பதிவுகளில் அன்று: "ஒரு கிறிஸ்தவனின் விண்ணப்பம்"

Thursday, 07 November 2019 02:15 - சுகன் - 'பதிவுகளில்' அன்று
Print

- சுகன் -

பதிவுகள் மார்ச் 2003 இதழ் 39

எங்கள் பரமபிதாவே!

சீதனத்தில் பாதித்தொகை
ஏஜென்சிக்குப் போய்விட்டது.

அரைவருடச் சம்பளத்தின் மிச்சம்
சீட்டுக் கழிவுக்குப் போய்விட்டது.

ஒரு மாதச் சம்பளம்
இயக்கத்திற்குப் போன பின்
எனக்கென்று
ஆணிச் செருப்புக்கூட வாங்க முடியாதிருப்பதேன்?

உயிர்த்தெழுந்த யேசுவே!

வேலைக்குப் போகும் போது
தூக்கத்தில்
அருகில் இருக்கும் பெண்ணின் மேல்சாய
அவள் சிரிக்க
பதிலுக்குக் கூடச் சிரிக்க முடியாது
வேலை என்னைத் துரத்துகிறது.

எனது ஆண்டவரே!

விடியலிற்குச் சற்றுமுன் தூங்குகிறேன்
காலை எழுந்து ஓடுகிறேன்.

மிகச் சிறந்த மேய்ப்பரே!

உம்மிடம் இறைஞ்சிக் கேட்கிறேன்
எனது தேசத்தில்
என்ன நடக்கிறது?

இந்த நற்செய்தியை மட்டும்
சொல்லியருளும்
ஆமென்!!!

Last Updated on Thursday, 07 November 2019 02:38