கவிதை: அரூபமானவை பூனையின் கண்கள்

Thursday, 07 June 2018 01:32 - எம்.ரிஷான் ஷெரீப் - கவிதை
Print

ரிஷான் ஷெரீப்எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும்
ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும்
அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர

ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும்
மேனி வரிகளோடு
அச்சுறுத்தும் சிலவேளை அதன்
அசட்டுச் சிப்பிக் கண்கள்

இரைக்காகக் காத்திருக்கும்வேளையில்
அக் கண்களினூடு ததும்பும்
சலனமற்ற ஒற்றைச் சாதுவின் தியானம்

வேட்டை விலங்கின்
உடல் மொழியைப் பேசும்
பின்னங்கால்களில் அமர்ந்து
மீதிப் பாதங்களை ஊன்றி
நிமிர்ந்து பார்க்கையில்

ஏதேனும் யாசித்துப் பின் தொடரும்
அதன் பார்வையில்
தயை கூறக் கோரும்
கெஞ்சல் மிகைத்திருக்கும்

அபூர்வமானவை
பூனைப் பார்வைகளற்ற
குடியிருப்புக்கள்

அரூபமான கண்களைக் கொண்ட
பூனைகள்
பூனைகள் மாத்திரமேயல்ல

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Thursday, 07 June 2018 01:33