குரு அரவிந்தன் சுப்பர் சிங்கர் ஜ+னியர் - 4 இன் முடிவுகள் வெளிவந்த போது ஆசை காட்டி மோசம் செய்து விட்டார்கள் தொலைக்காட்சியினர் என்று எல்லோருமே புலம்பினார்கள். ஆனால் ஒவ்வொருவரின் புலம்பலும் வித்தியாசமானவையாக இருந்தன. ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்பார்த்தபடியே நடந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் எல்லாமே தலை கீழாக நடந்து முடிந்து விட்டது. இது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சிதான், இதைப் பெரிது படுத்தக்கூடாது என்று நேயர்கள் நினைத்தாலும், இத்தனை மாதங்களாக நடுவர்களை வைத்து மிகவும் சிறப்பாக நடத்திய ஒரு நிகழ்ச்சியைக் கடைசி நேரத்தில் கோட்டை விட்டு விட்டார்கள் என்பதே பலரின் கருத்தாகவும் இருக்கின்றது. போட்டி என்று வந்தால் நேர்மையாக நடக்க வேண்டும் நடுவர்களின் தீர்ப்பபை ஏற்கவேண்டும். இதுதான் சரியான, நேர்மையான போட்டியாக இருக்கும். இதைத்தான் குழந்தைப் பருவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம், இதைத்தான் சிறுவர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றோம். அந்த நேர்மையைத்தான் தொலைக்காட்சி நிறுவனத்தினரிடம் நேயர்களும், சிறுவர்களான போட்டியாளர்களும் எதிர்பார்த்தார்கள். 2010 ஆம் ஆண்டு நடந்த சுப்பர் சிங்கர் ஜூனியர் - 2 இல் அதிரடியாக அஜித்தைத் தெரிவு செய்து எப்படி சுதப்பினார்களோ அதே தவற்றை மீண்டும் செய்ய மாட்டார்கள் என்று நேயர்கள் எதிர்பார்த்தார்கள். மீண்டும் ஒரு தவறுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது வேறாகி விட்டது. பொருளாதார ரீதியாகப் பார்ப்போமேயானால் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வருமானம் தான் முக்கியம் என்பதை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். முடிவெடுப்பது அவர்களாகையால், நேயர்களாகிய நாம் விருப்பமோ இல்லையோ அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ரொறன்ரோவில் நடக்கும் எனது தமிழ் வகுப்பில் சில நிமிடங்கள் அவ்வாரத்து பொது விடயங்கள் பற்றி மாணவர்களுடன் தமிழில் கலந்து உரையாடுவதுண்டு. முதல் நாள் சுப்பர் சிங்கர் முடிவுகள் வெளிவந்திருந்தன. மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் அதைப்பற்றி வினாவினேன். இருவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நிகழ்ச்சியைப் பார்த்திருந்தார்கள். சுப்பர் சிங்கர் முடிவில் அவர்களுக்குத் திருப்தியில்லை. எல்லோரையும் ஏமாற்றி விட்டார்கள் என்ற மனநிலை அவர்களிடையே உருவாகியிருப்பது அவர்களுடன் பேசியபோது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஸ்பூர்த்தி முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டதை இருவர் ஏற்றுக் கொண்டார்கள் ஆனால் சில காரணங்களுக்காக அவர்கள் அந்த முடிவை விரும்பவில்லை என்று சொன்னார்கள். காரணம் கேட்டேன் ஒன்று அவர் வசதி படைத்தவர் எனவே ஹரிப்பிரியாவுக்கு அந்த வீட்டைக் கொடுத்திருக்கலாம் என்று ஒருவர் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். மற்றச் சிறுமி அவருக்கு இன்னும் வயதிருக்கின்றது, அடுத்த முறையும் பங்கு பற்றலாம் எனவே இம்முறை ஹரிப்பிரியாவிற்குக் கொடுத்திருக்கலாம் என்றார். இது இரக்கத்தால் ஏற்பட்ட மூன்றாம் வகுப்பில் தமிழ் படிக்கும் மாணவரின் மனநிலையாக இருந்தது. ஆனால் இருவரும் ஹரிப்பிரியாதான் வந்திருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனாலும் தெரிந்தோ தெரியாமலோ, நல்லதோ கெட்டதோ, புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ் லளர்ப்பதற்குத் துணை நிற்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம். இது ஒரு பாட்டுப் போட்டியாகையால், போட்டி என்று வந்துவிட்டால் திறமைக்குத்தான முதலிடம் கொடுக்க வேண்டும், நடுவர்கள் என்பவர்கள் அந்தத் துறையில் அனுபவம் பெற்றவர்கள். எனவே நடுவர்களின் தீர்ப்பு நேர்மையாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மாணவர்களுக்கு விளங்கப் படுத்தினேன். சிறுவர்களான அவர்களும் புரிந்து கொண்டார்கள். உங்கள் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு முதலில் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். மேடைக்கூச்சத்தை அகற்ற வேண்டும். ‘லீடர்ஷிப்’ என்று சொல்லப்படுகின்ற தலைமைத்துவ பொறுப்பை ஏற்று அதை நல்ல முறையில் கொண்டு செல்ல வேண்டும். எம்மினத்து சிறுவர் சிறுமிகளுக்கு இதுவரை இப்படியான பொறுப்புக்களை நம் பெறோர் கொடுக்க முன்வரவில்லை என்பது பெரிய குறையாகும். ஜெசிக்காவின் பெற்றோர் இதை நடைமுறைப் படுத்துவதில் பின் நின்றிருந்தால் இன்று இசையுலகம் அறிந்த பெண்ணாக ஜெசிக்கா வந்திருக்க முடியாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக சபை அறிந்து எதையும் செய்ய வேண்டும் என்பார்கள். வாக்குகளின் அடிப்படையில்தான் தெரிவு செய்கிறார்கள் என்றால், பாடல் தெரிவு செய்யும்போது மக்களுக்குப் பிடித்தமான பாடல்களைத் தெரிவு செய்ய வேண்டும். ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற பாடலை கௌதம் சுப்பர் சிங்கர் - 3 இல் தெரிவு செய்ததன் மூலம் பிரபலமானதுபோல, இந்த வருடம் ‘தமிழுக்கும் அமிழ்தென்று பெயர்’ என்ற பாரதிதாசன் பாடலைக் ஹரிப்பிரியா தெரிவு செய்து பாராட்டைப் பெற்றிருந்தார். அதே போல ‘தோல்வி நிலை என நினைத்தால்’ என்ற பாடலோடு ‘விடைகொடு எங்கள் நாடே’ என்ற கன்த்தில் முத்தமிட்டால் பாடலை கலந்து பாடியதன் மூலம் ஈழத்தமிழரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருந்தார் ஜெசிக்கா. ‘தோல்வி நிலை என நினைத்தால்’ என்ற பாடல் முன்பு இயக்கத்தினரது வானொலியில் தினமும் ஒலிபரப்பான உணர்வுகளைத் தூண்டும் ஒரு பாடலாகும். இரண்டு பாடல்களையும் கலந்து சிறப்பாகப் பாடியதால் பலரின் பாராட்டையும் ஜெசிக்கா பெற்றிருந்தார். தமிழர்களின் உணர்வுகள் மங்கிப்போகவில்லை என்பதை இந்தப் பாடல் புலப்படுத்தியிருக்கின்றது. ‘நாம் எல்லோரும் ஒரே தமிழர்கள்தான்’ என்று நடிகர் தனுஷ் தனது சோகத்தை வெளிப்படுத்தியிருந்தார். சித்திரா, சுபா, டீடீ, போன்றவர்கள் பாடலைக் கேட்டு அழுதே விட்டார்கள். தகுந்த நேரத்தில் இந்த உணர்வுபூர்வமான பாடலைத் தெரிவு செய்திராவிட்டால் எல்லோருமே ஜெசிக்காவை ஓரம் கட்டியிருப்பார்கள்.

ஹரிப்பிரியா தந்தையை இழந்த தனது சோகத்தைச் சொன்னார். ஜெசிக்கா தாய் மண்ணை இழந்த சோகத்தைச் சொன்னார். போட்டி என்று வந்து விட்டு சோகத்தைச் சொல்லி அனுதாபம் பெற விரும்புகின்றார்களா என்று சிலர் வாதம் செய்தனர். ஹரிப்பிரியாவின் வயதிற்கு அவர் சிறந்ததொரு பாடகி என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஹரிப்பிரியாவிற்காக, நடுவராய் இருந்த மனோ பரிந்துரை செய்ய முற்பட்டதுதான் பெரும்பாலான நேயர்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த விடையத்தில் மனோ சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையாக சித்திராவும் மாறியிருந்தார். சுபா தனித்துப் போயிருந்தாலும் அவரது சொல் எடுபடவே இல்லை. திறமையின் அடிப்படையில் ஹரிப்பிரியாவிற்குப் போட்டியாக ஜெசிக்கா வரமாட்டார் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். அதனால்தான் போட்டியாக வரக்கூடிய ஸ்ரீ ஷாவையும், அனுஷ்யாவையும் முற்கூட்டியே வெளியே போட்டிருந்தார்கள். பரத் கடைசிவரை ஆசை காட்டப்பட்டு ஹரிப்பிரியா போலவே ஏமாற்றப்பட்டார். இவர்களுக்கிடையிலான போட்டியில் ஸ்பூர்த்தி நோகாமல் பட்டத்தைத் தட்டிச் சென்றுவிட்டார். நடக்கவேண்டியது எல்லாம் நல்லபடியே நடந்தது, ஆனால் வாக்காளரும், முடிவெடுக்கும் நிறுவனத்தினரும் காட்சியை மாற்றி அமைத்து விட்டார்கள். இறுதிச் சுற்றில் யார்யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பதைக் கூடச் சரியான முறையில் அறிவிக்கவில்லை. பல விடையங்கள் மூடிமறைக்கப்பட்டு விட்டன. அடுத்து சுப்பர் சிங்கர் - 5 நடைபெற இருக்கின்றது. ஏமாற்றுவது என்பது இப்போது ஒரு கலையாகப் போய்விட்டது. பொழுது போக்கு நிகழ்ச்சிதானே, நீங்களும் ஏமாறத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். பைரசி என்ற சொல்லைத் தொலைக்காட்சியில் அடிக்கடி பாவிக்கும் தொலைக்காட்சியினர் பணம் கொடுத்துப் பார்க்கும் சந்தாதாரர்களின் நேரத்தைத் தாங்களே திருடுகிறார்கள் என்பதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?

திறமையைச் சோதிக்க நடத்தப்பட்ட போட்டியா அல்லது மக்கள் ஆதரவு யாருக்கு அதிகம் என்று பார்ப்பதற்காக நடத்தப்பட்ட போட்டியா என்பதில் எல்லோருக்குமே குழப்பம் ஏற்பட்டிருந்தது. உண்மையிலேயே திறமையின் அடிப்படையில் சிறந்த பாடகரோ அல்லது பாடகி என்று வேறாகவும், மக்கள் வாக்களித்த ஆதரவின் அடிப்படையில் அதிக ஆதரவு பெற்ற பாடகர் அல்லது பாடகி என்று வேறாகவும் இரண்டு வெவ்வேறான பரிசுகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும்போது யாரும் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். இனி வருங்காலங்களில் அப்படியான திட்டங்களை நடைமுறைப் படுத்துவார்கள் என சிபார்சு செய்வோம். அதே போல இறுதி முடிவிற்கு மேலதிக நடுவர்களையும் களத்தில் இறக்கினால் தீர்ப்பு ஓரளவு நம்பகமாக இருக்க வாய்ப்புண்டு. எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி முடித்த தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கு எமது பாராட்டுக்கள். தவறு செய்வது மனித இயல்பு, அதைத் திருத்திக் கொள்வது பெருந்தன்மை அல்லவா?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.