சிவசக்தி (புதுவை) கவிதைகள்!

Friday, 08 December 2017 13:53 - சிவசக்தி (புதுவை) - கவிதை
Print

1. மீண்டும் நான்..

வாழ்வில் ஏதோ தேடி
கிணற்றை எட்டிபார்த்தேன்
தண்ணீர் கூட்டம்
அசைவால் அதிர்ந்தது
சிறுகல்லை வீசினேன்
சிற்றலை சிரித்தது
அமைதியானது..

என் மௌனம்
நிலையில்லாமல் நின்றது
கடலின் மடியில்
அமர்ந்தேன்
அலையின் வேகம்
குறையவில்லை
என்னைபோல்
கரையில் கூட்டம்
எதை தேடுகிறது
சற்று துணிந்தேன்
நீந்தக் கற்றுகொள்ள
கடலில் குதித்தேன்
அலை கரை ஒதுக்கியது

மீண்டும் குதித்தேன்
சற்றுத்தூரம் கடந்தேன்
சிலரால் கரையில்
தள்ளப்பட்டேன்
இம்முறை
படகை வாடகை எடுத்தேன்
என் பயண அனுபவங்கள்
எவ்வளவு பெரிது?
கற்றுக்கொண்டேன்
வெகுதூரம் சென்றேன்..
கடல் நண்பனான்
அவன் என்னிடம்
நண்பா!
ஆதவன் கண்கள்
முழுவதும் என்மேல்
இரவில் நிலவும் நானும்
பேசிக்கொள்வோம்!
என் கருவறைக்குள்
உயிர்களை பாதுகாத்து
கொடுக்கிறேன்
மானுடன்
என் கருவறையை
சிதைக்கிறானே நண்பா!!

சிலநேரம் கடுமையாகப்
பேசுவேன்
ஆழி பேரலைகள்
தாண்டவம்!
வாழிடம் வந்து சென்றேன்
வியப்பில் நீங்கள்..

சரி நண்பா
உன் பிரச்சனைக்கு
என்னிடம் வந்தாய்
ஆழத்தில் இருக்கும்
அமைதிக்கு வா..
முழுபொருளில்
அமைதி இருக்கும்.

உங்களை அலையால்

தொட நினைக்கிறேன்
சற்றுத்தள்ளியே
உங்கள் பார்வை.

அருகில் அமைதியை
தந்துவிட்டு அல்லவா
நண்பா செல்கிறேன்!

அலை ஒதுக்கியது என்னை

மீண்டும் கரையில்
நான்..

2. நிறங்களின் வலிமை

நிறங்கள் கூட வறுமையில்
கரைந்துபோயின!
உறக்க கூவும் சேவல் போல
கூவினாலும் விழித்து கொள்வது
எத்தனை பேர்?

கருப்பில் கலப்பிடம் இருந்தால்
எதிர்ப்பு குறைந்து போகும்

சிவப்பு சிதைந்தால் போராட்டம்
வெற்றி பெறாது
பசுமை படராமல் கொடி அருக்க
காய்ந்த குடும்பம்!

வெண்மை நிறம்
ஆட்கொண்ட ஆளுமை
மக்கள் தந்தது

அரசனும் ஆண்டியும்
பூர்விகம் புதுப்பித்து
எளிமை காட்டும்
நிறங்கள் வலிமை..

ஏமாந்து வேடிக்கை பார்த்து
பின் செல்லும் மக்கள் எளிமை
அதிகாரம் அடக்கும்

நிறத்தின் நிலைமையால்
நிலைகுலைந்த மக்கள் நிறம்
நிலை என்ன?

வெண்மைக்கு ஒரு கேள்வி?

3. குறைகள்

ஒருவர் வாழ்வின்
பயணத்தில்
வேறுயாரும்
பயணிக்கமுடியாது
அவரின் இன்பம் துன்பம்
அவரின் நிலையில்
வேறு ஒருவர்
உணரமுடியாது
ஒவ்வொருவரின்
பயணம்
புதுமையானது
தனித்துவமானது!!

குறைகள் நிறைந்து..
நிறைகள் குறைந்து..
ஒருவர் குறைசொல்ல
கேட்காத செவிகள்
அதிகம் இருக்கும்..
தன்குறை எடுத்து கூறும்
நாக்குகள் அதிகம்
முரண்பாடு வாழ்வில்
முடிவில்லாதது..
தீர்வு கேட்டு
சாமியாரிடம் சென்றால்
அவரின் வழக்குகூட
நீதிமன்றத்தில்
தீர்ப்புக்காக..

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 08 December 2017 13:58