தமிழ்மகனுக்கு இன்னுமொரு விருது

Tuesday, 12 March 2013 21:26 - சுப்ரபாரதிமணியன் - சுப்ரபாரதிமணியன் பக்கம்
Print

தமிழ் மகனின் 'வனசாட்சி'தமிழ்மகன்நீலகிரி மலையைச்  சார்ந்த ” மலைச்சொல்” என்ற இலக்கிய  அமைப்பு  இவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான “ மலைச் சொல்” இலக்கிய விருதை தமிழ்மகனின் சமீபத்திய  நாவலான “ வனசாட்சி” க்கு கோவையில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.  எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நிர்மால்யா, திலகபாமா, விஜயா பதிப்பகம் வேலாயுதம், பால நந்தகுமார், மு.சி. கந்தைய்யா ஆகியோர் நாவல் பற்றி பேசினர்.  ரூ 10,000 ரொக்கப்பரிசு கொண்டது இப்பரிசு.” மலைச் சொல் “ அமைப்பு வழக்கறிஞர் நந்தகுமார் அவர்கள் தலைமையில் இயங்குவதாகும். தமிழ்மகன் தனது இந்த அய்ந்தாவது நாவலின் பின்னணியை  முந்திய நாவல்களின் களமான திராவிட அரசியல், திராவிட  ஆளுமைகள், திரைப்படம், அவற்றின் உளவியல் பாதிப்புகள் ஆகியவற்றிலிருந்து  வேரோடு பிய்த்துக் கொண்டு  இலங்கைப் பின்னணிக்கு நகர்த்தியிருக்கிறார்  என்பது ஆரோக்யமான விசயம். படைப்பாளி புதிய களங்களில் இயங்குவது உற்சாகமாக இருக்கும்.வழமையான அனுபவங்களிலிருந்து புது அனுபவ வார்ப்புகள் கிடைக்கும். இன்னொருவரின் ஆவியாக இருந்து கொண்டு செயல்படுவதில் நிறைய சவுகரியங்கள் உண்டு.இந்த சவுகரியத்தை உற்சாகமாக இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.அவரின் ஆர்வமான படைப்பு வீச்சிற்கு சவாலாகி சமாளித்திருக்கிறார்.

 

இலஙகை  மலையகத்தமிழர்களின் வாழ்க்கையூடே வெவ்வேறு தளங்களில்  அதிகாரங்கள் குவியும் வாய்ப்பு ஏற்படும் போது  மனித வேதனையின் விளைவு எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதை இந்நாவல் காட்டுகிறது. இந்த நாவலின் மூன்று பாகங்களாக அமைத்திருக்கிறார்.200 ஆண்டுகளுக்கு முன்  வேலூர் மாவட்டத் தமிழர்கள் சிலர் இலங்கைக்கு  தேயிலைத் தோட்டப்பணிக்காக  செல்லுவது. முதல் பாகமாகியிருக்கிறது. இரண்டாம் பாகம் சிறிமாவோபண்டாரநாயகா சாஸ்திரி ஒப்பந்த்தின்படி மலையக வாழ் தமிழர்கள் சிலர் தமிழகம் திரும்புவது  என்று அமைந்துள்ளது. மூன்றாம் பாகம் முள்ளி வாய்க்கால் சம்பவத்திற்குப் பிறகு கல்லூரி ஆசிரியர் ஒருவர் தன் அத்தையைத் தேடிஇலங்கைக்குச் செல்வது, திரும்புவது என்றமைந்திருக்கிறது.  வன்னியுத்தம் பற்றிய  பதிவாகவும் இப்பகுதி  அமைந்துள்ளது. 

இவ்வாண்டு சர்வதேச தேனீர் ஆண்டு . சமீப ஆண்டுகளில் வெளியான  “ எரியும் பனிக்காடு “ மொழிபெயர்ப்பு நாவல் முதல் அன்வர் பாலசிங்கத்தின்  “ செந்நீர் “ நாவல் வரை இவ்வாண்டை நினைவு கூறுகின்றன.   இந்நாவலும்  கூட...அதிகாரத்தினை கேள்விக்குறியதாக்கி, கட்டுடைக்கிறது இதன் மையம். இதை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 23 August 2013 19:08