பயணியின் பார்வையில் --- அங்கம் 25: தமிழர்களுக்கு கண்ணகி அம்மன் ! சிங்களவர்களுக்கு பத்தினி தெய்யோ !!

Wednesday, 25 October 2017 08:31 - முருகபூபதி - எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
Print

 "கூடல்" முதலாவது மலர் மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் என்பன ஐதீகங்களாக போற்றப்பட்டாலும், இவற்றில் வரும் பெண்பாத்திரங்களுக்கு கோயில்கள் அமைத்து வழிபடும் மரபும் தொன்றுதொட்டு நீடிக்கிறது. இந்தக்காவியங்களில் வரும் ஆண் பாத்திரங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். மகாபாரதத்தில் குந்தி முதல் பாஞ்சாலி வரையிலும், இராமாயணத்தில் சீதையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்தான். குந்தியைத்தவிர ஏனைய மூவரும் வழிபாட்டுக்குரியவர்களாகிவிட்டனர். இலங்கையில் திரெளபதை அம்மன், கண்ணகி அம்மன், சீதை அம்மன் கோயில்கள் அமைத்து சைவத்தமிழர்களும் பௌத்த சிங்களவர்களும் வழிபடும் மரபும் தொடர்ந்து பண்பாட்டுக்கோலமாகவே மாறிவிட்டதை காணமுடிகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலையும் மக்களிடத்தில் காவியமாகியிருக்கிறாள். மணிமேகலை தமிழ்க்காப்பியம் மட்டுமல்ல, அது பவுத்த காப்பியமும்தான் என்று நிறுவுகிறார் தமிழக எழுத்தாளர் பேராசிரியர் அ. மார்க்ஸ். ( ஆதாரம்: தீராநதி 2017 ஜூன்)

கண்ணகி வழிபாடு, திரௌபதை அம்மன் வழிபாடு என்பன கிழக்கிலங்கையில் மிகவும் முக்கியத்துவமாகியிருக்கின்றன. இராவணன் சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறைவைத்தமையால் அங்கு சிங்கள மக்களால் சீதாஎலிய என்னுமிடத்தில் சீதை அம்மனும், வடமேற்கு இலங்கையில் உடப்பு மற்றும் கிழக்கிலங்கை பாண்டிருப்பில் தமிழர்களினால் திரௌபதை அம்மனும், கன்னன் குடாவில் ஶ்ரீகண்ணகி அம்மனும் குடியிருக்கிறார்கள். பாரத நாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களில் குறிப்பாக பெண்களுக்காக இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் வழிபாட்டு மரபை தோற்றுவித்திருப்பதின் பின்னணி விரிவான ஆய்வுக்குரியது.

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், கன்னன்குடா நோக்கி பயணமானோம். அப்பொழுது நண்பர் 'செங்கதிரோன்' கோபாலகிருஷ்ணன் எனக்குத்தந்த 'கூடல்' சிறப்பு மலர் பல தகவல்களைச் சொன்னது. இந்தப்பயணத்தில் நண்பர் பேராசிரியர் செ. யோகராசாவும் எம்முடன் இணைந்துகொண்டார். மட்டக்களப்பு வாவியைக்கடந்து படுவான்கரையை நோக்கி நண்பரின் கார் பயணித்தது. கன்னன்குடா ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடையும்போது இரவு பத்துமணியும் கடந்துவிட்டது. பக்தர்கள் நிறைந்திருந்தனர். பறவைக்காவடியில் சிலர் வந்தனர். அந்தக்காட்சி அங்கிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்கச்செய்திருக்கலாம். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அக்காட்சியை பார்த்து மனதிற்குள் வருந்தினேன். தம்மை வருத்தி இப்படியும் நேர்த்திக்கடனா..?

திரௌபதை அம்மன் கோயில் முன்றல்களில் தீமிதிப்பு. உடப்பு பிரதேசத்தில் அதனை பூமிதிப்பு என்பார்கள். இரண்டு நேர்த்திக்கடன்களுமே தம்மை வருத்திக்கொள்ளும் செயல்கள்தான். பெண்தெய்வங்கள் இப்படியும் ஆண்களை பழிவாங்குகின்றனவா...? சீதையை இராமன் தீக்குளிக்கவைத்தான். பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்தான். கண்ணகியின் கணவனை பாண்டியன் சிரச்சேதம் செய்வித்தான். பெண்களின் சோகங்களும் சாபங்களும் நிரம்பிய ஐதீகக்கதைகளை காவியங்களாக எழுதிவிட்டுச் சென்றிருப்பவர்களும் ஆண்கள்தான். இன்று காலம்காலமாக ஆண்கள் தீமிதித்தும், வேல் குத்தி பறவைக்காவடி எடுத்தும் முன்னோர்கள் செய்த பாவங்களை கழுவிக்கொண்டிருக்கிறார்களோ என்றும் அந்த ஆலய முன்றலில் நின்று யோசித்தேன். எனினும் எனது யோசனைளை வெளியே பகிர்ந்துகொள்வதற்கு தயக்கமிருந்தது.

மட்டக்களப்பு பிரதேசத்தில் ஏன் கண்ணகி விழா கொண்டாடப்படுகிறது ? என்பதற்கு "கூடல்" முதலாவது மலர் ( பரல்: 1) கூறும் செய்தியை பார்ப்போம்.

" தமிழ் மண்ணோடும் தமிழ் மரபோடும் இணைந்த கதை கண்ணகி கதை. அவளின் திண்மையும், தீரமும் நிறைந்த வாழ்வும் மக்கள் நலன் நாட்டமும் அவளை மக்களின் தெய்வமாக்கின. சோழநாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டிலே வழக்குரைத்து, சேரநாட்டில் தெய்வீகமான கண்ணகி, ஈழநாட்டில் சிங்கள தமிழ் மக்களின் மத்தியில் வழிபாட்டிற்குரிய தெய்வமானாள். பின்னாளில் கண்ணகி "

கண்ணகையம்மன்" என கிழக்கிலங்கையில் நிலைபெற்றுவிடுவதுடன், கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகவும் ஆகிவிடுகின்றாள். கிழக்கிலங்கையில் வைகாசித் திங்கள் அவளுக்குரியதாகும். இதன்போது கிழக்கிலங்கை விழாக்கோலம் பூணும். மக்கள் தெய்வமான கண்ணகியின் கதை சிலப்பதிகாரம், சிலம்பு கூறல், கண்ணகி காவியம், கண்ணகி வழக்குரை, குளுத்திப்பாடல், கண்ணகையம்மன் நாடகம், கண்ணகி வசந்தன், கும்மி, கரகம், காவடி, கொம்பு முறிப்பு, குரவைக்கூத்து என தமிழில் கண்ணகி கலை, இலக்கியமாக விரிந்துள்ளது. கண்ணகிக்குரித்தான வைகாசி மாதத்தில் அவளை நினைவுகூரவும், அவளது இலக்கியங்களை பரவலாக்கவுமான நோக்குடன் கண்ணகி இலக்கிய விழா 2011-06-18 அன்று எம்மால் தொடக்கிவைக்கப்படுகின்றது. இவ்விழா எதிர்காலத்தில் வருடம்தோறும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்லப்படும் எனவும் இத்தால் பிரகடனப்படுத்தப்படுகின்றது. இப்பட்டயம் கண்ணகி இலக்கிய விழாக்குழுவினரால் 2011 -06-18 ம் திகதி நடைபெற்ற " கண்ணகி இலக்கிய விழா 2011" இன் தொடக்கவிழாவில் காரைதீவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறு ஒரு எழுத்துமூல பட்டயத்தை மக்கள் மத்தியில் பிரகடனப்படுத்தியிருக்கும் கண்ணகி கலை இலக்கிய கூடல் அமைப்பின் நடப்பாண்டு காப்பாளர் பேராசிரியர் சி. மெளனகுரு. துணைக்காப்பாளர் எஸ். எதிர்மன்னசிங்கம். தலைவர் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன். செயலாளர் அ. அன்பழகன் குரூஸ். பொருளாளர் ச. ஜெயராஜா. இவர்கள் தவிர ஆண்களும் பெண்களுமாக மொத்தம் 59 செயற்குழு உறுப்பினர்களும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். வருடாந்தம் இந்த அமைப்பு நடத்தும் விழாக்களில் இடம்பெறும் கருத்தரங்குகளை நெறிப்படுத்துவதில் பேராசிரியர் மெளனகுருவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கண்ணகி கலை, இலக்கிய விழாக்களின் பிரதான நோக்கம், தமிழ்ச்சமூகத்தைக் குறிப்பாகக் கிழக்கிலங்கைத் தமிழ்ச்சமூகத்தைச் சாதி, மத, பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு பண்பாட்டுத்தளத்தில் ஒன்றிணைத்து, அவர்களைச் சமூக - பொருளாதார - கல்வி - கலை - இலக்கிய - ஆன்மீக மேம்பாட்டை நோக்கி அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்துவதாகும் எனச்சொல்கிறார் இந்த அமைப்பின் தலைவர் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன்.

" சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி வழக்குரையை இலக்கியமாக சமூகவியலாக வரலாறாக இசை நடனம் கூறும் காவியமாக தொன்மமாக ஒரு சமூகத்தின் உளவியலையும் கூட்டு மனோநிலையையும் அறியும் ஆவணமாகப் பார்ப்பது அவசியம்." என்கிறார், கண்ணகி விழாக்கருத்தரங்குகளை நெறிப்படுத்தும் பேராசிரியர் மௌனகுரு.

எனக்கு இந்தப்பயணத்தில் கிடைத்த கண்ணகி விழா தொடர்பான ஆவணங்களை படிக்கின்றபோது தமிழகத்தில் கலைஞர் கண்ணகிக்கு சிலை வைத்த நிகழ்வும், பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மெரீனா கடற்கரையிலிருந்து அச்சிலை பெயர்தெடுக்கப்பட்ட சம்பவமும் நினைவுக்கு வருகின்றன. கிழக்கிலங்கையில் கண்ணகி இலக்கிய மாணாக்கருக்கு ஆய்வுக்குரியதாகவும், தமிழகத்தில் அரசியல்வாதிகளுக்கு அரசியலுக்குரியதாகவும் மாறியிருக்கிறாள். கண்ணகி சிலை அப்புறப்படுத்தப்பட்டபோது கலைஞர் வெகுண்டதை பார்த்துவிட்டு, எனது நண்பரான பரீக்‌ஷா ஞாநி, ஒரு வார இதழில் கண்ணகியும் கரடி பொம்மையும் என்ற தலைப்பில் கலைஞரை சிறுகுழந்தைகளுக்கு ஒப்பிட்டு எழுதி எதிர்வினைகளைச்சந்தித்தார். குழந்தைகளுக்கு கரடிபொம்மை எப்பொழுதும் விளையாட்டுப்பொருள். கலைஞர் இத்தனை வயதிற்குப்பின்னரும் கண்ணகியை வைத்து விளையாடுகிறார் என்ற தொனியில் ஞாநியின் அந்தப்பத்தி அமைந்திருந்தது.

நல்லை நகர் தந்த ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் என்ன செய்தார்...? என்ற சுவாரஸ்யமான செய்தியை ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை ஒரு தடவை எழுதியிருந்தார். நாவலர் காலத்தில் வடபகுதியில் கண்ணகி வழிபாடு தீவிரமாக இருந்திருக்கிறது. சைவமரபில் வந்திருக்கும் அவர், தமிழகத்தின் வாணிபச்செட்டிச்சிக்கு இங்கு வழிபாடா...? என்று படிப்படியாக அந்த மரபை மாற்றியிருக்கிறார். அதனால் வடபகுதி கண்ணகி அம்மன்கள் வேறு அம்மன்களாக உருமாறிவிட்டனர் என்ற கருத்தும் நிலவுகிறது என்றார் பொன்னுத்துரை. ஆனால், கிழக்கிலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு கண்ணகி தெய்வமாகியிருப்பதுடன், சிங்கள மக்கள் மத்தியிலும் பத்தினி தெய்யோவாக மாறிவிட்டாள்.

ஒரு தடவை கண்ணகி விழா தொடர்பான பண்பாட்டு ஊர்வலங்களை நடத்துவதற்கு பொலிஸாரின் அனுமதியை கோருவதற்கு கோபாலகிருஷ்ணன் சென்றபோது, வழக்கமான தமிழ் எழுச்சி ஊர்வலமோ ? என்ற சந்தேகத்தில் அனுமதிவழங்குவதற்கு பொலிஸ்தரப்பில் தயக்கமிருந்ததாம். " பத்தினிதெய்யோட்டதமய் மே உத்சவய" எனச்சொல்லி விளக்கியதும் பயபக்தியுடன் அனுமதி வழங்கியிருக்கிறார்கள் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த காவலர்கள்.

கண்ணகியின் கதை ஐதீகங்களும் ஏராளமான உப கதைகளும் நிரம்பியது. இந்தப்பத்தி எழுதுவதற்கு முன்னர் சிலப்பதிகாரம் பற்றி சற்று ஆராய்ந்தேன். எனக்கு தலை சுற்றியது. ஒன்றுக்கொன்று முரணான தகவல்களின் களஞ்சியமாக அது திகழ்கிறது.
சிலப்பதிகாரத்திலும் உறைபொருளும் மறைபொருளும் நிறைந்திருக்கிறது. கன்னன்குடா ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடுஇரவும் கடந்து, நட க்கவிருந்த கவியரங்கிற்காக பக்தர்கள் காத்திருந்தார்கள். மறுநாள் காலை கல்முனைக்குச் செல்லவேண்டிய பயண ஒழுங்கு இருந்தமையால் இரவு 12 மணியும் கடந்துவிட்டபின்னர் அங்கிருந்து திரும்பினோம்.

எமது சமூகத்தில் காவியமாகவும் தெய்வங்களாகவும் மாறிவிட்ட சீதையும், பாஞ்சாலியும், கண்ணகியும் எனது இலக்கியப்பார்வையில் மறுவாசிப்புக்குரியவர்கள். இந்தப்பெண்களைப்போன்ற பாத்திரங்கள் எமது சமூகத்தில் இன்றும் வாழ்கின்றமையால் அந்தக்காவியங்களும் இன்றும் வாழ்கின்றன.

(பயணங்கள் தொடரும்)

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 25 October 2017 08:37