பயணியின் பார்வையில் - அங்கம் 20: அச்சில் வெளிவராத காசி. ஆனந்தனின் வெண்பாக்களை பதிவேற்றிய செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனுடன் சந்திப்பு

Friday, 22 September 2017 17:45 - முருகபூபதி - எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
Print

செங்கதிரோன் கவிஞர் காசி ஆனந்தன்திருகோணமலையிலிருந்து புறப்பட்டு, மட்டக்களப்பில் ஆறுமுகத்தான் குடியிருப்புக்கு சமீபமாக ஓரிடத்தில் இறங்கினேன். அந்தப்பிரதேசத்தில் எஹெட் என்ற வெளிநாட்டு தன்னார்வ தொண்டுநிறுவனம் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுத்திருக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் பாண்டிருப்பிலிருந்து அங்கு வந்து குடியேறியிருந்தது. அந்தக்குடும்பத்தலைவனும் அந்தக்குடும்பத்தைச்சேர்ந்த மேலும் சில உறுப்பினர்களும் போர்க்காலத்தில் ஆயுதப்படைகளினால் காணாமலாக்கப்பட்டவர்கள். சோதனைமேல் சோதனை போதுமடா சாமி என்பார்கள். அந்தக்குடும்ப உறுப்பினர்கள் சிலர் குறிப்பாக குழுந்தைகள் உட்பட பத்துப்பேரளவில் சுனாமி கடற்கோளில் காணாமல் போய்விட்டார்கள். அந்தக்குடும்பத்தை சாமி காப்பாற்றியதாகத்தெரியவில்லை. அடுத்தடுத்து போரும், சுநாமியும் காவுகொண்ட பல குடும்பங்கள் இலங்கையில் இழப்புகளையும் கடும் துயர்களையும் கடந்து வந்துள்ளன. குறிப்பிட்ட பாண்டிருப்பு குடும்பத்தினரை சுநாமி காலத்திலும் சென்று பார்த்திருக்கின்றேன். அதில் ஒரு குடும்பத்துப்பிள்ளைகளுக்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியமும் உதவுகிறது.

பாண்டிருப்பில் வசித்தவரும் முன்னாள் அதிபரும் எனது பிரியத்திற்குரிய மூத்த கவிஞருமான சண்முகம் சிவலிங்கம் ஊடாகவே அந்தக்குடும்பத்தின் பிள்ளைகளுக்கு நிதியுதவியை ஆரம்பகட்டத்தில் வழங்கினோம். கவிஞர் மறைந்த பின்னர் கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் ஊடாக அந்தப்பிள்ளைகளை பராமரித்து வருகின்றோம். அந்தக்குடும்பத்தின் உறவினர்கள் சிலர் ஆறுமுகத்தான் குடியிருப்புக்கு சமீபமாக வசிப்பது அறிந்து அவர்களையும் பார்க்கச்சென்றேன். போர்க்காலத்தில் கொல்லப்பட்ட அந்த வீட்டின் குடும்பத்தலைவரினதும் அவரது மைத்துனரதும் உடல்கள் கண்டுபிடிக்கப்படவேயில்லை.

இவ்வாறு போரினாலும் சுநாமி கடற்கோள் இயற்கை அநர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் குடியிருப்புத்தேவையை வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பூர்த்தி செய்யமுன்வரும் வேளைகளில், மற்றும் ஒரு மதம் சார்ந்த அமைப்பு, அம்மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் போர்வையில் தமது மதத்திற்கு மாற்றும் வேலைகளை கச்சிதமாகச்செய்துவருகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பவர்கள் மனிதநேயவாதிகள். மனிதாபிமான அடிப்படையில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருகின்றன.

இதற்கும் அப்பால், மத அமைப்புகள், அமைதியாக அந்த மக்களை தொடர்புகொண்டு படிப்படியாக மனதை மாற்றி மதம் மாறச்செய்துவிடுகின்றன.

இந்த மதமாற்றம் இலங்கையில் சங்கிலி மன்னன் காலத்திலிருந்தே நடக்கின்றது. அடிநிலை மக்கள் ஆலயங்களுக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் கத்தோலிக்க மதத்திற்கு மாறினார்கள். அவ்வாறு மதம் மாறியவர்கள் சங்கிலி மன்னனின் உத்தரவினால் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

மன்னார் பேசாலையில் அவ்வாறு கொல்லப்பட்ட மக்களின் நினைவாக எழுந்திருக்கிறது தேவசாட்சிகள் தேவாலயம்.

போரில், இயற்கை அநர்த்தங்களில், ஏழ்மையில், குடும்பப்பிரச்சினைகளில், தீராத நோய் உபாதைகளில் பாதிக்கப்படுபர்களை நோக்கி குறிப்பிட்ட மதப்பிரிவினரின் கரங்கள் நீளும். அவை அச்சந்தர்ப்பத்தில் இரக்கமுள்ள கரங்களாகவே தென்படும்.

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரையில் இவ்வாறு மதம் மாறியவர்களின் சுவாரஸ்யமான கதைகள் பலவுண்டு. ஆனால், இது பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் தயக்கம் நீடிக்கிறது.

நான் திருகோணமலையிலிருந்து பஸ்ஸில் சென்று மட்டக்களப்பு எல்லையில் இறங்கிய அந்தப்பிரதேசத்தில் புதிதாக ஒரு தேவாலயம் எழுந்திருக்கிறது. வீதியோரச்சுவர்களிலும் தகரவேலிகளிலும் குறிப்பிட்ட மதப்பிரசார சுவரொட்டிகள் காணப்பட்டன.

அந்தக்காட்சிகளை தரிசித்தவாறே அந்தவீட்டைத்தேடிச்சென்றேன். அவர்கள் மதம் மாறியிருக்கவில்லை. கேட்டதற்கு, "தங்களுக்கு வீடு தந்தது எஹெட் நிறுவனம். ஏற்கனவே எமக்குரிய மதம் இருக்கிறது. ஏன், மதம் மாறவேண்டும்...?" என்றார்கள்.

அவர்களுடன் சிறிதுநேரம் உரையாடியதில், போரினதும் சுனாமியினதும் பாதிப்பிலிருந்து படிப்படியாக விடுதலையாகி வருவது தெரிந்தது. அந்தக்குடும்பத்தில் இருவர் மத்திய கிழக்கிற்கு சென்று உழைத்துவருவது தெரிந்தது.

எஹெட் நிறுவனத்தின் தயவால் அந்தப்பிரதேசத்தில் குடியமர்ந்த சில குடும்பங்கள் கிடைத்த வீடுகளை சிறிது காலத்தில் வேறு குடும்பங்களுக்கு விற்றுவிட்டு மீண்டும் கடற்கரையோரங்களுக்கே வாழ்வதற்கு சென்றிருக்கும் தகவலும் தெரிந்தது.

இதுவிடயமாக சம்பந்தப்பட்ட மீள்குடியேற்ற அதிகாரிகள் கவனித்தல்வேண்டும். மண் சரிவு, வெள்ளம், சுனாமி அனர்த்தம், போர் அழிவு முதலான காரணங்களினால் அரசோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களோ புனர்வாழ்வு - மீள் குடியேற்ற அடிப்படையில் வீடுகள் அமைத்துக்கொடுத்தால், அவற்றை பின்னர் எவருக்கும் விற்பதற்கு அனுமதிக்காத வகையிலும், மீண்டும் பாதிப்பு நிகழக்கூடிய இடங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையிலும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சில வீட்டுத்திட்டங்களில் இதுவரையில் மக்கள் குடியேறாமல், அவை பாழடைந்திருப்பதாகவும், அங்கே பாம்புகள் உட்பட நிலத்தில் ஊர்ந்துசெல்லும் ஜீவராசிகள் குடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

--------

இது இவ்விதமிருக்க, என்னை அழைத்துச்செல்வதற்காக இலக்கிய நண்பர் 'செங்கதிரோன்' த. கோபாலகிருஷ்ணன் வந்தார். மட்டக்களப்பில் தமது இல்லத்தில் என்னைத் தங்கியிருக்கச்செய்து சில நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச்சென்றார்.

கவிஞர் காசி. ஆனந்தனின் மனைவியின் தங்கையைத்தான் இவர் மணம் முடித்திருக்கிறார். எனினும் காசி. ஆனந்தனும் இவரும் அரசியலில் வேறு வேறு துருவங்கள்.

கோபாலகிருஷ்ணன், சிறுகதை, கவிதை, உருவகம், இலக்கிய ஆய்வு, விமர்சனம், இதழியல் முதலான துறைகளில் ஈடுபாடுள்ளவர். அத்துடன் அரசியல் விமர்சனங்களும் எழுதிவருபவர்.

2008 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பிலிருந்து செங்கதிர் என்னும் கலை, இலக்கிய பண்பாட்டு பல்சுவைத்திங்கள் இதழை வெளியிட்டு வருபவர். நான் அவரிடம் சென்றிருந்த வேளையில் தமது புதிய நூல் விளைச்சல் குறுங்காவியத்தை வெளியிடும் பூர்வாங்க பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் கொழும்பில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பணிகளிலும் அர்ப்பணிப்புடன் இயங்கியவர். அவ்வேளையில்தான் எனக்கும் அறிமுகமானார்.

தனக்கு சரியெனப்பட்டதை துணிந்துசொல்லும் திராணியும் வெளிப்படையான பேச்சும் இவரது ஆளுமைக்குச்சான்று. முன்னர் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியில் அங்கம் வகித்திருந்த காலப்பகுதியில் 1990 ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி சென்னையில் சக்காரியா கொலனியில் அமைந்த ஈ.பி.ஆர். எல். எஃப்.பின் பணிமனையில் பத்மநாபாவும் மேலும் சிலரும் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அங்கு சென்று திரும்பியிருந்தமையால் உயிர்தப்பியிருக்கிறார்.

அந்தக்கண்டத்திலிருந்து தப்பிய பின்னரும் அரசியல் ஈடுபாடுகளில் இவருக்கு இருந்த தீவிரம் குறையவில்லை. அம்பாறை மாவட்டத்தில் டொக்டர் விக்னேஸ்வரன் தலைமையில் அமைந்த சுயேட்சைக்குழுவின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டவர்.

இவர் எழுதிய தமிழர் அரசியலில் மாற்றுச்சிந்தனைகள் என்ற தொடர், தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்து தற்பொழுது நூலாகியிருக்கிறது.

இந்நூல் பற்றிய அறிமுகத்தில் பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:

" இலங்கைத்தமிழ் மக்கள் தங்களது அரசியல் உரிமைப்போராட்டத்தின் வரலாற்றில் இன்று தெளிவானதொரு திசையறியாத இடரார்ந்த கட்டத்தில் நிற்கிறார்கள். உள்நாட்டுப்போரின் முடிவுக்குப்பின்னர், ஏழரை வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்ட நிலையில் அவர்கள் தங்கள் உரிமைப்போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து நிதானத்துடனும் விவேகத்துடனும் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள். கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களிலிருந்து முறையான படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்குப் பொருத்தமான முறையில் - அதேவேளை அடிப்படை அரசியல் அபிலாசைகளுக்கும் இலட்சியங்களுக்கும் சேதம் இல்லாத வகையில் தங்களது உரிமைப்போராட்டத்தை தொடருவதற்கான பாதையை வகுக்கவேண்டியவர்களாக தமிழ் மக்கள் இருக்கிறார்கள். "

" கடந்த கால அனுபவங்களின் மூலமாக படிப்பினைகளைப் பெற்று தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இன்றியமையாததான கருத்தாடல்களுக்கு கோபாலகிருஷ்ணன் தனது சிந்தனைகள் மூலமாக கணிசமான பங்களிப்பைச்செய்து வருகின்றார். தமிழர் அரசியல் பொதுவெளியில் ஆரோக்கியமான விவாதங்களுக்கு ஊக்கந்தரக்கூடியதாக இந்த நூலிலுள்ள அவரின் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன."

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச்சேர்ந்த பல கலை, இலக்கியவாதிகளுடன் எனக்கு இன்றளவும் உறவும் தொடர்பாடல்களும் நீடிக்கிறது. அவர்களில் திருகோணமலை நா. பாலேஸ்வரி, பாண்டிருப்பு சண்முகம் சிவலிங்கம், மருதமுனையைச்சேர்ந்த மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, மட்டக்களப்பில் ரீ. பாக்கியநாயகம், இறுதிக்காலத்தில் திருகோணமலையில் வாழ்ந்த கவிஞர் சு.வில்வரத்தினம், மட்டக்களப்பில் வாழ்ந்த திக்கவயல் தருமகுலசிங்கம் ஆகியோர் இன்று எம்மத்தியில் இல்லை.

அவர்களினால் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பமுடியாது போனாலும் அவர்களின் நினைவுகளுடன் மேலும் சில கலை, இலக்கியவாதிகள் எனது இலக்கிய வாழ்வில் இணைந்துகொள்வார்கள்.

அவ்வாறு இணைந்தவர்களில் ஒருவர்தான் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன். இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது குரல் தொலைபேசி வாயிலாக ஒலித்தது.

தான் அவுஸ்திரேலியா வந்திருப்பதாகவும் சில வாரங்கள் இங்கு நிற்கவிருப்பதாகவும் சொன்னார். மட்டக்களப்பில் நான் நின்ற மூன்று நாட்களும் என்னை பல இடங்களுக்கும் கலை இலக்கிய சந்திப்புகளுக்கும் அழைத்துச்சென்றவர் கோபாலகிருஷ்ணன்.

நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பயிற்சிக்கல்லூரியில் (கல்கமுவ) வெளியிடப்பட்ட அருவி இதழில்தான் 1969 இல் இவரது முதல் கவிதை (நற்கவிதை வேண்டும்) வெளியாகியிருக்கிறது.

பாரதியார் எழுதியிருக்கும் முதல் கவிதை ( குயிலானாய்..! நின்னொடு குலவியின் கலவி...) முதல் சிறுகதை ( துளசிபாய் அல்லது ரஜ புத்திரகன்னிகையின் சரித்திரம்) ஆகியன பற்றி விரிவான ஆய்வுகளை ஞானம் இதழில் எழுதியவர். எனது இலங்கையில் பாரதி ஆய்வுத்தொடருக்கும் இவரது இந்த ஆக்கங்களும் உசாத்துணையாக விளங்கியிருக்கின்றன.

கவிஞர் காசி ஆனந்தனுடன் இவருக்கு அரசியல் கருத்து முரண்பாடுகள் இருந்தபோதிலும், அவர் எழுதி வெளிவராத இரண்டு குறுங்கவிதைகளை ஞானம் இதழில் பதிவேற்றியவர் கோபாலகிருஷ்ணன்.

யாழ்ப்பாணம் ஒடியல் கூழ் பற்றி காசி. ஆனந்தன் எழுதிய கவிதை

"நண்டிருக்கும் நல்ல இறாலிருக்கும் மீனின்

துண்டிருக்கும் இன்பம் தொகையிருக்கும் - உண்டிருக்கும்

ஆளுக்குச் சொர்க்கம் அருகிருக்கும் இத்தனையும்

கூழுக்கிருக்கும் ஞானம்"

1972 - 1976 காலப்பகுதியில் இலங்கை சிறைகளில் தடுப்புக்காவலில் காசி. ஆனந்தன் இருந்தபோது அங்கு கைதிகளுக்கு தரப்பட்ட உணவு குறித்து எழுதப்பட்ட வெண்பா:

" இரையாகும் பாணில் புழுக்கள் இருக்கும்

சுரையளவு கல்லிருக்கும் சோற்றில் - அரையவியல்

மாட்டிறைச்சித் துண்டில் மயிரிருக்கும் என்னுயிரைக்

கேட்டிருக்கும் கீரைக்கறி"

1997 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட மூதூர் எம்.பி. அ தங்கத்துரைக்காகவும் அஞ்சலிக்கவிதை எழுதியிருக்கும் கோபாலகிருஷ்ணன், மல்லிகை ஜீவாவையும் அவரது பிறந்த தின காலத்தில் நீண்ட வாழ்த்துக் கவிதை எழுதியிருப்பவர்.

நான் மட்டக்களப்பில் இவரிடம் சென்றிருந்த வேளையில் சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் மறைந்திருந்தார். கவிக்கோ எனதும் இனிய நண்பர். முதல் முதலில் அவர் இலங்கை வந்திருந்த சமயம் நண்பர் கவிஞர் சோலைக்குமரனுடன் ( ஜவாத் மரைக்கார்) கொழும்பில் எஸ். எம். கமால்தீன் அவர்களின் இல்லத்தில் சந்தித்திருக்கின்றேன்.

மெல்பன் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழாக்காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கும் வருகைதந்திருக்கும் கவிக்கோ எனதில்லத்திற்கும் இரண்டு தடவைகள் வந்திருக்கிறார்.

எனது இலங்கைப்பயணத்தில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்சிகளில் தீவிரமாக இருந்தமையால் கவிக்கோ குறித்து எதுவும் எழுதமுடியாமல்போய்விட்டது. வீரகேசரி சங்கமம் பகுதிக்காக அவர் பற்றிய நினைவுப்பகிர்வை அதன் ஆசிரியர் ஜீவா சதாசிவம் கேட்டிருந்தும் தொடர்ச்சியான பயணங்களினால் எழுதமுடியாது போய்விட்டது.

கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய நினைவுகளை கோபாலகிருஷ்ணனுடன் பகிர்ந்துகொண்டபோது, அவர் தமது வீட்டின் அலுவலக அறைக்குச்சென்று 2002 ஆம் ஆண்டு கவிக்கோ இலங்கை வந்தவேளையில் தமிழ்ச்சங்கத்தில் அன்றைய காலப்பகுதித்தலைவர் தினகரன் முன்னாள் ஆசிரியர் கலாசூரி இ.சிவகுருநாதன் தலைமையில் கவிக்கோ அவர்களுக்கு நடத்தப்பட்ட வரவேற்பில் தான் வாசித்தளித்த கவிதையின் பிரதியை எடுத்துவந்து காண்பித்தார்.

மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையே நவீனத்துவம் நடத்திய நிழல்போரை துல்லியமாக அதில் பதிவுசெய்திருந்தார் கோபாலகிருஷ்ணன்.

அதிலிருந்து சில வரிகள்:

பூப்படையாப் பெண்களெல்லாம்

பிள்ளைபெற வந்ததுபோல் - கவிதை

யாப்பறியாப் பேர்களெல்லாம்

பாப்புனைய வந்துவிட்டார்.

புற்றுக்குள் ளிருந்தீசல்

புறப்பட்டு வந்ததுபோல்

" புதுக்கவிதை" ப்புலவர்கள்

கொட்டும் குளவிக்

கூட்டைக்கலைத்தது போல்

எட்டுத்திக்கெங்கும்

இவர்கள்தான் ஏராளம்

வெற்றுத் தகரத்தில்

வீணை ஒலிக்குமா..? இக்

கற்றுக் குட்டிகளால் - தமிழ்க்

கவிதை செழிக்குமா..?

ஆதலினால் - கவிக்கோவே ...!

அப்துல் ரகுமானே ..!

தடம் புரளா தென்றும்

தமிழ்க் கவிதைத்தேரோட

வடம் இழுக்க வாருங்கள் !

வாழ்த்துகிறோம் ! வாழ்த்துகிறோம்.

-- இவ்வாறு ஈழத்து இலக்கியப்பரப்பில் தமது படைப்பாளுமையை அழுத்தமாகப்பதிவுசெய்துவரும் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணனிடம் ஈழத்து கலை, இலக்கிய உலகம் பற்றிய எனக்குத்தெரியாத பல தகவல்களும் இலங்கை அரசியல் குறித்த சுவாரஸ்யமான செய்திகளும் நிறைந்திருக்கின்றன.

மட்டக்களப்பில் பல இடங்களுக்கும் தனது காரில் அவர் என்னை அழைத்துச்சென்றபோது அவரிடமிருந்து கேட்டுத்தெரிந்துகொண்டவற்றை விரிவுபடுத்தி சுயசரிதைப்பாங்கில் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன்.

அவருடன் பயணித்து, மட்டக்களப்பு பிரதேசத்தில் சந்தித்த கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய தகவல்களை அடுத்த அங்கத்தில் பதிவுசெய்கின்றேன்.

(பயணங்கள் தொடரும்)

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Friday, 22 September 2017 18:19