- நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன.  இவரது 'நாளை' நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. - பதிவுகள் -

5

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 - 13)!சனிக்கிழமை ஐந்து மணியளவில் தமிழர் கூட்டமைப்பு கூட்டம் துவங்கியது. தேவகுரு பின்னுக்குப் போய் அமர்ந்தார். அதனைப் பார்த்த தலைவர் சற்குணம், அவரை முன்னுக்கு கொண்டு வந்து அமர்த்தினார். இந்தப் பிரச்சனைகளிலே அவர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். தான் இவற்றை வைத்துக் கொண்டு பிரபல்யம் அடைவதாக இளைஞர்கள் சிலர் தவறாக நினைத்துக் கொள்வார்களோ எனவும் பயந்தார். தலைவர் தமது உரையைச் சிறிதாக முடித்துக் கொண்டு, பிரதான உரையைத் தேவகுருவை நிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். 'நாம் நினைப்பவற்றை, உண்மையிலே உறுதிபூண்டு, அவர்களுக்குச் சொல்லவேண்டியது தமது கட்டாயம்' என்று நினைத்தார்.

'கடமையைச் செய்; பயனில் பற்று வைக்காதே. கடமை செய்வதினால் கிடைக்கும் பயனையும் ஈசுராப்பணமாக்குதல் வேண்டும்' என்று இராமநாதர் கீதையின் சாரம் பற்றிச் சொல்லும்பொழுது கூறியது அவருக்கு அப்பொழுது நினைவில் மிதந்தது.

 தேவகுரு பேசினார்.

'ராஜமோகனின் வீட்டை எரித்தது எங்கள் எல்லோருக்கும் துக்கமே. எங்களைப் போலவே, பல நொஸ்குகளும் இந்தத் துக்கத்திலே பங்குகொள்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த வீடு எரிக்கப்பட்ட வன்முறையை எதிர்த்து ஓர் அமைதி ஊர்வலம் நடந்த நூர்மன் விரும்பிகினம். நாங்களும் அவர்களும் இந்த ஊர்வலத்தைச் சேர்ந்து நடத்த இருக்கிறம். இந்த அமைதி ஊர்வலம், சில நொஸ்குகள் செய்யும் வன்முறைகளைக் கண்டிப்பதற்கான நல்ல துவக்கம் என்றே நான் நினைக்கிறேன்.

'இங்கு வன்முறையின் கோலங்கள் தலைகாட்டுகின்றன. வன்முறையை அகிம்சை மூலம் எதிர்க்கப் போகின்றோம். இதுதான் முக்கியம். இது பாசாங்கு அல்ல. உண்மையிலேயே அன்பு மார்க்கத்திலே நாங்கள் பற்று வைத்துள்ளோம் என்பதை நூர்மன் உணரவேண்டும். எங்களுடைய குடும்பத்திலே தோன்றியுள்ள ஐக்கியம் எதனால் சாத்தியமாயிற்று? ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.

'குடும்பத்தின் மொழி அன்பு, பாசம்! இந்த மொழியை நமது சமூக வாழ்க்கைக்கும் விரிவுபடுத்துகிறோம்; அவ்வளவுதான். அன்பு நமது மதம். மன்னிப்பு நமது வேதம். அஹ’ம்சை நமது ஆயுதம். மனித நேயம் நமது நெஞ்சங்களின் கீதாஞ்சலி. இது எல்லோருக்கும் சம்மதமா?'

'ஓம் ஓம்...' என்கிற சபையின் பல பகுதிகளிலிருந்தும் ஒலித்தது.

'இதெல்லாம் சரிவருமே? செமியாக் குணத்தில அன்பு, அஹ’ம்ஸை என்று பேசுறது வடிவாத்தான் இருக்கும். அவன் எங்களைக் குட்டிக் கொண்டிருக்கிறான். நாங்கள் குனிஞ்சு கொண்டே இருக்கிறது? புத்தரிலும் பார்க்க கருணையைப் போதித்தவர் யார்? அவரை வழிபடுறவை எண்டு சொல்லுற பௌத்த சிங்களவர்த்தானே எங்களை ஊரிலை அடிச்சுக் கொல்லுறாங்கள். இல்லாட்டி நாங்கள் இந்தக் குளிருக்குள்ள வந்து, இரவும் பகலும் தெரியா ஒரு இடத்தில வந்து, கிலிசகேடு படுவமே?' என்று விக்னேஸ் ஆக்ரோஷமாகக் கேட்டான்.

'எனக்கொரு சின்னக் கேள்வி. இந்தச் சத்தியாக்கிரகத்தை ஆயுதமாகக் கையாண்டவர் யார்? மகாத்மா காந்தி. இப்ப அந்தக் காந்தி வழி, இந்தியாவில் இருக்கோ? அவருடைய படம் ரூபாய் நோட்டுக்களிலும், நீதிமன்றங்களிலும் கிடக்குது. அவ்வளவுதான். காந்தியைக் கொன்றவன்கள் இப்ப ஆட்சிக்கு வந்திட்டினம். செத்துப் போன காந்தியத்துக்குத் தேவகுரு அண்ணர் வீணாக உயிர் கொடுக்கப் பார்க்கிறார்...' என்று குற்றஞ்சாட்டுபவனைப் போல அர்ஜுன் பேசினான்.

'அகிம்ஸை தாய் மண்ணிலே சரிவரேல்லே. எங்கடை பெடியன்கள் வன்னிக்காட்டில அடிப்பட்டுச் சாகிறாங்கள். இங்க நாங்கள் பெரிய மகாத்மாக்கள் என்கிற நினைப்போட அஹ’ம்ஸா வேதம் பேசுகிறோம்...'என்றான் அமுதன்.

இந்த மூவருடைய குறக்கீட்டுடன் கூட்டம் திசை திரும்பிவிட்டதாக எல்லோரும் அவதிப்பட்டார்கள். என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் சற்குணம் தவித்தார்.

இந்தக் கேள்விகள் தேவகுரு போதிக்கும் அமைதி வழிக்கு எதிராக எழுதப்பட்ட சவால் என்று பலரும் கருதினார்கள். அவர் பேசாமல் மிக அமைதியாக இருந்தார்.

'இதற்கெல்லாம் தேவகுரு அண்ணர் பதில் சொல்ல வேண்டும்!' என்று ரகு கேட்டான். இதனால், தேவகுருவுக்கு ஒரு தர்ம சங்கடமான நிலை ஏற்படுவதாக எல்லோரும் நினைத்தார்கள்.

அவர் எழுந்தார். சபையோரை அமைதியாகப் பார்த்தார். பின்னர் ஒவ்வொரு சொல்லையும் உச்சரித்து தெளிவாகப் பேசத் துவங்கினார்.

'இந்தத் தம்பிமார் எழுப்பியிருக்கிற கேள்விகள் ரொம்பச் சரி. எனக்கு வாக்குச் சாதுரியம் இல்லை. எதிர்வாதங்கள் சொல்லுறதாக நினைக்கக் கூடாது. தேவதூதர்கள் அவர்கள் பிறந்த மண்ணிலே அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது பழமொழி. முகம்மது நபி அவர்கள் கல்லெறிபட்டு அவர் பிறந்த மெக்காவில் இருந்து மதினாவுக்குத் துரத்தப்பட்டார். யேசு பிறந்த மண்ணிலே இன்று கிறிஸ்தவம் இல்லை. அங்கே யூதர்களுடைய மதமே நிலைத்துள்ளது. உலகிலுள்ள ஒரேயொரு இந்து நாடு நேப்பாளம். அங்குதான் புத்தர் பிறந்தார். அவர் பிறந்த மண்ணிலும், அவர் ஞானம் பெற்ற மண்ணிலும் புத்த மதத்திற்கு இடம் இல்லாது போய்விட்டது. ஆனால், இந்த மதங்கள் அனைத்தும் வேறுநாடுகளில் செழித்துள்ளன. காந்தி கூட பிறந்த மண்ணிலேதான் அவர் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்ததாகச் சொல்லப்படும் தீவிர இந்து மதவாதிகள்தான் இன்று ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.

'அத்துடன் அணுகுண்டு, ஜலவாயு குண்டுகளை வெடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இந்த இந்துவெறி இந்தியாவுக்கு என்னென்ன நன்மை தரவல்லது என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இன்னொரு காந்தி அனுப்பி வைத்த சமாதானப்படையும், யாழ்ப்பாண மண்ணிலே எத்தனை பெண்களின் கற்புகளைச் சூறையாடியது? எத்தனை மக்களின் உயிரைக் குடித்தது? அந்த மனக் காயங்கள் ஒரு தலைமுறையில் மறைந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. சிங்களவர்களுக்கு அன்புமொழி புரியவில்லை என்பதற்காக அன்பும் அகிம்ஸையும், காந்தியக் கொள்கைகளும் அழிந்தொழிந்து விட்டன என்று அர்த்தம் இல்லை.

'தாயக மண்மீட்புப் போரினை நான் என் கனவிலே கூடக் கொச்சைப் படுத்தியதில்லை. அங்கு போராடும் பெடியன்களை நான் கொலையிலே, கொல்லாமை பயிலும் அகிம்ஸாவாதிகளாகவே தரிசிக்கிறேன். அதிலே பங்கு பற்றும் வாய்ப்பினை இழந்தவனும் நான். பழைய கதைகளைக் கிளற நான் விரும்பவில்லை. ஆனால் காலங்களையும் களங்களையும் பொறுத்து நமது தர்மங்கள் மாறும்; மாறவேண்டும். இது சந்தர்ப்பவாதமல்ல. மானிட நேயத்தின் உயிர்புக்கு இந்த சுருதி பேதங்கள் அவசியம். இப்படித்தான் நான் நினைக்கிறேன். தாயக மண்ணின் மீட்புக்கான போர் புனிதமானது. களத்தைவிட்டு, அகதி நிலை கோரி எங்கள் சொந்தங்களின் வளத்துக்காக வாழும் எங்களுக்கு அதனைப் பற்றி பேசும் உரிமைகூட இல்லை என்று நான் கருதுகிறேன். அதிலே நான் பங்களிப்புச் செய்யமுடியவில்லை என்கின்ற குறை என் நெஞ்சிலே ஆறாத வடுவாக இருக்கும். சீழ்வடியும் அந்தப் புண்ணை திறந்து காட்டுவதற்கு இதுவல்ல சமயம்...சந்திரிகாவும் அவருடைய அமைச்சர் கதிர்காமரும் உலக நாடுகள் எல்லாம் சென்று பரப்பும் வேதம் உங்களுக்குத் தெரியுமா?

"தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள். அவங்களுக்கு அகதிகள் அந்தஸ்து கொடுத்து, உங்கள் நாட்டின் அமைதியைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்...' என்று போதித்து வருகிறார்கள்...

'நாங்கள் வன்செயல்களில் ஈடுபட்டு, நாம் வாழும் இந்த நாடுகளிலே நாங்கள் பயங்கரவாதிகள் என பெயர் பெற வேண்டுமா? நாங்கள் அஹ’ம்சா வழியை பெரிதும் விரும்புவர்கள் என்பதை நிரூபித்து வாழ்வதினால், தாயக விடுதலைப் போரினைக் கொச்சைப் படுத்தாது வாழும் தமிழர்களாகவும் வாழ்கின்றோம். இது மிகவும் முக்கியம். இதனை மறந்து உணர்ச்சி வசப்பட்டு கோஷங்கள் எழுப்புவது எனக்கு மன வேதனையைத் தருகின்றது.

'நீண்ட விளக்கம் தந்து கொண்டிருப்பதற்கு என்னை மன்னிக்கவும். இன்று எங்கள் முன்னால் உள்ள பிரச்சனைகளும் இவையல்ல. நாங்கள் நொஸ்குகளுடன் இணைந்து அமைதி ஊர்வலம் போகத் தயாரா இல்லையா? இதுதான் கேள்வி. நொஸ்குகள் எங்களுடைய பிரச்சனைகளுக்கு மனிதநேய அடிப்படையிலே தீர்வு காண்பதற்கு நேசக் கரம் நீட்டுகிறார்கள். அந்த அமைதி ஊர்வலம் எங்களுக்காகவே ஒழுங்கு செய்யப்படுகின்றது. அதிலே நாம் எல்லோரும் கலந்து கொள்வதா? இல்லையா?

'ஆம்; இல்லை. எது பதில்? இதை மட்டுமே நாங்கள் தீர்மானிக்கவேண்டும்.'

தேவகுரு அமைதியாக அமர்ந்தார்.

அவர் இவ்வளவு ஆழமானவர்; விஷய ஞானம் உள்ளவர் என்பதை அறிந்து கூட்டத்தினர் உறைநிலை அடைந்த சாங்கத்தில் கேட்டுக் கொண்டிருந்தனர். 'அகிம்€ணு என்கிற ஆயுதத்தினை உண்மையான வீரனாலேதான் பயன்படுத்த முடியும்' என்று அவர் முன்னர் ஒருமுறை சொன்னது சற்குணத்தின் நெஞ்சிலே எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தார்.

திட்டமிட்டு விக்னேஸ் பிரச்சனையை எழுப்பியிருந்தான். இப்பொழுது எதுவும் பேச இயலாது தத்தளித்தான். இந்த சூழ்நிலை எழுவதற்கு தானே காரணம் என்கின்ற குற்ற உணர்வும் அவனை வளைத்துக் கொண்டது. சமாதானம் அடைந்த குரலில், 'யார் நொஸ்குகளைச் சேர்க்கிறது?' என்று கேட்டான்.

'லார்ஸ் என்கின்ற டாக்டரைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். அவருடைய மனைவி ஆஸ்திரி ஒரு சீக்கபிளையர் (நேர்ஸ்). அவர்களுக்கு மொமினிலும் (மாநகர சபை) செல்வாக்கு உண்டு. அவர்கள் அதிகப்படியான நொஸ்குகளைத் திரட்டிக் கொண்டு வருவதாக தேவகுரு அண்ணருக்கு வாக்குத் தந்திருக்கிறார்கள்' என்று தலைவர் சற்குணம் பதில் சொன்னார்.

'இந்த அமைதி ஊர்வலத்திலே தமிழர்கள் எல்லோரும் முழு மனசுடன் பங்கு பற்றுகின்றோம் என்கிற தீர்மானத்தினை நான் பிரேக்கின்றேன்' என்றான் விக்னேஸ்.

'நான் அதை ஆமோதிக்கிறேன்' என்றான் ரகு. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. எல்லோருக்கும் திருப்தியை அளித்தது.

அமைதி ஊர்வலம் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க மிக வெற்றிகரமாக நடந்தது. தேவாலயத்திலே துவங்கி, தேவாலயத்தில் ஊர்வலம் முடிவடையும் எனத் திட்மிடப்பட்டிருந்தது. ஊர்வலத்தின் முடிவிலே, மதகுருவானவர் பூஜை நடத்திப் பிரசங்கமும் செய்தார். யேசுநாதர் தம்மை கொடுமைப் படுத்தியவாகளை மன்னித்தருளினார் என்கிற பைபிள் வசனங்களை மேற்கோள்காட்டி அவர் செய்த பிரசங்கம் அமைதி ஊர்வலத்தின் முத்தாய்ப்பாக அமையலாயிற்று. ஊர்வலம் கலையும் பொழுது, வார்டோ முழுவதும் திரண்டிருந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது. அதன் வெற்றிக்காக, எல்லோரும் லார்ஸையும் தேவகுருவையும் மனசாரப் பாராட்டிச் சென்றார்கள். உள்ளூர் வானொலியும் NRK வும் (நோர்வேய அரச ஒளிபரப்புச் சேவை) அவர்கள் இருவரையும் பேட்டிக் கண்டு ஒலி-ஒளி பரப்புச் செய்தது.

'நோர்வே நாடு கடைப்பிடிக்கும் மனிதநேயக் கொள்கைகளின் வெற்றியாக அமைதி ஊர்வலம் அமைந்தது'எனவும் அது விமர்சனம் செய்தது.

அந்த அமைதி ஊர்வலத்தின் வெற்றி, நீல வீட்டிலே கூடித் திட்டமிடும் நவநாஜிகள் நால்வருக்கும் ஆத்திரத்தை ஊட்டியது.

'இந்தக் கறுப்ப பன்றிகளுடன், வெள்ளை பன்றிகளும் சேர்ந்துவிட்டனவே' என்று குமுறினார்கள்.

'ஏய். நாங்கள் உண்மையிலேயே அந்த வீட்டை எரிக்கவில்லை. அப்டி இருக்க, ஏன் இந்தக் கறுத்தப் பன்றிகள் இப்படி ஆட்டம் ஆடுதுகள்?' என்று செல் கத்தினான்.

'யாரோ 'பெட்ரோல் பாம்'எறிந்துதான் வீட்டை எரித்தாகப் போலிஸ் தரப்பு நம்புகின்றதாம்.'

'நாங்கள் அதை எரிக்கவில்லை. வேற யார் இதைச் செய்திருப்பினம்?'

'இந்தத் தமிழ்ப் பன்றிகள்தான் எரித்துப் போட்டு இப்பிடிக் கதையை மாற்றிக் கூத்தாடுதுகளோ?'

'வீடு எரியும்பொழுது உள்ளுக்குள்ள ஆக்கள் இருந்தவையாம்...'

'செய்தவங்களை அறியாட்டில், எங்களுக்கும் ஆபத்து...' அவன்?'

'தெரியேல்லை...'

'தெரியேல்லையோ? அவன்தான் அன்றைக்கு எங்களிட்ட அடிபட்டவன்.'

'அவனே? அவனுக்குப் படிப்பிச்ச பாடம் காணாது.'

'எங்கட சனமும் கனபேர் அவனோடு நிக்கினம். இப்பிடிப் போச்சென்றால், எங்களுக்கு ஆபத்து...'

'நாங்கள் இப்ப எதுவும் செய்யிறது நல்லதில்லை...போலிஸ் சரியான உசாரா இருக்குது. அந்த நோட்டீஸ் ஆர் எழுதினது எண்டு விசாரிச்சுத் திரியிறாங்கள்...நாங்கள் கொஞ்சம் அவதானமாக நடக்க வேணும்...'என்று ஜோன் அவர்கள் உரையாடலிலே குறுக்கிட்டான்.

'நீ பயந்த ஆளடா...' என்று அல்பிரேட் குற்றஞ் சாடடினான். ஜோன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். தன்னை அவர்கள் சந்தேகிக்கவில்லை என்பதில் அவனுக்குத் திருப்தி.

அவர்களுடைய கார் நீல வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

காறால்ட் அதனை ஓட்டிக் கொண்டிருந்தான்.


 6

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 - 13)!வெள்ளி இரவு ஒன்பதரை மணிக்குத் தம்மை வந்து சந்திக்கும்படி தேவகுருவை லார்ஸ் அழைத்திருந்தார். நேரம் ஒன்பது இருபதைத் தாண்டிவிட்டது. இன்னும் நித்தியாவைக் காணவில்லை. கூட்டம் பற்றி நேற்றி நித்தியாயினிடம் சொல்லி இருக்கிறார்.

'ஒருவேளை மறந்து போனாளோ?' என அந்தரப் பட்டார். நித்தியா மறக்கவில்லை. வந்து கதவைத் திறந்தாள். அவளைப் பார்த்ததுமே தேவகுரு புறப்பட்டார். அவரது அவசரத்தைப் பார்த்ததும், 'நல்லவேளை, இந்த மனுஷன் சந்நியாசம் கின்னியாசம் எண்டு நினைக்கேல்லை...இப்பிடியாவது திரிகிறாரே' என்று நினைத்தாள். அவளுக்கு சிரிப்பு வந்தது.

லார்ஸ் வீட்டிலே, மற்றும் நான்கு நொஸ்குகளும் காத்திருந்தார்கள். முன்னர் அவர்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், நேரில் அறிமுகம் இல்லை. அவர்களை லார்ஸ் சம்பிரதாயமாக அறிமுகம் செய்து வைத்தார். இருவர் ஆசிரியர்கள். ஒருவர் நர்ஸ்ஸாக வேலை பார்ப்பவர். திருமதி ஆஸ்திரி லார்ஸ் கோப்பி கொண்டு வந்து பரிமாறினாள். கூடத்திலே சகஜ நிலை உருவாகியது. உரையாடலில் ஆஸ்திரியும் கலந்து கொண்டார்.

'உங்களுடைய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஒர் அமைப்புத் துவங்கவேண்டும் என்று இவர்கள் விரும்பினார்கள். உங்களையும் அழைத்து இதுபற்றிக் கலந்துரையாடல்கள் செய்யலாம் என்றேன். இதற்காகத்தான் இங்கு கூடி இருக்கிறோம்.' என்று லார்ஸ் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்.

'என்னுடைய கொள்கை அல்ல. அன்பு மார்க்கம் என்பது பலரும் போதித்த ஒன்றுதான். புத்தரும் யேசுவும் இதனை அதிகம் வலியுறுத்தினார்கள். மானிட குலம் பண்புடன் முன்னேறுவதற்கு அன்பு எத்தகைய அற்புதமான வாழும் முறையை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் வாழ்ந்தும் போதித்தும் காட்டினார்கள். இருபதாம் நூற்றாண்டிலே, அரசியல் பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்கு அகிம்சை என்கின்ற நெறியினை எவ்வாறு வெற்றிகரமாகப் பயன்படுத்தலாம் என்பதை காந்திஜ“ பயின்று காட்டினார். இங்கு உருவாகி வரும் முரண்பாடுகளை நீக்கி, அமைதியை நிலை நாட்டுவதற்கு இந்த வழி பயன்படும் என்று நான் இங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறேன்.' என்று தேவகுரு தமது தளத்தையும் ஊழியத்தையும் மிகவும் ஆறுதலாக விளக்கினார்.

இதனை தாங்கள் சரியாகவே புரிந்து கொண்ட படியாற்றான் அவரை அழைத்துப் பேசுவதாக அவர்கள் விளக்கினார்கள். நூர்மன் அமைதி விரும்பிகள். உலக சமாதானத்துக்கு, சிறிய நாடாக இருந்தபோதிலும், உச்சப்பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்கள். அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ முந்துகிறார்கள். ஹ’ட்லர் மீள் உயிர்ப்பும் பெற்றது போல, ஐரோப்பிய நாடுகளில் ஆங்காங்கே நவநாஜிகள் போன்ற இயக்கங்கள் தோன்றுவது அவர்களுக்கு கவலை தருகின்றது. முன்னர் யூதர்களுக்கு எதிரான கோஷம். இப்பொழுது, அகதிகளாகவும் அபாக்கியவான்களாகவும் ஐரோப்பாவில் வாழத் தலைப்பட்டுள்ள மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு எதிரான கோஷம். இந்தக் கோஷத் தினாலும் இயக்கத்தினாலும், நாகரிகவான்கள் தலையை கவிழ்க்க நேரிடுகின்றது. இங்கு, வார்டோவிலும், இந்த நாஜி இயக்கம் தோன்றியுள்ளதோ என அஞ்சப்படுகின்றது. இந்த அழி பாடுகளைத் தவிர்ப்பதற்கான ஓர் இயக்கம் தேவை என அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.

'மிக நல்ல முயற்சி. என் பூரண ஆதரவு உண்டு. இதற்கு ஆதரவு தரும்படி எனக்குத் தெரிந்த தமிழர்களைக் கேட்டுக் கொள்ளுவேன்' என்று தேவகுரு உற்சாகத்துடன் பதிலளித்தார்.

இதற்கு ஒரு பெயர் தேவையென அபிப்பிராயம் நிலவியது. பல பெயர்கள் பரிசிலனைக்கு வந்தன. 'Vardo Ikke-Vold Forum' (வார்டோ அகிம்ஸை அரங்கு) என்கின்ற பெயர் பொருத்தமாக இருக்கலாம், என்று தேவகுரு தெரிவித்த அபிப்பிராயத்தை அவாகள் எல்லோரும் ஒருமுகமாக ஏற்றுக் கொண்டார்கள்.

'நீங்கள்தான் அதன் தலைவராகச் செயற்பட வேண்டும்.' என்று ஆசிரியர் ஒருவர் தேவகுருவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டார்.

'உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. ஆனால் எந்த இயக்கத்திற்கும் அல்லது மன்றத்துக்கும் நான் தலைவனாக இருப்பது இல்லை என்பது என் கொள்கை.'

'ஏன்?'

'அதுவும் காந்தியக் கொள்கை என்று நினைத்து விடாதீர்கள். தொண்டனாக இருந்து உழைப்பதில் எனக்குத் திருப்தி. கொள்கையை அடிமட்டத்திலிருந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தொண்டனுக்கு வாய்ப்பிருக்கிறது. தலைமை எனக்குச் சுமையாக மாறிவிடும் என அஞ்சுகிறேன். பல விஷயங்களிலும், பல கோணங்களிலும் என்னைப் பார்க்கிலும் தலைமைப் பதவி வகிப்பதற்கு டாக்டர் லார்ஸ”க்கு அதிக தகமைகள் இருக்கின்றன என நான் கருதுகிறேன். அத்துடன் அரச அலுவலர்களுடன் தொடர்பு கொள்ளவும், விஷயங்களை எளிதிற் புரிய வைக்கவும் அவராலே முடியும்,' என்றார் தேவகுரு.

அவருடைய கோரிக்கைக்காக மட்டும் தலைமைப் பொறுப்பினைத் தாம் ஏற்கத் தயாராக இருப்பதாக லார்ஸ் அறிவித்தார்.

'உங்கள் மூலம், தமிழ் மக்களுடைய ஒத்துழைப்பும், பங்களிப்பும் அதிக அளவில் இருக்க வேண்டும்...' என்று அவர்கள் தேவகுருவைக் கேட்டுக் கொண்டார்கள். தமது சக்திக்கு முடியுமான அளவு திரட்டுவதாக அவர் வாக்களித்தார்.

குறித்த நாளில் பாடசாலை மண்டபத்திலே 'Vardo Ikke-Vold Fourm' இன் அங்குரார்ப்பணக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வரவு பதியப்பட்ட ஏட்டிலே, எழுபத்திரெண்டு தமிழர்களின் பெயர்களும், ஐம்பத்தைந்து நொஸ்குகளின் பெயர்களும் பதிவாகி இருந்தன.

அக்கூட்டத்திலே தேவகுரு அற்புதமான உரை ஒன்றினை நிகழ்த்தினார். உலகத்திலே வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு அன்பின் மொழியும், அர்த்தமும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது, அவர் பேச்சின் பொருளாய் அமைந்தது. நொஸ்க் மொழியில் அவருக்குச் சரளம் கிடையாது. எனவே, அவர் தமிழிலே பேச, அதன் தொனியும் பாவமும் சற்றும் சிதையாமல நொஸ்க் மொழியில் பெயர்க்கப்பட்டது.

அன்பு நிர்பந்தத்தினை மீறமுடியாது. தேவகுரு செயற்குழு உறுப்பினராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். திங்கட்கிழமையே அந்த அமைப்பு சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்டது. செயற்குழு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தியது. பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் உள்ளூர் நிருபர்கள் உற்சாகத்துடன் பங்கு பற்றினார்கள்.

தொலைக்காட்சி, தேவகுருவை விசேஷமாகப் பேட்டிக் கண்டது. வழக்கம் போலவே, அவர் அன்பு, அகிம்ஸை, காந்தியவழி, மனித நேயத்தின் சக்தி, துவேஷ -குரோத உணர்ச்சிகளினால் ஏற்படும் மானிட வீழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிப் பேசினார். தமிழ் மக்கள் நோர்வே நாட்டுக்கு அகதிகளாக வருவதற்கான அரசியற் பின்னணியை விளக்கினார். நிற, இன விரோத அடக்குமுறைகளின் அநர்த்தங்களை விளக்கினார். 'நோர்வே மக்களை நேசிக்கிறோம். அவர்களுடைய கருணையை மதிக்கிறோம். அவர்களுடைய அன்பினை தலைமுறை தலைமுறையாக நினைவில் வைத்துக் கொள்வோம். நாங்கள் இந்த நாட்டிற்கும் அதன் முன்னேற்றத்துக்கும் எங்கள் உழைப்பினைத் தருவோம்' என்று மிக உருக்கமாக கூறினார்.

அவருடைய பேட்டி நல்லிதயங் கொண்ட நொஸ்க்குகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. அவரை அவர்கள் எல்லாரும் மகத்தான மனிதர் எனப் பாராட்டச் செய்தார்கள். தேவகுருவின் சேவையைத் தமிழர்களும் அதிகமாக மதிக்கத் துவங்கினார்கள்.

'இந்தக் கறுத்தப் பன்றிக்குப் பின்னால், வெள்ளைப் பன்றிகளும் அணி திரண்டு எங்கள் நாட்டைக் குட்டிச் சுவராக்குதுகள்' என்று ஜோன் கறுவிக் கொண்டான்.

கிறிஸ்மஸ் விடுமுறையில் அல்பிரேட்டுடன் மோல்ற்றன் என்பவன் வந்து தங்கினான். அவனுக்கு இவன் தூரத்து உறவினன். அவன் Vidergagende Skole (மேனிலைப் பள்ளி) மாணவன். அவனுக்கு வெளிநாட்டவரை பிடிக்காது. தன் வெறுப்பினை ஒளிவு மறைவின்றிக் கொண்டித் தீர்த்தான்.

'என் பாடசாலையில் சில பெண்கள் கறுத்தப் பன்றிகளைக் காதலிக்குதுகள். இவள்கள் இனிக் கறுத்தப் பன்றிக் குட்டிகளைப் பெற்று வளர்ப்பார்கள்...என்னிடம் மட்டும் துவக்கு இருக்குமானால், அவள்களையும் அந்தக் காதலன்களையும் சுட்டுப் பொசுக்கி இருப்பன்' என்று கத்தினான். அப்படி அவன் உணர்ச்சி வசப்பட்டுக் கத்தியபொழுது அல்பிரேட் வீட்டில் செல்லும் இருந்தான். இதனால், நீல வீட்டில் கூடிய அடுத்த கூட்டத்திலே, மோல்ற்றன் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

'எங்கள் விஷயம் பிழைச்சுக்கொண்டு போகுது. எங்களிட்டை அடிவாங்கியவன் இப்ப பெரிய மனுஷன். வேலையில்லாத இந்த பன்றிகளும் அவன்ர மூஞ்சியை டீவியில காட்டுறாங்கள்...இந்த வெள்ளைப் பன்றிகளும் அவனை ஒரு தலைவனாகப் பார்க்கிறார்கள்' என்று ஜோன் கத்தினான்.

'இதுகளை என்ன செய்யலாம்?'

'யார் அந்த வீட்டை எரிச்சவங்கள்? எங்களைப் பார்க்கிலும் தீவிரமான ஒரு குழு இயங்குதோ?'

'எங்களை விடத் தீவிரமாக யார் இருக்கிறார்கள்?'

'சுத்தி சுததி ஒரே கதை தேவையில்லை. இப்ப நாங்கள் என்ன செய்யலாம்?'

'இப்பிடி நீ கேட்டா என்ன செய்யிறது? யோசிக்கச் செய்வம்.'

'யோசிச்சு எப்ப செய்யிறது?'

'ஏய் நீ என்ன கதைக்கிறாய்?'

'ஒகே. அமைதியாய் இருங்கோ. இங்க சண்டை பிடிக்க வாறேல்ல. பிளான் போட்டு எதாவது செய்வோம்.'

'வீடெறிக்கிற மாதிரி ஒன்றும்செய்யேலாது. போலிஸ் சரியான அலேட்டா இருக்கிறாங்கள்.'

'அப்ப என்ன செய்யலாம்?'

'பழையபடி யாராவது ஒருத்தனுக்கு அடிபோடுவது,'

'திரும்பவும் ஊர்வலம் போவாங்கள்...'

'ஊர்வலத்தை இலேசாகக் குழப்பலாம். இதுக்கு நான் பிளான் தாறன்' என்று பெரிய மனுஷன் பாணியில் மோல்ற்றன் சொன்னான்.

'மோல்ற்றனின் அநுபவங்களைப் பிறகு கதைப்பம்.'

'அப்ப, இனி ஆருக்கு அடி போடலாம்?'

'சுத்தித் திரிவம். வசதி வாய்க்கிற மாதிரிச் செய்வம்.'

'இல்ல...அவன் யார் லீட் பண்ணுறது? அந்தக் கறுத்தப் பன்றி யார்?'

'தேவகுருவோ என்னவோ.'

'அவனுக்குத்தான் அடி போடவேணும். இந்தத் தடவை எலும்பு முறிய வேணும்?'

'எப்ப, எங்க செய்யலாம்?'

'அதை அவன்ர அதிர்ஷ்டம்தான் முடிவு செய்யோணும்.'

'அப்ப வேலையைத் துவங்க வேண்டியதுதான்.'

அவர்கள் அலுத்து இருக்கவில்லை. இப்போது முறை வைத்து, அவர்களுள் ஒருவன் குடிப்பதில்லை. குடியாதவன் சாரதி என்பது நியதியாயிற்று. இன்று ஜோன் இப்பொறுப்பை ஏற்றிருந்தான். தேவகுருவைத் தேடி அலைந்தார்கள். அவர் எங்கும் அகப்படவில்லை. ஜோனுக்கு அலுப்பும் கோபமுமாய் இருந்தது.

என்றாலும் பின்வாங்கும் மனதின்றி, 'இன்றைக்கு எப்படியும் ஒரு கறுத்தப் பன்றியின் காலை முறிக்க வேண்டும்' என்று ஜோன் கறுவிக் கொண்டான்.

ஈற்றில் குப்பைக் கொட்டும் இடத்திற்கு காரைச் செத்திவிட்டு அங்கு காத்திருந்தனர். இந்தக் குப்பை கொட்டும் இடம் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது. அந்த இடத்திற்கு யாரும் அதிகம் வருவதில்லை. எப்போதாவது இசக்குபிசக்கான குப்பை சேர்ந்தால் மட்டும் யாராவது அங்கு வருவாங்கள்.

காருக்குள் ஒலிபெருக்கி இடி இடி என முழங்கிக் கொண்டிருந்தது. யார் ஹெட்லைட் போட்டபடி தரித்து நின்றது. வெளியே 'கும்'இருட்டாக இருந்தது.

'பேஸ்மெண்டில்' பழைய காலத்து மெத்தை ஒன்று கிடந்தது. அதன் தோற்றம் வயிற்றைக் குமட்டி வாந்தி வரப் பண்ணியது. இது திடகாத்திரமான மெத்தை. குப்பைக்குப் பாவிக்கும் கறுத்த பையினுள் திணிக்க முடியாது. டிக்குக்குள் திணித்து குப்பை கொட்டும் இடத்தில் எறிந்துவிட்டு வருவது நல்லதென விநாயகம் பிள்ளை எண்ணினார்.

ஜோன், ஒரு தமிழன் காரில் போவதைப் பார்த்து விட்டான். இருளில் உள்ளே இருப்பவன் நன்றாகத் தெரியவில்லை. இன்னார் என்பது நிச்சயம் இல்லை. ஆனால், உருவ அமைப்பைப் பார்த்து ஒரு தமிழன் என்று நிச்சயித்துக் கொண்ட அவன், பரபரப்பானான். சகாக்களை உசுப்புவதற்கு தேவகுரு எனச் சொல்வதென உத்தேசித்தான்.

'ஏய், தேவகுரு! அந்தப் பன்றி போறான்! அந்தப் பன்றி போறான்' எனக் கத்தினான். எல்லோரும் துடித்துப் பதைத்து எழும்பினார்கள். ஜோன் காரை உடனே நடுவீதிக்கு எடுத்தான். ஹெட்லைட் போட்டபடியே காருக்குள் காத்திருந்தான். மற்றவர்கள் தங்களுடைய முகத்திற்கு முகமூடி அணிந்து கொண்டார்கள்.

விநாயத்தின் வாகனம் தென்பட, ஜோன் ஆபத்திற்குப் பாவிக்கும் மின் விளக்ககள் அனைத்தையும் ஒளிரச் செய்தான். விநாயத்திற்கு என்ன நடக்கிறதென்பது புரியவில்லை. 'ஏதாவது பிழையாக இருக்க வேண்டும். அதுதான் போகும் போது லையிற்றைப் போட்ட வண்ணம் இருந்திருக்கிறார்கள்' என நினைத்துக் கொண்டார்.

விநாயகத்தின் வாகனம் கிட்ட வந்தது. இரண்டு பேர் போனட்டைத் திறந்து ஏதோ கிண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவர்கள் தலை நன்றாகத் தெரியவில்லை. போனட் கதவு மறைத்துக் கொண்டிருந்தது.

விநாயகம் வாகனத்தை நிறுத்தினார். அவர்களை நோக்கிச் சென்றார். 'இது முதலில் தரித்து நின்றது. இப்போது எப்படி நடுவீதிக்கு வந்தது?' பொறி தட்டியது. நின்று நிதானிப்பதற்குள், குனிந்து திருத்திக் கெண்டிருப்பதாய் பாவனை செய்தவர்கள் தீடிரென நிமிர்ந்தார்கள்.

விநாயகம் அதிர்ந்தார். 'இவர்கள் ஏன் முகமூடி அணிந்திருக்கிறார்கள்? விடை புரியாது திகைத்தார். மறு கணம் 'நரகல் கறுத்த பன்றி' என்று கத்தலுடன் ஒருவனுடைய இரும்புக் கை அவரது மூக்கில் 'இடி'என இறங்கியது.

விநாயத்திற்கு மயக்கம் வருவது போல இருந்தது. இரண்டு பேராக இருந்தது ஐந்து பேராகக் மாறியதாய் தோன்றியது. அவர்கள் நையப் புடைத்தார்கள். இவர்'ஐயோ அம்மா' என்று கத்தினார். அவரை மயக்கம் முழுமையாகக் கவ்வியது.

அவர்களுக்குச் செத்தப் பாம்பை அடிக்கப் பிடிக்கவில்லை. தங்கள் காரைக் கிளப்பிச் சென்றுவிட்டார்கள். மயக்கம் தெளிந்தபோது, காலில் பயங்கர வலி எடுத்தது. தேகம் உறைந்து விட்டதாக உணர்ந்தார். உடல் குளிரால் உறைந்து உயிர் துடிப்பு அடங்கும்முன் காரிற்குள் சென்றுவிட வேண்டுமெனத் துடித்தார். மெதுவாக இழுத்து இழுத்து, அரைந்து அரைந்து வாகனத்தைச் சென்றடைந்தார். உயிர் போய்விடும் வலி; குளிர். காரினுள் தன்னைத் திணித்து உடல் சாய்த்ததும், மீண்டு மயக்கம் வருவதாய்த் தோன்றியது.

சுகாதார நிலையத்திற்கு போலீஸார் வந்து விநாயத்தை விசாரித்துவிட்டுச் சென்றார்கள். அவர்களுக்கு இன்னுமொரு தலையிடி அதிகரித்துள்ள அவஸ்தை. அடுத்த நாள் இந்தச் செய்தி ஊரெல்லாம் காட்டுத் தீயாய்ப் பரவியது. இளைஞர்கள் சினந்தெழுந்தனர். வயதானவர்கள் தவிர்க்க முடியாதென்றனர். பெண்கள் 'இது என்ன கோதாரி' எனப் பயப்பட்டனர். வார்டோ தமிழர்கள் அமைதி பறிபோய் விட்டதாய் அங்கலாய்த்துக் கொண்டனர். எதிர்விளைவு என்ன?...கொலைப் பயம் ஒவ்வொருவருடைய மனசிலும் இடம் கேட்கத் துவங்கியது.


 7

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 - 13)!வித்தியாயினி பயமின்றி தொழிற்சாலைக்குச் சென்றுவரவேண்டும் என்கிற நோக்கத்தினைப் பிரதானமாகக் கொண்டு, தேவகுரு கார் ஒன்று வாங்கியிருந்தார். அவள் தொழிற்சாலைக்குச் சென்று வருவதற்கு மட்டுமே அதனைப் பயன்படுத்துவாள். மற்றைய நேரங்களில், தேவகுரு ஓட்டுவார்.

மனைவி கொடுத்த 'லிஸ்ட்'டிலுள்ள பொருள்களை வாங்கிக் கொண்டு, காரைக் கிளப்பினார். தெருவில் ஓரளவு ஜனநடமாட்டம் இருந்தது. தேவாலயத்தின் அயலிலே திரும்பிய பொழுது, செல்லக்கண்ணனின் மகள் விகீனா அழுது கொண்டு செல்வதாகத் தோன்றியது. தாயகத்திலே செல்லக்கண்ணன் அவருடைய ஊரைச் சேர்ந்தவன். சுற்றி வளைத்துத் தேடினால் உறவுங்கூட குழந்தைகள் அழுவது அவருக்கு எப்பொழுதும் பிடிப்பதே இல்லை. அன்றலர்ந்த மலர்களாய் அவர்கள் ஆனந்தக் கூத்தாட வேண்டுமென்று விரும்புபவர். எனவே, கிகீனாவைத் தேற்ற முயன்றார்.

'விகீனா ஏன் அழுகிறாள்?'

இந்தக் கேள்வி அவர் மனசிலே எழுந்ததும் காரை 'ஸ்லோ' செய்தார். அவள் மறுபக்கம் திரும்பினாள். அவர் ஹாரனடித்ததும் திரும்பிப் பார்த்தாள். அவர் வருமாறு சைகை காட்ட, அவள் தயங்கினாள்.

'வா பிள்ளை; வந்து ஏறு. நான் வீட்டை கொண்டு போய் விடுறன்.' அவருடைய அழைப்பின் இதம் அவளை ஈர்ந்தது. அவள் மெதுவாகக் காருக்குள் ஏறினாள். அவள் விசும்பல் தொடர்ந்தது.

'என்னமா நடந்தது? யார் என்ன செய்தது?'

'ம்ம்ம்...'

'நீங்கள் கெட்டிக்காரப் பிள்ளையல்லே? அழாமல், மாமா கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லவேணும்... சொல்லுவியா?'

'ம்...' அவள் விக்கினாள்.

'முதலில் அழுகிறத நிப்பாட்டம்மா.'

'...'

'ப்ளீஸ்'

'...'

'எங்க சிரியுங்கோ பார்ப்பம்...'

'...'

'சிரிக்கிறா...சிரிக்கிறா...சிரிக்கிறா...'

தேவகுரு பெரிசாகச் சிரிக்க, அவளம் சிரித்தாள். சிறிது நேரம் சிரிக்கச் செய்த பிறகு, நடந்ததை அறிய விரும்பினார்.

'விகீனா...'

'ம்...என்னங்கிள்?'

'நான் கேட்டால், அழாமல் பதில் சொல்லுவியா?'

'எதுக்கு?'

'பள்ளிக் கூடத்தில் என்ன நடந்தது?'

'ம்...ம்...'

'அழக்கூடாது...'

'நான் அழல்ல...'

'ம்...சொல்லுங்க...என்ன நடந்தது?'

* * * Nalai 3-ன் தொடர்ச்சி * * *

'நாங்கள் அங்கிள், தனியா நிண்டு விளையாடினனாங்க...அப்ப அந்த நொஸ்க் பெட்டைகள் ரெண்டு வந்து குழப்பினாளவை. அதுக்குப் பிறகு நாங்கள் வேற இடத்தில் போய் விளையாடினம். அப்பவும் வந்து குழப்பினாளவை. அப்பிடிக் குழப்ப நாங்கள் அவையத் தள்ளினம். அதுக்கு 'கல்வத்த சீவாட்' எண்டு, எங்களில உள்ளி மணக்குது எண்டு சொல்லி, மூக்கைப் பொத்தி நக்கலடிச்சவ...நாங்கள் இதை எல்லா பொறுத்துக்கொண்டு விளையாட, எங்களுக்கு மேல துப்பிப் போட்டு, ஓடிட்டனம். ஏன் எங்களைத் துப்பவேணும்? நாங்கள் என்ன எச்சில் தொட்டியே அங்கிள்?'

'இல்லை. நாங்கள் மனுஷர்'

'அதுதானே அங்கிள். ஏன் இவை இப்பிடிச் செய்யினம்?'

'அதுதான் நானும் யோசிக்கிறன்.'

'யாராவது எங்களைப் பற்றிக் கூடாமல் சொல்லிக் குடுக்கினமோ?'

இந்தச் சிறுமியின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? இந்தப் பிஞ்சு மனங்களை காயப்படுத்துவதிலே அந்தச் சமுதாயம் என்ன நன்மை அடைய போகின்றது?

'அப்பிடிச் செய்யிறது பிழைதானே அங்கிள்?'

என்ன பதில் சொல்லுவது எனத் தேவகுரு யோசித்தார்,

'நாங்கள் ஊரில குறைஞ்ச சாதிப் பிள்ளைகளோட விளையாடுறதில்லை எண்டு அம்மா சொல்லுறவ...உண்மையே அங்கிள்?'

யாழ்ப்பாணத்திலே, எளிய சாதிகள் என்று நாக்கில் நரம்பில்லாது வக்கணை செய்தவர்களுடைய வாரிசுகள், இங்கே துப்பல் அபிஷேகத்தினாலே அல்லாடுதுகள். இது தர்மவினையா? தெய்வ நீதியா? தேவகுருவின் நெஞ்சு வலித்தது.

நொஸ்க் சிறாரின் நெஞ்சங்களிலே நிறவெறித் துவேஷத்தினை வித்தூன்றுபவர்கள் யார்?

விகீனா வீடு வந்தது. அந்தப் பிஞ்சு மனம் நோகாமல் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டது ஆறுதலாக இருந்தது.

'வாங்க அங்கிள்' என்று கையைப் பிடித்து இழுத்தாள். அந்த அழைப்பை அவரால் நிராகரிக்க முடியவில்லை.

கதவைத் திறக்க வந்த செல்லக்கண்ணன், தேவ குருவைக் கண்டதும் ஒடவந்து வரவேற்றார்.

தேவகுரு தமது ஓய்வு நேரங்களைப் பயனுள்ள முறையிலே செலவழிப்பதை விரும்புபவர். நிறைய வாசிப்பவர். கற்க வேண்டியவை கடலாய் விரிந்து கிடக்க, வீண் வம்பளப்புகளிலே காலத்தை வீணடிக்க விரும்பாதவர். புதிதாக வாங்கிய கார், வீடு, சலவை எந்திரம் போன்ற வீட்டுப் பாவனைப் பொருள்கள் பற்றிய பெருமைகளைப் பேசுவது எரிச்சலைத் தரும். பணம் சம்பாதிப்பதற்கு முதலிடம் அளித்து, ஏனைய அனைத்து மனிதக் கடமைகளையும் துறப்பவர்களை மனிதப் புழுக்கள் என்றும், மானிட குலத்தின் உய்வுக்கும் உயர்வுக்கும் உழைத்தல் தெய்விகப் பணி என்றும் அவர் கருதினார்.

விகீனா அழுது முகம் வீங்கி இருப்பதைக் கண்ணன் அவதானித்தான்.

'விகீனா, பள்ளிக்கூடத்தில் நீ அழுதனியே?'

'ம்...'

'ஏன்?'

'துப்பீட்டுதுகள்.'

'யார்?'

'ரெண்டு நொஸ்க் கெட்டையள்'

'நீ ரீச்சரிட்டை சொல்லேல்லையே?'

'இல்லை.'

'சொல்லி இருக்கலாமே?'

'ம்...'

'நான் என்ன அவர்களை செய்யட்டும்? இதுக்கு இப்படிச் செய்திருக்குதுகள். கொண்டு போய் வகுப்பு டீச்சரோட கதைச்சிட்டு வரட்டே?' என்று ஒருவகை ஏலாமையோட கண்ணன் கேட்டான்.

'இது வகீனாவுக்கு மாத்திரம் இல்லை. இங்க இருக்கிற எல்லாப் பிள்ளைகளுக்கும் இருக்கிற அவமானம். பிரச்சினை...யோசிச்சுச் செய்யவேணும்' என்றார் தேவகுரு அமைதியாக.

பாடசாலை அதிபர் வயதானவர். மூக்கு நுனியிலே தொங்கும் மூக்குக் கண்ணாடி இவர்களைக் கண்டவுடனேயே புன்னகையோடு வரவேற்றார். மேஜையில் பல கடுதாசித் துண்டுகள்; வந்த கடிதங்கள்; போகவேண்டிய கடிதங்கள்; கணினி ஒன்று ஆகியன அடைத்திருந்தன. கணினி தனக்கு ஓய்வில்லை என்பது போல விழித்துக் கொண்டிருந்தது. அதிபர் சுழல் நாற்காலியில் வசதியாக அமர்ந்திருந்தார்.

குனுத்--நல்ல நாள்--கூறியவண்ணம், அவர்களைக் கைகுலுக்கி வரவேற்றார். தேவகுருவும் செல்லக் கண்ணனும் தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.

'நான் என்ன செய்யவேணும்?'

'நிறையச் செய்யவேணும்...' என்று சொல்லித் தேவகுரு சிரித்தார்.

'ஏலுமெண்டாச் செய்யலாம்' என்று அதிபர் பதிலுக்கு முறுவலித்தார்.

'இவருடைய மகள் விகீனா இங்க படிக்கிறா...'

'ம்..கும்.'

'அவளைத் தொந்தரவு செய்து, பயமுறுத்தி, எச்சில் துப்பியிருக்கினம்'

'அதே வகுப்புப் பிள்ளைகளா?'

'இந்தப் பாடசாலைப் பிள்ளைகள்.'

'நான் வருந்துகின்றேன். நான் அவர்களை விசாரிக்கிறேன்.'

'அதுக்கல்ல நாங்கள் வந்தது...'

'சொல்லுங்கள்...'

'ஓரளவுக்கு வெள்ளைத் தோலல்லாத பிள்ளைகள் எல்லோரும் அநுபவிக்கிற பொதுவான பிரச்சினையாக இது தோன்றிகின்றது.'

'இருக்கலாம்...நல்லதுக்காக ஏதாவது செய்வம்...'

'நடப்பவை இந்த நாட்டு மக்களின் காருண்ய குணத்துக்கு ஏற்றதல்ல. நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய விஷயம். பிள்ளைகள் நிறவெறி விரோதங்களுடன் பிறப்பனவல்ல. நிறவெறிக் குரோதம் போன்றவற்றைப் பிள்ளைகள் வளரும் சூழலிலேதான் அறிந்து கொள்ளுகிறார்கள். நாங்கள் உண்மைகளைப் பெற்றோருக்கு விளக்கப்படுத்த வேண்டும். முதலில் அவர்கள் மன நிலைகளிலே மாற்றம் ஏற்படவேண்டும்...'

'நீங்கள் சொல்லுவது சரி. பெற்றோர்கள் ஆசிரியர் கூட்டம் ஒன்றுக்கு நாங்கள் ஒழுங்கு செய்யலாம். ஆனால் அத்தகைய கூட்டங்களிலே தமிழ்ப் பெற்றோர்கள் பெரும்பாலும் வருவதில்லை. நீங்கள் மனவருத்தப்படக் கூடாது. தமிழ் பெற்றோர்கள் பலரும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பி வைப்பதுடன் தமது கடமை முடிந்துவிடுவதாக நினைக்கிறார்கள்...'

'தமிழ்ப் பெற்றோருடன் நான் பேசிப் பார்க்கிறேன். அடுத்த கூட்டத்தில் அவர்களைக் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுவேன்.'

'உங்களுக்கு நன்றி...'

'இது நன்றிக்கல்ல. இது பெற்றோருடைய கடமை என்று நான் நினைக்கிறேன்.'

'இந்தக் கடமை உணர்ச்சி எல்லாப் பெற்றோருக்கும் ஏற்படுமானால், பாடசாலை நிர்வாகத்தில் ஏற்படும் அநேகமான பிரச்சினைகள் சுலபமாகத் தீர்ந்துவிடும்' என்று கூறி எழுந்த அதிபர், கூட்டத்திற்கான நாள் விரைவிலேயே பிள்ளைகள் மூலம் அறிவிக்கப்படும் எனக் கூறி, அவர்களை அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்த தேவகுருவுக்குக் கவலையாக இருந்தது. அதிபர் சொல்வதில் உண்மை இருந்தது. தமிழ் பெற்றோர் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திலும், அவர்களுடைய வளர்ப்பிலும் அதிக அக்கறை எடுப்பவர்களாகத் தெரியவில்லை. செல்லக்கண்ணனும் அவன் மனைவி தீபாவும் விழுந்து விழுந்து உழைக்கிறார்கள். பணம் ஈட்டல் மட்டுமே வாழ்க்கையாகிவிட்டது. இப்படித் திரட்டும் பணம் யாருக்காக? பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையா? பிள்ளைகளை உரிய முறையிலே வளர்க்கத் தவறியதை, மிகக் காலங்கடந்தே உணர்வார்கள். பிறகு...இவர்களை அழைத்துப் பேசினால் என்ன? உழைக்கத் தெரியாதவன் வயிற்றெரிச்சலிலே புலம்புகிறான் என்பார்கள். எல்லாவற்றையும் இவர் தன் தலையிலே போட்டுக் கூத்தாடுகிறார் என்பார்கள். இந்த அவமானங்களுக்கு அஞ்சி நமது சமூகக் கடமையைச் செய்யாமல் இருப்பதா?

'சகல விடயங்களையும் விளக்கும் உண்மையை நேருக்கு நேர் காண விரும்புவோர், எவ்வளவு இழிவான சத்துருவையும், தன்னைப் போலவே நேசிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அந்த விருப்பம் உடையவர்கள் வாழ்வில் எந்தத் துறையையும் அலட்சியம் செய்யலாகா...' என்கிற காந்தியின் அறிவுறுத்தல் அவர் நெஞ்சில் மிதந்தது.

'சிந்தனையிலே மூழ்கி இருந்தவரை மாலதி உசுப்பினாள்.

'அப்பா...அப்பா...'

'என்னம்மா?'

'தமிழ் பாடத்தில நீங்கள் தந்த வீட்டு வேலையெல்லாம் எழுதி முடிச்சிட்டன் அப்பா...'

'என்ரை மாலதிக் குட்டி கெட்டிக்காரி தானே? கொண்டு வாருங்கோ திருத்துவம்...'

மாலதி தமிழை உறுப்பமைய எழுதுவதில் முன்னேற்றம் காட்டுவது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. தினமும் சாப்பிட மறந்தாலும், அவளுக்குத் தமிழ் கற்பிப்பதற்கு அவர் மறப்பதே இல்லை. தமிழ் கற்பிக்கும் நேரத்தையே அவளுடன் கொஞ்சி மகிழும் நேரமாகவும் அவர் கருதினார்.

'இன்றைக்கு நீங்கள் பாரதி பாடல் ஒண்டு சொல்லித் தாறதாச் சொன்னீங்கள்...'

'ஓம். அப்பா மறக்கவில்லை...' என்று சொல்லிக் கொண்டே பாரதி பாடலை எடுத்துவரச் சென்றார். பாரதி பாடல்களிலே ஒன்றுதல் அவருடைய தலையாய பலவீனம். அது குறித்து அவருக்குப் பெருமையும்.


8

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 - 13)!திட்டமிடப்பட்ட வன்செயல் காரணமாகத்தான் வீடு எரியுண்டது என்கிற முடிவுக்குப் போலிஸார் வந்திருந்தனர். இருட்டடி போன்ற சம்பவங்களும் மறைவாக இயங்கும் ஒரு நிறவெறிக் குழுவினாலே நடப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகித்தனர். இந்த விஷயங்களின் விசாரணையிலே உதவுவதற்காக, வேக்டாலும் அஸ்பியோனும் ஒஸ்லோவிலிருந்து வரவழைக்கப் பட்டிருந்தனர்.

சேகரிக்கப்பட்டிருந்த தகவல்கள் போதுமானவையாக இல்லை. எங்கேயிருந்து துவங்குவது என்பதுகூடத் தெரிய வில்லை. அவர்களுக்குத் தரப்பட்டிருந்த வெள்ளைநிறப் பிரத்தியேக காரிலே வார்டோவை சுற்றி வந்தனர். வேக்டால் 'கெட்டிக்காரர்' என்று போலிஸ் வட்டாரத்தில் பெயர் பெற்றிருந்தார். நகரை வலம் வரும்பொழுது தற்செயலாக ஏதாவது தடயம் கிடைக்கலாம் என நம்பினார்.

காரை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு, உள்ளே அமர்ந்தவாறே, வானொலிச் செய்திகளைகேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, இவர்களைத் தாண்டி ஒரு கார் வேகமாகச் சென்றது. அதற்குள்ளிருந்த ஒலிபெருக்கி, பாட்டு ஒன்றினை உச்ச ஸ்தாயியில் ஒலித்தது. கார் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓடியது. நகருக்குள் அமுல்படுத்தப்பட்ட உச்ச வேகம் ஐம்பது கிலோமீட்டரே. அந்தக் காரை வழி மறித்து 'ஸ்பீடிங்'ற்காகத் தண்டம் அடிக்கலாம் என்று அஸ்பியோனுக்குத் தோன்றியது.

அவன் வெள்ளைக் காரைக் கிளப்பினான்.

'அஸ்பியோன்.'

'என்ன?'

'பொறு.'

'ஏன்?'

'இவங்களுடைய பாட்டும் போக்கும் வித்தியாசமானவை. வீணான சந்தேகங்களை ஏற்படுத்தாமல், இவர்களைக் கவனிக்கவேணும்...சரி, இப்ப காரை எடு...' என்றான் வேக்டால்.

'அவங்கள் வாலைப் பிடிக்கவா?'

'அவங்கள் இருக்கிற இடத்தை அறிய...'

'பாண்' என்று கெட்ட வார்த்தைகள் உதிர்ந்து முணு முணுவாறே, காரைக் கிளப்பி, ஓட்டினான்.

வேகமாக சென்ற கார், தரிப்பு நிலையில் நின்றது. அதில் வந்தவர்கள் நீல வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். வீட்டு எண்ணை வெக்டால் குறித்துக் கொண்டார். நிறுத்தாது, அதனைக் தாண்டி ஓட்டுமாறு பணித்தார்.

"என்ன செய்யிறதாய் உத்தேசம்?' என்று அஸ்பியோன் கேட்டான்.

'இவர்கள் என்ன கதைகிறார்கள் என்பதை ஒட்டுக் கேட்க வேண்டும். இவர்கள் கண்காணிப்புக்குரியவர்கள் என்று என் மனசு சொல்லுது...'

'டெலிபோனா?'

'இவங்கள் டெலிபோனில் கதைக்க மாட்டாங்கள். ஒருநாளைக்க இவங்கள் வீட்டுக்குள் நுழைய வேண்டியது தான்...'

'மைக்கிறோ போனா?'

'யோசிப்பம்.'

இரண்டு நாள்கள் தாமதித்துத்தான் தலைமை அதிகாரியிடமிருந்து அமைதி பெறமுடிந்தது. அன்று மாலை. வெள்ளைக்கார் நீல வீடு நோக்கிப் புறப்பட்டது. குடிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் பொருள்களை எடுத்துக் கொண்டார்கள். நீல வீட்டுக்கு மூன்று வீடுகள் தள்ளிக் காரை நிறுத்தினார்கள்.

'சிலவேளை நாளைக் காலை வரையிலும் காத்திருக்க நேருமோ தெரியாது...எஞ்சினை நிற்பாட்டு'என்றார் வேக்டால்.

மணித்தியாலங்கள் நகர்ந்தன. நித்திரை கொள்ளும் பைக்குள் புகுந்து காத்திருந்தனர். நள்ளிரவின் பின்னர் நீல வீட்டின் கதவு திறந்தது. மூவர் வெளியேறி வந்தார்கள். ஒருவன் இவர்களை வழியனுப்பி விட்டு, மீண்டும் வீட்டுக்குள் சென்றுவிட்டதாகத் தெரிந்தது. வீட்டிலே தங்கியவன் வீட்டின் சொந்தக்காரனாக இருக்கலாம் என வேக்டால் அனுமானித்தார்.

அஸ்பியோன் தூங்கி வழிந்தான்.

'என்ன நித்திரையா?'

'வராதா?...' என்று நீளமான கொட்டாவி ஒன்றை விட்டான்.

'முறை வைத்துக் கண்கானிப்போம். நீ நித்திரைகொள்...நான் பார்த்துக் கொள்ளுகிறேன்...' என்றார்.

அஸ்பியோன் தூங்கினான். வேக்டால் விழித்திருந்தார். இரவு நான்கு மணிவரை யாரும் வரவில்லை. அவருக்குக் கண்கள் கனத்தன. அஸ்பியோனை எழுப்பிவிட்டு, அவர் தூங்கத் துவங்கினார்.

வேக்டாலுக்கு முழிப்பு வந்தபொழுது மணி ஏழு. விழித்தவருக்கு அதிர்ச்சி. அஸ்பியோனும் தூங்கிக் கொண்டிருந்தான். அவர் கோபத்தில் கொதித்தார்.

'ஏய், அஸ்பியோன்' என எழுப்பினார். அவன் துடித்துப் பதைத்து எழுந்தான்.

'என்ன?'

'என்னவா? உன்னை விழித்திருக்கும்படி அல்லவா சொன்னனான்?'

'இரவு முழுவதும் காத்திருந்தது எல்லாம் வீண்.'

இருவரும் ஒருவரை ஒருவர் பாராது மௌனமாக இருந்தார்கள். வேக்டாலுக்கு என்ன சொல்வது என்பது புரியவில்லை. வெந்நீர் போத்தலிருந்து கோப்பியை ஊற்றிப் பருகத் துவங்கினார். இதனைப் பார்த்த அஸ்பியோனும், தன் கோப்பியை ஊற்றிப் பருகினான். அவனுக்குத் தான் செய்த தப்பு உறுத்தியது.

'சொறி. நான் விழித்துத்தான் இருந்தேன். ஆறு மணிக்குப் பிறகு என்னை அறியாமலேர கண்ணயர்ந்து போனேன்.'

'சரி...சரி...'

'இப்ப என்ன செய்யிறது?'

'ஒரு மணி வரையும் காத்திருப்போம்.'

'ஒரு மணி வரையுமா?'

'ஓம்...'

காத்திருந்தார்கள். அந்த நீண்ட காத்திருத்தல் இருவருக்குமே அலுப்பாக இருந்தது. பத்து மணியாகி விட்டது. சூரியன் வெளியே எறித்துக் கொண்டிருந்தது. காருக்குள் வெக்கையாக இருந்தது. தூக்கமின்மையால் விழிகள் கனத்தன. சூரிய ஒளி கண்களைக் கூசச் செய்தது. இருவரும் கறுப்புக் கண்ணாடிகளை அணிந்து கொண்டார்கள்.

மணி பத்துப் பத்து. நீல வீட்டின் கதவு திடீரெனத் திறந்தது. செல் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தான். இவர்கள் காத்திருப்பதைக் கவனிக்காமலே, அவன் காரில் ஏறிச் சென்றான். அவனை இருவரும் நன்றாக அவதானித்தனர். காரைக் கிளப்பி, சந்தியில் நிறுத்தச் செய்தார். அவன் வந்தால் 'வோக்கி டோக்கி'யில் தகவல் வருமாறு கூறி, வேக்டால் நீல வீட்டை நோக்கி நடைபோட்டார்.

ஐந்தாவது சாவியைப் போட்டுத் திருக 'கிளிக்' சத்தம் கேட்டது. வேக்டால் சுறுசுறுப்பானார். உள்ளே சென்று ஒவ்வொரு இடமாகப் பார்த்தார். கணினி, றையிட்டார், ரெலிபோன், பாக்ஸ் இப்படி ஏகப்பட்ட வசதிகள் உள்ளே இருந்தன. இந்த வசதிகள் இப்பொழுது அநேகமான வீடுகளிலே உள்ளவையே. ஒவ்வொரு அறையாகப் பார்த்து வந்தவர், ஓர் இடத்தில், தமிழர்களுக்கு எதிராகப் பிரசித்தமான நோட்டீஸ’ன் இரண்டு படிகள் இருப்பதைக் கண்டார். இரண்டு படிகள் மட்டுமே பெரிய சான்றாகாது. இருப்பினும், இந்த வீட்டுக்கும் தமிழர்களுக்கு எதிரான நடிவடிக்கைகளுக்கும் தொடர்பு உண்டு என்கிற முடிவுக்கு அவர் வந்தார்.

குளியல் அறையில், வோர்ஷ’ங் மெஷ’னுக்கு மேலே ஐந்து உருட்டுக் கட்டைகள் இருந்தன. பாவித்த உடைகள் போடும் பெட்டி ஒன்று மூலையில் இருந்தது. அதற்குள் முகமூடி போன்று குளிருக்குப் பாவிக்கும் உறைகள் இருந்தன. அதிக அவகாசம் எடுத்துக் கொள்ளலாகாது என்கிற அவசரத்தில், ஹோலில் இருந்த சோபாக்களுக்குக் கீழே இரண்டு மைக்ரோ போன்களைப் பொருத்தினார். பின்பு, படுக்கை அறையில் இருந்த பூச்சாடிக்குள் ஒன்றை வைத்தார். தமது வருகை எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்தார். அஸ்பியோனிடமிருந்து எவ்வித செய்தியும் வராததினால், நிம்மதியாக வெளியேறினார். கதவை இழுத்துச் சாத்த அது பூட்டிக் கொண்டது. நடந்து வீதிக்கு வரவும், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக எதிர்திசையில் செல்லின் கார் வந்து கொண்டிருந்தது. ஒரு கணம் திகைத்தவர், மறுகணமே சுதாரித்து, கோடிப் பக்கம் ஓடி மறைந்து கொண்டார். பின் செல் வீட்டிற்குள் செல்லவும், அவர் நழுவி, தங்களுடைய கார் நிறுத்தப்பட்ட இடத்துக்கு வந்துசேர்ந்தார்.

அன்று வெள்ளிக்கிழமை. செல் வீட்டில் இருந்தான். ஜோன் ஒரு எட்டு மணிபோல வந்து சேர்ந்தான். மற்றவர்களும் வருவார்கள் என்றே செல் எதிர்பார்த்திருந்தான். அவர்கள் வராதது ஏமாற்றமாக இருந்தது.

'என்ன ஜோன், மற்றவர்கள் எங்கே?'

'அவர்கள் மலைக்கு ரூர் போயிட்டாங்க.'

'இவங்கள் இப்படிச் செய்தால், எங்களுடைய பணி எப்பிடித் தீவிரமடையும்?'

'அவங்கள் போலிஸ”க்குப் பயப்படுறாங்களோ தெரியாது.'

'இப்படி விட்டு வைத்தால், அந்தப் பன்றிகளுக்குப் பயம் தெளிஞ்சு போகும்.'

'அதோட, இந்தத் தமிழர் கூட்டம் கூடுது போலவும் இருக்குது.'

'எது செய்தாலும் பன்றியளுக்கு உறைக்கிற மாதிரிக் தெரியேல்லை...'

'ஏதாவது கடுமையாச் செய்ய வேணும்.'

'அப்படி என்ன செய்யலாம்? வீடு எரிச்சது யார் என்று தெரியாது. ஆனால், எங்கள் 'குருப்'என்றுதான் சதேகிக்கிறாங்கள்...'

'ம்...ம்...' என்று இலேசாகச் சிரித்தான் ஜோன்.

'ஏன் சிரிக்கிறாய் ஜோன்?'

'ஒன்றுமில்லை.'

'நீ ஏதோ மழுப்புக்கிறாய்.'

'இல்லை.'

'இன்னும் இரண்டு மூன்று பேருக்கு அடி போட்டால் என்ன?'

'இனி அடிச்சால் சாகிறமாதிரி அடிக்கவேணும்...கால் கை முறியவேணும்.'

'நான் தயார். சுத்தித் திரிஞ்சால் யாராவது மாட்டுவினம்.'

வேக்டாலுக்கு மீண்டும் ஒரு அசம்பாவிதம் அந்த இடத்தில் நடப்பதில் விருப்பம் இல்லை. ஏற்கெனவே நடந்த வன்முறைத் தாக்குதலுக்கு இவர்களே காரணர் என்பதில் சந்தேகமேயில்லை. வீடெரிப்பைப் பற்றித்தான் சரியான விபரம் தெரியவில்லை. ஜோனுக்கு ஏதாவது தெரிந்திருக்கலாம். அவன் மறைக்கிறான் போலும். அவர்கள் போலிஸ் நிலையத்திற்குத் திரும்பி, அவர்களைக் கைது செய்வதற்கான அனுமதியைப் பெற்றார்கள்.

அவர்களைத் தேடிய பொழுது, அவர்களுடைய கார் ஒரு சந்திலே திரும்பிக் கொண்டிருந்தது. அவர்களைத் கண்டதுமே வேக்டால் நீல மின்னொளியோடு கூடிய 'அலாம்' சத்தத்தினைப் போட்டார். அவர்கள் காரை நிறுத்தாது. ஓட்டினார்கள். குப்பை கொட்டும் இடத்தைத் தாண்டியதும், இனிக் காரை ஓட்டமுடியாது என்பதைச் செல் உணர்ந்தான். காரை வீதியின் ஓரத்தில் நிறுத்தினான்.

வேக்டாலும்...அஸ்பியோனும் தமது காரை நிறுத்தி அவர்களை நோக்கிச் சென்றார்கள். வேக்டால் சாரதி பக்கமாக இருந்த கண்ணாடியைத் தட்டினான். செல்தான் காரின் கண்ணாடியைத் திறந்தான்.

'நாங்கள் போலிஸ். உங்கள் டிரைவிங் சைசன்ஸ், கார் ரெஜிஸ்ரேஷன் முதலிய 'டொக்குமெ'சைக் காட்டுங்கள்...'

எடுத்துக் கொடுத்தான். அவை சரியாகவே இருந்தன. காரின் பின் சீற்றில் உருட்டுக் கட்டைகளும், முகமூடிகளும் இருப்பதை வேக்டால் அவதானித்து விட்டார்.

'இரண்டு பேரும் காரால இறங்குறீங்களா?'

'ஏன்?'

'பிளீஸ், இறங்குங்க..'

மெதுவாக இறங்கினர்.

'கால்களை அகட்டி, தலையில கையைக் கட்டிக் கொண்டு நில்லுங்கள்.'

ஆட்சேபிக்காது, அவர்கள் கேட்ட வண்ணம் செய்தனர். வேக்டால் அவர்களைக் கவனமாகச் 'செக்'செய்தார். எந்த ஆயுதமும் இருக்கவில்லை.

'நாங்கள் உங்களைக் கைது செய்கிறோம்' என்று சொல்லிய வண்ணம் வேக்டால் அவர்களுடைய கைகளிலே விலங்கை மாட்டினார்.

'எதுக்காகக் கைது செய்கிறீர்கள்?' என்று ஜோன் வெடித்தான்.

'தமிழருக்கு எதிராக, சட்டத்துக்குப் புறம்பாக வன்முறையில் ஈடுபட்டதிற்காக.'

'உங்களிட்ட 'புரூப்'இருக்கா?'

'வாளை மூடு. இல்லாமல் வருவதற்கு நாங்கள் என்ன முட்டாள்களா?'

திங்கள் காலை. பதினொரு மணி இருக்கும். போலிஸ் வாகனங்கள் இரண்டு நீல வீட்டின் முன்பாக நின்றது. அவற்றிலிருந்து வேக்டால், அஸ்பியோன் மற்றும் இரண்டு போலிஸ்காரர்கள் இறங்கினார்கள். மீதமிருந்த உருட்டுக் கட்டைகளும், முகமூடிகளும் கைப்பற்றப்பட்டன. 'கோமோட்'டைக் கழற்றிப் பார்ந்தபொழுது, அதற்குள்ளிருந்து கைத்துப்பாக்கி ஒன்று கண்டு எடுக்கப்பட்டது. கணினியை போட்டுப் பார்த்தபொழுது, துண்டுப்பிரசுரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மூலம் இருந்தது. அத்துடன், நவநாஜிகள் பற்றிய பல விபரங்களும், ஒரு 'டாத்தா பாஷை' ஆவணமும் கிடைத்தன. அவற்றை எல்லாம், எடுத்துப் போலிஸ் வண்டிகளிலே ஏற்றினார்கள். வீட்டுக்குச் சீல் வைக்கப்பட்டது.

உள்ளூர்ப் பத்திரிகையிலும், வானொலியிலும் இந்தச் செய்திகள் வெளியாயின.

மலையிலிருந்து காறால்டும், அல்பிரெட்டும் வானொலி மூலம் செய்தியை அறிந்து கொண்டார்கள். செல்லும் ஜோனும் எவற்றைச் சொல்வாங்கள் என நினைத்து ஆரம்பத்திலே பயந்தார்கள். நகரத்திற்குப் போவதா? விடுவதா? என்று கூடத் தடுமாறினார்கள். பின்பு, துணிவை வரவழைத்துக் கொண்டு மலையிலிருந்து நகரத்துக்கு வந்தார்கள்.

தீபா தன் மகன் விகீனாவையும் கூட்டிக் கொண்டு கொழும்புக்குப் போகப்போவதாக ஒற்றைக் காலில் நிற்பதாக செல்லக்கண்ணன் வீடு தேடி வந்து தேவகுருவிடம் புலம்பி அழுதான்.

பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நல்ல முறையிலே நடைபெற்றது. தேவகுருவின் தூண்டுதலினால், தமிழ்ப் பெற்றோர்கள் பெருமளவில் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். 'நூர்மன் பிள்ளைகளின் மனோநிலையிலே, வீட்டுச் சூழலிருந்தே மாற்றங்களைக் கொண்டுவருதல் வேண்டும்' என்று நொஸ்க்குகள் பலரும் பேசினார்கள். தங்கள் பிள்ளைகளுடைய செயல்களுக்காக தாங்கள் வெட்கப்படுவதாகவும், இவ்வாறு துன்பம் அநுபவித்த பிள்ளைகளின் பெற்றோரிடம் தாங்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்பதாகவும் இரண்டு நொஸ்க் பெற்றோர் பேசியது நெஞ்சைத் தொடுவதாக இருந்தது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு 'பழைய குருடி கதவைத் திறவடி' என்கிற கதைப்போல, உள்ளிமணம் வீசுவதான கிண்டல்களும், துப்பும் சேட்டைகளும் தொடரலாயின. வகீனா மீண்டும் அவமதிக்கப்பட்டிருக்கிறாள். அதன் கொந்தளிப்புத்தான் தீபாவின் செயல் என்பதை அறிந்து கொண்டார்.

தாயகத்தின் மண்மீட்புப் போரின் போக்குகளை மிக நுண்ணியமாக அறிந்து வைப்பதிலே தேவகுரு காட்டும் தீவிரம் பலரும் அறியாதது. அதுபற்றி பகிரங்கமாகத் தமது எண்ணங்களை வெளிக்காட்டியதுமில்லை. நேற்றைய தவறுகளுக்காக, இன்று சிந்தப்படும் இரத்தமாகப் போரை அவர் விளங்கிக்கொண்டார். தற்கொடையாளராகத் தமது இன்றைகளைக் காவு கொடுத்துள்ள போராளிகளைப் பற்றி என்றுமே அவருக்கு உயர்வான அபிப்பிராயம். அதே சமயம், ஆட்சியாளரின் ஆதிபத்திய மமதைப் போக்குகளுக்காகத் தங்கள் இன்றைகளை இழந்து கொண்டிருக்கும் கிராமத்துச் சிங்கள வாலிபர்களின் அநியாயச் சாவுக்காகவும் அவர் மனம் வருந்தினார். தாயக மண் புனிதமானது. அதன் சுதந்திரம் புனிதமானது. வேறு வழியின்றி மண்மீட்புப் போரிலே தமிழ்ப் போராளிகள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், போரிலே தமது உயிர்களைப் பலியிடும் சிங்கள இளைஞர்களின் இலட்சியம் என்ன? தங்கள் வீட்டில் வாழ்பவர்களின் சோற்றுக்காகவா? அவர்கள் அநேகருக்கு எதற்காகப் போராடுகின்றோம் என்பதுகூடத் தெரியாது. சிங்கள இனத்தின் மண்கொள்ளை அரசியலை நியாயப்படுத்தும் அரசியல்வாதிகள், புத்திஜ“விகள், பரபரப்பு பத்திரிகையாளர், புத்தபிக்குகள் ஆகியோரைச் சிங்கள இளைஞர்கள் பலவந்தமாக இழத்துவந்து போர்முனையில் நிறுத்தவேண்டும். பட்டயம் எடுப்பது நியாயம் என்று நினைப்பவர்கள், பட்டயத்தை தூக்கவேண்டும். அந்தப் பட்டயத்தினாலே சாகவேண்டும். அது நியாயம். ஆனால்..இதெல்லாம் மகா கொடுமை. இந்த எண்ணங்கள் அவர் ஏற்றுள்ள அகிம்ஸா தர்மத்துக்கு மாறானவையா? இது பற்றி அவர் ஆழ்ந்த உள்மனத் தியானங்களிலே ஈடுபட்டதும் உண்டு. அப்பொழுதெல்லாம் மகாத்மாவின் வாக்கியம் ஒன்று அவர் மனசிலே எதிரொலிப்பதுண்டு. 'மிருகங்களைக் கொல்லாமை' என்னும் கொள்கையை என்னால் பரிபூரணமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இம்ஸை செய்யும் மிருகங்களைப் பெருகும்படி பார்த்துக் கொண்டிருப்பது தவறென்றே கருதுகின்றேன். மனிதருக்கே தீங்கு செய்யும் மிருகங்களைக் கொல்வது மன்னிக்க தகுந்த விடயம்; கடமையாகவும் ஆகிவிடுகின்றது.' அடுத்தது மிருகங்களுக்கான வரவிலக்கணம். இது முக்கியம். பகுத்தறிவு இல்லாதவை மிருகங்கள். அன்பு நெறியைப் புரிந்து கொள்ள முடியாதவை மிருகங்கள். மிருகங்கள் தன் கூட்டத்தை அழிப்பதில்லை. ஆனால், சிலரின் மேட்டிமைக்காகவும், அதிகார சுபீட்சத்திற்காகவும் தன் கூட்டத்தைச் சேர்ந்த உயிர்களையே பலி கொடுக்கும் அரசியல்வாதிகள் எத்தகைய கொடிய மிருகங்கள்?

நாளையின் சுபீட்சத்தினை வென்றெடுப்பதற்கு உண்மையும் அன்பும் உதவவேண்டும். நாளையின் சுபீட்சங்களைப் பற்றி அக்கறைகளைத் துறந்து, இன்றைய வளங்களுக்காகவும், வசதிகளுக்காகவும், பெருமைகளுக்காகவும் வாழ்தல் எவ்வளவு கொடுமை? இன்றைய குழந்தைகளே நாளைய சம்பத்துக்கள். நாளை அவர்களுடையதே! அவர்களைத் தக்கவர்களாக வளர்த் தெடுக்கும் கடமைகளிலிருந்து ஒதுங்குதல் ஓர் இனத்துக்கு ஏற்படக் கூடிய சாபக்கேடு. இந்தக் கடமை பற்றிய பிரக்ஞையை வார்டோவில் வாழும் பெற்றோர்கள் மத்தியில் --குறிப்பாகத் தமிழ் பெற்றோர்கள் மத்தியில் - ஏற்படுத்துவதும் தமது கடமை என்பதைத் தேவகுரு அண்மைக் காலங்களிலே உணர்ந்திருந்தார். விகீனாவின் நிகழ்ச்சி அவருடைய இந்த எண்ணங்களைத் தீவிரப்படுத்தியிருந்தது. தீபாவின் கொந்தளிப்பு இந்தப் பிரச்சினையின் முனைப்பினை அடையாளமிடுவதாக அவர் விளங்கிக் கொண்டார்.

அவர் நன்கு சிந்தித்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை, தமிழ்ப் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். தமிழ் பெற்றோருடனான இந்த ஒன்று கூடலின் வெற்றிக்காக கூட்டமைப்புத் தலைவர் சற்குணம், இளைஞன் ரகு, செல்லக்கண்ணன் ஆகியோர் களம் இறங்கி உழைத்தார்கள். எனவே, அந்தக் கூட்டத்துக்கு பிள்ளைகளின் கல்விமுன்னேற்றத்திலே அக்கறை பூண்டிருந்த பெற்றோர்கள் பலரும் வந்திருந்தார்கள்.

'இது ஒரு பொதுக்கூட்டம் அல்ல. பிரசங்கங்களும், போதனைகளும் கிடையாது. எங்களுடைய பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் பற்றிய கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. தங்களுடைய எதிர்காலம் பற்றிச் சரியாக முடிவுகள் எடுக்க முடியாத பிள்ளைகளுக்காகத் தீர்மானங்கள் எடுக்க வேண்டிய கடமையும் பெற்றோர்களுக்கு உண்டு. சிலர் தனிப்பட்ட முறையில் சில முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். எங்கள் முன்பாக உள்ள வழிகளை அறிந்து கொள்வற்கு ஆரோக்கியமான கருத்துப் பரிமாறல்கள் தேவை. இதனை இந்த ஒன்றுகூடல் சாத்தியப்படுத்தும் என்று நம்புகின்றோம். மற்றவர்களுடைய அநுபவங்களிலிருந்து நாங்கள் நிறையக் கற்றுக் கொள்ளலாம். அத்தகைய அநுபவங்களை ஒளிவு மறைவின்றி இங்கு கூறலாம். அவற்றின் நன்மை தீமைகளை அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்...' என்று தேவகுரு துவக்கி வைத்தார்.

மெதுமெதுவாகக் கருத்துகள் வரலாயின. அவற்றின் சாரமாகப் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரலாயின.

பொருளீட்டலே கதியென்று, பிள்ளைகளுடைய ஆரம்பக் கல்வியை முறையாகத் திட்டமிடவில்லை என்கிற குறைபாடு பெற்றோர்கள் பலரை உறுத்துகின்றது. அவர்களுடைய எதிர்காலத்தினைத் திட்டமிட்டு நெறிமுறைப்படுத்துவதில் எல்லாப் பெற்றோரும் ஆவலாக இருக்கிறார்கள்.

தெரிந்த ஒரு சிலர் -- அதுவும் ஓஸ்லோவில் இருப்பவர்கள் - தங்கள் பிள்ளைகளை இங்கிலாந்துக்கு அனுப்பி படிப்பிக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு மிக நெருங்கிய உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள். அந்த உறவு வசதிபிரதான காரணம். 'இங்கிலாந்தில் படித்தால், ஆங்கிலத்தில் படிக்கலாம். அந்தப் படிப்பின் மூலம் வருங்காலத்தில் பிள்ளைகளை அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளிலே வேலைவாய்ப்புகள் பெற்றுச் செல்வதற்கு வாய்ப்பு உண்டு. அத்துடன், இலங்கையில் சமாதான நிலைமை உருவானாலும், மீண்டும் ஊருக்குத் திரும்பி நல்ல உத்தியோகங்கள் பெற்று வாழ்வதற்கான வாய்ப்பையும் இழக்கமாட்டார்கள். பயக்காரச் சிங்கள அரசியல்வாதிகளுடைய பிள்ளைகளும் இங்கிலாந்தில் படிக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக நமது பிள்ளைகள் தகுதி பெற்றவர்களாக விளங்குவார்கள்.' இத்தகைய எண்ணங்களே இங்கிலாந்துப் படிப்புக்கு ஊக்கிகளாக அமைகின்றன. பழைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே முகிழ்ந்த எண்ணங்களை அவர்கள் துறப்பதாக இல்லை. இங்கிலாந்தில் படிக்கும் சிங்களப் பிள்ளைகள் சிங்களவர்கள் என்பதையும், அவர்கள் தாய்மொழி சிங்களம் என்பதினால் அவர்களின் நிலை வேறு என்பதையும் அவர்கள் வசதிக்காக மறந்துவிட்டார்கள்.

மேலும், உலகின் வேலை வாய்ப்புச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப இங்கிலாந்தின் கல்வி அமைப்பு பெருமளவில் மாற்றமடையவில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் குறிவைக்கும் நாடுகளின் Migration சட்டங்கள் சடுதிசடுதியாக மாற்றப்படுகின்றன. எதிரானவையாகக் கடுமையாக்கப்படுகின்றன. இன்னும் எத்தனையோ மாற்றங்கள் நிகழுதல் சாத்தியம் என்கிற முன்யோசனையும் இல்லை. நேற்றைகளிலே வாழ்ந்து கொண்டு, நாளைகளுக்கான வாழ்க்கை திட்டமிடப்படுகின்றது. இந்த ஏற்பாடுகளின் அவதியிலே குழந்தைகளின் தமிழ்த்துவ அடையாளங்கள் பற்றிய அக்கறைகள் துறக்கப்படுகின்றன என்பதும் இனங்காணப்பட்டது. முதலீட்டுக்குத் தக்க பிரதிபலன் பற்றிய ஐயப்பாடும் உண்டு.

இந்தியாவுக்கு, தமிழ் நாட்டுக்கு அனுப்பி, பிள்ளைகளுடைய படிப்பு முன்னேற்றம் சாதிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளார்கள். வார்டோவில் வாழ்ந்த குஞ்சன் குடும்பம் போன்றவையும் இத்தகைய முயற்சியை மேற்கொண்டன. பிள்ளைகளுக்குத் தமிழ்ச் சூழலிலே கல்வி புகட்டப்படுவதினால், பிள்ளைகளுடைய தமிழ் அடையாளங்கள் பேணப்படும் என்பது இத்தகைய ஆசையின் அடித்தளமாக அமைகிறது. இந்த ஏற்பாட்டிலே பல நடைமுறைச் சிக்கல்கள் உண்டு என்பது வெளிச்சத்துக்கு வந்தன. அகதிகளை, மனிதநேயமற்ற முறையிலே மிகக் கேவலமாக நடத்துவதில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. தீபத்திய-வங்காளிய அகதிகளுக்கு அளிக்கப்படும் வசதிகள்கூட தமிழ் அகதிகளுக்கு மறுக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டிலே கல்வி பயிலும் மோகம் உள்நோக்கத்தை மறைக்கவும் உதவும். தமிழ்நாட்டில் ஆங்கில மொழி மூலம் கல்வி பெறலாம், என்கிற உண்மை அழுத்தி உச்சரிக்கப்படுவதில்லை.

'ஈழத் தமிழர்களுக்கு அநுதாபம்'என்கிற நிலப்பாடு ஒரு காலத்திலே வாக்குகள் பெறுவதற்கான கவர்ச்சிக் கோஷமாக இருந்தது. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு இயக்கத்தை முதன்மைப் படுத்த முந்திநின்றன. அந்த நிலமை மாறிவிட்டது. ஈழத்தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்து செல்வதிலே எம்.ஜி.ஆர். போன்ற தலைவர் உறுதியான நிலைப்பாட்டினை எடுத்தார். அன்று தமிழ் மானப் பாதுக்காப்பிலே எழுச்சியுடன் செயற்பட்ட பிற்தொரு தலைமைத்துவம், இன்று சுருதி இறங்கி, 'புலிப் பூச்சாண்டி' காட்டியே பதவியைத் தக்க வைத்துக் கொள்ளுகின்தோ, என்கிற சகதி நிலை உருவாகியுள்ளது. பிராமண நலம் பேணும் பத்திரிகை உலகமும், 'றோ'வின் நடவடிக்கைகளும் ஈ‘த் தமிழருக்கெதிரான மனோநிலைகளை வளர்த்தெடுப்பதிலே தீவிரம் காட்டுகின்றன. ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரும், தமிழ்நாடு மரணவீட்டின் கோலங்களை அப்படியே பேணுவதிலே அரசியல் ஆதாயம் சம்பாதிக்கலாம் என்று கருதுகின்றது. இதனால், அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், போலிஸ் பகுதியாரும், மற்றும் நிர்வாகக் கூறுகளும் ஈழத் தமிழர்களை 'லஞ்சம் கறக்கும்' காமதேனுக்களாகவே கருதுகின்றது. பல்கலைக்கழக மட்டத்திலே படிப்பினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஈழ மாணவர் செலுத்தவேண்டிய லஞ்சம் பிரமிப்பினை ஊட்டும். இத்தகைய செலவுகளுக்கும் மனக் காயங்களுக்கும் மத்தியிலே பெறப்படும் பட்டங்கள் அவர்களுடைய வசதியான நாளைக்கான 'பாஸ்போட்' டாக அமையப் போவதும் இல்லை. விசா கெடுபிடியினால் குஞ்சன் மீண்டும் நோர்வே திரும்ப...இத்தனைக்கும் மேலாக நடுவயசின் குடும்ப வாழ்க்கையின் வசதிகளையும் ஆரோக்கியங்களையும் முற்று முழுக்கத் துறக்க வேண்டி இருக்கின்றது. இந்த மானிட இழப்புகளை ரூபா, சதங்களிலே மதிப்பிடுதல் மகா கடினம்.

இங்கிலாந்து - தமிழ்நாடு ஆகியவற்றின் கஷ்டங்களைப் பார்க்கும்பொழுது, கொழும்புக்குத் திரும்பி, அங்கிருந்து பிள்ளைகளைப் படிப்பிக்கலாம் போலவும் தோன்றுகின்றது. 'சிங்கள ஆமி முன்னம் போல இல்லை. நாலு ராணுவ வீரர்கள் செத்தால், நாற்பது பொதுமக்களைக் கொல்ல வேண்டும் என்று மதம் பிடித்து அலையும் போக்கு இப்ப இல்லை. எத்தனையோ தமிழர்கள் கொழும்பில் வைத்துத் தானே தங்கள் பிள்ளைகளைப் படிப்பிக்கினம்' என்கிற சமாதானத்துக்கும் பல பெற்றோர்கள் வருகிறார்கள். தாங்கள் அநுபவித்த அனைத்துத் துன்பங்களையும், கனவாய்ப் பழங்கதையாய் நினைத்து மறக்கவும் தயாராக இருக்கிறார்கள். இத்தகைய செயல்களாலே, 'தமிழர்கள் அரசியல் அகதிகளல்லர், பொருளாதார அகதிகளே'என்கிற வசையை ஈழத்தமிழர் இனத்துக்கு ஏற்படுத்தும் இழிநிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள் என்பதைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பதாக இல்லை. எதையெல்லாம் ஏற்க மறுத்து வெளிநாடுகளுக்கு ஓடினோமோ, அந்தக் கொடுமைகளை அநுபவிக்கும் சந்தர்ப்பத்தையும் நிர்ப்பந்தத்தையும் பிள்ளைகளுக்கு ஏற்படுத்துகின்றோம் என்பதை இவர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள். வளைந்து கொடுக்கும் இச்செயலால் ஏனைய நாடுகளிலேயும் இரண்டாந் தரப் பிரஜைகளாக, சர்வதேசக் குஷ்டரோகிளாக ஈழத்தமிழ் இனம் கணிக்கப்பட ஏதுவாகிறது என்கிற சொரணைகூடச் சிலருக்கு இல்லை.

'வந்தாரை வாழவைத்த தமிழ்நாடு' என்று சினிமா வசனம் பேசிய தமிழ்த் தலைவர்களுடைய ஆட்சியிலே, மருந்து வாங்கிச் சேமிப்பபவர்கள்கூட 'புலிச் செயல்' 'சதிச் செயல்' என்று உதைத்துத் துன்புறுத்தப்படுகிறார்கள். இதிலும் பார்க்க சிங்களவனிடம் இரண்டாந்தரப் பிரஜை எனச் சரணாகதியடைந்து வாழ்வது கேவலமல்ல என்கிற மனநிலைக்கு சில பெற்றோர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

நோர்வே 'பாஸ்போட்' பெற்றிருக்கும் ஈழத் தமிழர்களிலே பலர், தங்களை நூர்மனாகக் கருதிக்கொள்ளும் பக்குவத்தை பெறவில்லை. சட்டப்படி நூர்மமானவர்களும் மனசளவில் தமிழர்களாகவே வாழ்கிறார்கள். மனசளவில் தமிழர்களாக வாழவேண்டும். அது தப்பில்லை. ஆனால், நூர்மன் குடியுரிமையை அவர்கள் தக்க பரிமாணத்திலே பார்ப்பதற்கு அஞ்சுகிறார்கள். தத்தெடுத்துள்ள புதியநாடு என்கிற பாசமும், பிரமிப்பும் பெரும்பாலும் இல்லை. 'தங்கும் மடத்தில் இருப்பதற்கான லைசென்ஸ்' என்கிற ஒரு மாயையிலிருந்து அவர்களாலே விடுதலை பெற முடியவில்லை.

சுதந்திர ஈழத் தாயகம் ஒன்று கிடைத்தால், அவர்களிலே பெரும்பாலானோர் ஓடோடிச் சென்று, கூழோ கஞ்சியோ குடித்தேனும் மண்ணின் உறவுகளுடன் பிணைந்து வாழ்வதிலே நாட்டமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய ஓர் ஏக்கத்தினை நெஞ்சிலே சுமந்து திரியும் அவர்கள், தமது பிள்ளைகள் தமிழ் மரபையும் தனித்துவத்தையும் இனங்கண்டு பேணிப் பாதுகாத்து வாழவேண்டும் என்பதை மறந்து விட்டார்கள் என்கிற பாரிய உண்மைதான் இறுதியிலே மிஞ்சியுள்ளது என்கிற கருத்தினைப் பெற்றோர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

ஒரு சிலர், புதிய வசதிகளிலே வசமிழந்து, பிச்சைக்காரர் நாட்டுக்குத் (தாயக மண்ணுக்கு இந்த லும்பன் தமிழர் வைத்துள்ள செல்லப்பெயர்!) திரும்புவதில்லை என்று பேசுவதில் புளகாங்கிதம் அடைகிறார்கள் என்பது வேறுவிடயம்.

கலந்துரையாடலின் முடிவிலே, கலந்து கொண்ட பெற்றோருக்கு நன்றி கூறிய தேவகுரு அதனைத் தொடர்ந்து வருமாறு அறிவித்தா‘:

'அடுத்த நூற்றாண்டிலோ, அன்றேல் அதற்கு அடுத்து நூற்றண்டிலோ, ஈழத் தமிழர்களுக்குக் கௌரவத்துடன் வாழும் ஒரு நிலப்பரப்பு--நாடு--கிடைக்கும் என்கிற நம்பிக்கையைச் சுமந்து வாழ்கிறோம். உலகில், தங்களுடைய இனத்தின் தனித்துவ அடையாளமாகத் தங்கள் மொழியை மட்டுமே பிரகடனப்படுத்தியுள்ள பெருமை நம்முடையது. தமிழ் தொன்மையான மொழி மட்டுமல்ல, அது சர்வதேச மொழியும். அதன் மீட்புக்கும், உயர்ச்சிக்கும், ஆட்சிக்கும் போராடுவார்கள் மட்டுமல்ல, சிலுவை சுமப்பவர்களும் ஈழத் தமிழர்களே! ஆனால், தமிழின் தனித்துவ அடையாளங்களை நாளைய சந்ததியார் மத்தியிலும் வளர்த்தெடுத்தல், தமது பிள்ளைகளின் கல்விப் பணியிலே தலையாய இடம் வகிக்கிறது என்பதை மறத்தலோ, துறத்தலோ ஆகாது, எனவே, ஈழத்தமிழன் ஒவ்வொருவனுடைய வீட்டிலும், அவன் வடதுருவத்தின் நாடுகளில் வாழ்ந்தால் என்ன, தென்துருவ நாடுகளில் வாழ்ந்தாலென்ன, சஹராப் பாலைவனத்தில் வாழ்ந்தாலென்ன, தமிழ் அவனுடைய வீட்டு மொழியாகவும், ஜ“வித சுவாசத்துக்கு ஏற்ற மொழியாகவும், வாழையடி வாழையாக வாழச் செய்வதை நமது தவமாகவும், வாழ்க்கையின் தலையாய இலட்சியமாகவும் கொண்டு வாழ்தல் வேண்டும். யூத இனம், நாடற்ற இனமாக, இரண்டாயிரம் ஆண்டுகளாக நாடுக்கு நாடு அவமதிப்புகளைச் சுமந்து சென்றது. அவர்கள் தனிநாடு கண்டதுடன், தமது தொன்மை மொழியின் மீளுயிர்ப்பினையும் சாதித்துவிட்டார்கள். சமரசம் செய்து கொள்ளாத நம்பிக்கை! இதுதான் தேவை. நான் என் மகள் மாலதிக்குத் தமிழ் கற்பிக்கின்றேன். அவள் வயதொத்த பிள்ளைகள் அனைவருக்கும் ஞாயிறு தோறும் தமிழ் கற்பிக்க ஆயத்தமாக இருக்கின்றேன். இது ஓர் ஆரம்பம்தான். விருந்துக் கேளிக்கைகள்-வீடியோ படங்கள் ஆகியனவற்றிலும் பார்க்கப் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தல் நமது கடமை என்பதை நாம் உணரவேண்டும். வீட்டிலே ஒரு மணிநேரம், ஒவ்வொரு குடும்பமும் நமது பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பதை தமது கடமையாக்கிக் கொள்ளவேண்டும். இது தெய்வாராதனைகளிலே செலவு செய்யும் நேரத்திலும் பார்க்கப் புனிதமானது என்று நான் கருதுகின்றேன்.

'தமிழ்க் கல்வி இயக்கம் ஊர் தோறும், நாடு தோறும் செழித்தல் வேண்டும். பரீட்சார்த்தமாக நான் துவங்கும் இந்தத் தமிழ்ப் பாடசாலை, காலப்போக்கிலே வளர்ந்து நற்பயன் தருதல் வேண்டும் என நான் உங்கள் சார்பாகவும் பிராத்திக்கின்றேன்.'

மனக்காயங்களுடன் சங்கடப்படும் சிறாருக்குத் தமிழ் உணர்வைப் புகட்டும் ஒளடதத்தினைப் பரீட்சித்துப் பார்ப்பதிலே பெற்றோர்கள் ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள்.

'காறால்ட், என்ன செய்யலாம்?'

மலையிலிருந்து நகரத்துக்கு வந்த பின்னர், இதுதான் அவர்கள் கவலையாக இருந்தது.

'இனி ஏதும் செய்ய ஏலாது போல இருக்குதே...' என்று காறால்ட் கவலைப்பட்டான்.

'இனி நாங்கள் இரண்டு பேரும், அடிக்கிற விளையாட்டைச் செய்யேலாது. நோட்டீஸ் வெளியிடுற வசதியும் இல்லை.'

'அப்ப என்ன செய்யலாம்.'

'நாளைக்கு வாட்சோ போய்வருவம்.'

'அங்கே போய்?'

'பெயின்ற் ஸ்பிறே வாங்கி வருவம்.'

'ஏன் இங்கேயே வாங்கலாமே?'

'முட்டாள்.'

'என்ன?'

'இங்கே வாங்கினால், போலிஸ் உடனேயே விசாரிச்சுக் கண்டு போடுவாங்கள்.'

'இங்கே வாங்கிறதிலும் பார்க்க அங்கே வாங்கிறது றிஸ்க் குறைவு என்று சொல்லுகிறாய். நீ சொல்லுறதும். சரியே.'

அடுத்த நாளே அல்பிரேட் வாட்சோ சென்று பெயிற் ஸ்பிரேகளுடன் திரும்பினான்.

இப்பொழுது கோடை காலம். இரவின் பெரும் பகுதியும் சூரிய வெளிச்சம் பெற்றிருக்கும். எனவே, இருளின் பாதுகாப்பினைக் காத்திருந்து தேட வேண்டியதாக இருந்தது.

நிறவெறியாளர் இருவர் கைது செய்யப்பட்டதினால், தமிழர்கள் ஒரு வகைப் பாதுகாப்பான உணர்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.

இரவு மூன்று மணிபோல, அல்பிரேட்டுக்கும் காறால்டுக்கும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது.

தமிழர்களுக்குச் சொந்தமான, புதிதாகத் தோன்றிய கார்கள் இரண்டினைத் தேர்ந்தெடுத்து, இருவரும் தமது கை வண்ணத்தைக் காட்டினார்கள். கை ரேகைகளோ, மற்றும் ஏதாவது 'க்ளூ'வோ கிடைக்காதவாறு மிகவும் சாமர்த்தியமாகச் செயற்பட்டார்கள்.

ஒரு காரிலே பெரிசாகப் பன்றி ஒன்று வரையப்பட்டு, 'கறுப்புப் பன்றியே நாட்டை விட்டு வெளியேறு!' என்கிற வாசகம் ஸ்பிரே செய்யப்பட்டது. மற்றக் காரிலே நாய் ஒன்று வரையப்பட்டு? 'பிச்சைக்கார நாயே, உனக்கு கோஷல் பணம் வேணுமா?' என்ற வாசகம் இடம் பெற்றது.

இந்தச் செயல் தமிழர்களுக்கு மிகுந்த ஆத்திரத்தினை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தார்கள். அத்துடன், ஜோன் மீதும் செல்மீதும் குற்றம் சுமத்தும் போலிஸாரின் நம்பிக்கைகளும் சிதறும் என மிகவும் நம்பினார்கள்.

அவர்களுடைய எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

அடுத்த நாளே அந்த இரண்டு கார்களும் காட்சிப் பொருள்களாயின.

வேக்டாலுக்கும் அஸ்பியோனுக்கும் மீண்டும் தலையிடி கூடியது. ஏற்கனவே பிடிப்பட்டவர்களிடமிருந்து எந்தத் தகவல்களையும் பெறமுடியவில்லை. அவர்கள் மிகவும் அசங்காதவர்களாக இருந்தார்கள். இப்பொழுது புதிய பிரச்சினை, புதிய கோணத்திலிருந்து, புதுக்கோஷ்டியிடமிருந்து புறப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய பிரச்சினைக்குக் கைதாகாமல் இருக்குக்கூடிய ஜோன், செல் ஆகியோரின் கூட்டாளிகளே காரணராய் இருக்கலாம் என்று வேக்டால் நம்பினார். தமது சந்தேகத்தினை வெளியே சொல்லாது, கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு புதிய வழக்கொன்றினைப் பதிவு செய்தார்.


9

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 - 13)!தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் பிரமசாரிகளின் வதிவிடமாகக் 'கீபிள்'கள் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் உண்டு. இதனால், அவர்களுடைய பிரேத்தியேகமும் தனிப்பட்ட சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டன. ஆனால், இவர்கள் ஒரு பொதுவான சமையற் கூடத்தையே பயன்படுத்த வேண்டியிருந்தது. அந்தக் காலத்திலே யாழ்ப்பாணத்து பிரமச்சாரிய 'கிளாக்கர்கள்' கொழும்பிலே நடத்திய 'சமறிகள்'போல இவர்கள் சமையலுக்கான செலாவினங்களை பங்கிட்டுக் கொண்டார்கள். இத்தகைய 'சமறி' வாழ்க்கையினால், தனித்தனி அறைகளிலே வாழ்ந்த இளைஞர்கள் மத்தியிலே, கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவதற்கு வசதியாகவும் இருந்தது. தமிழ் நாட்டில் இருந்தும், இலங்கையிலிருந்தும் பத்திரிகைகள் தருவிக்கப்பட்டன. பொழுதுபோக்கிற்குத் தமிழ் வீடியோக்களும் - பெரும்பாலும் தமிழ்ச் சினிமா சம்பந்தமான வீடியோக்களும் - கிடைத்தன. இதனால், அவர்களுக்கிடையில் ஒரு சமுதாய வாழ்க்கை அமைவது சாத்தியமாயிற்று.

விக்னேஸ் தாயத்திலிருந்து மனைவி வருவதற்காகக் காத்திருந்தான். அர்ஜுன், அமுதன், ரகு ஆகிய மூவரும் இளைஞர்கள். இன்னமும் அவர்கள் கல்யாணத்தைப் பற்றி யோசிக்காதவர்கள். தாயக மண்ணிலே வாழும் அக்கா தங்கைகளின் விடிவுக்காகச் செக்குமாடுகளாக உழைப்பவர்களாகவும் இருக்கலாம். தனிப்பட்ட பிரச்சினைகளை 'கீபி'ளில் அவர்கள் கூடுமான முறையிலே தவிர்த்துக் கொள்ளும் நாகரிகத்தினையே பயின்றார்கள்.

அண்மையில், டிஸ்கோ ஒன்றுக்கு இளைஞர்கள் சிலர் சென்றிருக்கிறார்கள். அதிலே வெள்ளைத் தோலே உந்நதம் என்று நினைக்கும் நொஸ்குகள் சிலருக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் நிகழ்ந்திருக்கிறது. மது போதையிலிருந்த நொஸ்க்கன் ஒருவன், தமிழர்களை மிகவும் இழிவாகத் தூஷண வார்த்தைகளினாலே திட்டியிருக்கிறான். தாங்க முடியாத அவமானத்திலே கொதித்த தமிழ் இளைஞர்கள், அவனைத் தாக்கியிருக்கிறார்கள். மேற்கொண்டு விவகாரம் பூதாகாரமாவதற்கிடையில், கீபிளுக்குத் திரும்பிவிட்டார்கள். இவர்கள் சற்றும் எதிர்பார்க்காத சடுதியில், நொஸ்குகள் சிலர் ஒன்று கூடிக் கீபிளுக்குப் படையெடுத்திருக்காறர்கள். உள்ளே வந்த நொஸ்க்குகளுடன் அர்ஜுன் சமாதான முறையிலே நியாயம் பேச முன் வந்திருக்கிறான். நியாத்தினைச் செவியில் வாங்கிக் கொள்ள மறுத்த நொஸ்க்குகள் அர்ஜுனைத் தள்ளி அடிக்க முற்பட்டார்கள். அந்தத் தாக்குதலைத் தடுத்து வெளியே பார்த்தால், கீபிளைச் சுற்றி வேறு நொஸ்குகளும் சுற்றி வளைத்துத் திரண்டிருப்பது தெரிந்தது. அமுதனும், விக்னேஸ”ம் புத்தி சாதுர்யத்துடன் செயற்பட்டிருக்கிறார்கள். சமையல் அறையிலே கிடைத்த மிளகாய்ப் பொடியை எடுத்து சூழ நின்று நொஸ்குகள் முகங்களிலே விசிறியடித்திருக்கிறார்கள். அத்துடன், சமையல் அறையில் கிடந்த கத்திகள் போன்ற ஆயுதங்களையும் கைகளிலே எடுத்துக் கொண்டார்கள். முறுகி எழுந்த போர்முனைப்பினை, மிளகாய்ப் பொடியின் உக்கிரம் தணித்தது. நொஸ்குகள் பின்வாங்கி விட்டார்கள்.

இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர்தான், அல்பிரேட்டும் காறால்டும் கார்கள் மீது எழுதிய சம்பவம் நிகழ்ந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் இடையில் முடிச்சுப் போட்டுச் தமிழர்கள் சிலர் பேசியது இளைஞர்களை ஆத்திரமடையச் செய்தது.

இன்னொரு நிகழ்ச்சியும் வார்டோவில் வாழும் தமிழர்களை நிலைகுலையச் செய்தது. ஜோன்-செல் ஆகிய இருவர் மீதும் தொடரப்பட்ட வழக்கு விசாரனைக்கு வந்தது. வேக்டால் அவர்கள் நவநாஜிகள் என்பதைப் பெரிதுபடுத்திக் காட்ட முயன்றார். வீடெரித்த குற்றம் நிரூபணமாகவில்லை. விநாயகம் பிள்ளையை அவர்களே அடித்தார்கள் என்பது சந்தர்ப்பச் சாட்சியங்களினால் நிரூபிக்கப்பட்டது. அந்தக் குற்றத்திற்கு அவர்கள் இருவருக்கும் தலா எட்டு மாதச் சிறைவாசம் எனத் தீர்ப்பாயிற்று. இந்தத் தண்டனைய விரும்பிய காலத்தில் அவர்கள் அநுபவிக்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்தத் தீர்ப்பினை நவநாஜிகளுக்குச் சார்பான தீர்பாகவே தமிழர்கள் கருதுவதற்குப் போதிய காரணங்கள் இருந்தன. போலிஸாரின் தீவிர தலையீடுகூடத் தமக்குப் போதிய பாதுகாப்புத் தரப்போவதில்லை எனத் தமிழர்கள் மனம் புழுங்கினார்கள்.

இந்நிலையிலேதான் சற்குணர் தமிழர் கூட்டமைப்புக் கூட்டம் ஒன்று சனிக்கிழமை நடக்க இருப்பதாகவும், இந்தக் கூட்டத்திற்கு அவசியம் வரும்படியும் எல்லோரையும் அழைத்திருந்தார். நோட்டீஸ் அனுப்பியிருந்தது மட்டுமல்லாமல், தொலைபேசியிலும் கூட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருந்தார். 'தேவகுரு அண்ணர்' பேசுவார் என்று சற்குணம் அழுத்திக் கூறியது இளைஞர்களுக்கு எரிச்சலை ஊட்டியது.

தமிழர் கூட்டமைப்புச் கூட்டம், அன்றிரவு, அந்தக் கீபிளில் பாடுபொருளாகியது!

'தேவகுரு அண்ணரை எங்கட சனம் கனபேர் பெரிய மனிஷராக்கிப் போட்டினம். இது ஒரு வில்லங்கமான நிலை' என்று புறுபுறுத்தான் அர்ஜுன்

'அர்ஜுன், நீ புறுபுறுக்கிறது நியாயம் இல்லை. அவர் தன்ர ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை...'என்றான் ரகு.

'நல்லவனுக்கு விஷர் வாறதில்லையே? அவர் எல்லாரையும் விஷராக்கிக் கொண்டிருக்கிறார். இப்ப வந்து அவர் காந்தியப் பற்றிப் பேசச் சனங்கள் வாயைப் பிளந்து கொண்டிருக்குதுகள்...'என்றான் அமுதன்.

'காந்தி பிறந்த தேசத்தில பிறந்த, சமாதானத் தூதர்கள் என்று சொல்லி வந்த, ரஜ“வ் காந்தின் ஜவான்கள் செய்த அட்டூழியங்கள் இப்பவும் இரத்தம் கொதிக்கச் செய்யுது...இருபாலையிலை மச்சான் நாலு பெண்பிள்ளைகள் மூன்று நாள் கோயிலுக்க பூட்டி வைச்சு மாறிமாறிக் கற்பழிச்சிருக்கிறாங்கள்.'

'காந்தி வாழ்க!' என்று சொல்லிக் கொண்டு, லஞ்சம் வாங்கிற பண நோட்டுக்களிலைதான் அவர் படத்தைப் போட்டு வைச்சிருக்கிறாங்கள்...அஹ’ம்ஸைக்கும் அணுகுண்டு வெடிப்புக்கும் என்ன சம்பந்தம்...?' என்று கொதித்தான் அமுதன்.

'நாங்கள் ஏதாவது செய்ய வேணும்!'

'இப்ப போலிஸ் அலேட்டாத் திரியிறாங்கள். ஏன் வீண் றிஸ்க்?' என்று விக்னேஸ் எச்சரித்தான்.

'துப்பினாங்கள்...பியர் ஊத்தினாங்கள்...இருட்டடி போட்டாங்கள்...வீட்டை எரிச்சாங்கள்...பிடிப்பட்டவர்களும் வெளியாலை வந்திட்டாங்கள்...நாங்கள் கண்டிறியாத காந்தியம் பேசுறம்..'

'இல்லை மச்சான்...தேவகுரு அண்ணர் ஒரு ஒரு பேய்க்காய்...அவர் காந்தியம் பற்றிப் பேசுறதுக்கு ஒரு நியாயம் இருக்க வேணும்...போராட்ட குழுக்கள் என்று ஒவ்வொரு திக்கிலும் போனதாலதான் எல்லாம் பழுதாய்போனது...அவரிட்டை நாங்கள் பேசிப் பார்ப்பம். நீங்கள் என்ன சொன்னாலும் அவர் நியாயத்துக்குக் கட்டுப்படுற மனுஷன்...' என்றான் விக்னேஸ்.

'நீயும் ஆள் மாறி வாறாய்?'

'ஆத்திரத்தில கொதிக்கிறதில புண்ணியம் இல்லை. கூட்டத்தில கேட்டுப் பாக்கிறதுதானே?'

'கூட்டத்தில கேட்டால், நாங்கள் குழப்பக்காரர் என்று குறி சுட்டுப் போடுவாங்கள்...'

'இதிலைதான் நாங்கள் பிழைவிடுறம். தேவகுரு அண்ணர் ஏதோ ஓரு நியாயம் பேசுறார். அந்த நியாயத்திலே எங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், நாங்கள் எங்கள் நியாயங்களை எடுத்துச் சொல்லுறதுக்குத் துணிவு வேணும்' என்றான் ரகு.

'மச்சான். நீ ஏண்டா எட்டப்பன் வேலை பாக்கிறாய்? எனக்குத் துணிவு இருக்கோ இல்லையோ என்று பார்கிறியோ?' என்று அர்ஜுன் எழுந்தான்.

'இதென்னடா கூத்து? எல்லாரும் நிப்பாட்டுங்கோ நாலு தமிழன் ஒரு இடத்தில் ஒற்றுமையாக இருக்க மாட்டான் என்பது சரியாதான் கிடக்குது...நாங்கள் என்ன சொந்தப் பிரச்சினையே கதைக்கிறம்? நாளைக்கு உங்கட விருப்பப்படி பேசுங்கோ...இப்ப, எல்லோரும் வாருங்கோ சப்பிடுவம். இறால் பொரியல், சொதி, ஸ்பெஷலாப் புட்டு...' என்றான் விக்னேஸ்.

'உண்மையா அண்ணை. வரப்போற அவ குடுத்து வைச்சவதான்...உங்களைப் போல வுட்டு அவிக்கிறதுக்கு இந்த whole Norway யிலும் ஆள் கிடையாது...' என்று கூறி, அங்கு ஏற்பட்டிருந்த இறுக்கத்தினை ரகு நெகிழ்த்த முனைந்தான்.

சனி ஏழுமணி போலக் கூட்டம் துவங்கியது. கூட்டமைப்புத் தலைவர் சற்குணம் பேசம்பொழுது சபையிலே சலசலப்பு இருந்து கொண்டே இருந்தது. இந்தப் பேச்சுகளில் எல்லாம் சபை நம்பிக்கை இழந்துவிட்டது போன்ற கோலம். இந்தப் போக்குத் தேவகுருவுக்கு வேதனையை அளித்தது.

'நியாயம் ஒரு கட்டத்திலே தன் ஆன்மாவை இழந்து விடுகின்றது. கிருஷ்ணன் தூது சென்றபொழுது, பாண்டவர்களுக்கு ஐந்து விடுகள் கொடுத்துச் சமரசம் செய்திருக்கலாம். ஐந்து வீடுகள் கொடுப்பதிலே என்ன இழப்பு? ஏன் மறுத்தான்? ஆணவம்! போலிக் கௌரவம். குருþக்ஷத்திரப் போரை நிறுத்தும் இறுதி வாய்ப்பினையும் துரியோதனன் இழந்தான்...' இத்தகைய சிந்தனைகளிலே மூழ்கியிருந்த போது, தேவகுரு பேசுமாறு அழைக்கப்பட்டார்.

'நவநாஜிகள் விடுதலையாகியது எங்களுக்கு அதிர்ச்சி தருவது. ஆத்திரம் ஊட்டுவது. வன்முறை வெற்றிபெறும் என்பது மாயை. அது வெறும் தோற்றமே. நாஜித் தத்துவத்தின் பிதாமகரான ஹ’ட்லர் ஏன் தோற்றான்? நாடுகள் பிடிப்பதிலே சூரத்தனம் காட்டிய அவன், தன் நாடே துண்டாடப்படுவதுக்கு ஏதுவானான். வன்முறைக்கு மாற்று ஆயுதம் அகிம்ஸை. வன்முறை சமரசத்துகான அனைத்துக் கதவுகளையும் சாத்தி விடுகின்றது. ஆனால், அகிம்ஸை அவ்வாறல்ல.. இதுதான் முக்கியம். அகிம்ஸை வழியை கருணாமூர்த்தி புத்தரே செப்பமான முறையிலே அறிமுகப்படுத்தினார். மகாத்மா காந்தி அதனைப் புதிய சூழ்நிலையிலே பயன்படுத்தினார். அவ்வளவுதான். புத்த சமயத்தின் உலகப் பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்ளும் சிங்களவர்களுக்கு, அகிம்ஸையின் மொழி புரியவில்லை என்று சொல்லப்படுகின்றது. ஆனால், சூரியனே அஸ்தமிக்காத அகண்ட சாம்ராஜ்யம் ஒன்றினைக் கட்டியாண்ட வெள்ளைக்காரனுக்குக் காந்திஜ“ பேசிய அகிம்ஸை பற்றிய வலிமை புரிந்தது. இதுதான் சரித்திரத்தில் ஏற்பட்டுள்ள அகடவிகடம்.

'இந்த நாட்டிலே வாழ்பவர்கள் வெள்ளைத் தோலர்கள்; எனவே, வெள்ளைக்காரர்கள். இதனை இவர்கள் புரிந்து கொள்ளுவார்கள் என்று நம்புவோமாக. நம்பிக்கை, பொறுமை, அன்பு ஆகியவற்றை நாம் வசப்படுத்தினாற்றான் அகிம்ஸை என்னும் ஆயுதம் நமக்கு வெற்றியீட்டித் தரும். இதனை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளேன். அன்பு என்றும் பண்பு விவாதங்களிலே வென்றெடுக்கப்படுவதில்லை. அது உள்ளத்திலே சுரக்க வேண்டும். அதிகம் பேசி உங்களை 'போர'டிக்க விரும்பவில்லை. அகிம்ஸையும் சமாதானமும் வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பம் அளியுங்கள்...' எனக் கூறித் தேவகுரு அமர்ந்தார்.

'உங்கட புருடாவெல்லாம் இனிச் சரிவராது. எங்கட சனங்களை சும்மா இருங்கோ, சும்மா இருங்கோ என்று சொல்லுறியள். நொஸ்குகள் ஏறிக் குதிக்கிறாங்கள்...நீ போய் லார்ஸ் போன்ற வெள்ளைக்காரக் கூட்டாளிகளுக்குத்தான் அகிம்ஸை பற்றிப் போதிக்க வேணும்' என்று அர்ஜுன் கத்தினான்.

'டேய், மரியாதையாகப் பேசடா!' என்று செல்லக் கண்ணன் எழுந்தான்.

தேவகுரு மரியாதையாகப் பேசடா!' என்று செல்லக் கண்ணன் எழுந்தான்.

தேவகுருது சட்டென்று எழுந்தார்.

'தம்பி செல்லக்கண்ணன், நீங்கள் பேசுறது பிழை. நீங்கள் மரியாதைக் குறைவாகப் பேசிக் கொண்டு, மற்றவரை அதட்டுறது வடிவே? அர்ஜுன் ஓர் அபிப்பிராயம் சொன்னார். கடவுளையே நாங்கள் நீ என்றுதானே அழைக்கிறம்?' என்று மெதுவாகச் சொன்னார்.

'I am sorry. பன்னிச்சுக் கொள்ளுங்கள்', எனச் செல்லக் கண்ணன் தலையைக் கவிழ்த்தார்.

'கதையை மாத்த வேண்டாம். விசயத்துக்கு வாருங்கோ...' அர்ஜுன் வற்புறுத்தினான்.

'தம்பி அர்ஜுன், இதுதான் உண்மை. நொஸ்க்குகள் சிலர் செய்யிற வேலைகள் பிழை. உண்மை. நாங்கள் கோபப்பட வேண்டும் என்பதற்காகத்தான் செய்யிறாங்கள். கோபம் வந்தால் நாங்கள் எங்களுடைய நிதானத்தையும் கட்டுப் பாட்டையும் இழக்கிறம். நாங்கள் அவங்கள் எதிர்பார்ப்பதைச் செய்தால், நாங்கள் எங்கள் சுயகட்டுப்பாடுகளை அவர்களிடம் ஒப்படைப்பவர்களாக ஆவோம். இதுதான் சூக்குமம். நமது சுயாதீனமான செயற்பாடுகளுக்கு இதுதான் அடிப்படை என்பதை நாம் மறந்துவிடலாகாது.' இவ்வாறு அவர் சொன்னபோதிலும், ஏதோ ஒரு விவகாரத்தின் மையத்திலே தாம் சிக்குண்டுவிட்டதை உணரலானார். சமூக ஊழியத்திலே பிரக்ஞையுடன் ஈடுபட்டுள்ளவன் துறவியல்லன். அவன் பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கும் கோழையுமல்லன். எதிர்கொள்ளுவதற்கான அன்பு தமது நெஞ்சிலே சுரத்தல் வேண்டும் என்பது மட்டுமே அவர் பிராத்தனையாக இருந்தது.

சபையில் சிறிது நேரம் மௌனம் நிலவியது. அந்த அமைதியை விரும்பாதவரைப் போல மணவாளன் எழுந்தார். அவர் எழுபதைத் தாண்டிக் கொண்டிருப்பவர். மகன் ஒரவன் இங்கிலாந்தில் வசிக்கிறான். இன்னொருவன் கனடாவில். மகளும் மருமகனும் வார்டோவில். 'உலகம் சுற்றும் வாலிபன்' போலப் பல நாடுகளிலும் சஞ்சாரஞ் செய்வதற்கு வசதி இருந்தது. தாயக மண்ணிலேயே அகிம்ஸை போக்குத் தமிழருக்கு எத்தகைய உரிமைகளையும் வென்று தரப்போவதில்லை என ஒரு காலத்தில் காட்டமாக வாதாடியவர்.

'டேய், போங்கடா போக்கோ...இந்த மடையன்ரை பேச்சைக் கேட்டுக் கொண்டு இருக்கிறியள். ஏற்கவே இப்பிடிக் கதைச்சுக் களைச்சுப் போச்சினம்...இப்ப இவர் வந்திட்டார் கதைக்க. நாங்கள் எல்லாரும் சிரையன்கள்! இவர் மாத்திரம் புத்திசாலி கையாலாகாதவன்களுடைய கதையைக் கேட்டுக் கொண்டு...என்ன வாயைப் பாத்துக் கொண்டிருக்கிறியள்?' என்று முழக்கமிட்டர்.

மணவாளனைத் தவிர ஏனைய அனைவரும் உறைநிலை அடைந்தவர்களைப் போலக் காணப்பட்டார்கள்.

'தேவகுரு! மரியாதையா நீ முதலில வெளியே போ. சனத்தை இப்பிடிப் பெட்டைகளாக்காதை. அகிம்ஸையும் பணியாரமும் எண்டு பேசினா என்னிட்ட அடிவேண்ட வரும்.' கிழச் சிங்கம் போல கர்ஜித்தார்.

தேவகுரு தலையை நிமிர்த்தி, கம்பீரமாக நின்றார். 'காந்திஜ“ சொன்னவை எனக்கு நினைவுக்கு வருகின்றது. பொதுசன ஊழியர் அவதூறு பெறுவது தலைவிதியே. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், அவதூறு கூறுபவரிடம் இரக்கம் காட்டுவதும், அவருக்கு நல்லறிவு உண்டாகுமாறு பிராத்தனை செய்வதுமே எனக்குள்ள வழியாகும்...' என்று ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாக உச்சரித்து, தேவகுரு அமைதியாகச் சொன்னார்.

'இவனை அடியுங்கோடா!' என்று மணவாளன் கத்தினார். மணவாளன் தவிர யாரும் எழவில்லை. எதிர்த்து வாதப்பிரதிவாதங்களிலே ஈடுபட்ட இளைஞர்கள் கூட அமைதி காத்தனர். இதனை மணவாளன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

'மணவாளன் ஐயா, என்னை அடிப்பதால் உங்கள் ஆத்திரம் தீர்ந்து, அதனால் வன்முறைமீது உங்களுக்கு இருக்கும் வாஞ்சை குறையுமேயானால், என்னை அடியுங்கள். அத்தனை அடிகளையும் நான் சந்தோசத்தோடு ஏற்றுக் கொள்ளுவேன். மற்றவரைப் புனிதப்படுத்துவதற்காகத் தம்மைத் துன்பத்திற்குள் உள்ளாக்குபவர்கள்தான் உண்மையான அகிம்ஸாவாதிகள்' என்று கூறியவண்ணம் தேவகுரு, மணவாளனை நோக்கி நடந்து வந்தார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத மணவாளன் பின்னுக்கு நகர்ந்தார்.

அவரை அண்மித்ததும், 'அடியுங்கோ. உங்கள் கோபம் தீரும் வரையும் அடியுங்கோ...எனக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. ம்...இரண்டு கன்னங்களிலும் அறையுங்கள்...' என்று கூறிக் கொண்டே, மணவாளனின் இரண்டு கைகளையும் பற்றி, தமது கன்னங்களிலே, அவர் கைகளாலேயே அறைகளைப் போட்டுக் கொண்டார்.

மணவாளன் தமது கைகளை இழுத்தெடுத்துக் கொண்டார். அவர் வெட்கத்தால் கூசினார். தமது செய்கையில் ஏதோ தவறு இருப்பதாக மணவாளனின் நெஞ்சு உறுத்தியது. தமது தலையைக் கவிழ்த்துக் கொண்டு அவர் சபையை விட்டு மெதுவாக வெளியேறினார்.

சபையில் அமைதி நிலவியது. அதனைக் கலைக்க விரும்பியவரைபோல, 'ஜனநாயகக் கருத்துப் பரிமாற்றங்களிலே இவற்றை எல்லாம் நாம் எதிர்ப்பார்க்கவேண்டும். முரண்பாடுகள் மத்தியிலே சமரசங்களையும் அமைதியையும் காணுவது மனித வாழ்க்கை. ஆனால், இவற்றிலிருந்து நாங்கள் பாடங்கள் கற்று முன்னேறுதல் வேண்டும்...ஒன்றை விளக்கிக் கொள்ளுங்கள். மணவாளன் அண்ணருடன் 'எங்க தொடுங்க பார்ப்பம்' என்று மல்லுக்கு நின்றிருந்தால், விளைவுகள் வேறு விதமா இருந்திருக்கும். நான் அடிவாங்கத் தயாராகிய நிலையிலேதான் இங்கு ஏற்பட்டிருக்கக் கூடிய ரசாபாசம் தவிர்க்கப்பட்டது. நமக்குள் இது சாத்தியமானால், ஏன் நுர்மனுடன் சாத்தியமில்லை? இதை நீங்கள் ஊன்றிச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன். வணக்கம்.'

தேவகுரு எல்லோருக்கும் வணக்கம் கூறிவிட்டு, அமைதியாக நடக்கத் துவங்கினார். ரகு அவருடைய அணுக்கச் சீடன் போல பின்தொடர்ந்தான்.

அர்ஜுன், அமுதன், விக்னேஸ் ஆகியோர் காரில் ஏறிக் கொண்டார்கள்.

'ரகு இப்போதைக்கு வரமாட்டான். அவன் தேவகுரு அண்ணர் வீட்டுக்குப் போயிருக்க வேணும்...'

'ஓமோம். அவனும் ஒரு குட்டிக் காந்தியாகப் பார்க்கிறான்.'

'ஏண்டா மச்சான், மணவாளன் அண்ணனோட நீ சேர்ந்திருந்தால், கூட்டத்தைக் குழப்பியிருக்கலாம் அல்லே?'

'கூட்டத்தைக் குழப்புறது அல்ல எங்கள் நோக்கம். எங்களுக்கு - இங்கை வாழும் தமிழர்களுக்கு - ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்குது என்று நாங்களும் நம்புறம். தேவகுரு அண்ணரும் நம்புறார். அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளிலேதான் நாங்கள் மாறுபட்டு நிற்கிறம். ஆனால் தேவகுரு அண்ணரிடம் ஒரு சத்தியம் இருக்குது.'

ம்...உண்மையில், அந்த ஆள் போதிக்கிற ஆள் அல்ல...வாழ்ந்து காட்டுற ஆள்.'

'அதை மறுக்க ஏலாது. எங்கட பிள்ளைகளுக்குத் தமிழ் படிப்பிக்கறதுக்கு அந்த ஆள்படுற கஷ்டம்...உண்மையில, அந்த ஆள் போதிக்கிற ஆள் அல்ல...வாழ்ந்து காட்டுற ஆள்.'

'எங்கட பீத்தலன்கள் மத்தியிலே அப்படி ஒரு மணியான ஆளைக் கண்டுபிடிக்கிறது கஷ்டம்.'

'என்னடா மச்சான், கட்சி மாறீட்டாய்...'

'கட்சி மாறி என்ன எலெக்ஷனுக்கே நிக்கப்போறன்? எனக்கென்னவோ மச்சான், தேவகுரு அண்ணரிலை ஒரு மரியாதை இருக்குது. I think he is a deep and sincere man...0

அவர்கள் அமர்ந்திருந்த கார் 'ஸ்ராட்' எடுத்து, நகரத் துவங்கியது.


10

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 - 13)!அன்று ஞாயிற்றுக் கிழமையாயினும் நேரத்துடன் தேவகுரு எழுந்துவிட்டார்.

காலையிலேயே அவர் தமிழ் வகுப்புகள் நடத்தி வந்தார். குளிர் காலத்தில், மாலை வேளைகளில் வகுப்பு நடத்துவது சற்று வசதியானது எனப் பெற்றோர் தெரிவித்த ஆலோசனைகளை ஏற்றிருந்தார். இன்று துவக்கம் மாலையிலேயே வகுப்புகள்.

இதனால், இன்று காலையில் கீபிளுக்குச் சென்று இளைஞர்களைச் சந்திப்பதற்கும் சம்மதித்திருந்தார். இந்தச் சந்திப்பினை ரகுவே மிகுந்த ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருந்தான். இந்தச் சந்திப்பின் மூலம், அன்றைய கூட்டத்திலே தோன்றிய பிணக்குகளை சீர்செய்ய முடியும் எனத் தேவகுரு நம்பினார். இதற்கு வருமாறு, கூட்டமைப்புத் தலைவர் சற்குணத்தையும் அழைத்திருந்தார். அவர் வருவதற்குச் சம்மதித்திருந்ததுடன், தாமே வந்து தமது காரிலேயே கீபிளுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறியிருந்தார்.

அவர் வருவதற்கு எவ்வளவோ நேரம் இருந்தது. தமிழ்நாட்டிலே, ஓர் அவுஸ்ரேலிய பிரஜை, அதுவும் ஒரு பெண், அரசாங்கத்திற்கு எதிராகச் சதி செய்தார் என்கிற குற்றச்சாட்டின் பேரிலே, கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தியை அறிந்து தேவகுரு மிகவும் வேதனையுற்றார். இது பற்றி முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருந்ததினால், உண்மை நிலைமைகளை அறிய தமது குருவும் நண்பருமான இராமநாதருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு இராமநாதர் விரிவான பதில் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்திற்குப் பின்னர் இராமநாதர் நோய்வாய்ப் பட்டிருந்ததினால், சுருக்கமான கடிதங்களே எழுதினார். ஈற்றில் அவர் காலமாகியதும், அவருக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான ஞானப்பாலம் தகர்ந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு அவருக்கு ஏற்படலாயிற்று. அவர் எழுதிய அந்தக் கடிதத்தினை அவர் இன்றும் எடுத்து வாசிக்கலானார்:

அன்புள்ள தேவகுரு,

நீங்கள் பல கேள்விகளைக் கேட்டிருந்தீர்கள். அந்த அவுஸ்ரேலியப் பெண்ணும், அவருடன் பேசிக் கொண்டிருந்த மூவரும், உள்ளூர் டாக்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்கள் என்பது உண்மை. அவர்கள் தமிழ் ஈழத்துக்கு மருந்து கடத்துவதற்குச் சதி செய்தார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. மருந்துகள் தடை செய்யப்பட்ட பொருள்கள் அல்ல. கடல் கடந்து வாழும் ஈழத் தமிழர்களுக்கு - போராளிகளுக்கல்ல, புலம் பெயர்ந்து வன்னிக் காடுகளிலே அல்லற்படும் பொது மக்களுக்கும் முதியோருக்கும் சிறாருக்கும் - மருந்துகள் இல்லை. இந்த மருந்துகள் கிடைக்காது ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும், நூற்றுக் கணக்கில் அவர்கள் மாண்டொழிய வேண்டும் என்பதுதான் சிங்கள அரசின் திட்டம். இஃது உலக மனிதநேய அக்கறைகளுக்கு அப்பாலான மிலேச் சத்தனம். அந்த அகதிகளுக்கும் அனாதைகளுக்கும் மருந்து அனுப்பி வைக்க யோசிப்பது எத்தகைய மகத்தான சதி என்பதை உலகறியச் செய்துள்ளது தமிழ்நாடு! இத்தகைய ஒரு திவ்விய மண்ணிலே, தேவகுரு, மனிதநேயத்தை எங்கே கண்டுபிடிக்கச் சொல்லுகிறாய்?

தந்தை பெரியார், மனிதம், கட்டுகளிலிருந்து மூட நம்பிக்கைகளிலிருந்தும் விடுதலை பெறல் வேண்டும் என்று விரும்பினார். காலம் காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த மத ஆசாரங்களும், சடங்கு முறைகளும் மனிதத்தைச் சிறைப் பிடித்து வைத்திருப்பதை உணர்ந்தார். 'கடவுள் நம்பிக்கைகளைக் கடாசு குப்பையிலே, அப்பொழுதுதான் நீ மனிதனாய் நிமிர்ந்து நிற்கலாம்' என வலியுறுத்தினார். ஆனால், 'ஒன்றே குலர் ஒருவனே தேவன்' என்று பெரியாரின் வெண் தாடியிலே தார்பூசிய பின்னர், அரசியல் விளையாடத் துவங்கியவர்களிடமிருந்து, உண்மையையும் சத்தியத்தையும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதனை ஜனநாயக முறையிலே விமர்சிக்க முடியுமா? மூச்! தன் 'மான'அரசியலுக்குக் களங்கம் கற்பிப்பதா என வீர சினிமா வசனம் பேசித் தலையைச் சீவிவிட்டுத்தான் மறு வேலை!

'ஆரிய மாயை', 'வடக்கு வளர்கிறது தெற்குத் தேய்கிறது' 'திராவிட பாரம்பரியம்' எல்லாம் கோஷங்களே! கண்ணகி, பூம்புகார், வள்ளுவருக்கான கோட்டம் எல்லாம் அலங்காரங்களே! நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்த திராவிட ஆட்சியிலே, அறுவடை செய்த சாதனைகள் என்ன? அண்ணாவின் மறைவுக்கு பின், ஒரு ஜாதிக்கு எதிராக இன்னொரு ஜாதியை உசுப்பிவிடும் சாணக்கியத்துடன் ஜாதியம் வளர்க்கப்பட்டது. இன்று ஜாதிக்கு ஒரு கட்சி உருத்திர தாண்டவமாடும் நிலை. நாற்காலிகள் மீதான ஆசைகள் மட்டுமே சமுதாய வாழ்க்கையாகி விட்டது. சுயநலம் மட்டுமல்ல, அச்சமும் சர்வ வியாபகமாகிவிட்டது. பதவி பறிபோவதற்கு முன்னர் ஏலுமான அனைத்தையும் சுருட்டிவிட வேண்டும் என்கிற அவசரம், சுயநலம் சார்ந்தது மட்டுமல்ல, அச்சம் சார்ந்ததும். அச்சத்திலே வாழ்பவனுக்குப் போதை தேவை. 'கோஷங்கள்', 'பேரணிகள்,' 'சம்பாத்தியம்' அனைத்தும் போதையூட்டும் பொருள்களாக மாற்றப்பட்டுள்ளன. தமிழ் உணர்வினை விளம்பரப் பலகைகளில் மட்டுமே பார்க்கலாம். மற்றப்படி வேறு உணர்வுகள் - பொதுவாழ்விலே ஒழிக்கப்பட வேண்டிய அனைத்துக் கொச்சத் தனமான உணர்வுகளும் வளர்க்கப்பட்டுள்ளன.

ஒரு தடவை நீ பேசி பொழுது யூ.என்.பி (U.N.p) என்பதற்கு Uncle--Nephew--Party என்று விளக்கம் தந்தாய். இங்கு நிலைமை இன்னமும் அற்புதம்! தந்தை-மகன்-மருமகன் கட்சியாகத் திராவிடம் சுருக்கிக் கொண்டிருக்கின்றது! இந்த ஒரு போக்கினை எதிர்த்துக் தோன்றியுள்ள ஏனைய திராவிடக் கட்சிகள், பார்ப்பனீயத்தை எதிர்க்கப் புறப்பட்ட திராவிடவீரம், அதிதிராவிடத் தலைமையை விட்டால் கதியில்லை என்று அலறுகிறது. திராவிடத்துக்கு அப்பாலான, ஆனாலும் தலைமைதாங்க வல்ல ரத்தத்தின் ரத்தத்தினை அதிதிராவிடம் என்று விளங்கிக் கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். இவற்றின் மத்தியில் தமிழரின் கௌரவத்தை நிலைநாட்டப் போரிடும் இளைஞர்களை 'உலகின் குஷ்டரோகிகள்' எனப் பிரசாரப் படுத்தும் 'றோ'வின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் 'ஜால்ரா' தட்டிக் கொண்டே, 'உலகத் தமிழரின் பாதுகாவலன்' என்று கோஷம் போடுவதற்கு எத்தகைய அடத்தியான அயோக்கிய அறியாமை தேவை? இந்த ஆத்திரங்களை எல்லாம் இங்கு சொல்ல முடியாது. சத்தியமும் உண்மையும் அன்பும் பண்பும் எங்கே கிடைக்கும்? அருங்காட்சி அகங்களிலேகூடத் தேடிப் பார்க்கின்றேன்.

இங்கு எல்லா விழுமியங்களும் செத்துவிட்டன. காந்தி ஒரு மங்கலான நினைவு. இல்லாவிட்டால், அவர் பிறந்த குஜராத் மாநிலத்தில், 0.5 சதவீதம் கூட இல்லாத கிறிஸ்தவர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகை அன்றே துவம்சம் செய்யப்படும் கொடுமை நடக்குமா? மத்திய பிரதேசத்தில் அருள்சார்ந்த மனித சேவை செய்யும் கன்னியாஸ்திரிகளுடைய கற்புக் குதறப்பட்டது.

'கன்னியாஸ்திரிகளுடைய கற்பு விசேடத் தன்மையுள்ளதா?' என்று வீர வசனம் பேசும் இந்துத்துவத் தலைவர்கள் தோன்றியுள்ளார்கள். புத்தமதம் இந்திய மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது போலவே, காந்தியமும் இந்திய மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு விட்டது என்றே எனக்குத் தோன்றுகின்றது. காந்தியைக் கொன்றமையே ஆட்சியேறு வதற்கான அதிகாரமாகச் செயற்படும் இந்துத்துவத்தின் கொடுமையை என்னவென்று சொல்வேன்.?

பகுத்தறிவை வலியுறுத்திய பெரியார் புலன் விசாரணைக்கு அப்பாற்பட்ட நிறுவனமாக நிவேதிக்கப் பட்டுள்ளார். அதனையாவது பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், பெரியார் நாமம் அரசியல் வியாபாரத்திற்கான ஒரு 'லே'பாக மாற்றியமைக்கப்பட்டுள்ள கொடுமையை யாரிடம் சொல்வது? பிரஸ்நேவ் சோவியத் நாட்டின் ஆட்சியாளராக இருந்தபொழுது, ஒரு தசாப்தத்திற்கிடையிலேயே அது சிதலமடைந்து சின்னாபின்னமாகும் என்று யாராவது ஆருடங் கூறியிருப்பார்களா? அப்படிக் கூற யாராவது முன் வந்திருந்தால் அவனைப் பைத்தியக்காரன் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் , நடந்தது என்ன?

இருபத்தியோரம் நூற்றாண்டில், இந்தியா ஒரே நாடாக இருக்குமா என்பதுதான் கேள்வி. அது ஒரே நாடாகவே இருக்க வேண்டும் என்று நான் தினந்தினம் பிரார்த்திக்கின்றேன். ஆனால், என் பிரார்த்தனைகள் பயனற்றுப் போகவேண்டும் என்கிற மூர்க்கத்துடன் மக்கள் அடிமைகளாக்கப்படுகிறார்கள். ஆனால், அடக்குமுறை என்றுமே ஒரு நாட்டின் ஒருத்துவத்தைப் பாதுகாக்க உதவியிருக்கின்றது என்பதற்கு வரலாறே கிடையாது.

நான் எப்பொழுதும் ஈழத்து விடுதலைப் போராளிகளிடமிருந்து நிறையவே கற்றுக் கொள்ளுகின்றேன். அதனைக் கொச்சைப்படுத்துவதுதான் தமது தேச பக்தியை வெளியிடுவதற்கான அடையாளம் என்று நினைக்கும் புத்தி ஜ“விகள் தமிழ் நாட்டிலே புழுத்துப் பெருகியுள்ளார்கள். திருப்பதியான் மொட்டையுடன் ஒருவர் செய்யும் தமாஸ”களே புத்தி ஜ“விதத்தின் உச்சம் என்றால் பார்த்துக்கொள்ளேன்! சிங்களப் பேரினவாதமே தமிழ்ப் போராளிகளைத் தோற்றுவித்தது என நான் நம்புகின்றேன். அடக்கு முறைகளின் மூர்க்கம் எவ்வளவுக்கு மூர்க்கம் அடைந்ததோ, அவ்வளவுக்கு அவ்வளவு தியாகம் செய்யும் துடிப்பும், கீழ்ப்படியோம் என்கிற உறுதிப்பாடும் போராளிகளுக்கு ஏற்படத் துணை நிற்கின்றன. இந்த எளிமையான புரிதலைக்கூட 'ஓர் இனம், ஒரு மொழி, ஒரு மதம்' என்று நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு, வலியுறுத்தும் அரசியல் தலைவர்கள் சிரத்தையில் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை...

கடிதம் தொடர்ந்தது. ஆனால், கதவின் மணியை யாரோ அடித்தார்கள். கடிதத்தைப் பக்குவமாக மடித்து, தமது ஃபைலில் வைத்துவிட்டு, வாசலுக்கு விரைந்தார்.

நித்தியா கதவைத் திறந்து நின்றாள். சற்குணம் உள்ளே வந்தார். தேவகுருவைக் கண்டதும், 'அண்ணே, சுணங்க நேரமில்லை. பெடியங்கள் காத்திருப்பாங்கள்' என்றார்.

'ஏதாவது குடிச்சிட்டு...'

'அவங்களும் தருவாங்கள். போவம்.'

'நித்தியா, கதவப் பூட்டி வைச்சிடும். ரகு இருக்கிற கீபிளுக்குப் போட்டு வாறம்' என்று கூறித் தேவகுரு புறப்பட்டார்.

'அண்ணை, நாங்கள் வன்முறையை வன்முறைக்காவே விரும்புகிறோம் என்று பிழையா விளங்கிக் கொள்ளாதேயுங்கோ. உங்களுக்குத்தான் முதலில இருட்டடி போட்டவங்களாம். இதை நீங்கள் ஒருத்தருக்கும் தெரியாமல் சடைஞ்சு போட்டியள்...பிறகு, விநாயகம் பிள்ளை...ஆக்களைச் சும்மா விட்டதாலை காருகளை அலங்கோலப்படுத்திறது...இப்பிடியே விட்டு வச்சால், எங்கள் எல்லாரிலும் மிளகாய் அரைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதுதான் அண்டைக்கு நாங்கள் கொதிச்சனாங்கள்...' என்று சொல்லி, தங்களுடைய வலயத்திற்குள் தேவகுருவை அர்ஜுன் இழுத்தான்.

'நீங்கள் ஏதோ நியாயம் பேசுறீங்கள். உங்களுக்கு நல்ல நோக்கம் இருக்குது. அதை நாங்கள் மறுக்கேல்லை. ஆனால், உங்கடை நியாயங்கள் எங்களுக்கு முழுக்க விளங்குதில்லை... நீங்கள் உங்கட ரூட்டில போங்கோ...நாங்கள் எங்கட ரூட்டில போவம்...ஒன்று சரிவராட்டிலும், மற்றது சரிவரும் தானே?...' என்றான் அமுதன்.

'தாயக மண்ணிலும் இந்த இரண்டு ரூட் நியாயந்தான் எல்லாத்தையும் பழுதாக்கினது. பொடியள் யாழ்ப்பாணத்திலை சேட்டை விடட்டும், நாங்கள் கொழும்பிலை அதையும் வைச்சு நியாயம் பேசுவம் என்றுதானே தளபதி அமிர்தலிங்கமும் கணக்குப் போட்டவர். பிறகு என்ன நடந்தது? நான் வெளியரங்கமான மேடைகளிலே தர்மம் மட்டுமே பேசகிறேன். உங்களுடைய கொதிப்புகளை என்னாலே புரிந்துகொள்ள முடிகிறது. இதனாலேதான், இந்த நான்கு சுவர்களுக்கிடையில் நியாயம் பேசலாம் என்று வந்திருக்கிறேன். நீங்கள் அடியுங்கோ...ஆனால் ஒன்று, விநாயகம்பிள்ளையை அடிச்சவங்களைக் அல்லது காருகளிலே பெயின்ற் ஸ்பிரே பண்ணிவைங்களைக் கண்டுபிடிச்சு அடிக்கவேணும்...' என்று கூறி, தேவகுரு நிறுத்தினார்.

அமைதி நிலவியது. ரகு நெளிந்தான்.

'விஷயம் இதுதான். விநாயகம் ஒரு அப்பாவி. அவர் தாக்குப்பட்டதுக்கு வருந்துகிறோம். நீதி வழங்கிறதிலை ஒரு ஒழுங்கு இருக்குது. குற்றவாளிகள் நாலுபேர் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். ஆனால், குற்றமற்றவன் ஒருவன் தண்டிக்கப்படலாகாது. இது மகா முக்கியம். நீங்கள் அடிக்கும் பொழுது, ஒரு அப்பாவி நொஸ்க்கை, எங்களுக்கு அநுதாபமான ஒரு நொஸ்க்கை, காயப்படுத்த மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?...இல்லை, ஒரு நியாயத்துக்காகக் கேட்கிறேன். மற்றவர்களுக்குத் தண்டனை கொடுப்பதற்கு நாங்கள் என்ன கடவுளே?...சட்டத்தின் சக்கரம் மெதுவாகத்தான் சுழலும்...'என்றார் தொடர்ந்து.

'அண்னை, நீங்கள் தாயக மண்ணிலே நடைபெறும் இனமானப் போரை ஆதரிக்கிறீர்களா, இல்லையா?' என்று அர்ஜுன் வெடுக்கெனக் கேட்டான்.

'ஆதரிக்கிறேன். நூறு சதவீதம் ஆதரிக்கிறேன்...' என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் தேவகுரு கூறினார்.

'அங்கு போராட்டத்தை ஆதரிக்கிறீர்கள்...இங்கு போராடுவது தப்பு என்கிறீர்கள். இரண்டு முரண்பாடாக இல்லையா?' என்று கேட்டு விக்னேஷ”ம் உரையாடலிலே நுழைந்து கொண்டான்.

'முரண்பாடாக எனக்குப் படவில்லை. சில உண்மைகளை நாங்கள் ஆத்ம சுத்தத்துடன் பரிசீலனை செய்ய வேண்டும். சாதாரண சிங்கள மக்கள் அமைதியானவர்கள், அன்பானவர்கள், பாசம் மிக்கவர்கள், நட்புக்கு உகந்தவர்கள். இது எத்தனையோ தமிழர்களுடைய அநுபவம். இதனை நாம் மறந்துவிடலாகாது. இலங்கையில் எழுந்துள்ள போருக்கு அச்சமும் அடக்குமுறையுமே காரணங்கள். தேசப்பற்றைத் துறந்துவிட்ட அரசியல்வாதிகள், புத்தரை மறந்துவிட்ட பிக்குகள், மனச்சாட்சிகளைத் தொலைத்துவிட்ட சிங்கள புத்திஜ“விகள் காலம் காலமாகச் சிங்க மக்கள் மத்தியிலே ஓர் அச்சத்தினை வளர்த்து வந்துள்ளார்கள். வடக்கில், குறுகிய பாக்குநீரிணைக்கு அப்பால், எட்டுக்கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடன் இணைந்து ஈழத்தமிழர்கள் சிங்கள இனத்தை அடக்கி ஆள்வார்கள் என்கிற அச்சத்தினை ஊட்டி படையெடுப்புகளை ஆதாரம் காட்டி, நாளையும் இத்தகைய படையெடுப்புகள் சாத்தியம் என்கிற அச்சத்தினை ஊட்டி வருகிறார்கள். இந்த அச்சத்தினை சிங்களவருடைய மனசுகளிலே மிக ஆழமாகப் பதியும்படி செய்துவிட்டார்கள். இதன் காரணமாகத்தான் அன்பும் பண்பும் உள்ள சாதாரணச் சிங்களவன், அரசியல் பிராணியாகவும், வாக்களானாகவும் மாறும் பொழுது மாயை வசப்பட்டு, பகைமையும் குரோதமும் திரண்ட மனோநிலையில் செயற்படுகின்றான். இது மகா சோகம். இலங்கையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடைபெறும் ஜனநாயகம் என்ன? சரித்திர காலத்தில், அநுநாதபுர கோநகராக விளங்கிய காலத்தில், லம்பகர்ணருக்கும் மோரியர்களுக்கும் இடையில் அரசுரிமைப் போட்டி இருந்தது. அதே போல, இரண்டு குடும்பங்களுக்கிடையில், சேனநாயக்க, பண்டாரநாயக்க குடும்பங்களுக்கிடையில், நடைபெறும் அதிகார மல்யுத்தமே கடந்த ஐம்பது ஆண்டு இலங்கையின் ஜனநாயக அரசியலாக நிலைத்துள்ளது. இதற்கு, தமிழர் 'பூச்சாண்டி' மந்திரமாக உச்சாடனம் செய்யப்படுகின்றது. யுத்தம் ஆட்சியாளருக்கும் அவர்களுடைய பாதந்தாங்கிகளுக்கும் கொழுத்த வியாபாரம். ஜனநாயகம் என்கிற பெயராலே செய்யப்படும் இந்தப் பிததலாட்டங்களை, ஜனநாயத்தின் பாதுகாவலர்கள் எனப் பெருமை பேசும் உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தல் கொடுமையிலும் கொடுமை!'

'அச்சத்தின் பங்களிப்பு...அக்குமுறை?...' என்று இழுத்தான் ரகு.

'காந்திஜ“ அடக்குமுறை பற்றித் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். 'தீயானது எப்படித் தங்கத்தை ஒளிவிடச் செய்யுமோ, அப்படியே அடக்குமுறை தனி மனிதனையோ, சமூகத்தையோ சிறப்படையச் செய்யும். அடக்குமுறைதான் சக்தி முழுவதையும் உபயோக்கும்படி தூண்டச் செய்கிறது. அபாயம் ஏற்படும்பொழுது தியாகத்தையும் தைரியத்தையும் விளங்கும்படி செய்கிறது...'அடக்குமுறையின் எதிர்வினை தான் போராளிகளின் தர்மம். 1983 க்கு முன் பின் என்று தமிழர் செயற்பாடுகளை நோக்கினால் இந்த உண்மை விளங்கும். அச்சத்தின் எதிர்வினை ஒரு பக்கத்திலும், அடக்குமுறையின் எதிர்வினை மறுபக்கத்திலும் நின்று போராடுகின்றன...இவற்றின் நடுவிலே அன்பின் குரல் ஒலித்தல் நியாயம். உறங்கிக் கொண்டிருக்கும் மனித நேயத்தினைத் தட்டி எழுப்புவதற்கு அன்பில் மொழி பயன்படும் என நான் நம்புகின்றேன். இதன் காரணமாகத்தான் நான் அகிம்ஸையின் பிரசாரகனாகவும், அதன் பரமார்த்த ஊழியனாகவும் வாழ முற்பட்டுள்ளேன்' என்றார் தேவகுரு. எந்த இடத்திலும் கோபப்படாது, ஏற்ற இறக்கமற்ற தொனியிலே அவர் பேசுவது இளைஞர்களுக்குப் புதிய அநுபவமாகவும் இருந்தது.

'தாயக மண்ணிலே நடைபெறும் விடுதலைப் போரைப் பயங்கரவாதம் என்று கூறும் சில தமிழர்கள்கூட தாங்கள் போரை விரும்பாத அகிம்ஸாவாதிகள் என்றுதானே காட்டிக் கொள்ளுகிறார்கள்? நீங்கள் அகிம்சை - அன்பு பற்றிப் பேசும் பொழுது, நீங்கள் அவர்கள் குரலாக ஒலிக்கின்றீர்கள் என்று நாங்கள் ஏன் கருதிக் கொள்ளக்கூடாது?' என்று அர்ஜுன் கேட்டான்.

தேவகுரு கண்களை மூடிச் சிந்திந்தார். அவர் முகத்திலே புன்னகை ஒன்று அலை புரண்டு அமைதி கொண்டது.

'அறம் புறமாகும்பொழுது போருக்கான நியாயம் வாய்க்கிறது. தர்மத்திற்கான அனைத்துக் கதவுகளும் அடைக்கப்படும்பொழுது, போர் மட்டுமே தர்மமாகலாம். அவ்வாறுதான் கீதாசிரியன் போரின் பக்கலில், சங்கார சந்நதனான அர்ஜுனன் பக்கலில் நின்றான். தேரோட்டினான்...போரின் அக்கிரமங்கள் ஐந்தாம் படையை நியாயப்படுத்துகின்றன. அற்ப ஆசைகளினால்...முப்பது வெள்ளிக்காசுகளுக்காகத்தானே யூதாஸ் ஏசுநாதரைக் காட்டிக் கொடுத்தான்?...ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால், ஓய்வூதியம் கிடைக்கும். இதற்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொள்ளும் தமிழர்கள் இல்லையா?...'

தொடர்ந்து பேசுவதற்கான வார்த்தைகளைத் தேடும் அவதியிலே, தேவகுரு நிறுத்தியது போலக் காணப்பட்டார்.

'கதிர்காமர் ஓய்வூதியத்துக்கு ஆசைப்பட்டா, உலக மேடைகளில் எல்லாம் தாயகத்தின் போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று கொச்சைப் படுத்தி அலைகின்றார்?' என்று அமுதன் கேட்டான்.

'கதிர்காமர் சிங்கள ஆயாவின் முலைப்பால் குடித்து வளர்ந்தவனாக இருக்கலாம்...'என்று நக்கலடித்தான் அர்ஜுன்.

தேவகுரு பேசாமல் இருந்தார்.

அறையில் அமைதி நிலவியது.

'என்ன, அண்ணே! பேசாமல் இருக்கிறியள்...' என்று ரகு கேட்டான்.

'நீங்கள் இளைஞர்கள். உங்களுக்கு ஆத்திரம் இருக்கும். அதை இந்த அறைக்குள் கொட்டித் தீர்த்துக் கொள்ளுங்கள். இளைஞர்களின் ஆத்திரங்களுக்கு ஒரு வடிகால் தேவை...' என்றார்.

'நாங்கள் உங்கள் தம்பிகளைப் போல. நாங்கள் ஏதாவது பிழையாகச் சொன்னால், நீங்கள் எங்களைத் திருத்தவேணும். நாங்கள் மனந் திறந்து பேசுகிறோம். அவ்வளவுதான்!' என்று கெஞ்சும் பாவனையிலே சொன்னான் விக்னேஷ்.

'ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாக உணரவேண்டும்! 'தமிழர்கள் பயங்கரவாதிகள்! அவர்களுடன் எந்தப் பேச்சு வார்த்தைகளுக்கும் நாங்கள் தயாராகவில்லை' என்று கதிர்காமர் சொல்லுகின்றார். நாடுதோறும்; மேடைதோறும் இதுதானே? இதன் மூலம் அவர் சொல்லாமற் சுட்டும் அர்த்தங்கள் முக்கியமானவை.

'நான் இலங்கையிலே சமாதானப் பாலும் தேனும் வழிந்தோடுவதற்குப் பாடுபடுகின்றேன். பயங்கரவாதிகளான தமிழர்கள் இதற்கு எதிரான சத்துராதிகள்...' என்று அழுத்திச் சொல்வதின் மூலம் 'நான் தமிழனல்லன்' என்பதை மகா தெளிவாகச் சொல்லுகின்றான். இதற்குப் பிறகு அவன் என்ன பால்குடித்து வளர்ந்தான் என்கிற ஆராய்ச்சி சுவாரஸ்யமற்றது. தமிழர்கள் பயங்கரவாதிகளா, அல்லவா என்பதுதான் முக்கியம்...ஒரு காலத்திலே பல போராட்டக் குழுக்களாகப் பிரிந்து, குழுச் சண்டைகளிலே ஈடுபட்டு எங்களை அழித்துக் கொண்டோம். சில குழுக்கள் பிளவுண்டு, சகோதரத் தோழர்களை அழிக்கும் சண்டைகளிலும் ஈடுபட்டோம். இத்தகைய சண்டைகளிலே நாங்கள் ஈடுபடும்படி வெளியாரும் ஊக்கப்டுத்தினார்கள். இவற்றால் ஏற்பட்ட இழப்புகளும், மனக்காயங்களும் பயங்கரமானவை. அவற்றை நாங்கள் அநுபவபூர்வமாக அறிவேன். இவை அனைத்தையும் நாங்கள் மறந்துதான் ஆகவேண்டும். நேற்றைகளிலே வாழ்ந்து சாம்பியதுபோதும். நாளைகளைத் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஈழத் தமிழர்கள் வரலாற்றின் யுக சந்தியிலே நிற்கின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமுதாயக் கடமையை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள். போராளிகளுடைய கடமைகளும் தர்மங்களும் வேறு. புலம்பெயர்ந்த நாடுகளிலே வாழும் தமிழர்களுடைய தர்மங்களும் கடமைகளும் வேறு. இவற்றை மறந்துவிடலாகாது.

'தாயக மண்ணிலே அறுபதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது. ஈழ மண்ணிலே சிங்கள ராணுவத்தினர் ஏற்படுத்திய கல்லறைகள் பலவற்றிலே, ஹ’ட்லரின் படைகளே நாணக் கூடிய அக்கிரமங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம். என்ன இருந்தாலும், தாயக மண்ணிலே இழைக்கப்பட்டு வரும் அக்கிரமங்களைக் காட்டியும், எங்கள் உடன்பிறப்புகளுக்கு ஏற்பட்ட இழப்புகளைக் காட்டியும், எட்டு இலட்சம் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களாகப் பல்வேறு நாடுகளிலே வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிலே ஒரு லட்சம் பேராவது போராடும் வயதினராக இருக்க மாட்டார்களா? அவர்களும் போராளிகளாக மாறியிருந்தால், இன்றைய சமன்பாடுகள் எப்படி மாறியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இவர்களைக் கோழைகள் என்றோ, தாயக மண்மீட்புக்கு எதிரானவர்கள் என்றோ நான் கொச்சைப்படுத்தவில்லை. புலம் பெயர்ந்து வாழ்வதற்கு அவர்களுக்கு நிறைய நியாயங்கள் இருக்கலாம். நான், நீங்கள், அவர்கள் எல்லோருமே மண்மீட்புப் போரிலே ஈடுபடும் உரிமையைத் துறந்தவர்கள் என்பதை மட்டும் மறுக்க ஏலாது!

'ஆனாலும், தாயக நேசிப்பினையும், தமிழ் இனத்துவ அடையாளங்களையும் இன்னும் பலநூற்றாண்டு காலமாயினும் ஆராதிக்கும் கடமை இவர்களுக்கு உண்டு. இந்தக் கடமை யோகம் மூலமே தாயக மண்ணிலுள்ள உரிமையை மீளப் பெறுவர். கனடா-அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலே வாழ்பவர்களுடைய நிலைப்பாடுகளை நான் அறியமாட்டேன். ஆனால், இங்கு நோர்வேயிலுள்ள தமிழர்களை எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் எவ்வளவுதான் முயன்றாலும், எங்களுடைய பிள்ளைகளை நொஸ்க்குகளாக்கிவிட முடியுமா? அப்படி ஆக்குவதினால் என்ன பயன்? தாயக மண்ணிலே விடுதலை மலருமாயின், அங்கு மீளச் செல்வார்களா? சென்று புதுவாழ்வு துவங்குவதற்கான இவர்கள் தகைமை என்ன? இவற்றிற்கு நியாயமான விடை கண்டு பிடிப்பதிலேயே நமது பிள்ளைகளின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

'தமிழர்கள் பயங்கரவாதிகள், சண்டியர்கள் என்கிற இமேஜை வளர்ப்பதின் மூலம், சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டுள்ள பிரசாரங்களை மெய்ப்பிப்பவர்களாக வாழுகிறோம் என அர்த்தம் ஆகாதா? பிறிதொரு வகையிலே சொல்வதானால், விடுதலையின் புனிதங்களை கௌரவிக்கும், நன்மக்களாக நாம் வாழ பழகிக் கொள்ளவேண்டும். எனக்கு உண்மையில் ஒரு வேதனை உண்டு. ஜாதியக் கொடுமைகள், சீதனக் கொடுமைகள் ஆகியவற்றைப் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கடைப் பிடிக்கும் பன்னாடைகளும், நாமமது தமிழரெனக் கொண்டு நம் மத்தியிலே வாழ்கிறார்கள். தமிழ் உணர்வையும், இன மானத்தினையும், மொழிப்பற்றையும் துறந்து, புதிய பண வளத்திலே, புதிய மேட்டிமைகள் பேசித் திரிதல் மகா கொடுமை. இவற்றைக் களைவதற்கு, மனசுகளின் சுய சுத்திகரிப்பு என்கிற காந்திய அகிம்ஸை வழி உதவும் என நான் கெட்டியாகவே நம்புகின்றேன். நாம் புலம்பெயர்ந்த நாடுகளிலே அன்பு நெறி பயிலுதல், தாயக மண் மீட்புப் போருக்கு ஆதரவும் அநுதாபவமும் திரட்டும் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது...' என்று அலுப்புப் பாராட்டாது நீளமாகப் பேசி முடித்தார் தேவகுரு.

அர்ஜுனும், அமுதனும் அவருடைய விவாதங்களிலும் விளக்கங்களிலும் ஒளிரும் உண்மைகளை அறிந்து திகைத்தார்கள். தேவகுருவின் மனசிலே இவ்வளவு தூரத்திற்குத் தமிழ் நேசிப்பு வேர்ப்பாய்ச்சி இருக்கும் என்பது அவர்கள் அறியாத ஒன்று. 'இது ஒரு பேய்க்காய்' என்பது போன்ற ஒரு மரியாதை உணர்வும் வளர்ந்தது. மதங்கள் பற்றிய ஆய்வுகளிலும், காந்தியக் கொள்கைகள் பற்றிய மறுபரிசீலனைகளிலும் அவர் ஈடுபாடுடையவர் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர் தமிழர் பிரச்சினைகள் பற்றி நிதானமாகவும் நிறைவாகவும் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்து ஆச்சரியப் பட்டார்கள். அவருடன் விவாதிக்கவேண்டும் என்று நினைத்திருந்தவர்கள், இப்பொழுது அவர் தங்களுடன் ஞானப்பகிர்வு ஒன்றினை நடத்த வேண்டுமென விரும்பினார்கள். அவரைத் குருவாகச் சம்பாவனை செய்தார்கள்.

'அண்ணே, எங்களுக்குச் சில சந்தேகங்கள்...இவ்வளவு மினெக்கெட்டு வந்திருக்கிறியள்...உங்களுக்கு நேரம் கிடைக்குமோ தெரியாது...' என்று அர்ஜுன் இழுத்தான்.

'தம்பிமாரே, இன்னொரு டீ போடுங்கோவன்...ஊரில குடிக்கிறது போல பிளேன் டீ உங்களோட கதைக்க வேணும் என்றுதானே வந்திருக்கிறார்...' என்று இவ்வளவு நேரமும் அமைதி காத்த சற்குணம் சொன்னார். ரகு தேநீர் தயாரித்து வரச் சென்றான்.

ஓய்வு பெறுபவரைப் போல தேவகுரு அறையைச் சுற்றிப் பார்த்தார். இந்தியாவிலிருந்து வெளிவரும் குறிப்பிடத்தக்க சிற்றிதழ்கள் இரண்டு ரகுவின் மேஜையில் கிடந்தன. அவற்றை இலேசாகப் புரட்டிப் பார்த்தார். ஒன்று தமிழீழப் பிரச்சினைக்கு ஆதரவாக வெளிவருவது. அந்தப் பத்திரிகையுடன் தேவகுருவுக்குத் தொடர்பும் இருந்தது.

ரகுவும் விக்னேஷ”ம் தேநீர் தயாரித்து எடுத்து வந்தார்கள்.

'நல்ல வாசமுள்ள தேயிலை...' என்றார் சற்குணம்.

'இது சிலோன் தேயிலை டீயண்ணை. ரகீம் கடையில வாங்கினது. அங்க நிறையச் சாமான்கள் வந்திருக்கு இப்ப.'

'நாங்கள் வந்தேறு குடிகள் என்று சந்திரிகா தென்னாபிரிக்காவில் பேசியது எங்களுக்குச் சரியான ஆத்திரம்...'அமுதன் பொருமினான்.

'அவ இப்ப விஸ்கி உசாரிலதான் வாழ்றாவாம்...இது ஒரு தலைவர் பேசுற பேச்சே? குடிவெறியில அலம்பிறது போல...' அர்ஜுன் ஆத்திரப்பட்டான்.

அவர்களுடைய குறிப்புகள் மூர்க்கம் அடைவதற்கு முன்னரே தேவகுரு பேசத் துவங்கினார்:

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மந்தம். இது எல்லாருக்கும் பொருந்தும். நாய்க்கும் பூனைக்கும் இடையில் குட்டி பிறக்குமோ? ஆனால், ஒரு மனிஷ’யை ஒரு சிங்கம் வைப்பாட்டியாக வைத்திருந்ததாம். அந்த வைப்பாட்டி ஒரு மகனையும் ஒரு மகளையும் பெற்றாளாம். அந்த அண்ணனும் தங்கச்சியும் கல்யாணம் செய்தார்களாம். அவர்களுடைய சந்ததியார்தான் சிங்களவராம். இந்த ஆபாசங்களையே வேதமாகக் கொண்டாடுபவர்களுடன் என்ன நியாயம் பேசமுடியும்? ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எத்தனை விழுக்காடு தூய சிங்கள இரத்தம் பாய்கிறது என்பது அவருக்கே தெரியாது. சந்திரிகாவின் முப்பாட்டன் ரத்வத்தை திசாவை. கண்டி ராஜ்யத்தின் சுதந்திரத்தை ஆங்கிலேயருக்குத் தாரை வத்துக் கொடுத்தவர்களுள் அவரும் ஒருவர். தாரைவார்த்த ஆவணத்திலே அவர் தமிழிலேதான் கையொப்பம் இட்டார். ரத்வத்தை ஐயா சிங்கள மொழியைப் புறக்கணித்தாரா? அல்லது அவருக்குச் சிங்களம் தெரியாதா? இது பற்றி ஆராய்வதுகூட நல்லது. இலங்கையின் அரசியல் தலைநகராக இன்று திகழ்வது ஜெயவர்த்தனபுர கோட்டை அதன் பெயரை வைத்துக் கொண்டு ஜனாதிபதி ஜெயவர்த்தன ஆடிய கூத்துகள் கொஞ்சமோ? ஜேம்ஸ் இரத்தினம் நடத்திய ஆய்வுகளிலே ஜெயவர்த்தனவின் இரத்தத்திலே முஸ்லீம் இரத்தக் கலப்பு உண்டு என்று நிரூபித்துள்ளார்கள். அவருடைய முப்பாட்டனின் முப்பாட்டன்களே கோட்டையின் சுதந்திரத்தைப் போத்துக்கேயருக்குத் தாரைவார்த்தது! யாழ்ப்பாண மண்ணைச் சிங்களர் படை ஆக்கிரமித்ததும், சந்திரிகாவின் மாமனார், அநுருத்த ரத்வத்தை, ஒரு நொண்டி நாடகம் ஆடினார். செப்புமால் குமாரயாவின் வீர சாகஸத்தினைத் தாம் மீண்டும் சாதித்ததாகப் பிரசாரம் செய்தார். செப்புமால் குமாரயா செண்பகம் பெருமாள் என்னும் சேரர் தமிழன். அவன் சிங்கள அரசனின் தலையைச் சீவி கோட்டை ராஜ்யத்தைக் கைப்பற்றி அரசாண்டான் என்பதை மறந்துவிட்டார். ஜெயவர்த்தனபுர கோட்டையை நிறுவி, அதனைத் தலைநகராக்கியவன் அழகக்கோனார் என்னும் தென்னிந்தியத் தமிழன் என்பதும் மறக்கப்பட்ட ஒன்றாகியது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாற்றினைக்கூட அறியாது, அன்றேல் மறைத்துக் கூத்தாடும் சிங்களப் புத்திஜ“விகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றினை எப்படி எல்லாம் புரட்டிப் பேசுவார்கள் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள். சிங்கள நாகரிகத்துக்கு முற்பட்டதாக, இலங்கை பூராகவும், தமிழர் நாகரிகம் பரவியிருந்தது என்பதை அண்மைக்கால அகழ்வாய்வுகள் எண்பிக்கின்றன. இத்ந அறிவை, சரித்திர அறிவை, கல்லறைகளில் வைத்துப் புதைக்கச் சிங்கள புத்தி ஜ“விகள் ஆடும் கூத்துக்கள் கொஞ்சம் அல்ல. இரண்டு மூன்று நொஸ்க்குகளுக்குப் பாடம் படிப்பிக்கவேண்டும் என்கிற துடிப்பினையும் நேரத்தையும், தாயக மண்ணிலே எங்களுக்குரிய தொன்மையான உரிமைகளைப் பற்றிய அறிவினைப் பரப்புவதற்குப் பயன்படுத்தினால் எவ்வளவு நலமாக இருக்கும்? களத்திலே நமது போராளிகள் தற்கொடையாளராய் நாளைகளை மறுதலித்து இன்றைகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், இன்றைய விருந்துகளிலும், உல்லாசங்களிலும் நாளைகளை மறந்து வாழுதல் முறையா? தமிழ்ப் பிள்ளைகளின் தமிழறிவு, வேரடி மண்ணின் கலை--இலக்கியப் பாரப்பரியங்கள் ஆகியவற்றை வளப்படுத்தி உயிர்ப்புடன் வைக்கும் யாகத்திலே ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனும் ஈடுபடுதல் தலையாய கடமையென நான் வலியுறுத்துவேன். இவை ஆக்கப் பணிகள்--அன்புப் பணிகள்!' எனக் கூறிய தேவகுரு மீதமிருந்த தேநீரைப் பருகலானார்.

'இந்திய நிலைப்பாடு மிகவும் கவலை தருவதாக இருக்கிறது அண்ணை. 'நன்மைசெய்யப் பிறந்த நீ நன்மை செய்யாது விடினும் தீமையாவது செய்யாதிருப்பாயாக' என்கிற தத்துவம் பிறந்த மண்...லட்சக் கணக்கான பிரதிகள் விற்பதாகப் பீத்திக் கொள்ளும் பத்திரிகைகள்கூட தாயகப் போரினைக் கொச்சைப்படுத்தும் வகையில் தலையங்கங்கள் எழுதுவது மிகவும் சோகமானது...' என்று தன் மனசினை அரித்துக் கொண்டிருக்கும் ஒரு சந்தேகத்தினை ரகு கேட்டான்.

'இந்திய நிலைப்பாடு மிகவும் தெளிவானது. ஈழத் தமிழர்களுடைய அன்றைய அரசியல் தலைவர்களே தவறான நம்பிக்கைகளை ஊட்டிவந்துள்ளார்கள். இந்தியத்துவத்துக்கு ஒரு நிலைப்பாடு உண்டு. ஜனத்தொகையாலும், நிலப்பரப்பாலும் தனக்கு வல்லரசு அந்தஸ்துக் கிடைக்க வேண்டும். என்று அது கருதுகிறது. எல்லாவற்றுக்கும் அச்சமும், அறியாமையும், சுயநலமுமே காரணம். இவை இந்திய ஆன்மீக சுத்தத்துக்கு முரணானவை என்பதைச் சின்னத் தனமான புத்தி ஜ“விதத்துவம் உணருவதில்லை. இந்தியாவுக்கு பாகிஸ்தானை நினைத்து அச்சம்; சீனாவை நினைத்து அச்சம்; அமேரிக்காவை நினைத்து அச்சம். ஆன்மீகம் பற்றிப் பேசும் இந்தியா, தாங்க முடியாத ராணுவச் செலவினங்களைத் தாங்கி அணு ஆயுதத் தயாரிப்புகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த அச்சமே காரணம். 'பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம்' என்கிற அவசரங்கூட இந்த அச்சத்தின் அறிகுறியே! 'வங்கதேசம்' தனியாகத் தோன்றுவது பாகிஸ்தானின் வளத்தைக் குறைக்கும் என்கிற கணிப்பின் பிரதிபலிப்பே. மனிதநேயத்தின் வெளிப்பாடு அல்ல. தமிழீழ ஆதரவு இந்திய ஒருத்துவத்தைக் குலைத்துவிடும், இந்தியாவில் பிரிவினைக் கோஷங்களை வளர்க்கும் என்கிற நியாயம் அறியாமையிலே தோன்றியது. காலிஸ்தான் பிரிவினைக் கோஷம், அஸ்ஸாம் பிரிவினைக் கோஷம் எல்லாம் ஈழப் பிரிவினைக் கோஷத்தின் எதிரொலியா? சிங்களத்துவம் என்பது இந்திய விரோதக் கொள்கைதான் என்பதை அறியாத சவலைகள் தில்லியிலே திட்டமிடுகிறார்கள். தெற்கே சுதந்திர ஈழம் தோன்றுவது, நிச்சயான ஒரு நேசநாட்டினை உருவாக்கும் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். திம்புப் பேச்சு வார்த்தைகளைச் 'சொதப்பியவர்' ரமேஷ் பண்டாரி. இதிலே சுயநல அக்கறைகள் எவ்வளவு தூரம் புகுந்தன என்பது விசாரிக்கப் பட்டதா? பன்னிரண்டு இலட்சம் ரூபா மதிப்புள்ள வைர அட்டியலை அவருக்குப் பரிசளித்த பின்னணி என்ன? போஃவேர்ஸ் ஊழலைத் திசை திருப்பலாம் என்கிற கணிப்பு எவ்வளதூரம் ஈழப்படையெடுப்புக்குத் தூண்டியது என்கிற சத்திய ஆய்விலே எத்தனை பேர் ஈடுபட்டார்கள்? சிங்கள இனவாத மேட்டிமைகளுக்காகப் போராடி எத்தனை இந்திய ஜவான்கள் உயிரிழந்தார்கள்? இருப்பினும், சிங்கள அரசியல்வாதிகளாலே அவமதிக்கப்பட்டுத்தானே இந்திய ஜவான்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்? இந்த அவமதிப்புகளுக்குப் பின்னரும் சிங்களருக்குச் சாதகமான கொள்கைகளை வகுப்பவர்கள் யார்? ஏன்? இவற்றைப் பற்றிச் சிந்திக்கும் மனச்சாட்சியுள்ள இந்தியர்கள் எத்தனை பேர்? தமிழ் நாட்டிலே வாழும் பிராமணர்கள் திராவிடக் கட்சிகளின் மேலாதிக்கத்தினாலும், ஓங்கு பிரசாரங்களினாலும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். அவர்களுடைய அச்சங்கள் அநுதாபத்துடன் விளங்கிக் கொள்ளத் தக்கன, 'வடக்கு மனதே' என்கிற ஆராதனை எவ்வளவு தூரம் அவர்களுடைய பயங்களைகளையவல்லன? இதனை அவர்கள் மானசீகமான புனர் ஆலோசனைக்கு உட்படுத்துதல் வேண்டும். ராஜாஜி இந்திய நாட்டின் முதலாவது ராஷ்ரபதியாக வருவதற்கான சகல தகைமைகளும் கொண்டிருந்தார். ஏன் அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது? வெங்கடேஸ்வரன் என்கிற தமிழர் வெளியுறவுச் செயலராக இருந்தார். இலங்கையின் சிங்கள - தமிழ்ப் பிரச்சினையை நன்றாக அறிந்திருந்தார். என் அவர் பகிரங்க அவமதிப்புகளுடன் வெளியுறவுத் துறையிலிருந்து தூக்கியெறியப்பட்டார்? தமிழ் நாட்டின் பிராமண மூளைகளை வடபுலத்து அரசியல்வாதிகள் கறிவேற்பி€லைகளாகக் கருதுகிறார்களா? இவற்றை எல்லாம் சத்தியமான மறுபரிசீலனைக்கு உட்படுத்த வல்ல புத்திஜ“விகளும் பத்திரிகையாளரும் தமிழ் நாட்டுப் பிராமணர் மத்தியில் இல்லையா? இத்தகைய எத்தனையோ கேள்விகளுக்கு விடை தெரியாது தவிக்கின்றேன். இந்திய நிலைப்பாடு சம்பந்தமாக விடை கிடைக்காத இன்னும் பல கேள்விகளை இந்தச் சந்தர்ப்பத்திலே உங்களுக்குச் சொல்லி விடுகின்றேன். இந்திரா அம்மையார் மூத்தவன் ரஜ“வ் இருக்க, ஏன் இளையவன் சஞ்சேயை அரசியலுக்குக் கொண்டு வந்தார்? இந்திரா அம்மையாரின் அவசரகால ஆட்சியிலும், அதனைப் பின் தொடர்ந்த கெடுபிடி ஆட்சியிலும் ரஜ“வ் எங்கே இருந்தார்? அவருடைய அரசியல் நிலைப்பாடு என்ன? சஞ்சேய் உயிருடன் இருக்கும் வரையிலும், ரஜ“வ் அரசியலுக்கு லாயக்கற்றவர் என்பதுதானே இந்திரா அம்மையாரின் நிலைப்பாடு? மகாத்மா காந்தியின் கொலையிலே தண்டனை பெற்றவர்கள் எத்தனை பேர்? அவரைக் கொலை செய்யச் சதிசெய்த அரசியல் இயக்கம் இன்றும் தடை செய்யப்பட்டிருக்கின்றதா? இந்திரா காந்தியின் கொலையிலே தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்? ரஜ“வ் கொலையினை புலி இயக்கத்துக்கு எதிரான கால் நூற்றாண்டு பிரசாரத்திற்கு அடித்தளமாக அமைதல் வேண்டும் எனத் திட்டமிட்டது யார்? அதிலே தமிழ் ஜனாதிபதியான வெங்கட்ராமனுக்கு எவ்வளவு பங்குண்டு? ஏன் ரஜ“வ் காந்தியின் கொலை சம்பந்தமாக ஒரு 'Mani Mass Massacre' நடத்த அதிகாரிகளும் நீதித்துறையும் கச்சை வரிந்து நிற்கின்றன? காந்தி பெயரால், நேரு பெயரால், அம்பேத்கார் பெயரால், இந்திரா பெயரால், கட்சிகள் தோன்றவில்லை. ஏன் ரஜ“வ் பெயராலே ஒரு கட்சி--அது Letter - Pad கட்சியே யாயினும் - நடத்தப் படுகின்றது? விதவை சோனியா காந்தி, நேரு அரச பரம்பரையின் சட்டப்பூர்வமான வாரிசு தானே என்கிற உர்மை கோரலுடன் புயல்வேக அரசியற் பிரசாரங்கள் செய்கின்றார். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் எட்டு ஆண்டுகளுக்கு மேலாகவும் ரஜ“வின் மரணவீட்டுச் சோபிதங்கள் கலைக்காமல் பாதுகாக்கப்படுகின்றன. இது ஏன்?'

'அண்ணை, நீங்கள் கேள்விகளாக அடுக்குகின்றீர்கள். நாங்கள் எங்கே பதில் தேடுவோம்?' என்று கேட்டு அர்ஜுன் சிரித்தான்.

'இந்திய நாட்டின் அரசியல் ஆரோக்கியத்திற்காக இந்தியக் குடிமக்களே சரியான விடைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் அறிவு நாகரிகம். அல்லையேல், அதிகப் பிரசங்கித்தனமாகிவிடும். ஈழத்தமிழர்களுக்கான நிலைபாடுகள் பற்றி தமிழ்நாட்டின் பத்திரிகையாளர் சிலர் முடிவுகள் அறிவிக்க முந்திரிக் கொட்டைகளாக முந்தி நிற்பது எனக்கு எரிச்சலைத் தருகின்றது. ஆனால், அதே தவறினை நானே செய்ய விரும்பவில்லை. ஆனாலும், ஒன்று. மத்திய அமைச்சர்களின் சந்திரிகா தழுவலை விளங்கிக்கொள்ள முடிகிறது. அடுத்த வீட்டிலே வாழும், ஆயுதங்களைத் தொடாத அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். 'இது அவனுடைய வீட்டுச் சண்டை; இதில் நாங்கள் தலையிடக்கூடாது' என்று தர்மம் பேசப்படுகின்றது. அடிவாங்கிறவனுடைய உடல் ரணங்களும், மனக்காயங்களும் மறக்கப்பட்டுவிட்டன. அடிக்கிறவனுடைய கைகளிலே சுளுக்கு ஏற்பட்டால், என்ன மருந்து கொடுக்கலாம் என்று ஆலோசிக்கப்படுகின்றது. இந்த நூற்றாண்டின் இந்த மகா சோகம் அடுத்த ஆண்டிலும் நீளும் போலவும் தோன்றுகின்றது. புத்தர்-மகாவீரர்-இராமகிருஷ்ணர்-காந்திஜ“ ஆகியோர் வளர்த்தெடுத்த அன்பு தர்மத்துக்கு என்ன நடந்தது? எத்தகைய இந்தியா! ஒவ்வொரு ஈழத்தமிழனும் தனது அறங்களினதும், அன்புப் பண்பாடுகளினதும் வற்றாத ஊற்றாகச் சம்பாவனை செய்யும் இந்தியா! அந்த மண்ணிலே பாதம் படுவதுதான் வாழ்க்கையின் உச்சப் புண்ணியம் என வணங்கப்பட்ட இந்தியா! அந்தப் புனித மண் எப்பொழுது தொடக்கம் மனித நேயத்தை இவ்வாறு கால்களின் கீழே போட்டுத் துவம்சம் செய்யப் புறப்பட்டது? ஏன்? என் அப்பாவும்-அம்மாவும் சிதம்பரத்தையும் காசியையும் ஒரு தடவை தரிசித்த பின்னர்தான் தமது உயிர் பிரிய வேண்டும் என்று ஆசை ஆசையாகச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இத்தகைய அற்புத புண்ணிய பண்புகளை இந்திய மண்ணிலே கவிய வைத்த அந்த புண்ணியர்களும் பரமஹம்ஸர்களும், மகாத்மாக்களும், மாமனிதர்களும் எங்கே?... தம்பிமாரே, நீங்கள் நம்பமாட்டீர்கள். இந்திய மண் எவ்வாறு, எப்பொழுது மானிட நேயத்தைத் தொலைத்தது என்று விடிய விடிய யோசித்து மனம் கலங்கிய இரவுகள் ஏராளம்...' என்று கூறி, தேவகுரு நிறுத்தினார்.

அவர் குரல் கம்மின்று.

அடர்ந்த நிசப்தம் பரவியது.

'எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். பிழையான விளங்கங்களுடன் நாங்கள் துள்ளிக் குதித்துள்ளோம் என்பதைத் தெளிவாக உணருகிறோம்...' என்றான் அர்ஜுன்.

'நாங்கள் எந்தெந்த வழிகளிலே உபயோகமாகச் செயற்படலாம் என்று நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும்...' என்றான் அமுதன்.

'உங்களிடம் நாங்கள் படிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது. வீட்டுக்கு வந்து தொந்தரவு தருவோம்' என்று ரகு அன்புடன் எச்சரித்தான்.

'எந்த நேரமும் வரலாம். ஞானத்தின் கதவும், அன்பின் கதவும் எப்பொழுதும் திறந்து வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். உங்களோட இவ்வளவு நேரமும் கதைச்சது மகிழ்ச்சியாக இருக்கிறது...'

தேவகுரு எழுந்து நடக்கத் துவங்கினார்.

சற்குணமும், இளைஞர்களும் உடன் வந்தார்கள்.


11

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 - 13)!வார்டோ அமைதி அநுபவித்தது.

இந்த அமைதி தமிழருக்குச் சந்தோஷத்தை அளித்தது.

கொஞ்சக் காலமாக எல்லாப் பிரச்சினைகளையும் மறந்து தங்களது வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழர்கள் நிம்மதியாக இருப்பது ஜோனுக்குப் பிடிக்கவில்லை. தமிழர்கள் மனதில் நீங்காத பயத்தை ஏற்படுத்த வேண்டும்; அந்தப் பன்றிகளை நோர்வேயிலிருந்து கலைக்க முடியா விட்டாலும், வார்டோவிலிருந்து விரட்டியடிக்க முடியும் என அவன் நம்பினான்.

போலிஸ் தலையீட்டுக்குப் பின்னர், இரண்டு மூன்று தடவைகள் அந்த நால்வரும் இரகசியமாகச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உருப்படியான புதிய திட்டம் எதுவும் தீட்டவில்லை. ஜோன் அவர்களுடைய குழுவிலே இருந்த போதிலும், தனியாகச் செயற்படுவதே பாதுகாப்பானதாக அவனுக்குத் தோன்றியது. தான் தனித்துச் செய்த காரியம் இதுவரையிலும் அம்பலமாகாதது அவனுக்கு மேலும் துணிச்சலைக் கொடுத்தது. இன்னுமொன்றை நன்கு திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

இப்பொழுது கோடை காலம். இரவைப் பகலாக்கிக் கொண்டு சூரியன் எப்பொழுதும் காவலாய் நின்றது. எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. செய்யப் பயமாகவும் இருந்தது. ஜோன் ஒருவாறு தன்னைச் சமாதானம் செய்தான். செய்வதைப் பிடிபடாமல் செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டான். அதற்கு இது உகந்த காலம் அல்ல என்பது புரியவே, காலம் கனிவதற்காகக் காத்திருந்தான்.

கோடை முடிந்து, குளிர்காலம் துவங்கியது. நாள் முழுவதும் எட்டிப் பார்க்கவே விரும்பாதவனைப் போல சூரியன் தெற்கே சென்றுவிடுவான். இந்த இருட்டும் குளிரும் பலருக்கு-குறிப்பாகத் தமிழர்களுக்கு - வேதனை தந்தாலும், ஜோனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்தத் தமிழ்ப் பன்றிகளுக்கு அதிர்ச்சியும் அச்சமும் ஊட்டுவதற்கு இதுவே நல்ல சந்தர்ப்பம் என நினைத்தான். ஜோன் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டான். தன்னைப் போலிஸ’லே மாட்டிக் கொள்ளாமல் பாதுகாக்கும் அளவுக்குச் சிந்தித்துச் செயலாற்றினான்.

விமானம் எடுத்து சிக்கனெஸ் சென்றான். அங்கு சாஸ் ஹோட்டலில் அறை எடுத்தான். ஆள்மாறாட்டம் செய்யக் கூடிய பத்திரத்தைக் காட்டு எடுத்த சாரதிப்பத்திரம் அவனிடம் இருந்தது. அந்தப் போலிப் பத்திரங்களைக்காட்டி, கார் ஒன்றை வாடகைக்கு எடுத்தான். திரும்பி இங்கே வந்து கொண்டிருந்தபொழுது, அவனுக்கு அந்த யோசனை தோன்றியது. பனி அதிகம் கொட்டியிருக்கவில்லை. கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். காற்றும் மூர்க்கமாக வீசவில்லை. மலைக்குச் சென்று விட்டு இரவு ஒரு மணிக்கு நகருக்குள் செல்லலாம் என எண்ணிக் கொண்டான். அவன் மலைக்குச் சென்றான். காரைச் சிறிய வீட்டின் பின்புறத்திலே நிறுத்தினான்.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான். அவனுக்கு களைப்பாக இருந்தது. விறகுகளை எரியப் போட்டுவிட்டுப் படுத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் அவன் தன்னை மறந்து தூக்கத்தில் ஐக்கியமானான்.

கோகிலா காதைப் பொத்திய வண்ணம் அழத் துவங்கினாள். நேரம் செல்லச் செல்ல, அழுகை கூடிக் கொண்டே சென்றது. நித்தியாவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. முதலில் காதை மெதுவாகத் துடைத்தாள். துடைத்து முடிப்பதற்குள் பெரும் பாடாகிவிட்டது. தொடவிடவே இல்லை. பெரும் கஷ்டப்பட்டே துடைத்தாள். மாலதி உதவிக்காக கோகிலாவைப் பிடித்துக் கொண்டாள். காதுக்குள் துடைப்பதற்குள் நித்தியா பயந்தாள். மெதுவாகப் பயந்து பயந்தே துடைத்தாள்.

துடைத்து முடித்தபொழுது நித்தியா களைத்துப் போனாள். கோகிலா இன்னமும் அழுதுகொண்டே இருந்தாள். சிறிது நேரத்தில் எல்லாம் மாறிவிடும் எனக் கூறிய சமாதானம் அவளிடம் பலிக்கவில்லை. காதைப் பொத்திய வண்ணம் இன்னமும் வலியால் துடித்தாள். நித்தியாவுக்குப் பொறுக்க முடியவில்லை. அந்தப் பிஞ்சு வேதனைப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது நரகமாய்த் தோன்றியது.

நித்தியா தேவகுருவுக்கு போன் செய்தாள்.

'நான் நித்தியா.'

'ஓ, நான்தான். என்ன விஷயம்?'

'கோகிலா வலியால் துடிக்கிறாள்.'

'அவளுக்கு என்ன?'

'காதைப் பொத்திக் கொண்டு வலியால துடிக்கிறாள்.'

'துடைச்சியே? உப்புத் தண்ணி ஏதாவது விட்டனியே?'

'நான் துடைச்சன். அவள் இன்னமும் வலியால துடிக்கிறாள். உப்புத் தண்ணி விட்டா டொக்டரிட்டைப் போகேக்க பேசினாலும் பேசுவாங்கள். எனக்குப் பயமா இருக்குது. வாறியளே?'

'இதுக்குப் பயந்து கொண்டு...'

'பிளீஸ்...'

'சரி நான் வாறன். நீ அவளை வெளிக்கிடுத்து...'

போமனிடம் போய் விடயத்தைச் சொல்லி, அவசர அவசரமாகப் புறப்பட்டு வீட்டுக்குச் சென்றார். உள்ளே நித்தியாவும் மாலதியும் கோகிலாவை வெளிக்கிடுத்தப் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

தேவகுருவைக் கண்டதும் கோகிலா இன்னும் வீறிட்டுக் கத்தினாள். அவர் அவசரமாகக் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டார். மீன் நாற்றத்தைக் கழுவிவிட்டு வந்த போதும், கோகிலாவின் கதறல் நிற்கவில்லை.

நேரத்தைச் சுணக்காது, அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். மருத்துவர் உடனே பார்க்கவில்லை. காத்திருக்க நேர்ந்தது. மருத்துவர்களுக்கு அதிக வேலை இருந்திருக்க வேண்டும். அங்கும் இங்கும் ஓடித் திரிந்தார்கள். கோகிலா செய்த ஆர்ப்பாட்டங்களைப் பார்த்த பின்னர்தான், மருத்துவர் கவனம் கிட்டுவதாயிற்று. அவளைப் பார்வையிட்ட மருத்துவர், அவளுடைய காதுக்குள் ஏதோ திரவத்தை ஊற்றினார். வைத்தியம் அவ்வளவே. நித்தியாவுக்குத் திருப்தியில்லை. 'உங்கள் வைத்தியம் திருப்திதரவில்லை' என்று சொல்ல முடியுமா?

வீடு திரும்பினார்கள்.

கோகிலா அவர்களைப் படுக்கவிடவில்லை.

இரவு பன்னிரண்டு மணி. கோகிலா அழுவதை நிறுத்தவில்லை. அவளைத் தேற்ற எடுத்த முயற்சியில் நித்தியா களைத்துப்போனாள். அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஏதாவது செய்தே ஆக வேண்டும். லார்ஸ”க்கு போன் செய்வோமோ என முதலில் எண்ணியவர், அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார். வழமையாக இரவில் தொடர்பு கொள்ளும் எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முயன்றார். அப்பொழுதும் ஒரு பெண் மருத்துவருடன் மோபைல் போனில் தொடர்பு கொள்ள முடிந்தது. தேவகுரு நிலைமையையும் அதன் கடுமையையும் விளங்கப்படுத்த, மறுமுனை உடனே புறப்பட்டு வருமாறு கூறியது.

மாலதி நன்றாகத் தூங்கிவிட்டாள். நேரத்தைப் பார்த்தார். பன்னிரண்டு நாற்பது. அவள் தூங்கினால், எழுப்ப முடியாது. அணுங்கிக் கொண்டும் சிணுங்கிக் கொண்டும் அவதிப்படுவாள். தூக்கத்திலே எழும்பும் வழக்கம் அவளிடம் கிடையாது. அவளை எழுப்புவதா விடுவதா என்று தேவகுரு சங்கடப்பட்டார்.

'மாலதியை எழுப்ப வேண்டாம். அவள் தூங்கட்டும். நாங்கள் சுறுக்கா வந்திடலாம்தானே?" என்று நித்தியா சொன்னாள்.

மருத்துவமனையில் இப்பொழுது ஒரு -ண் மருத்துவர் இருந்தார். அவர் கோகிலாவைக் கனிவோடும் கவனத்தோடும் பரிசீலனை செய்தார். காதைச் சுத்தப்படுத்தி, மீண்டும் ஏதோ மருந்தினைப் போட்டார். இரண்டு வகைக் குளிசைகளைக் கொடுத்துடன், தன் கைப்படவே ஒவ்வொன்றை உடனே விழுங்கச் செய்தார். ஒன்று நித்திரை குளிசையாக இருக்க வேண்டும். கோகிலா களைத்துப் போனாள். குளிசைகளை விழுங்கியதும் தூங்கத் துவங்கினாள். அவள் வேதனை துறந்து துங்குவது நித்தியாவுக்கு ஆறுதல் தந்தது.

லார்ஸ் கூறியவற்றிலிருந்து தேவகுருவின் ஊழியத்தைப் பற்றி அந்தப் பெண் மருத்துவர் அறிந்திருந்தார். அவரைப் பார்க்கவும் விரும்பியிருந்தார். பார்ப்பதற்கு வேறு நோயாளிகளும் இருக்கவில்லை. எனவே, அவர் தேவகுருவுடன் ஆறுதலாக உரையாடினார். லார்ஸ”டன் சேர்ந்து தானும் நிறவெறிக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட விரும்புவதாகவும் கூறினார். அவர்களுடைய பேச்சு காந்தியம் பற்றியும் திரும்பியது. நேரம் போவது தெரியாமல் மருத்துவரும் தேவகுருவும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நித்தியா அவர்களுடைய உரையாடலில் குறுக்கிடவில்லை.

நேரத்தைப் பார்த்த நித்தியா திடுக்குற்றாள். மருத்துவரின் அறைக்குள் நுழைந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகிவிட்டது.

'மாலதி நித்திரையால எழும்பினால், பயந்து அழுதாலும் அழுவாள்...'

'ஓ...ஓ...சுறுக்காப் போவம்.'

'உங்களுக்கு விருப்பமான கதை கிடைச்சோடனை எல்லாத்தையும் மறந்து போனியள்...'

மருத்துவர் விளங்காது விழித்தார். நாகரிகம் கருதி, தங்களுக்கிடையில் நடைபெற்ற உரையாடலின் பொழிப்பினை நொக்ஸ’லே சொன்னார்.

'ஓ...சொறி. பிள்ளையைத் தனிய விட்டுட்டு வரக்கூடாது...'

'அவசரத்தில் வேறு வழியும் தெரியவில்லை...'

'விரைவில் வீடு போய்ச் சேருங்கள்...காத.'

'காத.'

ஜோன் தான் தயாரித்து எடுத்த பெற்றோல் குண்டுடன் காருக்குள் ஏறிய பொழுது, நேரம் ஒன்றேகால் இருக்கும். கையுறை போட்டு கொண்டான்.

வெளியே இருட்டாக இருந்தது. வீதியில் நடமாட்டமும் இல்லை.

தான் தயாரித்த குண்டினை யார் வீட்டில் எறிவது என்பது பற்றி பகல் பொழுதே தீர்மானித்திருந்தான். 'இந்தப் பன்றி ஒன்றுதான் எல்லாத் திட்டங்களையும் கெடுக்கிறது. இவன்ர பேச்சை நம்பித்தான் எங்கட பிசாசுகள் சிலவும் அவனோட சேர்ந்து கூத்தாடுதுகள். இந்தப் பன்றி இல்லாவிட்டால், தமிழர்கள் கொதித் தெழுந்து ஏதாவது செய்வார்கள். அப்ப எங்கள் சனத்திடமிருந்து தமிழ்ப் பன்றிகளைப் பிரிக்கலாம்...எங்கள் பிளான் வேலை செய்யும்...' என்று தீர்மானித்திருந்தான்.

'இப்பொழுது நல்ல தூக்கத்திலே படுத்துக் கிடப்பான். இந்தக் குண்டு நல்ல பவர்வுள். தனித் தயாரிப்பு. சட்டென்று பற்றி எரியும். எங்கும் ஓடமுடியாது. இந்த அரைக் கிழட்டுப் பன்றி தப்ப முடியாது. இத்தோடு இந்தப் பன்றிக் கூட்டம் ஓடித் தொலையும்...' இப்படி மனசுக்குள் எண்ணிய வண்ணம் ஜோன் காரை ஓட்டினான்.

வீடு வந்துவிட்டது. அது தேவகுருவின் வீடுதான். இவருடைய தலைமை உடைய வேண்டும் என்பதில் ஜோன் குறியாய் இருந்தான். முழுக் குடும்பமும் உள்ளே தங்கியிருக்கும் என எண்ணிக் கொண்டான். ஏனோ அவனுக்குப் பயமாகவும் பதட்டமாகவும் இருந்தது. மறுகணம், நிறவிரோத வெறி அவனை ஆட்கொண்டது.

காரை நிறுத்தியதும் முகமூடியை விறுவிறு எனப் போட்டுக் கொண்டான். பாய்ந்து இறங்கினான். கொண்டு வந்திருந்த இரும்புக் குழாயால் தூர நின்றே சமையல் அறைக் கண்ணாடியை ஒரு தட்டுத் தட்டினான். பெரிய ஓட்டை சமைந்தது. மீதிக் கண்ணாடிகள் குத்திக் கொண்டிருந்தன. இரவின் நிசப்தத்தில் சத்தம் பெரிதாக ஒலித்ததாகத் தோன்றியது. அதைப் பற்றிக் கவலை இல்லை. பெற்றோல் குண்டைக் கொளுத்திச் சமையல் அறைக்குள் இருந்த அடுப்பை நோக்கி எறிந்தான். போத்தல் சிதற கபகப என நெருப்புப் பற்றியது. ஜோன் காரை வேகமாக்கினான். இவற்றை எல்லாம் ஒரு முப்பது செக்கனுக்குள் செய்து முடித்திருப்பான். இதனைக் கச்சிதமாக முடிப்பதற்கு அவன் யாருக்கும் தெரியாமல் பலநாள் பயிற்சி செய்து பார்த்திருக்கிறான்.

எல்லாமே முடிந்த பிறகுதான் ஒன்றைக் கவனித்தான். அந்தப் பன்றியின் காரைக் காணவில்லை. அது அவனுக்கு உறைத்தது. இனி மினக்கெடுவது ஆபத்து. ஜோன் அதற்கு மேல் நகருக்குள் நிற்கவில்லை. அவனுடைய கார் அதிவேகத்தில் சிக்கனெஸ் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.

வீடு கபகப வெனப் பற்றிக் கொண்டு எரிந்ததால் பக்கத்து வீடுகள் விழித்துக் கொண்டன.

தீயணைப்புப் படைக்கு அறிவித்ததும், சில நிமிடத்தில் தீயணைப்புப் படையும் காவலர்களும் தலத்துக்கு விரைந்து வந்தார்கள்.

வீட்டுக்கு அருகே நெருங்க முடியாதவாறு நெருப்பு மிளாசி எரிந்தது. உள்ளேயிருந்து படபடவென வெடிக்கும் ஓசை கேட்டது. விட்டிற்குள் யார் இருக்கிறார்கள் என்பது புரியாது இருந்தது. இருந்தும் தீயணைப்புப் படை வீரர்களுள் இருவர், உள்ளே, மறுகரையால் கண் இமைக்கும் நேரத்திற்குள் புகுந்து கொண்டார்கள்.

கோகிலா தூங்கிப் போனாள். 'அவளைப் படுக்க வைக்க வேண்டும்; எப்பொழுது வீட்டுக்குப் போவோம்' என நித்தியாவின் மனசு துடிக்க, தேவகுரு காரை ஓட்டிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் மருத்துவர் பேசியவற்றை அவர் மனசு அசைபோட்டது. இன-நிற பேதங்களுக்கு எதிராக, நல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் வளர்ப்பதற்காகத் தாம் எடுத்த எத்தனங்கள் நோர்வே மக்களிடம் வரவேற்கப்படுதல் அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

அந்த விபரீதத்தினை முதலில் உணர்ந்தவள் நித்தியாதான்.

'அங்க பாருங்கோ, எங்கட வீடு பற்றி எரியுது' என்று நித்தியா கத்தினாள்.

வீட்டுக்கு முன்னால், மக்களின் பாதுகாப்புக் கருதி, போலிஸார் தடைகள் எழுப்பி இருந்தார்கள். எங்கும் நெருப்பும் அதன் ஜுலையும்! தீயணைப்புப் படையினர் மேலெழும் தீநாக்குகளை அடக்கத் தண்­ர் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

தேவகுரு காரை நிறுத்தி, வீட்டை நோக்கி ஓடினார். கோகிலாவைக் காருக்குள் கிடத்திவிட்டு, நித்தியா அவர் பின்னால் ஓடினாள். வீடு எரிவதைப் பார்த்து அதிர்ந்த அவள், உள்ளே மாலதி படுத்திருக்கிறாள் என்கிற நினைவு பளிச்சிடவே, நிக்பிரமை பிடித்தவள் போலானாள்.

'ஐயோ, என்ரை பிள்ளை மாலதி வீட்டுக்க. ஓடுங்கோ...ஓடுங்கோ...அவள் இல்லாட்டி நான் செத்துப் போயிடுவேன்...' என்று கூச்சலிட்டாள்.

உள்ளே நுழைந்திருந்த தீயணைக்கும் படைவீரர்கள் இருவர் மாலதியைத் தூக்கிக் கொண்டு, நெருப்பைப் பிளந்து வெளியே வந்தார்கள். உடனடியாக வெளியே காத்துநின்ற அம்புலன்சில் ஏற்றினார்கள். பிள்ளையைப் பார்க்கத் திமிறிய நித்தியாவையும், தேவகுருவையும் போலிஸார் பிடித்துக் கொண்டனர்.

'நேரம் முக்கியம். நீங்கள் மருத்துவமனையிலே சென்று பார்க்கலாம்...' என்று அவர்கள் சமாதானம் கூறினார்கள்.

எரியும் வீட்டுக்கு முன்னால் நிறைய ஆள்கள் கூடிவிட்டார்கள். தமிழர்கள் நின்றார்கள். நோர்வேயரும் நின்றார்கள். எரியுண்ட பிள்ளையின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்வதற்கான வார்த்தைகளைத் தொலைத்து விட்டவர்களைப் போல அவர்கள் மௌனமாகவே நின்றார்கள்.

தேவகுரு காருக்கு விரைந்தார். நித்தியா பின் தொடர்ந்தாள். இருவரும் காருக்குள் ஏறிகொண்டார்கள். அவருடைய கார் மறைந்து விட்ட அம்புலன்சைத் தொடர்ந்து, மருத்துவ மனைநோக்கி விரைந்தது.

தீயணைப்புப் படை தீயிலிருந்து கட்டடத்தை மீட்கும்போரிலே ஈடுபட்டிருந்தது.

'எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை...உங்கள் பிள்ளைக்கு எங்களாலே உதவ முடியவில்லை...'

அவர்களைப் பார்த்து மருத்துவர் சொன்னார்.

'என்ன?'

'அனுமதிக்கும் பொழுதே உயிரில்லை...'

'ஐயோ, இல்லை...என்ரை மாலதி உயிரோடு இருக்கிறாள்! இவர் என்ன சொல்லுறார்?' என்று நித்தியா கத்திய வண்ணம், தேவகுருவின் சேட்டைப் பிடித்து உலுக்கினாள்.

எதனையும் ஏற்க முடியாது தேவகுரு சிலையாக நின்றார். அந்தச் சிலையின் கண்கள் மட்டும் கசிந்து உருகிற்று...


12

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 - 13)!ரகுவுக்கு ஏன் தேவகுரு அண்ணன் தன்னை அழைத்திருந்தார் என்று புரியவில்லை. அவர் குளித்துக் கொண்டிருப்பதாக நித்தியா சொன்னாள். அவனைக் கதிரையில் அமரும்படி கேட்டுக் கொண்டாள். அவன் அமர்ந்து, நித்தியாவைப் பார்த்தான். அவ உருவந் தெரியாது போய் விட்டதாக அவனுக்குத் தோன்றியது. மாலதி வாழ்ந்த காலத்தில், அவள் ரகுவைக் கண்டதும் 'மாமா' என்று அழைத்துக் கொண்டு மடியில் வந்து அமர்ந்து கொள்ளுவாள். இன்று...? கோகிலா தரையில் இருந்து தனிமையில் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுடன் போட்டி போட யாரும் இல்லை. சண்டை போட யாருமில்லை. வாழ்க்கையின் கலகலப்பில் சண்டையும் ஒரு பகுதியா?

'எப்பிடியக்கா இருக்கிறியள்?'

'ஏதோ இருக்கிறம்.'

'ஊருக்குப் போகப்போறதாகச் சொன்னியள்...'

'சொன்னன்.'

'ஏன்? அண்ணருக்கு விரும்பமில்லையோ?'

"விருப்பமில்லை' எண்டு ஒரு வசனத்தில சொன்னா விளங்கும். அவர் ஏதேதோ சொல்லுறார்...'

'என்ன சொல்லுறார்?'

அப்பொழுது தேவகுரு குளியலறையிலிருந்து வந்தார்.

'இந்தா, அவரே வந்திட்டார். அவரிட்டையே கேட்டுத் தெரிஞ்சு கொள் தம்பி...நான் இரண்டு பேருக்கும் தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன்...' என்று கூறி, நித்தியா குஷ’னிப் பக்கம் சென்றாள்.

'ஏன் அண்ணை...'என்று ரகு இழுத்தான். அவன் என்ன கேட்கிறான் என்பது அவருக்குப் புரிந்தது. விளையாடிக் கொண்டிருந்த கோகிலாவைத் தூக்கி ஆதரவுடன் தமது மடியிலே வைத்துக் கொண்டார்.

'மாலதியை இழந்து அக்கா உக்கிப் போனா...எனக்கு விளங்குது. இத்தகைய இழப்புகளை கால ஓட்டத்திலேதான் மறக்கப் பழகவேணும்...உணர்ச்சிகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுத்து எடுத்த முடிவுகளாலே நான் அடைந்த துன்பங்கள் பல...பக்குவமின்மை காரணம். ஆனால், இப்பொழுது உண்மையிலே உறுதி பூண்டு வாழ விரும்புகிறேன்...இது என் வழி. என் வழிதான் சரியென்று நான் நித்தியா மீது திணிக்கவும் மாட்டேன்...என் மனைவி சுயாதீனமானவள். அதனை அங்கிகரிக்கும் பொழுதுதான் என்னால் முழு மனிதனாகவும் வாழ ஏலும்...'

'அக்கா என்ன சொல்லுறா?'

நித்தியா இருவருக்கும் தேநீர் கொண்டு வந்து பரிமாறினாள்.

'தம்பி ஏதோ கேட்கிறான், நீ சொல்லு...'

'நான் என்னத்தைச் சொல்லுற தம்பி? பொத்திப் பொத்தி வளர்த்த ஒரு குஞ்சை இந்த நாட்டில பறிகொடுத்திட்டு இருக்கிறன்...இவள் கோகிலாவை ஆதல் நல்ல முறையில் வளர்ப்பது எண்டுதான்...'

'எங்கபோய் வளர்க்கப் போறியள்?'--ரகு ஆவலுடன் கேட்டான்.

'முதலில இந்தியவில--தமிழ் நாட்டில--போய் வாழலாம் எண்டு சொன்னனான்.'

'ஓம் அக்கா...ஒஸ்லோவிலுள்ள ஐஞ்சாறு பேர், ஏன் டொன்மார்க்கிலுள்ள மூன்று நாலுபேர் மனைவிகளையும் பிள்ளைகளையும் அங்க வாழும்படி விட்டிட்டு, இங்க இருந்து இவையள் காசு அனுப்பிக் கொண்டிருக்கினம்...பெடியளும் நல்லாப் படிக்கிறதாச் சொல்லுகினம்.'

'நான் அதுக்கு மறுப்புச் சொன்னனானே?...விருப்பம் எண்டாக் கொண்டுபோய் விட்டிட்டு வாறன் என்று சொன்னனான்.'

'பிறகு என்னக்கா?'

'இவர் இங்க தனிய இருந்து கஷ்டப்பட வேணும். குளிரை உறிஞ்சிக் கொண்டு வேலை செய்யவேணும். மாசாமாசம் பணம் அனுப்பவேணும். நான் பிள்ளையை வளர்க்கிறன் எண்ட சாட்டிலை அங்க சோக்குப் பண்ண வேணும். இது எனக்கு வேண்டாம். கஷ்ட--நஷ்டம், இன்பம்--துன்பம் என்கிற எல்லாத்தையும் ஒன்றா இருந்து அநுபவிக்க வேணும் தம்பி. 'நீங்கள் உங்கட பாட்டை இங்க பாரு7ங்கோ' என்று சொல்லி, நான் போகத் தயாரில்லை. குடும்ப வாழ்க்கையில், சாகும் வரை கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சில மனைவிக்கு உண்டு. நான் பழங்காலத்தவளாகச் சிந்திக்கலாம். என்ரை கடமைகளையும் உரிமைகளையும் விட்டுக் கொடுக்க மாட்டன்...அதை நான் வடிவாச் சொல்லிப்போட்டன்...'

'உங்களையும் கூட வரட்டாம். அதுதான் விஷயம்...'

'இதிலைதான் பிரச்சினை இருக்குது. உலக நாடுகளை எடுத்துக்கொள். மனித உரிமைகளின் அடிப்படையிலும், மனித நேயக் காரணங்களுக்காகவும் நம்மவர்களுக்குப் பல நாடுகளில் அகதி வாழ்க்கையும், பின்னர் குடியுரிமையும் வழங்கப்படுகின்றன. நாகரிக உலகம் கடைப்பிடிக்கும் பொது விதி இது. ஆனால், இந்தியா? தமிழ் நாடு? ஒவ்வொரு ஈழந்தமிழனையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். ஆதாரங்கள் எதுவுமின்றி 'புலி ஆதரவாளன்' என்று சீல் குத்தி வதைக்கின்றார்கள். புலி எதிர்ப்பே பத்திரிகா தர்மமாகியுள்ளது. அது அரசாங்க ஊழியர் பலருக்கு நினைத்தவுடன் பால் கறக்கும் காமதேனுவாகியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு நாற்காலிகளைத் தக்க வைக்கும் அரசியலே சாணக்கியமாகியுள்ளது. 'வந்தாரை வாழ வைத்த தமிழ்நாடு' என்று வீர சினிமா வசனம் பேசிய மண், இன்று அகதிகளுக்கு நரகலோகம் அமைக்கும் மாயாபஜாராகியுள்ளது. ஒரு காலத்தில் தமிழ் நாட்டு மண்ணின் விருந்தோம்பலைச் சுகித்தவன் நான். அதனை மறந்து நான் பேசவில்லை. ஆனால், இன்று என் சுய கௌரவங்கள் அனைத்தையும் சரணாகதியாக்கி, தன்மான உணர்வுகள் அனைத்தையும் சோரம்போக்கி, பாராமுகம் காட்டும் ஓர் அந்நிய மண்ணிலே, தினம் தினம் அவமதிப்புகளைச் சந்தித்து வாழ நான் தயாராக இல்லை...என் வாழ்க்கையின் சத்தான பகுதியை என் குடும்பத்தின் மேன்மைக்காகச் செலவு செய்யத் தயார். ஆனால், என்ன விலையில்? இதுதான் ரகு கேள்வி...'

'தம்பி ரகு, நான் இவன்ரை உணர்வுகளைப் புரிந்து கொள்ளுகின்றேன். இப்ப கொழும்விலை பிரச்சினையில்லை என்று சொல்லுகினம்...அங்க போய் வாழ்றதுக்கும் இங்க சிலபேர் அடுக்குப் பண்ணுகினம் என்று கேள்வி. இதையும் நான் சொல்லிப் பார்த்தனான்...'

'சிங்களவங்களோட அண்டலிக்க ஏலாது என்று சொல்லித்தானே நாங்கள் அகதி நிலை கோருகிறம். இல்லையே? அப்ப நாங்கள் பொய்யன்களே? 'ஈழத்தமிழர்கள் அரசியல் அகதிகள் இல்லை; அவர்கள் பொருளாதார அகதிகள்' என்று தானே பிரசாரம் செய்யிறாங்கள். அதை எங்கட செயலால மெய்பிக்க வேணுமே? 1958 ஆம் ஆண்டில், அடிவாங்கி, உத்தரிப்புப்பட்டு, 'இனிக் கொழும்புக்கு வாறேல்ல' என்று சொல்லித்தானே கப்பலேறி யாழ்ப்பாணம் போனனாங்கள்...பிறகு, அவர்களிலே எத்தனைபேர் 'நிலைமை இப்ப சரி' என்று கொழும்புக்குப் போனவர்கள்? அவர்களிலே எத்தனைபேர் கொழும்பிலே வீடு வளவுகள் வாங்கினவை? பிறகு, 1983 இலே இப்படி எல்லாமே பிழைச்சுப் போனது? இன்னும் எத்தனை விஷேத்திலே எல்லாம் பிழைச்சுப் போகும்? இப்ப கொழும்பு நிலை சரி என்பது எத்தனை ஆண்டுகளுக்கு சாஸ்வதமானது? இந்தச் சரியான நிலைக்கு உள்ள அரசியல் உத்தரவாதம் என்ன? போகட்டும்...இலங்கைப் பிரஜா உரிமையை உதறித்தானே, இங்கு குடியுரிமை பெற்றோம்? குடியுரிமை என்பது எங்களுடைய வசதிக்கான ஒன்றா? ஆன்மீகக் கடமைகளை நமது வசதிகளுக்காகவோ, வருத்தங்களுக்காவோ துறப்பது மனித வாழ்க்கைக்கு அழகா? இப்பவும் நான் ரெடி! நாங்கள் வன்னிக் காட்டுக்குப் போய் வாழ்வோம். எங்களுடைய விடுதலை வேட்கையையும் நம்பிக்கையையும் அந்த மண்ணே அடையாளப் படுத்துகின்றது. அங்குள்ள மக்களுடைய இழப்புகள் மிகமிகப் பெரியது. அந்த இழப்புகளின் படுதாவிலே, எங்கள் இழப்புகளுக்கு மன ஆறுதல் தேடுவோம். யாரோவும், யாருடைய பிள்ளைகளும் எங்கள் மண்ணின் விடுதலைக்குப் போராட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு சுயநலம்? அவர்களுடைய இன்னல்களை மறந்து, புலம்பெயர்ந்த நாடுகளிலே உல்லாசம் கொள்ளுகிறார்களே?...மாலதி இழப்புப் பெரியது. தாங்க முடியாதது. ஆனாலும், ஆர அமர யோசிக்கும் பொழுது, ஈழத்தமிழர் தமது இனத்துவ அடையாளங்களைத் தக்க வைக்கும் நீண்ட போரிலே, தற்கொடை யாளராக வாழும் ஈழத் தமிழ் வீரத்தினை அவள் ஏதோ வகையில் அடையாளப் படுத்துகின்றாள் என்பதை நினைத்துப் பெருமைப்படுகின்றேன்...' தேவகுருவின் குரல் கம்மிற்று. மடியிலிருந்து கோகிலாவை இறக்கிவிட்டார்.

அது மாநகர சபை கொடுத்திருந்த வீடு. ஜன்னலை நோக்கி நடந்தார். அதனைத் திறந்துவிட்டார். ஜில்லென்று காற்று உள்ளே வந்தது. அவருடைய நெஞ்சின் வெப்பத்தைக் குறைக்க அந்தக் குளிர் தேவைப்பட்டது போலும்!

நித்தியாயினி, கோகிலாவைக் கட்டியணைத்தபடி, யாருக்கும் கேட்காதவாறு, இரகசியமாக விசும்பிக் கொண்டிருந்தாள்.

வாழ்க்கையென்பது கொள்கைகளுக்கும் பாசங்களுக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டமா?

ரகு தேவகுருவைச் சமீபித்தான்.

'நீ எப்படி இங்க வந்தனீ?' என்று தேவகுரு கேட்டார்.

'விக்னேஸ் drop பண்ணினது. ஏன்?'

'இல்லை. நான் உன்னைக் கொண்டுபோய் கீபிளில் விட்டிட்டு வாறன். அக்கா கொஞ்சம் அழுவது அவளுக்கு நல்லது...'

'தேவகுரு அண்ணர் எப்பொழுதும் வித்தியாசமானவர்; தனித்துவமானவர். அவர் கற்பனை உலகிலே வாழ்கிறாரா? அல்லது அவருடைய அற்புதங்களாலும், ஊழியத்தினாலும் புதிய அமைதிகள் தோன்றுமா?' என்று நினைத்தவாறு நின்றான்.

இடையில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கோகிலாவை வாரிச் சுருட்டியெடுத்து, நித்தியா படுக்கை அறைக்குள் விரைந்தாள். தேவகுரு நகர்வதற்கு முன்னர், 'நான் திறக்கிறன்' என்று சொல்லி ரகு விரைந்தாள்.

கதவைத் திறந்த பொழுது லார்ஸ் வெளியே நின்றார். ரகு அவரை வரவேற்றான்.

'காய்.'

'காய்.'

'வாங்க உள்ளே.'

'தேவகுரு?'

'இருக்கார்.'

உள்ளே வந்த லார்ஸ் அமைதியாக இருந்தார்.

'நித்தியா எங்கே?' மெதுவாகக் கேட்டார்.

'கூப்பிடவா?'

'வேண்டாம்...மருந்து?'

'நான் அதில் கவனம்.'

'நல்லது. ஏதாவது ஒரு நாட்டுக்குக் குடும்பமாப் போய்வாறது மிகவும்...'

'உங்கள் ஆலோசனைப்படி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறன்...இரண்டு மாசமாவது செல்லும். நித்தியாவின் மச்சாள் ஒருத்தி பிரான்சில் வாழுகிறாள். நாங்கள் பிரான்ஸ”க்கும் போனதில்லை.'

'பிரான்ஸ’ல் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உண்டு. பார்த்து மகிழக்கூடிய நாடு. ஒரு கேன்ஜ் மிகவும் உதவும்.'

'புரிகிறது டொக்டர்.'

'நேற்றைய டி.வி.நிகழ்ச்சி பார்த்தீர்களா?'

'புண்படுத்துவதாக இருந்தது....'

'எனக்குந்தான். என் மனைவி அதனைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டாள். வெளிநாட்டுக்காரர் கிறிமினல் என்றும், அதனாலேய சுதேச மக்கள் பயத்துடன் வாழ்கிறார்கள் என்றும் வாதாடுவது மிகவும் அபத்தம். வெளிநாடுகளில் தமிழ் மக்களுக்கு எதிராகத் திணிக்கப்படும் துன்பங்கள் மூடிமறைக்கப்பட்டுவிட்டன...'

'எந்த நாட்டிலும் கடுங் கோட்பாளர்களும் இருக்கிறார்கள். இறந்துபோன ஹ’ட்லருக்கு மறு ஜ“விதம் அளிக்கும் முயற்சியும் நடை பெறுகின்றது.'

' நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி. ஆஸ்திரி NRK நிலையத்துடன் உடனேயே தொடர்பு கொண்டு பேசினாள். அது மகா மோசமான நிகழ்ச்சி என்று அவள் விமர்சனஞ் செய்தாள். நமது வார்டோ அகிம்ஸை அரங்கு ஒரு மாற்று நிகழ்ச்சியை நடத்த அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதிலே இரண்டு தமிழர்களும் இரண்டு அல்லாதோரும் பங்குபற்றலாம் என நான் விரும்புகின்றேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?'

'நல்லது. ஆனால், விஷய ஞானமுள்ளவர்கள் கலந்து கொள்வது பயனுள்ளது.'

'முற்றிலும் சரி...அதில் நிச்சயமாக நீங்கள் பங்குபற்ற வேண்டும்...'

'என் நொஸ்க் சரளமானதல்ல...'

'மொழியல்ல; சத்தியமே முக்கியம்...இன்னொரு தமிழர் யார்?'

'சற்றே இளமையான குரல் நல்லது...'

'உங்கள் விருப்பம். மூன்றுநாள் அவகாசத்தில் பெயர் தருவீர்களா?'

'ஆம்.'

'இன்னும் ஒன்று.' என்று வாயெடுத்த லார்ஸ், ரகுவின் முன் பேச விரும்பாதவர் போல, தயங்கினார்.

'ரகு நம்பிக்கையானவன்...'

'செல்லக்கண்ணன் வீட்டை எரித்த அதே கோஷ்டிதான் உங்கள் வீட்டையும் எரித்திருக்கலாம் என்று வேக்டால் சந்தேகப்படுகிறார்...'

'அந்தச் சந்தேகம் எனக்கும் உண்டு...அவர்களுடன் நான் பேசிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.'

'கிரிமினல் மூளையுடன் செயற்பட்டிருக்கின்றார்கள். உங்களை மதித்து உங்களுடன் பேசுவார்கள் என்று நினைக்கிறீர்களா?...அவர்களுடைய குறி நீங்கள்தான் என்று சந்தேகப்படுகிறேன்...இந்நிலையில்...?'

'உண்மைக்கும் அகிம்சைக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும் என்று நான் நம்புகின்றேன். அவர்கள் அறியாதவர்களாக இருக்கலாம். அவர்கள்கூட தங்களுடைய அறியாமையையும் அச்சத்தையும் புரிந்துகொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கலாம்...'

'தேவகுரு, உண்மையில் நீங்கள் வித்தியாசமான மனிதர். உங்கள் எண்ணங்கள் மிக உணர்வானவை. அனிதா உங்களைப் பார்க்க ஆசைப்படுகின்றாள். ஓய்வு கிடைக்கும்பொழுது வீட்டுக்கு வாருங்கள். டின்னருக்கு வந்தால் மிகவும் மகிழ்வோம்' என்று கூறி எழுந்தார்.

அவருடைய கார் வரை, தேவகுரு மரியாதை நிமித்தம் நடந்தார்.

'ஹலோ, நான் அர்ஜுன்.'

'அண்ணன்தான், சொல்லடா தம்பி...'

'அவங்களை இப்ப பார்த்தனான். வீடும் தெரியும். அது அல்பிரேட் இருக்கிற வீடு. அங்கதான் போனவங்கள்.'

'என்ன செய்யலாம்?'

'உடன போனாக் கதைக்கலாம். இண்டைக்கு வெள்ளிக் கிழமை...குடிக்கத் துவங்கினால், உங்கள் பேச்சைச் செவியிலே ஏத்தமாட்டாங்கள்...'

'எங்கை இருந்து பேசுறாய்? கீபிளிருந்தே?'

'இல்லை. வழியில..பத்து நிமிஷத்தில உங்கட வீட்டில நிற்பன்...'

'அப்பா வா. அதுக்கிடையில நான் கோகிலாவைக் கொண்டுபோய் செல்லக்கண்ணன் வீட்டில விட்டிட்டு வந்திடுறன். அவை வீட்டிலதான் நிற்கினம்.'

'அப்பிடிச் செய்யுங்கோ அண்ணன்.'

'தம்பி, சொல்லுறன் என்று குறை நினைக்கக்கூடாது. நீ ஒன்றும் கதைக்கூடாது...'

'என்னை, நீங்கள் விளங்கிக் கொண்டது அவ்வளவு தானா அண்ணை? தலையிருக்க வால் ஆடாது...'

'தலையுமில்லை வாலுமில்லை...இது ஒரு ச்த்தியசோதனை...அதுதான் கவனமாய் இருக்கவேணும்...சரி, சரி, சீக்கிரம் வா...'

அவர்கள் தேவகுருவின் காரிலேயே பயணித்தார்கள். அர்ஜுன் காட்டிய சிறிய மஞ்சள் வீட்டுக்கு முன்னால் காரை நிறுத்தினார்.

இது அல்பிரேட்டின் வீடு. இப்பொழுது அவன் 'சாரத்த' வைத்திருந்தான். (சாரத்த என்பது சட்டப்படி கல்யாணம் செய்யாமல், ஆனாலும், சமூகத்தில் கணவன்--மனைவியாக ஒரு வித ஒப்பந்தத்தில் வாழ்தல்) அவள் பெயர் லேனா.

வீட்டில் மங்கலான வெளிச்சம் தெரிந்தது. இப்படியான மங்கல் வெளிச்சத்தில் மது குடித்தல் இங்குள்ளவர்களுக்குப் பிடித்தமான ஒன்று.

அவர்கள் காரை விட்டு இறங்கினார்கள். ஒரு கணம் தேவகுரு தயங்கினார். ஒரேயொரு கணந்தான். அந்த மாயையை விரட்டித் தெளிவு பெற்றார்.

கதவு சாத்தி இருந்தது. அழைப்பு மணியைத் தேவகுரு மெதுவாக ஒருமுறை அழுத்திவிட்டார். திறப்பதற்காகக் காத்திருந்தார்கள். இவர்கள் எதிர்பார்த்த யாரும் தோன்றவில்லை. பதிலுக்கு லேனா வந்தாள்.

அவள் இவர்களை எதிர்பார்த்திருக்க மாட்டாள். போலும். அவள் முகத்தில் ஆச்சரியம் நெளிந்தது. இருப்பினும், சுதாரித்துக் கொண்டு, 'என்ன வேண்டும்?'என்று கேட்டான்.

'நான் அல்பிரேட், செல்...என்று சில நண்பர்கள். பார்த்தால் தெரியும். அவர்கள் கொஞ்சம் பேசவேணும்...உள்ளே இருக்கிறாங்களா?'

தேவகுருவை அவள் அறிந்திருந்தாள். அல்பிரேட்டுக்கு அவர்மீது நல்லபிப்பிராயம் இல்லை என்பதும் தெரியும். இருப்பினும், வீடு தேடி வந்தவரை, முகத்திலே கதவைச் சாத்தி அனுப்புவது பண்பல்ல என்பதை உணர்ந்தாள்.

'கொஞ்சம் பொறுங்க...அவர்கள கேட்டிட்டு வாறன்.'

'நன்றி. நாங்கள் காத்திருக்கிறம்.'

உள்ளே சென்ற லேனாவை, 'ஆரது' என்று கேட்டான் அல்பிரேட்.

'தமிழர்...அந்தப் பிரசங்கி. உங்களோட கதைக்க வேணுமாம்.'

'அந்தப் பன்றி இங்கேயும் வந்திட்டுதா?' என்று செல் கத்தினான்.

'செல் பேசாமல் இரு. வீடு தேடி வந்திருக்கிறாங்கள். அடிப்படை நாகரிகம் ஒன்று இருக்கிறது. எங்களுக்கு எதுவும் தெரியாது போல நடந்தாப் போச்சுது. ஜோன் நான் சொல்றது சரியே?' என்று சொன்னாள்.

'நீ சொல்றதுதான் சரி. அவங்க உள்ளே வரட்டும்...' என்றான் ஜோன்.

ஜோன் தான் செய்த விஷயங்களைப்பற்றி யாரிடமும் கூறவில்லை. இரண்டு வீடுகளும் ஒரே பாணியில் எரிக்கப்பட்டுள்ளதாகப் போலீஸார் நம்புகின்றனர். இரண்டினையும் ஒரே குழு அன்றேல் ஒருவனோ எரித்திருத்தல் சாத்தியம் என்கிற தடத்திலே அவர்கள் யோசிப்பதாக அறிந்திருந்தான். எல்லா விஷயங்களிலும் மற்றும் மூவருடனும் கூட்டுச் சேர்ந்திருந்த அவன், இவை பற்றி நண்பர்களிடம் மூச்சு விடவில்லை. இரண்டாவது சம்பவத்திலே ஒரு சிறுமி வெந்து இறந்தது பலருடைய கண்டனத்துக்குரிய ஒன்றாக மாறியுள்ளதையும் அறிந்தான். சுவரிலே எறியப்பட்ட பந்து போல, தேவகுரு தங்களை நோக்கி வந்திருப்பது அவனைக் குறுகச் செய்தது. தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எதையும் பிரசித்தப்படுத்தாத ஆவதானத்துடன் தான் நடந்து கொள்ளவேண்டும் என அவன் நிச்சயித்துக் கொண்டான்.

'நரகல்கள்' என்று அல்பிரேட் முணுமுணுத்தான்.

'அல்பிரேட், அமைதியாக இரு.'

'எஜமானி அம்மா உத்தரவு' என்று நளினம் மௌனமானான்.

லேனா மீண்டும் வாசற்பக்கம் வந்தாள்.

அவர்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள் .

'வாங்க..உள்ளே வரட்டாம்.'

'நன்றி.'

'நல்வரவு.'

இருவரும் ஜக்கட்டுகளைக் கழற்றி ஸ்ராண்டிலே கொழுவிவிட்டு உள்ளே சென்றார்கள். உள்ளே அமைதி நிலவியது. எதர்பாராத விருந்தினராலே ஏற்பட்ட அமைதி என்பதை தேவகுரு நிதானித்தார்.

தேவகுருவுக்கும் அர்ஜுனுக்கும் வசதியாக இடம் விட்டு, ஒதுக்குப்புறமாக இருந்த நாற்காலி ஒன்றிலே ஜோன் சென்று அமர்ந்து கொண்டான்.

'குறி இது; மாண்டது குழந்தை' திடீரென முள் ஒன்று அவன் நெஞ்சிலே ஆழப் பதிந்தது.

'எங்களை உள்ளே அநுமதித்ததற்கும், உங்களுடன் பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப்புத் தந்ததிற்கும் எங்கள் நன்றியைக் கூறிக் கொள்ளுகிறோம். இதனை உங்களுடைய விசாலித்த உள்ளங்களைப் பிரதிபலிப்பதாக நான் அர்த்தப்படுத்திக் கொள்ளுகின்றேன். உங்களுடன் பேச ஆசைப்படுறன். உங்கள் நேரத்தில் ஓர் ஐந்து நிமிஷத்தினை எடுத்துக் கொள்ள அனுமதிப்பீர்களா?'

'பேசுங்கள்' என்று காறால்ட் கூறினான்.

'எனக்கு நொஸ்க் அவ்வளவு வராது. நீங்கள் அதைப் பாராட்டக் கூடாது. நான் உங்களைக் குறை கூறுவதற்காகவோ, கண்டிக்கிறதுக்காகவோ இங்கு வரவில்லை. சக மனிதர்களிடம் எங்கள் கஷ்டங்களைச் சொல்லி மன ஆறுதல் பெறுவதற்காக மட்டுமே வந்திருக்கிறேன். இங்குள்ள சிலர் எங்களை வெறுக்கிறார்கள். எங்கள்மீது நிறத் துவேஷம் பாராட்டி வெறுக்கிறார்கள். இதனை நீங்கள் அறிவீர்கள். அதனாலேதான் பேசுகிறேன். எனக்கு யாரையும் துன்பப்படுத்துவதில் இஷ்டம் இல்லை. மற்றவர்களுடைய நலனுக்காக என்னைத் துன்பப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளும் இயல்பினன். நான் ஓர் அகிம்ஸாவாதி. அன்பிலும் உண்மையிலும் நம்பிக்கையுள்ளவன். இது என்னைப் பற்றிய அறிமுகம்.'

தேவகுரு நிறுத்தினார். யாரும் எதுவும் பேசவில்லை. தம்மை உற்றுக் கேட்பதாக அவருக்குத் தோன்றியது. அவர் தொடர்ந்தார்.

'வேலையிலிருந்து திரும்பும்பொழுது, என்னை மறித்து, அடித்துத் துன்புறுத்தித் தெருவிலே வீசினார்கள். நான் ஏற்றுக் கொண்டேன். போலிஸ’லே செல்லாது ஏற்றுக் கொண்டேன். என்னை அடித்துக் துன்புறுத்துவதன் மூலம் ஒரு கருத்தினைப் புரிய வைக்க முனைந்திருக்கின்றார்கள் என விளங்கிக் கொண்டேன். உங்கள் கருத்தினை வெளிப்படுத்துவதற்கு உங்களுக்கு நிச்சயமாகப் பூரண உரிமை உண்டு. ஆனாலும், அதனைச் சொல்லக் கையாண்ட முறை தவறானது என நான் எண்ணுகின்றேன். என்னால், நான் வாழ்வதினால், எந்த மனிதனும் துன்பம் அடையக்கூடாது. நான் துன்பப்படுவதினால், மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் என்றால், அந்தத் துன்பங்களை நான் ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கின்றேன். நான் கிறிஸ்தவனல்லன். ஆனால் யேசுநாதரின் வாழ்க்கையிலிருந்தும், ஊழியத்திலிருந்தும் இந்த மேலான போதனைகளைக் கற்றுக் கொண்டேன். பிறருடைய பாவங்களுக்காக அவர் உத்தரப்புகளையும் பாடுகளையும் ஏற்றுக் கொண்டார். நான் புரிந்து கொண்டுள்ள அளவுக்குக் கூட யேசுநாதருடைய போதனைகளிலே விசுவாசம் கொள்ளாதவர்கள் ஞாயிறு தோறும் தேவாலயத்திற்குச் செல்வதினால் என்ன பயன்? கிறிஸ்தவ நாகரீகம் இவ்வளவு தாழ்ந்து போனதற்காக நான் மிகமிகத் துக்கப்படுகின்றேன். இயேசுநாதர் உங்களுக்காக மட்டும் இரத்தம் சிந்தவில்லை. எங்களுக்காகவும் சிந்தினார். உலக மக்கள் அனைவருடைய பாவங்களுக்காகவும் இரத்தம் சிந்தினார்.

'நோர்வே நாட்டின் குடியுரிமை பெற்று, இந்த மண்ணின் காருண்யம் மிக்க அமைதிச் சூழலிலே வாழ்ந்த பெற்றோருக்கு மகளாக என் மாலதி பிறந்தாள். இந்த மண்ணிலே அவள் பிறந்தாள் என்பதில் நான் அடைந்த பூரிப்புக் கொஞ்சம் அல்ல. உலக நாசகாரத்திற்கு எதிராக மனித நேயம் வளர்த்தது இந்த மண். ஏழை-பயக்கார மேடுகளை அழித்து சமூக நீதியை நிலைநாட்ட முந்தியது இந்த மண். உலக நாடுகளின் அமைதியை நேசிக்கும் அற்புதர்கள் வாழும் நாடு என்று இந்த மண் போற்றப்படுகின்றது. விளையாட்டுக் களத்திலேகூட மனிதர்கள் உடல் ரீதியான துன்புறுத்துதல்களை அநுபவிக்கலாகாது என்கிற நான்னோக்கிலே குத்துச்சண்டை விளையாட்டினையே சட்ட விரோதமாக்கிப் புகழ் பூத்தது இந்த மண். இந்நாட்டிலே பூத்துள்ள சமத்துவ நெறிகளை உலகின் ஒவ்வொரு நாட்டிலும் எழச் செய்தல் வேண்டும் என்று உலகப் புத்திஜுவிகள் ஆவலாதிப்படுகின்றார்கள். இந்த மண்ணிலேதான் கறுப்பன் என்கிற காரணத்திற்காக என் வீடு எரிக்கப்பட்டது; அந்த வீட்டின் நெருப்புக் காட்டிலே என் மகள் வெந்து கருகிச் செத்துப்போனாள் என்று முறையிடுவதற்கு என் நாக்குக் கூசுகின்றது. அவள் சாகும்பொழுது எத்தகைய துன்பங்களை அநுபவித்திருப்பாள்? உங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவள் கருகிச் செத்திருந்தால், உங்களுடைய மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? நிறத்துவேஷம் என்கிற மாயையைத் தூக்கி எறிந்துவிட்டு, மனித நேயத்துடன் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்...? தமது குரலிலே ஏற்பட்ட பிசிறினை மறைப்பதற்குத் தேவகுரு மிகவும் பிரயாசைப்பட்டார்.

'நீ பிழையான இடத்திற்கு வந்திருக்கிறாய்!' என்று அல்பிரேட் கத்தினான்.

'அல்பிரேட்!' லேனா அதிர்ந்தாள். குரலைத் தாழ்த்தி, அவர் தமது மனக் கஷ்டங்களைச் சொல்லி முடிக்கட்டும். அமைதியாகக் கொஞ்ச நேரம் கேட்பதற்குக்கூட நமக்குப் பொறுமை இல்லையா?' எனச் சொன்னாள்.

'சாத்தான்' என முணுமுணுத்துக் கொண்டே அல்பிரேட் அமைதியானான்.

'பிழையான இடத்திற்கு வந்திருந்தால், நான் சந்தோஷப்படுகின்றேன். மனித நேயம் மிக்கவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றேன் என ஆறுதலடைகின்றேன். நான் உங்களுடன் பேச வந்தது, நீங்கள் குற்றவாளிகள் எனக் குற்றஞ் சுமத்துவதற்காக அல்ல. என் வீட்டை எரித்தவர்களைக்கூட, என்பிள்ளையைச் சாகடித்தவர்களைக்கூட, நான் குற்றவாளிகள் என வசைபாடமாட்டேன். அவர்கள் அறியாமல் தப்புச் செய்திருக்கிறார்கள். உங்கள் மூலம், தப்புச் செய்தவாகளுடைய மனச் சாட்சிகளை என் குரல் எட்ட வேண்டும் என ஆசைப் படுகின்றேன்.

'நாய், பூனை, மாடு போன்ற மனைவாழ் மிருகங்களை நீங்கள் நேசம் பாராட்டி வளர்க்கும் விதத்தினைப் பார்த்து நான் புளகாங்கிதம் அடைவதுண்டு. அந்த மிருகங்கள் தங்களுக்குள் நிறபேதங்கள் பாராட்டுவதை நாம் அறியோம். கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்பதை நீங்களும் நம்புகின்றீர்கள்; நானும் நம்புகின்றேன். நிறபேதங்களுடன், மதபேதங்களுடன், இனபேதங்களுடன், மொழி பேதங்களுடன் மனிதன் பிறந்தது யார் குற்றம்? வெள்ளை தோல் மேலானது அதற்கு முன்னர் தோன்றிய நாகரிகங்கள் பலவற்றுக்கு என்ன நேர்ந்தது? வெள்ளைத் தோலர்களுடைய ஆதிபத்தியம் சாஸ்வத மானதா? அடுத்த நூற்றாண்டிலே மஞ்சள் தோல் இனத்தின் அதிகாரங்கள் மேட்டிமைப் படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

'கடைசியாக ஒன்றை அறிந்து கொள்ளுங்கள். நான் பிறந்த இலங்கைத் தீவு மகா அழகானது. சொர்க்கத்திலிருந்து ஒழுகி விழுந்த ஒரு நிலத்துண்டோ என மயக்கும் அழகுடையது. நாற்புறமும் கடல் அலைகளின் தாளம்; வருடம் முழுவதும் வற்றாத நதிகள்; நிமிர்ந்து நிற்கும் குன்றுகள்; சோலைகள்; காடுகள்; வயல் வெளிகள் என அதன் அழகை வர்ணித்துக் கொண்டே போகலாம். மனித நேயத்தையும், அன்பு நெறியையும், மனித சமத்துவத்தையும் போதித்த கௌதம புத்தர், காலத்தால், யேசநாதருக்கும் ஐந்து நூற்றாண்டுகள் மூத்தவர். உயிர்வதைக்கு எதிரானவர். பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கு எதிரானவர். மனிதன் லோப-துவேச-மோக (இச்சை - துவே சம்-அஞ்ஞானம்)ஆகியவற்றை வென்று வாழ வேண்டும் என்று போதித்தவர். மனித சமுதாயத்திலே அலோப -அதுவேச-அமோக, அதாவது அருள், காருண்யம், ஞானம் ஆகியன வளர்ந்தால் சாந்தியும் சமாதானமும் நிலவும் எனப் போதித்தவர். அவரைப் பின்பற்றுவதாக விரதம் ஏற்க வேண்டிய பிக்குகளே, தமிழர்களுடைய பிண மலைகள் குவிக்கப்படுவதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வாழ்கிறார்கள். இது எத்தகைய கொடுமை? புத்தர் இரத்தக் கண்­ர் வடிக்கும் அந்த நாட்டிலே வாழமுடியாத அவதியாலேதான் நான் இந்த நாட்டிலே அகதியாகத் தஞ்சம் புகுந்தேன். இந்த மண்ணிலே தேவாலங்களிலே சுவிசேஷம் போதிக்கும் பாதிரியார்களே, பிள்ளைகளை உயிருடன் எரித்துச் சாகடிக்கும் இயக்கத்திற்குத் தலைமை தாங்கினால்...இது உண்மையல்ல. ஆனால், ஒரு தடைவை கற்பனை செய்து பாருங்கள்...இந்த மண்ணின் மனித நேயத்திலே இன்னமும் நாங்கள் நம்பிக்கை பூண்டு வாழ்கிறோம். இந்த நம்பிக்கையைச் சிதைத்தல் ஒரு வகையில் தேசத் துரோகம் என் நான் கருதுகின்றேன்...

'இப்பொழுதும் புனிதர் யேசுவின் வாக்கியங்களே எனக்கு ஞாபகம் வருகின்றன. "அந்நியனாய் இருந்தேன். நீங்கள் என்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை. வஸ்திரம் இல்லாது இருந்தேன். நீங்கள் எனக்கு வஸ்திரம் கொடுக்கவில்லை. வியாதி உள்ளவனாயும் காவலில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன்; நீங்கள் என்னை விசாரிக்க வில்லை... மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாது இருந்தீர்களோ அதை எனக்கே செய்யாது இருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகின்றேன்." இயேசுநாதரின் திவ்விய அன்பிலே வாழும் ஒரு சலுகையை எங்களுக்குத் தாருங்கள்...'

தேவகுரு எழுந்து அங்கு அமர்ந்திருந்த எல்லோரையும் பார்த்துக் கைகூப்பி வணங்கினார்.

அர்ஜுனும் எழுந்து கொண்டான்.

லேனா முன்னே வந்தாள்.

'மன்னிக்க வேணும். ஒரு நிமிஷம்.'

'சொல்லுங்கோ.' நின்றபடியே தேவகுரு செவி மடுத்தார்.

'நீங்கள் வந்த இடம் பிழை. நீங்கள் நினைக்கிற மாதிரி யாரும் இங்கே இல்லை.'

'ரொம்ப சந்தோஷம். நான் சொன்ன கருத்துக்கள் தப்பா?'

'இல்லை; நிச்சயமாக இல்லை.'

'இந்தக் கருத்துக்களை நான் பிரசாரம் செய்வதை ஆட்சேபிக்க மாட்டீர்களே?'

'இல்லை.'

'நான் அதற்கே வந்தேன். நன்றி.'

'உங்க மனசிலே, உங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் எங்களுக்குத் தொடர்பு இருப்பதாக நினைக்க வேண்டாம். எங்களுக்குத் தொடர்பில்லை. அந்த கேஸ’லே நீதிமன்றம் பிழையான தீர்ப்புக் கூறி இருக்கிறது.'

'எனக்கு யார்மீதும் எத்தகைய சந்தேகமும் இல்லை. அந்நியனாய் நுழைந்தேன். நண்பர்களாய் பிரிவோம்.'

'உங்கள் ஆர்வம் எனக்குப் பிடிச்சிருக்கு...நன்றி.'

'காத.'

'காத.'

"ஏதாவது வாக்கு வாதங்களிலே முடியுமோ என்று பயந்தனான் அண்ணே...' என்று விக்கினான் அர்ஜுன்.

கார் ஓடிக் கொண்டிருந்தது.

'அன்புக்கும் நியாயத்துக்கும் வாதாடும் பொழுது, ஓர் அதிசக்தி அவனுக்குத் துணை நிற்கும்.'

'அதிசக்தியா?'

'ஆமாம். இன்று அந்த அதிசக்தி லேனாதான். அவன் இருந்ததுதான் நிலைமைகளை சகஜமாகியுள்ளது...நடந்தவற்றின் விமர்சனங்களைப் பார்க்கிலும், நடக்க வேண்டியவற்றைப் பற்றிய திட்டமிடல் முக்கியம்.'

'வார்டோ அகிம்ஸை அரங்கு (Vardo lkke vold forum) நடத்தும் டிவி நிகழ்ச்சியிலே நீயும் கலந்து கொள்ளுகிறாய் தம்பி.'

'ஏன் அண்ணே, என்ர பெயரைச் கொடுத்தனீங்க?...'

'உனக்கு விருப்பமில்லையோ?'

'அதில்லை. நான் இவ்வளவு காலமும் உங்களுக்கு முரணாகத்தான்...'

'தம்பி. முரண்படுவது நல்லது. கொள்கைகளை மறு பரிசீலனை செய்வதற்கு அது உதவும். எனக்கு ஒன்று தெரியும். நீ எப்பொழுதும் நியாயத்தின் பக்கம் குரல் கொடுப்பவன். இன்னொன்று நொஸ்க் உனக்குச் சரளமாக வரும். கலை-இலக்கிய ஈடுபாடும் உள்ளவன். NRK (Norsk Rikskringkating A/S; (நோர்வே ஒலி-ஒளி பரப்புக் கூட்டுத் தாபனம்) இன்னொரு நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப ஒப்புக் கொண்டுள்ளார்கள். எங்களுடைய பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்கு, டாக்டர் லார்ஸ் தமது நண்பர் மூலம் ஏற்பாடு செய்துள்ளார். எவ்வளவு நேரம் என்பது அவர் திங்கள் சொல்லுவார். அர்ஜுன் நீதான் அதன் பிரதியாக்கம்...'

'அண்ணே, உங்களுடைய நல்ல மனசுக்கு...' என்று அர்ஜுன் தடுமாறினான் வார்த்தைகளுக்கு...

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்' என்றார் வள்ளுவர். அவ்வளவுதான்...' என்று அமைதியாகக் கூறிய தேவகுரு, வீதி மீது கவனஞ் செலுத்தினார்.


13

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 - 13)!அந்த நிகழ்ச்சியை அர்ஜுன் கலைநயத்துடனும் ஆத்ம ஈடுபாட்டுடனும் தயாரித்தளிப்பான் என்று தேவகுரு நம்பியதற்குப் பல காரணங்கள் இருந்தன. ரூபவாஹ’னியிலே அவன் சில நிகழ்ச்சித் தயாரிப்பிலே உதவியிருக்கிறான். அத்துடன், நொஸ்க் மொழியை மிக அக்கறையுடன் கற்றுத் தேறியுமிருந்தான். எடுத்த காரியத்தினை, ஒரு சவாலாக ஏற்று, திறமையாக முடித்தல் அவன் சுபாவம்.

நிகழ்ச்சியைக் கலந்துரையாடலாக அமைக்க அவன் விரும்பவில்லை. பட்டிமன்றம் சுயவித்துவப் பெருமிதம் சாற்றும் ஒருவிதப் பொழுது போக்கு என அவன் நம்பினான். புதிய உண்மைகள் மக்கள் மன்றத்திலே சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என அவன் விரும்பினான். அத்துடன், தமிழருடைய இசை வடிவத்தையும் இலேசாக இணைத்தல் வேண்டும் எனவும் தீர்மானித்தான். நொஸ்க் மொழிமூலம் தயாராகும், பல்லினக் கலாசாரத்திற்கு வழிவகுக்கும் ஓர் எத்தனமாகவும் அந்நிகழ்ச்சி அமைதல் வேண்டுமெனவும் ஆசைப்பட்டான்.

அந்த நிகழ்ச்சிக்குக் கலா வடிவம் கொடுக்கும் முயற்சியில் அலுப்புச் சலிப்பு பாராட்டாது ஆவணக் காப்பகங்களிலே அதிக நேரம் செலவிட்டான். ஹ’ட்லரின் கொடுமைகளை நேரிலே பார்த்த முதிய குடிமக்களுடன் மணிக்கணக்கிலே உரையாடினான். சில தகவல்களையும், சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகளையும் பெறத் தனது சொந்தச் செலவிலேயே இரண்டு மூன்று தடவைகள் ஒஸ்லோவுக்குப் பயணங்கள் மேற்கொண்டான். நிகழ்ச்சித் தயா‘ப்பு வேலைகளை முழுமையாகக் கவனிப்பதற்காக ஒரு மாத விடுப்பும் எடுத்திருந்தான். தமிழ் மக்கள் பலருடைய இதுவரை பிரசித்தமாக உள்ளுறை ஆற்றல்களை இனங்கண்டான். இத்தகைய பாரிய முயற்சி தேவைதானா என்று தேவகுரு சில சமயங்களிலே யோசித்தார். ஆனால், அவனுடைய சத்தியமான ஈடுபாட்டினை கண்டு அவர் உளம் மகிழ்ந்தார். அவன் தமிழ் மக்களுடைய பூரண ஆதரவினை வசீகரித்தான். ஒஸ்லோவில் வாழும் புகழ்பூத்த நொஸ்க் கலைஞர்களுடன் கலந்தாலோசித்துப் பிரதியாக்கத்திலே மாற்றங்களையும் செப்பங்களையும் புகுத்தினான். நொஸ்க் புத்திஜ“விகளும், கலைஞர்களும் இணைந்து கொண்டதினால், இந்த நிகழ்ச்சி பற்றி பெரிய எதிர்பார்ப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. பத்திரிகைகள் மட்டுமன்றி, நிகழ்ச்சி முன்னோட்டமும் எதிர்பார்ப்பினைத் தூண்டுவதாக அமைந்தது.

கடைசியாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளும் நேரமும் வந்தது.

அந்தச் சிறிய மஞ்சள் வீடு பரபரப்படைந்தது. முரண்பாடுகளுக்கு மத்தியிலும் அல்பிரேட்டும் லேனாவும் நடத்திய 'சாரத்த' தொடர்ந்தது. அல்பிரேட்டின் நண்பர்களான செல், ஜோன், காறால்ட் வந்து சென்றார்கள். மாலதி எரியுண்டு இறந்த பின்னர் அவர்கள் அமைதி காத்தார்கள். அத்துடன் தேவகுரு அவர்களுடைய வீட்டுக்கு வந்து சென்றதிலிருந்து லேனா இங்கு வாழும் அகதிகளுடைய நிலைமை பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் நாட்டமுடையவளாக மாறினாள். தேவகுருவின் குரல் சத்தியத்தின் ஒலியாக அவளுக்குத் தோன்றியது. ஜோன் முன்னர் போல அல்ல. விவகாரங்களிலே பட்டும் படாமலுமே அபிப்பிராயம் சொன்னான். செல்லும் அல்பிரேட்டும் கடுங்கோட்பாளர்களுடைய குரலாகவே செயற்பட்டார்கள். அர்ஜுன் பிரதியாக்கத்தில் ஈடுபட்டிருந்ததாகப் பிரசாரம் செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சியைப் பார்க்கக்கூடாது என்று செல் வாதிட்டான். 'இந்தக் கறுத்தப் பன்றிகள் எங்களுக்குப் போதிக்கவா?' என்று அல்பிரேட் வக்கணை பேசினான். லேனாவின் வற்புறுத்தலுக்காக அவர்கள் அந்த நிகழ்ச்சிக்காக டிவியை 'டுயூன்' செய்திருந்தார்கள். எல்லோரும் மது அருந்தத் துவங்கினார்கள். லேனாகூட பியர் குடித்தாள். ஆனால், ஜோன் மதுவில் நாட்டம் செலுத்தவில்லை.

லார்ஸ் குடும்பத்தினர் அதிலே சில பாத்திரங்களிலே நடித்ததினால், மிகுந்த ஆவலுடன் டிவிக்கு முன்னால் அமர்ந்திருந்தார்கள். அனிதா தன் தோழியின் இழப்பினை மிகவும் உணர்ந்திருந்தாள். இதனால், அவளுடைய டிவி தோற்றம் நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளதாக அர்ஜுன் சொல்லியிருந்தான்.

வித்தியாகூடத் தான் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்க்கத் தேவகுரு சங்கடப்பட்டார். அவர் சற்குணத்துடன் கீபிள் சென்றிருந்தார். அர்ஜுன்கூட இருந்து பார்ப்பதை அவர் விரும்பினார். தமிழர் வாழ்க்கையிலே ஒரு புதிய ராகத்தினை மீட்க அது உதவாதா என்பது அவர் ஆதங்கம்.

ரோஜா மலர் ஒன்று தீயிலே பொசுங்கிக் கொண்டிருப்பதான குறியீட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதுவே மனசிலே பல உணர்ச்சி மோதல்களைக் கிளறுவதாக இருந்தது. தயாரிப்பு விபரங்கள் காட்டப்பட்ட பொழுது, மிகச் சோகமான குரலிலே, ஏற்ற பக்க வாத்தியங்களுடன், பல்லவி ஒலித்துக் கொண்டிருந்தது. காட்சி மாறி கடல் அலைகளிலும், வானவெளியிலும் ஒரு ரோஜா அலைக்கழிவதைக் காட்டியது.

பொங்கும் கடலாய்
நெஞ்சம் பொங்க
எங்கே எங்கே பயணம்?

இங்கே தொலைத்த
புன்னகை தேடி
இதயம் முழுவதும் சலனம்.

மின்னல் கீற்றுகள் வானத்தைப் பிளக்க, வெள்ளை-கறுப்புப் படமாக நாஜி ஜெர்மனியின் எழுச்சி காட்டப்பட்டது. சுவஸ்திகா சின்னம் பெரிதாகத் தெரிய, ஹ’ட்லரின் அதிகாரம் மிக்க ஆணவ முகம் மங்கலாள, super-impose ஸாகி பின்னணியிலே தெரிய, அவன் உருவாக்கிய யூத இனத்திற்கான 'இறுதித் தீர்வின்' நிறைவேறுதலிலே, யூதர்கள் படும் அவஸ்தைகள் அனைத்தும் துண்டு துண்டாகக் காட்டப்பட்டன. யூதர்கள் அனுபவித்த அனைத்து இன்னல்களும், நெஞ்சைக் கிளறும் வகையிலே, யுத்த காலச் செய்திப் படங்களிலிருந்து கல்லியெடுக்கப்பட்டு, கலை நுணுக்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. மனித மனச் சாட்சியிலே சாட்டையைச் சொடுக்கும் சடுதியிலே அவை மறைந்தன. பேர்லின் நகர் வீழ்ச்சி அடைய, தீ நாக்குகள் வெள்ளை-கறுப்பு நிறத்திலிருந்து மாறி, நிகழ்ச்சியை வண்ணப்பட இயல்பிற்குள் கொண்டு வந்து சேர்த்தது.

மக்களின் அழுகை
யுத்தமானது
மறுபடி ஹ’ட்லரின்
சத்தமானது

என்கிற சரணம் பாடப்படும் பொழுது தீ நாக்குகளின் ஊடாகச் சிங்கக்கொடி மங்கலாகப் பின்னணியிலே தெரிகின்றது. 1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலையின் கோரம் காட்டும் காட்சிகள், புகைப்படங்களின் தொகுப்பாகக் காட்சியாயின. அரிதான புகைப்படங்கள். அரிதிலே முயன்று இணைக்கப்பட்டிருந்தன. 'ஆரிய இனத்தின் ஆதிக்க ஆசை ஹ’ட்லருடன் அழிந்துவிடவில்லை...அந்தக் கோட்பாட்டின் புதியதொரு வேதம் இலங்கை மண்ணிலே பரவிக் கொண்டிருக்கின்றது' என்று நொஸ்க் மொழியிலே திருமதி லார்ஸ’ன் குரல் துல்லியமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. சோகத்தைக் கனக்கச் செய்யும் விதத்திலே நொஸ்க் மொழிப் பாடல் ஒன்று மெல்லிதாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அது மங்கி மறைய, கடற்கரைக் காட்சி. இலங்கைக் கடற்கரை. பனைமரங்கள் மிக மங்கலாகத் தூரத்திலே தெரிகின்றன. அகதிக் குடும்பங்கள் அவசர அவசரமாகப் படகுகளிலே ஏறிக் கொண்டிருக்கும் காட்சி . இருளிலே தமிழ் அகதிகளுடைய முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமான கும்பல்கள். படகுகள் கடல் அலைகளிலே தத்தளித்துச் சென்று கொண்டிருக்கின்றன.

உதிரும் எங்கள்
கண்­ர் துளிகள்
கடலை உப்பாய் மாற்றியதோ...
இருளில் எங்கள்
வாழ்க்கை என்ன?
இறைவன் எழுதிய சாத்திரமோ

படகுகள்மீது குண்டுகள் வீசப்படுகின்றன. படகுகள் தத்தளிக்கின்றன. ஒரு படகு நீரிலே தாழ்ந்து போகின்றது. பாடலை ஊடறுத்து, குழந்தை ஒன்றின் அவலக் குரல் வீறிட்டுக் கேட்கின்றது. கடல் அலைகள் மட்டுமே. ஒற்றை ரோஜா ஒன்று அலைக்கழிக்கப்படும் காட்சி உறைநிலை அடைகின்றது.

நீலக்கடல் மங்க, நீல வானம். பறவைகள் ஒலி எழுப்பி வானத்திலே பறந்து செல்கின்றன. வானம் நோர்வே வானம். தூரத்தில் ஒஸ்லோ-நகர் தெரிய, விமானம் இறங்கிக் கொண்டிருக்கின்றது. SCANDINAVIAN AIRLINES SYSTEM விமானம் தரை தட்டுகின்றது. ஒஸ்லோவின் விமான நிலையத்தின் முகப்புத் தெரிகின்றது. ஒரு இளம் தமிழ்க் குடும்பம்--தாய், தந்தை, சிறுமி, கைக்குழந்தையான சிறுவன்--முகங்களிலே புதிய எதிர்ப்பார்ப்புகளும் மகிழ்ச்சியும் தெரிய வந்து கொண்டிருக்கிறது.

தொலைந்த தெங்கோ
தொலைந்த தெங்கோ
புன்னகை தேடிப் போகிறோம்-ஒரு
புன்னகை தேடிப் போகிறோம்.

சிறுமிகளின் சிரிப்புக் குரல் ஒலிக்க, கோடை காலத்தின் நோர்வே காட்சிகள். ரோஜாத் தோட்டத்தின் ஊடாக, சிறுமிகள் ஆனந்தமாக ஆடித் திரிகிறார்கள். நொஸ்க் சிறுமிகளும், தமிழ்ச் சிறுமிகளும் இயற்கையிலே ஆனந்தமான உலவும் காட்சி. ஒரு நொஸ்க் சிறுமியும், ஒரு தமிழ்ச் சிறுமியும் சிரித்து மகிழ்ந்து, ஓடித் திரிவது திரை முழுவதும் வியாப்பி, மகா சந்தோஷமான சூழ்நிலையைச் சித்திரிக்கின்றது.

நோர்வேயின் கடற்கரைக் கிராமம் ஒன்று தெரிகின்றது. நொஸ்க் நாடோடிப் பாடல் ஒன்றின் பின்னணியில், அதன் அழகுக் காட்சிகள் விரிகின்றன. காட்சி நகர்ந்து, ஒரு சிறிய வீட்டினைக் காட்டி, அந்த வீட்டின் வரவேற்பறையைக் காட்டுகின்றது. தமிழ்க் குடும்பம் (ஒஸ்லோ விமான நிலையத்தில் காட்டப்பட்ட குடும்பம்.) தந்தை மகளுக்கு பாரதி பாடல் ஒன்றினை இசைத்துக் காட்டுகின்றார். 'பாரதி கவிதைகள்' என்கிற புத்தகம் விரித்தபடி கிடக்கின்றது. குஷ’னியில் தாய் சமைத்துக் கொண்டிருப்பது தெரிகின்றது. சிறுவன் ஒடி ஓடிக் குறும்பு செய்கின்றான். அழைப்பு மணி ஒலிக்கின்றது. வீட்டுத் தலைவன் கதவைத் திறக்கின்றார். டாக்டர் லார்ஸ் குடும்பம் உள்ளே வருகின்றது. மிக அன்பாகச் சிரித்து மகிழ்ந்து, கோப்பி அருந்துகிறார்கள். அனிதாவும் தமிழ்ச் சிறுமியும் விளையாடுவது தெரிகின்றது. அந்தச் சிரிப்பொலி தூரம் தூரமாக...வெறிச்சோடிக் கிடக்கும் சுவர் மீது, சுவஸ்திகா சின்னம் ஸ்பிரே பெயின்றினால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுவரும், சின்னமும், அதை ஸ்பிரே செய்யும் கையும் மட்டுமே தெரிகின்றன. மீண்டும் சந்தோஷமான அந்தக் குடும்பத்தின் சூழல். 'இந்த நாட்டு மக்களின் காருண்யத்தினால் எங்களுக்கு இந்தப் புது வாழ்க்கையும் அமைதியும் கிட்டியிருக்கின்றது. உங்கள் கருணையை எங்கள் பிள்ளைகள் என்றும் நன்றியுடன் பாராட்டுவார்கள். இந்த நாட்டின் மேன்மைக்கும் வளத்துக்கும் என்றும் இவர்கள் உழைப்பார்கள்...' என்று நொஸ்க் மொழியிலே கூறுகின்றார். பின்னர், விருந்தினருக்காக ஒரு பாட்டுப் பாடும்படி தமது மகளைக் கேட்கின்றார்.

தமிழ்ச் சிறுமி நொஸ்க் பாடல் ஒன்றினை மிக அழகாகப் பாடிக் கொண்டிருக்கிறாள். அந்தக் காட்சி கரைந்து மாற, மீண்டும் சுவஸ்திகா வரையப்பட்ட சுவர் காட்சியாகின்றது. பன்றி ஒன்று ஸ்பிரே மூலம் வரையப்பட்டுக் கொண்டிருக்க, கம்பளி முகமூடி அணிந்த மூன்று நொஸ்குகள் காட்சியாகிறார்கள். பன்றியின் பக்கத்திலே, 'கறுத்தப் பன்றிகளே, எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்' என்கிற வசனம் நொஸ்க் மொழியில் பெரிதாக எழுதப்பட்டிருப்பது தெரிய, அதனை எழுதியவர்களுடைய உருவங்கள் மறைகின்றன. 'இந்தக் கறுத்தப் பன்றிகளைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்' என்று முரட்டுக் குரல் ஒன்று கத்திக் கொண்டிருக்கிறது. குறியீடாகப் பன்றி ஒன்று முழுமையாக வாட்டி எடுக்கப்படுவது புலானாகின்றது. காட்சி மாற, கலகலப்பான சிறுமியரின் சிரிப்புக் குரல்கள். ரோஜா தோட்டத்தில் ஓடி மகிழ்கிறார்கள். நொஸ்க் மொழியில் பாடிய தமிழ்ச் சிறுமியும், அவளுடைய நொஸ்க் தோழியும் தெரிகிறார்கள். நொஸ்க் பாடல் பின்னணியில் ஒலிப்பதினால், அவர்கள் பேசி மகிழும் உரையாடல் கேட்கவில்லை. இருவரும் ஒவ்வொரு ரோஜா மலர்களைப் பறித்து எடுக்கிறார்கள். அவர்கள் ரோஜா மலர்களைத் தமது கன்னங்களிலே வைத்துக் கொள்ளும் காட்சி close-up இல் மாறி மாறிக் காட்டப்படுகின்றது. பின்னணிக் காட்சி தூரந் தூரமாகப் போகின்றது. தோழிகள் இருவரும் முன்னுக்கு முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்ச் சிறுமியின் வீட்டுக்கு முன்னால் நின்று நொஸ்க் சிறுமி விடைபெறுகின்றாள். இருவர் கைகளிலும் ஒற்றை ரோஜாக்கள் காணப்படுகின்றன.

தமிழ்ச் சிறுமி அந்த ரோஜா மலருக்கு முத்தம் கொடுத்து, தலையணையின் ஓரத்திலே வைத்து, கண்களை மூடுகிறாள். பின்னணியில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கக் காட்சிகள் நகருகின்றன.

ரோஜா மலரில்
முட்களுண்டு;
முள்ளே ரோஜா வாகியதோ?

வாடும் பூக்கள்
வாழ்வில் உண்டு;
வாழ்வே வாடிப் போகிறதோ?

அவள் தூங்குவது out of focus ஆக மாற, கம்பளி முகமூடி அணிந்தவர்கள் கைகளிலே தீப் பந்தங்கள் தாங்கி பேயாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஒருவனுடைய கையிலே எரிந்து கொண்டிருக்கும் தீப்பந்தம் மட்டும் திரைக்கு வந்து, அது பின்னேகும் பொழுது வீடு தீப்பற்றி எரிவது தெரிகின்றது. தீயணைப்புப் படை தீ பற்றி எரியும் அந்த வீட்டினை அணைக்கும் போராட்டம் காட்டப்படுகிறது. மூர்க்கம் தணியும் ஜுவாலைகளின் ஊடாக, தீயணைக்கும் படைவீரன் ஒருவன் கைகளிலே, கருகிக்கிடக்கும் தமிழ்ச் சிறுமியை ஏந்திக் கொண்டு வருகின்றான்...'இனவெறிக்கும் நிறவெறிக்கும் இன்னும் எத்தனை இளம் ரோஜாக்கள் கருக வேண்டும்' என்கிற கேள்வி பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க, நிகழ்ச்சி முற்றுப் பெற்றது.

தேவகுருவின் உதடுகள் உணர்ச்சியிலே துடித்தன. விழிகளிலே தேங்கி நின்ற கண்­ரை ஏனையோர் பார்க்கக் கூடாது என்பதற்காக, யன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தினார். அதனை மிக அழகிய முறையிலே தயாரித்த அர்ஜுனை பாராட்ட வார்த்தைகளைத் தொலைத்துவிட்ட நிலையிலே, கீபிளில் கூடியிருந்த அந்தக் கூட்டம் மௌனம் சாதித்தது.

லேனா தன் விழிகளிலே உருண்டோடிய கண்­ரை மறைக்கவில்லை. அழுது தீர்த்தால் மட்டுமே தனது மனப்பாரம் இறங்கும் என்று அவளுக்குத் தோன்றியது.

டிவியில் அடுத்த நிகழ்ச்சியைக் காட்டத் துவங்கினார்கள். யாரும் எதிர்பாராத சடுதியிலே, ஜோன் எழுந்து சென்று டிவியை நிறுத்தினான். அதனை ஒரு ஜெப மேடையாகச் சம்பாவனை செய்து, அதன் முன்னால் மண்டியிட்டான்.

'கர்த்தரே! இந்த ரோஜாக்கள் என்றென்றும் சிரித்து மகிழும் நாளைகளைத் தாரும்' என்று ஜெபம் செய்யத் துவங்கினான். லேனா அவனுடைய ஜெபத்திலே சேர்ந்து கொண்டாள்.

* * * முற்றும் * * *