வாசகர் முற்றம் – அங்கம் 08: தமிழ்நாடு திருநெல்வேலி தினமலர் நாளேட்டிலிருந்து….. தேர்ந்த வாசகராகி…. படைப்பாளியாக உருமாறிய மணியன் சங்கரன் ! குற்றாலம் குளிர் சாரலிலிருந்து மெல்பன் குளிருக்கு வந்தவரின் இலக்கியப்பாதை ! !

Friday, 12 June 2020 19:51 - முருகபூபதி - எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
Print

எனது வாசகர் முற்றம் தொடரில் கடந்த காலங்களில் சாந்தி சிவக்குமார், ரேணுகா தனஸ்கந்தா, விஜி. இராமச்சந்திரன், கருப்பையா ராஜா, இரகுமத்துல்லா, அசோக், ‘வீடியோ ‘ கிருஸ்ணமூர்த்தி ஆகியோரைப்பற்றியும், இவர்களின் வாசிப்பு அனுபவங்களின் செல்நெறி பற்றியும் எழுதியிருந்தேன். இடையில் கொரோனா காலம் வந்தமையினால், நான் மேலும் எழுதவேண்டியவர்கள் பற்றிய பதிவு சற்று தாமதமானது. மீண்டும், அவுஸ்திரேலியாவில் எனக்கு அறிமுகமான இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைந்திருப்பவர்களின் வாசிப்பு அனுபவங்களை எழுதத் தொடங்குகின்றேன். அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர், எனது இனிய நண்பரும், எமது அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், நடப்பாண்டின் துணைத்தலைவருமான திரு. மணியன் சங்கரன் அவர்கள். ஆங்கில – தமிழ் மொழிபெயர்ப்பில் வல்லுநராகவும் திகழும் இவர், விக்ரோரியா கலாசாரக்கழகத்திலும் தலைவராக பணியாற்றியவர். ஆங்கிலப்புலமை மிக்க இவரிடத்தில் நானும் சில மொழிபெயர்ப்புச் சுமைகளை ஏற்றியுள்ளேன். எனினும் முகம் கோணாமல் , சற்றும் தாமதியாமல் அச்சுமைகளையும் மனமுவந்து ஏற்று, இறக்கிவைத்திருப்பவர். பழகுவதற்கு எளிமையானவர். தமிழகம் பற்றிய அரிய பல தகவல்களை இவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதும் எனது வழக்கம். தமிழ்நாடு திருநெல்வேலித் தமிழின் மணத்தை இவரிடம் நுகர்ந்திருக்கின்றேன்.

“ குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா..? “

இந்த பாடல்வரிகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். பாவை விளக்கு திரைப்படத்திலும் குற்றாலம் அருவியின் பின்னணியில் சிதம்பரம் ஜெயராமன் பாடிய பாடலை சிவாஜியின் நடிப்பில் கேட்டிருப்பீர்கள். மேலும் பல திரைப்படங்கள் அந்த குற்றாலம் அருவியின் புகழைப்பாடியுள்ளன. அத்தகைய திக்கெட்டும் புகழ் மணக்கும் திருநெல்வேலி சீமையிலுள்ள திருக்குற்றால மலையின் சாரலில் நனையும் கீழப்பாவூர் தான் மணியன் சங்கரன் பிறந்து பூர்வீக ஊர்.

இந்த இலக்கியவாதி கற்றது பொறியியல் கல்வி. ஆனால் அதிலும் வாழ்க்கைக்காக தான் கற்றது கை மண் அளவே என்று தன்னடக்கத்துடன் சொல்பவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். பள்ளி இறுதிப்படிப்பு முடிந்தவுடன் குடும்பச் சுமையை தாங்குவதற்காக, திருநெல்வேலி தினமலர் பத்திரிகை பணிமனையில் அச்சுப்பிழை திருத்தும்பணி ( Proof Reader ) என்ற பெயரில் அலுவலகப் பையன் வேலையில் சேர்ந்தவர். எனக்கும் இந்தத் தொழில்தான் நெருக்கமானது. எனது தொழில்வாழ்வும் இவ்வாறுதான் தொடங்கியது. அதனால் மணியன் சங்கரனும் எனது வர்க்கத்தைச்சேர்ந்தவர் என்பதில் எனக்கும் பெருமைதான்!

பத்திரிகையில் தவறுதலாக இடம்பெற்றுவிடும் எழுத்துப்பிழைகளை திருத்துவதற்கு தொடங்கியவர் பின்னாளில் சமூகத்தவறுகளை திருத்துவதற்கும் எழுத்தை ஆயுதமாக்கியவர். பெங்களூர் சென்று மேற்கொண்டு படித்தபின்னர், இந்திய தொலைபேசித் தொழிற்சாலையின் பயிற்சிப் பள்ளியில் தொழிற்கல்வி பயிற்சி ஆசிரியராக பணியைத் தொடர்ந்து பல நிலைகளில் முன்னேறியவர். எப்போது அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தீர்கள்….? எனக்கேட்டேன். அதற்கு அவர் சொன்னபதில் சுவாரசியமானது.

இலங்கைத்தமிழர்கள் அவுஸ்திரேலியா என்பர். இந்தியத்தமிழர்கள் ஆஸ்திரேலியா என்பார்கள். ஒரு சமயம் எனது கட்டுரை தமிழ்நாடு திண்ணையில் வெளியானபோது முருகபூபதி - அவுஸ்திரேலியா என எழுதியிருந்தேன். ஒரு தமிழக வாசகர் அவுஸ்திரேலியா எங்கிருக்கிறது..? என்று எதிர்வினையாற்றியிருந்தார்.

அன்பார்ந்த வாசகர்களே….. நண்பர் மணியன் சங்கரனும் எமது கங்காரு தேசத்தை ஆஸ்திரேலியா என்றுதான் விளிக்கிறார். அப்படியே அவர் சொல்வது போன்று இங்கே எழுதுகின்றேன்.

“ 1991 இல் ஆஸ்திரேலியாவுக்கு வந்து வடைக்கு ஆசைப்பட்ட எலி கூண்டில் அகப்பட்ட மாதிரி, தொழில்மந்தமான நிலையில் வந்து மாட்டிக்கொண்டேன். தமிழகத்தில் சீனியர் டெக்னிகல் அசிஸ்டெண்டாக இருபதாயிரம் பேர் வேலைசெய்யும் அரசு நிறுவனத்தில் நல்ல சம்பளம், பணிக்கு அழைத்துச்செல்ல பேருந்து, சொந்தவீடு என்று இருந்தேன். இங்கு எதுவும் படித்து என்னை மேம்படுத்தாமல் பொறியியற் துறையிலேயே வேலைதேடி முன்னேற கடுமையாக போராட வேண்டியிருந்தது.

வாசிப்பு அனுபவம் பற்றி சொல்லுமாறு கேட்டதும், அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இதோ:

" வாசிப்பு அனுபவத்தை யாரும் எனக்கு தூண்டவில்லை. பள்ளி நூலகத்தில் நானாகவே தேடி எடுத்த நூல் பெரியபுராணம். அதைத் தேர்ந்தெடுக்க காரணம் பெயருக்கு ஏற்றபடி நூல் பெரிதாகவே இருந்தது. மானசீகமாக என்னை ஊக்கப்படுத்தியது தினத்தந்தியில் வந்த சிந்துபாத் தொடர். பின் நான் வளர வளர சாண்டில்யனின் கடல்புறா மு. வரதராசனாரின் அகல்விளக்கு,

கயமை நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு, துளசிமாடம் போன்ற நூல்களை வாசித்துள்ளேன். ஆங்கிலத்தில் சில நூல்களை வாசித்துள்ளேன். அவைகளில் எனக்கு மிகவும் பிடித்தது வில்லியம் ஷேக்ஸ்பியரின் தி டெம்பெஸ்ட்.

பள்ளியிறுதி படிப்புவரை எனது தாய்வழி தாத்தா வீடு, மற்றும் மேற்கொண்டு படிக்க எனது ஒன்று விட்ட அண்ணா வீடு என்று அவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய சூழ்நிலை. அந்தமாதிரி சூழ்நிலையில் நூல்களை அதிகமாக வாசிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. கிராமத்தில் வாழ்ந்து அரசு பள்ளியில் தமிழ்வழியில் கல்வி பயின்றதால் ஆங்கில அறிவு பூஜ்ஜியம்.

தாய்மொழியான தமிழில் கல்வி கற்பது பெரிய குற்றமா? அதற்காக பெருமைப்படத்தானே வேண்டும்.

ஆனால், ஆங்கில அறிவு இல்லாததால் பலத்த அவமானங்களை படிக்கும் காலங்களிலும் அதன் பின்னும் சந்தித்துள்ளேன். இந்த அவமானங்களை சில சமயங்களில் சமாளித்துமிருக்கிறேன். அதற்குச் சான்றாக நான் எட்டாவது படிக்கும்போது நடந்த நிகழ்வொன்றை இங்கு விவரிக்கிறேன்.

ஒரு நாள் நான் ஆங்கில கதையொன்றை சரியாக பொருள்கூட புரியாமல் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன். அதன்பின் மனப்பாடம் செய்ததை ஒப்பித்துக் கொண்டிருந்தேன். ஆதலால் கையில் நோட்டோ புத்தகமோ இல்லை. அந்தச் சமயம் இதைக்கவனித்த என் தாத்தா, நான் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதாக எண்ணிக்கொண்டார். பாவம் அவர், கிராமத்தினருக்கே உரிய கள்ளங் கபடமற்ற மனது அவரை அப்படி எண்ணத் தோன்றியது. தனது நண்பர்களிடம் நான் மிகவும் நன்றாக ஆங்கிலம் பேசுவதாக

சொல்லியிருக்கிறார். இதை நம்பாத அவர்களிடம் அதை நிரூபிப்பதாக என் தாத்தா கூற அவர்கள் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் எங்கள் வீட்டுக்கே வந்து விட்டார்கள்.

எனது நிலை மிகவும் மோசமாகிவிட்டது. என் தாத்தாவின் மரியாதையையும் காப்பாற்ற வேண்டும். அதேசமயம் எனக்கு ஆங்கிலத்தில் பேசவராது என்று சொல்லவும் விரும்பவில்லை. எனக்கு ஒரு எண்ணம் தோன்றவே உடனடியாக நான் மனப்பாடம் செய்துவைத்திருந்த ஆங்கிலக்கதையை ஒப்புவிக்க ஆரம்பித்தேன்.

"ஒன்ஸ் அபான் எ டைம் தேர் வாஸ் என் எம்பெரர் நேம்டு அலெக்ஸ்ஸாண்டர்" என்று தொடங்கி பள்ளியில் ஆங்கில ஆசிரியர் சொல்லிக்கொடுத்தபடி ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்தேன். என் தாத்தாவின் நண்பர்கள் மிரண்டே போய்விட்டார்கள். நன்றாக ஆங்கிலம் பேசுவதாக எண்ணி பாராட்டவும் செய்தார்கள். ( எப்படி இருக்கிறது எனது நண்பர்களின் பகுத்தறிவு..? பாருங்கள்…. ! ) ஆனால் அப்பாவி கிராமத்து மக்களை ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி என்னைக் கவலைப் படவைத்தது.

அதற்குப் பரிகாரமாக கிடைத்த நேரத்தை எல்லாம் எனது ஆங்கில அறிவை ஓரளவுக்காவது முன்னேற்றுவதிலேயே செலவழித்தேன். ஆங்கிலத்திலேயே கவிதை கட்டுரை எழுதும் அளவுக்கு என்னை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணமும் அவற்றை பிரசுரமாக்கும் தகுதிக்கு உயர்த்தவேண்டும் என்ற

எண்ணமும் என் மனதில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தமிழ்வழி கல்வி கற்ற எனக்கு அது அவ்வளவு எளிதாக இல்லை. காரணம் கிராமப் பின்னணி. கல்விகற்க வாய்ப்பே பெருந்தலைவர் காமராஜரால் கிடைத்தது. அத்தோடு மனநிறைவு பெறாமல் தகுதிக்கு மீறிய ஆசைகூடாதுதான். ஆனால், நான் அடைந்த அவமானங்கள் எனது எண்ணத்தை நியாயப்படுத்தின. ஆதலால் இலக்கியங்களை வாசித்து என் அறிவைப் பெருக்கும் நேரத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவதற்காக என்னைச் செம்மைப்படுத்த

செலவிட்டேன். எனவே, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாசித்ததை தவிர பெரிதாக தமிழிலோ ஆங்கிலத்திலோ வாசித்ததாக சொல்லிக்கொள்ள முடியாது.

நான் பெங்களூருவில் இருந்தபோது பல தமிழ் அமைப்புக்களில் இருந்தாலும், குறிப்பாக பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக இணைந்து பங்காற்றியுள்ளேன். ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபின் விக்டோரியா இந்தியத் தமிழ்ச் சங்கத்தில் இணைந்து, துணத்தலைவராக செயலாற்றினேன். அதன்பின் இலங்கைத் தமிழ் நண்பர்களுடன் இணைந்து விக்டோரியத் தமிழ் கலாச்சாரக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினோம். அதில் பலபதவிகளை வகித்தபின் ஏறத்தாழ பத்தாண்டு காலமாக தலைவராக இருந்து இப்போது

காப்பாளராகவும் இருக்கிறேன். வெள்ளிவிழா கண்ட இந்த அமைப்பை துவங்கியவர்களில் நானும் ஒருவன் என்ற எண்ணம் எனக்கு பெருமகிழ்வைத் தருகிறது.

2001 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் எழுத்தாளர் விழா இயக்கமாகத்தொடங்கி, நான்காண்டு காலத்தில் அவ்வியக்கமே ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கமாக உருவாகியதும் சில வருடங்களுக்கு முன்னர் இதிலும் இணைந்து பணியாற்றுகின்றேன். இதில் இரண்டு ஆண்டுகள் அதன் தலைவராக இருந்து தற்போது துணத் தலைவராகியிருக்கின்றேன்.

ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்தபின்னர் இலக்கியப்பிரதிகள் எழுத ஆரம்பித்தேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினேன். தினமலரில் பணிபுரிந்தபோது போட்டிக்காக வரும் கதை, கவிதை, கட்டுரைகளை வாசித்து சிறு பட்டியல் தயார் செய்ததினால் எழுதுவது எப்படியென அப்போதே எனக்கு ஓரளவு தெரிந்திருந்தது. ஆனால், அப்போதிருந்த குடும்ப வறுமை, தமிழின் வளமையுடன் பயணிக்கும் வாய்ப்பான வாசித்தலையும் எழுதுவதையும் கானல்நீராக ஆக்கிற்று. ஆதலால் சிறிதளவே வாசிக்க மட்டும் முடிந்தது.

எழுத்துலக பிரவேசம்

மணியன் சங்கரனிடத்தில் எப்பொழுது எழுத்துலகப்பிரவேசம் தொடங்கினீர்கள்…? எனக் கேட்டபோது, அவர் சொன்ன தகவல்கள்:

எனக்கு கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் வெளியான மெல்லினம், தமிழ் ஆஸ்திரேலியன் போன்ற இதழ்களில் கதை, கவிதை மற்றும் கட்டுரைகளை எழுதினேன். இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிலும் மற்றும் இந்தியா இன்போ.காம் இணையத்திலும் ஆங்கில கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். ஆங்கில கவிதைத் தொகுப்பு நூலொன்றுக்கு முதல்பக்க கவிதையாக வருமளவுக்கு கவிதை ஒன்றும் எழுதியிருக்கிறேன்.

தற்போது அக்கினிக்குஞ்சு.காம் இணையத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை, ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருகிறேன்.

மற்றவர்களின் எழுத்துப்பிழைகளை திருத்தி, தேர்ந்த வாசகனாக தன்னை வளர்த்துக்கொண்ட மணியன் சங்கரன், புகலிடத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்தியவாறு, இலக்கியப்பிரதிகள் எழுதிவருபவர்.

இவருக்கு அக்கினிக்குஞ்சு இணைய இதழ் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

“தனது வாசிப்பு அனுபவம் சராசரியை விடக்குறைவே “ எனக்கூறும் இவர், “ அதற்குக் காரணம், வாசிக்க எடுக்கும் நேரத்தை எழுதுவதற்காக பயன்படுத்துவதுதான் " என்கிறார். கதை, கவிதை, கட்டுரை, ஆய்வுகளென பல கோணங்களில் எழுதுவதால் யோசிக்கவும் கற்பனை செய்யவும் படிக்கவுமே கிடைக்கும் நேரத்தை பயன் படுத்துகிறேன் எனவும் மேலும் சில காரணங்களை கூறுகிறார்.

அப்படியானால் நூல்கள் வெளியிட்டுள்ளீர்களா....? எனக்கேட்டால், " இல்லை " என்பதுதான் பதில். நூல்கள் வெளியிட்டிருக்கலாமே...? எனக்கேட்டதும், “ நான் முழுநேர எழுத்தாளனோ பெரிய எழுத்தாளானோ அல்ல. அப்படியே வெளியிட்டாலும் சந்தைப் படுத்துதல் எளிதல்ல. தற்சமயம் நான் எழுதுவதை சிலர் வாசிக்கிறார்கள் என்ற நிறைவொன்றே போதும் என்ற நிலையில் மனநிறைவடைகிறேன். நூல் வெளியிட வேண்டுமென்றால் அதற்கு தகுந்தமாதிரி எழுதவேண்டும். சாடுவதைச் சாடமுடியாமலும் மனதில் தோன்றுவதை எழுதமுடியாமலும் இருக்கவேண்டும். அது என்னால் முடியுமா...? என்று கூறமுடியாது. “ எனச்சொல்கிறார்.

இந்தக் கருத்தைதான் ஏற்பதற்கு சற்றுச் சங்கடமாக இருக்கிறது. எழுத்தென்றால், ஊடகங்களுக்கு தகுந்தவாறு எழுதும் எழுத்து, நூல்களுக்கு தகுந்த மாதிரியான எழுத்து என்ற வேறுபாடு இருக்கமுடியாது, எழுத்தாளனின் படைப்புகள் சமூகத்திற்காக பேசவேண்டியது. சமூகத்தையும் பேசவைப்பது. மணியன் சங்கரனின் எழுத்தும் அத்தகையதாக அமையலாம்.

எனவே அவரை வாழ்த்தி, தொடர்ந்தும் வாசித்து தொடர்ந்து எழுதுமாறு சொன்னபோது, சமகாலத்தில் - தான் வசிக்கும் மெல்பனில் இருக்கும் எழுத்தாளர்களின் நூல்களையும், தனக்கு கிடைத்துவரும் இதர மாநில எழுத்தாளர்களின் படைப்புகளையும் தமிழக எழுத்தாளர்களின் வரவுகளையும் படித்துவருவதாகச் சொன்னார்.

எழுத்துப்பணியுடன் சிறந்த குரல் வளத்துடன் வில்லிசைக்கலைஞராகவும் திகழும் மணியன் சங்கரன், எமது அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழாக்கள், வாசிப்பு அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருப்பவர். அத்துடன் இவர் தலைமையில் பல இலக்கிய நிகழ்வுகளும் கவிதா மண்டலங்களும் நடைபெற்றுள்ளன. இந்தத் தேர்ந்த வாசகருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 12 June 2020 20:14