அஞ்சலிக்குறிப்பு : ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி! மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் !கண்ணுக்குத் தெரியாத எதிரி கொரோனோ என்ற பெயரிலும் கொவிட் 19 என்ற புனைபெயருடனும் வந்ததே வந்தது, உலகெங்கும் தனது கோரத்தாண்டவத்தை அலுப்பு சலிப்பின்றி ஆடிக்கொண்டிருக்கிறது. அது பலியெடுத்த அறிவுஜீவிகளின் வரிசையில் நேற்று நவம்பர் 18 ஆம் திகதி மற்றும் ஒருவரும் விடைபெற்றுவிட்டார். நேற்று முன்தினம் நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை சென்னையில் மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கிடையில், மற்றும் ஒரு சோவியத் அறிஞரை நேற்று நவம்பர் 18 ஆம் திகதி பறிகொடுத்துவிட்டோம். 1941 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 27 ஆம் திகதி ருஷ்யாவில் பிறந்திருக்கும் இவரது முழுப்பெயர்: அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி. நேற்று தமது 79 வயதில் கொரோனோ தொற்றின் தாக்கத்தினால் மறைந்துவிட்டதாக செய்தி வௌிவந்துள்ளது. இவர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நெருக்கமானவர். இவரை இவ்வாறு எமது மொழியுடனும் எமது இனத்துடனும் நெருங்கவைத்தவர் மகாகவி பாரதியார்.

துபியான்ஸ்கி, மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆபிரிக்க நாடுகள் தொடர்பான ஆய்வுப்பிரிவில் ஆய்வாளராகவும் விரிவுரையாளராகவும் முன்னர் பணியாற்றியவர். அங்கு அவர் மாணவராக பயின்றபோது, 1974 ஆம் ஆண்டு “ முல்லைத்திணையில் பிரிவு “ என்ற தலைப்பில் தமது ஆய்வேட்டை சமர்ப்பித்து கலாநிதியானவர். நிலத்தை அடிப்படையாக வைத்து பகுக்கப்பட்ட ஐவகைத்திணைகள் பற்றி கற்றறிந்துள்ள இவர், காடும் காடு சார்ந்த நிலமும் பற்றி ஆய்வுமேற்கொண்டிருப்பது இலங்கை , இந்திய தமிழர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கும் தகவல். இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியத்தை மாணவர்களுக்கு கற்பித்தவர். தமிழ் மொழி வரலாறு, தமிழியலுக்கு ஐரோப்பிய அறிஞர்கள் ஆற்றிய பங்களிப்பு , திருக்குறளும் தமிழ் நீதி நூல் மரபும் முதலான பல்வேறு தலைப்புகளில் விரிவுரையாற்றி வந்திருப்பவர். சங்க இலக்கியம் என்ற நூலையும் இவர் ருஷ்யமொழியில் எழுதியுள்ளார். விஞ்ஞானபூர்வமாக பண்டைக்கால தமிழ்க்கவிதைகளையும் ஆய்வுசெய்து கட்டுரைகள் எழுதியவர். 1978 – 79 காலப்பகுதியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியியல் பற்றிய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டவர். மேல்நாடுகளில் வாழ்ந்த மொழியியல் வல்லுனர்களுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டில் இலக்கியத் தமிழ் மற்றும் மக்களின் பேச்சுத் தமிழ் குறித்தெல்லாம் தமிழிலிலேயே கலந்துரையாடும் இயல்பையும் கொண்டிருந்தவர்.

இவருடைய சில கட்டுரைகளை இலங்கையில் வெளியான மல்லிகை மற்றும் தமிழக இதழ் தாமரை முதலானவற்றிலும் முன்னர் படித்திருக்கின்றோம். மகாகவி பாரதியிடத்தில் பேராபிமானம் கொண்டிருந்த துபியான்ஸ்கி, சோவியத் நாட்டில் 1982 இல் பாரதி நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது அந்த விழாக்குழுவிலும் இணைந்திருந்தவர். ஏனைய சோவியத் அறிஞர்களின் ஆக்கங்களுடன் வெளியான பாரதி நூற்றாண்டு நூலில், இவரும் பாரதியின் கவிதைக்கலை – சில கருத்துக்கள் என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அந்த நூலுக்கு தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் பாரதி இயலாளருமான தெ. மு. சி. ரகுநாதன் எழுதிய முன்னுரையில்,

“ ஆங்கில மகாகவி ஷெல்லியை, “பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை “ என்று இலக்கிய விமர்சகர்கள் பலரும் குறிப்பிடுவர். அதேபோல், பால்ய வயதிலேயே தனது கவிதைத் திறனைப் புலப்படுத்தியவனும், பதினாறாட்டைப்பருவத்திலேயே தன்னை “ஷெல்லிதாசன் “ என்று கூறிக்கொண்டவனுமான தமிழ் நாட்டின் தேசிய மகா கவி சுப்பிரமணிய பாரதியையும் ( 1882 – 1921 ) நாம் 1905 -07 ஆம் ஆண்டின் “ரஷ்யப்புரட்சியின் குழந்தை “ என்றே குறிப்பிடலாம் . “ என்று எழுதியுள்ளார்.

துபியான்ஸ்கி, இந்நூலில் சுவாமி விவேகானந்தர், அரவிந்தகோஷ், பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி முதலான புதிய சகாப்தத்தின் மாபெரும் சிந்தனையாளர்களின் கருத்துக்களுக்கும் பாரதியின் கருத்துக்களுக்குமிடையிலான பரஸ்பர உறவுகளையும் மதிப்பீடு செய்திருந்தார். பாரதியின் கவிதைகள் மக்களின் மனதில் மிக வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான காரணிகளையெல்லாம் நாம் கண்டறியவிரும்பினால், அவரது கவிதா உத்தி , அவரது படிமங்கள், மற்றும் அவரது கவிதை மொழி ஆகியவை பற்றிய ஆராய்ச்சியையும் புறக்கணித்துவிடக்கூடாது “ என்று வலியுறுத்தியிருக்கும் துபியான்ஸ்கி, சிலப்பதிகாரத்தையும் ஆராய்ந்து, இக்கட்டுரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார். ஐந்து பக்கங்களில் விரியும் குறிப்பிட்ட கட்டுரையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீள் பதிப்பு செய்யும்போது, பேராசிரியர் அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி அவர்களின் தமிழ்மொழி மீதான பற்றினையும் பாரதியின் சிந்தனைகள் அவரிடத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினையும் இன்றைய தலைமுறையினர் மேலும் அறிந்துகொள்வார்கள்.

1983 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாரதி நூற்றாண்டு காலத்தில் இலங்கை வந்திருந்த பாரதி இயல் ஆய்வாளர்கள் தொ.மு.சி. ரகுநாதன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோரும் துபியான்ஸ்கியின் சிறப்பியல்புகளை எம்மிடம் தெரிவித்துள்ளனர். 1985 இல் மாஸ்கோவில் ராதுகா பதிப்பகத்தின் பொறுப்பாளர் தமிழ் ஆய்வாளர் நண்பர் கலாநிதி விதாலிஃபுர்னிக்கா அவர்களை சந்தித்தவேளையிலும், துபியான்ஸ்கி மற்றும் சோவியத் தமிழ் அறிஞர்கள் பற்றி சிலாகித்து சொல்லியிருக்கிறார். “ தேமதுரத் தமிழ் ஓசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் “ என்ற பாரதியின் கனவை சோவியத் நாட்டிலும் நனவாக்குவதற்கு உழைத்த அறிஞர் அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி அவர்களின் ஆத்மா சாந்தியடைய சிரம்தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்.

* துபியான்ஸ்கி தமிழில் உரையாடும் காணொளி: Dr Dubyanskiy Alexander speech in Tamil