- த. சிவபாலு பி.எட். சிறப்பு. எம்.ஏ,  -“ஆலையிலே சோலையிலே ஆலம் பாடிய சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுக்கியடிக்கப் பாலாறு “என்பது கிராமத்து நாட்டார் பாடல் . கிராமிய விளையாட்டுக்கள் மிகவும் மகிழ்வூட்டுவன. உடல் நலத்தைப் பேண மிகவும் உகந்தன. கிளித்தட்டு கிராமிய விளையாட்டுக்களில் மிகவும் புகழ்வாய்ந்தது. தமிழ் மக்களிடையே எல்லாக் கிராமங்களிலும் கிளத்தட்டு விளையாடப் பட்டுவந்துள்ளது. கிட்டி புள்ளு, வாரோட்டும், எல்லைக் கோடு, மல்யுத்தம், குடோரி, நாயும் புலியும், ஆடும் புலியும் போன்ற விளையாட்டுக்கள் சிறார்களால் விளையாடப்பட்டு வந்துள்ளன. கிறிக்கற், எல்லே, ஆதாரப்பந்து, வலைப்பந்து, கூடைப்பந்து, உதைபந்து போன்றன அறிமுகப் படுத்த்பபட்ட பின்னர் கிராமிய விளையாட்டுக்கள் அருகிப்போகத் தொடங்கியுள்ளன. முன்னர் கிராமங்களில் விடுமுறையைக் கழிக்கச் செல்லும் நகர் புறத்துப் பிள்ளைகள் இத்தகைய பண்டைய விளையாட்டுக்களை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வர் இப்போது இப்படிப் பார்ப்பதற்குக் கூட பாரம்பரிய விளையாட்டுக்கள் கிடைப்பது அரிதாகிப் போய்விட்டன. இவ்வாறான பாரம்பரிய வியையாட்டுக்களில், கிளித்தட்டு அல்லது தாச்சி மிகவும் பிரபலமான, சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு. அருகிவரும் இந்த விளையாட்டைப் பற்றி அறிந்து கொண்டு நாமும் விளையாடி மகிழ்வதற்குஇந்த விளையாட்டுப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம.

எங்கள் மண்ணுக்கே சிறப்பான விளையாட்டுக்களில் ஒன்றான “கிளித்தட்டை” சிறுவர் முதல் பெரியோர் வரை வயது, பால் வேறுபாடின்றி எல்லோருமே விளையாடி மகிழலாம் .சில கிராமங்களில் இதனை “யாட்டு ”அல்லது ‘தாச்சி ‘ என்றும் அழைப்பார்கள். தாச்சி என்பது நடுவரைக்குறிக்கும் சொல்லாகும். கிளித்தட்டுக்கு நடுவர் மிக முக்கியமானவர். இரண்டு குழுக்களுக்கிடையே இந்த விளையாட்டு இடம்பெறும்.  

பண்டைய காலத்தில் கிராமத்துப் ;சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிளித்தட்டை விரும்;பிப் பார்ப்பார்கள். இது ஆண்களுக்கு உரிய ஒரு விளையாட்டாகக் கொள்ளப்பட்டு வந்தது. இன்று இந்த விளையாட்டு பலருக்கும் தெரியாத ஒன்றாகக் காணப்படுகின்றது. தென்பது ஆச்சரியம்தான். கிளித் தட்டு விவசாயிகளின் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஒன்றாகும் .நெல் விதைத்த காலங்களில் வயலில் நெல் மணிகளைப் பொறுக்க வரும் கிளிகளை, கமக்காரன் வரம்புகளில் ஓடிக்கலைத்து வயலைக் காப்பதையே இந்த விளையாட்டுக் காட்டி நிற்கிறது. காப்பவர்- கமக்காரனாகவும்,புகுவோர்-கிளிகளாகவும் தட்டுக்கள் (பெட்டிகள்)- வயல் நிலங்களாகவும் கோடுகள்- வரம்புகளாகவும் பாவனை செய்யப்படுகின்றது.

நமது கலாசாரத்தோடு கூடிய இவ் விளையாட்டு செலவுச் சிக்கனமானதும், விளையாடுபவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஆர்வத்தையும் கொடுக்ககக் கூடியதாகவும் இந்த விளையாட்டு உள்ளது . இதற்காக தெரிவு செய்யப்படும் இடம் புல், பூண்டற்ற துப்பரவானதாக இருக்க வேண்டும் .விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கைகேற்ப இரு பகுதிகளாகப் (கொலம்களாக) பெட்டிகள் பிரிக்கப்படும். ஆகக் குறைந்து 6 பெட்டிகளாவது இருக்க வேண்டும்.

விளையாடும் வீரர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடுவார். குறைந்தது ஒரு அணியில் 5 பேர் வரையிலாவது இருக்க வேண்டும் “பூவா”, “தலையா” போட்டுப்பார்த்த பின்னர் இரண்டு அணிகளில் எந்த அணி முதலில் களமிறங்குவது என்பது தீர்மானிக்கப்படும்

முதலில் மறிக்கத் தெரிவாகும் அணியின் தலைவர் “கிளி”ஆவார் இவர் நெடுங்கோட்டு வழியாக மட்டும் விழிமறிப்பார் மேலும் தனது கைக்கு எட்டும் தூரத்திலுள்ள எதிரணியினரை அடிக்கவும் முடியும் .கிளியிடம் அடி வாங்கியவா் ஆட்டத்திலிருந்து விலகிவிட வேண்டும். குறுக்குக் கோடுகளிலுள்ளவர்கள் எதிரணியினர் பெட்டிக்குப் பெட்டிதாவுவதை மறிப்பார். பக்கத்து பக்கத்து பெட்டிகளுக்குள் மாறி மாறி செல்வதன் மூலம் இவர்களைத் திசைதிருப்பி முன்னேற முடியும் “காத்தலும், புகுதலும் ”  என இரு அணியினரும் மும்மரமாக விளையாடி ஒரு வழியாக முழுப்பெட்டியையும் தாண்டி களமிறங்கியவர்கள் வெளியே வருவார்கள்.

இத்தோடு முடிந்துவிடாது இனிமேல்தான் விளையாட்டே ஆரம்பமாகும். பெட்டிகளைத் தாண்டி வெளியே களமிறங்கியவர்கள் தொடர்ந்து எதிர்ப்பக்கமாக முன்னேறி மீண்டும் ஆரம்பித்த அடத்துக்கு செல்வதுதான் விளையாட்டின் விறுவிறுப்பான பகுதி. ஆரம்ப இடத்திலிருந்து உள்நுளைந்தவர்கள் “காய்” என்றும் எதிர்ப்பக்கம் சென்று மீண்டும் வெற்றிக்ககாக முன்னேறுவார்கள் “பழம்” என்றும் அழைக்கப்படுவார் இங்கு “காயும்” “பழமும்” ஒரே பெட்டிக்குள் சந்திக்க முடியாது இவ்வாறு சந்தித்தால் அந்த அணியே ஆட்டத்திலிருந்து நீக்கப்படும். இவ்விளையாட்டின் சுவாரஸ்யமும், ஆர்வமும் களமிறங்கியவர்கள் முன்னேறும் வேகத்தில்தான் தங்கியிருக்கும். இவர்கள் காலம் தாழ்த்திக்கொள்வதை கட்டுப்படுத்த நடுவர் ஓருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இவர் குறிப்பிட்ட நேரத்துக்குள் முன்னேறாத வீரர்களைஆட்டத்திலிருந்து விலக்குவார்

இவை தவிர, கிளியாக வழிமறிப்பவர்கள் எதிரணியினருக்கு அடித்துவிட்டதாக அடிக்கடி கூறுவார் அடிக்காமலே இவ்வாறு அவர் சொல்லவும் கூடும் இதை “அழாப்பல்” என்று கூறுவர். இதனையும் நடுவரே கண்காணித்து போட்டியை விறுவிறுப்பாக்குவார்.

இவ்வாறு மாறி மாறி இரு அணியினரும் விளையாடி தாம் எடுக்கும் வெற்றிகளின் எண்ணிக்கையில் அன்றைய போட்டியின் வெற்றியணி தீர்மானிக்கப்படும். சின்னச் சின்ன சண்டைகள் கோபங்களுடன் விளையாடும் போது போட்டியின் விறுவிறுப்புக்கு எல்லையேயிருக்காது. போட்டி முடிந்ததும் அனைவரும் சமாதானமாக வெளியேறும் போது இன்றைய கிரிக்கட் விளையாட்டை தொலைக்காட்சியில் பார்க்காமல் நேரடியாகப் பார்க்கிற மாதிரி இருக்கும் .

கிராமங்களில் பாடசாலை விடுமுறையில் வீட்டுக்குள்ள அடைந்து இருக்காமல் நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கிளித்தட்டு விளையாடிப்பாருங்கள் காலம் போகின்ற வேகம் தெரியாமலே நீங்க எல்லோரும், இத்தனை நாளும் எப்படிப்பேச்சு? என்ற ஆச்சரியத்தோடு தை மாதம் பாடசாலைக்கு ஆயத்தமாகுவீர்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.