கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

Saturday, 16 March 2019 00:51 - கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) - கவிதை
Print

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1. கொலைக்கருவிகளோடு மணந்துநிற்கும் பூ

காமமதம் பிடித்த
யானைப்பெண்
கொம்புகள் இரண்டோடு
விழிவேல் நோக்கில்
இதயம் பிளந்து ஒழுகும் குருதிவெள்ளத்தின் துளியொன்று  எதிர்பார்ப்போடு

அன்பெனும் காமவெள்ளத்தில்
அடித்து நொறுக்கப்பட்டது நானென்றாலும்
வாழ்ந்திருப்பது காதல்தான்
இன்னோர் ஆன்மாவின் ரத்தம்
குடிக்க தீராத மோகத்தோடு
அவளும் அவள் நிமித்தமும்

2. ஒரு துளி நீரின் உன்னதம் பேசும் சருகு

காணாமல் போனதால் அலைந்து
திரிவது காற்றும் நானும்

வாழ்வின் வாழ்நாள் சுருங்கி
காற்றால் விடுதலையாகி
மண்ணில் உரமாக வந்தவழி
கண்ணில் தெரிய
மௌனத்தில் நான்!

வாழும் ஆசை அடி மனதில்
இசையோடு கீதம் பாட
வானம் பாா்த்துக் கருமை தேடி
விழும் ஒரு துளி நீரில்
மீதி வாழ்க்கை!

தென்றலின் இதமான தீண்டலில்
சிலிர்த்துக்கொண்ட உடல்
துண்டிக்கப்பட்ட உண்மை அறியாமல்
களிநடனத்தில் வந்தடைந்த மண்!

ஒரு துளிப்பட்டுக் கண்விழித்த வேளையில்
உறவறுந்து போனேன் சருகாய்!

3. சூரியனை உட்கொள்ளும் பொழுது

அமுதஒளி தீண்டலில் பனியாய் நனைந்து
உயிாின் உள்ளறையில் குளிா்ந்து
ஆன்மகானம் கேட்டுக்கொண்டே  இருக்கிறது

வெம்மையின் தளும்பலில் சருகாய் எரிந்து
பாறைப்பெண்ணின் பனிக்குட உடைப்பில்
ஊற்றாய் பெருகும் நூற்றாண்டுத்தவம்

உடலூற்றில் பொங்கி எழும்
அன்பெனும்  ஆன்ம வெள்ளத்தில்
கடைகோடி விளிம்பில் அவளின் புன்னகை

வியர்வையின் வற்றாத நதியில் உழைப்பின்
உன்னதங்கள் நீர்க்குமிழியாய் சிலகணங்கள்
கடந்துசெல்ல எத்தனையோ இருந்தாலும்
இருந்து நினைக்க அவளின் முதல்பாா்வை!
உதிர்ந்து விழும்  ஒவ்வொரு இலையும்
தெரியவில்லை வருந்துவதாக!
வெறித்தப் பாா்வையோடு வெட்டவெளியில்
சருகாக மறுக்கும் தருணங்கள்

இலையவளின் ஆரவார மகிழ்ச்சியில்
பறவைகளின் இளைப்பாரலில்
இந்தக் கோடையும் கடந்துசெல்லும் வெறுமையில்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 16 April 2019 03:12