-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

கார்மேகம் கம்பன் என்கக்
கட்டியம் கூறி மண்ணில்;
ஓர்கவி உண்டோ இல்லை
ஒடிசியும் ஷெல்லி இன்னும்
பார்கவி சேக்ஸ்பி யர்க்கும்
படைத்ததோர் ராமா யணத்தின்
நேர்கவி யோடு வைத்து
நிறுத்திட முடியா தையா !

இலக்கியத் தோட்டம் தோன்றி
எழிற்பிர சாந்தன்; பேரார்
முழக்கிய கம்பன் பாட்டு
முத்தமிழ்க் கீடு இல்லாப்
பழமறை யாகும் வையப்
பட்டறைத் தேனார் பாக்கள்
இளம்புவி கொடுக்கும் என்றும்
இறப்பிலாக் கவிதை என்றார் !

கம்பனைக் கற்றேன் அந்நாள்
காட்டிய காண்டம் முற்றும்
கும்பிடக் கொடுத்த காதை
குவிந்தனள் போற்றும் சீதை
இந்திர சித்தே மைந்தன்
இராவணர்க் கென்ற போதும்
வந்ததே அறத்தின் சாயல்
வரலாறே சொல்லும் காயல்!

பிரசாந்தன் முனைவர் என்ற
பேராத னைக்கோர் ஆயன்
குரலேசெந் தமிழே என்றே
கோலோச்சும் அறிவின் நேயன்
அறமேயாம் கம்பன் பாட்டு
அழியாதே வையம் முற்றும்
நெறியாக நிற்கும் அன்றோ
நீள்நிலம் வரைக்கும் என்றார்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.