அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான 'சருங்கலய' திரைப்படம் பற்றிய எனது சிறு குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன.

அன்பின் நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். சருங்கலய படம் பற்றிய குறிப்புகளை பதிவுகளில் படித்தேன். கடந்த கால நினைவுகளை தந்தமைக்கு மிக்க நன்றி. நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெளிவந்த படம். வடபகுதியின் சாதிப்பிரச்சினையையும் தென்னிலங்கையின் இனரீதியான கடும்போக்கு வாதத்தையும் சித்திரித்த படம்.  இலங்கை நாடாளுமன்றத்திலும் சில அரசியல் தலைவர்கள் ஏட்டிக்குப்போட்டியாக இந்த திரைப்படத்தை பாருங்கள் என்று அறைகூவல் விடுத்தார்கள். இதில் சம்பந்தப்பட்ட யோகா பாலச்சந்திரன் கனடாவில்தான் வசிக்கிறார். அவரிடம் திரைக்கதையை கேட்டு அறிந்துகொள்ளமுடியும். படத்தின் பல காட்சிகள் மனதில் இருக்கின்றன. குறிப்பாக அதில் வரும் குழந்தை, ஒரு மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை வீசும். அதனைக்காணும் நடராஜா (காமினி பொன்சேக்கா) அருகில் வந்து " மகளே அதனை வீசவேண்டாம். தரையில் புதைத்தால், சிறிது நாளில் ஒரு மாமரம் வரும். நீங்க வளரும்போது மேலும் நிறைய மாம்பழங்கள் அதிலிருந்து உங்களுக்கு கிடைக்கும்" என்று அறிவுறுத்திவிட்டு மாங்கொட்டையை நடுவார். வடக்கின் பொருளாதார சிந்தனையை அக்காலத்தில் குறியீடாக சித்திரித்த இக்காட்சி பற்றி பலரும் சிலாகித்தார்.

இப்படத்தில் நடராஜாவின் முதிய தாயாக வரும் பெண் இயல்பாக நடித்திருப்பார். பம்பலப்பிட்டி கீறின்லண்ட்ஸ் ஹோட்டலில்தான், வீணா ஜெயக்கொடி ( பாத்திரத்தின் பெயர் மறந்துவிட்டது) நடராஜாவை தனது கணவர் எனச்சொல்லி காப்பாற்றுவார். இதுபோன்ற காட்சி நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலிலும் வருகிறது. சருங்கலய படத்தில் நடித்தபின்னர் காமினிக்கு மற்றும் ஒரு தமிழ்ப்படம் எடுக்கவேண்டும் என்ற விருப்பமும் வந்தது. நண்பர் தெளிவத்தை ஜோசப்பை தமது வீட்டுக்கு அழைத்து கதையும் சொன்னார். தெளிவத்தை ஜோசப், ஏற்கனவே வி. பி. கணேசனின் புதிய காற்று படத்திற்கு வசனமும் எழுதியவர். ஆனால் அந்த முயற்சி நிறைவேறவில்லை. இந்தச் சம்பவங்கள் 1980 இற்கு முன்னர் நடந்தவை.

காமினி நன்றாக தமிழும் பேசுவார். மனிதநேயம் மிக்கவர். சருங்கலய போன்ற படங்கள் இலங்கையில் வெளிவரல்வேண்டும். நல்லிணக்கத்திற்காக எமது கலைஞர்கள் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.  சுனில் ஆரியரத்ன, தர்மசேன பத்திராஜா, பிரசன்ன விதானகே உட்பட பல மனிதநேயம் மிக்க சிங்களத்திரையுலக கலைஞர்கள் பற்றி யாராவது விரிவாக எழுதவேண்டும். 

நன்றி கிரிதரன்.
அன்புடன்
முருகபூபதி

mailto:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.