சித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..!

Saturday, 23 May 2020 22:02 - - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) - கவிதை
Print

எழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

சித்தம் கலங்காதே
சிந்திப்பாய் மனிதா..
சத்தியம் மறந்தாய்
சோதனை கண்டாய்...

வேதனை தீர்ந்திட
வழியினைத் தேடிடு..
வாழ்ந்த வாழ்வினை
கிளறிப் பார்த்திடு...

மனித நேயம்
மரணித்துப் போனது..
மண்ணில் கொடுமைகள்
மலிந்து கிடக்குது...

கொடுத்து மகிழ்ந்த
சுகங்கள் எங்கே..
கெடுத்து குவிக்கும்
சுயநலம் இங்கே...

கள்ளம் அறியாச்
சிரிப்புகள் எங்கே..
கபட தாரிகளின்
வேடங்கள் இங்கே...

சுத்தம் சுகம்தரும்
சொன்னவர் முன்னோர்
சொற்படி நடந்து
சுகமாய் வாழ்ந்தவர்...

கூழானாலும்
குளித்துக் குடி
கந்தையானாலும்
கசக்கிக் கட்டு...

எள்ளானாலும்
எட்டாய்ப் பகிரு
கூடி இருந்து
குலாவி மகிழு...

ஆணும் பெண்ணும்
இணைந்த வாழ்வு
இனிக்கும் இல்லறம்
போனது எங்கே...

ஆணோடு ஆணும்
பெண்ணோடு பெண்ணும்
நாகரீக உச்சமாம்
கல்யாணக் கோலமாம்...

புலி பசித்தாலும்
புல்லைத் தின்னுமோ..
மான் மாண்டாலும்
மாமிசம் புசிக்குமோ...

கண்டதை எல்லாம்
பிடித்தே உண்டால்
உடல்தான் ஏற்குமோ
நோய்தான் மிஞ்சுமே...

இயற்கைக்கு மாறான
இழிந்த வாழ்க்கை
மிருகங்களிடமும்
காணாத குணங்கள்...

காமத்தீயின் அகோர
வெறியாட்டம்
பச்சிளம் பாலகரின்
பரிதாப முடிவுகள்...

கோர மனங்களின்
அசுரப் பிடியில்
அகப்பட்டுச் சிதைந்த
பருவ மங்கையர்...

ஏனிந்தக் கோலம்
எப்படி வந்தது
மனித மனங்கள்
வரண்டே போனதால்...

அன்பு பாசம்
எதையும் காணா
குடும்ப உறவு
இயந்திர வாழ்வு...

பணத்தில் புரளும்
பேராசை பெருகிட
பிணத்தில் இடறும்
பேரிடர் சு10ழ்ந்ததே...

எங்கே போகும்
இந்த வாழ்க்கை
கண்களை மூடி
சிந்திக்கப் புரியும்...

சு10ரியக் கதிர்கள்
சந்திர ஒளி
சுவாசிக்கக் காற்று
சுத்தமான தண்ணீர்...

கொட்டிக் கிடக்குது
இயற்கையின் அழகு
குதூகலிக்க முடியா
வாழ்வின் ஓட்டம்...

இயற்கையை வெல்ல
முடியாது உன்னால்..
இயல்பைப் பேணி
இன்பத்தைத் தேடு...

மனித வாழ்வின்
மாண்பினைப் போற்றி
குழந்தை மனங்களாய்
குதித்து மகிழு...

பொதுநலப் பண்பை
வளர்த்துப் பாரு
மண்ணில் சொர்க்கம்
தெரியும்..உனக்கு....

மானிடப் பண்புகள்
மலர்ந்து சிரித்தால்
கொரோனா தானும்
கிட்ட வருமோ..!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 02 June 2020 09:00