தொடர்நாவல்: வன்னிமண் (10-13)

Thursday, 03 August 2017 22:19 - வ.ந.கிரிதரன் - நாவல்
Print

மண்ணின் குரல் (தொகுப்பு) - வ.ந.கிரிதரன்'தாயகம்' (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: 'கணங்களும், குணங்களும்', 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்'. 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. இந்நான்கு நாவல்களும் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும்.

என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். 'வன்னி மண்' நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது.


அத்தியாயம் பத்து: வன்னி மண் - மேலும் சில நினைவுகள்.

இச்சமயத்தில் வவுனியா நகர பொலிஸ் நிலையத்தைச் சுற்றி "சேகுவேரா இளைஞர்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக மண்மூடைகள் ஆங்காங்கே போடப் பட்டிருந்தன. ஒருமுறை இம்மண்மூடைகளை வேடிக்கை பார்த்தபடி வந்துகொண்டிருந்தபோது, வவுனியா நகரசபை மைதானத்தில் மூன்று ஹெலிகொப்டர்கள் வந்திறங்கின. 'சப்மெஷின்கன்களுடன் சிங்களச் சிப்பாய்கள் நகரசபை மைதானத்தைச் சுற்றியிருந்த கழிவுநீர் செல்வதற்காக வெட்டப்பட்டிருந்த கால்வாய் பகுதிக்குள் மறைந்து நின்று பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். முதன்முதலாக என் வாழ்வில் 'சப்மெஷின் கன்களைப் பார்த்தது அப்பொழுதுதான். அன்றிலிருந்து புரட்சி அடக்கப்பட்ட காலம் வரை அடிக்கடி புகையிரத நிலையங்களில், வீதிகளில், சிங்களச் சிப்பாய்கள் 'சப்மெஷின்கன்'களுடன் திரிவதைப் பார்ப்பது பழக்கமாகிவிட்டது. ஒரு சில சமயங்களில் மெஷின்கன் பொருத்தப்பட்ட திறந்த ஜிப்புகளில் சிங்களச்சிப்பாய்கள் செல்வார்கள். அவர்களை அவ்விதம் பார்ப்பது எங்களிற்கொரு வேடிக்கையான அனுபவம். எந்தவிதப் பயமும் எங்களிற்கேற்பட்டதில்லை. அவர்களும் தமிழர்களுடன் அன்பாக, இயல்பாக நடந்துகொண்டார்கள். சிங்கள இளைஞர்கள் விடயத்தில் மட்டும் எச்சரிக்கையாக, சந்தேகத்துடன் நடந்துகொண்டார்கள். இந்த சப்மெஷின்கன்'களைப்பற்றி நெடுநாள் எனக்கொரு சந்தேகமிருந்தது. இதன் குழலைப்பற்றி துளைகள் பல கொண்டதொரு பகுதியிருக்கும். குளிர்தன்மையைத் தருவதற்காக ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் முதன்முறையாக அதனைக் கண்டபோது பலவிதமான கதைகள் எங்களை ஈர்த்தன. அவற்றிலொன்று சமயத்தில் அந்தத் துளைகள் வரியாக ஐநூறு குண்டுகளைச் சுடலாமென்பதுதான். சிங்களப் போலிசாரைப் பொறுத்த வரையில் அவர்களை நான் 'சப்மெஷின்கன்” களுடன் கண்டதில்லை. வழக்கம்போல் நீண்ட 'ரைபிள்' தான் அவர்களது ஆயுதம்,இது அன்று. ஆனால் இன்றோ. .ஒரே மண். ஆனால் எத்தனைவிதமான நிகழ்வுகள். எல்லாவற்றிற்கும் சாட்சியாக அமைதியிலாழ்ந்து கிடக்கும் என் பிரியமான வன்னிமண்.

வன்னிமண், இந்த மண்ணில் கழிந்துவிட்ட என் பால்ய காலத்து நினைவுகள் எல்லாமே  நெஞ்சின் ஆழத்தில் பசுமையாகப் பதிந்து கிடக்கின்றன. இந்த மண்ணில் கழிந்து விட்ட காலத்தின் ஒவ்வொரு கணமும் தெளிவான விம்பமாக நெஞ்சில் விரிகின்றது. காடுகள், குளங்கள், வயல்கள் திரும்பிய பக்கமெல்லாம் இயற்கையின் தாலாட்டு. இந்த மண்ணின் மேல் நிற்கும்போது புனிதமானதொரு உணர்வினை, கூடவே இனிமை கலந்ததொரு உணர்வினை நானடைவது வழக்கம். இம்மண்ணின் நினைவுகளும் எனக்கு அதனைத்தான் ஏற்படுத்தி விடுகின்றன. குளங்களென்றதும் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. இந்த மண் குளங்கள் மலிந்த மண். மூலைக்குமூலை குளங்கள். எங்கள் வீட்டிற்கண்மையில் கூட நிறைய குளங்கள் காணப்பட்டன. பட்டாணிச்சுப் புளியங்குளம், வேப்பங்குளம், நெழுக்குளம், நாவற்குளம், பண்டாரிக்குளம், வைரவபுளியங்குளம், வவுனியாக்குளம், இறம்பைக்குளம், பேயடிச்சான் கூழாங்குளம் இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். இம்மண்ணின் ஊர்ப்பெயர்கள் கூட மாங்குளம், புளியங்குளம், பாவற்குளமென்று முடிவதைக் காணலாம். நாவற்குள மென்றதும் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. வேறொன்று மில்லை. 'அடங்காத் தமிழனின் ஞாபகம்தான். இந்த வன்னிமண்ணிற்கு ஒரு பெயருண்டு. அடங்காப்பற்று என்றும் இம்மண்ணைக்கூறுவதுண்டு. எந்தவொரு அரசுகளிற்கும் அடிபணியாது. இம்மண்ணை வன்னிமன்னர்கள் ஆண்டு வந்ததாலேற்பட்ட காரணப்பெயர் · அதுசரி. மகாராணியாரிற்குக் கணிதம் படிப்பித்துப் பெருமை பெற்ற கணிதமேதைக்கு ஏனிந்த பட்டப்பெயரென்று நீண்டகாலமாக நான் மண்டையைப் போட்டுடைத்ததுண்டு. ஒரு காலத்தில் அடக்காப்பற்றின் பாராளுமன்ற உறுப்பினராயிருந்த காரணத்தினால் ஏற்பட்ட பெயராயிருக்குமோ என்றுகூடச் சிந்தித்ததுண்டு. ஆனால் வளர வளரத்தான் (அறிவைத்தான் கூறுகிறேன்) காரணம் விளங்கியது. வெறியடங்காத்தமிழன், சாதிவெறி அடங்காத் தமிழனென்பது. மாவிட்டபுர ஆலயத்தில் இவர் நடத்திய போராட்டம் தமிழர் வரலாற்றின் முக்கியமான பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொரு காலகட்டமல்லவா.. இந்த அடங்காத்தமிழன் வெட்டுவித்த குளம்தான் இந்த நாவற்குளம் என்பது. எங்கள் வீட்டிலிருந்து வடக்காக, யாழ்ப்பாணம் நோக்கிப் புகையிரதப் பாதை வழியாகச் சென்றால் இக்குளத்தினை அடையலாம்.

நாவற்குளம் பல்வேறு நினைவலைகளைத் தோற்றுவித்து விட்டது. இந்தக் குளத்திற்கு அண்மையில் செல்லும் புகையிரத பாதை எங்கள் வாழ்வில் முக்கியமானதொரு விடயத்தைப் பிடித்து விட்டிருந்தது. ஒருபுறம் காடு. மறுபுறம் பெரியதொரு நிலப்பரப்பை உள்ளடக்கிய விவசாயக் கால்நடைப்பண்ணை. இவற்றிற்கிடையில் அமைதியாக நீண்டு கிடக்கும் புகையிரதப்பாதை. தண்டவாளங்களில் காதுகளை வைத்து தொலைவிலேயாவது புகைவண்டி வருகின்றதாவென்று ஆராய்வது எங்களது விளையாட்டுக்களிலொன்று. இன்னுமொரு விளையாட்டு சோடா மூடியை புகையிரதம் வரும்போது வைத்துவிட்டு வேடிக்கை பார்ப்பது. இவ்விதம் விரிவடைந்திருக்கும் சோடா மூடியின் நடுவில் துளைகளிட்டு, நூல்கோர்த்து இரு கைகளாலும் நூலின் இருமுனைகளையும் பற்றியிழுத்து.நடுவில் சுழலும் சோடா மூடியைப் பார்த்து வியந்து நிற்பது. இதுவும் எங்களது பொழுது போக்குகளிலொன்றுதான். ஒவ்வொரு முறை புகைவண்டி அப்பகுதியைக் கடக்கும்போதும் அதுவரை மரங்களில் மெளனமாக இலைகளைச் சப்பிக்கொண்டு, அல்லது பேன் பார்த்துக்கொண்டிருக்கும் குரங்குகளெல்லாம் சத்தம் போட்டபடி கொப்புகளில் துள்ளித் திரிவதைப் பார்க்கவும் வேடிக்கையாகத்தானிருக்கும். இந்தப் புகையிரதப் பாதை இன்னுமொரு விடயத்திற்கும் பிரசித்தம். எனக்குத் தெரிந்து குறைந்தது மூன்று பேராவது இப்பகுதியில் புகைவண்டி முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள். இவர்களில் முதலாவதாகத் தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் ராமன். இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர். இவரை நான் ஒருமுறைதான் பார்த்திருக்கின்றேன். அப்பொழுது நாங்கள் வவுனியா சென்றிருந்த புதிது. எங்கள் வீட்டிற்கருகாக காடு மண்டிக் கிடந்தது. ஒருமுறை ஏதோ குழப்படி செய்து விட்டு, பிரம்புடன் வந்துகொண்டிருந்த அப்பாவிடமிருந்து தப்புவதற்காக அருகில் மண்டிக்கிடந்த காட்டுப்பகுதிக்குள் ஓடிவிட்டேன். பார்த்தீர்களா! அடக்குமுறையிலிருந்து தப்புவதற்காக ஓடிய என்னை எவ்விதம் இம்மண்ணின் காடுகள் சூழ்ந்த அமைப்பு காப்பாற்றிவிட்டதென்பதை. இதுதான் இவ்வன்னி மண்ணின் பிரதானமான பலத்திலொன்று. காடுகள் மண்டிக்கிடந்த வன்னிமண்ணின் அமைப்பு ஒரு காலத்தில் பண்டாரவன்னியன்களை ஏனைய அடக்குமுறைகளிலிருந்து சுதந்திர புருஷர்களாக நடமாடிட வைத்ததென்றால்.. இன்றும்கூட பண்டாரவன்னியன்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கி நிற்கின்றதென்றுதான் சொல்லவேண்டும். அப்பாவின் பிரம்படிக்கு அஞ்சி அருகிலிருந்த காட்டிற்குள் ஓடியதை அமைதியாக நின்று பார்த்திருந்துவிட்டு அப்பாவிடம் கூறி என்னைக் காட்டிக்கொடுத்த எட்டப்பன்தான் இந்த ராமன். பொதுவாகத் துரோகிகளின் எட்டப்பர்களின் முடிவு சோகத்தில்தான் முடிவது வழக்கம். அதற்காக யாரும் பெரியதாக அழுவது கிடையாது. ஆனால் இந்த எட்டப்பனின் கதையும் சோகத்தில் முடிந்தபோது எனக்குச் சிறிது துக்கமாகக் கூடவிருந்தது. அதன் பிறகு சிறிதுகாலம் ராமனின் தலைவேறு முண்டம் வேறாகக் கிடப்பது போன்ற காட்சிகள் என் நெஞ்சில் தோன்றி என்னைப் பயமுறுத்துவது வழக்கம். அதுவரை அப்பாவிற்கு என்னைக் காட்டிக்கொடுத்து எனக்குப் பிரம்படி வாங்கித் தரக் காரணமாயிருந்ததால் ராமன் மேல் எனக்கிருந்த கோபம் கூட அன்றிலிருந்து என்னை விட்டு ஓடிவிட்டது. ராமனை நான் மன்னித்துவிட்டேன்.


அத்தியாயம் பதினொன்று: வாழ்க்கை பற்றியொரு விசாரம்.

ஒவ்வொரு மனித உயிரிற்கும் சாவு பற்றிய உணர்வு, அறிவு, வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டு விடுகின்றது. கெளதம புத்தனின் மனித வாழ்வின் நிலைமையைப் பற்றிய அறிவு அவரை துறவறத்திற்கு இட்டுச் சென்றது. ஆனால் நானொன்றும் கெளதம புத்தனல்லவே. வாழ்வின் நிலையாமை பற்றிய அறிவு முதன் முதலில் எனக்கேற்பட்டது இந்த ராமனின் மரணத்தின் விளைவாகத்தான். முதன் முதலாக அந்தப் பிஞ்சு வயதில் மனிதனின் நிலையற்ற தன்மையை பூரணமாக என்னால் உணர முடிந்தது. உடலும் உயிருமாக பிரம்புடன் துரத்தி வந்த அப்பாவிற்கு என்னைக் காட்டிக் கொடுத்த ராமனிற்கு நேர்ந்ததென்ன? அவனுடைய உடம்பு துண்டுகளாகிப் போனதாகக் கதைக்கிறார்களே? அப்படியானால் அதுவரை அவன் இயக்கத்திற்குக் காரணமாயிருந்ததே அது என்ன? உயிரா? அப்படியென்றால் அந்த உயிரிற்கென்ன நடந்தது? புகைவண்டியால் மோதப்பட்ட போது அவனது உடல் துண்டுகளாகச் சிதறிப் போயினவே. அப்படியென்றால் அந்த உயிரும் அப்படித்தான் சிதறித் துண்டுகளாகப் போனதுவோ? அத்துடன் அதன் கதை முடிந்து விட்டதா? அல்லது எல்லோரும் சொல்வது போல் உயிர் என்பது உடம்பினின்றும் வேறானதொரு காற்றுப்போன்றதொரு பொருளா? பல்வேறுபட்ட கேள்விகள் நெஞ்சினைத் துளைக்கத் தொடங்கின. என் கேள்விகளிற்கு அப்பாவால் பதில் சொல்லமுடியவில்லை. எப்படி முடியும்? உயிரா? உடம்பா? பொருளா? சக்தியா? அன்றிலிருந்து இன்றுவரை மனித குலத்தை அலைக்கழித்து வரும் தத்துவச் சிக்கலல்லவா இது. தத்துவஞானிகளே மண்டையைப் போட்டுடைக்கும்போது அப்பாவால் முடியாமற் போனதிலென்ன வியப்பு. ஆனால் இந்த தத்துவப் பிரச்சினை அன்றிலிருந்து இன்றுவரை என்னை விட்டு நீங்கினபாடில்லை. தொடர்ந்தும் என்னைப் போட்டுப் படாதபாடு படுத்தியபடி தானிருக்கிறது. ஆனால் அன்றைய நிலையில் என்னால் பூமியின் நிலையைக் கூட உணர முடியாமலிருந்தது. பூமி தட்டையா உருண்டையா என்பது கூட சிறிது காலம் எனக்குப் பெரிய பிரச்சனையாகத்தானிருந்து. பின்னர் பூமி உருண்டைதான் என்பதை உணர்ந்த போது பூமிதான் இப்பிரபஞ்சம் என்று நம்பத் தொடங்கினேன். ஆனால் இன்று. இப்பிரபஞ்சத்துடன் ஒப்பிடும் போது பூமியின் அற்பத்தன்மையை உணர்ந்து விட்டேன். இவ் அற்பத்தினுள் இன்னுமோரற்பமாயிருக்கும் மனித வாழ்க்கையை உணர்ந்து விட்டேன். இவ்வளவு உணர்ந்தும் இன்னும் நான் கெளதம புத்தனாகப் போகவில்லை. சாதாரண உணர்ச்சிக் குமுறல்கள் மிக்கதொரு மனிதனாகத் தானிருந்து வருகின்றேன். ஆனால் உயிர், உடம்பு, பொருள், சக்தி பற்றிய மோதலில் இன்று நான் ஒருவித தெளிவை அடைந்துவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். அது உண்மையான தெளிவா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மனம் அப்படித்தான் உணர்கின்றது. நெடுநாட்களிற்கு முன்னால் கவிதையென்று சொல்லிக் கிறுக்கிய கிறுக்கலொன்றில் அத்தெளிவு முதன் முதலாக ஏற்பட்டுவிட்டதை இன்று என்னால் அறிய முடிகின்றது.

சிந்தனைப் புயல்கள் வீசி
புழுதி பறக்கையிலே
அடி வயிற்றைக் கீறியொரு
திகில் ஊடுருவிச் செல்லும்
ஆத்துமாவின் கேள்வியொன்று
சிரித்து நிற்கும்
நானென்றால் நான் யார்?
நானென்றால் இவ்வுடலோ?
நானென்றாலுடலாயின்
புழுப்பிடித்து நாறுகையில்
இந்த "நானெ"ங்கே?
நானென்றால் உள்மனமோ?
அன்றி அம்மனத்தே விரவி
நிற்கும்
அவ்வுணர்வோ?
நானென்றாலுடலாயின்
நடையிழந்து, மொழியிழந்து
நிலைகுலைந்து போகையில்
இந்த
காணுங் கனவெல்லாம்
கனன்றெரியும் சினமெல்லாம்
மெய்சிலிர்க்கும் மயக்கமெலாம்
உணர்வெல்லாம, உடலெல்லாம்
"நான்"தானோ?
வெறுமைகள் சிரிக்கும் என்னுடலுமோர் அண்டம் தானோ?
அப்படியாயின்,
"நான்" நான் மட்டும்தானே?
நான் தான் பிரபஞ்சமோ?
பிரபஞ்சம் தான் நானோ?

விரிந்து படர்ந்து கிடக்கும் பிரபஞ்சம் முழுவதுமேயொருவித சக்தி போலவும், காணப்படும் பொருட்கள் உயிர்கள் எல்லாம் அச்சக்தியின் பல்வேறு வடிவங்களென்றும் மனம் சிலவேளைகளில் உணர்கின்றது. அப்படியென்றால் எதற்காக இந்த மோதல்கள் அழிவுகள், இரத்தக்களரிகள்..? அது தான் சரியாகப் புரியவில்லை. இந்த ராமனின் அழிவு முதன் முதலாக மனிதவாழ்வின் நிலைமையை எனக்கு உணர்த்தியதென்றால், அதன்பிறகு அப்புகையிரதப் பாதையில் ஏற்பட்ட இரு தற்கொலைகள் மேலும் என் நெஞ்சில் அவ்வுணர்வைப் பலப்படுத்த உதவின என்றுதான் கூறவேண்டும். இது அந்தக்காலம், ஆனால் இன்று. நாளும் பொழுதும் வீதிகளில் ஆறுகளில் காடுகளில் அடிக்கடி உருக்குலைந்த நிலையில் காணப்படும் மனித உடல்கள். மனிதத்துவத்தின் மதிப்பே பறிபோன நிலையில் சாதாரணமாக அவற்றைப் பார்த்தொதுக்கி விட்டபடி தமது நாளாந்த கடமைகளில் மூழ்கிவிடும் இன்றைய மனிதர்கள். நிலையற்ற வாழ்வே நியதியென்பதை உணர்ந்துவிட்ட நவகால மனிதர்கள். அழிவைக்க ண்டு இவர்களால் எள்ளிநகையாடவும் முடிகின்றது? ஆனந்தப்படவும் முடிகின்றது. அறிவு வளர வளரத் தெளிவு பிறக்கிறதென்றால்...தெளிவு கூடக்கூட விளைவது. ஒரு விதத்தில் அபத்தம் தானே? துறவிகள் சிரிப்பதும், கொரில்லாக்கள் நகைப்பதும் (அழியும் மனித வாழ்வைப் பார்த்துத் தான்) அபத்தமாகத் தென்படுவதன் காரணம் இதனால் தானே? அபத்தம், மனோரஞ்சிதத்திற்கு மிகவும் பிடித்தவொரு விடயம். அபத்தப் பாணியில் எழுதப்படும் நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகளென்றால் இவள் மிகவும் மனமொன்றிப் போய் விடுவாள். தன்னையே மறந்து விடுவாள். அவற்றில் கூறப்படும் விடயங்கள் பெரும் பாலும் இவளிற்கு விளங்குவதில்லை. ஆனால் அவற்றில் ஏதோ அர்த்தம் இருப்பதாக எண்ணி எண்ணி வாசிப்பதிலேயே, பார்ப்பதிலேயே அவளிற் கொருவித திருப்தி, நிறைவு. பார்க்கப்போனால் கலையின் பயன்பாடுகளிலொன்றான இன்பத்தை அடைதலோடு பெரும்பாலும் அவளது ரசனை நின்றுவிடுவதுண்டு. சிக்கலான விடயத்தை மிக இலகுவான தெளிந்த நடையில் கூறினால் இதிலென்ன இருக்கு என்று ஊதித் தள்ளிவிடுவாள், பெரும்பாலான நமது விமர்சகர்களைப் போல. ஆனால் நமது வாழ்க்கையோ உலகமோ பார்ப்பதற்கு மிகவும் தெளிவாகத்தானிருக்கிறது. அழகாகத் தானிருக்கின்றது. இந்த அழகிற்குத், தெளிவிற்கு, எளிமைக்குப் பின்னால்தான் பெரிய சிக்கலே புதைந்து கிடக்கின்றது. மனிதர்கள் தான் பெரும்பாலும் எளிமையானவற்றையெல்லாம் பெரிதும் சிக்கலாக்கி விட்டுப் பின்னால் அச்சிக்கல்களிற்குள் ஒருவித எளிமையைக் காணத், தேட விழைகின்றார்கள். மனோரஞ்சிதத்தைப் போல. வள்ளுவரின் குறளில் எளிமையிருக்கிறது. கம்பனின் விருத்தங்களில் அவ்வையின் வெண்பாக்களில் இளங்கோவின் சிலம்பில், பாரதியின் கவிதையில்,. இவற்றிலெல்லாம் இல்லாத எளிமையா? ஆனால் இவர்களெல்லாம் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்களல்லவா? இவர்களின் எழுத்துக்கள் நின்று பிடிக்கவில்லையா.

டெலிபோன் சத்தம் சிந்தனையைக் கலைக்கிறது. நகுலேஸ்வரனாயிருக்காலம்.அல்லது நான் வேலைபார்க்கும் செக்கியூரிட்டி கொம்பனியிலிருந்து சுப்பர்வைசராகயிருக்கலாம். போனை எடுக்கின்றேன்.

“ஹலோ. திஸ். இஸ். வூல்கோ செக்கியூரிட்டி. மே ஐ கெல்ப யூ"

"ஹலோ. இது நான்” மனோரஞ்சிதம் உனக்குச் சாவில்லை நூறு வயசுதான்! அது சரி. இவளென்ன இந்த நேரத்தில்..!..


அத்தியாயம் பன்னிரண்டு: மனோரஞ்சிதத்தின் பிரச்சினை.

"மனோரஞ்சிதம். என்ன இந்த நேரத்திலை."

நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டிருந்தது. ஊரிலென்றால் இந்நேரம் ஆந்தைகளும் நத்துக்களும் கத்தத் தொடங்கியிருக்கும்.

"ராகவன்" எனக்கு என்ன செய்வதென்றே தெரியலை”

"ஏன். என்ன விசயம்"

"எல்லாம் இந்த மனுசனாலை வந்த பிரச்சனைதான். நாலு வருஷமாய் எவ்வளவு கஷ்டப்பட்டு மோட்கேஜ் கட்டிக் கொண்டு வாறம். இந்தச் சமயத்திலை பார்த்து இந்த மனுசன் இப்படிக் குண்டைப்போட்டால் நானென்ன செய்ய."

"அப்படியென்ன விசயம் மனோரஞ்சிதம்.”

"வீட்டுக்கு இப்படியே இனியும் மோட்கேஜ் கட்டுறதாலை ஒரு பிரயோசமும் இல்லையாம். பேசாமல் வீட்டை பாங்கிலேயே குடுத்து விடுவோமாம்."

"எனக்கென்றால் அதுதான் சரியென்று நினைக்கிறன்.”

"போயும் போயும் உம்மட்டை போய் அட்வைஸ் கேட்டேனே.”

மனோரஞ்சித்தின் குரலில் சலிப்பு தெரிகிறது.

"மனோரஞ்சிதம். உம்மடை புருஷன் சொல்றது தான் சரி இவங்கடை எக்கனமி எப்பிடியெப்பிடி போகுமென்றே தெரியாது. இன்னொரு நாலு வருசம் மோட்கேஜ் கட்டியபிறகு, விலை இன்னும் குறைஞ்சால் அல்லது விலை ஏறாமலிருந்தால் என்ன செய்யப் போறிங்கள். பேசாமல் இப்பவே கையைக் கழுவுறது தான் நல்லதென்று நினைக்கிறேன்." சிறிது நேரம் மனோரஞ்சிதம் மெளனமாயிருக்கிறாள். "ராகவன் என்ரை பிரண்ஸ்செல்லாம் எங்களைப் பற்றி என்ன நினைப்பினம். எங்கட கிரடிட் ரேட்டிங்.."

பெரிய கிரடிட் ரேட்டிங், உயிர் தப்பினால் தம்பிரான் புண்ணியமென்று கிளாலி வழியாக கடந்து காட்டினுடாக நடந்து ஓடி வாறிங்கள். அப்ப இல்லாத கிறடிட் ரேட்டிங் கவலை இப்ப எப்படி என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. சொல்லவில்லை.

‘என்ன ராகவன், சத்தத்தை காணேலை சொல்ல என்னயிருக்கு. நீங்கள் இரண்டு பேருமாகப் பேசித் தான் ஒரு முடிவிற்கு வரவேணும். அல்லது யாரும் பைனான்சல கொன்சல்டன்ற் யாருடனும் கதைத்துப் பாருங்கோவன்'

மனோரஞ்சிதம் பெரிதாக கொட்டாவி ஒன்றை விடுவதை டெலிபோன் ஊடாகக் கேட்க முடிகின்றது.

'ஏதோ என்ரை பிரச்சனையை யாரிட்டையாவது சொல்ல வேண்டும் போலிருந்தது. சொல்லிப் போட்டன். இப்ப கொஞ்சம் நிம்மதியாயிருக்கு"

உடைமைகளை இழந்தாலும் போனால் போகட்டும், உயிர் தப்புவோம் என்று ஓடி வருகின்றோம். வந்து உயிரிற்கு ஒரு வித உத்தரவாதம் கிடைத்ததும் பழையபடி உடைமை அது இதென்று பலவிதமான ஆசைகளுக்குள் அகப்பட்டு விடுகின்றோம். மனோரஞ்சிதம்! உன்னைச் சுற்றிப்படர்ந்திருக்கும் புதிய உறவுகள். அவைதான் உனக்கு முக்கியம். உன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரப் போகும் உறவுகள் அவை தான். அற்ப உடைமைகளின் ஆசைக்குள் சிக்கி உறவுகளை இழந்து போகாதே. இலக்கியத்தில் சிக்கலென்றால் மெய்மறந்து போகும் மனோரஞ்சிதமே! வாழ்க்கையில் சிக்கல் என்றதும் ஏன் இப்படித் தளர்ந்து போகின்றாய்? வாழ்க்கைச் சிக்கலையும் ரசிக்கப் பழகி விடு. பிரச்சனைகளெல்லாம் தன்னால் பறந்து போய் விடுவதை காண்பாய், வீட்டுப் பிரச்சனை உனக்கொரு பெரிய பிரச்சனையாகப் போய் விட்டது. இன்னும் சிலருக்கு உணர்வுகளே பெரிய பிரச்சனை. ஆனால் ஊரிலோ... கிளாரிக் கடலேரிக்குள் மூழ்கிப் போன கூடுகளிற்குள் மாண்டு போன உணர்வுகள். ஏக்கங்கள். கனவுகளுடன் பங்கர்களிற்குள் காத்து நின்றபோது காணாமல் போனவர்களின் பெருமூச்சுகள். இவற்றை எண்ணிப்பார் மனோரஞ்சிதம். இவற்றுடன் ஒப்பிட்டால் தான் உன் பிரச்சினையின் அற்பத்தனம் உனக்கே புரியும் மனோரஞ்சிதம்! வாழவேண்டுமென்ற ஆசை அவர்களிற் கில்லையா? ஏன் உனக்கு மட்டுமா சொந்தம்? எண்ணிப்பார் மனோரஞ்சிதம்.


அத்தியாயம் பதின்மூன்று: முல்லைக்குமரன்!

நிகழ்காலத்தை ஒரு கணம் எட்டிப்பார்த்த நினைவுக் குருவி பழையபடி இறந்த காலத்தை நோக்கிப் பறக்கின்றது. சில பறவைகளோ துருவம் விட்டுத் துருவம் நாடிப் பறப்பவை. ஆனால். நீயோ. அவற்றையும் வென்று விட்டாய். நினைவுக் குருவியே! உன்னைப் போல் அவற்றால் காலத்திற்குக் காலம் பறக்க முடியுமா என்ன?

ஒங்கி வளர்ந்த விருட்சங்கள் மண்டிய காட்டுமண், தமிழ் ஈழமண்ணின் முக்கியமான காட்டுப் பகுதிகளையுள்ளடக்கிய மண் இந்த வன்னிமண், கால மாற்றங்கள் இம் மண்ணில் பலவிதமான மாறுதல்களை ஏற்படுத்திவிட்டன. இவ்வன்னி மண்ணிற்கே அழகூட்டும் காட்டுப்பகுதியை இம்மண் பெரிதும் இழந்து கொண்டே வருகின்றது. பேணப்பட வேண்டியவைகளில் இம்மண்ணின் காட்டுப்பகுதியும் முக்கியமானதொன்று. ஒருமுறை முள்ளியவளையைச் சேர்ந்த இன்னுமொரு நண்பன் குமரனுடன் அடர்ந்த காட்டிற்குள் நீண்ட பயணமொன்றை நடத்தியது நினைவிற்கு வருகிறது. இது மாசே துங் நடத்திய நீண்ட பயணத்தைப் போன்றதல்ல. அதே சமயம் இன்று எம் மக்கள் தடை முகாம்களைக் கடந்து நடாத்தும் நீண்ட பயணங்களுடன் ஒப்பிடும் போது எமது அன்றைய பயணம் ஒரு நீண்ட பயணமேயல்ல தான். ஆனால் அன்றைய வயதில் என்னைப் பொறுத்த வரையில் அப்பயணம் ஒரு நீண்ட பயணம்தான். குமரன் என் பாடசாலை நண்பர்களிலொருவன். முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவன். இவன் ஒரு நாடகப் பித்தன். சிவாஜி மாதிரி வசனம் பேசுவதில் இவன் வலுகெட்டிக்காரன். மனோகராவில் சிவாஜி பேசும் வசனமென்றாலும் சரி, பராசக்தி, கட்டப்பொம்மன் பட வசனங்களென்றாலும் சரி, ராஜாராணியில் சோக்கிரடீசாக சிவாஜி பேசும் வசனங்களென்றாலும் சரி மிகவும் தத்ரூபமாகப் பேசுவதில் இவன் சமர்த்தன்.

"ஏற்றம் நிறைந்த ஏதன்சு நகரத்து வாலிபர்களே” என்று இவன் சோக்கிரடீசாகப் பேசும் சிவாஜியாக உருமாறுவதை வியப்புடன் பார்ப்போம்.

"வரி. திறை. கிஷ்தி. நாற்று நட்டாயா" என்று இவன் வீரபாண்டியக் கட்டப்பொம்மனாக வார்த்தைகளைக் கொட்டும் போது புல்லரிக்கக் கேட்டபடியிருப்போம்.

(முள்ளியவளைச் சந்தைக்கு மேற்குப் புறமாக, பிரதான பாதையிலிருந்து செல்லும் மண்றோட் வழியாகச் சென்றால் அக்காட்டுப் பகுதியை அடையலாம். அடர்ந்த, செறிந்த ஆழமான காடு அது. ஒரு கோடை காலம். சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் கதையோடு கதையாக முள்ளியவளைக் குமரன் கூறினான்.

"டேராகவா. எங்கட ஊரிலையிருக்கிற காட்டுப் பகுதியிலை பெரியதொரு அதிசயமேயிருக்கு."

எனக்கு அவனது வார்த்தைகள் ஆர்வத்தையேற்படுத்தின. வன்னிக் காட்டுப் பகுதிகளில் யானைகள் சிறுகதைகள், கரடிகள், மலைப்பாம்புகளெல்லாம் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அவற்றைப் பற்றித்தான் ஏதாவது குமரன் கூறப்போகின்றானோ என எண்ணினேன்.

"பெரிய அதிசயமா. அப்பிடியென்ன பெரிய அதிசயம்."

"நடுக்காட்டுக்குள்ளை ஒரு பகுதியிருக்கு. எந்தக் கோடையென்றாலும் அங்கையொரு இடத்திலை மட்டும் நீர் வற்றுவதேயில்லை. அது ஒரு சின்ன ஊற்று. இந்த முள்ளியவளைப் பகுதி இயற்கையான ஊற்றுக்களிற்குப் பெயர் போன பகுதி, தண்ணிரூற்று என்றொரு புகழ்பெற்ற பகுதியிலுள்ள கேணி இயற்கையூற்றுகளில் முக்கியமானது.

"சில சமயங்களில் கடுங்கோடையென்றால் குளங்களெல்லாம்

நீர் வற்றிக் காய்ந்து விடும். ஆனால் இந்தப் பகுதியில் மட்டும் நீர் ஒருக்காலும் வற்றவே மாட்டாது."

எனக்கு அப்பொழுதே அப்பகுதியைச் சென்று பார்க்க வேண்டும் போலிருந்தது.

"இதனாலை இந்தப் பகுதி வேட்டைக் காரங்களிற்குப் பிடிச்ச இடம். எப்பிடியும் தண்ணி குடிக்க வரும் மிருகங்களைப் பிடிக்க ஈஸியான இடம்"

"குமரன். ஒரு நாளைக்கு அந்த இடத்தைக் கொண்டு போய்க் காட்டேன். பார்க்க ஆசையாயிருக்கு”

"போறதெண்டால் லேசானதில்லை. அந்தப் பகுதி நடுக்காட்டுக்குள்ளையிருக்கு. ஒற்றையடியப் பாதை வழியாகத் தான் போகவேண்டும். பயங்கரமான காட்டு மிருகங்கள். கரடி, காட்டெருமை யெல்லாம் இருக்கிற இடம்.”

ஆழநடுக்காடு, ஓங்கிய பெரிய மரங்கள் மிருகங்கள் எனக்கு புல்லரித்தது. எனக்கு மிகவும் பிடித்தமான விடயங்கள் அவற்றின் பின்னால் மறைந்திருந்த ஆபத்தைவிட அவற்றின் அழகுதான் என்னைக் கவர்ந்தது. எப்படியும் அந்தப் பகுதியைச் சென்று பார்த்து விடவேண்டும் போல் மனதினுள் தீர்மானம் செய்து கொண்டேன். அவற்றிலிருந்து குமரனைச் சந்திக்கும் போதெல்லாம் நச்சரிக்கத் தொடங்கினேன். அவனாலும் என் நச்சரிப்பைத் தாங்க முடியவில்லை.

"எங்களாலை அங்கையெல்லாம் தனியப்போக ஏலாது. என்ரை மாமாயிருக்கிறார். அவருக்கு நேரமிருந்தால் தான் போகலாம் சனி, ஞாயிறென்றால் அனேகமாய் வீட்டை தான் நிப்பார். எதுக்கும் ஒருக்கா எங்கடை வீட்டை வா. பார்ப்பம்." எனக்கோ, உற்சாகம் கரை புரண்டது. துள்ளிக் குதித்தேன். ஒரு சனிக்கிழமை குமரன் வீட்டிற்குப் பயணமானேன். இவனது வீடு முள்ளியவளைச் சந்தைக்கண்மையில் தான் அமைந்திருந்தது. ஊரில் பேர் போன குடும்பம் காணி, வளவு அது இதென்று ஆடம்பரமாக வாழ்ந்த குடும்பம். இவனது அப்பா ஒரு தீவிரமான மண் உபாசகர். பிறந்த மண்மேல் அளவுகடந்த பற்று வைத்திருந்தார். பிள்ளைகளிற்கெல்லாம் வன்னி மண்ணின் மணம் கமழும் பெயர்களையே வைத்து விட்டார். குமரனின் உண்மையான பெயர் முல்லைக்குமரன். இவனது சகோதரனின் பெயர் கைலைவன்னியன். சகோதரியின் பெயர் நல்லநாச்சி, கைலைவன்னியனைப் பற்றி முதல் முதலில் அறிந்தது அப்பொழுதுதான். பண்டார வன்னியனைப் போல் புகழ்பெற்ற இன்னுமொரு வன்னி மண்ணின் குறுநிலவரசன். பனங்காமப் பகுதியின் ஆட்சிப் பொறுப்பிலிருந்தவன். இவனைப் பற்றிய நாடகப் பிரதியொன்றையும் அவர்களிடம் பெற்றேன். கரவை கிழார் எழுதிய தணியாத தாகம்.

இரண்டு நாட்கள் தான் அங்கு தங்கியிருந்தேன். நல்ல உபசரிப்பு. நல்ல மனிதர்கள். என்னுடைய நல்ல காலம் முல்லைக்குமரனின் மாமா வீட்டில் தானிருந்தார். முதலில் அவர் சம்மதிக்கவில்லை. அவரிடமிருந்த வயலில் பன்றி சுடுவதற்காக வைத்திருந்த காட்டுத்துவக்கு பழுதாகியிருந்தது. இந்த நிலைமையில் எந்தவித ஆயுதமுமில்லாமல் காட்டுக்குள் அதுவும் குறைந்தது பத்து மைல்களாவது காட்டினுள் நடப்பதென்றால் ஆபத்தான விடயமென்பதை அவர் விளக்கினார். எனக்கோ ஆர்வத்தின் முன்னால் ஆபத்து பற்றிய விடயம் அடிபட்டே போய்விட்டது. கடைசியில் என் ஆர்வத்தைக் கண்ட குமரனின் மாமா சம்மதித்தார். அடுத்த நாள், ஞாயிறு காலை, சாப்பாடு முடிந்த கையோடு நான், குமரன், குமரனின் மாமா, மாமாவின் நண்பர் ஆக நாலு பேர் பயணத்தைத் தொடங்கினோம். என் நெஞ்சின் ஆழத்தில் மறக்க முடியாதபடி பதிந்துவிட்ட சம்பவங்களில் இந்த 'நீண்ட பயணமும் ஒன்றாக அமைந்து விட்டது. "துரோகி ராமனின் முடிவு எனக்கு வாழ்க்கையின் நிலையாமை பற்றிய நியதியை முதலில் உணர்த்தி வைத்ததென்றால், இந்த 'நீண்ட பயணம்' வாழ்வு பற்றிய வேறு சில பக்கங்களை எனக்குக் காட்டி வைத்ததென்றுதான் சொல்லவேண்டும். உணர்வு சில சமயங்களில் எவ்விதம் அறிவை அடிமைப்படுத்தி விடுகிறதென்பதை இப்பயணம் முதலில் உணர்த்தி வைத்தது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்படி மனிதனை மாற்றியமைத்து விடுகின்றனவென்பதையும் இப்பயணம் எனக்குத் தெளிவாக்கி வைத்தது.

இன்று நினைக்கும் பொழுது ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. உண்மையில் நம் வாழ்க்கை கூட இது போன்றதொரு பயணம் தான். இன்பத்தை அடைதலென்றதொரு குறிக்கோளை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் நடந்து கொண்டிருக்கின்றோம். இடையில் எதிர்படும் சூழல்களை முன்கூட்டியே அறிய முடிவதில்லை. ஆபத்தான சூழல்கள் எதிர்ப்படுமேயென்று கவலைப்பட்டுக்கொண்டு ஆர்வத்துடன், நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்கின்றோம். வாழ்க்கையென்பதே இப்படியொரு பயணம் தானென்பதைக் கூட அந்தச் சிறுவயதில் நாங்கள் நடாத்திய 'நீண்ட பயணம்' குறிப்பாக உணர்த்தி வைத்தது. ஆழநடுக்காட்டினுள்ளிருந்த அந்த நீரூற்றிற்குக் கூட ஏதோவொரு பெயர். சரியாக நினைவில்லை. "கள்ளூறல்' என்று நினைக்கின்றேன். குமரனைக் கண்டால் அல்லது யாராவது முள்ளியவளைக் காரரைக் கண்டால் கேட்க வேண்டும். அன்று பயணத்தைத் தொடங்கும் முன்னர் வயிறு முட்டச் சாப்பிட்டோம். இடையில் பசித்தால் சாப்பிடுவதற்காகக் கொஞ்சம் பார்சலாகவும் கட்டிக் கொண்டோம். காட்டிற்குச் செல்லும் வழியில் குமரன் வீட்டாரிற்குச் சொந்தமான வளவொன்றிருந்தது. தென்னை, பலா, கொய்யா, மாதுளம்பழ மரங்கள் பல மண்டிக்கிடந்த வளவு. அப்பொழுது பலாப்பழசீசன். ஒரு பழத்தை வெட்டிச் சாப்பிட்டோம். குமரனின் மாமாவும், நண்பனும் தென்னங் கள் கொண்டு வந்திருந்தார்கள். குடித்தார்கள் அதுவரை சிறிது அமைதியாயிருந்த அவர்களிருவரும் அதன் பிறகு உற்சாகமாகிப் போனார்கள். அடிக்கடி சிரித்துக் கொண்டார்கள். அடிக்கடி சிகரட் பிடித்துக் கொண்டார்கள். மேலும் பலமாகச் சிரித்துக் கொண்டார்கள். அவர்களது சிரிப்பிற்கு தென்னங் கள்தான் காரணமென்று எண்ணிக்கொண்டேன். நீண்ட காலத்திற்குப் பின்னர் தான் தெரிந்தது தென்னங்கள்ளோடு இன்னுமொரு காரணமுமிருந்தது. அது?  கஞ்சா.

[தொடரும்]

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

வன்னிமண் (1 -5)

வன்னிமன் (6 -9):

Last Updated on Thursday, 03 August 2017 22:54