பதிவுகளில் அன்று: மரபிலக்கியம் இரு ஐயங்கள்

Thursday, 12 September 2019 07:24 - ஜெயமோகன் - ப சரவணன். - 'பதிவுகளில்' அன்று
Print

- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்  -


ஜெயமோகன்பதிவுகள் ஆகஸ்ட் 2002 இதழ் 32

செவ்விலக்கியங்கள் இன்று எதற்கு?

செவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு . இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் " நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேஎன். என குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம் . எதற்காக நேற்று என்ன எழுதினர்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்? " என்று கேட்பார்கள் . இதன் மறுபக்கமாக வாசகர்கள் "நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை.அதன் இன்றைய சிக்கல்களை .ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும் ?" என்பார்கள் . இவை முதல் பார்வைக்கு உண்மைபோலதெரியும்  கூற்றுக்கள் . ஆனால் மிக ஆழமான சில அடிப்படைக் கேள்விகளை அதை ஒட்டி எழுப்பிக்கொள்ளும்போது அர்த்தமற்ற ஒன்றாக மாறிவிடக்கூடியவை.

நமது உணர்வுகளை நாம் இக்கணமே பிறந்து வந்த ஒரு புத்தம்புதிய ஊடகம் மூலம் வெளிபடுத்தவில்லை .இன்று நாம் எழுதுவது நேற்றுமுதலே இருந்துவந்த மொழியில் . நாம் பயன்படுத்தும் அனைத்து சொற்களும் நேற்றிலிருந்து வந்தவை . ஆகவே நேற்றுடன் அவற்றுக்கு உள்ள ஆதாரமான உறவை நாம் எவ்வகையிலும் மறைக்க முடியாது .இலக்கியம் என்பது கணந்தோறும் புதியதும் அறுபடாத காலம் கொண்டதுமான ஒரு பிரவாகம் என்பதில்தான் அதன் அனைத்து அழகுகளும் மகத்துவங்களும் அடங்கியுள்ளது .

இயல்பாகவும் தன்னிச்சையாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாகச்சொல்லும் ஒரு இளம் கவிஞனையே எடுத்துக் கொள்வோம் . அவன் குறைந்த பட்சம் மொழியையாவது கற்றிருக்க வேண்டும். மொழி எனும் போது சொற்கள் அவற்றின் அர்த்தங்கள் இரண்டும் கொள்ளும் உறவை இங்கு உத்தேசிக்கிறோம். இந்த உறவு பலவகை நுட்பங்கள் கொண்டது .தொடர்ந்து கண்ணுக்குதெரியாமல் மாறிக் கொண்டிருப்பது . இந்த மாற்றங்களை நிகழ்த்துபவை அன்றாட புழக்கமும் ஆக்க இலக்கியங்களும் தான். அதாவது ஓர் இளம் கவிஞன் அவன் எந்த பண்டைய இலக்கியங்களையும் கற்காவிட்டால் கூட பண்டைய இலக்கியங்களால் கட்டமைக்கப்பட்ட மொழியையே அடைகிறான், அதையே பயன்படுத்துகிறான் . அதற்குள் தான் அவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.

இலக்கியம் படைக்கும்போது அவன் உண்மையில் செய்வதென்ன? ஏற்கனவே அர்த்த்ப்படுத்தப்பட்டு தன்னை வந்தடைந்த சொற்களை தன் அனுபவத்தின் இயல்புக்கும் வெளிப்படுத்தல் தேவைக்கும் ஏற்ப அவன் வேறு இரு வகையில் அடுக்கி வைக்கிறான். அதன் மூலம் இன்னொரு தளத்தை உருவாக்குகிறான் , அவ்வளவுதான் .இந்த அர்த்த தளத்தின் ஒரு பகுதியாக இருக்கையில் அதன் சொற்களில் சில மெல்லிய அர்த்த மாற்ந்த்தை அடைகின்றன . இந்த சிறு மாற்றமே உண்மையில் அக்கவிஞனின் பங்களிப்பு . அதை அவன் அடுத்த தலைமுறைக்காக விட்டுச் செல்கிறான் .

 

உதாரணமாக பார்ப்போம் . அறம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் " குல நீதி " என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது . வழிவழியாக வந்ததும் தனிமனிதர்களால் மாற்றமுடியாததுமான ஒரு நியதி அது . சிலம்பு அறம் என்ற சொல்லை பெரிதும்  மாற்றிவிட்டது . "அரைசியல் பிழைத்தோர்க்கு கூற்றாக'' மாறும் அறம் என்பது எளிய குல நீதியல்ல . அது மனிதர்களுக்கே அப்பாற்பட்ட பேரறம். பௌத்த சமண மதங்களால் முன்வைக்கப்பட்ட மகாதர்மம் என்ற கருத்துடன் இணைத்து நாம் இதை பார்க்கவேண்டும். பிரபஞ்ச நியதியின் ஒரு பகுதியும் நம்மால் வாழ்வின் எந்த துளியிலும் பார்க்கக்கூடியதுமான ஒழுங்கு அது . வள்ளுவரின் அறம் மேலும் மாறுபட்டது . அறம் பொருள் இன்பம் என்பதில் உள்ள அறம் என்பது மானுட வாழ்வின் ஒரு நிலை மட்டுமே . ஒழுக்கம் , நீதி ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணான ஒரு அகப்புரிதல் அது .

கம்பனில் அறம் சற்று வேறுபடுகிறது . "அறத்தின் மூர்த்தியான் " என கம்பன் ராமனை நிர்ணயிக்கும்போதும் " அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் " என்று சொல்லும்போதும் அறம் என்ற சொல்லானது மாபெரும் இலட்சியக்கனவுகளின் அடையாளச்சொல்லாகவே உள்ளது . நவீன இலக்கியம் பேசும் அறம் இன்றைய வாழ்க்கைச்சூழலில் நாம் தேடும் பொதுமையும் சகோதரத்துவமும் சுதந்திரமும்தான் . அடுத்த கட்டத்தில் இன்று பேரறம் சிற்றறம் என்ற பிரிவினையை பின் நவீனத்துவர்கள் செய்துள்ளனர் .பேரறம் என்பது பெரிய அதிகார அமைப்பின் பகுதியாகவே இருக்க முடியும் , அது வன்முறை மூலம் கட்டாயப்படுத்தப்படும் என்கிறார் பிரேம் [சிதைவுகளின் ஒழுங்கமைவு . காவ்யா ] ஆக இந்த ஒற்றைச்சொல் மூலமே நாம் தமிழ் கலாச்சாரத்தின் அனைத்து கட்டங்களையும் வகுத்துவிட முடியும். இதைப்போல எல்லா சொற்களையும் பகுத்துவிட முடியும் என்பதே உண்மை.

இத்தகைய சில ஆயிரம் சொற்களை வைத்து கவிதை எழுதும் ஒரு கவிஞன் அச்சொற்களைப் பற்றி அறிந்திருக்கவேண்டியது அவசியம் .அறியாவிட்டாலும் அவனால் கவிதை எழுத முடியும்தான் . ஆனால் மேலான கவிதை வெறும் தற்செயல்மட்டுமல்ல . போத மனதால் அபோத மனதை ஊடுருவும் முயற்சியேஅது . தற்செயலாக எழுதப்பட்ட சிறந்த படைப்புகள் அவ்வப்போது சாத்தியம்தான் .ஆனால் சிறந்த படைப்பாளிகள் ஆழ்ந்த படிப்பு கொண்டவர்களே . தமிழில் சங்க இலக்கியம் முதலான நமது மரபை அறியாத பலர் நல்ல கவிதைகளை எழுதியுள்ளார்கள்.ஆனால் தமிழின் முக்கியமான கவிஞர்கள் பாரதி , பிரமிள் , தேவதேவன் பெரும் பண்டிதர்கள் அளவுக்கு மரபிலக்கிய பயிற்சி கொண்டவர்கள் . நாம் ஒரு விதியை சிறந்த முன்மாதிரிகளை முன்வைத்தே பேச முடியும்.

இதையே மறுமுனையில் இலட்சிய வாசகனுக்கும் சொல்ல முடியும். ஒரு கவிதையை எளிமையாக படிக்க அதன் சொற்களின் அகராதி அர்த்தமும் சற்று கற்பனையும் போதுமானது .ஆனால் சிறந்தவாசகன் அச்சொற்கள் வழியாக அதிகபட்ச தூரத்தைக் கடந்து  செல்பவன் என்பதனால் அவனுக்கு மரபின் மீதான நுட்பமான அகப்பிரக்ஞை தேவைப்படுகிறது . ஒரு கவிதை தன் புதிய சொல்லமைப்பின்மூலம் மொழியில்  பொருளில் என்ன நுட்பமான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது என்றறிகையிலேயே கவிதையனுபவம் முழுமை கொள்கிறது.

சங்க காலத்திலிருந்து தொடங்கவேண்டியது ஏன்?

மிக வியப்பூட்டும் அம்சம் மேற்குறிப்பிட்ட எல்லா காலகட்டங்களும் சங்க காலத்தில் வேர்கள் கொண்டவை என்பதே .காப்பியங்களில் சங்க கால அழகியல் மிகத்  தெளிவாகவே காணப்படுகிறது . சிலப்பதிகாரம்   மணிமேகலை ஆகியவற்றின்  தளர்வான ஆசிரியப்பா வடிவம் சங்கப் பாடல்களில் இருந்து பெறப்பட்டது . சிலப்பதிகாரம் அதன் இசைப்பாடல்களிலும் , சீவக சிந்தாமணி அதன் விருத்தப்பா வடிவிலும் , மணிமேகலை அதன் விரிவான நேரடி தத்துவ விவாத தன்மையிலும் துல்லியமான முறையில் சங்கபாடல்களில் இருந்து முன்னகர்ந்திருப்பது உண்மையே.ஆயினும் அவற்றின் இயற்கை சித்தரிப்பு  சங்க கால திணை தரிசனத்துக்கு நுட்பமான முறையில் உட்பட்டிருந்தது .  அவற்றின் அகத்துறை கண்ணோட்ட்டமும் சங்க காலகட்டத்தின் மனநிலையையே பிரதிபலித்தது . நீதி நூல்களின் அறத்தரிசனங்களை  புறநாநூறின் பொருண்மொழிக்காஞ்சி திணையில் உள்ள பாடல்களுடன் ஒப்பிட்டால் வளார்ச்சி என்பது மிக நுட்பமான சிறு மாற்றம் மட்டுமே என்பதை உணர முடிகிறது .

சங்க காலத்துடன் திட்டவட்டமான விலகல் கொண்ட காலகட்டங்கள்  புராணகாலகட்டமும் , அதற்கடுத்த சிற்றிலக்கிய காலகட்டமும்தான். சங்க காலக் கவித்துவத்தின் அடக்கம் நுட்பம் காணாமல்  போய் கவிதை ஒரு கலைவிளையாட்டாக மாறிய காலம் இது .ஆனால் பக்திகாலகட்டத்தில் சங்க கால அழகியல் மீண்டும்  உத்வேகத்துடன் திரும்பிவந்தது . நம்மாழ்வார் ஆண்டாள் பாடல்கள்  அகத்துறை  கவித்துவம் உச்ச கட்டத்தை அடைந்ததன் ஆதாரங்கள் .இது பாரதியில் நீட்சி பெற்றது .இன்றைய நவீன கவிதிகளி£ல் மிக தீவிரமாக மேலோங்கியுள்ளது  சங்க கால கவித்துவமே என நான் பல முறை எழுதியுள்ளேன். இன்றைய புதுக்கவிதையின் அழகிய இலக்கணங்களான  செறிவான சொல்லாட்சி , குறிப்புணர்த்தலை நம்பி இயங்கும் தன்மை ஆகியவை மட்டுமல்ல  அவற்றைவிட முக்கியமாக இயற்கையை மனமாக உருவகித்துக் கொள்ளும்போக்கு கூட சங்க கால மரபிலேயே தன் ஆதார வேரை கண்டடைய முடியும். தேவதேவனுக்கு பிரமிள் எழுதிய புகழ் பெற்ற முன்னுரையில் [ மின்னற் பொழுதே தூரம் .] இதை அவர் துல்லியமாக அடையாளம் செய்கிறார் . புதுக்கவிதை என்பதே கூட ஆசிரியப்பாவின் இஇலக்கண வரைவுக்குள் அடக்க சத்தியமான ஒன்றுதான் என்கிறார் .

அச்சு ஊடகத்தின்  தேவை நவீன வாழ்க்கைச்சுழல்களின் பாதிப்பு வெளிநாட்டு கவிமரபுகளின் தாக்கம் ஆகியவற்றால் இங்கு புதுக்கவிதை உருவாகி அதன் சிறந்த கணங்களை  அடைந்துள்ளது .முற்றிலும் மாறுபட்ட கவித்துவங்களை வெளிப்படுத்தும் பிரமிள் தேவதேவன், விக்ரமாதித்யன் கலாபிரியா . எம் யுவன் ,மனுஷ்யபுத்திரன்,பிரேம், யூமா வாசுகி ஆகிய கவிஞர்கள் இவ்வடிவில் வெற்றிகரமாக இயங்கிவருகிறார்கள் இன்று. இவர்களை இன்று நாம் மிக பொதுப்படையான அளவுகோல்களால் மேலோட்டமாக மதிப்பிட்டு வருகிறோம்.துல்லியமான பொதுவான அளவுகோல்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது இன்று.அதற்கு முதலில் இவ்வடிவத்தின் கலாச்சார உள்ளுறைகள் அடையாளம்காணப்படவேண்டும் .அதற்கு சங்க கால அழகியல் பயிற்சி அவசியமானது .

Last Updated on Thursday, 12 September 2019 07:29