கவிதை: தவிக்கவிட்டுப் போனதேனோ !

Saturday, 06 April 2019 23:05 - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) - கவிதை
Print

 - மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார்

- மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா  -

சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே
மொத்தமுள்ள தமிழறிஞர் முழுப்போரும் அழுகின்றார்
எத்தனையோ பட்டங்கள் ஏற்றநிறை  விருதெல்லாம்
அத்தனையும் அவர்பிரிவால் அழுதபடி நிற்கிறதே

உலகமெலாம் சென்றிருந்தார் உவப்புடனே தமிழ்கொடுத்தார்
நிலைபெறு மாறெண்ணிநிற்க நிறைவாக அவர்கொடுத்தார்
அளவில்லா கட்டுரைகள் அவர்கொடுத்தார் உலகினுக்கு
அழவிட்டு சிலம்பொலியார் அவ்வுலகு சென்றுவிட்டார்

மாநாடு பலகண்டார் மலர்கள் பலகொடுத்தார்
பூமாலை புகழ்மாலை தேடியவர் போகவில்லை
கோமனாய் கொலுவிருந்தார் கொழுகொம்பாய் தமிழ்கொண்டார்
பாவலரும் காவலரும் பதறியழச் சென்றுவிட்டார்

தேன்தொட்டத் தமிழ்பேசி திசையெங்கும் வசங்கொண்டார்
தான்விரும்பி சிலம்பதனை தமிழருக்கு எடுத்துரைத்தார்
நானென்னும் அகங்காரம் காணாத வகையினிலே
தான்சிலம்பார் வாழ்ந்ததனால் தானுலகம் தவிக்கிறது

சங்கத்தமிழை அவர்  இங்கிதமாய் எடுத்துரைத்தார்
எங்குமே சிலம்பொலியார் என்பதே பேச்சாச்சு
பொங்கிவரும் தமிழுணர்வால் பொழுதெல்லாம் தமிழானார்
தங்கச் சிலம்பொலியார் தவிக்கவிட்டு போனதேனோ !


This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 06 April 2019 23:18