" அவுஸ்திரேலியாவில் வதியும் சிங்கள  தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களால் உருவாக்கப்பட்ட 'கெயர்லங்கா' அமைப்பு அம்பாறையிலும் கண்டிப்பகுதிகளிலும் சமீபத்தில் இஸ்லாமிய மக்கள் மீது நடந்த வன்முறை தொடர்பாக கண்டிக்கிறது,"

" அவுஸ்திரேலியாவில் வதியும் சிங்கள  தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களால் உருவாக்கப்பட்ட 'கெயர்லங்கா' அமைப்பு அம்பாறையிலும் கண்டிப்பகுதிகளிலும் சமீபத்தில் இஸ்லாமிய மக்கள் மீது நடந்த வன்முறை தொடர்பாக கண்டிக்கிறது, மிகவும் கவலை கொள்கிறது. எதிர்காலத்தில் மீண்டும் மீண்டும்  இலங்கை வன்முறையில் மூழ்கக்கூடாது. வன்செயல்களை யார்  உருவாக்கினாலும் அவர்கள் மீது  முறையான விசாரணைகள்  மேற்கொண்டு  சட்டத்தினால்  தண்டிக்கப்படவேண்டும். சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப்பாதுகாக்கவேண்டிய  பாதுகாப்புத்துறையினர்   அமைதியை நிலைநாட்டவேண்டும். "  இவ்வாறு  அவுஸ்திரேலியா "கெயார் லங்கா" அமைப்பின் தலைவர் டொக்டர் நடேசன் அமைப்பின் சார்பாக  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அரசாங்கம் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ததையும்  பாதுகாப்பு நடவடிக்கைளை  மேற்கொண்டிருப்பதையும் கவனத்தில் எடுத்துள்ளோம். ஆனால்,  வன்செயல்கள் நடந்த பின்னர் நடவடிக்கைகளை எடுப்பதைவிட,   இவை உருவாகாமல் தடுப்பதிலேயே அரசின் கடமை முக்கியமானது என்பதையும் சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றோம்.  எதிர்காலத்தில் அரசினது முக்கியபொறுப்பாக இத்தகைய விடயங்கள் கருதப்படல்வேண்டும்  என்பதையும் நினைவூட்டுகின்றோம்.  மேலும் இந்த
வன்முறையின் காரணத்தையும் இதனது சூத்திரதாரிகளையும்  கண்டுபிடிக்க தீவிர புலன்  விசாரணைகளையும் மேறகொள்ள வேண்டும். நிகழ்ந்திருக்கும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  புனர்வாழ்வும்  அளிக்கவேண்டும். இப்படியான சம்பவங்கள் இலங்கையில் முன்பு நடந்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு  முறையாக புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறோம். இந் நடவடிக்கைகளுக்கு மத்தியில்  பல்லின மக்களிடம் குறிப்பாக,  மதங்களிடையேயும் இனங்களிடையேயும்  புரிந்துணர்வை  வளர்க்கவேண்டிய கட்டாயமும் உள்ளது. புரிந்துணர்வை வளர்க்க தேசிய நல்லிணக்க மற்றும் புனர்வாழ்வு நிறுவனங்களுடாகவும்,  பாடசாலைகள்  அரசாங்க அலுவலகங்கள்,  தனியார்  நிறுவனங்கள்,  மதபீடங்கள், மட்டத்தில்  ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் பொறுப்பான  இன மத புரிந்துணர்வை வளர்ப்பதே இலங்கை அரசின் தலையாய கடமை எனவும்  நாங்கள் நம்புகிறோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.