செப்டெம்பர் 11 ஆம் திகதி மகாகவி பாரதி நினைவு தினம்

Sunday, 13 September 2020 00:50 - முருகபூபதி - எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
Print
எழுத்தாளர்  முருகபூபதி

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் “ எனச்சொன்ன பாரதியை, ருஷ்யமொழிக்கும் சிங்கள மொழிக்கும் அறிமுகப்படுத்திய தமிழ் அபிமானிகள் !

செப்டெம்பர் 11 ஆம் திகதி - மகாகவி பாரதியின் நினைவுதினத்தை முன்னிட்டு, வழக்கம்போன்று பாரதி பற்றி எழுதாமல், பாரதியை பிறமொழிகளுக்கு அறிமுகப்படுத்தி கொண்டாடிய பிறமொழிகளை தாய்மொழியாகக் கொண்டிருந்த தமிழ் அபிமானிகள் பற்றிய குறிப்புகளை பதிவுசெய்வதற்காக எழுதப்பட்டதே இந்த ஆக்கமாகும்.

இலங்கையில்   1982 -  1983    காலப்பகுதியில்   எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,      பாரதி     நூற்றாண்டு விழாக்களை   நாடு   தழுவிய    ரீதியில்     நடத்தியபொழுது,     83   ஜனவரியில்      தமிழகத்திலிருந்து      வருகைதந்த    மூத்த    படைப்பாளியும்      பாரதி    இயல்     ஆய்வாளருமான    எனது   உறவினர் தொ.மு. சி.ரகுநாதன்   அவர்கள்     எனக்காக       இரண்டு      பெறுமதியான    நூல்களை தம்மோடு எடுத்துவந்து   எனக்குத் தந்தார். ஒன்று, அவர்      எழுதிய     அவரது      நெருங்கிய     நண்பர்      புதுமைப்பித்தன்     வரலாறு       மற்றது,      மகாகவி      பாரதி     பற்றி    சோவியத்     அறிஞர்கள்     என்ற நூல். பாரதி    நூற்றாண்டை  முன்னிட்டு      சோவியத் விஞ்ஞானிகள்,கவிஞர்கள்,   எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்  இணைந்த     ஒரு குழு      நூற்றாண்டை    சோவியத்தில்   கொண்டாடுவதற்காக மாஸ்கோவில்        அமைக்கப்பட்டது. அந்தக்குழுவில்    இணைந்திருந்த     சோவியத்    அறிஞர்கள்     செர்கிஏ.பரூஜ்தீன்    -        பேராசிரியர்   -   இ.பி.    செலிஷேவ்   கலாநிதி      எம்.எஸ்.ஆந்திரனோவ்   -       கலாநிதி     விளாதீமிர்   ஏ. மகரெங்கோ,   கலாநிதி    வித்தாலி     பெத்ரோவிச்      ஃபுர்னிக்கா   -      கலாநிதி    எல். புச்சிக்கினா  (பெண்) கலாநிதி   செம்யோன்      கெர்மனோவிச்      ருதின்    (இவரது தமிழ்ப்புனைபெயர்    செம்பியன்)        கலாநிதி      அலெக்சாந்தர்     எம் துபியான்ஸ்கி   -   திருமதி     இரினா    என்.    ஸ்மிர்னோவா     ஆகியோரின் பெறுமதியான     கட்டுரைகள்      இந்தத்   தொகுப்பில்     இடம்பெற்றிருந்தன. பெறுமதியான      என்று        குறிப்பிடுவதற்குக்காரணம்        இருக்கிறது.

தமிழ்நாட்டில்       எட்டயபுரம்    என்ற       கிராமத்தில்  1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி     சுப்பையாவாகப்பிறந்து  1921 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி சென்னையில்   திருவல்லிக்கேணியில்       மகாகவியாக     மறைந்து      -    இறுதி      ஊர்வலத்தில்     விரல்  விட்டு எண்ணக்கூடியவர்களே     கலந்துகொண்ட     அக்காலத்தில்     அந்த     உலக மகாகவியின்      பெருமை       பற்றித்தெரிந்திராத      தமிழ்       உலகத்திற்கு  -ஆயிரக்கணக்கான      மைல்களுக்கு       அப்பால்     கடல்   கடந்து   வாழ்ந்தவர்கள்       அந்த      நூற்றாண்டுவேளையில்       ஆய்வு    செய்து எழுதியமைதான்     அந்தப்பெறுமதி.

பாரதியார்குறிப்பிட்ட      தொகுப்பில்       எனது     கண்ணில்     பட்ட     முக்கியமான  பெயர்       வித்தாலி    ஃபுர்னிக்கா.        இவர்    தமிழக       படைப்பாளிகளுடன் மட்டுமல்ல    -   ஈழத்து    இலக்கியவாதிகள்      சிலருடனும்      கடிதத்தொடர்பில்      இருந்தவர். நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில்   அவர்  மல்லிகை ஜீவாவுக்கு    எழுதியிருந்த      கடிதம்     ஒன்றையும் பார்த்திருக்கின்றேன்.       எதிர்பாராத   விதமாக    எனக்கு    1985    இல் மாஸ்கோவில்     நடந்த      சர்வதேச     இளைஞர் மாணவர் விழாவுக்குச்செல்வதற்கு அழைப்பு   கிடைத்தவுடன்     ருஷ்ய   மொழி      தெரியாத நாட்டில்       இலங்கைத்   தமிழ்     மாணவர்கள் கற்றுக்கொண்டிருந்தாலும்       இலக்கியம்      பேசக்கூடியவர்       யார்     இருப்பார்கள் என்ற     யோசனை       வந்தது.       உடனே       யாழ்ப்பாணத்திலிருந்த மல்லிகை      ஜீவாவுடன்     தொடர்புகொண்டு       ஃபுர்னிக்காவின் முகவரியைக்       கேட்டேன். அவர் மாஸ்கோ     ராதுகா    பதிப்பகத்தின் முகவரியைத்   தந்தார். ஃபுர்னிக்கா     அங்குதான் பணியிலிருக்கிறார்  என்ற  தகவலையும் சொன்னார். உடனே     அவசரமாக    ஃபுர்னிக்காவுக்கு     எனது       வருகை பற்றி      கடிதம் எழுதினேன். மாஸ்கோவுக்கு சென்றதும் நாம்  தங்கியிருந்த இஸ்மயிலோவா ஹோட்டலுக்கு     சில    இலங்கைத்      தமிழ்       மாணவர்கள் எம்மைத்தேடிக்கொண்டு      வந்தனர்.      அவர்களில்      ஒருவர்      ஈழத்து    மஹாகவி  உருத்திரமூர்த்தியின்      மூத்த    மகன்    பாண்டியன்.   ( கவிஞர் சேரனின்      அண்ணன்)     இவருக்கும்    ஃபுர்னிக்காவை     தெரிந்திருந்தது.  அவரே    என்னை    ராதுகா      பதிப்பகத்திற்கு     அழைத்துச்சென்றார். எங்கள்      அன்புக்குப்    பாத்திரமான சோவியத்  எழுத்தாளரும்   தமிழ் இலக்கியத்தின்      மீது     அளவற்ற     அக்கறையும்      தமிழ் இலக்கியவாதிகளிடத்தே      ஆத்மார்த்தமான       நேசிப்பும்      கொண்ட     விதாலி ஃபுர்னீக்கா        நினைவில்       கலந்துவிட்ட        அற்புதமான      மனிதர்.

ஃபுர்னீக்கா,   சோவியத்     நாட்டில் உக்ரேயன்      மாநிலத்தில்    1940    இல் சாதாரண      விவசாயக்       குடும்பத்தில்      பிறந்தார்.      தமது     25    வயதுவாலிபப்     பருவத்தில்       லெனின்      கிராட்      நகரில்      கட்டிடத் தொழிலாளியாக      வேலை     செய்து     கொண்டிருந்த       சமயம்,    ஒரு  நாள் புத்தகக் கடையொன்றுக்குப்       போயிருக்கிறார். அங்கே      ருஷ்ய      மொழியில்    பெயர்க்கப்பட்ட  இந்திய தமிழ் கவிஞரின்      கவிதை       நூல்      அவர்      கண்களுக்கு      எதிர்பாராத       விதமாக தென்படுகிறது. அக்கவிதைகளின்   ஆசான்     எங்கள்  மகாகவி    பாரதிதான்.     அந்தச்சர்வதேச     கவியின்      சிந்தனைகளும்      சர்வதேச    வியாபகமாக உருப்பெற்ற      கருத்துக்களும்      இந்தத்     தொழிலாளியை    பெரிதும் கவர்ந்து     விடுகிறது. வாழ்வுக்கு      வருமானம்       தந்துகொண்டிருந்த     தொழிலை     உதறிவிட்டு, லெனின் கிராட்      பல்கலைக்கழகத்தின்      தமிழ்ப் பிரிவில்    மாணவராகச் சேர்ந்துவிடுகிறார்         விதாலி ஃபுர்னீக்கா. அன்று  முதல், அதாவது     1965    ஆம்     ஆண்டு      முதல்   -     தமது மறைவு       வரையிலும்    தமிழையும்   தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.

இலக்கிய      வட்டாரத்தில்      பிரசித்தமான     ஃபுர்னீக்காவை      தமிழ்      மக்களில்     எத்தனை பேர்      அறிந்துள்ளார்கள்..?       எனவே     இங்கு     அவருக்கு         அறிமுகம்     அவசியம்       எனக் கருதுகின்றேன். இந்த     அறிமுகப்படுத்தல்    -    அவருக்கு      பெருமை     சேர்ப்பதாகவும் ‘உணர்ச்சி’      நிலையிலேயே       ‘தமிழ்க்கோஷம்’ போட்டுக்கொண்டு அறிவுபூர்வமாகச்       சிந்திக்கத்      தவறிப்போகின்றவர்கள்      கண்டு கொள்ளத் தவறிய      அந்த      மாமனிதரின்      தமிழ்ப்பணியை    நினைவு படுத்துவதாகவுமே      அமைகிறது.

ஒரு  விவசாய  பாட்டாளி  வர்க்கப் பிரதிநிதி   (இவரது     பெற்றோர்உருளைக்கிழங்கு பயிர்     செய்யும்      பண்ணைத்   தொழிலாளர்கள் ) மகாகவி     பாரதியின்    சிந்தனைகளாலும்     செழுமையான கவித்துவத்தினாலும்    ஆகர்சிக்கப்பட்டு   தமிழைப் பயின்று    தமிழ், கலை,     இலக்கியங்களையும்     படைப்பாளிகளையும்,   தமிழ் பேசும் மக்களையும்   தேடி அலைந்து,     தனது      தீராத     தமிழ்த் தாகத்தைத் தணித்துக்கொள்ள      வாழ்நாளில்    கால்  நூற்றாண்டுக்கும்   மேலான பெரும்பகுதி      நேரத்தை      செலவிட்ட   இந்த  சோவியத்   அறிஞரின்    சேவை காலத்தில்     பதிவு      செய்யப்படவேண்டியது.

‘செம்பியன்’  என  தமிழ்  இலக்கிய   உலகில் அறியப்பட்ட சோவியத்    அறிஞர்    கலாநிதி  செம்யோன்  நுதின்    அவர்களிடம்    1965      இல்    பயிற்சி    பெறத் தொடங்கிய    ஃபுர்னீக்கா, பின்னர்      தமிழகம்     வந்து      சென்னைப் பல்கலைக்கழகத்தில்     டாக்டர் மு.வரதராசனிடம்     பயின்றார். ‘தமிழகப்பித்தன்’ எனப் புனைபெயரும்      வைத்துக்கொண்டார். சோவியத்       விஞ்ஞானப் பேரவையின்     அனுசரணையில்     இயங்கிய மாஸ்கோ    ஓரியண்டல்     இன்ஸ்ரிரியூட்டில்     கலாநிதி பட்டம்   பெற்றார். தமது     கலாநிதிப் பட்டத்தின்     ஆய்வுக்காக  ‘தற்காலத்     தமிழ்   இலக்கியம்’,       ஜெயகாந்தனின்     படைப்பிலக்கியம்     முதலானவற்றைத்    தேர்ந்தெடுத்தார்.      இவர்      எழுதிய    நூற்றுக் கணக்கான      கட்டுரைகள்     தமிழ் இலக்கியம்,   தமிழர்    பண்பாடு, கலாசாரம்     சார்ந்ததாகவே      அமைந்தன. சோவியத்     மக்களுக்கு      தமிழ்     மக்களையும்     அவர்தம்     கலை, இலக்கியங்களையும்      நம்பிக்கைகளையும்     பண்பாட்டு விழுமியங்களையும் சிறப்பாக அறிமுகப்படுத்தியவர்களின்  வரிசையில் ஃபுர்னீக்கா பிரதான     இடத்தை    வகிக்கின்றார். பாரதிநூற்றாண்டு      கொண்டாடப்பட்ட      வேளையில்       சோவியத் குழுவின்      செயலாளராகவும்      பணியாற்றினார். ஈழத்து    இலக்கியம்     தொடர்பாகவும்      ஆராய்ந்து – பல    ஈழத்துஎழுத்தாளர்களைப்  பற்றியும்  எழுதினார்.   ஈழத்து      படைப்பிலக்கியங்கள் பலவற்றை    ருஷ்ய மொழியில்      பெயர்த்தவரும்     இவர்தான்.

ருஷ்யப்புரட்சியை பாரதி வரவேற்றுப் பாடியதனால் அவரை அங்கு பலரும் படித்தனர், அவருடைய படைப்புகளை மொழிபெயர்த்தனர். பிஜித்தீவில் கரும்புத்தோட்டங்களுக்கு இந்தியாவிலிருந்து கூலி அடிமைகளாக அழைத்துச்செல்லப்பட்ட  தமிழர்களின் அவலத்தை பாரதியார், கேட்டிருப்பாய் காற்றே என்ற கவிதையில் கண்ணீருடன் சொல்லியிருப்பார். அதற்காக பிஜியில் வாழ்ந்தவர்கள் அவரை கொண்டாடியதாக ஆதாரங்கள் இல்லை. ஆனால்,  ருஷ்யாவில் ஜார் மன்னனின் வீழ்ச்சியையும் அங்கு நடந்த எழுச்சிப்போராட்டத்தையும் யுகப்புரட்சி என்று பாடியதனால் அங்கு வாழ்ந்த பலர் பாரதியை மேலும் மேலும் அறிந்துகொள்ள முயன்றனர். சோவியத் ஆராய்ச்சியுலகில் பாரதி என்ற தலைப்பில் ஃபுர்னிக்கா எழுதியிருந்த கட்டுரையின் தொடக்கம் இவ்வாறு அமைந்திருந்தது.

"இந்திய மகாகவியான சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தின நூற்றாண்டில் பாரதி பற்றிய சோவியத் யூனியனில் வெளிவந்துள்ள அவரது படைப்புக்களையும் பரிசீலிப்பது முற்றிலும் பொருத்தமேயாகும். மாஸ்கோவிலும் லெனின்கிராடிலும் உள்ள மேற்கல்வி நிலையங்களில் திராவிடவியல் அறிஞர்களைப் பயிற்றுவிக்கும் முறையான வகுப்புக்களைப் புகுத்தியதன் காரணமாகவே, பாரதி பாரம்பரியம் பற்றிய ஆராய்ச்சியும் சாத்தியமாயிற்று" ( ஆதாரம் - சோவியத் நாடு இதழ்)

இக்கட்டுரை வெளியான இதழில் சோவியத் ஓவியர் மிகையீல் பெதரோவ் என்பவர் வரைந்த மகாகவி பாரதி ஓவியமும் இடம்பெற்றிருந்தது. அந்தவகையில் பாரதி அங்கிருந்த கல்வியாளர்கள், அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், படைப்பாளிகளிடம் மட்டுமன்றி ஓவியர்களிடத்திலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது புலனாகிறது. தமிழகத்திலும்     ஈழத்திலும்    ஃபுர்னிக்காவின்      நண்பர்கள்      பெரும்பாலும் இலக்கியவாதிகளாகவும்   பத்திரிகையாளர்களாகவும் மொழிபெயர்ப்பாளர்களாகவும்       திகழ்கின்றனர். தமிழகத்தில்      ஊர்ஊராகச்     சுற்றி      அலைந்து      தகவல்கள்      திரட்டி தமிழரின்      தொன்மை -     நாகரீகம் - நம்பிக்கை, -சடங்குகள் - சம்பிரதாயங்களையெல்லாம்      ஆராய்ச்சி செய்து    ருஷ்ய     மொழியில் அரிய நூல்       ஒன்றையும்     அவர்  வெளியிட்டார்.


மாஸ்கோவில்       இறங்கியவுடனேயே      நான்       தொலைபேசியில்     தொடர்பு கொண்ட      முதல் அன்பர்      ஃபுர்னீக்கா    அவர்கள்தான். புறப்படுவதற்கு    முன்பே   நான்     அவருக்கு     அனுப்பியிருந்த     கடிதமும் அவர்வசம்      கிடைத்திருந்தது. ராதுகா என்றருஷ்ய  சொல்லுக்கு வானவில் என்று  அர்த்தம்.    எனக்கு     இதனைச் சொல்லித்       தந்தவரும்    ஃபுனீர்க்காதான். ஒரு காலகட்டத்தில்

பல      சோவியத்      இலக்கியங்களை     தமிழில்     நாம்     படிப்பதற்கு     இந்தப் பதிப்பகம்தான் காரணம்.      சிறந்த      முறையில்     அச்சிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட    பல    நூல்களை  இந்த  வானவில் எமக்கு வழங்கியுள்ளது.    கொழும்பில்     மக்கள்      பிரசுராலயத்திலும்    சோவியத்     தூதரக      தகவல்    பிரிவிலும்   சென்னை நியூசெஞ்சரி புக் ஹவுஸ் ( N.C. B. H ) பதிப்பகத்திலும்  பெற்று     படித்திருக்கிறேன். ஃபுர்னீக்காவின்     தாயகம்    உக்ரேய்ன்.     தாய் மொழியும்    அதுவே. தமிழுக்குப் பாரதி    –  வங்கத்திற்கு     தாகூர்    என்றால்    உக்ரேயினுக்கு தராஷ்     செவ்ஷென்கோவ். நான்     மாஸ்கோவில்  ஃபுர்னீக்காவை     சந்தித்த    காலப்பகுதியில்     அந்த உக்ரேய்ன்      மகாகவியின்    125    ஆம்      வருட      நினைவு நாள்   சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான    பூர்வாங்க    வேலைகளில்     அவர்     ஈடுபட்டிருந்தார். தராஷ் செவ்ஷென்கோவை      உலகின்    இதர     மொழிகளில் அறிமுகப்படுத்தியவர்கள்      யார் ?    யார் ?   என்று    தேடிக் கொண்டிருந்தார் ஃபுர்னீக்கா. அன்றைய     எமது     சந்திப்பு      அவருக்குப்      பெரும்      உதவியாக     இருந்தது.

“ தோழரே  -    இலங்கையில்       கே.கணேஷ் -  எச்.எம்.பி. மொஹிதீன்   ஆகியோர்       எங்கள்       உக்ரேய்ன்    மகாகவியைப்     பற்றி    நன்கு     அறிந்து       எழுதியவர்கள்.      அவரின்      கவிதைகளைத்     தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.      எனது     நீண்ட கால      நினைவில்      அவர்கள் இருவரும்      வாசம்      செய்கின்றனர்.     ஆனால்       தொடர்பு      கொள்வதற்கு கைவசம் முகவரி  இல்லை.  நீங்கள் தான்     உதவி      செய்யவேண்டும்”    என்றார். மிகுந்த  மனநிறைவுடன்  தாயகம் திரும்பியதும் அவர்    குறிப்பிட்ட   இரண்டு     நண்பர்களின் முகவரிகளையும்      அனுப்பி     வைத்ததுடன்   இம்மூவர்     மத்தியிலும் நட்புறவு     தோன்றத்      துணை நின்றேன்.


நண்பர்    கே.கணேஷ்     இதற்காகவே     என்னை    மிகுந்த நன்றியுணர்வோடு     நேசித்தவர். அவர்     தராஸ்     செவ்ஷென்கோவை   மீண்டும்   நினைக்கவும் அன்னாரின் கவிதைகளைத்     தொடர்ந்து      மொழி பெயர்க்கவும்      அந்த      மகாகவியின் 125 ஆவது வருட    நினைவு    விழாவில்      கலந்து கொள்வதற்கு ருஷ்யாவுக்கு       பயணமாவதற்கும்     நான் ஃபுர்னீக்காவுடன்      ஏற்படுத்திக் கொடுத்த      தொடர்பும்    உறவும்தான்    காரணம் என்று    அடிக்கடி நினைவுபடுத்தி  கடிதங்கள்  எழுதினார்   கணேஷ்.  அத்துடன்   சென்னை      நியூ    செஞ்சுரி   புக்   ஹவுஸ்  1993  இல் வெளியிட்ட    உக்ரேனிய     மகாகவி     தராஸ்     செவ்ஷென்கோ    கவிதைகள் (மொழிபெயர்த்தவர்    கணேஷ்)     நூலின்     முன்னுரையிலும் இந்தத்தொடர்பாடல்     பற்றி ப்பதிவுசெய்துள்ளார்.

1986  இல் ஒரு சோவியத்  குழுவில்   அங்கம்   வகித்து    ஃபுர்னீக்கா குறுகிய  கால    விஜயம்  மேற்கொண்டு    கொழும்புக்கு   வருகை   தந்த   சமயம்,   முன்னேற்பாடு  ஏதும்  இன்றி      சிறிய    கூட்டம்   ஒன்றை கொட்டாஞ்சேனையில்     நடத்தினோம். வலம்புரி கவிதா வட்டம்   (வகவம்)      மாதாந்தம்    நடத்தும் இலக்கியச்சந்திப்பும்    கவிதா அமர்வுமே , இவ்வாறு    திடீரென ஃபுர்னீக்காவுடனான     இலக்கியச் சந்திப்புக்    கூட்டமாக    அமைந்தது.


நானும்  நண்பர் பிரேம்ஜியும் கல்கிசையில்   ஒரு    ஹோட்டலில் தங்கியிருந்த  ஃபுர்னிக்காவை    அழைத்துக்கொண்டு அந்தப்பிரதேசத்தில்,வட்டாரப்பொல வீதியில்      வசித்து   வந்த    நண்பர்      எச். எம். பி மொஹிதீனிடம் அழைத்துச்சென்று  இருவரையும்    அறிமுகப்படுத்தினோம். வகவம்  கவிஞர்கள்  கவிதையால்  ஃபுர்னீக்காவுக்கு  புகழாரம் சூட்டினார்கள்.  இந்தப் பயணத்தில்     அவர்      கே.கணேஷ், எச்.எம்.பி.மொஹிதீன், சில்லையூர் செல்வராசன்  , பிரேம்ஜி  , சோமகாந்தன் , ராஜஸ்ரீகாந்தன் ,  மேமன்கவி   , ஆசிரியரும்    இலக்கியநேசருமான  மாணிக்கவாசகர்  உட்பட    பலரையும்     சந்தித்து     உரையாடினார். கால     அவகாசம்      இன்மையால்     யாழ்ப்பாணத்திலும்      இன்னும்   பல இடங்களிலும்     அவர்    நேசித்த   இலக்கியவாதிகளைச்     சந்திக்க முடியாமல்     போய்விட்டது. பலரது     பெயர்கள்    அவர்     நாவில்     வந்தன.     அவர்களையெல்லாம் விசாரித்தார்.


ஃபுர்னீக்காவின்     நினைவாற்றல்    மகத்தானதுதான்.     அவரே எழுதியுள்ளவாறு      அதற்கு     இணையான    இன்னொரு     பண்பு இல்லைத்தான். இந்த     நினைவாற்றல்    பண்பின்    அடையாளமாகத்தான்    நாம்    இன்று அந்த     உக்ரேய்ன்   மகாகவி     தராஸ்    செவ்ஷென்கோவின்    கவிதைகளை, கே.கணேஷ்     அவர்களினால்    தமிழில்    பார்க்கின்றோம். அத்துடன் ஃபுர்னீக்காவைப்பற்றி        ஜெயகாந்தன் எழுதிய    நட்பில்   பூத்த   மலர்கள் நூல்,  நா.முகம்மதுசெரீபு    மொழி    பெயர்த்த     ஃபுர்னீக்கா   ருஷ்ய மொழியில்     எழுதிய     பிறப்பு     முதல்    இறப்பு    வரை   ஆகியவற்றையும் படிக்கின்றோம். ஃபுர்னிக்கா, தமது     ஆய்வுக்காக தமிழ்நாட்டின்     பல     கிராமங்களுக்கும்     சென்று     மக்களை    சந்தித்து தமது     களப்பயிற்சியின்     மூலம்   ருஷ்ய  மொழியில் எழுதிய     குறிப்பிட்ட    நூலின்    தமிழாக்கம்தான்     பிறப்பு   முதல் இறப்பு    வரை. செக்கோஸ்லவாக்கியா      அறிஞர்      டாக்டர்    ஹெலேனா ப்ரெய்ன்ஹால் தெரோவா      இந்நூலுக்கு      மதிப் புரையை       எழுதியிருக்கிறார். பல்வேறு     தமிழ் படைப்புகள்      சோவியத்    மக்களுக்கு    அறிமுகமாவதற்கு     காரணமாயிருந்த    ஃபுர்னீக்கா     புரிந்த மகத்தான   இலக்கியப் பணிகள்     ஏராளம். இவற்றுக்கெல்லாம்    சிகரமாக    -    மற்றுமொரு     சோவியத்    அறிஞர் கலாநிதி     எல்.வி.புச்சிகினா    அவர்களுடன்      இணைந்து    மகாகவி பாரதியாரைப்    பற்றி     ருஷ்ய    மொழியில்    ஒரு    நூலை     அவர் எழுதியதாகத்    தகவல்    கிடைத்தது. இந்த    தகவலைத்    தொடர்ந்து     அவரது      மறைவுச் செய்தியும்     வந்தது. தமிழ்க் கூறும்     நல்லுலகம்   -   அமரர் ஃபுர்னீக்காவை     என்றென்றும் மானசீகமாக      வாழ்த்திக்      கொண்டே    இருக்கும்.

சிங்கள மொழியில் பாரதி

பாரதியார் எமது இலங்கையை சிங்களத்தீவு என்று வர்ணித்துவிட்டதாக வருந்திய தமிழ்த்தேசியவாதிகள் பற்றி அறிவோம். பாரதிக்கு இலங்கையின் தொன்மையான வரலாறு தெரியாதமையால்தான் அவ்வாறு அவர் எழுதியிருப்பதாக ஒருசாராரும், இலங்கையில் பெரும்பான்மையினராக சிங்கள மக்கள் வாழ்வதனால்தான் அவர் அவ்வாறு எழுதிவிட்டார் என்று மற்றும் ஒரு சாராரும், அவர் எப்படித்தான் எழுதினாலும் இலங்கை சிங்களத்தீவாகிவிடாது, மூவினங்களும் வாழும் தேசம் என்று இன்னும் ஒருசாராரும் பேசிவருகின்றனர்.

இந்தப்பின்னணியில், கண்டியில் கல்ஹின்னையில் பிறந்து ஊடகவியலாளராகவும் பின்னர் சட்டத்தரணியாகவும்  தன்னை வளர்த்துக்கொண்ட  எஸ். எம். ஹனிபா பன்னூலாசிரியருமாவார்.

1927  இல் பிறந்த இவர் 2009 ஆம் ஆண்டில் மறைந்தார். கண்டி கல்ஹின்னையில் தமிழ் மன்றம் என்ற அமைப்பின் ஊடாக பல நூல்களை வெளியிட்டிருக்கும் ஹனிபா, பாரதியிடத்தில் மிகுந்த பற்றுள்ளவர். தினகரனிலும்  Observer  இலும் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். இலங்கை வானொலியிலும் நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பவர். இலங்கையில் பாரதி நூற்றாண்டு காலப்பகுதியில் சிங்கள மக்கள் எளிதாகப்புரிந்துகொள்வதற்காக ஒரு சிறிய நூலை எழுதி தமது நண்பர் கே.ஜி. அமரதாசவிடம் வழங்கி அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

பாரதியை சிங்கள மக்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் அவர் சிறுவயதில் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்திருந்தமையினால் தோன்றியிருக்கிறது. அவர் பிறந்து வாழ்ந்த கண்டி கல்ஹின்ன பிரதேசம் சிங்கள மக்கள் செறிந்து வாழும் இடமாகும். அங்கு தமிழ்மன்றத்தை உருவாக்கி நீண்ட காலம் இயங்கச்செய்து, பல நூல்களையும் வெளியிட்டிருக்கும் ஹனிபா, பாரதி நூற்றாண்டு காலத்தில் செய்த சேவை முன்னுதாரணமிக்கது.

பாரதியின் பக்தராகவே வாழ்ந்திருக்கும் அவர், கல்ஹின்னையில் ஆரம்ப வகுப்பு படிக்கும்வேளையில், நான்காம் வகுப்பு தமிழ்ப்பாட நூலில் படித்த பாரதியின் கவிதை: "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்." வகுப்பு ஆசிரியர் அதனை அந்த சிறுவயதில்  அவரை மனப்பாடம் செய்யுமாறு தூண்டியதால், பாரதியை தொடர்ந்து கருத்தூன்றி பயின்றிருக்கிறார்.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற கருத்தியலும் அவருடைய மனதில் வித்தாகியது. உலகமெலாம் பரவச்செய்யும் அதேசமயம் அருகே வாழும் சிங்களச்சகோதரர்களுக்கும் பாரதியின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறவேண்டும் என்ற எண்ணக்கருவும் தோன்றியிருக்கிறது.

பாரதியை தொடர்ந்து பயின்று, எழுத்தாளராகியதும் பாரதி தொடர்பான கட்டுரைகளை வீரகேசரி, தினகரன்,  சிங்கப்பூர் தமிழ் முரசு முதலானவற்றில் எழுதினார். பாரதி நூற்றாண்டின்போதாவது " சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம் " என்று பாடிய பாரதியைப்பற்றி சிங்களம் தெரிந்தவர்கள் அறியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு பாரதியை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் பாரதியின் சுருக்கமான வரலாற்றை   முதலில்  தமிழில் எழுதியதாகவும் பின்னர் அதனை தமது நண்பரும் தமிழ் அபிமானியும் மொழிபெயர்ப்பாளருமான  கே.ஜி.அமரதாசவிடம் வழங்கி சிங்களத்தில் மொழிபெயர்த்ததாகவும் பதிவுசெய்திருக்கிறார்.

இவ்விடத்தில் கே.ஜி. அமரதாச பற்றிய சிறிய அறிமுகத்தையும் தரவேண்டியிருக்கிறது. இவர் இலங்கை கலாசார திணைக்களத்தின் உயர் அதிகாரியாகவும் சாகித்திய மண்டல அமைப்பின் செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர். கொழும்பில் வெளியான அனைத்து தமிழ் தினசரிகளையும் அவர் ஒழுங்காகப் படித்தார். ஈழத்து இலக்கியவாதிகளுடன் நெருக்கமான நட்புறவைப்பேணியவர்.

பேராசிரியர் கைலாசபதி மறைந்தபோது, அவர் நினைவாக ஆயுபோவன் சகோதரரே என்ற தலைப்பில் அவருக்கு பிரியாவிடை வழங்கும்   அஞ்சலிக்கவிதையை வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதியவர்.

மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் கல்வி கற்ற காலத்திலேயே தமிழ்மொழியை சுயமாகக்கற்றவர். லேக்ஹவுஸ் வெளியீட்டுப்பிரிவில் பல வருடங்கள் பணியாற்றியவர். ஆரம்பத்தில் ஆனந்தவிகடன், கல்கி போன்ற தமிழக இதழ்களை விரும்பிப்படித்திருக்கும் அமரதாச, ஈழத்து இலக்கிய சிற்றேடுகளையும்  ஈழத்து தமிழ்த்தேசிய இலக்கியங்களையும் மண்வாசனை கமழும் பிரதேச இலக்கியப்படைப்புகளையும் ஆர்வமுடன் படித்து, பல தமிழ் எழுத்தாளர்களின் நண்பரானார்.

சரளமாக தமிழில் பேசும் இயல்பும் இவருக்கிருந்தமையால் பல தமிழ் எழுத்தாளர்கள் அவர் கொழும்பில் பணியாற்றிய கலாசார திணைக்களத்திற்கு அடிக்கடி சென்றனர். சில சிங்கள இலக்கியப்பிரதிகளையும் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அதேசமயம் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழியிலான கவிதைகளை சிங்களத்திற்கும் வரவாக்கியிருக்கிறார். இவ்வாறு பிறமொழி இலக்கியங்களை தமது தாய்மொழியாம் சிங்களத்திற்குத்  தந்துள்ள தாம்,  சகோதர மொழியான தமிழ் இலக்கியங்களையும்  சிங்கள மக்களுக்கு  தரவேண்டும் என்பதில் பெருமைப்படுவதாகவும் சொன்னவர்.

இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய மற்றும் ஒரு தமிழ் இலக்கிய அபிமானியான ரத்ன நாணயக்காரவும் அமரதாசவும் இணைந்து பாரதியின் சில கவிதைகளை சிங்களத்திற்கு மொழிபெயர்த்தனர். காலி  ரிச்மண்ட் கல்லூரியின் முன்னாள் மாணவரான ரத்ன நாணயக்கார, தாம் பாரதியின் கவிதைகளில் பேரார்வம் கொள்வதற்கு மூல காரணம் தமிழகப்பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் என்று குறிப்பிட்டுள்ளார்.

1974 இல் ' எதர சிட லியன பெம் கவி" என்ற நூலை எழுதியிருக்கும் ரத்னநாணயக்கார, பாப்லே நெருடா, மாயகவஸ்கி ஆகியோரின் கவிதைகளை சிங்களத்திற்கு தந்திருப்பவர். அத்துடன் இஸ்ரேலிய, செக்கஸ்லவாக்கிய, ருஷ்ய சிறுகதைகளையும் சிங்களத்தில் மொழிபெயர்த்திருப்பவர்.

சிங்கள திரைப்படச்சுவடிகள், தொலைக்காட்சி நாடக வசனச்சுவடிகளும் எழுதியிருக்கும் ரத்னநாணயக்கார, தொலைதூரத்திலிருந்து எமக்கு கிடைத்தவற்றை மொழிபெயர்த்திருப்பதுபோன்று அயலில் வாழும் தமிழ் இலக்கியத்தை சிங்களத்தில் தருவதற்கு தாமதம் ஏற்பட்டதற்கு சிறந்த முறையில் ஆக்கப்பட்ட தமிழ் - சிங்கள பேரகராதி  எம் வசம் இல்லாதிருந்ததுதான் அடிப்படைக்காரணம்  எனவும் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். ( ஆதாரம்: வீரகேசரி வாரவெளியீடு டிசம்பர் 1982)

கே.ஜி. அமரதாசவும் ரத்ன நாணயக்காரவும் மொழிபெயர்த்திருந்த பாரதியின் கவிதைகள் சிங்களத்தில் பாரதி பத்ய என்ற பெயரில் வெளியானது. இதனை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்டது. சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், " இனங்களின் சமத்துவமே தேசிய ஐக்கியத்தின் அடிப்படை" என்ற தலைப்பில் எழுதியிருக்கும் முன்னுரையில், " நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம். இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் - இந்தப்பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்" என்ற பாரதியின் வரிகளை வலியுறுத்தியிருந்தார். அத்துடன், " தனது மக்களின் அபிலாஷைகளை தேவைகளை, ஏக்கங்களை, இலட்சியங்களை, மனச்சாட்சியைப் பிரதிபலிக்கும் ஒரு மகாகவி,  மனித குலம் முழுமையினதும் பொது அபிலாஷைகளின் தேவைகளின் ஏக்கங்களின் இலட்சியங்களின் மனச்சாட்சியின் வெளிப்பாடாக மலரும்போதுதான் அவன் உலக மகாகவியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். மகாகவி பாரதியும் இந்த நியதிக்குட்பட்டவரே" எனவும் எழுதியிருந்தார். இலங்கையில் சிங்கள மக்களிடத்திலும் பாரதியை அறிமுகப்படுத்தியதில் எஸ். எம். ஹனிபா, கே.ஜி. அமரதாச, ரத்ன நாணயக்கார மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஆற்றிய பங்களிப்பு காலந்தோறும் போற்றுதலுக்குரியது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 16 September 2020 10:11