அகதி ஆகிய தமிழரின் அடுத்த அடி என்ன?

Tuesday, 03 October 2017 06:54 - ஆக்கியோன்: பேராசிரியர் கோபன் மகாதேவா, லண்டன் - கவிதை
Print

-பேராசிரியர் கோபன் மகாதேவா -அகதி ஆகிய தமிழரிற் பலர்
அகிலம் எங்கும் சிறகு அடித்தார்.
பறந்து சென்றும் பரந்து நின்றும்
பற்பல வழிகளில் பாடுபட்டார்.

அகதி ஆகிய தமிழரிற் பலர்
ஈழ தேசத்தில் தேங்கி நின்று
வெறுப்பினுள் வாழ்ந்தும், வெகுளாமல்
வெல்லும் வழிகளை ஆராய்ந்தார்.

அகதி ஆகிய தமிழர் முழுவாய்
அடங்கி ஒடுங்கி முடங்கவில்லை.
இனம் சாகவில்லை... இளைக்கவில்லை...
அடிமைகளும் ஆகவில்லை.

அகதி ஆகிய தமிழரிற் பலர்
அகிலம் எங்கும் பறந்து சென்றார்.
அமெரிக்காவில், வெளியிருந்து இயங்க
நிழல்-அரசு ஒன்றைப் பிரசவித்தார்.

 

ஐநா சபைக்குள் ஒழிந்தே புகுந்தும் எம்
நிலை பற்றி ஒரு நீதவான் முறையிட்டார்.
கேலிச்சித்திர நவீன முறைகளில் சிலர்
கொடுங்கோலரை நடுங்க வைத்தார்.

பல ரகப் பாட்டால் பறையும் அடித்து
இசையில் இன-நல மாரி பொழிந்தார்.
இங்கிலாந்தினில், ஊடகங்களால் சிலர்
நம் நிலை உரத்துத் தெளிவித்தார்.
சங்கம்-கூட்டிச் சம்மேளனங்களில்
உரிமைகள் வெல்ல வழி வகுத்தார்.
ஆலயம் அமைத்து அகதிகள் அணைத்து
நமது ஆத்ம பலத்தினை அதிகரித்தார்.

பங்கு-நேர பள்ளிக் கூடங்கள் நிறுவிச்
செந்தமிழ் அறிவைப் பெருக வைத்தார்.
நூல்கள் நூற்று நுண்ணறிவினால்
இலக்கியம் காக்க வழி வகுத்தார்.
புதின ஏடுகள், ஒலி-ஒளி ஊடக
வழிகளில் சென்று பரப்பு செய்தார்.

அவர்களைப் போன்று, அவுஸ்திரேலியா
பிறான்சு, யேர்மனி, டென்மார்க், கனடா
நோர்வே, சுவிஸ் போல் சென்ற இடங்களின்
அகதித் தமிழரின் ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
ஆலைப்போல் விரிந்து ஆழமாய் வேரோடி
வளர்ந்து படர்ந்து விசைகளாய் வெடித்தன.

தாயகம் தங்கிய அகதிகள் தொண்டுகள்
அடிப்படை முறையில் அளப்பரியனவாம்.
காயங்கள் தாங்கிக் கனத்த இடர்களிடை
களைக்காது சளைக்காது அன்னார் அங்கு
மாயத்தால் வாழ்ந்து உபாயத்தால் வழிவகுத்து
உசிதமாய் உரிமைப்போர் உந்தி நடத்திறார்!

சொல்லி முடிந்தவை, எம் அகதித் தமிழரின்
கூட்டுத் தொண்டுகள், சேவையின் நிரல்கள்.
தருகிறேன் கீழே, தனித்துச் சிலர் செய்த
உருப்படி அகதிச் சாதனைச் செயல்கள்...

தொலைபேசும் துறையில் உலகில் உயர்ந்தார்
மலைபோல் திறமைகொள் ஓர் அகதித்தமிழர்.
விலையான பங்கு வியாபாரச் சந்தையின்
சிலையானார் வேறொரு அகதித் தமிழர்.
கலைகளில், கற்கையில் மினுங்கி வளர்கிறார்
ஆயிரமாயிரம் தனித் தமிழ் இளைஞர்.
நிலைபெற்ற நவீன ஈமெயில் தொடர்பைத்
தொடக்கினார் அகதித் தமிழராம் ஒருவர்.

பல்கலைக் கழகம் பலவற்றில் பெரிய
வாத்தியார் பணியிலும் பற்பல வழியில்
நல்லறிவு நிலைக்க நூல் ஆயிரம் நூற்று
நோற்கின்றார் பல்நூறு அகதித் தமிழர்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும்...

பாதையிற் சென்ற பல தனித் தமிழர்
எதிர்வரும் தடைகளை உதைத்துச் சென்று
புதுப்புதுப் பாதையில் புதிய புலங்களில்
எந்த வேலையும் எளியதெனாது எடுத்து...

அந்தந்த நாட்டுக்கு அயராது உழைத்துப்
பந்தங்களுக்கும் பணப் பொதி அனுப்பி
முந்தியர் எஞ்சியரை எவ்வாறோ இழுத்து
பண்டங்கள், பெற்றோல் பகலிரவாய் விற்று...

நித்திரையும் இன்றி நீள்நேரம் உழைத்து...
கடுங்குளிர், இருள், கறுப்பு-நிறப்-பேதம்,
மொழிப் புறந்தள்ளலை மதியினால் வென்று
கனிவுடன் உள்நாட்டார் உள்ளங்கள் கவர்ந்து...

பரந்து பல் சமூகத் தளங்களிற் புகுந்து...
அரசியலார், ஆசிரியர், எந்திரிகர், வைத்தியர்,
வியாபாரத் தொழிலாளர், சட்டத்தரணிகள்,
கணக்காளர், உணவகத்தார், உதவியர், விநியோகர்,
குப்பைகள் கூட்டுவோர், கோப்பை கழுவுவோர்,
இவ்வாறு பல்மட்டத் தொழில்கள் பார்க்கிறார்.

இவ்வுலகு அடங்கலும் ஈழத்துத் தமிழர்
இருக்கும் அசல் நிலை இதுவே இன்று.
அடுத்து நாம் ஆழ்ந்து, தூரமும் நோக்கி
வருங்காலம் எவ்வாறு சென்றால் நமக்கு
நன்றென்று சிந்தித்து நகர்வோம் வாரீர்!

விலங்குகளின் வாரிசுகள், மனிதராம் நாங்கள்
என்றே தொல் விஞ்ஞான அறிஞர் சொல்கிறார்.
விலக்கானவர் அல்லர், இலங்கையின் நான்கு
இனத்தாரும் என்பதும் வரலாற்று உண்மை.

சிறுபான்மைத் தமிழர், மூவினத்தின் நாமும்,
வெவ்வேறு விலங்கினம் போலே அல்லவா?
கடைசியில் மூவினமும் கூடித் தனி நாடு
அடைந்து வாழ்கினும் ஓரினம் வருமா?

ஒரேமொழி பேசினும் மதமும், இயல்பும்
வரலாறும் வேறானோர் அல்லவா நாங்கள்?
ஒரேமொழிபேசி அம்மொழியில் தினமும்
அரசியலில் அழுகும் தமிழ்நாட்டைப் பாரீர்!

இலங்கையின் பெரும்பான்மைச் சக-இனத்தாரும்
நூதனப் பீதிஒன்று பிடித்தோரே காணீர்!
பல்வழியில் தமிழ்பேசும் மக்களை மெச்சினும்
மனதின்உள் அறையில் அப்பீதிநோய் உடைத்தோர்.
பக்கத்தில் இருந்து பளிச்சிடும் பழம்பெரும்
தமிழ்நாடும் மாபெரும் பூதமாம் அவர்க்கு.

என்றும், அவர் கற்பனைப் பீதியும் பயமும்
வென்றிடும் சாத்தியம் என்றுமே இல்லை
என்ற என் காத்திரக் கருத்தையும் மேலே
மெல் வழியில் நான் சொல்லியே உள்ளேன்.

இருந்தும் தீங்கில்லாப் பல்வகைப் பாம்பினம்
போன்றவைக்கும் நாம் அஞ்சுதல் போன்று அவ்
யம-பயம், சந்தேகம், யுக-நிலைப் பீதியும்
அவர்க்குள் இருப்பதை அவரே நோகிறார்.

அதனாலே ஐம்பதுகள் ஒருமொழித் திணிப்பும்...
ஓர வஞ்சனையும், இன ஒதுக்கலுமாம்!
அதனாலே எம் இளைஞரின் மூன்று தசாப்த...
ஆயுதப் போரழிவும், மௌன நிலையுமாம்!!

சந்ததி இரண்டு, போரில் சங்கமம் ஆச்சு.
வெந்தன தீயில், எம் சுபீட்சமும், சாந்தியும்.
அந்தச் சூழலில் அகதியாய் நாங்கள்
நடந்தது சரி! எனில், நாளை நம்வழி?

இனிநாம்... இலங்கையில்... அண்மையில் பிறந்து
விசை பெற்ற புரட்சியின் வழியினிற் சென்று...
திசை மாற்றி, இன்றைய மனிதேயம் காட்டும்
தேசியப் புரட்சி-வழிப் புதுமை-சேர் அரசுடன்
இனவழி ஒற்றுமையாய் உரிமைகள் பேசி...
இணங்கும் சாத்தியம் திடமாய்த் தோன்றுது!!

மேலும், எம் சமூகத்தின் சாதிப் பிரிவினையும்
சீதனத்தின் சீர்கேடும் அண்மையில் துறந்தோம்.
ஆண்-பெண் சமத்துவத்தை எம் ஆயுத யுகத்தில்
அனுபவத்தால் நிசமாக்கி அருகியும் விட்டோம்.

இராச தந்திரங்களை அரசியல் துறைதனில்
அனுபவத்தில் அண்மையில் கற்றும் விட்டோம்.
இவ்வாறு எம் பழம் சில பெரும் பெரும் குறைகள்
எம்முள் இன்று மிகவும் குறைந்திட்ட படியால்...

எதிர்பாராது எதிர்வந்த எதிர்க்கட்சித் தலைமையை
மதியுடன் செலுத்தி, மாண்பும் சாந்தமும் காத்து
தமிழினம் மூன்றும் தன்மையாய்ப் பிணைந்து
தமிழுக்கு எம் உரிமைகளைத் திரட்டலாம் பாரீர்!

சிங்களச் சோதரர்க்கும் அறிவுரை ஒன்றினை
இங்கு நாம் சொல்லல் முக்கியம் என்பேன்.
தமிழ்பேசும் இனத்தாரை இனி உம் சோதரராய்
தயக்கங்கள் ஏதுமின்றித் தழுவுதல், உம் கவசம்!

சமத்துவமாய் நடத்தினால் தமிழரும் உம்முடன்
சமமாகச் சேர்ந்து எம் தோள்களை இணைத்து
உம் சிங்களத் தீவை -- எம் தமிழில் ஈழத்தை --
எமதும் எனப் பேணி எல்லோர்க்கும் பலமாக்கி...

அக்காலக் கலாநிதி ஆனந்தக் குமாரர் போல்
அருணாச்சல அண்ணரும் இராமநாதனும் போல்...
எக் காலமும் உமது கலாச்சாரமும் இனமும்...
சக்தியுடன் நிலைக்கச் சேர்ந்துழைப்போம் பாரீர்!

சிறிலங்கா -- இலங்கை -- சிங்களத் தீவு -- ஈழம் --
பரிவுடனே எவரும் எப் பெயரில் அழைத்தாலும்
இன்றுஇங்கு வசிக்கும் எல்லார்க்கும் இது சொந்தம்!
நன்றே நாம் நாலினத்து நால்-மதத்தாரும் சேர்ந்து
ஒற்றுமையாய் இணைந்து ஒன்று சேர்ந்து உழைத்து
என்றும் இனிப் பிணங்காமல் சமாதானம் காப்போம்!!!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

*ஆக்கியோன்: பேராசிரியர் கோபன் மகாதேவா, லண்டன் | (லண்டன் ஐபீசீ றேடியோ 03-09-15 கவிதையின் புத்துருவம்) -

Last Updated on Tuesday, 03 October 2017 06:57