மர மனிதன்: ஓகே குணநாதனின் சிறுவர் நூல்! குறைந்த சொற்கள், நிறைந்த காட்சி ஓவியங்கள். விரிந்த களன், சிறந்த சுற்றுச்சூழல் செய்திகள்!

Monday, 18 April 2016 22:07 - சுப்ரபாரதிமணியன் - சுப்ரபாரதிமணியன் பக்கம்
Print

சுப்ரபாரதிமணியன்ஓகே குணநாதன் அவர்கள் இவ்வாண்டில் மூன்று பரிசுகளைத் தமிழகத்தில் பெற்று கவனத்திற்குரியவரானார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது,   ( சிவகாசி விழா ) ,  திருப்பூர் தமிழ்ச்சங்க விருது , திருப்பூர் இலக்கியப்பரிசு ( சுகந்தி சுப்ரமணியன் நினைவுப்பரிசு ) ஆகியவை அவை. தமிழகச் சிறுவர் இலக்கியப்படைப்பாளி மறைந்த கோவை பூவண்ணனை ஆதர்சமாகக் கொண்டவர்.அவரின் படைப்புகளின் சமீப மையம் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை என்பது குறிப்பிடதக்கதாகும்.

படங்கள் இல்லாத சிறுவர் நூல்கள் தமிழகத்தில் நிறைய வருகின்றன. படங்களும் அவை தரும் காட்சிப்படிமங்களும் சிறுவர்களுக்கான குதூகலத்தன்மை கொண்டதாகும். இதன் மறுபுறமாய்  ஓகே குணநாதன் நூல்களைச் சொல்லலாம்.அவற்றின் கதைப்பிரதிகளில் வரிகள் மிகக் குறைவாக இருக்கும். ஓவியங்களும், சித்திரங்களும் நிறைந்து காணப்படுவது அவரின் நூல்களின் சிறப்பியல்பு என்று சொல்லலாம்.

சமீபத்தில் அவர் கோவையில் குழந்தை எழுத்தாளர் செல்லகணபதியைச் சந்தித்த போது சிறுவர் இலக்கியம் சார்ந்த இயக்கங்கள் குறைந்து போயிருப்பதை கவலையுடன் அவதானித்தார். இது ஆரோக்யமானப் போக்கில்லை என்றும்  சொன்னார். தமிழ் இலக்கியச் சூழலில் இன்று 1000க்கும் அதிகமானோர் எழுதுகிறார்கள் . சிறுவர் இலக்கியம் எழுத 50 பேர் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். இவர்களுக்கு  தீவிர இலக்கியவாதிகளுடன் தொடர்பும் , உரையாடலும் இல்லாத்தால் ஒருவகை வெறுமை தெரிகிறது. தமிழில் ‘கிளாசிக்’ சிறுவர் இலக்கியப் படைப்புகள் என்பது அருகிப்போய்விட்டது. சிறுவர் இலக்கியம்  நீதி கதைகளைத்தாண்டி வெகு சிரமப்பட்டு வெளியே வந்திருக்கிறது.  துப்பறியும் கதைகளும அரிதாகி விட்டன , புதிய கதை அம்சங்களை நோக்கி  ஒற்றைப்படை எண்ணிக்கையைத் தாண்டி நிறையப்பேர்  வந்து விட்டார்கள்.  பெரியவர்கள் குழந்தைகளுக்காக எழுதுவதும் இன்னும் ஆக்கிரமிக்கிறது. குழந்தைகள் எழுதுவதை இன்னும் ஊக்குவிக்கவேண்டும்.  இன்னும் மிருகங்களையும் பறவைகளையும் கொண்டே கதை சொல்ல வேண்டியிருக்கிறது, மனிதர்களும் , நிகழ்காலமும்,  நிகழ்காலப்பிரச்சினைகளும் வெகு தூரத்திலேயே நிற்கின்றன, ( மனிதர்களை வைத்து எழுதினால் யாரோ பகைத்துக்கொள்வது போல தூரமே நிற்கிறார்கள். அம்மா, அய்யாக்களைப் பற்றியா எழுதப்போகிறோம்.   ) இந்தச்சூழலில்தான்  ஓகே குணநாதன் குழந்தைகளுக்கு காட்சிப்பூர்வமாக நிறைய விசயங்களைச் சொல்லவும் உணர்த்தவும் விரும்புகிறார். அதை தன் நூல்களில் வெளிப்படுத்துகிறார். குறைந்த சொற்கள், நிறைந்த காட்சி ஓவியங்கள். விரிந்த களன், சிறந்த செய்திகள் என்பதே ஓகே குணநாதனின் சிறுவர் கதைகளின் சிறப்பு என்பதால் தமிழகச்சூழலில் எழுதப்படும் சிறுவர் கதைகளிலிருந்து மாறுபட்டு நிற்கிறார். விஞ்ஞானச்செய்திகள், மூட நம்பிக்கைகளை தகர்க்கும் சொல்லாடல்கள் என்று அவரின் சமீபப் படைப்புகள் கிரீடம் கொள்கின்றன

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 18 April 2016 22:08