இருக்கிற கடவுள்களும், இனி வரப் போகும் கடவுள்களும்! கை விட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள். தங்கர்பச்சான் கதைகள் தொகுப்பு

Sunday, 22 June 2014 00:00 - சுப்ரபாரதிமணியன் - சுப்ரபாரதிமணியன் பக்கம்
Print

சுப்ரபாரதிமணியன்தங்கர் பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு " வெள்ளை மாடு "  வெளிவந்த போது முந்திரித் தோட்டத்து மனிதர்களின் வாழ்வியலை  அவ்வளவு நகாசு தன்மையுள்ளதாக இல்லாமல் வெளிப்பட்டிருபதாக ஒரு விமர்சனம வந்தது, பின் நவீனத்துவ எழுத்து  தீவிரமாக இருந்த காலகட்டம் அது. பின்நவீனத்துவக் காலகட்டத்தில் கலை அம்சங்களும் நகாசுத்தன்மையும் கூட அவலட்சணமே.காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் விவரிப்பில் இலக்கண நேர்த்தியோ  நகாசோ எதிர்பார்பது ஒரு நாகரீக சமூகமாகாது. அந்தக் குறறச்சாட்டு போல் அக்கதைகள் இல்லை.பசியின் கோரம் அடுப்புக்குத் தெரியாது  தீவிரப் பிரச்சினைக்கு நகாசு தெரியாது. தங்கர்பச்சானின் கதாபாத்திரங்கள்  பின்நவீனத்துவம் கொண்டாடும் விளிம்பு நிலை மனிதர்களே. விவசாயக்கூலிகள், சம்சாரிகள், கரும்புத்தோட்டத் தொழிலாளர்கள், வேதனையிலேயே உழன்று கொண்டிருக்கும் பெண்கள் எனலாம். கொம்புக்கயிறு  இல்லாத மாடு அவலட்சணமாக இருப்பது போல் அவலட்சனமான விளிம்பு நிலை மக்கள் இவருடையது.

குடிமுந்திரி கதையில் முந்திரி   மரத்தின் மீது ஏறி நின்று நெய்வேலி  சுரங்கக கட்டிடங்களை, புகைபோக்கிகளைப்  பார்க்கும் சிறுவர்கள் போல தங்கர்பச்சான் தோளில் ஏறி நின்று வாசகர்கள்  கடலூர்  மக்களின் வாழ்வியலைப் பார்க்க முடிகிறது.இதில் இவர் கையாளும் மொழி  உணர்ச்சிப்பிழமான கதை சொல்லல் மொழியாகும்.அந்த பாதிப்பே அவரின் திரைப்பட மொழியில் பல சமயஙக்ளில் உணர்ச்சி மயமான காட்சி அமைப்புகளால்பாதிப்பு ஏற்படுத்தி பலவீனமாக்குகிறது.. திரை தொழில் நுட்பம் தீவிர இலக்கியத்திலிருந்து பிறந்தது எனப்தையொட்டிய அவரின் காமிராமொழியும், சொல்லும் தன்மையும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளன.

 முந்திய  மூன்று சிறுகதைத்தொகுப்புகள் , ஒரு குறு நாவல் தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது  இந்த “ தங்கர்பச்சான் கதைகள்”  தொகுப்பு..இக்கதைகளில் பெரும்பான்மயானவை இலக்கியப் பத்திரிக்கைகளில் வந்தவை.  இலக்கியப் பத்திரிக்கைகளில் எழுதுகிற குற்ற உணர்வு பலருக்கு உண்டு, ஆனால் அதைப் பெருமிதத்தோடு இவர் சொல்கிறார். திரைப்படக்கலைஞனாக வாழ்க்கை வீணாகி விட்டது என்று இவர் தரும் வாக்குமூலம் இலக்கிய இதழ்களில்  கதைகள் எழுதுகிறவனுக்கு ஆறுதல் தருகிறது.

இலக்கியப்பிரதிகளை திரைப்படங்களாக்குகிற இவரின் முயற்சி இல்க்கியத்தளத்தில் இவருக்கு இருக்கும் அக்க்றையைக் காட்டுவதாகும்.கல்வெட்டு என்ற சிறுகதையின் தன்லட்சுமி " அழகி " ஆனாள்.  தலைகீழ் விகிதங்கள் முதல் ஒன்பது ரூபாய் நோட்டு,  அம்மாவின் கைபேசி  வரை நாவல்கள் படங்களாகியிருக்கின்றன.

மரபு ஒரு சுமையாக இல்லாமல் ஒரு வரமாகவோ, மகிழ்ச்சிக்குறிய விசயமாக பழக்க வழக்கங்களில் சடங்குகளில் மிச்சமிருப்பதை இவ்ரின் கதைகளின் போக்கில் தெரிந்து கொள்ள முடிகிறது. முந்திரிக்காடு  காலகாலமான சடங்குகளை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கிறது. சடங்குகளும் விதியும் இவரின் கதை முடிவுகளை சில கதைகளில் சாதாரணமாக்கி விடுகின்றன. இவரின் பெண் கதாபாத்திரங்கள் இந்தச் சடங்குகளுக்குள் அமிழ்ந்து போனவர்கள். மீட்சி இல்லாதவர்கள். கடவுள்களால் கைவிடப்பட்டவர்கள். அம்மாக்களின் முந்தானைக்குள் ஒளிந்து அறிமுகமாகும் இவரின் குழந்தைகளின் விளையாட்டு உலகம் அதிசயமானது. இயறகையின் மீதான நேசத்தில் உலவும் இவரின் கதாபாத்திரங்கள்,  கால்நடைகள் உயிர்ப்போடு இக்கதைகளில் உலாவுகின்றன. சாதியின் உக்கிரங்களையும் இவர் காட்டத் தயங்குவதில்லை.  நுகத்டியில் அமிழ்ந்து போகும் கடும் உழைப்பாளிப் பெண்கள் போலில்லாமல் சாதியால் அழுத்தப்பட்ட பிற்பட்ட சாதி சார்ந்தவர்கள் பல வகைகளில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். கிணற்றுக்குள் சிறுநீர் கழிப்பது போன்ற சிறு சிறு எதிர்ப்புச் செயல்கள் மூலம் இது வெளிப்படுகிறது. பல கதைகளில் சாவைச் சந்திக்கிறோம். தற்கொலைகளில் நிறையப் பேர் இறந்து போகிறார்கள். எதிர்மறை கதாநாயகர்கள் பணத்துக்காக கொலைகளையும் செய்கிறார்கள். சாவு பற்றி இக்கதைகளில் அதிகம் பேசப்பட்டாலும் சாவு தீர்வல்ல என்பதையும் சொல்கிறார்.கிராமம் பற்றிய ஏக்கத்தையும் நகரம் பற்றிய பயத்தையும் இவரின் கதைகள் எழுப்புகின்றன..

இத்தொகுப்பில் பல இடங்களில் முன்னுரையிலும் ஆங்கிலக்கல்வியின் வன்முறை,  தாய்த்தமிழ்கல்வி பற்றி பேசுகிறார். மாற்று வைத்தியத்திற்கான தேவை குறித்துச்ச் சொல்கிறார்.கலாச்சாரம் சார்ந்த உடை, உணவு சார்ந்த நிறைய குறிப்புகளைக் காண முடிகிறது. இவையெல்லாம் மாற்றுப் பண்பாடு குறித்த இவரின் அக்கறையைக் காட்டுகின்றன.மண் சார்ந்த கதைகளை நுட்பமான பிரச்சினைகள் ஊடே படைத்திருக்கிறார்.  மாற்றுப்பண்பாடு குறித்த கேள்விகளுக்குப் பின் இருக்கும் இவரின் அரசியல்  குரலையும் இதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். 

1993ல் இவரின் முதல் சிறுகதை வெளிவந்தது. 10 ஆண்டுகளுக்குப்பின் இவரின் முதல் தொகுப்பு வெளிவந்தது. 20 ஆண்டுகளுக்குப்பின்  இந்த மொத்தத் தொகுப்பு வந்திருக்கிறது 20 கதைகளுடன். திரைப்படத் துறைப்பணிகளூடே இலக்கியப்பணியும் தொடர்கிறது, நனவோடை உத்தியும், கதைசொல்லியின் பார்வையும், காட்சி ரூப அம்சங்களும் கொண்ட இக்கதைகள் முந்திரிக்காட்டு மனிதர்களின் மனச்சாட்சியின் குரலாக அமைந்துள்ளன.

( உயிர்மை பதிப்பகம், சென்னை வெளியீடு
விலை ரூ 210 )
 
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 22 June 2014 00:02