ஶ்ரீராம் விக்னேஷ்- 30.08.2019 அன்று, “மனைவியர் தின” த்தினை  முன்னிட்டு, குத்துவிளக்காகத்  திகழும்  “குடும்ப விளக்கு”ப்  பெண்ணைச்  சிறப்பித்த  பாவேந்தரது வரிகளை,  முடிந்தவரை   என் வரிகளில்   தருகின்றேன். -

முட்டிடும்  கூரைவீட்டில், 
குட்டைபோல்  குனிந்துசேவை.
மட்டிலா  செய்யும் மனைவி!

கட்டிய  கணவன்  நெஞ்சில்,
கிட்டவும்  துன்பம்  சேரா
கெட்டியாய்  நிற்கும்  துணைவி !

பட்டிகள்  தொட்டிதோறும்,
இட்டமாம்  நேசத்தோடு,
பரிமாறும்  இதயம்  இரண்டு !

திட்டமாய்  இருந்தால்  அதனைத்
தீர்க்கமாய்ச்  சொல்லலாமே
திறமான  குடும்பம்  என்று !

பட்டினியோடு  சென்று,
பகல்சாயத்  திரும்பி வந்து
பாயாசம்  உண்டேன் நான்  என்பான்!

கட்டிய  மனையாள் உண்ணக்
கவளத்துச்  சாதம்தொட்டுக்,
காதலோ  டூட்டச்  சொல்வான் இவளோ

சொட்டுமே  உண்ணமாட்டேன்
சுவைத்து நீ  உண்ட பின்னர்,
மிச்சமாய்  வைக்கும்  உந்தன் எச்சில்

விட்டதோர்  இலையில்  சாதம்,
கொட்டியே  உண்பேன் அன்றி,
சுட்டாலும்  வேறுண்ணேன்  என்பாள் !

சமைத்ததோர்  குழம்பும், சோறும்,
சுவைத்திட  வாயில்  போட்டு,
சாப்பிட்டு  விழுங்கும்போ தவனின்கண்

இமைப்பிலே  வியர்வை  தோன்ற,
எரிப்பினால்  கண்ணீர்  தோன்ற,
இழுத்தொரு  தும்மலும் போட

நமைப்போல  வேறு  ஒருத்தி,
நாடியே  நினைத்திட்  டாளோ?   
“நானென்ன  குறையைக்  கொண்டேன்  நாலில் ?”

என எண்ணிச்   செமையாய்க்  கண்ணீர்,
சிந்தியே  துடைப்பாள்  பாவி
ஏங்கிடுவாள் வஞ்சக நெஞ்சு   இன்றி !

தொட்டிலில்  கிடந்த  பாலன்,
துள்ளியே  அப்பன்  சோற்றில்,
தொடுக்கின்ற  சிறுநீரின்  தொடர்பால்

விட்டுண்ண  உப்போ  மற்றும்,
வேறெந்தச்  சுவையோ  எதுவும்,
வேண்டாமென்  றப்பனதை  உண்பான் !

மட்டிலா   மகிழ்வைக்   காட்ட,
கட்டியே  அணைத்துத்  தூக்கி,
மடியிலே  கிடத்திக் கொஞ்சி  ரசிப்பான் !

எட்டத்தில்  தன்துயர்  செல்லும்
எழிமிகு   காட்சிகள்  தன்னை,
இதயத்தில்  கண்டு அவன்  ரசிப்பான் !

வாசலில்  யாரோ  வரும்
ஓசையின்  துடிப்புக்  கேட்டு,
வரவேற்கும்  எண்ணமுடன்  எழுவான் : அவரோ….

நேசமுடன்  செந்தமிழை  நிலைபெறச்  செய்துவிடும்,
நிறைகுடத்தார்  எனக்கண்டு  மகிழ்ந்து : திருக்
குறள்வழியே  ஓம்பிடுவான்  விருந்து !

விருந்துணவின்  ருசிமறக்க : விருந்தாளி  தருகின்ற
கரும்புநிகர்  தனைமிஞ்சும் சுவையாம் : அது….
காதாரக்  கேட்கும்தமிழ்க்  கலையாம்!

பள்ளி சென்று  வீட்டினுக்கு  மதியவேளை,
துள்ளிவரும்  கிள்ளைமுகம் : பால்ய நாளை
அள்ளித்தர  அதன்நினைவில்  மூழ்கிப் பின்னர்….

செந்தமிழ்ச்  சுவடிக்குள்ளே  தீனியுண்டு,
தீரா அலுப்புடனே  வந்த சேய்க்கு,
தந்தே  அமுதமதை : ஊட்டிப்  பின்னர்……

தானுண்பாள் :  கணவன்  இலைப்  பழையசாதம்
வானமுது  ஊறுகின்றகாயினோடு  :  படித்தவர்கள்
தேனென்றே  பழந்தமிழை  உண்ணல்  போல !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.