கவிதை: எனக்குள் குரலொன்று...

Monday, 07 September 2020 08:00 - கவிஞர் பூராம் (முனைவர் ம இராமச்சந்திரன்), ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் - கவிதை
Print

அனுமதியில்லாமல் வீட்டின் வரவேற்பறையில்
வந்தமர்ந்த குருவி ஒன்று,
உற்று நோக்கலில் மனிதனின் ஆதிகுரூரம் தொடங்கி
அத்தனையும் அதன் கண்களில்,
உணவிட்டு உறவைப் பேணலாமென்று
எண்ணிய எண்ணத்தில் உண்மையில்லை,
கவட்டையோடு அலைந்த காலத்தில்
என் கல்லிற்கு அடிபட்டு உணவான
குருவியின் நினைவொன்று
தீய கனவாக வந்து சென்றது.

 

அந்த மரணத்தின் வாசனை இதற்கும்
தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது  என்றது உள்மனம்.
பிரக்ஞையற்று விரைந்து சென்ற கைவிரல்
மின் விசிறியை நிறுத்தியது.
சற்று ஆசுவாசம் ஆனால்
எதைப் பற்றியும் வன்மம் இல்லாமல்
கிரீச்சிட்டு... கிரீச்சிட்டு... சிறுமைப்படுத்தியது என்னை
அந்தச் சிட்டுக் குருவி.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 07 September 2020 08:12