தம்பா (நோர்வே) கவிதைகள்: ஏட்டிக்குப் போட்டி, சிறை ஒன்று அடிமைகள் வேறு.

Monday, 12 March 2018 15:33 - தம்பா (நோர்வே) - கவிதை
Print

1. ஏட்டிக்குப் போட்டி.

- தம்பா (நோர்வே) -பாலைவானத்து குருமணலை
நீர்வற்ற வறுத்து
குளிசைகளாக பிணைந்து
வறண்ட தொண்டைக்கு
தாகசாந்தி செய்யும்
வைத்திய வைரியர் நாம்.

எதிர்த்தவன்  வீட்டு
முகடு எரிவதை
ரசித்து குதிக்கிறான்
தன் வீட்டு
அத்திவாரம் தகர்வதை மறந்து.

பற்ற வைத்ததவன்
தொற்றவைத்து பதறவைக்க
தகர்ந்தவன் தடுமாறுகிறான்
தகடு வைத்து  தவறிழைக்க.

அநியாயத்தை மற்றோரு
அநியாயம் மூலம்
நியாயம் செய்து விடும்
இருட்டினுள் கருப்பை தேடும்
குருடர்களும் நாம் தான்.

2. சிறை ஒன்று அடிமைகள் வேறு.

பாலைவானத்து குருமணலை
நீர்வற்ற வறுத்து
குளிசைகளாக பிணைந்து
வறண்ட தொண்டைக்கு
தாகசாந்தி செய்யும்
வைத்திய வைரியர் நாம்.

எதிர்த்தவன் வீட்டு முகடு எரிவதை
ரசித்து குதிக்கிறவன்
தன் வீட்டு அத்திவாரம்
தகர்வதை மறந்து போகிறான்.

பற்ற வைத்ததவன்
தொற்ற வைத்து பதற வைக்க
தகர்ந்தவன் தடுமாறுகிறான்
தகடு வைத்து  தவறிழைக்க.

பகலென்று இரவையும்
இரவென்று பகலையும்
கண் திறவாமல் கதை சொல்லும்
கல்லாத காவலர்களின் களமிது.

பற்றி எரியும் நகரங்களை 
பெற்றோல் ஊற்றி
அணைக்க வரும் தர்மவான்கள்.
தீயில் பொசுங்கும் குழந்தைகளிடம்
ஓடோடி வந்து மலர் தூவி 
ஆசிர்வாதம் செய்கிறார்கள்
அடுத்த பிறப்பில்
தம் இனத்தில் பிறக்க வேண்டி.

அநியாயத்தை இன்னொரு
அநியாயம் மூலம்
நியாயம் செய்து விடும்
இருட்டினுள் கருப்பை தேடும்
குருட்டு விற்பன்னர்களும் நாம் தான்.

பிறக்கும் போது திறவாத கண்கள்
இறக்கும் போது மூடுவதில்லை.


Last Updated on Tuesday, 13 March 2018 16:35