தீயில் புத்த மலர் (1)

Monday, 07 September 2020 12:07 - மோகன் அருளானந்தம் (தமிழில் : வ.ந.கிரிதரன்) சமூகம்
Print

- மோகன் அருளானந்தம் -- தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் மோகன் அருளானந்தம் (இவர் மட்டுநகரைச் சேர்ந்தவர். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் என்னுடன் கட்டடக்கலை பயின்ற சக மாணவர்களிலொருவர். அவர் தன்னுடைய 83 ஜூலைக் கலவர நினைவுகளை அவரது வலைப்பதிவான 'Closetoheartweb'இல்  ஆங்கிலத்தில் The Journey Begins என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ளார்.  அதனை எனக்கும் அனுப்பியிருந்தார். அதன் தமிழ் வடிவமிது. 'தீயில் பூத்த மலர்' என்னும் தலைப்பில் வெளிவருகின்றது.  தமிழில் பதிவு செய்வதன் மூலம் பலர் அறிய வாய்ப்புள்ளதால் தமிழாக்கம் செய்துள்ளேன். இதற்கான ஓவியத்தினை வரைந்திருப்பவர் கிறிஸ்ரி நல்லரட்ணம். - வ,ந.கி -


அத்தியாயம் ஒன்று:

அது ஒரு சனிக்கிழமை. 23 ஜூலை 1983. பத்திரிகைகள் பின்வரும் செய்தியினை வெளியிட்டிருந்தன: "வட மாகாணத்தில் 13 இராணுவத்தினர் மறைந்திருந்து தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டனர். உடல்கள் திங்கட்கிழமை கொழும்புக்குக்கொண்டு வரப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. "

இந்தத் தலைப்புச் செய்தி முப்பது வருடங்கள் நீடிக்கப்போகின்ற சமூக யுத்தமொன்றை உருவாக்கும் விதையொன்றினை விதைத்துள்ளது என்பது பற்றி நாங்கள் எவ்விதம் கருத்தையும் அச்சமயம் கொண்டிருக்கவில்லை. இந்தத் தனிச் சம்பவம் எங்கள் அனைவரின் வாழ்க்கையையும் கடுமையாக  மாற்றப்போகின்றது என்பதை நாம் உணர்ந்திருக்கவில்லை.

வழக்கமாக உயிர்த்துடிப்புடன் விளங்கும் எம் அயலில் கனத்த அமைதி குடிகொண்டிருந்தது.  என்னாலும், மனைவியாலும் நித்திரைகொள்ளக்கூட முடியவில்லை.  நாங்கள் அனைவரும் விளிம்பில் இருப்பதுபோன்ற நிலையற்ற சக்தி அல்லது உணர்வு  காற்றில் பரவிக்கிடந்தது.  ஏதோவொன்று சரியில்லையென்பதை எங்களால் உணரமுடிந்தது. ஆனால் அடுத்த நாள் நாங்கள் விழித்தெழுந்தபோது வழக்கமான ஆரவாரம் எங்கள் வீதியில் மீண்டிருந்தது. எல்லாமே வழமைக்குத் திரும்பியதைப்போல் தெரிந்தது. வழக்கம்போல் நானும் வேலைக்குச் செல்வதற்கு ஆயத்தமாகிப் புறப்பட்டேன். ஆனால் என் மனைவி முதல் நாள் செய்தி ஏற்படுத்திய பாதிப்பு நீங்காத  நிலையில் வேலைக்கு விடுமுறையெடுத்திருந்தார்.

நான் பஸ் தரிப்பிடத்துக்கு நடந்து சென்றேன். வழக்கம்போல் நான் செல்லும் பஸ்ஸில் 12 கிலோ மீற்றர் தூரம் பயணித்து காரியாலயம் சென்றேன். ஜன்னலூடு வீதியைப் பார்த்தவாறு பயணித்தேன். பிரச்சினையெதுவும் , அத்துடன் வழமைக்கு மாறான எதுவும் தென்படவில்லை. எல்லாமே வழமையைபோல்தானிருந்தன.  எல்லாமே இன்னும் வழமையாகத்தானுள்ளனவா? அல்லது அமைதிக்கு முன்வரும் புயலா இது?

அப்பொழுது நான் உதவிக்கட்டடக்கலைஞராக உள்ளூராட்சி அமைச்சின் கீழ் , கொழும்பிலிருந்த  கட்டடத்திணைக்களத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் கட்டடடத்தினூடு நடந்து சென்று எனது காரியாலய இருப்பிடத்தில் நுழைந்தேன்.  அப்பொழுது நான் ஒருவித அமைதியற்ற மனநிலை பெருகும் நிலையிலிருந்தேன்.  என் சக பணியாளர்கள் அனைவரும் என்னை நோக்குவதை உணர்ந்தேன்.

"உனக்கென்ன பைத்தியமா?: என்னுடன் பணியாற்றும் பணியாளர்களிலொருவன் கத்தினான்.

"ஏன் இன்று வேலைக்கு வந்தாய்?"

"ஜன்னலூடு பார்" இன்னுமொரு நண்பன் கூறினான்.

நான் என்னுடைய மேசையிலிருந்து ஜன்னல் பக்கம் திரும்பினேன். அருகிருந்த இரு மாடிக்கட்டடமொன்றிலிருந்து அடர்ந்த கரும்புகை எழும்புவதை அவதானித்தேன். இது நிச்சயமாக வழமையானதல்ல.

நான் உணர்ந்தேன் அவர்கள் சரியென்பதை. நான் பஸ்ஸில் வேலைக்கு வந்திருக்கக் கூடாது. நான் நிலைமையின் வீரியத்தினை உணர்ந்திருக்கவில்லை. அத்துடன் ஓரிவுக்குள் இவ்வளவு கடுமையாக நிலை மாறுமென்பதை பகுத்துணர்ந்திருக்கவில்லை.  இனியும் வழமையான வாழ்வினை வாழுவது பாதுகாப்பானதல்ல. ஆனால் இப்போது நான் என்ன செய்வது?

நான் அதிக நேரம் எடுக்கத்தேவையிருக்கவில்லை.  என் பணியிட நண்பர்கள் என்னை கதிரையிலிருந்து இழுத்து வீதிக்கு வந்தார்கள், நாம் வெளியில் வந்தபோது என் இருப்பிடம் நோக்கிச் செல்லும் பஸ் புறப்படத்தொடங்கியிருந்தது. நாம் அனைவரும் பஸ்ஸின் பின் நம்பிக்கை சிதைந்த நிலையில் ஓடினோம். பஸ்ஸைப்பிடித்தபோது நான் ஜன்னல் கண்ணாடி சிதைந்திருப்பதை அதிர்ச்சியுடன் அவதானித்தேன். எனக்குத் தயங்குவதற்கு நேரமில்லை.  பஸ் வேகத்தை எடுப்பதற்கு முன் என் நண்பர்கள் என்னை பஸ்ஸினுள் தள்ளி விட்டார்கள்.

அது ஒரு 12 கிலோ மீற்றர் வீட்டிற்கான மீள்பயணம். வழமையாக அப்பயணம் அரை மணித்தியாலம் எடுக்கும், அன்று மூன்று மணித்தியாலம் எடுத்தது.

வீதியெங்கும் கூட்டமாக வீதியை மறித்தபடி, பெற்றோல் சேகரித்தபடி, கடைகளை எரிப்பதற்காகவும், கொள்ளையடிப்பதற்காகவும் , கலவரம் செய்வதற்காகவும் அக்கூட்டத்தினர் நின்றனர். அது ஒரு பயங்கரமான காட்சி. மனத்தைப் பாதித்த மூன்று மணி நேர வீட்டுக்கான பயணம் அது. காயப்பட்டவர்கள் பலரிருந்தனர். சிலர் இரத்தத்தால் நனைந்திருந்தனர். சிலர் உதவிக்காக அலறிக்கொண்டிருந்தனர்.

நான் வீடு திரும்பியதுபோது சாட்சியாகக் கண்டது என் வாழ்க்கையை முழுதாக மாற்றி விட்டது. இன்றுவரை என் கனவுகளிலது வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. என் ஆத்மாவின் நிரந்தர வடு அது.

நான் என் 'அபார்ட்மென்ட்'டுக்குத் திரும்பியபோது கதவினை உட்புறமாகத் தாளிட்டேன். மனைவியின் நிலையினை அறிய முனைந்தேன்.  அப்பொழுது வீட்டிலும் பாதுகாப்பில்லை என்றுணர்ந்தேன். அப்பொது ஒரு கும்பல் எங்கள் வீதியை நோக்கி வந்துகொண்டிருந்தது. அவர்களிடம் எரியும் தீப்பந்தங்கள், கத்திகள் மற்றும் கோடரிகளிருந்தன. நாம் இதிலிருந்து தப்புவதற்கு ஒரு வழியேதுமில்லை.  ஆனால் நாம் தப்பினோம். எங்கள் அயலவரான யுவதியொருவருக்கு இதற்காக நன்றி கூறவேண்டும்.

[தொடரும்

 

Last Updated on Saturday, 17 October 2020 07:59