கையில் கிடைத்த கற்கள் சில;
கவனமாய் கூர்தீட்டிவைத்துக்கொண்ட கற்கள் சில;
உடைந்த கண்ணாடிச்சில்லுகள்,
காலாவதியாகிவிட்ட அம்மிக்குழவிகள்,
அறுந்த சங்கிலிகள்
அம்புகள் விஷம்தோய்ந்த முனைகளோடு....

அத்தனையும் சொற்களாய்
உருமாறி வெளியே தெறிக்கும் வேகத்தில்
அப்பாவி மண்டை பிளந்து
ரத்தம் பெருக்கெடுக்க,
அநியாயமா யொருவரின் விழி சிதைய,
அவனை மனைவி பறிகொடுக்க
இவளைக் கணவன் இழந்தழிய,
கொள்ளைபோகும் மனிதநேயம்.

பிள்ளைகள் தேம்பியழ,
கிள்ளிவிட்டுத் தொட்டிலையும்
ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள்
சின்னத்திரையெங்கும்.....

அன்பின் பெயரால்
முகநூல்வெளியெங்கும் சொல்லாயுதங்களோடு
வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.....
நம்மை நாம் நாலாந்தர எதிரிகளாய் பாவிக்க
நம்மை நமக்கே நபும்சக எத்தர்களாய்க் காண்பித்து
கண்சிவக்க அத்தனை ஆங்காரமாய்
கத்திக்கொண்டிருக்கிறார்கள்
நமது குரல்களாய் தம்மைத்தாமே
பிரகடனம் செய்துகொள்பவர்கள்.
மறுக்கும் குரல்வளையை
அறுக்கத் துணிந்தவர்கள்.

மறவாமல் தற்காப்புக்கவசமணிந்திருக்கும்
அவர்களுக்கு
தெருவெங்கும் சகமனிதர்கள்
தீக்காயங்களோடு சிதறியோடுவதைப் பற்றி
எந்தவொரு கவலையுமில்லை.
இற்றுவிழுவோர் எண்ணிக்கை
எத்தனைக்கெத்தனை அதிகரிக்குமோ
அத்தனைக்கத்தனை அதிகமாய்
வந்துசேரும் விளம்பரங்களும்
வெளிநாட்டுப்பயணங்களும்.

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.