பயணியின் பார்வையில் -- அங்கம் 14: அரசியல் தலைவர்களுக்கும் சொல்ல மறந்த கதைகள் பலவுண்டு. நூலுருவில் வெளிவந்திருக்கும் முருகேசு சந்திரகுமார் நிகழ்த்திய பாராளுமன்ற உரைகள்

Thursday, 17 August 2017 15:01 - முருகபூபதி - எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
Print

கிளிநொச்சி முன்னாள் எம்.பி. முருகேசு சந்திரகுமாருடன்கிளிநொச்சி ஊடக அமையத்தின் சந்திப்பு நிறைவடைவதற்கு சற்று காலதாமதமானது. தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு சம்பந்தமாக  உரையாற்றுவதற்கு சில சகோதரிகள் வந்திருந்தார்கள்.    ஒரு கத்தோலிக்க மதகுருவினால் நடத்தப்படும் மருத்துவ ஆலோசனை அமைப்பிலிருந்து வந்திருந்த அவர்களுடைய உரை சமூகப்பெறுமதியானது. எனினும் அங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையினரே  கேட்டனர் என்பது எனக்கு ஏமாற்றமே. கத்தோலிக்க மதபீடங்கள் இவ்வாறு இலங்கையில் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது. அத்துடன் கத்தோலிக்க வணக்கத்துக்குரிய சகோதரிகளும் அன்னையரும் பெற்றவர்களை இழந்தவர்களையும் பராமரிப்பின்றி அனாதரவான  முதியவர்களையும் ஆங்காங்கே இல்லங்கள் அமைத்து கவனித்துவருகின்றனர். மருத்துவ முகாம்கள் நடத்துகின்றனர். வன்னிப்பிரதேசங்களில் இவ்வாறு நடைபெற்றாலும், கிழக்கில் சில மதபீடங்கள் மத மாற்றவேலைகளில் கச்சிதமாக ஈடுபடுவதையும் அவதானித்தேன். அதுபற்றி கிழக்கிலங்கை பயணம் தொடர்பான பத்தியில் எழுதுவேன்.

அன்றைய  ஊடக அமையசந்திப்பு முடிந்து புறப்படும்போது, " உங்களை சந்திக்க மேலும் சிலர் வந்து வீட்டில் காத்திருக்கிறார்கள்." என்றார் நண்பர் கருணாகரன். மற்றும் ஒரு சந்திப்பா...?" எனக்கேட்டேன். "ஆம்,  கிளிநொச்சி முன்னாள் எம்.பி. முருகேசு சந்திரகுமார் உட்பட சில  இலக்கியவாதிகளும் பாடசாலை அதிபர்களும் அங்கு வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இப்பொழுதே மாலை ஆறு மணியும் கடந்துவிட்டது. புறப்படுவோம்" என்றார் கருணாகரன். நான் சந்திப்பதற்கு பெரிதும் விரும்பியிருந்தவர்தான் முருகேசு சந்திரகுமார். அதற்குப்  பல காரணங்கள் இருந்தன. அன்றைய பயணத்திற்கு முன்னர் கிளிநொச்சிக்கு 2010 ஆம் ஆண்டு முதல் அடிக்கடி வந்து திரும்பியிருக்கின்றேன். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் திரு. பங்கயற்செல்வன் அதிபராக இருந்த காலத்தில் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஊடாக பல மாணவர்களுக்கு உதவியிருக்கின்றோம். அதற்கு முன்னர் போர்க்காலத்திலும் மாங்குளம் பங்குத்தந்தையாக இருந்த வண.பிதா ஆர். சூசைநாயகம் அவர்களின் ஊடாக சில மாணவர்களுக்கு உதவி வழங்கியிருக்கின்றோம். அதில் ஒரு மாணவர் மாவட்ட ரீதியில் சிறந்த மாணவராக தெரிவாகி முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவிடம் விருதும் பெற்றவர். பின்னாளில் இம்மாணவர் வெளிநாடொன்றில் இலங்கை தூதரகத்தில் நல்லதொரு பதவியிலிருப்பதாகவும் அறிய முடிந்தது.

இவ்வாறு கிளிநொச்சிக்கும் எமக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தபோதிலும்,  போர் முடிவுற்றதன்பின்னரே எனக்கு அங்கு சென்றுவருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. போர்க்காலத்தில் கிளிநொச்சி பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் பெற்றிருந்ததை அறிவோம். அங்கிருக்கும் வற்றாத ஜீவ நீர் நிலை இரணைமடுக்குளத்தை நீர்விநியோகத்திற்கு பயன்படுத்துவது   குறித்தும்  வடக்கு - வன்னி விவசாயிகளிடத்தில் ஒத்த கருத்து இல்லை. கிளிநொச்சி போருக்குப்பின்னர் வேகமாக அபிவிருத்தியடைந்த பிரதேசம். அதில் முக்கிய பங்கு மு. சந்திரகுமாருக்கும் உண்டு. எனினும் கடந்த பொதுத்தேர்தலில் அவர் தெரிவாகவில்லை என்பது எனக்கு வருத்தமே.

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பெருகியிருக்கின்றன. கிளிநொச்சியில் ஒரு ரயில் நிலையம் இருக்கத்தக்கதாக பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்களின் நலன் கருதி மற்றும் ஒரு ரயில் நிலையம் பல்கலைக்கழகத்திற்கு சமீபமாகவே அமைந்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணவேலைகள் நடந்தவேளையிலும் சென்று பார்த்திருக்கின்றேன். இரணைமடுக்குளத்தையும் தரிசித்தேன். ஆனால், எனக்கு ஒரு கேள்வி நீண்டகாலமாக துருத்திக்கொண்டிருந்தது. நீர்வளம், நில வளம் நிரம்பிய இந்தப்பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டைகள் உருவாவதில் ஏன்  தாமதம் நீடிக்கிறது...? பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது.

ஒரு தடவை எமது உதவி பெறும் மாணவர்களின் சந்திப்பு நிதிக்கொடுப்பனவுக்கு சென்றிருந்தபோது, அதிபர் என்னை தமது அலுவலக அறைக்கு அழைத்து, ஐந்து பெண், ஐந்து ஆண் தொண்டர் ஆசிரியர்களை அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு மாதாந்தம் சம்பளம் கொடுப்பதற்கும் சிரமப்படுவதாகவும் எமது கல்வி நிதியம் ஊடாக உதவ முடியுமா...? எனவும் கேட்டார். போரிலே பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு மாத்திரமே உதவும் அமைப்பே எமது கல்வி நிதியம் எனச்சொல்லி அவரது வேண்டுகோளை மிகுந்த மனக்கஷ்டத்துடன் நிராகரித்தேன். இதுதொடர்பாக பின்னர், அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த கிளிநொச்சி எம்.பி. ஶ்ரீதரன் அவர்களிடமும் நான் பிரஸ்தாபித்தபோது அவர், தற்பொழுது அனைவருக்கும் அரச நியமனம் வழங்கப்பட்டுவிட்டது என்றார். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்பதை சில நிமிடங்களிலேயே கிளிநொச்சிக்கு  தொடர்புகொண்டு அறிந்துகொண்டேன். இந்த விவகாரங்கள் உட்பட பல விடயங்களை நான் பேசுவதற்கு விரும்பியிருந்த ஒருவர்தான் முருகேசு சந்திரகுமார்.

கிளிநொச்சி பிரதேசத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் பொறுப்பற்ற செயல்களினால் அதிபர்கள் இடமாற்றங்களும் நடந்திருக்கின்றன. அதிபர்கள் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கு அமைய பழிவாங்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு ஒரு பாடசாலையில் ஏற்பட்ட நிருவாக குழப்பங்களினால் அந்தப்பாடசாலையிலிருந்து உதவி பெற்ற சில மாணவர்களின் நிலையையும் அறியமுடியாது போனது மாத்திரமன்றி நிதியுதவியும் நிறுத்தப்படவேண்டிய சூழ்நிலை உருவானது.
இவ்வாறு பல விடயங்கள் எனது மனதை குடைந்துகொண்டிருந்த பின்னணியில் அன்றைய தினம் மாலையில் கருணாகரன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்புக்குச்சென்றேன்.

அதற்கு முதல் நாள் காலையில் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தீபம் பத்திரிகை படிக்கக்கிடைத்தது. 14-05-2017 ஆம் திகதி தீபம் பத்திரிகையில், சொல்ல மறந்த கதைகள் என்ற தொடரின் ஒன்பதாவது அங்கம் சந்திரகுமாரின் வாக்குமூலமாக பதிவாகியிருந்தது. இந்தத்தலைப்பில் நானும் ஒரு தொடர் எழுதி புத்தகமாக வெளியாகியிருக்கிறது. அதற்கும் கிளிநொச்சியில் 2015 இல் அறிமுகக்கூட்டம் நடந்திருக்கிறது. " மக்கள் பிரதிநிதிகள், பொதுவாழ்வில் உள்ளவர்களின் அறியப்படாத பக்கங்களை புரட்டும் பகுதி இது. வாழ்வில் நடந்த, அடிக்கடி நினைக்கும் மெய்சிலிர்க்கும் நிகழ்வுகளை இந்தப்பகுதியில் ஒவ்வொரு வாரமும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள் அவர்கள். அவர்கள் மனதின் மூலைக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவங்களை முதன் முறையாக அவர்கள் அச்சில் பேசவுள்ளார்கள் நீங்கள் இதுவரை கேட்காத கதைகள் இவை." என்று கட்டமிடப்பட்ட பெட்டிக்குள் இக்குறிப்பும் இடம்பெற்றிருந்தது. இந்த 9 ஆவது அங்கத்தில் பேசியிருந்தவர் முருகேசு சந்திரகுமார். அதில் ஒரு சுவாரஸ்யமான தொடக்கம் இருந்தது.

" 13  ம் திருத்தத்தின் சில அதிகாரங்களை அகற்ற மகிந்தவின் ஆதரவுடன் பசில் உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள் முயன்றார்கள். இதற்கெதிராக எம்.பி.க்களிடம் கையெழுத்து வாங்கினேன். இந்த முயற்சியில் டக்ளஸ் தேவனந்தாவுக்கும் பங்குண்டு. பெரும்பாலானவர்கள் கையெழுத்து வைத்தனர். சிறுபான்மையின பிரதிநிதிகளில் ரிசாட்  பதியுதீன் வைக்கவில்லை. அவரது கட்சியைச்சேர்ந்த ஹுனைஸ் பாருக் வைத்தார். பின்னர் என்னைத்தேடி வந்து " ரிசாட் பேசுகிறார்" எனக்கூறி, கையெழுத்தை அழித்துவிட்டுச்சென்றார். பெரும்பாலான எம்.பி.க்களின் கையெழுத்தைக்கொடுத்ததால் அந்த முயற்சியிலிருந்து மகிந்த பின்வாங்கினார்.

இந்த விவகாரத்தைபேச  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களை மகிந்த அழைத்திருந்தார். டக்ளஸ் தேவனந்தாவுடன் நானும் சென்றிருந்தேன். விமல் வீரவன்சவும் சம்பிக்க ரணவக்கவும் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக கடுமையாக பேசினார்கள். அதில் கைவைக்கக்கூடாதென நாங்கள் வாதிட்டோம். வாசுதேவ , டியூ குணசேகர உள்ளிட்ட இடதுசாரிகளும் எமக்கு ஆதரவாகப் பேசினார்கள். நிலமை சிக்கலாகுவதை அவதானித்த மகிந்த, இந்த விடயத்தை தற்போதைக்கு கைவிடுவோம் என்றார். இதைச்சொல்லிவிட்டு, என்னைப்பார்த்து, "  Killinochchi man... You now happy ?" எனக்கேட்டார்.

இந்தப்பதிவினை பார்த்திருந்தமையினால், முருகேசு சந்திரகுமாருடன் நெருக்கமாகப்பேசுவதற்கு எனக்கு பல விடயங்கள் இருந்தன. அன்றைய சந்திப்புக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த அதிபர்கள் பங்கயற்செல்வன், பெருமாள் கணேசன் ஆகியோரும் வந்திருந்தனர். வவுனியாவில் அமைக்கப்பட்டு இன்னமும் மக்களின் பயன்பாட்டுக்குத்திறக்கப்படாதிருக்கும் பஸ் நிலையம், கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டு இதுவரையில் திறக்கப்படாதிருக்கும் பொதுச்சந்தைக்கட்டிடம் தொடர்பாகவெல்லாம் கேட்டுத்தெரிந்துகொள்வதற்கு அந்தச்சந்திப்பு உதவியது.

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட இதுவரையில் மக்களின் பயன்பாட்டிற்கு உதவாதிருக்கும் பஸ்நிலையம் அமைப்பதற்கு 195 மில்லியன் ரூபா செலவாகியிருக்கிறது. மக்களின் பணம் இவ்வாறு வீண் விரயம் செய்யப்படுவது குறித்து கேள்விகளை எழுப்பினேன். அத்துடன் தொகுதி மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்காகவாவது அனைத்து தமிழ்க்கட்சித்தலைவர்களும் ஒன்றிணைந்து இயங்கமுடியாதா...?  என்ற அசட்டுத்தனமான ஒரு கேள்வியும்  அதில்  இருந்தது. வெளியிலிருந்து செல்லும் என்போன்றவர்களுக்கு, அங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திவேலைத்திட்டங்களில் கட்சி அரசியல் ஏட்டிக்குப்போட்டியாக  நீடிப்பதை வருத்தத்துடன் அவதானிக்கின்றோம்.

நான் வசிக்கும் அவுஸ்திரேலியாவில் மக்கள் நலன்சார்ந்த வீதி நிர்மாணப்பணியோ அல்லது கட்டிடப்பணிகளோ  தொடங்கப்படுவதற்கு முன்னர் பெரிய காட்சிப்பலகையில் குறிப்பிட்ட அபிவிருத்தித்திட்டத்தின் நோக்கமும் செலவிடப்படவிருக்கும் தொகையும் எவ்வளவு காலத்தில் நிரமாணப்பணிகள் முடிவடையும் என்றும் மக்களுக்கு எழுத்து மூலம்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். நிர்மாணப்பணிகள் முடிந்ததும் எந்தத்தலைவர்களும் வந்து பூமாலை பொன்னாடை வாங்கி அமளிப்படுத்தாமலேயே நிர்மாணத்தில் ஈடுபட்டவர்களே திறந்து வைத்துவிட்டு,  அடுத்த வேலையை கவனிக்கச்சென்றுவிடுவார்கள். இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வரும் தலைவர்கள் எம்.பி.க்கள், அமைச்சர்கள் இவற்றையும் தரிசித்தால் எங்கள் தாயகத்திற்கு நல்லது.

அன்றைய சந்திப்பில்  சந்திரகுமார்,  பல தகவல்களை விரல்நுனியிலிருந்து  துல்லியமாக புள்ளிவிபரங்களுடன் சொன்னார். தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் பாராளுமன்றில் குரல்கொடுத்துவந்திருப்பவர். ஆனால், அவருடை கோரிக்கைகள் பல முன்னைய இன்றைய அரசுகளில் நிறைவேற்றப்பட்டமை சொற்பமே. தமிழ்மக்கள் கடந்துசெல்லவேண்டிய தூரம் அதிகம் என்பதை சந்திரகுமார் அன்றைய சந்திப்பில் என்னிடம் தந்த சில நூல்கள் சாட்சியமாகத்திகழ்கின்றன.
பாராளுமன்றில் கிளிநொச்சி பிரதிநிதியாகவும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளராகவும் பணியாற்றியிருப்பவர். பாரளுமன்றில் நடந்த விவாதங்களின்போது அவர் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பே அவர் எனக்குத்தந்த நூல்கள். மீனவர்கள்,விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் போரிலே பாதிக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் விவகாரம், அரசியலமைப்பு  உள்ளிட்ட பல விடயங்களை அவர் தொட்டு விரிவாக  உரையாற்றியிருக்கிறார். போர்க்காலத்திலும் போர் முடிந்த காலத்திலும் அவர் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றிருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அவருடைய பாரளுமன்ற உரையில் ஒரு பகுதி:
" இன்று இச்சபையில் நான் அழுத்திக்கூறுவது என்னவென்றால் உண்மையாகவே நீங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கத்தயாராக இருக்கின்றீர்கள்  அம்மக்களின் அபிலாஷைகளை மதிக்கின்றீர்கள்  என்றால், உடனடியாக தமிழ்பேசும் பிரதேசங்ககளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்களையும் நியாயமான முறையில் அகற்றுதல் வேண்டும் என்பதே ஆகும்"

2015 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 28  ஆம் திகதி நிகழ்த்திய உரையில்  ஒரு பகுதி:
" இலங்கை பல்லினச் சமூகங்கள் வாழும் ஒரு நாடு என்ற வகையில் ஜனநாயகத்தையும் சமநீதியையும் சரியாக நெறிப்படுத்தக்கூடிய சட்ட மூலங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட  வேண்டும். குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற, அவர்களின் உணர்வுகளையும் அவர்களுடைய  உரிமைkilimeet2களையும் மதிக்கின்ற உத்தரவாதப்படுத்துகின்ற வகையில் இந்தச்சட்டமூலங்கள் அமையவேண்டும். அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்திலே அரசியல் யாப்புப்பேரவையில் பன்முகத்தன்மை இருக்கவேண்டும். என்ற வரிதான் குறிப்பிடப்பட்டிருக்கின்றதே தவிர, பன்முகத்தன்மை என்ற பதத்துக்கான அர்த்தம் விரிவாக்கப்படவில்லை. குறிப்பாக, சிறுபான்மைச்சமூகங்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை"

நேரத்தையும் பொருட்படுத்தாமல் அன்றைய சந்திப்பு வந்திருந்த அனைவரிடமிருந்தும் பொறுப்புணர்வு கலந்த கருத்துக்களையே பெற்றுக்கொண்டேன். சமகால  அரசியல் நிலவரங்கள் அவர்களை மிகுந்த ஏமாற்றத்திற்குள் தள்ளியிருந்தது. அவர்களை மட்டுமா...? என்னையும்தான்.!!!

(பயணங்கள் தொடரும்)

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Thursday, 17 August 2017 15:06