர் முத்துமோகனை அவர் சேர்த்திருக்கிறார். ( இதைவிடப் பெரிய விருது முத்துமோகனுக்கு  வேறென்ன இருக்கமுடியும்?). இன்னும் கொஞ்சம் கருணை வைத்து அந்தப் பட்டியலை நேர்கண்டவர்  நீட்டலாம். ஏனென்றால் இந்தப் பட்டியலை அதில் இடம்பெற்றிருப்பவர்களே கூட முழுமையானதென்று ஏற்கமாட்டார்கள். இத்தனை பெரிய தமிழ் நாட்டில் நாலே நாலு மார்க்சியர்கள் தான் இருக்கிறார்கள் என்றால் அது மார்க்சியத்துக்கும் அவமானம் அல்லவா! “

மேலே கண்ட மேற்கோள் சாதி அரசியலைக் கொண்ட ‘மார்க்சியம் கடந்த சிந்தனையாளர்’ மணற்கேணி (நிறப்பிரிகை என்று குறிப்பிடுவது காலம் கடந்தததாகிவிட்டது) ரவிக்குமாரின் உளறல்கள். போஸ்ட் மார்க்சியம் என்பதை மார்க்சியம் கடந்தநிலை என மொழியாக்கம் செய்கிற ‘மேதை’தான் ரவிக்குமார். பின்நவீனத்துவம் என்பதை நவீனத்துவம் கடந்தநிலை என்று புரிந்து கொள்வாரானால் அவரை கீழ்ப்பாக்கத்திற்குத்தான் அனுப்ப வேண்டும். பின்நவீனத்துவர் என அடையாளம் காணப்படும் ழாக் தெரிதாவின் ஸ்பெக்டர்ஸ் ஆப் மார்க்ஸ் புத்தகத்தின் சுருக்கத்தையாவது ரவிக்குமார் படிக்க வேண்டும். நவீனத்துவமும் மார்க்சும் முன்வைத்த விமோசன அரசியல் காலாவதியாகவில்லை என்பதையும் அதில் தெரிதாவின் நம்பிக்கையையும் அவர் புரிந்து கொள்வார். ரவிக்குமார் இன்று முக்கிமுக்கித் தமிழில்மொழிபெயர்க்கிற கட்டுரைகள் எல்லாம் மேற்கில் கால்நூற்றாண்டுக்கு முன்பாக வந்தவை என்பதால் ரவிக்குமாரின் மூளை செத்த மூளை என்று சொல்லலாமா? அது கிடக்கட்டும், இந்த கால்நூற்றாண்டில் உலகெங்கிலும் எழுதிக் குவித்திருக்கிற விமர்சனம், மார்க்சியம் பற்றி இந்த குண்டுசட்டிக் குதிரையோட்டிக்குத் தெரியுமா?

மார்க்சியம் காலம் கடந்தது என நினைக்கிற ரவிக்குமாருக்கு எதற்கு எவர் மார்க்சியர் எவர் மார்க்சியர் இல்லை எனும் கணக்குப்போடும் கரிசனம்? புகைப்படத்தில் நாகராசன் ஆரோக்கியமாக இருக்கிறராம், நாகராசன் நோயில் வீழ்ந்து நலிந்துபோகவேண்டும் என ரவிக்குமார் விரும்புகிறாரா? மகான் என்பதற்காக எவரையும் நாங்கள் எவரையும் நேர்காணல் செய்வதில்லை. ரவிக்குமார் என்கிற தலித் சிந்தனையாளர்  பிராமின் டுடே பார்ப்பனிய இதழுக்கு நேர்காணல் வழங்கியபோது ரவி பார்ப்பனிய மகானாகத்தான் அவர்களுக்கு இருந்திருப்பார் போலும்! ஓருவரை நேர்காணல் செய்தால் அவரோடு முழுமையாக உடன்பட வேண்டிய அவசியம் இல்லை என்பது அரிச்சுவடி. நாகராசனோடு எங்களுக்கு உடன்பாடும் முரண்பாடும் உண்டு. சூழலியல், ஊழியர் கோட்பாடு, பொறாமை குறித்த அவர் கருத்து என ரவிக்குமாருக்கும் பொருத்திப் பார்க்கக் கூடிய எத்தனையோ ஒளித்தாரைகள் கொண்டதுதான் நாகராசனின் நேர்காணல். நேர்காணலில் இருப்பது அவரது கருத்துக்கள். எமது கருத்துக்கள் இல்லை. அவர் மகானும் இல்லை; நாங்கள் அவரது சீடர்களும் இல்லை. இந்த அடிப்படை உண்மை கூடத் தெரியாத ரவிக்குமார்தான் பத்திரிகை ஆசிரியராக இருந்து மணற்கேணி நடத்துகிறார்!

நா. முத்துமோகன் குறித்த ரவிக்குமாரின் நக்கலில் தெரிவது ரவிக்குமாரின் குறும்புத்தி. முத்துமோகன் குறித்த எனது மதிப்பீட்டிற்கு ஆதாரமாக முத்துமோகனின் எழுத்துக்கள் இருக்கின்றன. மார்க்சியத்துக்கு நேர்ந்த அவமானம் குறித்து மார்க்சியம் கடந்த ரவிக்குமாருக்கு என்ன அக்கறை? ரவிக்குமார் பிறரை நோக்கிச் சுட்டுவிரல் நீட்டுவதற்கு முன்பாகத் தன் முதுகை அழுக்குப்போக சுத்தப்படுத்திக்கொண்டு வரட்டும்; தாங்க முடியவில்லை.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 09 September 2013 19:10