பாரிஸ் மாநகரில் பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா! நினைவில் நிறைந்திருக்கும் பண்டிதர் அய்யா!இலங்கையின் வடமேற்குக் கரையில் இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் திகழும் நீர்கொழும்பூருக்கு ஐதீகத்திலும் வரலாற்றிலும் அழியாத அடையாளம் இருக்கிறது. இலங்கேஸ்வரன் இராவணனின் புதல்வன் இந்திரஜித்தன் நிகும்பலை என்னும் யாகம் வளர்த்த ஊர் என்பதனால் அதற்கு நிகும்பலை என்றும் ஒரு காரணப்பெயர் இருக்கிறது. அந்த யாகத்திற்காக இந்திரஜித்தன் இவ்வூரில் ஐந்து இடங்களில் உருவாக்கிய குளங்கள் காலப்போக்கில் அடையாளம் தெரியாதவகையில் உருமாறிக் கட்டிடக்காடுகளாகிவிட்டன. எனினும், இன்றும் மழைக்காலத்தில் அந்த இடங்களில் தண்ணீர் தங்கித்  தேங்கிவிடுவதை அவதானிக்கமுடிகிறது. 

இலங்கை வரலாற்றில், இடம்பெற்ற துட்டகைமுனுவின் மனைவிக்கு வந்த உடல் உபாதையைப் போக்குவதற்கு இந்த ஊரில் தேன் கிடைத்தமையால் தேன் ஊர் என்ற அர்த்தத்தில் மீகமுவ என்றும் சிங்கள மொழியில் அழைக்கப்பட்டதுதான் இவ்வூர். அவ்வாறே Negombo என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதற்கும் காரணங்கள் இருக்கின்றன. மன்னர் காலத்தில் தேனும் சுரந்து, ஒல்லாந்தர் காலத்தில் ஏலம், கறுவா, கராம்பு முதலான வாசனைத்திரவியங்கள் விளைந்த பிரதேசமாகவும் திகழ்ந்தமையாலும் இனிமையும் வாசனையும் நிரம்பிய நகரமாகியது. ஒல்லாந்தர்கள் நீர்கொழும்புக்  கடற்கரைக்குச்சமீபமாக ஒரு கற்கோட்டையை அமைத்து முகாமிட்டபோது, அதற்கு வடமேற்கிலிருந்து வருவதற்கு மகா ஓயா நதியிலிருந்து கிளை வெட்டி, புத்தள வெட்டுவாய்க்காலையும் அமைத்தனர். அதற்கு அணித்தாக எழுந்தருளிய ஶ்ரீசித்திவிநாயகர் கோயிலின் முன்புறம் நீண்ட காலமாக விருட்சமாக வளர்ந்திருந்த அரச மரத்தின் நிழலில் அக்காலப்பகுதியில் அங்கு வாழ்ந்த சைவத் தமிழ்ப்பெருங்குடி மக்களினால் உருவாக்கப்பட்டது இந்து வாலிபர் சங்கம். வந்தோரை வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு என்ற பெயரையும் இவ்வூர் பெற்றிருந்தது. கத்தோலிக்க மக்கள் செறிந்துவாழ்ந்த இந்த ஊருக்கு சின்னரோமாபுரி என்றும் ஒரு பெயர் வழக்கிலிருந்தது. நூற்றுக்கணக்கான கத்தோலிக்க வழிபாட்டிடங்கள் அமைந்திருந்தமையினால், இந்தக்காரணப்பெயரும் தோன்றியிருக்கிறது.

இவ்வாறு பல காரணப்பெயர்களுடன் விளங்கிய எமது ஊருக்கு காரணம் இல்லாமல் காரியம் இல்லை எனச்சொல்லத்தக்வகையில் 1954 ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி காலத்தில் தோன்றியதுதான் விவேகானந்தா வித்தியாலயம். முகாமைத்துவப் பாடசாலைகள் இலங்கை எங்கும் வியாபித்திருந்த காலத்தில், நீர்கொழும்பில் நீண்டகாலமாக வாழ்ந்த சைவத்தமிழ் மக்களுக்கும் வடக்கிலிருந்து தொழில், வர்த்தகம், திருமண உறவு முறைகளினால் இடம்பெயர்ந்து வருகைதந்த சைவத்தமிழ் மக்களுக்கும் ஒரு குறைபாடு நீடித்தது. அக்குடும்பங்களுக்கு கடற்கரை வீதியில் வழிபாட்டிற்கு மூன்று ஆலயங்கள் இருந்தபோதிலும், அக்குடும்பங்களின் குழந்தைகளுக்கென ஒரு சைவத் தமிழ்ப்பாடசாலை இல்லாத குறை நீடித்திருந்தது. எனினும் சைவ சமயத்தை போதிக்கின்ற - கூட்டுப்பிரார்த்தனை வகுப்புகளை நடத்துகின்ற தேவையை உணர்ந்த இந்து வாலிபர் சங்கம் சமூக அமைப்பாகவும் இயங்கியமையால் அதற்காக சாமி சாஸ்திரியார் என்ற ஆசான் மூலம் சமயபாட வகுப்பினைச் சங்க மண்டபத்தில் நடத்துவதற்கு தொடங்கியது. எனினும் அதற்கு வந்த குழந்தைகள், இதர பாடங்களை ( கணிதம், ஆங்கிலம், புவியியல், குடியியல்) படிப்பதற்கு அருகிலிருந்த புனித செபஸ்தியார் பாடசாலை, புனித மரியாள் பாடசாலை, நியூஸ்ரட் ஆங்கில மகளிர் பாடசாலை, ஆவேமரியா மகளிர் பாடசாலை ஆகியனவற்றுக்குத்தான் சென்றனர். 1954 ஆம் ஆண்டு வரையில் இந்த நிலைமைதான் நீடித்தது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஏதுவாக அச்சமயத்தில் இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராக இருந்த பெரியார் எஸ்.கே. விஜயரத்தினம் அவர்கள் ஒரு வழக்கறிஞராகவும் உத்தியோகப்பற்றில்லாத நீதிவானாகவும் விளங்கினார். அதேசமயம் நீர்கொழும்பு நகர பிதாவாகவும் (மேயர்) தெரிவாகியிருந்தார். தனது காலத்திலாவது இங்கு வாழும் சைவத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு பாடசாலையை தங்கள் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தொடக்கிவைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சங்கத்தின் உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்வைத்தார். இவ்வாறு அந்தப்பாடசாலை தொடங்கப்பட்ட அக்காலப்பகுதி, இன்று இந்தப் பதிவை எழுதும் எனக்கு நினைவாக ஆழ் மனதில் பதிந்திருக்கிறது.

ஒரு மனிதனின் முதலாவது காலடித் தடத்திலிருந்துதான் ஒற்றையடிப்பாதைகள் தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றிய பாதைகள் தான் காலப்போக்கில் பெரிய அகலிக்கப்பட்ட வீதிகளாக மாறுகின்றன. அவ்வாறு ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் - அதாவது 64 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய விவேகானந்த வித்தியாலயத்தின் முதல் மாணவன் என்ற பெருமையை பெற்ற - இன்று நூற்றாண்டு காணும் பண்டிதர் மயில்வாகனன் அய்யா அவர்களின் மடியிலிருந்து அவ்வேளையில் அ எழுத்தை எழுதிய பெரும் பேறும் பெற்ற குழந்தையுமான எனக்கு, 64 ஆண்டுகளுக்குப்பின்னர் நான் பிறந்த ஊரின் வரலாற்றையும் அதன் மகிமையையும் இவற்றின் ஊடாக எமக்கு கல்விக்கண்ணை திறந்த பெருமகன் பற்றி நனவிடை தோய்வதற்கும் இந்தப் பதிவு களமாகியிருப்பதும் விதிப்பயன்தான்! 

வட இலங்கையில் 1919 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் பண்டிதர் அய்யாவோ வடமேற்கிலங்கையில் 1951 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் நானோ, 21 ஆம் நூற்றாண்டில் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் பாரிஸ் மாநகரில் இத்தகைய ஒரு நூற்றாண்டு கொண்டாடப்படும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டோம். இலங்கையில் நீடித்த இனப்பிரச்சினையினால், சங்க இலக்கியத்தில் முன்னர் குறிப்பிடப்பட்ட ஐவகைத்திணைகளிலுமிருந்து ஆறாவது வகைத்திணை உருவாகியிருக்கும் பலனையும் காண்கின்றோம். குளிரும் குளிர்சார்ந்த பிரதேசமுமாக ஆறாம் திணையில் - பாரிஸ் மாநகரில் பண்டிதர் அய்யாவின் நூற்றாண்டை கொண்டாடுவதற்கு முன்வந்துள்ள அன்னாரின் சந்ததியினர் தமிழ் கூறும் நல்லுலகினால் மனமுவந்து பாராட்டப்படவேண்டியவர்கள்.

1954 ஆம் ஆண்டு விஜயதசமியன்று காலை, கற்கண்டும் வாழைப்பழங்களும் நிரம்பிய தட்டங்கள் முன்னாலமர்ந்திருக்க, வெள்ளைப்பச்சை அரிசி நிரம்பிய பித்தளைத்தட்டத்தின் முன்னே பண்டிதர் அமர்ந்து, என்னை அவர் மடியில் இருத்தி, எனது பிஞ்சுக்கரம் பற்றி, " தம்பி சொல்லு.... அ. ஆ. இ, ஈ. " என்று அடுத்தடுத்து அரிச்சுவடியை அரிசியில் எழுதவைத்த பெருந்தகையின் முன்னே, 1975 ஆம் ஆண்டு அதாவது 24 வருடங்களின் பின்னர் ஒரு எழுத்தாளனாய் - பத்திரிகையாளனாய்த் தோன்றியபோது என்னை வாரியணைத்து உச்சிமோந்தவருக்காக இந்த நனவிடைத் தோய்தற் குறிப்புகளை எழுதுகின்றேன்.  1954 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரையில்தான் அவரிடம் தமிழும் சைவமும் கற்றேன். இந்த எட்டு ஆண்டுகளில் நான்மட்டுமல்ல எங்கள் ஊர் தமிழ்க் குழந்தைகளும் முத்தமிழையும் பயின்றது இன்று கலங்கரை விளக்கமாக ஒளிவீசும் இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியான அன்றைய விவேகானந்தா வித்தியாலயம்தான்.  "தன்னலம் கருதாத விடாமுயற்சியுள்ள தன்னம்பிக்கையும் வலிமையும் பொருந்திய நூறு இளைஞர்களை ஒவ்வொரு ஊரிலும் தாருங்கள் இந்த உலகையே மாற்றிக்காண்பிக்கின்றேன்" என்று சொன்னவர் சுவாமி விவேகானந்தர். அவர் பெயரில் ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் எங்கள் ஊரில் 32 குழந்தைகளுடன் ஆரம்பமான வித்தியாலயம், இன்று பல்லாயிரம் மாணாக்கருக்கு கல்வியைத்தந்து பெருவிருட்சமாக வளர்ந்தோங்கியிருக்கிறதென்றால், அதற்கு உழைப்பை உரமாக்கிய பண்டிதர் அய்யா உட்பட பல பெருந்தகைகளிடம் இருந்த தன்னலம் கருதாத பொது நோக்கும் தீர்க்கதரிசனம் மிக்க சீரிய சிந்தனையும் விடாமுயற்சியும் மனவலிமையும் தன்னம்பிக்கையும்தான் பிரதான காரணம்.  அவர்கள் ஊருக்கு நூறு பேராக மாத்திரம் திகழாமல் தங்கள் சந்ததிகளின் பெருக்கத்தின் ஊடாக கடல் கடந்தும் பேசப்படும் பரிமாணத்திற்கும் வித்திட்டவர்கள்.  பண்டிதர் அய்யாவின் மாணவர்கள் என எம்மை அழைப்பதை விட அவரது அருமைக்குழந்தைகள் என அழைப்பதே சாலப்பொருத்தம் எனக் கருதுகின்றேன்-நம்புகின்றேன்.

மாதா, பிதா , குரு, தெய்வம் என்பர். மாதாவும் பிதாவும் வீட்டில்தான். தெய்வத்தை காண்பது அரிது. மனிதர்களின் உருவத்தில் தெய்வம் தோன்றலாம்!. ஆனால், குருவிடம் செலவிடும் நேரம்தான் அதிகம். அதனால் குருவுக்கும் சீடர்களுக்குமான உறவும் நெருக்கமானது.  குருகுல முறைக்கல்வியிலிருந்து பரிமாணம் பெற்றதுதான் இன்றைய நவீன கல்வி முறை. நான் எனது பெற்றோர்களிடம் மட்டுமல்ல பெற்றோருக்கு சமமாக மதிக்கப்பட்ட உறவினர்களின் கால்களைப்பணிந்தும் ஆசிபெற்றும்  வளர்ந்தவன். அந்தவகையில் பண்டிதர் அய்யாவை முதன் முதலிற் கண்ட 1954 ஆம் ஆண்டிலும் இறுதியாக 1986 ஆம் ஆண்டிலும் அவரது தாள் பணிந்து ஆசி பெற்றிருக்கின்றேன்.

போர்க்காலத்தில் இலங்கை சென்றசமயத்தில் வடக்கிற்குச்  செல்ல வாய்ப்பிருக்காத தருணத்திலும் தொலைபேசி ஊடாக எனக்கு ஆசி வழங்கியவர் பண்டிதர் அய்யா. என்னை ஒரு கரகாட்டக்கலைஞனாகவும் பார்த்து இரசித்து மகிழ்ந்த அவரைப்பற்றி எனது சொல்லத்தவறிய கதைகள் தொடரில் ஓர்அங்கம் எழுதியிருந்தேன். அதனை யாழ்ப்பாணத்தில் வெளிவரும் காலைக்கதிர் நாளேடும் ஜெர்மனி (தேனீ ), அவுஸ்திரேலியா (தமிழ்முரசு - அக்கினிக்குஞ்சு) ஆகிய நாடுகளில் வெளியாகும் இணைய இதழ்களும் வெளியிட்டன. பண்டிதர் அய்யா பற்றிய குறிப்பிட்ட பதிவின் பின்னணியில் எதிர்பாராதவகையில், நோர்வே மற்றும் பாரிஸ் நாட்டிலிருந்து என்னுடன் தொடர்புகொண்டவர்கள் அன்னாரின் நூற்றாண்டை நினைவுபடுத்தினர்.
இந்த நூற்றாண்டுவிழாவில் என்னையும் அவர்கள் இணைத்துக்கொண்டது நான் செய்த பாக்கியம்தான். பண்டிதர் அய்யாவின் மாணாக்கன் என்ற பெயரை தக்கவைத்துக்கொள்ளவேண்டியது என்னைச்சார்ந்தது. அவர் என்றும் எம் அனைவரதும் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்.

பண்டிதர் நூற்றாண்டு விழா நடக்கும் முகவரி
Espace Mozaik -- 11, Rue Maximilien Robespierre
93130 Noisy-le-Sec
காலம் 27-01-2019 ஞாயிறு மதியம் 2.00 மணி

முதன்மை விருந்தினர்:
பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா. 
(மேனாள் தலைவர், தமிழ்த்துறை – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) 

சிறப்பு விருந்தினர்கள்:
எழுத்தாளர் லெ. முருகபூபதி (அவுஸ்திரேலியா)
புலவர் ந. சிவநாதன் (இலண்டன்)
பேராசிரியர் பா.பாலசுகுமார் (இலண்டன்)
பேராசிரியர் எஸ். சச்சிதானந்தம் (பிரான்ஸ்)
பண்டிதர் ஆ. விவேகானந்தன் (நோர்வே)

நிகழ்ச்சி நிரல்
மயில்வாகனனாரின் திருஉருவப்படம் எடுத்துவருதல்

மங்கல விளக்கேற்றல் - தமிழ்த்தாய் வாழ்த்து - நினைவு வணக்கம்

வரவேற்பு நடனம்
(அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவிகள்- ஐரோப்பா)

நடன நெறியாள்கை: பரதமணி, கலாவித்தகர், நாட்டியகலாரத்னம் திருமதி. சார்மிளி சிவலிங்கநாதன்

மயில்வாகனனாரின் விபரணம் - ஒளிப்படம்

இலக்கியவரங்கம்

நூற்றாண்டு மலர்வெளியீடு

தமிழிசையரங்கம்

பண்டிதர். com இணையத்தளம் அங்குரார்ப்பணம்

பண்டிதர் எழுதிய

இன்பத்தமிழ்ப்பாடல்கள் இறுவட்டு வெளியீடு 

இன்பத்தமிழ்ப்பாடல்கள் நூல் வெளியீடு

குழந்தைகளுக்கான சித்திரக்கதைக்காணொளி ( Animations Film) 

ழகரம்-செயலி அறிமுகம்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:  EL - 4 நிறுவனம், விழாக்குழுவினர்

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.