- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) - பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -

- எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் எழுத்தாளர் மட்டுமல்லர்; சமூக அரசியற் செயற்பாட்டாளரும் கூட. எழுத்துத்துறையுடன் பதிப்பகத்துறையிலும் நாட்டம் மிக்கவர். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பு எனப் பன்முகப்பங்களிப்பு ஆற்றி வருபவர். தனது சொந்தப்பதிப்பகமான 'அநாமிகா ஆல்ஃபெட்ஸ்' பதிப்பகத்தினூடு நூல்களை வெளியிட்டு வருமிவர் ரிஷி, அநாமிகா போன்ற புனைபெயர்களிலும் எழுதி வருகின்றர்.  -


1.

 

பதிவுகள் நவம்பர் 2000 இதழ் 11
நந்தவனத்திலோர் ஆண்டி - ரிஷி -

உலகின் அரும்பூக்கள் பல கோடி
பூத்துக் குலுங்கும் திருப் பூங்காவனம்
உனது.
துலங்கும் அவற்றின் தனிநிறங்களும், நறுமணங்களும்
உயிரைத் துளிர்க்கச் செய்ய
தோட்டமும், தென்றலும் தம்முள் கலந்து
கிளையசைத்துத் தந்தவை சிலவும்
நாட்டம் மிக நான் கொய்தவை சிலவும்
சுடர்க்கொடி யாகி நின்றேன் சூடி.
வாடியழுதாய் நீ வழிதொலைந்ததாய்
அடர்காட்டில்.
'அடிக்கு அடி ஊற்றுக்கேணி யிருக்கும்
அகன்று படர்ந்த சர்க்கரைத் தேனாற்றில்
அட, ஒரு கை யள்ளினாலென்ன
கொள்ளை போய் விடுமா சொல்?
வெள்ளையாய் கேட்டது உள்.
(வினாவும் விடையும் எல்லாம்
வெறும் பாவனையின்றி வேறில்லை கொள்.)
- கொள் இன்றில் தன் தேடலின்
நல்வரவாய்
இன்னொரு கரம் என் பூவனம் பரவப்
பெறும் பாழ்வெளியில் தன்
கால்மாற்றிக் கொண்டுணரும் உன்
வலியின் கனபரிமாணங்களை.

நடை

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக
ஏகும் காலம் சிறிதே தயங்கித் தாண்டிச்
செல்லச் செல்லும் ஏறிறங்கு பாதையில்
மப்பு மந்தார மத்தாப்பு வெளிச்ச மந்த
மாருதமுமாய் அனிச்சப் பூ மனதில் அங்கிங்கே
தைக்கும் முள்ளும் மலரின் நீட்சியாய்
காட்சிரூப நினைவார்த்தமாய்
தலைச்சுமை மறந்து தாளகதியில் நடந்த தெல்லாம்
உள்ளது உள்ளபடி சொல்ல மாட்டாததை
மொழியின் பிழையென ஆற்றிக் கொள் மனம்
காத்திருக்கத் தொடங்கும் அடுத்த நடைத் திறப்புக்காய்.

போர்த்திறம்

எரிக்கத்தான் புறப்பட்டேன். பிறகு
எதற்கும் இருக்கட்டும் என்று புதைத்து வைத்தேன்
மனமூலையில் ஒரு குழி பறித்து.
நினைவு தெரிந்த நாளாய்த் தரித்ததைக் கழற்றியதில்
புனையாடை மீறி அம்மணம் பெருக
தழுவும் குளிர்காற்றில் கனிந்திருந்தேன் மிக.
துளிர்த்துப் பொழிந்தது கற்பகத்தரு அருநிழலை.
நிற்பதும் நடப்பதும் நின்னருளாகிய
பிறந்து வந்தேன் பல மறுபடிகள்.பின்
ஒரு காலை இரு கண்ணவிய
இருள் கவியலாக
நிறம் மாறிய நாளை வாள் சுழற்ற
ஊன் அரற்ற உயிரரற்ற
என்மீது நானே படைகொண் டேக
கனவு பறிபோக கையறுநிலை வரவாக
இன்னும் பின்வாங்காது முன்னேறப்
பெறும் செந்நீரில்
முன்கொண்ட கவசகுண்டலங்களைப் பதைபதைத்துத் தேடி
விண்ட மனதின் புதைமூலைக்குச் சிதைந்தோடிக்
கொண்டிருக்கும் நான்.
கால்பதியுமிடமெல்லாம் உனக்கான நன்றிகள்
கசிந்திருக்க...
கழிந்த காலமும் கழியாக் காதலும் வழிமறிக்க....

வெளியேற்றம்

இந்தத் தருணத்தை இயல்பாய் எதிர்கொள்ளும்
பிரயத்தனத்தில்
கந்தக உலைக்குள் குளிர்நிலவுவதா யொரு கபடநாடகம்
அரங்கேறியாகிறது.
விழிகளூக்குள்ளாகவே தேங்கிக் கனன்று
அழுகிக்கொண்டிருக்கின்றன கண்ணீர்த் துளிகள்.
இழப்பொன்றுமில்லை என்று உரத்துச் சொல்லிச் சொல்லி
கிழிந்து தொங்குகிறது குரல்வளை.
ஒருவருமறியாதபடி திறம்பட மறைத்து
வழிவிலகலின் பழுக்கக்காய்ச்சிய முட்கம்பிப்
புண்களையும் மறைத்து
புன்னகை நிறைத்து
பாடியாடி பிரமாதப்படுத்துகிறேன்.
எனக்கு நானே கை தட்டித் தட்டி
களைத்துப் போகிறது.
அலைகடலில் நாளும் முழுகிக் குளித்தெடுத்த
முத்துக்களை அளந்து பார்க்க
நிலையழிக்கும் நீராழமும், நீச்சலின்
வரம்பெல்லைகளும்.
அடித்தளம் நொறுங்கிக் கிடக்கும் மனதின்
இடிபாடுகளை
தத்துவம் பேசித் திடமாக்கவும்
பத்திரமாய் 'விரைந்தொட்டு'பசையால்
ஒருங்கிணைக்கவும் முடியுமானால்
இல்லாதொழியும் இக்கவிதை இப்படி.

ஒற்றைச் சொல் பற்றி..

முற்றும் பெறாதின்னு மின்னும் முற்றி பற்றி
யெரிந்த வாறிருக்கு மந்த
ஒற்றை வரியின் ஒற்றைச் சொல் மூட்டிய
விலங்கினங்களும் அலறியும் பிளிரியும் மாட்டிக்
கலங்கி மீள வகையறியாதோடி யபடி நாடும்
பொருளகராதிகள் நெருப்பணைக்க லாகாமல் இப்படி
கலிதீர்க்குமுன் அரவணைப்பில் வலி சற்று நலிந்தாலும்
கனன்றவாறிருக்கும் கங்குகள் அங்கிங் கெனாதபடி
வினாவறியாது விடையும் தெரியாதுடை யும்
அனாதரவானதொன்றன் துணுக்குகள் அடிமனக் குடையக்
கசியும் உதிரத்துளி யொவ்வொன்றும் இசிந்தொலிக்கும்
கூடாது ஈடாமோ மாட்டேனுக் கெனக் கேட்கு
மெனக் கெது தரும் பதிலாகும் பதில் அதில்
ஆட்படுமோ கதிமோட்சம் அன்றி விதிமுடிந்த
தாகிடுமோ உறவுத் தேட்டம் காட்டுமோ
உதய மறுமுனை யந்தியின் பின்னான
அந்தகாரமாய் முந்தியும் பிந்தியும்
பார்த்தும் பாராமலும் புரிந்தும் புரியாமல்
பற்றியும் பற்றாமல் பற்று வைத்துக்
கற்பவை கற்றுத் தேரக் கற்பதே
இற்றைக் குற்றதா யெனக்கு...


2.

பதிவுகள்  பெப்ருவரி 2002 இதழ் 26
வலிவாங்கியும் தாங்கியும்

புழுவா யுணரும் தருணம் புரைக்
கழிவெனக் கனலும் உள்
முள் கால் கிழிக்கச் செல் வழியில்
அடிக்கொரு தரம் திரும்பிப் பார்த்தபடி.
ஆரம்பமாகி விட்டது போல் வெளியேற்றம்
இடம்பெயரல் வழிவிலகல் வேரறுத்தல் ஆன
பல எத்தனையோ காதைகளினூ டாய்
கலங்கி யலைந்து பித்தாகித் தொலையும்
சொந்தம் அனந்தகோடி காலம் இருந்ததுவாய்
இறந்ததுவா யின்று ஓலமிட்டுப் பறக்கு
முயிர்ப் பேதைக் கிளி யிறகுகள்
படபடக்கப் படப் பின்னு மின்னு முயரப்
பறந்து டலை விண்மீன்களுக்குத் தின்னக் கொடுத்து
பதிலுக்குத் தன்
வலிதாங்கிக் கிடைக்கோட்டை மீட்டெடுத்துக்
கொள்ளும்.

செலவு

நிறமும் சுவையும் நீள அகலமும் நன்கறிய
நீர்வளம் நலங் குன்றியதாகும்.
மறுபடி கனலத் தொடங்கும் தாகவிடாய் தீராது
தேரோடக் கிளம்பி விடும் குதிரைக் குளம்பொலி
தொலைவாகி வருவதாய்
தளும்பி நலியும் துயர் நெஞ்சில் மண்டும்
பின்னோக்கிய பயணங்களும் பரிநலப் பிரார்த்தனைகளும்
இன்னுமாக இழப்பின் ஆறாக் காரிருட் புதைசேற்றில்
அதிவேகமா யிறங்கும் என்னை இறுகப் பற்றியிழுத்துக்
கரைசேர்க்க ஈராயிரங் கரம் போதா தெனில் உறும்
குறையிரண்டு போதுமாக வரமருள் மாகாளீ..


3.

பதிவுகள் மார்ச் 2008! இதழ் 99!
'ரிஷி ' யின் நீள்கவிதை

அகழ்வு !-  ரிஷி

1
மும்முரமாய் வெட்டப்பட்டுக் கொண்டு வருகின்றன குளங்கள்.
நவீனமானவை.
சாதாரணக் கண்களுக்கு எட்டாத அளவில்
செயற்கைச் செம்புலம், மஞ்சள்புலம், ஊதாபுலம்
இன்னும் எண்ணிறந்த நுண்நிறங்களில் கட்டமைக்கப்பட்டு,
முன்புலமும், பின்புலமும் கெட்டிப்படுத்தப்பட்டு,
வெட்டி வேர் பரப்பப்பட்டு, கொட்டி நீர் நிரப்பப்பட்டு,
குளங்களாக்கப்படும் இவற்றில்
யாரும் குளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டாலும்
எல்லோராலும் தம்மைக் கழுவிக் கொள்ள இயலாது.
குளத்துரிமையாளருக்கு அறிந்தவர், தெரிந்தவர்,
ஊர்க்காரர், உறவுக்காரர்,
கார்க்காரர், காப்பித்தோட்டக்காரர், அறிவுச்சொத்துள்ள
கல்வியாளர், மில் முதலாளி, வல்வினை முடித்துத் தரும்
தொண்டரடிப்பொடியார்கள், துதிபாடிகள், சாமியாடிகள்,
ஏமாளிகள், கோமாளிகள், என்பாருக்கே.... என்றாலுமென்ன?
குளக்கரைக்கண் அனைவருமே சமம்!
அதில் சிலர் அதிக சமம்.

2
சுற்றிலுமுள்ள படிக்கட்டுகளில் இறங்கியமர்வது
சுலபமாகச் செய்யக்கூடியதாகத் தோன்றினாலும்
உண்மைநிலவரம் அப்படியல்ல.
மேல்படிக்கட்டில் காலடியெடுத்து வைக்கும்போதே
வெளிவாயிற்காவலர்கள்
விவரமாய் அளவெடுப்பார் தோதானவர் தானோ வென..
மட்டைப்பந்து மைதானம்போல்
உயர்ந்த கட்டணமும், தாழ்ந்த கட்டணமும்,
அவற்றிற்கேற்ற தனித்தனி அமருமிடங்களும்,
இருக்கைகளும், நிழற்குடைகளும், குளிர்பானங்களும்
வெளிப்படையாய் காணக்கிடைத்தால்கூட
வியாபாரத் தந்திரங்களாகப் புரிந்து கொண்டுவிட
முடியும்... ஆனால்
இந்தக் குளங்களின் வரையறைகளூம், விதிமுறைகளும்
மறைகுறிப்புகளாய் ஒவ்வொரு படிக்கட்டின் உட்புறமும்
செதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவ்விதமாய்
அவற்றின் நவீனத்துவமும், தனித்தன்மையும்
அடிக்கோடிடப்பட்டு...

3
அடிக்கு அடி சங்கேத வாசகங்கள்
படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருப்பவர்களின் செவிகளுக்குள்
காற்றுத்தடமாய் இடம்பிடிக்க
விரைந்தவாறிருக்கிறார்கள் தூய்மையாளர்களும்
தூய்மையல்லாதோரும்
தமது எதிர்துருவ நிலைப்பாடுகளை என்றைக்குமாய்
குளத்தில் கரைத்து விட.
ஒன்றே குளம் என ஆயத்த சகோதரத்துவம் பாடியவாறு
செல்லுமவர்கள் வழியெங்கும்
காலுக்குக் கிடைத்தவரை - குறிப்பாக எளியவரை-
மிதித்துப் புடைத்தபடி.
'வாய்மை யெனப்படுவது யாதெனில்' என்ற
கேள்வியின் குரல்வளை
நேற்றே நெரிக்கப்பட்டுவிட்டது.

4
சாலையோரங்களிலெல்லாம் பிச்சைக்காரர்கள்,
தொழுநோயாளிகள்,
நடைபாதைவாசிகள்,
நலிந்த முதியோர்கள்
கதியற்ற குழந்தைகள்,
குடிசைவாழ்மனிதர்கள்,
அதிகதிகமாய் சேர்ந்து
அப்பிய அழுக்கோடு துருவேறியவாறு...
அவர்களை மதித்து கைதூக்கிவிட்டு
குளத்துநீரில் குளிக்கச் செய்து தூய்மையாக்கி
அருகமர்த்திச் சமமாக்க முன்வந்தாரில்லை
யெவரும்...
ஒன்றுமில்லாதானை சொந்தமாக்கிக் கொண்டு
எந்தக் கோட்டையைப் பிடிக்க...?
இன்னின்னது கொண்டு வந்து தருபவரே
கேளிர் காண்.
பெண்ணை வன்புணர்ச்சி செய்தாரேயாயினும்
தன்குளத்துறைவாரெனில்
தண்டனை குறைவு தான்.

5
வேண்டும்போது வெய்யிலை குளிராகப் பொய்யுரைத்து,
'மீண்டும் இதோ ஒரு மெய்ப்பார்வை' என்பதாய்
நீக்குபோக்காகப் பொருள்பெயர்க்கத் தேவையான
எடைக்கற்கள்
குளத்தையடையும் கீழ்நோக்கிய பயணத்தில்
பகுத்தறியும் கைகளிலும் புகுத்தப்பட்டு விடுகின்றன.
தரநிர்ணயங்களுக்கு 'இரட்டை அளவுகோல்கள்'
ஏற்கனவே மரபாக்கப்பட்டாயிற்று.
இந்த நவீன குளங்களின் படிக்கட்டுகளில் சற்றே
இளைப்பாற வேண்டி அம்ர்ந்து கொள்ளக்கூட
ஒருவர் தனது சுயத்தை
தலையைச் சுற்றி வீசியெறிந்துவிட வேண்டும் என்று
வரியிடைவரிகளாய்த் தெரிய வந்த போது
அதிர்ச்சியாயிருந்தது.
அதை வேசியின் கூச்சமின்மையாகப் பகுத்து
மூர்க்கமாய் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்ட கரங்களின்
அணில்வரிகள்
காலத்தின் ஆழத்திலிருந்து மேலெழுந்து வரும்.

6
காரியார்த்தமாய் குளத்திற்கு இருமுறை தமது
தேரிலழைத்துச் சென்றவர்
தெய்வப்பிறவியாகிவிட
கல்லிலும் முள்ளிலும் கூடவந்தாள் தன் கருத்தாய்
சொன்ன ஒரு சொல்லில்
அவள் தலைகொய்யப்பட்டு நிலைநாட்டப்படும்
பேராண்மை இன்றளவும்.
பெய்யெனப் பெய்யா மழையில்
பத்தினித்தனம் பிழையாகிவிட _
பெண்மையைப் போற்றுதும், பெண்மையைப் போற்றுதும்;
புண்ணாக்கி, புண்மையாக்கி பெண்மையைப்
போற்றுதும்;
மண்ணாந்தை யாக்கியும்;
மண்ணோடுமண்ணாக்கியும்.....

7
'ஒரு முல்லைக்கு ஈடாமோ மூன்று பில்லியன் டாலர்கள்?'
என்ற கேள்வி
வெறுமையாய் அலைந்து கொண்டிருக்கிறது
பால்வெளியில்.
குருத்துமூங்கில் தான் அன்பளிப்பாய்த் தரப்படுகிறது-
ரத்தினக்கல் பொருத்தப்பட்டு வைரத்தில் செய்தது...
நித்தம்நித்தம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன
நவீனகுளங்களின் முப்பரிமாணக் காட்சிகள்.
ஆரங்கள் துவாரங்களாய்,
அரைவட்டங்கள் சேதாரச்சதுரங்களாய்,
கண்மயங்கிக் கெட
கீழேகீழே போய்க் கொண்டிருக்கும்
குளத்திலும் காத்திருக்கும்
பாழும்
புதைசேறும்
மூத்திரக் கழிவுகளும்
சுறாவும்
திமிங்கிலமும்
வேறு
பல நூறும்...

காலம் மாறும்.


4.

'ரிஷி'யின் நீள்கவிதை
பொம்மிக்குட்டியின் கதை!

1
தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது?
அதுவும், சின்னக்கண்ணனின் பொம்மை அத்தனை கலைவண்ண
கைநேர்த்தியோடு
கிடைக்கோடாய் அசைவதைத் தவிர்த்து
மேலுங்கீழுமாய் மட்டும் முகம் ஆட்டிக் காட்டும்!
எதைச் சொன்னாலும் கண்சிமிட்டிப் புன்சிரிக்கும்.
கைகால் இயக்கங்களெல்லாம் குழந்தைக் கண்ணனின் மனம்
போன போக்கில்; அல்லாது தலையாட்டி பொம்மைக்கு
ஏது தனிப்பட்ட இயக்கம்...?
குறும்புச் சிறுவனின் கைகளிலும், மடியிலும்
தயக்கமில்லாமல் பொருந்தியமர்ந்திருக்கும்.
தனக்குப் பிடித்தமான பெயரை தலையாட்டி பொம்மைக்குத் தந்து
அதைத் திரும்பத் திரும்பக் கூவியழைத்துக்
குதூகலிக்கும் குழந்தை...
"பொம்மிக்குட்டீ வா.. வா.. பூ பூவாய் முத்தம் தா..."
பஞ்சுப்பொதியாய் பொம்மையின் உடல்.
பிஞ்சுக் கைகள் மென்மையாய் வருடித் தரும்.
துஞ்சும் நேரமெல்லாம் பொம்மிக்குட்டியைத்
தன்னருகே பத்திரப்படுத்திக் கொள்வான் சின்னக் கண்ணன்.
ஆனா- ஆவன்னா, A B C, 1 2 3...

அவனுக்குத் தெரிந்தமெல்லாமும்
சொல்லித் தரப்படும் பொம்மிக்குட்டிக்கும்.

2
பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்த சின்னக்கண்ணன்
கூடப் படிப்பவர்களைப் பற்றியெல்லாம் தினமும்
வீடு திரும்பிய பிறகு
வண்டிவண்டியாய் பொம்மிக்குட்டிக்குக் தவறாமல் கதை சொல்வான்.
கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருக்கும் பொம்மிக்குட்டி.
அடிக்கொரு தரம் தலையை ஆட்டும் - மேலுங்கீழுமாய்.
"அச்சுதன் அடித்தான், அவனைத் திருப்பியடித்தேன் - சரிதானே?"
"ஆம், ஆம்". ஆனால்...
"முகுந்தன் என்னுடைய பென்சிலை உடைத்துவிட்டான் என்பதால்
அவனை நையப் புடைத்து விட்டேன்" என்று சின்னக் கண்ணன்
சொன்னபோது
செய்த குற்றத்திற்கு தண்டனை அதிகம் என்றுதோன்றியது
பொம்மிக்குட்டிக்கு. சற்றே தயக்கமாய்
தலையை ஆம் - இல்லையாய் ஆட்டியது பொம்மை.
உயிருள்ளது பொம்மை என்று நம்பும் சிறுவன் கொஞ்சம்போல்
திகைத்துச் சினந்தான்.
தகப்பன்சாமி தான் என்றாலும்
"எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காய் தருணுடைய கையைக்
கடித்துக் குதறி விட்டேன், கத்தியாலும் வெட்டி விட்டேன்"
என்று பெருமைபீற்றிக்கொண்டபோது
பொம்மிக்குட்டியின் தலை தவிர்க்கமுடியாமல் இடவலமாய்
ஆட ஆரம்பித்ததைக் கண்டு
மட்டுமீறிப் புகைந்த கோபத்தில் சிறுவனின் கரம்
பொம்மிக்குட்டியின் சிகையைக் கொத்தாய்ப் பிடித்து
கதவிற்கு அப்பால் வீசியெறிந்தது.
'பதிலுக்கு புதிய பொம்மைகள்
காசு கொடுத்தால் கிடைத்துவிட்டுப் போகிறது...
அதுவும், ஓசியில் கிடைத்ததுதான் பொம்மிக்குட்டி.
போதாக்குறைக்கு, நிறைய நைந்துபோய் விட்டது.

ஆய் பொம்மை; பீத்த பொம்மி..'

3

காரிருள் கவிய விழுந்தது விழுந்தவாறு
கிடந்தது பொம்மிக்குட்டி.
முதுகெலும்பு முறிந்ததுபோல் ஒரு சுளீர் வலி படர
உயிர்ப்பின் அடையாளம் பொம்மைதானோ வென
தனக்கெட்டிய பட்டறிவில் படித்துக் கொண்ட
விடையே கேள்வியாக அனத்திக் கொண்டிருந்தது நெடுநேரம்.
பின், கனவே போல் காற்றுத் தடத்தில் கிளம்பிச் சென்று
கதவிடுக்கில் மனம்நுழைத்துப் பார்த்தது.
பரிச்சயமான அறை.
பழகிய சின்னக்கண்ணன் வழக்கம்போல்
கைகொட்டிச் சிரித்தவாறு கட்டளையிட்டுக் கொண்டிருக்க,
எதிரே
சாவிகொடுத்தால் ஓடும் பொம்மை_
சல்யூட் அடிக்கும் பொம்மை_
சிரியென்றால் சிரிக்கும் பொம்மை_
சீறிபாயச் சொல்லி தள்ளிவிட்டால்
சரவென்று நெளிந்தோடும் நாகப்பாம்பு பொம்மை_
குத்தினாலும், எத்தினாலும் சத்தமெழுப்பாமல்
சிறுவனின் வீரசாகச் செயல் என்பதாய்
பெருமையில் பூரிக்கும் கைதட்டி பொம்மை_
'வெல்கம்' பொம்மை,ரிம்-ஜிம் நாட்டிய பொம்மை_
பெருந்தனக்காரர் பரிசளித்த பொம்மை_
பல வருடங்களுக்குப் பிறகு சாவகாசமாய் ஊரைப்
பார்க்கத் திரும்பி வந்திருக்கும் உறவொன்று
வாங்கிவந்த பொம்மை_
விரல்சொடுக்கிற்கேற்ப விரைந்தோடி
சுவற்றில் முட்டி நிற்கும் பொம்மை_
அலங்கார பொம்மைகள்,அவதார பொம்மைகள்_
வைக்கோல் பொம்மைகள், வெண்கல பொம்மைகள்_
பைக்குள் போட்டுக் கொள்ளுவதற்கேற்ற சிறிய பொம்மைகள்_
பூதாகார கரடி பொம்மைகள்...


4

அறையில் ஒரே நெரிசலாயிருந்தது.

பிடிக்கவில்லை யென்று கடித்துத் துப்பியிருந்த பொம்மை
பரணிலிருந்து கீழே இறங்கி வந்திருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன் இன்னொரு குழந்தையின்
கைக்குப் போய்ச் சேர்ந்துவிட்ட பொம்மையும்
அருகமர்ந்து கொண்டிருந்தது.
கிழிந்த பொம்மைகள் சிலவற்றிற்கு
ஆயத்தஆடைகள் அணிவித்து
அழகுபார்த்துக் கொண்டிருந்தான் சின்னக்கண்ணன்.
சிறுவனின் கண்களே உதடுகளாய், வெளிப்பட்ட கூற்றுக்கு
மாற்று குறையாமல்
ஆடிக் கொண்டிருந்த தலைகள்
பொம்மைகளின் மேலும், கீழுமாய்.
காரியார்த்தமாய் வால்களைச் சுருட்டிக் கொண்டு
கூர்வளைநகங்களை செல்லப்பிராணிகளாய்
உள்ளிழுத்துக் கொண்ட வாக்கில்
அமர்ந்துகொண்டிருப்பவைகளைக்
காட்டும் அடையாளம் காலம்
எனப் பின்னேகி
பஞ்சுப் பிரிகளாய்
வெளியில் கலந்து திரியும்
பொம்மிக்குட்டியின் குரல் எட்டுமோ
உன்னை என்னை நம்மை...?

"நீயும் பொம்மை, நானும் பொம்மை,
நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை"

4.


பதிவுகள் ஆகஸ்ட் 2005 இதழ் 68
ஒரு சல்லடையும் சில கவிதைகளும் செயல்முறை விளக்கம்!  - ரிஷி -

தேவை சில கவிதைகள்
இரண்டு பூதக் கண்ணாடிகள் -
வரிகளில் துருவ ஒன்று. வரியிடை வரிகளில்
துழாவ ஒன்று
ஓரு சல்லடை
ஆளுக்கு இரண்டு அல்லது
மூன்று கைகள் வெண்டுமானாலும் -
குறிப்பெழுதவும். பட்டியல் தயாரிக்கவும்.
தாளும். எழுதுகோலும்
அருகே இருக்கும்படியாய் ஒரு குப்பைத் தொட்டி
தயாராய் சுவடரில் தொங்கிக் கொண்டிருக்கட்டும்
ஒளிவட்டங்கள்|
ஒரு சில பட்டங்கள்
முடிந்தால் கைவசமிருக்கட்டும் ஒரு
‘மெட்டல் டிடெக்டரு'ம்!

சல்லடைக்குள் கவிதைகளையிட்டு கைபோன போக்கில்
சலிக்கவும்
சலிப்பதற்கு முன்பும் பின்பும் மறவாமல்
இரண்டு
பூதக் கண்ணாடிகளாலும்
கவிதைகளில் இடம் பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகளைக்
கட்டாயம் துருவவும்.
முடிந்தால் ‘மெட்டல் டிடெக்டரைப்’ போல் ஏதாவது ஒன்றைக்
கையாளவும் செய்யலாம்.
சலிப்பதன் வழி சல்லடைக்குள் சேகரமாக வேண்டியது
சாரமா. சக்கையா என்பதைக் கவனமாகத்
தீர்மானித்துக் கொண்ட பின்
அதற்கேற்ப சல்லடைத்துளிகன் அளவைக்
கூட்டியோ குறைத்தோ வெட்டி விட்டுக் கொள்ள
வெண்ழயது முக்கியம்·
அல்லது. சல்லடைக்குள் எஞ்சும் நல்லதையஜம்
வெளியேறும் கசடையும்
கலந்து கட்டி கழிசடையாக்கி
கட்டுரை. கருத்தரங்க வாணலி வகையறாக்களில்
~பினாயிலிட்டு. பெட்ரோல் ஊற்றி வதக்கிக்
கா¢த்து முடித்து பின்
குப்பைத்தொட்டியில் மொத்தமாய்க்
கொட்டி விடவும்.
பின் வழக்கம் போல் புத்தம்புதிதாய் சில பெயர்களை
கைவசமிருக்கும் ‘நச்சுவித்துக்கள் ’ பட்டியலில்
இடம்பெறச் செய்து
முத்தாய்ப்பாய்
சுவா¢ல் தொங்கிக் கொண்டிருக்கும் பட்டங்களை
முன்னும் பின்னும் குத்திக் கொண்டு
கச்சிதமாயொரு முத்திரை பிடித்தவாறு
ஒளிவட்டங்களை உங்கள்
தலைகளுக்குப் பின்னால் சுழல விட்டுக் கொள்ளவும்.