சந்திரன் கவிதைகள்!

Saturday, 26 January 2019 00:38 -முனைவர் ஆ.சந்திரன் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் , வேலூர் - கவிதை
Print

1. மாற்றம்

- முனைவர் ஆ.சந்திரன் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், வேலூர் -ஏனோ அன்று புத்தாடை வாங்கியே தீரவேண்டுமென்று
பிடிவாதமாய் அங்காடித் தெருவில் நடந்துகொண்டிருந்தேன்
“அங்கவஸ்திரம் தலைக்கு அழகாய் இருக்கும்” என்ற கடைக்காரன்
“தோளில் மாட்டும் பூனூல் இலவசம்” என்றான்
திருப்தியின்றி வேறுகடையினுள் நுழைந்தேன்
“இது லேட்டஸ்டு மாடல் ஜிப்பா” என்று நீட்டியவன்
“இந்த டாலர் செயின் இலவசம்” என்றான்
விளைவு
சாம்ராணிப் புகை வீசிய கடையில் நான்
“இந்தத் துணி வாங்கினால் உங்களுக்குத் தாடி அழகாய்
முளைக்கும்” என்றான் கடைக்காரன்!
மூன்று நாள் சேவ் செய்யாத தாடியைத் தடவியவாறே
எதிரே வந்த துறவியைக் கடந்து வீட்டை அடைந்தேன் !
குளித்து முடித்து, எந்த ஆடையை உடுத்திக்கொள்வது? என்ற
யோசனையுடன் அலமாறியை அலசியபோது
அம்மாவின் கைப்பக்குவத்தை மீறி எழுந்த
மகனின் சிறுநீர் வாசம் “என்னை இருக்கப் பற்றிக்கொள்” என்று
என்முன் வந்து டேன்ஸ் ஆட
அதை எடுத்து உடுத்திப் பார்த்தேன்!
மடிப்பின் இடையில் ஒளிந்துகொண்டிருந்த
மஞ்சள் என்னைப் பார்த்து சைட் அடித்தது!

2. எனக்கும் ஆசைதான்….

அழித்து எழுத ஆசைதான்
எனக்கும் இப்போதும்
முன்போல!
இப்போது ஏனோ
எழுதியதை அழிக்க முடியாமல் போகின்றன!
கைவிரல்கள் சோர்ந்து போகின்றன!
எழுத்துக்கள் நன்றாக இருக்க ஏன் அழிக்கத்துடிக்கிறேன்?
என்ற கேள்வி என்னிடமில்லை இல்லை.
பதில் மட்டும் இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
பாம்பு பல்லி வவ்வால் நிலா
நான் அம்மா அப்பா அண்ணன்
என விரியும் அர்த்த ரேகைகளைப்
பண்டிதர்கள் கிறுக்கல்கள் என்று புறந்தள்ளுகிறார்கள்.
ஆனால், ஏனோ
என்னால் அவற்றையும் அழிக்க முடியவில்லை!
அதனால்தானோ என்னவோ அவ்வப்போது
நான் ஒன்றும் அறியாச் சிறுவாய்
உருமாறுகிறேன்!
உருமாற்றப்படுகிறேன்!

-முனைவர் ஆ.சந்திரன்  , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் , வேலூர் -

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 26 January 2019 00:41