அத்தியாயம் 8

நோயல் நடேசன்இன்று இரவு வைத்தியசாலையில் அதிகம் வேலையில்லை என நினைத்த இளைப்பாற நினைத்த கொரிடோரில் நடந்த சுந்தரம்பிள்ளைக்கு ஒரு வேலை அறுபது கிலோவில் வந்து கொண்டிருந்தது.  ரொட்வீலர் நாயை வைத்தியசாலையில் உள்ள தள்ளுவண்டியில் வைத்து அதை தகப்பனும் மகனுமாக தோற்றமளித்த இருவர் தள்ளிக் கொண்டு வந்தார்கள். மயக்கமாகிய அல்லது இறந்த நாயை மட்டும்தான் வண்டியில் வைத்து தள்ளமுடியும். மனித நோயாளர்கள்போல் அவை ஒத்துளைப்பு  கொடுப்பன அல்ல. இந்த நாய் மயக்கத்திற்கு அல்லது இறப்புக்கு அருகாமையில் இருப்பதாலே இவர்களால் அமைதியாக தள்ள முடிகிறது. நாயின் தலையை தவிர  மற்றய பகுதிகள் சிவப்புத் துணியால் போர்த்தப்பட்டு மறைக்கப்பட்டாலும் அதனது பெரிய உடல், போர்த்திய துணியை மீறி  வெளித் தெரிந்தது.முன்னிரண்டு கால்களும், தலை,கழுத்து என்ற பாகங்கள் வெளித் தெரிந்தது. அதனது கருமையான கண்கள் அந்த நாய் உயிருடன் விழித்திருப்பதை தெரிவித்தது. பரிசோதனை அறைக்குள் வண்டி தள்ளிவரப்பட்டு நிறுத்தப்பட்டதும் அருகில் அந்த நாயை பார்த்ததும் சுந்தரம்பிள்ளைக்கு  அளவற்ற கோபம் தள்ளி வந்தவர்களில்  ஏற்பட்டது.

காலம் காலமாக ஐரோப்பாவில் இறைச்சி வண்டிகளை இழுத்து இறைச்சிக் கடைகாரர்களுக்கு உழைத்து வந்த வந்த இனத்தை சேர்ந்த நாய் ஒன்று மூட்டை போல் வண்டியில் வைத்து தள்ளப்படுகிறது.. ஏற்கனவே போஸ்ட் காட் அளவு சிவப்பு அட்டையில் கருணைக்கொலை செய்யவேண்டும் என எழுதி பெயர் விலாசத்தோடு  கையொப்பம் இட்டிருந்தார்கள். இதற்கு மேல் சுந்தரம்பிள்ளைக்கு எதுவும் செய்யமுடியாது. அவர்களது கோரிக்கையின் படி கருணைக்கொலை செய்வது மட்டுமே செய்யமுடியும். அவர்கள் பெயர்,   தோற்றம் ,பேசும் தோரணை இத்தாலி பரம்பரையில்  இருந்து வந்தவர்கள் என்பதை காட்டியது.

அப்பாவியாக அந்த சூழ்நிலையிலமுகத்தை வைத்துக்கொண்டிருந்த  அந்த நாயின் கண்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. தலையை துாக்க முடியாமல் கண்களை மட்டும் அசைத்தபடி படுத்திருந்தது.

அந்த சிவப்பு காட்டை எடுத்து வயதைப் பார்த்த போது அந்த இருவர்  மேல் சுந்தரம்பிள்ளைக்கு ஆத்திரம் போய் வெறுப்பு மனத்தில் குடிவந்தது. நாயை வீட்டு பின் வளவில் அடைத்து உணவை கொடுத்து  பன்றியை கொழுக்க வைப்பது போல் உடலைப் பருக்க வைப்பது மூலம் அவசரமாக கொலைக்களத்திற்கு தள்ளி இருக்கிறார்கள். உணவு  மட்டும் போதும் என நினைத்து உடற்பயிற்சியோ அல்லது நடக்கவைத்தோ எதுவித முயற்சியும் இல்லாது வளர்த்திருக்கிறார்கள். இவர்களின் தவறால் இவர்களின் நாய் நாலு வருடங்கள் முன்னதாக மரணத்தை நோக்கி தள்ளப்பட்டு வந்திருக்கிறது.  எட்டு வயதே உள்ள அந்த நாயை தங்கள் வளர்ப்பு பிழையால் தோல் மூடிய கொழுப்பு மூட்டையாக மாற்றி இருந்தார்கள்.

என்ன முட்டாள்த்தனம் செய்து இருக்கிறார்கள்?

ஐப்பத்தைந்து வயதில் இவர்களது  உறவினர் ஒருவர் இறந்தால் எவ்வளவு கவலையைத் தரும்? நாயை வளர்பது என்ற  என்ற கடமையில் தவறியவர்கள் என்ற காரணத்தால் அவர்கள் மேல் வெறுப்பு வெளிக்காட்ட முடியாமல் மனத்தில் புகைந்தது

ஜேர்மன் நாட்டில் ரொட்வீலரர் என்ற பிரதேசத்தில் இருந்து அறிமுகமான இந்த நாய் கறுத்த உடலும் முகத்தில் சில இடத்தில் செம்மை நிறமும் கொண்டு திண்ணியமான தோள்களும் ,அகலமான முகம், இரும்பில் வார்த்தெடுத்தது போன்ற மிக உறுதியான அகலப் பாவிய கால்களை கொண்ட போர் வீரனைப் போன்றது.  மார்புப் பகுதி மல்லர்களைப் போல் வீங்கிப் புடைத்திருக்கும்.  இந்த ரொட்வீலர் நாய்கள் காலம் காலமாக பிறக்கும் போதே கம்பீரத்தை மேலும் கூட்டுவதற்காக குட்டியில் வால்களை வெட்டி விடுவார்கள்.  ஆரம்ப காலத்தில் மாடுகளை மேய்க்கவும் பின்பு இறைச்சி விற்பவர்களின்  இறைச்சி வண்டியை இழுப்பதற்கும் ,அத்துடன் ரோமனிய சாம்ராச்சியத்தின் காலத்தில் பாதுகாப்பு பணியையும் செய்தன.

காலம் காலமாக  உடலால் உழைக்கும் பாட்டாளி வர்க்கத்து நாய் இனம். தற்போது செல்லப்பிராணியாக உடற் பயிற்சியற்று வளர்க்கப்படும்போது புளி மூட்டையாகிவிடுகிறது.இதனால் மிக விரைவில் முடக்கு வாதம்,  இரண்டு இடுப்பு மூட்டிலும் ஏற்படுவதால் நடக்க முடியாமல் போகிறது. நடக்க முடியாத போது மேலும் கொழுப்பு ஏறி நிறை கூடுகிறது. இதைவிட  இந்த நாய்களை கீழ்ப்படிவு பயிற்சி இல்லாமல் வீட்டில் வளர்த்தால் ஆக்கிரோசமாக கடிக்கும் நாய்களாக மாறுகின்றன. பல தடவைகளில் இவற்றை நெருங்கி வைத்திய சோதனை செய்ய முடியாமல் போய் வீடுகிறது.

கம்பீரமான இனத்தை சேர்ந்த நாயொன்றை எட்டு வயதில்  தள்ளு வண்டியில் தள்ளியபடி வருவது இந்த நாய்க்கு இவர்கள் செய்த மாபெரும் துரோகமாகும். ரோம சாம்ராச்சியத்து போர் வீரனோடு பக்கத்தில் கம்பீரமாக  தலையையும் நெஞ்சையும் நிமிர்த்தியபடி வலம் வரும் சரித்திர காட்சிக்குப் பதிலாக  அதே நாட்டுக்கார்களால் கேவலமாக வண்டியில் வைத்து அழுக்கு துணி மூட்டைபோல் தள்ளப்பட்டு கருணைக் கொலைக்காக கொண்டு வரப்படுவது உண்மையிலே  பரிதாபமான காட்சியாக இருந்தது.

மலை உச்சியில் மழை மேகங்கள் படிந்து ஈரலிப்பை உருவாக்குவது  போன்ற தனது மனத்தில் ஏற்பட்ட விருப்பு வெறுப்பு உணர்வுகளை பலமாக வீசிய காற்று தள்ளியது போல் அகற்றிவிட்டு சுந்தரம்பிள்ளை அந்த ரொட்வீலரை சோதளை செய்யும் மேசைக்கு மாற்றாமல் அந்த அந்த தள்ளு வணடியிலே வைத்து போலின் உதவியுடன்  கருணைக்கொலை செய்தான். பச்சைத் திராவகத்தை உடலில் ஏற்றியதும் சுவாசத்தை இருமுறை பலமாக இழுத்து கடைசி மூச்சை வெளித்தள்ளி விட்டு அமைதியாகியது, அந்த ரொக்கி எனப் பெயர் கொண்ட ரொட்வீலர்.

உங்கள் ரொக்கி இன்னும் நாலு வருடம் உயிர்வாழ்ந்திருக்க வேண்டியது என குறைந்த பட்சமாக சொல்ல நினைத்து திரும்பிய போது அந்த இளைஞனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு சொல்ல வந்த வார்த்தையை விழுங்கிவிட்டான்

இவர்கள் அன்பு காட்டியே அவர்களது நாயை கொன்றிருக்கிறார்கள்.

அவர்களை  கதவைத் திறந்து  வெளியில் அனுப்புவதற்காக போலின் அவர்களுடன் சென்றாள்.

இறந்த றொக்கியோடு அந்த அறையில் தனித்து விடப்பட்ட போது சுந்தரம்பிள்ளைக்கு இப்பொழுது இந்த பெரிய உடலை தள்ளிக் கொண்டு குளிர் அறைக்கு செல்லவேணடும் என்ற எண்ணம் வந்தது.ஆனாலும் குளிர் அறை எங்கு என்று தெரியாததால் போலினுக்கு காத்திருந்தான்

அப்போது அறையின் பின் பகுதியால் கொலிங்வுட் உள்ளே வந்தது

‘நல்ல குண்டு நாய்  அறுபது கிலோ இருக்குமா? இதில் எவ்வளவு கொழுப்பு? என வார்த்தைகளை உதிர்த்து வழமையான நளினத்தை காட்டியது.

‘உன்னைப்போல் பத்து மடங்கு பெரிதாக இருக்கும். இறந்த நாயை பற்றி இகழ்வாக பேசுவது பண்பாடு இல்லை. சடலத்திற்கும் மரியாதை அளிப்பது மனிதர்களது பண்பாடு தெரியுமா? இந்த நாய்  உயிரோடு இருந்தால் உன்னால்  பக்கத்தில் வரமுடியுமா? தயவு செய்து கொஞ்சம் கௌரவத்தை கொடு’ என சுந்தரம்பிள்ளை ஏற்கனவே நாயின் சொந்தக்காரரில் இருந்த வெறுப்பும் காட்டமாக கொலிங்வுட்டில் வெளிப்பட்டது.

கொலின்வூட்டுக்கு அந்த வார்த்தைகள் பிடிக்கவில்லை  என்பதை பரிசோதனை மேசையில் ஏறி வாலை மேலும் கீழும் ஆட்டியதில் தெரிந்தது. தனது பின்பகுதியை உயர்த்தி  எரிச்சலை வெளிக்காட்டியபடி ‘பிரேத அறைக்கு நாயின் உடலைத் தள்ளிக்கொண்டு போகவேண்டியது தானே.அதுக்கும் போலின் உதவி தேவையா? ஏன் பார்த்துக் கொண்டு நிற்கிறாய்’ என எகத்தாளமாக கேட்டது.

‘எனக்கு பிரேத அறை இருக்குமிடம்  தெரியாது’

‘இந்த மூன்று நாளில் அதை அறிந்து கொள்ளவில்லையா? நான் காட்டுகிறேன் ’; என முன்னால் சென்றது.

‘சிவா உதவி தேவையா?’ என போலீன் கேட்டாள் ரிசப்சன் அருகே போனில் பேசியபடி‘இல்லை’ என்று சொன்னாலும் மனத்தில் இரண்டு பேர் சேர்ந்து தள்ளினால் இலகுவாக இருக்கும் என சுந்தரம்பிள்ளை நினைத்தான்

வண்டியைத் தள்ளி வெளிக்கொண்டு வந்தபோது தள்ளுவண்டி பழசாகிவிட்டதால் கீரீச் கீரீச் என சத்தம் போட்படியே தனியாவர்த்தன வாசித்தது. பழய சக்கரங்கள் தள்ளிய திசையில் நேராக செல்ல மறுத்தன. ஒரு திசையில் தள்ளும் போது  நான்கு சக்கரங்களும் நாலு திசையில் செல்தற்கு பிடிவாதமாக இருந்தன. பகலில் மவுனமாக இருக்கும் இந்த சக்கரங்கள் இரவில் மட்டும் ஏன் மவுனத்தை குலைத்து சத்தம்  போடுகின்றன? இரவின் நிம்மதியை குலைக்க தீர்மானமாக இருக்கின்றன என நினைத்தபடி சக்கரங்களை ஒவ்வொருமுறையும் நேராக்கியபடி தள்ள வேண்டி இருந்தது. சக்கரங்களின் ஓசையை கேட்டபடி   எவ்வளவு துாரம் தள்ள வேண்டியிருக்குமோ என்று நினைத்த போது முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த கொலங்வுட் மெதுவாக நின்றது.

கொலின்வூட்டின் நின்ற திசையில் தள்ளிய போது அதிக தூரமில்லை. அங்கு ஒரு கதவு இருந்தது. அந்த கதவைத் திறந்த போது லைட் எரிந்தது. கிறிமற்ரோரியம் என்ற  மிருகங்களின் சுடலை செங்கல் சூளைபோல் காணப்பட்டது. செங்கல்லால் அடுக்கப்பட்டு வட்டமான தளத்தில் எரிவாயுவில் மிருகங்களின் உடலை எரிக்கும் இடம். சாம்பல் எலும்புத் துண்டுகள் எதுவும் அற்று துடைத்து  சுத்தமாக இருந்தது . செங்கல் சூளையின்  முன்பாக தள்ளு வண்டியை விட்டு அதன் சக்கரத்தில் இருந்த பிரேக்கை போட முயன்றபோது ‘அங்கில்லை. இங்கே விட்டால் முழு வைத்தியசாலையும் துர்நாற்றம் அடிக்கத்  தொடங்கிவிடும். எதிர்த்தால் போல் இருக்கும் கதவை திற உள்ளேதான் குளிர்பதன அறை இருக்கிறது’ என்றது கொலிங்வுட்.

கதவு திறந்ததும் தள்ளு வண்டியின் சக்கரங்களின் இடையாக பாய்ந்து கொலிங்வுட் உள்ளே வந்தது.

மனிதர்களில் சிலரை் மற்றவர்கள் எப்போது தவறு செய்வார்கள் எனக் காத்திருந்து அவர்களைத் திருத்தி தங்கள் மேதாவித்தனத்தை அவ்வப்போது காட்டுவார்கள். இதே குணம் கொலிங்வுட்டுக்கும் அமைந்திருக்கிறது. இந்த வைத்தியசாலையில் வளரும்போது பல மனிதரின் வார்த்தைகளை மடடுமல்ல அவர்களின் குணங்களுடன் குறைகளையும் ஹொலிங்வுட் பெற்றிருப்பது ஆச்சரியத்தை அளித்தது.

அந்த கிறிமட்ரோறியத்தின் உள்ளே தெரிந்த கதவைத் திறந்ததும் அங்கும் தானாக லைட் எரிந்தது. உள்ளேயிருந்து குளிர்காற்று பிணவாடையுடன் முகத்தில் முத்தமிட்டு விட்டு நாசித் துவாரங்களால் உள்ளே சென்று சுந்தரம்பிள்ளையின் நுரையீரலை நிறைத்து ஆத்மாவைத் தொட்ட. அந்த துர்வாடை வாந்தியெடுக்க வைக்கும் போல் இருந்தது. நல்ல வேளையாக பலமணிநேரமாக வெறும் வயிறாக இருந்தது. அந்த மணம் சுந்தரம்பிள்ளை குழந்தையில் குடித்த தாய்ப்பாலைக் கூட வெளிக் கொண்டுவரும் போல் இருந்தது.   இந்த அறையில் குளிர்பதனம் சரியாக வேலை செய்ய வில்லையோ? இந்த இடத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

விஞ்ஞான சிந்தனையில் இந்த பிணத்தின் மணத்தில் மனிதன் மிருகம் என வித்தியாசம் இல்லை. இறந்த பிணங்களின் குடலில் உள்ளே வாழும் பக்டீரியாக்கள் குடலில் உள்ள புரதப் பகுதியை தாக்குதலில் வெளிவரும் காற்றின் கலவையே இந்த பிணவாடை.இதே வாடைதான் கூழ்முட்டையில் இருந்து வருிறது.

இலங்கையில் மிருக வைத்தியம் படிக்கும் காலத்தில் கண்டி நகரில் வீட்டொன்றில் புகுந்து வீட்டில் கொள்ளை அடித்தவர்கள், அவர்களின் வீட்டில் நின்ற அல்ஷேசன் என கூறப்படும் ஜேர்மன் செப்பேட் வளர்ப்பு நாயை உணவில் நஞ்சு கலந்து முதல் நாள் கொலை செய்திருந்தார்கள். அந்த வீட்டுக்கார்கள் ஏதோ நோயில்  மரணமடைந்ததாக எண்ணி இறந்த நாயை வீட்டின் பின்பகுதியில் புதைத்து விட்டிருந்தார்கள்.  அடுத்த நாள் நாய்க்கு நஞ்சூட்டிய அதே திருடர்கள் அந்த வீட்டில் உள்ளே புகுந்து கத்தி முனையில்  வீட்டில் உள்ளவரகளிடம்  கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்தக் கொள்ளை விசாரணையின் போது கொள்ளைக்கும்  இறந்த நாய்கும் தொடர்பு உள்ளதாக கருதிய பொலிஸ் அந்த புதைக்கப்பட்ட இடத்தில் நாயை தோண்டி  எடுத்து பரிசோதிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகத்திற்கு ஒப்படைக்கப்பட்டபோது அந்த நாயை மீள நிலத்தில் இருந்து தோண்டி எடுக்கும் வேலையில் பெரும் பகுதி சுந்தரம்பிள்ளைக்கு கிடைத்தது. அந்த  ஜெர்மன் செப்பேட் நாயை நாலு நாட்களுக்கு பின்னர் தோண்டிய போது பிண வாடையை என்ற பதத்தின் முற்றான அர்த்தத்தை வாழ்க்கையின் முதலாக உணர்ந்தான். அந்த வாடை பலகாலமாக நினைவில்  தொடர்ந்து வருகிறது.
பிற்காலத்தில் முகர்ந்த வாடைகள் எல்லாத்திற்கும் அந்த வாடை உயர் மட்டத்தின் அளவு கோலாகியது

அந்த குளிர் அறையின் உள்ளே பல தள்ளு வண்டிகளில்  லாபிரடோர், ஜெரமன் செப்பேட் என்ற பெரிய நாய்களும் பொமரேனியன்,  ஜக் இரஸ்சல் ரெரியர் போன்ற சிறிய இன நாய்களுமாக, பல  இன நாய்கள் விறைத்தபடி ஒன்றுடன் ஒன்று உராய்ந்தபடியும், ஒன்றின் மேல் ஒன்றாக சமாதானமாக கிடந்தன. இவ்வளவு நாய்கள் அமைதியாக இருப்பது இந்த அறையில்த்தான் சாத்தியமாகிறது. நிஜமாக இவை இந்த சிறு அறையில் உயிராக இருந்தால் எப்படி இருக்கும்?

மனிதர்கள் பார்வைகளை முதற்புலனான கொள்வது போன்று நாய்கள் மூக்கை தங்கள் புலனாக கொண்டவை. அத்துடன் இருட்டில் அவைகள் பார்வை மனிதர்களிலும் கூர்மையானது. . இந்த இரண்டு புலன்களின் தொழிற்பாடு இங்கே ஒரு மகாயுத்தத்தை உருவாக்கியிருக்கும். ஒன்றை ஒன்று அடையாளம் கண்டு யார் குழுத் தலைவர் என்பதை நிலை நிறுத்த போர் நடந்திருந்தால் நிச்சயமாக
ஜெர்மன் செப்பேட் வென்றிருக்கும்.  நாய்கள் மட்டுமா?    பூனைகள்  இதை அங்கீகரிக்குமா? அவைகள் தங்களுக்குள் குழுவாக சேராத தன்மையினால் என்ன நடந்திருக்கும்? பல பிணங்களாக மாறி இருக்கும். மீண்டும் இது சவஅறைதான்.

பல பூனைகள்  ஒன்றின் மேல் ஒன்றாக சுப்பர் மார்க்கட் சாமான்களை போல வரிசையாக அடுக்கப்பட்டு கிடந்தன. பூனைகள் எல்லாம் ஒரே அளவில் இருப்பதால் அது இலகுவாக இருந்தது. சில பூனைகள் நாய்களின் கால் இடைவெளியில் புகுத்தப்பட்டு  இடம் மிச்சம் பிடிக்கப்பட்டிருந்தது. ஒரு சிவப்பு சிறியசடையான கலப்பு இன  நாயும் கருப்பு  -வெள்ளை பூனையிலும் “சாம்பல் தேவை” என பெரிய எழுத்தில் எழுதி சிறிய எழுத்தில் அவர்களின் பெயருடன் உரிமையாளர்களின் பெயர் விலாசம் வெள்ளைத்தாளில் எழுதப்பட்டு கடிதம் அவற்றின் உடம்பில் செலோரேப்பால் உடலை சுற்றி ஒட்டப்பட்டு  இருந்தது. இந்த இரு உடல்களும் சற்று ஒதுக்கமாக தனியாக இருந்தன. அவை தனித்தனியாக எரிக்கப்பட்டு சாம்பல்கள் உரிமையாளருக்கு கொடுக்கப்படும். இப்படியாக பல சடலங்கள்  அங்கு தள்ளு வண்டிகளில் வைக்கப்பட்டிருந்தன.  சில நாட்களுக்கு முன்பாக மனிதர்களுக்கு நெருங்கிய தோழர்களாக நேசிக்கப்பட்ட செல்லப்பிராணிகள் தள்ளு வண்டிகளில் நாளைய தகனத்திற்காக தங்களுக்குள் சமரசமாக காத்திருக்கின்றன.

இந்த அறையில் ஏற்கனவே சடலங்கள் வைக்கப்பட்ட வண்டிகளால்  நெருக்கடியாக இருக்கிறது. இந்த  இடத்தில்   சுந்தரம்பிள்ளையின்  ரொட்வீலர் நாய் உள்ள வண்டியை இங்கு  நிறுத்த இடைவெளி உருவாக்கவேண்டும்.   வெவ்வேறு திசையில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற வண்டிகளை புறம் தள்ளி ஒதுக்கினால் மட்டுமே இது சாத்தியப்படும் என்பதால் வாசலருகே நின்ற  வண்டியை உள்ளே தள்ளி வாசலக்குள் விட்டு விட்டு  உள்ளே சென்ற சுந்தரம்பிள்ளையை தொடர்ந்து கொலின்வூட்டும் குளிர் அறைக்குள்  வந்தது.  இரண்டு வண்டிகளை வேறுதிசையில் தள்ளி இடைவெளியை  உருவாக்க முனைந்த போது போது பூனைகள் இருந்த வண்டியில் இருந்து ஒரு வெள்ளைப் பூனையின் பிணம் கீழே விழுந்தது.

‘கோலின்வுட் எல்லாம் உன்னால்தான்’  எனத் திட்டிக்கொண்டே குனிந்து வலது கையால் அந்த பூனையின் பிணத்தை தூக்கிய போது அந்த பூனையின் இதயம் ஈரல் என உள்ளங்கங்கள் வெளியே வந்து நிலத்தில் விழுந்து.குடல் சரிந்து மாலைபோல் தொங்கியது.

‘யாரோ போஸ்மோட்டம் செய்து போட்டு உடலை பிளாஸ்டிக் பையில் போடாமல் வண்டியில் போட்டிருக்கிறார்கள் தாயோழி’ என்றது கொலிங்வுட்

‘உனது வார்த்தைகளை கவனமாக பாவி’

‘நீ இப்பதான் அவுஸ்திரேலியா வந்திருக்கிறாய்.வார்தைக்கு வார்த்தை தூசணம் பேசும்  மற்றவர்களை   கேட்டால் எனது வார்த்தைகளை எவ்வளவு  நாகரீகமாக பாவிக்கிறேன் என்பதை போகப் போக புரிந்து கொள்வாய்’

‘அப்படியா? அதை சமயம் வரும்போது அறிந்து கொள்கிறேன். இப்ப சூழ்நிலை கற்றுக் கொள்வதற்கோ உன்னை மெச்சுவதற்கோ ஏற்றது அல்ல. என்றாலும் பூனைககு இவ்வளவு வாய்க் கொழுப்பு கூடாது’ என்றபடி மெதுவாக பனிக்கட்டி போல் குளிர்ந்து கைவிரல்களை விறைக்கப்  பண்ணிய  அந்தப் பூனை உள்ளங்கங்களை எடுத்து வண்டியின் மேல் வைத்து விட்டு குடலை கையால் அள்ளி அதன் வயிற்றுள் வைத்துவிட்டு,   தள்ளி வந்த தள்ளு வண்டியை கதவில் இருந்து முற்றாக உள்ளே இழுத்ததும் அந்த பிணவறையின் கதவு மூடி அந்த அறையின் லைட்டு அணைந்து  அந்த அறை  இருளால் நிறைந்தது. மிருகங்களின் பிணங்கள் மத்தியில் கொலின்வூட்டும் சுந்தரம்பிள்ளைளையும்  தனித்து  விடப்பட்டார்கள்.திரும்பினால் எந்த செத்த  பூனை நிலத்தில் விழுமோ அல்லது நாய்களின் சடலங்களில் இடறுவோமோ இல்லை நிலத்தில் சிந்திய இரத்தத்தில் வழுக்கி விழுந்துவிடுவோமோ என்று நினைத்தபோது சுந்தரம்பிள்ளையின்  உடல் குளிரில் சில்லிட்டது.

‘லைட் எங்கிருக்கு?. கதவு மூடினால் லைட் இல்லாமல் போகும் என ஏன் சொல்லவில்லை’ எரிச்சலுடன்.கொலிங்வுட் நின்ற திசையை நோக்கி ஆற்றாமையில் குரல் கொடுத்தான்

‘கதவு திறக்கும்போது எரிந்த லைட் மூடும்போது இல்லாமல் போகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை என நினைத்தேன்’

‘நக்கலா?’ எனக் கேட்டாலும் உண்மையில்  அதை சிந்தித்திருக்கவேணடும் என்பது மூளையில் உறைத்தது

வாசலை அனுமானித்து கைகளால்  தடவியபோது அந்த கதவின் உள்பக்கம் அலுமினியத்தால் ஆனதால் பனிப்பாறையாக சில்லிட்டது.  இடது கையால் கதவின் கைபிடியைத் தேடியபோது  ‘கொஞ்சம் மேலே’ என்றது ஹொலிங்வுட்.

வலது கையில் பூனையின்  இரத்தம்  பிசுபிசுத்தபடியால் இடது கையால் தடவினான்.

‘இடது பக்கம்’;

‘உனக்கு தெரிகிறதா?

‘எனது கண்ணுக்கு தெரியாமல் எப்படி உனக்கு சொல்லமுடியும்;?’

“இந்தப் பூனை மிகவும் விதண்டாவாதம் பிடித்தது”மனத்துக்குள்

‘நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்கு பரிகிறது.உன்னிலும் பார்க்க பல மடங்கு உணரமுடிவதால்  இந்த துர்மணத்துக்குள் என்னால் நிற்க முடியவில்லை’ என்றது ஹொலிங்வுட்

‘எனக்கு மட்டும் விருப்பமா? எரிச்சலுடன் எனக்கூறிய போது கதவின் பிடி தட்டுப்பட்டது. அதை இழுத்ததும் திடீரென பாய்ந்து கண்களை கூச்சமாக்கிய அந்த பிரகாசமான ஒளியில் இன்று வரை வாழ்ந்த அந்த மிருகங்களுடன் இன்றும் வாழும் கொலின்வூட்டை சுந்தரம்பிள்ளை கண்டான்.

மெதுவாக கதவைத் திறந்ததும் கொலின்வுட் வெளியே எய்த அம்புபோல் பாய்ந்தது.

உள்ளுக்கு விட்டு உன்னை  மூடி விடுவேன் எனப் பயம் இல்லையா? எனக் கேட்ட போது எதிரே போலின் வந்து ‘சிவா கூல் ரும்க்கு போய் இவ்வளவு நேரமாகிவிட்டது என்ன நடந்தது?

‘நானும் கொலிங்வூட்டும் உள்ளே செல்ல கதவு மூடிவிட்டது. திறப்பதற்கு இருளில் மிகவும் கஸ்டப்பட்டோம்

‘சிவா இந்த முறை கொலின்வூட்டோடு சேர்ந்து கூல்ருமில் அகப்பட்டுக்கொண்டீர்கள் சில வருடங்கள் முன் ஒரு மிருக வைத்தியரும் நேர்சும் உள்ளே சென்ற பின் காதலர்களாக திரும்பி வந்தார்கள். இப்பொழுது கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது.

‘என் துரதிஸ்ட்டம்  இந்தப் பூனையுடன்’

போலின் பதில்  பேசாமல் சிரித்துவிட்டு ‘ இன்னும் கார் வாங்கவில்லையா?

‘நாளைக்குத்தான். கார் வேண்டுவதற்கு ஒரு நண்பனோடு கார் டீலரிடம் செல்வதற்கு உத்தேசித்துள்ளேன்‘

‘இன்றிரவுக்கு எப்படி வீடு செல்வதாக உத்தேசம்?‘

‘டாக்சியை நம்பியுள்ளேன்’

‘ இந்த பிணவாடையோடு டாக்சிக்காரன் ஏற்றுவானா?’

‘என்னில் மணக்கிறதா’? என்று உடுப்புகளை மணந்த போது மீண்டும் பிணவாடைவந்தது.

‘டக்சிக்காரனுக்கு இவை பழக்கமாகி இருக்கும்.  ஒரு பறவை ஒன்றை ஒருவர் கொண்டு வந்திருந்து தந்துவிட்டு சென்றார் அதை பரிசோதித்தி. நான் உனக்கு பதினைந்து நிமிடத்தில் டாக்சி வரவழைக்கிறேன்’ என்று சொல்லி விட்டு மீண்டும் ரிசப்சனை நோக்கி சென்றாள்.

அவள் வரும் போது ஒரு காட்போட் பெட்டியை கொண்டு வந்து மேசையில் வைத்து பெட்டியைத் திறந்தாள

‘இது என்ன?’

‘நான் திறந்து பார்க்கவில்லை.அப்படியே வாங்கி வைத்தேன். எனத் திறந்துவிட்டு

‘இது அவுஸ்ரேலியன் ரேயின்போ லொறக்கீட் என்றாள்

‘இந்த நாட்டில் படிக்காததால் எனக்கு அதிகம் இந்த நாட்டுப் பறவைகளை பற்றித் தெரியாது.

‘ஏதாவது காயம் இருக்கிறதா என பார்த்தால் போதும்’

தலையில் நீலமான தொப்பி அணிந்தது போன்ற நீலவர்ணம் கீழே  ஆர்ஞசு வண்ணத்தில் கழுத்தும் பச்சையான இறக்கையுடன் நமது ஊர் கிளி போல் இருந்தாலும் இரத்த சிவப்பான அதன் அலகுகளும் மிகவும் கவர்சியாக இருந்தது. இறக்கைகளை விரித்துப்பார்த்த போதும் எந்த காயமும் தெரியவில்லை. ஆனால் கொஞ்சம் மயங்கியது போன்ற நிலையில் தலையை சரித்து வைத்துக்கொண்டிருந்தது.

‘என்னைப் பொறுத்தவரை வெளிக்காயம் எதுவும் இல்லை. பறக்கும் போது கிளைகளில்  அடிபட்டு விழுந்திருக்கலாம்’

‘ இவைகள் கூட்டமாக பறப்பதால் இப்படி அடிபடுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது. அப்படி என்றால் நான் வீட்டை கொண்டு போய் இரண்டு நாள் வைத்திருந்து அதை பராமரித்து விட்டு பின் பறக்க விடுகிறேன்.

‘என்ன சாப்பாடு கொடுப்பாய்?’

‘பழங்கள் கொட்டைகள் கொடுத்தால் போதும்’

‘சிவா இந்த லொறகீட்டுகள் சோடியாக இணைந்து வாழ்பவை நான் நினைக்கிறேன் இது பிரிந்து ஆணைப் பிரிந்து விட்ட பெண்ணாகும் என நினைக்கிறேன்.’

‘அதெப்படி உனக்கு இதல்லாம் தெரியும்?’

‘நான் படித்திருக்கிறேன். குறைவான ஆறஞ்சு கழுத்துடன் சின்னதாக இருந்தால் பெண்’

‘உன் கருணைக்கு எனது வாழ்த்துக்கள்’

அழைப்பு மணியடித்தது

‘உனது டாக்சியாக இருக்கும் நீ போ’ என கூறியபடி அந்த துணையை பிரிந்த அவுஸ்திரேலிய லொறக்கீற்ரை மெதுவாக  மீண்டும் பெட்டியில் அடைத்தாள்.


அத்தியாயம் 9

ரிமதி,  நீ இன்று செய்தது தேவையில்லாத விடயம். உனக்கும் காலோசுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையை முழு வைத்தியசாலைக்கும் எடுத்து செல்லாதே. சிவாவை நீ   முரண்பட்ட  விடயம் வைத்தியசாலையில் பெரிதாக்கப்படும். இன்னும் ஆறு மாதத்தில் உனது கிளினிக் தயாராகிவிடும்.  இது உனக்கு தேவைதானா? என்றாள் . அவளது கைகள் அந்த புளுகீலரது கால்களை ரிமதி பாத்தோலியஸ் ஆணிகளைப் போட்டு உருக்கு பிளேட்டை இறுக்கமாக பொருத்துவதற்கு வசதியாக தூக்கி பிடித்தபடி கீழ் உதட்டை ஒன்றாக குவித்தபடி அவனை கண்களால் துளைத்தாள்

‘உனக்கு இலகுவாக கேள்வி கேட்டு விட்டு  ஆலோசனை சொல்ல முடிகிறது. எனக்குத்தானே தெரியும். நான் பட்ட அவமானத்தின் காந்தல்,’ தலை நிமிராமல் தொடர்ந்து எலும்பில் ஆணியை திருகி  இறுக்கியபடி

‘நான் அதை மறுக்கவில்லை. காலோசின் முதலாவது பிரச்சனை ஆட்களோடு மரியாதையாக பேசத் தெரியாது. இந்த பத்து வருடத்தில் நான் பலமுறை சண்டைக்கு போயிருக்கிறேன். நான் கேட்பது உனது பிரச்சனையை பலரது பிரச்சனையாக மாற்றதே என்பதுதான்.’

“நான் சிவாவிடம் கேட்ட கேள்வியை காலோசிடம் கேட்டிருக்க வேண்டும் என்கிறாயா?"

‘அப்படி கேட்டால் உனது கேள்வியில் நியாயமிருக்கிறது என்பேன்’

‘மற்றவர்கள் பொறுப்பெடுத்து செய்யாமல் விட்டதால்தான் காயம்பட்ட செல்லப்பிராணிகள்  கருணைக்கொலை செய்யப்படுகிறது.  இப்படியான பிராணிகளை நான் எடுத்து ஆபிரேசன்  செய்வது கலோசுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் நேரடியாக சொல்லி இருக்கலாம். அதை விட்டு தேனீர் அறையில் ரிமதி ஓவர்டைம்க்காக செய்வதாக பலருக்கு முன்பு கூறியது என்னை  அவமானப்படுத்தும் விடயம்.’

‘இரவு பதினொரு மணிவரையும் ஓவர்டைம் போட்டிருந்ததை, ஜோன் லிஸ்மோர் அழைத்து விசாரித்தபோது நான் விளக்கம் அளித்தேன். போன புதன் கிழமை நாங்கள் ஆபிரேசன் செய்த பூனைக்கு இரண்டு இடத்தில் குடலை வெட்டவேண்டி இருந்தது. அடுத்த நாள் பின் போட்டிருக்க முடியாத விடயம் என்பதை விபரித்தேன்’

ஜெனட்டின் கேள்வியின் நியாயம் புரிந்தாலும் தனது தவறை ஏற்காமல் ரிமதி அமைதியாக  கேட்டுக் கொண்டிருந்தாலும்,  அவன் மனத்தில் காலோசின்மேல் ஏற்பட்ட ஆத்திரம் அடங்கவில்லை. மனத்தில் எரிமலை தொடர்ந்து குமிறிக் கொண்டிருந்தது. காலோஸ், சிவா மட்டுமல்ல எந்த வெளிநாட்டவர்களிலும் நல்ல அபிப்பிராயம் கிடையாது என்பதை அவனால் சொல்ல முடியாது. சொன்னாலும் அதை ஜெனட் ஏற்காமல் மேலும் எதிர்ப்பாள்.  தொடர்ச்சியாக அந்த ஆபரேசன் வேலையில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டு இருப்பது அவனது எண்ணங்களை அவள்.  அறியாது திரைபோட இலகுவாக இருந்தது.

ரிமதி பாத்தோலியஸசின் தந்தைவழி பாட்டனார் இங்கிலந்தில் இருந்து வந்தாலும் இத்தாலிய வம்சாவளியை சேர்ந்தவர். இருபதாம் நூற்றாண்டின்  ஆரம்ப காலத்தில் கப்பலில் இளைஞனாக பிரிஸ்பேன் துறைமுகத்தில் வந்திறங்கி, குயின்ஸ்லாண்டில் கரும்புத்தோட்டத்தில் வேலை செய்யத் தொடங்கி பின்பு கடும் முயற்சியால் கரும்புத் தோட்டத்துக்கு சொந்தக்காரர் ஆகினார்.  இவரது கரும்புத் தோட்டம் மகனது காலத்தில் இன்னும் பெரிதாகியது. இரண்டு தலைமுறையில் பெரிய கரும்புத்தோட்ட விவசாயக் குடும்பமாகியது.  சிறுவயதில் ரிமதி இந்த கரும்பு தோட்டத்தில் வேலைகளை ஈடுபட்டாலும் ,கரும்பு விவசாயம் மனத்திற்கு பிடிக்கவில்லை. பிரிஸ்பனுக்கு சென்று மிருக வைத்தியம் படிப்பதையே குறிக்கோளாக இருந்தான். பாட்டனுக்கும் தகப்பனுக்கும் இந்த ஆயிரம் ஏக்கர் நிலத்தை விட்டு விட்டு ரிமதி படிக்க சென்றது அவர்களுக்கு புதுமையாக இருந்தது. பல தடவை சொல்லிப் பார்தார்கள். ரிமதி பிடிவாதமாக இருந்தான். ரிமதியின் தம்பி ஜேம்ஸ் முழு  நேர கரும்பு விவசாயியாக மாறிவிட்டான்.

ரிமதியின் தந்தை ரெவர் பாத்தோலியஸ் பல காலம் அவுஸ்திரேலிய தேசியக்கட்சியில் அங்கத்தவராக இருந்தாலும் கட்சியின் கொள்கைகளில் பிற்காலத்தில் அதிருப்தி கொண்டு கட்சியின் அங்கத்ததுவத்தில் இருந்து விலகி கொண்டார். எழுபதில் அவுஸ்திரேலிய கரையில் வியட்னாமியர் அகதிகளாக வந்து ஒதுங்கிய போது அக்காலத்தில் ஆட்சியில் இருந்த லிபரல் அரசாங்கத்தின்  அகதிகளை வரவேற்கும்  நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய தேசிய கட்சி எதிர்க்கவில்லை. அக்காலத்தில் பிரதமரான மல்கம் பிரேசர் இந்த அகதிகளை அரவணைத்து குடியுரிமை கொடுத்து புதிய அத்தியாயத்தை இந்த நாட்டில் தொடக்கி வைத்தார். அதுவரையும் ஐரோப்பியர்களது நாடாக இருந்த அவுஸ்திரேலியாவில் பெருமளவில் ஆசியர்கள் குடிவந்தது பலரது மனங்களில் அச்சத்தை உருவாக்கியது.

ஒருகாலத்தில் இந்த நாடு ஆசிய மக்களால் நிரம்பிவிடும் என்ற பய உணர்வு உருவாகியது. இதற்கு காரணம் பெருந்தொகையான ஆசியமக்களை கொண்ட பிரதேசத்தில் இந்த நாடு இருப்பதும்  பூகோள அமைப்பு.  அஸ்திரேலியா பரந்த நிலப்பரப்பில் குறைந்த மக்களையே கொண்டு இருப்பதாலும் இப்படியான பய உணர்வுகளை தங்களுக்குள் நியாயப்படுத்தி மனக்கசப்போடு கட்சியில் இருந்தார்கள் ரெவர் பாத்தோலியஸ் போன்றவர்களுக்கு  அதன் பின்பு நடந்த விடயம் விவசாயியான ரெவரால் பொறுக்க முடியவில்லை.. வெளிநாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு உணவு பண்டங்கள் திறந்த பொருளாதார கொள்கையில் இறக்குமதியாவதால் அதனால் அவுஸ்திரேலிய விவசாயம் நலிவதையும் ரெவர் எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறினார். சிறுவயதில்  ரிமதிக்கு தந்தையின் அரசியல் கொள்கைகள் பல மனத்தில் பதிந்து விட்டது. அபோரிஜின தொழிலாளர்களும் சில பசிபிக் தீவுகளை சேர்ந்த மெலனீசிய மக்கள் கூலிகளாக கரும்பு வெட்டும் போது அவர்களது தோட்டத்திற்கு வரவழைக்கப்படுவார்கள். கருப்பு நிறத்தவர்கள் கருப்பாக இருப்பதற்கு காரணம் அவர்கள் குளிக்காமல் அழுக்காக இருப்பதுதான் என ரிமதி சிறுவயதில்  நினைத்த காலமும் உண்டு. கறுப்பானவர்கள் கூலி வேலை மட்டும்தான் செய்வார்கள் என்ற  சிந்தனையில் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது  மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் அதிக அளவில் வெளிநாட்டவர்களை அதிலும் ஆசியர்களை அனுமதிக்கிறது தவறு என்ற அவனது கருத்தில் மாற்றம் நிகழவில்லை.

விவசாயத்தில் ஈடுபடும் அவுஸ்திரேலியர்கள் பலர் இந்த சிந்தனை உடையவர்கள். குயின்ஸலாண்ட் மாநிலத்தில் பெரும்பான்மையினர் நகரத்தை விட்டு விலகி வாழ்வதால் இந்த சிந்தனை மற்ற மாநிலங்களைவிட பலமாக உள்ளது. இதன் காரணத்தால் ஆசியர்கள் வருகைக்கு எதிரான கொள்கையை மட்டுமே கொண்ட ஒரேநாடு என்ற கட்சியை போலின் கான்சன் எனும் பெண்மணி ஆரம்பித்து பல இலச்சம் வாக்குகளை பெற்று செனட்டராக முடிந்தது. பொருளாரத்தில் மந்தமான நேரத்தில் வேலை வாய்ப்புகள் குறைந்து போகும்போது புதிதாக குடிவருபவர்கள் அவுஸ்திரேலியரின் வேலைகளை எடுத்து கொள்கிறார்கள் என்ற கருத்து அவுஸ்திரேலிய தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் கூட ஏற்படுகிறது.

இப்படியான கசப்பு உணர்வுகள் மனிதமனங்களில் துளிர்விடும்போது ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் மேல் இந்த வேற்றுமை உணர்வு ஏற்படுவதில்லை.  தோற்றத்தில் ,கலாச்சாரத்தில், மொழியில், மதத்தில் வேறுபடும்; ஆசியர்கள் மற்றும் அரேபியர்கள்  மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் மிக சிறிய தொகையாக இருந்தபோதும்,

இப்படியான சிந்தனையில் உள்ளவர்கள் வாழும்  பிரதேசத்தில் இருந்து வந்த ரிமதி பாத்தோலியஸ் மிருக வைத்தியராக படித்து முடிந்ததும் பிரிஸ்பேனில் வேலை செய்யும் காலத்தில் மெல்பேனை சேர்ந்த கைலியை சந்தித்து திருமணம் புரிந்து கொள்கிறான். பிரிஸ்பனை விட்டு இடம் பெயர்ந்து  மெல்பேனில் வாழ விரும்பும் கைலியால் தூண்டப்பட்டு ரிமதி மெல்பேனில் சொந்தமாக கிளினிக் வைக்க முயலுகிறபோது பல தடவை வேலையில் இருந்து விடுப்பு எடுத்தான். சில நாட்கள் அதிகமாக மெல்பேனில் தங்கி சொந்த வேலையை பார்த்தால் வேலையில் இருந்த நீக்கப்பட்டான்.

மெல்பேன் வந்து கைலியின் வீட்டில் இருந்தபடி வேலை தேடிய போது இந்த வைத்தியசாலையில் வெற்றிடம் இருப்பதாக பழய நண்பன் ஒருவன் மூலம் தெரிந்துகொண்டதால் தற்காலிகமாக வேலைக்கு சேர்ந்து கொண்டான்.. ரிமதி வேலையில் சேர்ந்த அன்று தனது மேலதிகாரியாக ஒரு ஆசியன் இருப்பதை எதிர்பார்கவில்லை. ஆனால் அதை மிக கஸ்டத்துடன் பொறுத்துக் கொண்ட போது காலோசின் நடத்தைகள் அவனுக்கு அநாகரிகமாக இருந்தது. பெண்களுக்கு முன்பு காமம் கலந்த நகைச்சுவையாக பேசுவது, மதிய நேரத்தில் மதுபான விடுதிக்கு போவது போன்ற இயல்புகள் விவசாய குடும்பத்தில் இருந்து வந்த ரிமதியினால் சகிக்க முடியவில்லை. ஆறுமாதம் அல்லது ஒருவருடம் எனது கிளினிக் தயாராகும் வரை  இந்த இடத்தில் வேலை செய்யவேண்டியது என்று பொறுமையை கடைப்பிடித்தான். அந்த பொறுமையை சோதிப்பது போல் அன்று நடந்த சம்பவம் இருந்தது.

ஒரு நாள் காலை நேரத்தில் காலோஸ் ரிமதியை அழைத்து ‘நேற்று இரவு பதினொரு மணிவரையும் ஓவட்டைம் செய்தது என கணக்காளர் ஜோன் லிஸ்மோர்  சொன்னார். அதிக ஓவட்டைம் செய்வது வைத்தியசாலை பணத்தை விரயமாக்கும் என்பதால் ஆதரிக்கப்படுவது இல்லை.’என்றான்

‘அரைவாசியில் நான் எடுத்த வேலையை விட முடியாது. அந்தப் பூனைக்கு வயிற்றில் நுால் சிக்கியிருந்ததால்  இரண்டு இடத்தில் குடலை எடுக்கவேண்டி இருந்தது.’

‘ரிமதி  இந்த வைத்தியசாலை பொது மக்கள் நன்கொடையில் இயங்குவது. பெரிய சத்திர சிகீச்சைகளை இங்கே செய்யமுடியாது. அதற்காக வெளியே விசேட ஸ்பெசலிஸ்ட்டுகள் உள்ளார்கள்.’

‘அப்படியானால் அந்த பூனையை கருணைக்கொலை செய்ய வேண்டி இருந்திருக்கும்.’
‘அது பரவாயில்லை.’

‘அந்த பூனையை காப்பாற்றக் கூடியதாக இருந்து அதை செய்யாவிட்டால் எனக்கு மிருக வைத்தியராக இருக்க தகுதி இல்லை என நான் நினைத்தேன்.’

கோபத்தில் கண்ணும் முகமும் சிவந்தபடி ஆனால் வார்த்தையின் ஒலியை உயர்த்தாமல் அமைதியாக

‘அந்தப் பூனையை காப்பாற்ற நீயும் உனக்கு உதவியாக இருந்த ஜெனட்டுக்கும் கொடுத்த ஓவட்டைம் பணத்தை இந்த வைத்தியசாலை நிர்வாகம் இழந்திருக்கிறது. ஆனால் அந்த ஆபிரேசனுக்கு சரியான பணத்தை அந்த உரிமையாளரிடம் நாங்கள் வாங்க முடியாது.  நீ செய்த  செய்த ஒப்பரேசன் உனது திறமையை பரீட்சிக்க செய்த சாகசம். உனது சொந்த செலவில் செய்தால் இதை யாரும் கேட்க போவது இல்லை.’

மீண்டும் சிரித்தபடி காலோஸ்.

பொறுமையாக இருவரும் குரலை மெதுவாக வைத்தபடி பேசினாலும் இருவர் மனங்களிலும் ஒரு நிழல் யுத்தம் நடைபெற்றது.

‘நீங்கள் சொல்லுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.’ரிமதி இறுதியாக

‘இங்கே பார். உனக்கு விருப்பம் என்றால் வேலை செய். இல்லையேல் போய் கொண்டு இரு’என சொல்லி விட்டு காலோஸ் அந்த அறையை விட்டு வெளியேறினான்.

ரிமதிக்கு ஆத்திரத்துக்கு அளவில்லை. முகத்திலும்  கண்களிலும் கோபம் கொதித்தது. அந்த அறையில் பல முறை நாலா திசையும் நடந்தபடி சுவர்களை முஷ்டியால் பலமுறை குத்தினான். கால்களால் நிலத்தில் உதைந்தான். தனது கோபம் அடங்கும் வரை அந்த இடத்தில் சிறிது நேரம் நின்று பார்த்தும் பிரயோசனம் இல்லை. நேராக ஆப்பிரேசன் தியேட்டருக்கு வந்து  அங்கும் கோபத்தில் ஆபிரேசன் மேசையில் பலமுறை குத்தியடி இருந்தான். வேலையைவிட்டு விலகி விடுவோமா என நினைத்தபோது குழந்தையை சுமக்கும் கைலியின் ஞாபகம் வந்து அவனைத் தடுத்தது. இரண்டு நாட்களின் பின் தேநீர் அறைக்கு சென்றபோது காலோஸ் சொந்த கிளினிக்கை தொடங்குவதற்காக இங்கு ஓவட்டைம் செய்கிறார் போல என கணக்காளர ஜோன் லிஸ்மோரிடம் சொல்லி சிரித்தது மெதுவாக காதில் விழுந்து. அந்த இடத்தில் சென்று வாக்குவாதப்பட்டால் கைகலப்பில் முடியும் என்ற நினைப்புடன் ரிமதி தேநீர் அறைக்கு செல்லாமல் தனது வேலையை செய்ய திரும்பி சென்றான். அன்றில் இருந்து ரிமதி; காலோசுடன் பேசுவதைத் தவிர்த்தான். சந்திக்கும் போதெல்லாம் தலையை திருப்பியபடி சென்றான். இருவரும் ஒருவருடன் பேசாமல் இருந்தாலும் அந்த வைத்திய சாலையில் ஒரு நிழல் குருசேத்திரம் ஆரம்பமாகியது. போர் வியுகங்கள் வகுக்கப்பட்டு இருவர் பகுதிக்கும் பலர் சேனாதிபதிகளாகவும் காலாட்படை வீரர்களாகவும் சேர்ந்து கொண்டனர்.


சுந்தரம்பிள்ளை வேலைக்கு சேர்ந்த மறுதினம்  புதிதாக சேர்ந்த மிருகவைத்தியர் ஷரன் பேட் காலோஸ் கூறியது போல் அழகானவள். இருபத்தைந்து வயதில் மெல்பேன் பல்கலைக்கழகத்தில் பயிற்சியை முடித்து விட்டு வேலைக்கு வந்திருந்தாள்.புதிதாக சுந்தரம்பிள்ளையும் ஷரனும் பெரும்பாலான நாட்கள் ஒன்றாக அடுத்த அறைகளில் வேலை செய்தார்கள். அடிக்கடி இருவரும் அபிபிராயங்கள் கேட்பதற்கோ ஒருவருக் கொருவர் உதவிகள் செய்வதற்கோ சந்திக்க வேண்டி வந்தது. ஷரனது சிரிப்பும் அதைவிட முக்கியமாக இடுப்பு கீழாக இறுக்கமான பாண்டை போட்டு இடுப்பை நகர்த்தும் விதம்  ஆண்களை கிறுங்கப் பண்ணும். மெல்பேண் வசந்தத்தின் ஆரம்ப காலம் கொஞ்சம் குளிரான  இருந்ததால் அவளது அழகிய கால்கள் மறைக்கப்பட்டு இருந்தன. நிச்சயமாக இன்னும் சில மாதங்களில் மெல்பேன் காலநிலையில் மாற்றம் ஏற்படும்போது இந்த வைத்தியசாலையில் பலவீனமான இதயங்கள் துடிப்பதை மறந்து விடலாம் அல்லது சிறிய உள்நாட்டு கலவரம் ஏற்பட வழியுண்டு என சிவா சுந்தரம்பிள்ளைக்கு நினைப்பு வந்தது. ஆனால் ஷரனுக்கு கைக்குழந்தை ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டதும் சுந்தரம்பிள்ளைக்கு உண்மையிலே ஆச்சரியமாக இருந்தது. தாயாகிய எந்த அறிகுறியும் அவளது உடலில் இருக்கவில்லை. அழகான கன்னிமை குன்றாமல் தாயாவது விவிலியத்தில்  மேரிக்கு மட்டும் தனியுரிமையா?

வேலையைக்கு வந்த சிலநாட்களில் சுந்தரம்பிள்ளையிடம் ‘சிவா நான் நாளைக்கு வருவதற்கு சிறிது நேரம் செல்லும். தயவு செய்து எனது வோட் இரவுண்டையும் செய்கிறாயா’என கேட்டு தோளில் கை போட்டாள். காலையில் எனது வேலையுடன் இவளது வேலையை சேர்த்து செய்வது இரட்டிப்பு வேலையாக இருக்குமே? இப்படி கேட்கிறாளே?

இவ்வளவு நெருக்கமாக வந்து நம்பிக்கையில் கேட்கும் போது எப்படி மறுப்பது என நினைத்தபடி சரி என சுந்தரம்பிள்ளை தலையாட்டினார். ‘நன்றி’ எனக் கூறி மீண்டும் இறுக்கமாக தோளை அழுத்திவிட்டு சென்றாள்.

உண்மையில் பெண்களால் தேவையானபோது மற்றவரிடம் எப்படி வேலை வாங்குவது என்ற கலை தெரிந்திருக்கிறது. அழகை எந்த அளவில் பிரயோகிப்பது என்பது ஒரு கலை. மருந்து மாதிரி பாவிக்க வேண்டியது.  அளவை மீறும்போது மற்றவர்களால் சாகசக்காரி என இனங் கண்டு ஒதுங்கி விடுவார்கள். நிட்சயமாக ஷரனிடம் அந்த கலைத் திறமை கைவந்து உள்ளது.

ஷரன் கேட்டதையும் சுந்தரம்பிள்ளையின் தோளை அழுத்தியதையும்  தூரத்தில் இருந்து அவதானித்த சாம் அருகில் வைத்து ‘என்ன இவ்வளவு நெருக்கமாகி விட்டீர்கள்’எனக் கூறி புன்னகையை தவழ விட்டான். அந்தப் புன்னகையில் பல கோடி அர்த்தங்கள் இருந்ததை வேண்டுமென்றே கவனிக்காமல் சுந்தரம்பிள்ளை ‘நாளைக்கு தான் வர சிறிது நேரமாகும் என தனக்கும் சேர்த்து வாட் இரவுண்டை செய்யட்டாம்’;.

அப்ப நீங்கள் என்ன சொன்னிர்கள்?

‘ஓம் என சொன்னேன். சிறிய குழந்தையின் தாயானதால் வீட்டில் ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம்?’
‘ இங்கே இப்படி  உபகாரங்கள் செய்யத் தொடங்கினால் எல்லோரும் உமது தலையில் கட்டி விடுவார்கள். மேலும் எனக்கு ஷரனில் நல்ல அவிப்பிராயம் .இல்லை.’

‘ஒரு கிழமையில் அவளோடு மூன்று நாட்கள் சேர்ந்து வேலை செய்கிறேம். பரஸ்பர நல்லெண்ணம் இருந்தால் தானே நல்லது.’

அதற்கு பதில்  சொல்லாவிட்டாலும் பழய புன்னகை மாறவில்லை. மேலும் சாமுக்கு பெண்கள் விடயத்தில் தனது கணிப்பில் எப்பொழுதும் அபார  நம்பிக்கை இருந்தது.

அடுத்த நாள் தனது வாட் இரவுண்டை சாமின் உதவியுடன் முடித்து அந்த அறிக்கையை சாமிடம் கொடுத்து அனுப்பி விட்டு மீண்டும் ஷரனுக்காக அவளது நேர்சான நொரேலுடன் சென்றபோது நொரேல் மூலம் பல தகவல்கள் தெரியவந்தது.

ஷரன் தன்னிலும் பார்க்க பதினைந்து வருடம் வயது கூடியவரை திருமணம் செய்துள்ளாள். பல்கலைக்கழகத்தில் படிக்கிற காலத்திலே இருவருக்கும் குழந்தை பிறந்து விட்டது. ஷரனது கணவனுக்கு தலையில் வழுக்கல்; தற்பொழுது நாற்பது வயது இருக்கும்.

‘இதையெல்லாம் இவ்வளவு சீக்கிரம் எப்படி அறிந்து கொண்டாய்?’ ஆவலுடன்

‘நேற்று பிள்ளையோடு வந்து கிரிஸ்ரியன்தான் ஷரனை வேலையில் இருந்து கூட்டி சென்றது. அழகான ஆண்  குழந்தை. பார்ப்பதற்கு மொழு மொழு என்றிருந்தான்’
அவளது வார்த்தையில் குழந்தைகள் மேல் அவளது ஆசை தெரிந்தது.

‘இவ்வளவு தெரிந்த உனக்கு ஷரனின் கணவர் எங்கு வேலை செய்கிறார் என்பது தெரிந்திருக்குமே?

‘விட்டேனா?  அதை மட்டும். தீ அணைப்பு படையில் உத்தியோகம் பார்க்கிறார்.
இதைவிட முக்கிய விடயம் உனக்கு தெரிய வேண்டும்.

என்ன கதை விடுகிறாய் ?

‘ஷரனுக்கு கராத்தே தெரியும். அதை பழக்கியது கிறிஸ்ரியன்‘

”உண்மையாகவா? ஆச்சரியத்துடன்‘

‘அந்தக் காலத்தில் வந்த காதலில்தான் இருவரும் ஒன்றாகினார்கள்.’

ஷரனது வோட் இரவுண்டை செய்ய ஒப்புக் கொண்டது சாமுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இவ்வளவு முக்கியமான விடயங்களை அறிந்கு கொள்வதற்கு இந்த சந்தர்ப்பம் உதவி இருக்கிறது என நினைத்தபடி சுந்தரம்பிள்ளை  வேலையை முடித்தபோது ஷரன் வந்து சேர்ந்தாள்.

‘இது உனது வாட் இரவுண் அறிக்கை’ என பச்சைப்  புத்தகத்தைக் கொடுத்தார். அதில் எந்த செல்லப்பிராணி குணமாகிவிட்டது, எதற்கு தீவிர சிகீச்சை வேண்டும் ,எது சத்திர சிகீச்சைக்கு உட்படுத்த வேண்டும் என என குறிக்கப்பட்டிருந்தது.

இம் முறை ஷரனிடம் இருந்து சிவாவினது ஒரு மணிநேர வேலைக்கு விலையாக கன்னத்தில் முத்தம் கிடைத்தது.

பார்த்துக்கொண்டிருந்த நொரேல் சிரித்துவிட்டு ஷரன் அந்த இடத்தை விட்டு விலகியதும் ‘ லிப்ரிக் அடையாளத்தை துடைத்துக் கொள். அதிகம் வழியாதே.
சிவா, ஷரனின் கணவன் கராட்டியில் கருப்பு பெல்ட்காரன் என்பதை நினைவு வைத்திரு’ எனக் கூறி கண்ணைச் சிமிட்டினாள்.

‘அவள் கொடுத்தாள் நான் மறுக்கக் கூட அவள் அவகாசம் தரவில்லை. எதற்கும் உனது ஆலோசனைக்கு நன்றி’ எனக்கூறிவிட்டு தேநீர் அருந்தவதற்காக சாமுடன் ஓய்வு அறைக்கு சென்றான்.
----------

தேனீர் அருந்தும் அறையில்  அன்று எல்லாரும் இடையில் ஒரு முக்கியமான விடயம் பேசப்பட்டது. முக்கியமாக பெண்கள் உரத்த தொனியில் பேசினார்கள். வைத்தியசாலையில் பாதுகாப்புத் தேவை.’

‘ அத்துடன் ஆணும் பெண்ணுமாக வேலை செய்யவேண்டும்’.

சுந்தரம்பிள்ளைக்கு அடி நுனி  புரியவில்லை. ஆனால் ஏதோ முக்கியமான விடயம் நடந்து விட்டது என்பது புரிந்தது. அதே வேளையில் சாம் அதை தெரிந்து கொண்டோ அல்லது பெரிதாக நினைக்காமல் புறக்கணிக்கிறான் என்பது புரிந்தது. அவன் தனது  காப்பியை போடுவதில் கரிசனையாக இருந்தான். அவனுக்கு காப்பியில் பால் விடக்கூடாது.  கருநிறமாக தடிப்பாக இருக்கவேண்டும். அடிப்பகுதில் குடித்து முடிந்த பின்பு வண்டல் மண்போல் காப்பி தேங்கி இருக்கவேண்டும்.  இதற்காக விசேடமான காப்பித்தூள் தனக்கு பிரத்தியேகமாக வைத்துள்ளான்.

லீசா என்ற இளம் நர்சு வந்து ‘சிவா,  இரவு நடந்தது தெரியுமா?’

‘இல்லையே?’

‘நல்ல வேளை நீங்கள் வேலை செய்யவில்லை. கற்றரீனாவும் லின்னும் இரவு வேலை பார்த்திருக்கிறார்கள். இரவு பதினொரு மணிக்கு இருவர் வந்து,  தங்களது சிறிய பொமரேனியன் நாய்க்கு மலசிக்கல் போல் இருக்கறது. உடனே எனிமா கொடுக்கவேண்டும் என்றார்கள். இந்த இரவு செய்யமுடியாது. நாளை செய்கிறோம். என சொல்லி மறுத்திருக்கிறார். அவர்கள் ஆத்திரத்தில் இருந்த போது லின் உங்களுக்கு நாங்கள் சொல்வது போல் நடக்க விருப்பம் இல்லையானால் வேறு வைத்தியசாலைக்குப்போகலாம் என்றாள். இதை கேட்டுக்கொண்டிருந்த ஒருவன் லின்னுக்கு  ஓங்கி குத்துவிட்டான்;. நல்ல வேளையாக அந்த குத்து லின் விலகியதால் , அவனது முஷ்டி பரிசோதனை அறைச் சுவரில் ஓட்டை போட்டது.’

லீசா நாடக இயக்கனர் போல் காலை கையை அசைத்து குத்து தனக்கு விழுந்தது போல் குனிந்து, விலகி விபரித்ததை இரசிக்க கூடியதாக இருந்தது.

‘உண்மையாகவா ஓட்டை விழுந்திருக்கு?’

‘நம்பிக்கை இல்லையென்றால் போய் பார்க்கவும்;’.

‘நல்ல வேளை லின்னின் முகம் அடி விழுந்திருந்தால் லாரியில் மோதிய கார்போல் முகம் சப்பையாக வந்திருக்கும். பார்க்க இன்னும் சகிக்காது’ என்றான் சாம்.

‘நீ  ஒரு இரக்கமில்லாதவன்’ எனக்கூறி விட்டு மற்றவர்களுக்கு இந்த விடயத்தை விவரிக்க அந்த இடத்தை விட்டு லீசா விலகி சென்றாள்

சாமுக்கு லின்னில் பிடிக்காது. லின் மெல்பேனில் இருந்து நூறு கிலோமீட்ருக்குஅப்பால் உள்ள சிறு நகரத்தில் இருந்து வருபவள். தாட்டியான விரிந்த தோள்களும், பரந்த மார்புகள்,   இடையற்ற ஆறடி உயரமான உடலுக்குரியவள். பலவருடங்கள் பருமனானகிய மரத்தில்  அறுக்கப்பட்ட மரகுத்தி போல் இருப்பாள். பேசும்போது கண்ணில்,  முகத்தில்,  அசைவுகள் அல்லது நளினங்கள் எதுவும்  தெரியாமல் நேராக நோக்கியபடி  கறான குரலில் பேசுவாள். நினைவிலும் கனவிலும் அழகின் உபாசகராக இருக்கும் சாம்முக்கு அவளை படிக்காதது ஆச்சரியமில்லை.  சாமின் வார்தையில் கூறினால் இரண்டு பெரிய முலைகளைத் தவிர  பெண்மையின் அடையாளம் எதுவும் லின்னில் இல்லை என நினைப்பவன்.

‘சாம்  நீ அப்படி சொல்லி இருக்கக்கூடாது.’

‘உங்களுக்கு தெரியாது. கற்றரினாவுக்கும் லின்னுக்கும் ஆட்களோடு பேசத் தெரியாது. நோயுள்ள நாயை கொண்டு வருபவர்களிடம் பக்குவமாக பேசவேண்டும். எடுத்தெறிந்து பேசக்கூடாது. கற்றரீனா பணக்கார குடுப்பத்தில் பிறந்து வளர்ந்தவள். சாதாரண மனிதர்களோட பேசிப்பழகத் தெரியாது. ஆனால் லின் அப்படி இல்லை. நாட்டுப் புறத்தில் பிறந்து வளர்தவள். அப்படி பேசி இருக்க கூடாது.
பிரச்சனையை தேடி வாங்கினால் நாங்கள் என்ன செய்யமுடியும?’.

சாம் இந்த இடத்தில் ஐந்து வருடங்கள் வேளை செய்வதால் அவனது வாதங்களை எதிர்க்க முடியாது. மேலும் சாமின் அளவு கோல்கள் சிறிது வேறுபட்டாலும் இந்த வைத்திசாலையில் பலரோடு நட்பாக இருப்பவன். இதேவேளையின் பெண்கள் மத்தியில் செல்வாக்கும் சாம்முக்கு உண்டு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.