கோவை ஞானி என்ற போராளி

Wednesday, 06 March 2013 20:17 - சுப்ரபாரதிமணியன் - சுப்ரபாரதிமணியன் பக்கம்
Print

கோவை ஞானிசுப்ரபாரதிமணியன்சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு தத்துவார்த்தத்தளத்திலும், அரசியல் நிலைப்பாடுகளிலும் கோவை ஞானியின் தொடர்ந்த செயல்பாடு தீவிரமாகவே அமைந்தது.கீழை மார்க்சீயம், மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்ற நிலையில் தொடர்ந்து தனது சிந்தனைகளை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தார்.  பொதுவுடமையின் வீழ்ச்சி, பொதுவுடமையின் போதாமைக்கு பிறகு வளர்தெடுக்கப்பட்ட பின்நவீனத்துவம் சார்ந்து சிந்தனைகளும், கூட்டங்களும், பயிலரங்குகளும் என்று தொடர்ந்து நடத்தினார். அவரின் விளிம்பு நிலை மக்களின் ஆய்விற்கும் விளக்கத்திற்கும் இது இன்னும் உரமளித்தது. அமைப்பியல்வாதம் சார்ந்து அவரின் சிந்தனைகள் இன்னும் வலுப்பெற்றன.கட்டுடைத்தலும் அது சார்ந்த உளவியல் அணுகுமுறைகளும் தமிழ் விமர்சனத்தை வலுப்படுத்தின. பின்நவீனத்துவம் சார்ந்த சிந்தனைகளுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்ந்தவர்களின் நிராகரிப்பும், கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சார்ந்த வெகு சிலரின் இணக்கமான  அணுகுமுறைகளும் தொடர  பொதுவுடமை சார்ந்த பின் நவீனத்துவ அணுகுமுறைகளை வளர்தெடுக்கவேண்டியது பற்றிய அவரின் தொடர் சிந்தனை முக்கிய பங்களிப்பாக இருந்திருக்கிறது. தலித் இலக்கியச் சார்பும், தத்துவமும் இதிலிருந்து  பெறப்படக்கூடியதாக வழிகாடுதலை முன் வைத்தார்

அதிகாரத்திற்கெதிரான குரலை எப்போதும் வெளிக்காட்டிக் கொண்டே இருந்தார். பொதுவுடமை  கட்சிக்காரர்கள் அவரை திரிபுவாதி என்று முத்திரை குத்தி  புறந்தள்ளியபோதெல்லாம் அவர்களுக்கு எதிரான குரலை எழுப்பிக் கொண்டே இருந்தார்.அவர்களின் தேர்தல் பாதையை கடுமையாக விமர்சித்தார்.கல்வித்துறை சார்ந்த விமர்சனங்களுக்கும் குறை வைக்கவில்லை.

மார்க்சியம் வழியான தமிழ் தேசியத்திற்கு வந்தடைந்தார். தமிழ் தேசியம் இன்னும் வளர்தெடுக்க வேண்டிய அம்சங்களை தொடர்ந்து சிந்தனைக்குற்படுத்தினார்.       

மாற்று கலாச்சார விசயங்களைத் தொடர்ந்து முன் நிறுத்துபவராக இருந்து கொண்டே இருக்கிறார்.விளிம்பு நிலை மக்களின் அரசியல் விடுதலை அவர் பேச்சிலும் சிந்தனையிலும் இருந்திருக்கிறது. சுமார் 40 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணி புரிந்தாலும் ஆங்கிலக் கல்வியின் அதிகாரம் சார்ந்தவற்றையும், ஆங்கிலக் கல்வியின் வன்முறையையும் தொட்ர்ந்து வெளிப்படுத்தி வந்தார். தமிழ்ப்பள்ளிகள் மீதான கரிசனை அவரை தமிழ்ப்பள்ளியாளர்களுடன் இயங்க வைத்தது. . வெகுஜன் கலாச்சார நுகர்வு அம்சங்களை முன்னிருத்தும் பகாசூர படைப்புகள் மத்தியில்   சிற்றிதல்களின் அவசியம் சார்ந்து புதிய தலைமுறை, நிகழ், பரிமாணம், தமிழ் நேயம் என்று தொடர்ந்து அவரின் செயல் பாடுகள் இருந்தன.சிறுபத்திரிகையாளர்களோடு இணக்கமான அணுகுமுறையில் தொடர்ந்து பொது அடிப்படை கருத்துக்கள் சார்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறார்.   பெண்கள் மீதான பார்வையோ, சிறுபான்மையினர் மீதான கரிசனமோ அவரை விடுதலைக்கு முன் நிறுத்துகிறது.

கலை என்ற போராற்றல் மனிதனின் ஜீவ சக்தியாக இருப்பதை தொடர்ந்து எடுத்து சொல்லிக் கொண்டிருப்பவர்.படைப்பு சார்ந்து இயங்கும் மனம் அது சார்ந்த ஆன்மீக விடுதலை நோக்கி தொடர்ந்து தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருப்பவர்.இந்தப் பாதையில் அவர் மார்க்சியப் பார்வையை அழுத்தமாகப் பதித்திருக்கிறார்.கலை சார்ந்த உண்மைகள் மார்க்சியர் அல்லாதவரிடமிருந்து வரும் போதும் அதை போற்றியிருக்கிறார். கலை அனுபவம் தரும் ஆனந்தம்  என்றைக்கும் அவரை பரவசப்படுத்தியிருக்கிறது.  இது குறையாகவும் சில சமயம் மேலோங்கியிருக்கிறது.அவர் தொடர்ந்து கலாச்சாரப் போராளியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் செயப்பாடுகளில் ஈடுபட்டிருப்பது புதிய தலைமுறையினருக்கு ஆதர்சமாக விளங்க வைக்கிறது.

( கோவை இலக்கியச் சந்திப்பு அமைப்பின் சார்பில் கோவை ஞானியின் படைப்புலகம் பற்றிய ஒரு நாள்  கருத்தரங்கில்  இடம் பெற்ற சுப்ரபாரதிமணியனின் உரையின் ஒரு பகுதி இது.தமிழவன், சு. வேணுகோபால், ஆதி, இரண்யன், அரங்கமல்லிகா, செந்தமிழ்த்தமிழ்த்தேனி,வே.சுகுமாரன், புனிதவதி, எஸ்.என்.நாகராஜன், செ.சு.பழனிச்சாமி,  செங்கோடன், துரைமடங்கன், இளஞ்சேரல், இளவேனில், பொதிகைச்சித்தர், பாவண்ணன்,அறிவன், அஜயன்பாலா.ஜவஹர், செல்வி உட்பட பலர் உரையாற்றினர். க.பஞ்சாங்கம், பூரணச்சந்திரன், பிலிப் சுதாகர்  போன்றோரின் கட்டுரைகள்  வாசிக்கப்பட்டன்.)

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 23 August 2013 19:15