- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

இயல்புநிலை மாறியது
செயற்கையதில் ஏறியது
மனமதிலே நவநினைப்பு
குடியேற்றம் ஆகியது
மனிதரது நடவடிக்கை
இயற்கைக் கெதிராகியது
வாழ்வினிலே பலதுன்பம்
வந்தபடி இருக்கிறது !

நாகரிக மெனும்மாயை
நாளுமே மறைப்பதனால்
ஆகாயம் பூமியெலாம்
அடிமையென எண்ணிவிட்டார்
வேண்டாத பலவற்றை
விரும்பியே நாடியதால்
வேதனையின் பிடியினிலே
மாளுகிறார் மனிதரிப்போ !

விஞ்ஞானம் கண்டறிந்தார்
விந்தைகளும் விளைந்தனவே
மேலுலகை கீழுலகை
விட்டுமவர் வைக்கவில்லை
உடல்பிரித்தார் உருக்கொடுத்தார்
உணர்வுதனை அழித்திட்டார்
மனிதரிப்போ உலகினிலே
அமைதியற்றே உலவுகிறார் !

 

வானிடிக்கும் அளவினிலே
வகைவகையாய் கட்டிடங்கள்
தானமைத்து பெருமையுற்று
மாநிலத்தில் திகழுகிறார்
பொறுமையுடை பூமிதனை
பொங்கியெழ வைக்கின்றார்
அழிவுதனை யெண்ணாமல்
ஆடுகிறான் மனிதரிப்போ !