முனைவர்.சி.திருவேங்கடம் கவிதைகள்!

Thursday, 12 December 2019 09:54 - முனைவர்.சி.திருவேங்கடம் - கவிதை
Print

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

தள்ளாட்டம் …

உள்ளத்தின்
ரணம் ஆற
அருமருந்தென
கூடா நண்பனின்
பரிந்துரைப்பை
செவிமடுத்து
கேட்டு
கண்ணாடிக்
கோப்பைக்குள்
திரவத்தை
ஊற்றிக் கொஞ்சம்
உறிஞ்சிக் குடித்தேன்.

அது மிடற்று வழி
இறங்கி
கல்லீரல்,
கணையத்தில்
தஞ்சமாகி
மூளை நரம்புகளை
மழுக்கி
சுய நினைவிழப்பில்
சொற்ப்பிழை
விளையச் செய்து
மெல்ல மெல்ல
என்னைக் குடித்தது.

போதையின்
உச்சத்தில்
குடும்பத்தின்
மானமும்
எனது சுயமும்
சுருண்டு
தள்ளாடிக்கிடக்கிறது
வீதியில் ...

முகாரி…

இசை வல்லுனரின்
இல்லத்தில்
கண்ணாடித் தொட்டியில்
புதிதாய் வாங்கி வந்த
வளர்ப்பு மீன் ஒன்று
துள்ளிக் குதித்து
கிடந்த நிலையிலிருக்கும்
வீணையின்
நரம்புகளில்
சுழன்று விழ
உயிர் காற்றை
சுவாசிக்கும்
எத்தனிப்பால்
அதிர்வுற
வீணையில்
எழுந்ததோ
முகாரி.....

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 05 March 2020 09:10