கிடைக்கப்பெற்றோம்: 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் - ஆழமும் அகலமும்' மற்றும் வல்லினம் 2010 மலர்

Wednesday, 06 February 2013 20:20 - ஊர்க்குருவி - கிடைக்கப் பெற்றோம்
Print

முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மிஅண்மையில் சிங்கப்புரிலிருந்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஆழமும் அகலமும்' என்னும் தனது கட்டுரைகளை உள்ளடக்கிய நூலினையும், ம.நவீனை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'வல்லினம்' இதழின் 2010 ஆண்டு மலரினையும் அனுப்பியிருந்தார். அவருக்கு எமது நன்றி.  முனைவர் ஸ்ரீலக்ஷ்மியின் நூல் பற்றிச் சில வரிகள். இது போன்ற நூல்களின் வருகையும், கட்டுரைகளும் மிகவும் அவசியம். இவ்விதமான பதிவுகள் புலம்பெயர்ந்து தமிழர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து படைக்கும் தமிழ் இலக்கியச் செயற்பாடுகள் அனைத்துக்கும் பொருந்தும். நூலின் 'என்னுரை' என்னும் முன்னுரையில் நூலாசிரியர் 'என்னைக் கவர்ந்த விஷயங்களுள் இலக்கியம் தலையாயது. இலக்கிய ஆர்வத்தின் உந்துதலால், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்னும் உத்வேகத்தால் இந்நூலை உருவாக்கியுள்ளேன். சிங்கப்பூர்ப் பொருளாதாரத்திற்கு உதவிய தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் காட்டும் இலக்கியம், பண்பாடு போன்ற விஷயங்களில் எவ்வளவு அக்கறை காட்டுகின்றனர் என்பதைச் சிங்கப்பூரில் வாழும் மற்ற இனத்தவர் அறிந்துகொள்ள வேண்டும்; சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பற்றி உலகத்தமிழர்கள் அறிய வேண்டும் என்னும் வேட்கை எனக்கு உண்டு. இந்த வேட்கையே இந்நூலின் பிறப்புக்குக் காரணமாகும்.' என்று கூறுவார். மேலும் தொடர்ந்து கூறுகையில் 'சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் பற்றிய கட்டுரைகளைப் பலர் எழுதியிருந்தாலும், அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக உதிரிப்பூக்களைப்போலக் கிடக்கின்றன.  என்னுடைய முயற்சியும் அப்படி வீணாகிவிடக் கூடாது. எதிர்கால ஆய்வுகளுக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தை இந்நூல் நிறைவேற்றும் என நம்புகிறேன். அக்கரை இலக்கியம் என்றோ, புலம்பெயர் தமிழர்களின் இலக்கியம் என்றோ அணுக விளைவோர்க்கு இந்நூல் அரிய கையேடு. காய்தல், உவத்தல்,  இல்லா மனநிலையோடு உண்மையை உரைக்க அஞ்சக்கூடாது என்னும் காந்திய இலக்கிய நெறியோடு இந்நூலை உருவாக்கியுள்ளேன்' என்று கூறுகின்றார். ஆசிரியரின் நம்பிக்கை பொய்த்துவிடவில்லை என்பதையே மேற்படி நூலின் உள்ளடக்கம் வெளிப்படுத்துகிறது.

சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை அறிய விழையும் அனைவரும் மேற்படி நூலிலிருந்து தமது தேடலைத் தொடங்கும் வகையில் ஆசிரியர் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு கூறுகளையும் தனது ஆய்வு / சஞ்சிகைக் கட்டுரைகளுக்குரிய கூறும்பொருளாகப் பாவித்திருக்கின்றார்.  'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் - ஒரு கண்ணோட்டம்', 'எண்பதுகளுக்குப் பின் சிங்கப்பூர்ப் புனைகதைகள்', 'சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியத் துறையில் பெண்களின் பங்களிப்பு,  'சிங்கப்பூர்ச் சிறுவர் இலக்கியம் - ஒரு சிந்தனை', 'தமிழ் நாடக நூல்கள் - ஓர் ஆய்வு', 'சிங்கப்பூரில் தமிழ்க் குடியேறிகள் படைத்த பயண நூல்கள்' போன்ற கட்டுரைகளையும், மற்றும் சிங்கைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான சி.ந.சதாசிவப் பண்டிதரின் பங்களிப்பின் நிலை பற்றிய கட்டுரையினையும் கொண்டுள்ள இந்நூலின் மூலம் காலத்துக்குரிய பங்களிப்பினை ஆசிரியர் செய்துள்ளார். அதற்காக அவரைப் பாராட்டலாம்.

இந்த நூலின் கட்டுரைகளினூடு சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியச் செயற்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதோடு, சிங்கப்பூர் மக்களின் சமூக, பொருளியல் அமைப்பு பற்றி, அவற்றில் நிலவிடும் முரண்பாடுகள் பற்றி, அவர்தம் இலக்கிய வரலாறு மற்றும் முன்னோடிகள் பற்றி, அவர்தம் படைப்புகள் கூறும்பொருள் பற்றியெல்லாம் அறிந்துகொள்ள முடிகிறது. அத்துடன் ஆசிரியரின் கூறும் பொருள்மீதான ஆழ்ந்த ஞானம் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.

'வல்லினம் 2010' மலர் அண்மையில் வெளிவந்த காத்திரமானதோர் இலக்கிய மலராக, மலேசியா-சிங்கை கலை இலக்கியச் செயற்பாடுகளை ஆவணப்படுத்துமொரு சிறந்த ஆவணப்பதிவாக நாம் கருதுகிறோம். காத்திரமானதொரு மலரினைத் தந்ததற்காக அதனை வெளியிட்ட வல்லினம் இதழ் பாராட்டுதற்குரியது. கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என மலர் பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது. குறிப்பாக சிங்கை எழுத்தாளர் இளங்கோவனுடனான நேர்காணல் அவரது ஆளுமையினை, அறிவினை, கலை இலக்கியச் செயற்பாடுகளையெல்லாம் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.

எழுத்தாளர் இளங்கோவனைப் பற்றி முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஆழமும் அகலமும்'  என்னும் நூலில் பின்வருமாறு பதிவு செய்திருப்பார்: 'தமிழ்க் கவிஞர் குழாத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுத் திகழும் புதிய தலைமுறைக் கவிஞர் இளங்கோவன். ஆங்கிலம், தமிழ், மலாய் என் மும்மொழிப் புலமை கொண்டவர்.  இருமொழிக் கவிஞர், நாடக எழுத்தாளர், நாடக இயக்குநர், புனைகதை எழுத்தாளர் எனப் படைப்பிலக்கியத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் தமக்கெனத் தனியிடத்தைத் தக்க வைத்துக்கொண்டவர். தமிழ் எழுத்தாளர்களுக்குள் சர்ச்சைக்குரிய எழுத்தாளராக அடையாளங் காணப்பட்டவர்.  பல்துறைப் புலமை வாய்ந்த அறிவுஜீவியாகத் திகழ்பவர். கூரிய சிந்தனைத் திறனும், புதிய, நுட்பமான பார்வையும், மேதாவிலாசமும், உண்மையை உரக்க அஞ்சாத் துணிவும், தனித்தன்மையை இழந்துவிடாத ஆளுமையும் கொண்ட இக்கவிஞர் தென்கிழக்காசிய விருதினைப் பெற்றவர். இவர் 'விழிச் சன்னல்களின் பின்னாளிலிருந்து (1979), 'மெளனவதம்' (1984), 'இருமொழிக் கவிதைகள்' (1998) ஆகிய புதுக்கவிதை நூல்களைப் படைத்தவர். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதைத்துறையின் முன்னோடி என்னும் பெருமைக்குரியவர்'  எழுத்தாளர் இளங்கோவனைப் பற்றி முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஆழமும் அகலமும்'  என்னும் நூலில் பின்வருமாறு பதிவு செய்திருப்பார்: 'தமிழ்க் கவிஞர் குழாத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுத் திகழும் புதிய தலைமுறைக் கவிஞர் இளங்கோவன். ஆங்கிலம், தமிழ், மலாய் என் மும்மொழிப் புலமை கொண்டவர்.  இருமொழிக் கவிஞர், நாடக எழுத்தாளர், நாடக இயக்குநர், புனைகதை எழுத்தாளர் எனப் படைப்பிலக்கியத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் தமக்கெனத் தனியிடத்தைத் தக்க வைத்துக்கொண்டவர். தமிழ் எழுத்தாளர்களுக்குள் சர்ச்சைக்குரிய எழுத்தாளராக அடையாளங் காணப்பட்டவர்.  பல்துறைப் புலமை வாய்ந்த அறிவுஜீவியாகத் திகழ்பவர். கூரிய சிந்தனைத் திறனும், புதிய, நுட்பமான பார்வையும், மேதாவிலாசமும், உண்மையை உரக்க அஞ்சாத் துணிவும், தனித்தன்மையை இழந்துவிடாத ஆளுமையும் கொண்ட இக்கவிஞர் தென்கிழக்காசிய விருதினைப் பெற்றவர். இவர் 'விழிச் சன்னல்களின் பின்னாளிலிருந்து (1979), 'மெளனவதம்' (1984), 'இருமொழிக் கவிதைகள்' (1998) ஆகிய புதுக்கவிதை நூல்களைப் படைத்தவர். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதைத்துறையின் முன்னோடி என்னும் பெருமைக்குரியவர்'  (பக்கம் 197) முனைவரின் பதிவு சரியானதுதான் என்பதை நிலைநிறுத்துகிறது எழுத்தாளர் இளங்கோவன் 'வல்லினம் 2010' மலருக்கு வழங்கிய நேர்காணல். அறிவுக்கு விருந்தளிக்கும் வகையில் மலரிலுள்ள ஆக்கங்கள் காணப்படுகின்றன. படைப்பாளிகளின் எழுத்தில் தெரியும் தெளிவும், ஞானச்சிறப்பும் குறிப்பிடத்தக்கவை. சிங்கப்பூர் மற்றும் மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் ம.நவீன், இளங்கோவன், தினேஸ்வரி, சிவா பெரியண்ணன், காளிதாஸ், கா.ஆறுமுகம், ஜெயந்தி சங்கர், கமலா அரவிந்தன், சித்ரா ரமேஷ், முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி, இராம.கண்ணபிரான், லதா, ஏ.தேவராஜன், யோகி எனப்  படைப்பாளிகள் பலரின் ஆக்கங்களால் நிறைந்திருக்கும் மேற்படி வல்லினம் மலரைப் பற்றியும், முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஆழமும் அகலமும்' என்னும் நூல் பற்றியும்  இன்னுமொரு சமயம் விரிவாக எழுதப்படும்வரை. அவை பற்றிய அறிமுகக் குறிப்புகளாக இப்பத்திக் குறிப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

நூல்:  'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்: ஆழமும் அகலமும்'
ஆசிரியர்: முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி
வெளியீடு: மருதா பதிப்பகம்
முகவரி: 226 (188) Bharathi Salai, Royapettah, Chennai -600014, T.N. India
e-mail: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

வல்லினம்.காம் : www.vallinam.com.my

Last Updated on Wednesday, 06 February 2013 22:14