கலைஞர் லடீஸ் வீரமணி நினைவுகள்

Saturday, 11 July 2020 22:13 - முருகபூபதி - எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
Print

லடீஸ் வீரமணிஎழுத்தாளர்  முருகபூபதிஅன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். ஈழத்துக் கலைஞர் நடிகவேள் லடீஸ் வீரமணி பற்றிய இரண்டு பதிவுகளை தங்கள் பதிவுகளில் படித்தேன். பழைய நினைவுகளை அந்தப்பதிவுகள் நனவிடை தோயவைத்துள்ளன. லடீஸ் வீரமணி சிறந்த கலைஞர்.  நாடகக் கலைக்கு புத்துயிர்ப்பூட்டியவர்.

அ.ந. கந்தசாமி நினைவரங்கு கொழும்பு கொள்ளுப்பிட்டி தேயிலை பிரசார சபை மண்டபத்தில் நடந்தபோது , அந்நிகழ்வுக்கும் லடீஸ்தான் தலைமை தாங்கினார். மூத்த எழுத்தாளர்கள் கே. டானியல், சில்லையூர் செல்வராசன், கைலாசபதி, எம். எஸ். எம். இக்பால் உட்பட பலர் கலந்துகொண்டார்கள். இக்கூட்டத்தில் எம்.எஸ். எம். இக்பால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சிலரைத்தாக்கிப்பேசினார். அறிஞர்கள் கைலாசபதி, கமாலுதீன் முதலானவர்கள் மீதும் அவர் கண்டனக்கணைகளை எய்தார். கைலாஸ் இதுபோன்ற தருணங்களில் விலகிச்செல்லும் இயல்புகொண்டவர். கைலாஸ், கூட்டத்தின் நடுவே எழுந்து சென்றுவிட்டார். லடீஸ், என்னசெய்வது என்று தெரியாமல் அமைதி காத்தார்.

லடீஸ் எங்கள் நீர்கொழும்பூர் ஶ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் ஒரு திருவிழாவின்போது மஹாகவி  உருத்திரமூர்த்தியின் கண்மணியாள் காதை யை வில்லுப்பாட்டாக திறம்பட நடத்தியதை நேரில் பார்த்துள்ளேன். அவரது குரல்வளம்  அத்தகையது.கலைச்செல்வனும் அதில் பங்கேற்றார். இரவு 11 மணியிலிருந்து அதிகாலை வரையில் அந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, ஆலயத்தின் முன்பாக கடற்கரை வீதியில் அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில் ஏராளமான மக்களின் மத்தியில் நடைபெற்றது.லடீஸ் வீரமணி, ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன், நாவலையும் நாடகமாக்கி கொழும்பில் மேடையேற்றியவர். அதன்பின்னர்தான், ஜெயகாந்தனால், அக்கதை திரைப்படமாகி பிராந்திய மொழிப்படம் என்ற ரீதியில் தேசிய விருது பெற்றது. அக்கதையில் வரும் சிட்டி என்ற சிறுவனின் பாத்திரத்தில் பின்னாளில் பரவலாக அறியப்பட்ட கலைஞன் ஶ்ரீதர் பிச்சையப்பா நடித்திருந்தார்.

லடீஸ்வீரமணி, வெண்சங்கு உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருப்பவர். எங்கள் ஊரைச்சேர்ந்த சிங்கள திரைப்பட நடிகை ருக்மணிதேவி, கொழும்பு வீதியில் வாகன விபத்தில் மரணித்ததையடுத்து, இடம்பெற்ற இறுதி ஊர்வலத்திலும் லடீஸ்  வீரமணி கலந்துகொண்டார்.

அதன்பின்னர் அவரை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை. லடீஸ் சிறந்த கலைஞர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர்பற்றி மேலும் விரிவாக எழுதக்கூடியவர்கள் கலைச்செல்வனும், அந்தனிஜீவாவும்தான். ராஜேந்திரம் மாஸ்டர், அ.ந.க, கே. எஸ். பாலச்சந்திரன், காவலூர் இராசதுரை, ஶ்ரீதர் பிச்சையப்பா ஆகியோர் மறைந்துவிட்டனர்.

நன்றி.
முருகபூபதி – அவுஸ்திரேலியா


[ லடீஸ் வீரமணி அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்'நாடகத்தை இயக்கியபோது அது மகத்தான வரவேற்பைப் பெற்றது. பல தடவைகள் கொழும்பில் மேடையேறியது. அ.ந.க லடீஸ் வீரமணியின் மேல் அன்பு கொண்டவர். அவருக்கு மேனாட்டு நாடக ஆசிரியர்கள் பற்றிப் போதித்தவரென்றும் அறிகின்றேன். அ.ந.கந்தசாமி இறுதியாக நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்த போது அவருக்கு மிகவும் உதவியாகவிருந்தவர்கள் எழுத்தாளர் செ.கணேசலிங்கன், லடீஸ் வீரமணி தம்பதியினர் மற்றும் எம்.எஸ். எம். இக்பால் என்றும் அறிகின்றேன். செ.கணேசலிங்கன் எழுதிக் குமரன் இதழில் வெளியான அ.ந.கந்தசாமியின் இறுதிக்காலச் சம்பவங்களைப்பற்றிய தொடரில் லடீஸ் வீரமணி தம்பதியினர் எவ்விதம் அ.ந.கந்தசாமிக்கு இறுதிவரை ஆஸ்பத்திரிக்கு உணவு கொண்டு வந்து உதவினர் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.  நன்றி முருகபூபதி உங்கள் கருத்துகளுக்கு.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்?'  இலங்கையில் லடிஸ் வீரமணியின் நடிப்பில் நாடகமாக மேடையேற்றப்பட்டு பெரு வெற்றியடைந்ததை சுதந்திரனில் (3.3.69) வெளிவந்த செய்தி மூலம் அறிந்திருக்கின்றேன்.  நீங்கள் குறிப்பிடுவதுபோல் 'ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன், நாவலையும் நாடகமாக்கி கொழும்பில் மேடையேற்றியவர் என்பதை இப்பொழுதுதான் அறிகின்றேன். தகவலுக்கு நன்றி.

வ.ந.கிரிதரன் -]

Last Updated on Sunday, 12 July 2020 00:06