சுப்ரபாரதிமணியன்மலேசியத்  தமிழ் எழுத்தாளர் சங்கம்  ஜூலை இறுதியில்   கோலாலம்பூரில் இரண்டு நாள் நாவல் பயிற்சி முகாம் நடத்தியிருந்ததில் கலந்து கொண்டேன்.முதல் நாள் தமிழ் நாவல் வளர்ச்சியும் தோற்றமும், புதிய நாவல்களின் தீவிரமும் பற்றிப் பேசினேன்.இரண்டாம் நாள் எனது நாவல் அனுபவம் என்ற தலைப்பிலும், இளையோர் மற்றும் சிறுவர் கதைகள் பரிசளிப்பு விழாவில் தமிழ் சிறுகதைகள் பற்றியும் என்னுரை இருந்தது.  மலேசியாவிலிருந்து எழுதும்  ரெ.கார்த்திகேசு அவர்கள் 4 நாவல்கள், 10 சிறுகதைத்தொகுதிகள், கட்டுரைகள் என்று தொடர்ந்து தன் பங்களிப்பை செய்து வருபவர்.( அவரின் சமீபத்திய சிறுகதைத்தொகுதி “ நீர் மேல் எழுத்து” கட்டுரைத் தொகுதி ரெ.கார்த்திகேசுவின்       விமர்சனமுகம்-2 )).அவர் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்துப்பேசுகையில்  எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு பெரிய நாவல் அனுபவம் உள்ளது. முதலில் வாழ்க்கையை கூர்ந்து பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.பேராசிரியர் சபாபதி 2000க்குப் பின் மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் 45 நாவல்கள் வெளியிட்டுள்ளதைப்பற்றிப் பேசினார். அ.ரங்கசாமி, சீ.முத்துசாமி முதல் சை.பீர்முகமது,  பாலமுருகன் வரை சிறந்த நாவலாசிரியர்கள் பற்றி விரிவாய் குறிப்பிட்டார். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 5 ஆண்டுகளாக நாவல் போட்டி நடத்தி வருகிறது.இவ்வாண்டு சுமார் 1, 75,000 ரூபாய் சிறந்த நாவல்களுக்கான பரிசுத்தொகையை வழங்குகிறது. இவ்வாண்டு அப்போட்டியை ஒட்டியே ஒரு பயிற்சியாக இப்பட்டறை அமைந்திருந்தது.கலந்து கொண்ட 40 எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிடித்த  தமிழ் நாவல்கள் பற்றிப் பேசினர். பத்துக்கும் மேற்பட்டோர் மு.வ., அகிலன், நா.பா. நாவல்களைப் பற்றி பேசினர். இன்னொரு பகுதியினர் கீழ்க்கண்ட  மலேசியா எழுத்தாளர்களின் இரு நாவல்கள் பற்றி அதிகம் பேசினர்.

1. ரெ.கார்த்திகேசுவின் “ சூதாட்டம் ஆடும் காலம்”
2. எஸ்.பி.பாமாவின் “ தாயாக வேண்டும் “

நவீன நாவல்கள் பற்றிய பரிச்சயம் வெகு குறைவாக இருந்தது.முனைவர் முல்லை நாவல் எழுதும்போது மனதில் கொள்ள வேண்டியவை பற்றி விரிவாகப் பேசினார்.பட்டறையை ஒட்டி நான் தயாரித்து அளித்த ஒரு கையேட்டில் தமிழ் நாவல் சில குறிப்புகள்,   தமிழின் சில சிறந்த நாவல்கள் பட்டியல், கடந்த ஆண்டின் சில சிறந்த நாவல்கள், எனது நாவல்கள்  பற்றிய சில விமர்சனக்கட்டுரைகள் என இடம் பெற்றிருந்தன.அதில் ஒரு பகுதி இக்கட்டுரையின் கடைசிப்பகுதியில் அமைந்துள்ளது. மலேசியா எழுத்தாளர் சங்க தலைவர் பெ.இராஜேந்திரன் தனது நிறைவுரையில் “ நிறைய வாசியுங்கள், குறைவாக எழுதுங்கள். 50 நாவல்கள்  இப்போட்டியில் இதுவரை கலந்து கொண்டிருந்தாலும் மிகத் தரமான நாவல்கள்  இல்லை என்ற வசவு ஒழிய வேண்டும்”  என்றார். பங்கேற்பாளர்கள் தாங்கள் இவ்வாண்டின் போட்டிக்கு எழுத உத்தேசித்திருக்கும் நாவலின் கதை சுருக்கத்தையொட்டி நாவல் வடிவம், உத்திகள், நடை என ஆலோசனைகள் தரப்பட்டன.இரண்டு நாட்களும் எழுத்தாளர்கள் தங்கி பட்டறையில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு, உறைவிடம் என்று வசதிகள் தந்து கட்டணமில்லாமல் நடத்தப்பட்டது.(சென்றாண்டு இதேபோல் எஸ்.இராமகிருஸ்ணன்  சிறுகதைப்பட்டறையை  மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திற்காக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.) அங்கு தரப்பட்டக் குறிப்பேட்டிலிருந்து...

தமிழின் சில முக்கிய நாவல்கள்:

*  நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
*  ஒரு மனிதன் ஒரு வீடு  - ஜெயகாந்தன்
*  ஒரு நாள் –  க.நா.சுப்ரமணியன்
*  மோகமுள் – தி. ஜானகி ராமன்
*  ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தரராமசாமி
*  கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
*  நாளை மற்றுமொரு நாளே -   ஜி. நாகராஜன்
*  மானசரோவர்  - அசோகமித்திரன்
*  வெக்கை  -  பூமணி
*  தலைமுறைகள்  -  நீல பத்மநாபன்
*  துறைமுகம்  -  தோப்பில் முகமது மீரான்
*  காகித மலர்கள்  - ஆதவன்
*  சாயாவனம்  - சா.கந்தசாமி
*  புயலில் ஒரு தோணி  - ப.சிங்காரம்
*  கடல் புரத்தில்  -  வண்ணநிலவன்
*  தலைகீழ் விகிதங்கள்  -  நாஞ்சில் நாடன்
*  வாக்குமூலம்  -  நகுலன்
*  மானுடம் வெல்லும்  -  பிரபஞ்சன்
*  மண்ணகத்துப் பூந்துளிகள்  -  ராஜம்கிருஸ்ணன்
*  செடல்            - இமயம்
*  யாமம்             - எஸ்.ராமகிருஸ்ணன்
*  ரப்பர்  - ஜெயமோகன்
*  மூன்றாம் விரல் – இரா.முருகன்
*  அலெக்சாண்டரும், ஒரு கோப்பைத்தேனீரும் -  எம்.ஜி.சுரேஷ்
*  மணியபேரா  - சி.ஆர். ரவீந்திரன்
*  நல்ல நிலம்  -  பாவைச் சந்திரன்
*  கங்கணம்   -  பெருமாள்முருகன்
*  ரத்தம் ஒரே நிறம்  -  சுஜாதா
*  நீர்த்துளி  -  சுப்ரபாரதிமணியன்

             
கடந்த சில ஆண்டில்  சில சிறந்த  நாவல்கள்:

* உண்மை கலந்த நாட்குறிப்புகள்  -  அ. முத்துலிங்கம்
* கொற்கை  -  ஜே.டி. குரூஸ்
* ஆண்பால் பெண்பால்  -  தமிழ்மகன்
* அபிலாஷ்  -  கால்கள்
* நிழலின் தனிமை  -  தேவிபாரதி
* கண்ணகி  -  தமிழ்ச்செல்வி
* வல்லினமே மெல்லினமே..  - வாசந்தி
* மறுபக்கம் -  பொன்னீலன்
* படுகளம்   -  ப.க. பொன்னுசாமி 
* குவியம்  -  ஜெயந்தி சங்கர் ( சிங்கப்பூர்)
* விடியல்   -  அ. ரங்கசாமி  ( மலேசியா )
* சூதாட்டம் ஆடும் காலம் -   ரெ.கார்த்திகேசு  (மலேசியா)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.